இயேசுவின் முடிவில்லா ராஜ்ஜியம்

     இதுவரை வில்லனைப் பற்றிய தீர்க்கதரிசனங்களையே பேசிப்பேசி உங்களுக்கு அலுப்பு வந்திருக்கும் என்று நினைக்கிறேன். கவலைப்படாதீர்கள், இந்த அத்தியாயம் முழுவதும் ஹீரோவாகிய இயேசுவைப் பற்றியும், வரப்போகும் அவரது முடிவில்லா ராஜ்ஜியத்தைப் பற்றியும் தான் பார்க்கப்போகிறோம். இதுவரை நீங்கள் படித்த ஆவிக்குரிய புத்தகங்களில் இயேசுவைப் பற்றி அதிகமாகவும், சாத்தானைப் பற்றி சில காரியங்களையும் படித்துப் பழகியிருப்பீர்கள். ஆனால் தானியேல் மற்றும் வெளிப்படுத்தல் தீர்க்கதரிசன புத்தகங்கள், சாத்தானாகிய அந்திகிறிஸ்துவின் ராஜ்ஜியங்கள் எப்படி உலகை ஆட்டிப்படைத்தது என்பதைப் பற்றி அறிந்துகொள்வதற்கு தேவன் தந்த அரிய பொக்கிஷம் என்றே நான் கருதுகிறேன். போர் செய்யும் முன்பு ராஜாக்கள் தங்களது பலத்தை ஆராயும் அளவிற்கு, எதிரியின் பலம், பலவீனம் ஆகியவற்றையும் ஆராய்வார்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். இயேசுவின் ராஜ்ஜியம் என்பது ‘இதுவரை கண்கள் காணாததும், காதுகள் கேட்காததுமான மகிமை நிறைந்தது’ என்பதால் அதைப்பற்றி துணிகரமாக எழுதமுடியாது. இருந்தாலும் தகுதியில்லாத அடிமையான எனக்கு தீர்க்கதரிசன வசனங்களின் மூலம் கர்த்தர் கற்றுக்கொடுத்த சில காரியங்களை மட்டும் பகிர்ந்திருக்கிறேன்.

இயேசு கற்றுக்கொடுத்த ஜெபம்

இயேசு கற்றுகொடுத்த பரமண்டல ஜெபத்தில் ‘உம்முடைய ராஜ்ஜியம் வருவதாக’ என்று ஜெபிக்கும்படி கற்றுக்கொடுத்திருக்கிறார். நம் அனுதின ஜெபத்தில் அதை நினைவுகூற வேண்டும் என்று இயேசு விரும்புகிறார். அவர் உலகத்திலிருக்கும்போது அவரது சிந்தை முழுவதும் பிதாவின் சித்தத்தை செய்வதிலும், பூமியின் குடிகளை இயேசுவின் முடிவில்லா ராஜ்ஜியத்திற்குத் தயார் செய்வதிலுமே இருந்தது. அவரது உபதேசங்களில் பெரும்பாலான உவமைகளும் ‘பரலோகராஜ்ஜியத்தைக் குறித்த’ உவமைகளாகவே இருந்தது. நம்முடைய பொக்கிஷங்களையும் பரலோக ராஜ்ஜியத்தில் சேர்த்துவைப்பதையே அவர் விரும்பினார். பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் கூட, இயேசுவின் ராஜ்ஜியத்தையே எதிர்பார்த்து விசுவாசத்தோடு காத்திருந்தார்கள்.

‘‘ஏனெனில், தேவன் தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்கு அவன் (ஆபிரகாம்) காத்திருந்தான்.’’ (எபிரேயர் 11:10)

அவருடைய சீடர்களும் ‘வரப்போகும் இரட்சகருடைய’ வருகையை எதிர்நோக்கியே காத்திருந்தார்கள். இத்தனை மகத்துவமுள்ள இயேசுவின் ராஜ்ஜியம் வருவதற்கு முன் வரவேண்டிய அந்திகிறிஸ்துவின் ஏழு (சரியாகச் சொன்னால் எட்டு) ராஜ்ஜியங்களைப் பற்றித் தெரிந்துகொள்வதற்காகத் தான் தீர்க்கதரிசனங்களை சொல்லிவைத்திருக்கிறார். இது தான் இயேசுவின் முதலாம் வருகைக்கும் இரண்டாம் வருகைக்கும் இடைப்பட்ட 2000 வருடங்கள் நிகழ்ந்த உலக வரலாற்று சம்பவங்களாக நிறைவேறி உள்ளது. இவை வெறும் கடைசி 7 வருட சம்பவங்கள் அல்ல.

சுவிசேஷத்தின் ஆரம்பமும், முடிவும்

இந்த தேவனுடைய ராஜ்ஜியம், இயேசு பூமியில் வந்ததால் மட்டுமே மனுஷருக்கு மிக சமீபமாயிற்று. எனவே தான் இயேசு ஊழியத்தை ஆரம்பித்து சொன்ன முதல் வார்த்தையே இதுதான்….

‘‘யோவான் காவலில் வைக்கப்பட்ட பின்பு, இயேசு கலிலேயாவிலே வந்து, தேவனுடைய ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து: (பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் சொன்ன) காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று; மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் என்றார்.’’ (மாற்கு 1:14,15)

அன்று இயேசு பிரசங்கித்த ராஜ்ஜியத்தினுடைய சுவிசேஷம், இடையில் ரோம சாம்ராஜ்ஜியங்களின் காலத்தில் ஒடுக்கப்படும் என்று இயேசுவே தீர்க்கதரிசனங்களில் கூறியுள்ளார். அதாவது அந்திகிறிஸ்துவாகிய சாத்தான் சத்தியத்தைத் தரையில் தள்ளி அனுகூலம் அடைவதற்கென்று சில காலங்கள் நியமிக்கப்பட்டது. சத்தியத்தைக் கைக்கொண்ட பரிசுத்தவான்களைத் துன்பப்படுத்திக் கொலைசெய்து, சுவிசேஷத்தை முடக்கும் அதிகாரமும் சின்னக்கொம்பாகிய அந்திகிறிஸ்துவுக்கு 1260 வருடங்கள் கொடுக்கப்பட்டது.

‘‘உன்னதமானவருக்கு விரோதமாக வார்த்தைகளைப் பேசி, உன்னதமானவருடைய பரிசுத்தவான்களை ஒடுக்கி, காலங்களையும் பிரமாணங்களையும் மாற்ற நினைப்பான்; அவர்கள் ஒருகாலமும், காலங்களும், அரைக்காலமும் செல்லுமட்டும் அவன் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்.’’ (தானியேல் 7:25)

இந்த 1260 வருட இறுதியில், சுவிசேஷம் தடையில்லாமல் உலகமெங்கிலும் பரவுவதற்கு அனுமதிக்கப்பட்ட காலமாகிய 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில், பல சமகால சம்பவங்கள் நிறைவேறின

  1. சிறு புஸ்தகமாகிய பைபிள் எல்லோர் கையிலும் கிடைக்கும் என்ற தீர்க்கதரிசனம் நிறைவேறியது. அதன் மூலம் ‘மறுபடியும்’ எல்லோருக்கும் தீர்க்கதரிசனம் (சுவிசேஷம்) சொல்ல அதிகாரம் கொடுக்கப்பட்டது.
  2. ஏழாம் எக்காளம் ஊதப்பட்டபோது, ராஜ்ஜியங்கள் நம் கர்த்தருக்கும், கிறிஸ்துவிற்கும் உடைய ராஜ்ஜியங்களாயின என்ற கெம்பீர சத்தங்கள் கேட்டது.
  3. கலசங்கள் மூலமான வாதைகளினால் ரோமன் கத்தோலிக்க சாம்ராஜ்ஜியத்தின் 1260 வருட ஆட்சி முடிவுக்கு வந்தது.
  4. இரண்டு சாட்சிகளாகிய சபைகளும், இரண்டு ஏற்பாடுகளும் மீண்டும் உயிர்பெற்று காலூன்றி நின்று சத்தியத்திற்கு சாட்சி கொடுத்தார்கள்.
  5. பூமியில் வாசமாயிருக்கிற எல்லோருக்கும் நித்திய சுவிசேஷத்தை அறிவிக்கிற தூதன் வானத்தின் மத்தியில் பறந்து வந்தான். (வெளி 14:6,7)
  6. அந்திகிறிஸ்துவின் முத்திரையை ஏற்காமல், சுவிசேஷத்திற்கு செவிகொடுத்த ஐரோப்பிய ராஜ்ஜியமான இங்கிலாந்தைக் கர்த்தர் உயர்த்தி, பூமியின் பல தேசங்களை அதின் கையில் காலனி ஆதிக்கத்திற்கு ஒப்புக்கொடுத்து, சுவிசேஷம் நம் நாடு உட்பட உலகமெங்கும் பரவச்செய்தார்.

இத்தனை ஆதாரங்களை வைத்துப் பார்த்தால் பூமியில் சுவிசேஷம் தடையில்லாமல் அறிவிக்கப்படுவதற்கு இயேசு தீர்மானித்து வைத்த காலம் கடந்த 220 வருடங்கள் தான். இந்த காலம் தான் முடிவுகாலம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக்காலத்தில் ராஜ்ஜியத்தின் சுவிசேஷம் உலகமெங்கும் அறிவிக்கப்பட்ட பின் முடிவு (இயேசுவின் இரண்டாம் வருகை/ முடிவில்லா ராஜ்ஜியம்) வரும் என்று இயேசுவே சொல்லிவைத்துள்ளார்.

‘‘முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான். ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.’’ (மத்தேயு 24:13,14)

இயேசுவின் சுவிசேஷம் முடிவுக்கு வருவது அவரது வருகையின்போது தான். இந்தக் காலத்தில் தான் நாம் வாழ்ந்துவருகிறோம்; அவரது வருகை மிக சமீபமாக உள்ளது என்பதற்கு இதற்குமேல் வேறு ஆதாரங்கள் நமக்குத் தேவையா? சகோதரனே, சகோதரியே, முடிவுபரியந்தம் நிலைநிற்கத் தயாராக இருக்கிறீர்களா? கர்த்தர் உங்களுடனே பேசுகிறார். ஆமென்.

நேபுகாத்நேச்சாரின் தரிசனத்தில் இயேசுவின் ராஜ்ஜியம்

இரும்பும் களிமண்ணும் கலந்த பாதங்களாகிய மேற்கு மற்றும் கிழக்கு ரோம சாம்ராஜ்ஜியங்களின் மீது ஒரு கையால் பெயர்த்தெடுக்கப்படாத கல் வந்து மோதி சிலை முழுவதையும் நொறுக்கிப்போட்டது என்று நேபுகாத்நேச்சார் சொப்பனத்தில் காண்கிறார். அந்த கல் இயேசுகிறிஸ்து; அந்தக்கல் பெரிய பர்வதமாகி நிலைத்து நின்றது என்பது இயேசுவின் அழிவில்லாத ராஜ்ஜியத்தைக் குறிக்கிறது.

‘‘நீர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, கைகளால் பெயர்க்கப்படாத ஒரு கல் பெயர்ந்து உருண்டுவந்தது; அது அந்தச் சிலையை இரும்பும் களிமண்ணுமாகிய அதின் பாதங்களில் மோதி அவைகளை நொறுக்கிப்போட்டது. அப்பொழுது அந்த இரும்பும் களிமண்ணும் வெண்கலமும் வெள்ளியும் பொன்னும் ஏகமாய் நொறுங்குண்டு, கோடைகாலத்தில் போரடிக்கிற களத்திலிருந்து பறந்துபோகிற பதரைப்போலாயிற்று; அவைகளுக்கு ஒரு இடமும் கிடையாதபடி காற்று அவைகளை அடித்துக்கொண்டுபோயிற்று; சிலையை மோதின கல்லோவென்றால், ஒரு பெரிய பர்வதமாகி பூமியையெல்லாம் நிரப்பிற்று.’’ (தானியேல் 2:34,35)

‘‘அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; ஒரு கல் கையால்பெயர்க்கப்படாமல் மலையிலிருந்து பெயர்ந்து, உருண்டுவந்து, இரும்பையும் வெண்கலத்தையும் களிமண்ணையும் வெள்ளியையும் பொன்னையும் நொறுக்கினதை நீர் கண்டீரே, அப்படியே அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.’’ (தானியேல் 2:44)

இதே காரியங்களைத் தான் தானியேலும் தனது சொப்பனத்தில் கண்டார். அதில் இயேசுவின் ராஜ்ஜியம் ரோமப்பேரரசின் வடிவமான சின்னக்கொம்பின் முடிவில் வருகிறதாகக் கண்டார். இந்த சின்னக்கொம்பின் ராஜ்ஜியம் முடிவடைந்த பின்னர் சுவிசேஷத்தின் காலம் வரவேண்டும்; அதன் முடிவில் தான் இயேசுவின் இரண்டாம் வருகை இருக்கும் என்று நாம் வேறு வசனங்களின் மூலம் கற்றுக்கொண்டதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

‘‘இராத்தரிசனங்களிலே நான் பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவர் வானத்து மேகங்களுடனே வந்தார்; அவர் நீண்ட ஆயுசுள்ளவர் இடமட்டும் வந்து, அவர் சமீபத்தில் கொண்டுவரப்பட்டார். சகல ஜனங்களும் ஜாதியாரும், பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி, அவருக்குக் கர்த்தத்துவமும் மகிமையும் ராஜரீகமும் கொடுக்கப்பட்டது; அவருடைய கர்த்தத்துவம் நீங்காத நித்திய கர்த்தத்துவமும் அவருடைய ராஜ்யம் அழியாததுமாயிருக்கும்.’’ (தானியேல் 7:13,14)

‘‘ஆனாலும் நியாயசங்கம் உட்காரும்; அப்பொழுது முடிவுபரியந்தம் அவனைச் சங்கரிக்கும்படியாகவும் அழிக்கும்படியாகவும் அவனுடைய ஆளுகையை நீக்கிப்போடுவார்கள். வானத்தின் கீழெங்குமுள்ள ராஜ்யங்களின் ராஜரீகமும் ஆளுகையும் மகத்துவமும் உன்னதமானவருடைய பரிசுத்தவான்களாகிய ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்; அவருடைய ராஜ்யம் நித்திய ராஜ்யம்; சகல கர்த்தத்துவங்களும் அவரைச் சேவித்து, அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும் என்றான்.’’ (தானியேல் 7:26.27)

கடைசி யுத்தத்தின் போது எருசலேம் பிடிக்கப்படும் என்றும், அப்போது இயேசு ஒலிவமலையின் மேல் இறங்குவார் என்றும் சகரியா 14 ஆம் அதிகாரம் கூறுகிறது. இதற்குப் பின்னர் இயேசுவின் ராஜ்ஜியம் ஸ்தாபிக்கப்படும் என்றும் சகரியா கூறுகிறார்.

‘‘அப்பொழுது கர்த்தர் பூமியின்மீதெங்கும் ராஜாவாயிருப்பார்; அந்நாளில் ஒரே கர்த்தர் இருப்பார், அவருடைய நாமமும் ஒன்றாயிருக்கும்.’’ (சகரியா 14:9)

கர்த்தரின் ஆலயமாகிய பர்வதம்

இயேசுவின் இரண்டாம் வருகைக்குப் பின் அவரது ராஜ்ஜியம் ஸ்தாபிக்கப்படும் என்பதை ஏசாயா முதல் பல தீர்க்கதரிசிகள் சொல்லியுள்ளனர். அதிலும் அவரது ராஜ்ஜியம் ‘பர்வதம்’ என்றே கூறப்பட்டுள்ளது.

‘‘கடைசிநாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்படும்; எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடிவருவார்கள்.’’ (ஏசாயா 2:2)

கடைசிநாட்களில் கர்த்தருடைய ஆலயம் எருசலேமில் கட்டப்படும் என்று ஏசாயா சொல்லவில்லை; மாறாக ‘கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம்’ என்று இயேசுவின் ராஜ்ஜியத்தையே ஆலயமாக சொல்லியுள்ளார். இந்த ராஜ்ஜியமாகிய பர்வதம், மற்ற பர்வதங்களுக்கெல்லாம் உச்சியில் ஸ்தாபிக்கப்பட்டு, எல்லா ராஜ்ஜியங்களுக்கும் மேலாக உயர்த்தப்படும் என்றும் எழுதிவைத்துள்ளார். எனவே மூன்றாம் எருசலேம் ஆலயத்திற்கும் கர்த்தருடைய வருகைக்கும் சம்பந்தமில்லை. இதே வசனம் மீகா 4:1 லும் கூறப்பட்டுள்ளது.

வருகையின் காலங்களைக் கணிக்கமுடியுமா?

இயேசு சொல்லும்போது ‘அந்த நாளையும், அந்த நாழிகையையும் (that exact day and hour) ஒருவனும் அறியான்’ என்று தான் சொல்லியுள்ளார். மேலும் மேசியாவாக உலகிற்கு வந்த முதல் வருகையின் காலத்தை அல்லது ஆண்டை தானியேலுக்கு கொடுத்த 70 வருட தரிசனத்தின் மூலம் யூதர்களுக்கு வெளிப்படுத்த சித்தம்கொண்ட இயேசு, தனது இரண்டாம் வருகையின் காலத்தை அல்லது ஆண்டை வெளிப்படுத்துவதற்குத் தான் வேதத்தில் ஏராளமான ‘எண்களையும் காலங்களையும்’ சொல்லிவைத்துள்ளார் என்று நான் விசுவாசிக்கிறேன். அதே நேரத்தில் சீடர்களிடம் ‘பிதாவானவர் தம்முடைய ஆதீனத்தில் வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல’ என்றும் கூறிச்சென்றதால் இயேசுவின் இரண்டாம் வருகை இந்த வருடத்தில் தான் நடக்கும் என்று யாராலும் சாதித்துச்சொல்ல முடியாது. இருப்பினும் பரிசுத்தவேதத்தில் கொடுக்கப்பட்டுள்ள பல தீர்க்கதரிசன காலங்களைக்கொண்டு நாம் வாழும் இந்த தசாப்தம் (Decade) தான் இயேசுவின் இரண்டாம் வருகை நிகழ அதிக வாய்ப்புள்ள காலமாக வேத அறிஞர்கள் ஆராய்ந்து சொல்லியுள்ள சில காரியங்களை வசன ஆதாரத்தோடு எழுத உந்தப்பட்டேன். இதுவரை நாம் பார்த்தபடி கிட்டத்தட்ட அத்தனை தீர்க்கதரிசன சம்பவங்களும் நிறைவேறி விட்டன; இறுதி யுத்தம் உட்பட ஒரு சில முடிவுகால தீர்க்கதரிசனங்கள் மட்டுமே மிச்சம் இருப்பதாலும், அவை நிறைவேறும் காலம் சமீபித்திருப்பதற்கான உலகளாவிய அடையாளங்களும் மாற்றங்களும் நம் கண்களுக்கு முன்பே நடந்து வருவதாலும் சில ஆதாரங்களுடன் இதை எழுதுகிறேன். இது கணிப்பே தவிர இந்த வருடத்தில் தான் இயேசு வருவார் என்று சாதிக்கவோ உங்களைப்பயமுறுத்தவோ நான் விரும்பவில்லை. இன்றைக்கு இயேசு வந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்ற நம்பிக்கையில் பரிசுத்தமான வாழ்க்கை வாழ்பவர்களுக்கு எந்த பயமும் இருக்காது. ஒருவேளை பயம் வந்தால் நீங்கள் தயாராக இருக்கிறீர்களா என்று உங்களைப் பரிசோதித்துக்கொள்ளவேண்டியது அவசியம்.

முடிவுகால வசன அதிகாரம்

முடிவுகால யுத்தங்களையும், மரித்தோர் உயித்தெழுதலையும் பற்றி விரிவாகப் பேசும் தானியேல் 12 ஆம் அதிகாரத்திலுள்ள சில ‘எண் கணிதங்கள்’ தான் நமக்கு ஆதாரம். தானியேல் 11 ஆம் அதிகாரத்தின் 40 ஆவது வசனத்தில் ‘முடிவுகாலத்திலோவென்றால்…’ என்று ஆரம்பிக்கும் யுத்தகாரியங்களின் தொடர்ச்சிதான் தானியேல் 12 ஆம் அதிகாரம் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். முடிவுகாலத்தில் எருசலேம் மீது நடைபெற இருக்கும் படையெடுப்பையும், அதனைத்தொடர்ந்து வரும் இயேசுவின் வருகையின் காலத்தின் உயிர்தெழுதலையும் தானியேலுக்கு அறிவித்துவிட்டு அதை முத்திரையிடுமாறும் தூதன் கூறினார்.

‘‘தானியேலாகிய நீயோவென்றால், முடிவுகாலமட்டும் இந்த வார்த்தைகளைப் புதைபொருளாக வைத்து வைத்து, இந்தப்புஸ்தகத்தை முத்திரைபோடு; அப்பொழுது அநேகர் இங்குமங்கும் ஓடி ஆராய்வார்கள், அறிவும் பெருகிப்போம் என்றான்.’’ (தானியேல் 12:4)

அப்பொழுது தானியேல் இந்த சம்பவமாகிய முடிவு யுத்தமும், மரித்தோர் உயித்தெழுதலும் எப்போது நடக்கும் என்று கேட்டார்.

‘‘சணல்வஸ்திரம் தரித்தவரும், ஆற்றின் தண்ணீர்களின்மேல் நிற்கிறவருமாகிய புருஷனை ஒருவன் நோக்கி: இந்த ஆச்சரியமானவைகளின் முடிவுவர எவ்வளவுகாலம் செல்லும் என்று கேட்டான்.’’ (தானியேல் 12:6)

அதற்கு அவருக்குக் கிடைத்த பதில் தான் ‘ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமும் (1260 வருடங்கள்) செல்லும் என்றும்; பரிசுத்த ஜனங்களின் வல்லமையைச் சிதறடித்தல் முடிவுபெறும்போதே இவைகளெல்லாம் நிறைவேறித் தீரும்’ என்ற எண் கணிதம். இது தானியேலுக்குப் புரியாததினால் மீண்டும் தூதனிடம் விளக்கம் கேட்டபோது பின்வரும் பதில் கிடைத்தது.

‘‘அதற்கு அவன் தானியேலே, போகலாம்; இந்த வார்த்தைகள் முடிவுகாலமட்டும் புதைபொருளாக வைக்கப்பட்டும் முத்திரிக்கப்பட்டும் இருக்கும்…ஞானவான்களோ உணர்ந்துகொள்ளுவார்கள்’’ (தானியேல் 12:9,10)

இத்தோடு தூதன் நிறுத்திவிடாமல், இயேசுவின் இரண்டாம் வருகையில் உயிரோடு இருப்பவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவதும், மரித்தோர் உயிரோடு எழுவதுமான ‘பாக்கியமான நாள்’ வர எவ்வளவு காலம் செல்லும் என்பதைக் குறித்த அடுத்த எண் கணிதத்தையும் மறைபொருளாக வெளிப்படுத்தினார். ஆனால் ‘தானியேலாகிய உனக்கு அந்த முழுவிவரங்கள் தேவையில்லை; அந்த நாளிலே நீயும் உயிர்த்தெழுவாய்’ என்று கூறியதுடன் தானியேல் தீர்க்கதரிசன புத்தகமே நிறைவு பெறுகிறது.

‘‘அன்றாடபலி நீக்கப்பட்டு, பாழாக்கும் அருவருப்பு ஸ்தாபிக்கப்படுங்காலமுதல் ஆயிரத்திருநூற்றுத் தொண்ணூறு நாள் செல்லும். ஆயிரத்து முந்நூற்று முப்பத்தைந்து நாள்மட்டும் காத்திருந்து சேருகிறவன் பாக்கியவான். நீயோவென்றால் முடிவுவருமட்டும் போயிரு; நீ இளைப்பாறிக்கொண்டிருந்து, நாட்களின் முடிவிலே உன் சுதந்தர வீதத்துக்கு எழுந்திருப்பாய் (For you will rest and rise again for your allotted inheritance at the end of age) என்றான்.’’ (தானியேல் 12:11-13)

இந்த வசனங்களை மீண்டும் ஏன் குறிப்பிட்டுள்ளேன் என்றால் இயேசுவின் இரண்டாம் வருகையின் காலமான முடிவுகாலத்தின் முடிவுநாளைக் குறித்த மூன்று எண் கணிதங்கள் (Neumerology) இந்த அதிகாரத்தில் தொடர்ச்சியாகக் கூறப்பட்டுள்ளது என்றால் அவை ஒன்றோடொன்று தொடர்புள்ளது என்றே அர்த்தம்.

வேறு 1260 வருடங்களா?

அந்திகிறிஸ்துவின் 1260 வருட ஆட்சிக்காலத்தில் இயேசுவைப் பின்பற்றும் புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் அடைய வேண்டிய உபத்திரவங்கள் தானியேல் மற்றும் வெளிப்படுத்தலில் மொத்தம் ஆறு இடங்களில் சொல்லப்பட்டுள்ளதை முந்தைய அத்தியாயங்களில் விரிவாகப் பார்த்துள்ளோம். அவை எல்லாம் சின்னக்கொம்பு அல்லது யோவானின் முதல் மிருகத்தால் ‘புதிய ஏற்பாடு சபையாகிய கிறிஸ்தவ விசுவாசிகள்’ அடைய வேண்டிய உபத்திரவத்தைக் குறிக்கும். ஆனால் தானியேல் 12 ஆம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த 1260 வருடங்கள் முழுக்க முழுக்க யூதர்களைப் பற்றியதாகும். ஏனென்றால் 12 ஆம் அதிகாரம் ஆரம்பிக்கும்போதே ‘உன் ஜனத்தின் புத்திரருக்காக’ என்றும் 1260 வருடங்களைப் பற்றி சொல்லும்போது ‘பரிசுத்த ஜனங்களின் வல்லமை சிதறடித்தல் முடிவுபெறும்போது’ என்று யூதர்களைப் பற்றியே கூறப்பட்டுள்ளது. (தானியேல் 12 : 7)

  • பரிசுத்தவான்கள் : கிறிஸ்தவ சபை
  • பரிசுத்தஜனங்கள் : யூதர்கள்

மேலும் இந்த எண் கணிதங்களின் ஆரம்பமும் முடிவும் தானியேலுக்கு தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அட்டவணை 33: வருகையின் காலம் குறித்த எண் கணிதங்கள்

இந்த அட்டவணையின் படி மூன்று காலங்களுக்கும் ஒரே ஆரம்ப நாள் தான் இருக்கமுடியும் என்பதும் முடியும் நாள் தான் வெவ்வேறு என்றும் தெரிகிறது.

எத்தனை பாழாக்கும் அருவருப்பு?

பாழாக்கும் அருவருப்பு என்பது ஒரு முறை மட்டுமே நடக்கும் சம்பவம் அல்ல. எருசலேம் தேவாலயத்தின் பலிகள் நிறுத்தப்பட்டு விக்கிரகங்கள் நிறுவப்படுவது அல்லது தேவாலயம் முற்றிலும் தகர்க்கப்படுவது அல்லது தேவாலயம் இருக்கு இடத்தில் வேறு தொழுகைக்கூடங்கள் கட்டுவது என்று பல அர்த்தப்படும். மனாசே எருசலேம் தேவாலயத்தில் விக்கிரககங்களை வைத்து வழிபட்டது கூட பாழாக்கும் அருவருப்பு தான். அதனால் தான் அவன் செய்த தவறு மன்னிக்கப்படாமல் யூதா ராஜ்ஜியம் பாபிலோனுக்கு சிறையாக ஒப்புக்கொடுக்கப்பட்டது. தீர்க்கதரிசன நாட்களைக் குறித்த விளக்கங்களில் நாம் ஏற்கனவே இரண்டு பாழாக்கும் அருவருப்புகளைக் குறித்து பார்த்துள்ளோம்.

  1. கி. மு 167ல் அன்றாட பலியை நீக்கி, பாழாக்கும் அருவருப்பை வைத்த அண்டியோகஸ் எபிபேனஸ் (தானியேல் 11:31)
  2. அருவருப்பான செட்டைகளோடு இறங்கிய பாழாக்குபவனாகிய டைட்டஸ் கி.பி 70 ல் எருசலேம் தேவாலயத்தைத் தரைமட்டமாக்கிய சம்பவம் (தானியேல் 9:27)

மூன்றாம் பாழாக்கும் அருவருப்பு

எருசலேம் தேவாலயம் கி.பி 70 ல் டைட்டஸால் தரைமட்டமாக்கப்பட்டாலும், கொஞ்ச காலங்களுக்குப் பின்பு மீண்டும் மோரியா மலையாகிய தேவாலய மலையிலே மீதமிருந்த யூதர்கள் பலிகளை செலுத்தியே வந்தார்கள்; வேறு விக்கிரகங்களோ ஆக்கிரமிப்புகளோ நிறுவப்படவில்லை. ஆனால் எருசலேம் ரோமர்கள் கையிலிருந்து இஸ்லாமியர்கள் கைக்கு சென்ற பின்பு (கி.பி 638) இஸ்லாமியர்கள் முகமது நபி பரலோகத்திற்கு ஏறிச்சென்ற இடமாக தேவாலய மலையைக் கருதியதால் தாவீது அர்வனானிடம் வாங்கிய களம் இருந்த அதே தேவாலய மலையின் மீது ‘Dome of the rock’ என்ற இஸ்லாமிய தொழுகைக் கூடத்தைக் கட்டினார்கள். அன்றிலிருந்து இன்றுவரை அந்த இடமும் அதற்கு அருகிலுள்ள அல்-அக்சா மசூதியும் இஸ்லாமியர்களின் தொழுகைத்தலமாக செயல்பட்டுவருவது மட்டுமல்லாமல் எந்த நேரத்திலும் யூதர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் யுத்தம் வெடிக்கும் அளவிற்கு சர்வதேச பிரச்சனைக்குரிய இடமாகவும் இருக்கிறது. இந்த ‘Dome of the rock’ என்ற இடம் எருசலேம் தேவாலயம் இருந்த இடத்தின் மீது கட்டப்பட்டுள்ளது என்று யூதர்கள் நம்புவதால் அவர்களால் இன்றைக்கும் அதை ஒரு ‘பாழாக்கும் அருவருப்பாகவும், தாங்கள் பலியிடும்படி தேவாலயம் கட்டுவதற்குத் தடையாக இருப்பதாகவும்’ கருதிவருகின்றனர். இந்த தொழுகைக்கூடம் கி.பி 687 அல்லது 688 அல் கட்ட ஆரம்பித்து கி.பி 692 ல் கட்டி முடிக்கப்பட்டது.

படம் 78: ‘Dome of the rock’

பரிசுத்த ஜனங்களின் வல்லமை சிதறடித்தல் முடியும் காலம்

இந்த கணக்கின்படி பாழாக்கும் அருவருப்பாகிய Dome of the rock’ ஸ்தாபிக்கப்பட்ட காலமாகிய கி.பி 688 லிருந்து பரிசுத்த ஜனங்களாகிய யூதர்கள் ரோமப்பேரரசால் உலகமெங்கும் சிதறிக்கப்பட்டது சுமார் 1260 வருடங்களில் முடியும் என்ற தீர்க்கதரிசனம் நிறைவேறிய காலம் கி.பி 1948 (688+1260=1948) ஆகும். இது தான் யூதர்கள் கி.பி 70 ல் சிதறடிக்கப்பட்ட பின்பு மீண்டும் தங்களுக்கென்று இஸ்ரவேல் தேசத்தை கட்டமைத்து சுதந்திர நாடாகப் பிரகடனம் செய்த ஆண்டாகும். இந்த காலமாகிய 1948 முடியும்போது தான் தானியேலுக்கு சொல்லப்பட்ட ‘முடிவுகாலம்’ நிறைவேறித்தீரும் என்று தூதன் சொல்கிறார்.

‘‘ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமும் செல்லும் என்றும்; பரிசுத்த ஜனங்களின் வல்லமையைச் சிதறடித்தல் முடிவுபெறும்போதே இவைகளெல்லாம் நிறைவேறித் தீருமென்றும் என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவர்பேரில் ஆணையிடக் கேட்டேன்.’’

சமாதானத்தின் காலமா ?

இஸ்ரவேல் தேசம் உருவானது முதல் அதை சுற்றியிருக்கும் எல்லா இஸ்லாமிய நாடுகளிடையே இன்றுவரை பகை நீடித்து வருகின்றது; பல சண்டைகளும் நடந்துள்ளன. அதில் பெரிய நாடான எகிப்து, இஸ்ரவேலுடன் இனி சண்டையிடுவதில்லை என்று செய்த சமாதான உடன்படிக்கை மத்திய கிழக்கு உலக வரலாற்றில் மிகப்பெரிய சமாதான உடன்படிக்கையாகப் பார்க்கப்படுகின்றது. இந்த Camp of David accord என்ற சமாதான உடன்படிக்கை செய்யப்பட்ட ஆண்டு கி.பி 1978 ஆகும். கி.பி 2020 ல் கூட இன்னொரு அரபு நாடான சவுதி அரேபியாவுடன் இஸ்ரவேல் மற்றும் அமெரிக்கா இன்னொரு சமாதான உடன்படிக்கை (Abraham accord) செய்துகொண்டதை சமீபத்தில் கேள்விப்பட்டிருப்பீர்கள். அத்திமரமாகிய இஸ்ரவேல் துளிர்விட்ட கி.பி 1948 ஆம் ஆண்டுக்குப் பின் தான் முடிவுகால தீர்க்கதரிசனங்கள் அதிவேகமாக நிறைவேறி வருகின்றன. ஆனால் இதை அறியாத யூதர்கள் தாங்கள் இப்போழுதுதான் சமாதானத்தின் காலத்தில் வாழ்வதாக நம்பிவருகின்றனர். ஆனால் இந்தக்காலங்களில் தான் இஸ்ரவேல் முடிவு யுத்தத்தை சந்திக்கும். அதற்கு யூதர்கள்-முஸ்லீம்கள் பகை ஒரு நெருப்புப்பொறியாக இருக்கலாம். சமாதானக் காரணராகிய இயேசுவை நம்பாமல் மனிதனால் ஏற்படுத்தப்படும் சமாதானத்தை நம்பியிருக்கும் காலத்தில் தான் இயேசுவின் இரண்டாம் வருகை இருக்கும் என்று பவுல் எழுதியுள்ளார்.

‘‘சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல, அழிவு சடிதியாய் அவர்கள்மேல் வரும்; அவர்கள் தப்பிப்போவதில்லை.’’ (1 தெசலோனிக்கேயர் 5:3)

ஞானவான்களுக்கு வெளிப்படுத்தப்பட்ட வருகையின் காலம்

சாதாரண மக்களும் கலிகாலம் என்று சொல்லுமளவிற்குப் பாவங்களும், அறிவியல் முன்னேற்றங்களும் நம் காலத்தைப் போன்று என்றைக்கும் பெருகியதில்லை. இதிலிருந்து இயேசுவின் வருகை மிக சமீபம் என்று அனைவரும் அறிந்துகொள்ளலாம். அவரது இரண்டாம் வருகை எந்தக் காலக்கட்டத்திலிருக்கும் என்பதை அடுத்த எண் கணித தீர்க்கதரிசனங்கள் தெளிவுபடுத்துகின்றன. தானியேலில் சொல்லப்பட்ட 1290 வருடங்களின் முடிவு என்பது இஸ்ரவேலர்கள் சமாதானத்தின் காலம் என்று நம்பிய உடன்படிக்கை செய்யப்பட்ட காலத்தைக் குறிக்கும்.இது நிறைவேறிய பின்புவரும் காலங்கள் இயேசுவின் வருகையின் மிக சமீப காலம் ஆகும்.

  • அன்றாடபலி நீக்கப்பட்டு மூன்றாம் பாழாக்கும் அருவருப்பு ஸ்தாபிக்கப்பட்ட காலம்: கி.பி 688
  • பரிசுத்தஜனமாகிய இஸ்ரவேல் மீண்டும் துளிர்விட்ட பின்பு சமாதானத்தின் காலமாக யூதர்கள் கருதிய உடன்படிக்கையின் காலம்: கி.பி 1978
  • இந்தஇரண்டு காலங்களுக்கு இடைபட்ட காலம்: 1290 வருடங்கள்.

பாக்கியவான்களின் காலம்

இயேசு ஊழியத்தின் ஆரம்பத்தின்போது மலைப்பிரசங்கத்தில் சொன்ன முதல் வசனமே யார் பாக்கியவான்கள் என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

‘‘ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.’’ (மத்தேயு 5:3)

இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; இந்த தீர்க்கதரிசன புத்தகத்திலுள்ள வசனங்களைக் காத்துக்கொள்கிறவன் ‘பாக்கியவான்’ என்று யோவானுக்கு வெளிப்படுத்திய இயேசுவின் இரண்டாம் வருகையின் நாள் இருக்கும் காலம் தான் தானியேலுக்கு 1335 வருடங்கள் மட்டும் ‘காத்திருந்து சேருகிறவன் பாக்கியவான்’ என்று சொல்லப்பட்டுள்ளது மட்டுமல்லாமல், தானியேலும் அந்த நாளிலே உயிர்த்தெழுதலில் பங்குபெறுவார் என்று சொல்லப்பட்டது. அது எந்தக் காலம் என்று பார்ப்போம்.

  • அன்றாடபலி நீக்கப்பட்டு மூன்றாம் பாழாக்கும் அருவருப்பு ஸ்தாபிக்கப்பட்ட காலம்: கி.பி 688 (ஆரம்பம்) கிபி 692 (முடிக்கப்பட்டது)
  • இந்தக்காலத்துடன் 1335 ஐக் கூட்டினால் வரும் ஆண்டு : கி.பி 2023 – கி.பி 2027

இந்த கணக்கீடுகளின்படி இயேசுவின் இரண்டாம் வருகையின் காலம் இந்த தசாப்தத்தில் இருக்கலாம் என்று வேத அறிஞர்கள் கருதுகின்றனர். இது என்னுடைய கணக்கு, இதன்படி தான் நடக்கும் என்று நான் சாதிக்கவில்லை என்பதை மீண்டும் ஞாபகப்படுத்த விரும்புகிறேன். ஆனால் தற்போது நடைபெற்று வரும் சம்பவங்களை ஒப்பிடும்போது நிச்சயமாக நமது காலக்கட்டத்திலேயே இயேசுவின் இரண்டாம் வருகை இருக்கலாம் என்பது எல்லா பரிசுத்தவான்களும் உணர்ந்துள்ள ஒரு செய்தி.

ஓய்வு ஆயிரமாண்டு (Sabbath millennium)

மேற்சொன்ன காலக்கட்டங்களில் இயேசுவின் இரண்டாம் வருகை நிகழலாம் என்ற கருத்திற்கு கூடுதல் ஆதாரங்களை சேர்க்கும்வகையில் இன்னொரு எண் கணித கணக்கீட்டையும் வேத ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பரிசுத்த வேதத்தில் கொடுக்கப்பட்டுள்ள பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களின் வயதின் அடிப்படையில் இந்த கணக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கோட்பாடு தேவன் சிருஷ்டிப்பை முடித்து ஓய்ந்திருந்த ஏழாம் நாளை அடிப்படையாகக் கொண்டது.

‘தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உண்டாக்கின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார். தேவன் தாம் சிருஷ்டித்து உண்டுபண்ணின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்தபடியால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.’’ (ஆதியாகமம் 2:2,3)

மேலும் இயேசு வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? என்று கேட்கிற பரியாசக்காரரைக் குறித்து பேதுரு எழுதும்போது பூமியின் படைப்பு மற்றும் அழிவின் காலங்களை ஆயிரம் வருடம் ஒரு நாளுக்கு சமம் என்று கூறுகிறார்.

‘‘இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தையினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது. பிரியமானவர்களே, கர்த்தருக்கு ஒருநாள் ஆயிரம்வருஷம்போலவும், ஆயிரம்வருஷம் ஒருநாள்போலவும் இருக்கிறதென்கிற இந்த ஒரு காரியத்தை நீங்கள் அறியாதிருக்கவேண்டாம்.’’ (2 பேதுரு 3:7,8)

மேலும் இயேசுவின் வருகைக்குப் பின்பு அவரது ஆயிரம் வருஷ அரசாட்சி பூமியில் நடக்கும் என்று ஏராளமான இடங்களில் ஆணித்தரமாகக் கூறப்பட்டுள்ளது. அந்த ஆயிரம் வருஷ அரசாட்சி என்பது தேவனால் பரிசுத்தமாக்கப்பட்ட ஒன்று என்று ஏசாயா பல இடங்களில் கூறியிருக்கிறதை வாசித்துப்பாருங்கள்.

‘‘அவர்கள் உயிர்த்து கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள்.’’ (வெளி 20: 4 பின்பகுதி)

இந்த ஆயிரம்வருஷம் என்பது ஓய்வுநாளுக்கு ஒப்பான பரிசுத்தமாக்கப்பட்ட காலம் என்றும் அதற்கு முன்பு பூமியும் அதின் படைப்புகள், கிரியைகள் 6000 ஆண்டுகள் நிலைத்து நிற்கும், அதன்பின்பு வரும் ஆயிரம் வருடங்கள் இயேசுவின் வருகைக்குப் பின் நடக்கவிருக்கும் ஆட்சிக்காலம் என்பது தான் இந்த கோட்பாட்டின் வாதம். இதன் அடிப்படையில் ஆதாம் படைக்கப்பட்டு 4000 ஆயிரம் ஆண்டுகள் கழித்து இயேசு பிறந்துள்ளார் என்றால் அதன் பின்னர் 2000 ஆண்டுகளில் இந்த உலகம் முடிவுக்கு வர வேண்டும். அப்படியானால் 1996 ஆம் ஆண்டே இயேசுவின் வருகை நிகழ்ந்திருக்கவேண்டும் என்று நமக்குத் தோன்றும் தானே? ஆனால் இயேசு ‘மனிதர்கள் மத்தியில் வாசம் செய்யும் பொருட்டு வரங்களை வாங்கிக்கொண்டு இந்த பூமியில் வந்தார்’ என்று சங்கீதக்காரன் சொல்வதன் அடிப்படையில் இயேசு பூமியில் வாழ்ந்த 33 ½ ஆண்டுகள் இந்தக் கணக்கீட்டில் கழிக்கப்படவேண்டும் (Excemption) அல்லது மொத்த காலவரிசையில் கூட்டப்படவேண்டும்.

  • ஆதாம்உருவாக்கப்பட்டது : கி.மு 4004
  • இயேசுகிறிஸ்து பிறப்பு : கி.மு 4
  • இரண்டிற்கும் இடைப்பட்ட காலம் : 4000 வருடங்கள்
  • இயேசுவாழ்ந்தது : கி.மு 4 முதல் கி.பி 31 வரை (பூமியின் ஆயுசில் கழிக்கப்படவேண்டிய காலம் 33 1/2வருடங்கள்)
  • கி.பி31உடன் 2000 ஆண்டுகள் சேர்த்தால் : 2031
  • 6000ஆண்டுகள் 6 நாட்களுக்கு சமமாகவும், 7 ஆம் நாளான பரிசுத்தமாக்கப்பட்ட நாளிலே இயேசுவின் 1000 ஆயிரம் வருட ஆட்சி இருக்கும் என்று இந்தக் கணக்கீடு சொல்கிறது.
  • ஓய்வுஆயிரம் அல்லது  இயேசுவின்  வருகைக்குப்  பின்  வரும்  ஆயிரம்  வருஷ  அரசாட்சி  தொடங்க வேண்டிய காலம் : கி.பி 2031 க்குப் பின்
  • அதாவதுஇயேசுவின் வருகையின் காலம் உத்தேசமாக: கி.பி 2031
  • மற்றகணக்கீடுகளைக் கருத்தில் கொண்டால் இயேசுவின் வருகையின் காலம்: கி.பி 2023 லிருந்து 2031 க்குள்ளான அடுத்த பத்து வருடங்கள். (இதை அவர் ஒருவரே அறிவார்)

பொய்யுரையாத தீர்க்கதரிசன நாட்கள்

ஏற்கனவே சொன்னதுபோல இயேசுவின் முதல் வருகையைக் கணக்கிட தானியேலுக்கு 70 வார தரிசனம் வெளிப்பட்டது. ஆனால் பழைய ஏற்பாட்டைக் கரைத்துக் குடித்திருந்த யூதத்தலைவர்கள் அதை உணராதிருந்தார்கள். காரணம், அவர்கள் இயேசு ரோம ஆதிக்கத்தை நீக்க வரும் ராஜாவாகத் தான் வருவார் என்ற ‘தவறான எதிர்பார்ப்பு’ தான். அதைப்போலவே ஏராளமான தீர்க்கதரிசனங்கள் மட்டுமல்லாது உலகில் தற்போது நடைபெறும் சம்பவங்கள் வரை இயேசுவின் இரண்டாம் வருகையின் காலம் அதிசீக்கிரத்தில் நிகழப்போவதையே சுட்டிக்காண்பிக்கின்றன. யூதர்கள் இயேசுவின் முதல் வருகையை எப்படி உணராதிருந்தார்களோ அப்படியே மனுஷகுமாரன் வெளிப்படும் இரண்டாம் வருகையின் காலத்திலும் சபையும், உலக ஜனங்களும் இருப்பார்கள் என்றே இயேசு தெளிவாககூறியுள்ளார். அன்றுபோல் இன்றும் பலர் தவறான எதிர்பார்ப்புகளோடு இருந்தால் யூதர்கள் இயேசுவின் முதல் வருகையைத் தவறவிட்டது போல இரண்டாம் வருகையையும் தவறவிட நேரிடும். அது எத்தனைக் கொடுமையான அனுபவமாக இருக்கும்?

‘‘ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள்; அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும்.’’ (மத்தேயு 24:39)

அதனால் தான் இயேசு மட்டுமல்லாது அப்போஸ்தலர்களும் திரும்பத்திரும்ப ‘விழித்திருங்கள், ஆயத்தமாயிருங்கள், எச்சரிக்கையாயிருங்கள், தெளிந்தவர்களாயிருங்கள்’ என்று கூறிச்சென்றுள்ளார்கள். இன்று இயேசு வந்தால் கூட ஆயத்தமாயிருக்கிறேன் என்று சொல்லும் அளவிற்கு நம் வாழ்க்கை இருக்குமானால் மேலே சொல்லப்பட்ட வருகையின் காலங்களைக் குறித்த கணக்குகளைப் பற்றி நாம் கவலைப்படத்தேவையில்லை.

எப்படிச் சென்றாரோ அப்படியே வருவார்

இயேசு எப்படி எல்லா சீடர்களின் கண்களும் காண பூமியிலிருந்து பரலோகத்திற்கு சென்றாரோ, அப்படியே வருவார் என்று சீடர்களுக்கு சொல்லப்பட்டது. இரண்டு விதத்தில் வருவார் என்று சொல்லப்படவில்லை.

‘‘கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்.’’ (அப்போஸ்தலர் 1:11)

மேலும் எந்தவொரு இடத்திலும் இயேசு தான் இரகசியமாய் வந்து விசுவாசிகளை சேர்த்துக்கொள்ளப்போவதாக கூறவே இல்லை. அவரடு வருகையின்போது உயிர்த்தெழுதல் நடைபெறும் என்றுதான் கூறியுள்ளார்.

‘’அவர் மனுஷகுமாரனாயிருக்கிறபடியால், நியாயத்தீர்ப்புச் செய்யும்படிக்கு அதிகாரத்தையும் அவருக்குக் கொடுத்திருக்கிறார். இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்; அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமை செய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.’’ (யோவான் 5:27-29)

இவ்வாறு வெளிப்படும் இயேசுவின் அழிவில்லா ராஜ்ஜியத்தை அவர் பரம எருசலேமிலிருந்து ஆட்சி செய்வார். அங்கு நமக்கு கண்ணீர், கவலை என்பதே இல்லை. இதைப்பற்றி தெரிந்துகொள்ள வெளிப்படுத்தல் 21 ஆம் அதிகாரம் முழுவதையும் வாசித்துப்பாருங்கள். இதற்குப் பிறகு வரும் மரித்தோர் உயிர்த்தெழுதல், புதிய வானம், புதிய பூமி, ஆயிரம் வருட அரசாட்சி, நியாயசிங்காசன தீர்ப்பு, நரக ஆக்கினை ஆகியவற்றை இந்தப் புத்தகத்தில் சேர்க்கவில்லை. அதனால் தான் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் ராஜ்ஜியத்தைப் பற்றி சில பக்கங்களே எழுதமுடிந்தது. கர்த்தருக்கு சித்தமானால் இவைகளைத் தனி புத்தகமாக வெளியிட கர்த்தர் கிருபை செய்வாராக. இந்தப் புத்தகத்தின் நோக்கமே அந்திகிறிஸ்துவின் வருகை மற்றும் ஆளுகை, இயேவின் இரண்டாம் வருகை ஆகியவற்றைப் பற்றிய தவறான நம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது தான். அதனால் தான் எந்தவித போதகக்கோளாறும் இருக்கக்கூடாது என்பதற்காக ஆவியானவரின் உதவியுடன் ஏராளமான வேதவசன ஆதாரங்களைக் கொடுத்துள்ளேன். இதற்கு மேலும் உங்களுக்கு சந்தேகம் இருப்பின் அவற்றை நிவர்த்திசெய்ய கர்த்தர் தாமே உங்களுக்கு கிருபை செய்வாராக. இந்தப் புத்தகம் உங்கள் பழைய, அறியாமையின் காலங்களின் நம்பிக்கைகளை மாற்றிப் புதிதாக்கும்படி இயேசுகிறிஸ்து உங்கள் அனைவருக்கும் கிருபை செய்வாராக. ஆமென்.

‘‘சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார். பின்னும், அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார்.’’ (வெளி 21:5)

எனக்குத் தெரிந்து தமிழில் கடைசி மற்றும் முடிவுகாலங்களைப் பற்றி இவ்வளவு ஆதாரங்களுடன் கூடிய புத்தகம் இல்லை என்றே நினைக்கின்றேன். எனவே இதற்கு மேலும் இதில் நம்பிக்கை இல்லாமல் எதிர்ப்பவர்களுக்கு பதில் சொல்ல என்னிடம் ஒன்று இல்லை. ஆவியானவர் இவ்வளவையும் எழுதும் முன் எனக்குக்கொடுத்த வார்த்தையையே அப்படிப்பட்டவர்களுக்கு பதிலாக்குகிறேன். காதுள்ளவன் கேட்கக்கடவன்.’

‘‘நான் உன்னோடே பேசும்போது, உன் வாயைத் திறப்பேன்; அப்பொழுது கர்த்தராகிய ஆண்டவர் இன்னின்னதை உரைத்தார் என்று அவர்களோடே சொல்வாய்; கேட்கிறவன் கேட்கட்டும், கேளாதவன் கேளாதிருக்கட்டும்; அவர்கள் கலகவீட்டார்.’’ (எசேக்கியேல் 3:27)

இதற்கு மேலும் உங்களுக்கு சந்தேகம் இருப்பின் அவற்றை நிவர்த்திசெய்ய கர்த்தர் தாமே உங்களுக்கு கிருபை செய்வாராக. இந்தப் புத்தகம் உங்கள் பழைய, அறியாமையின் காலங்களின் நம்பிக்கைகளை மாற்றிப் புதிதாக்கும்படி இயேசுகிறிஸ்து உங்கள் அனைவருக்கும் கிருபை செய்வாராக. ஆமென்.

உங்களுக்கு இந்தக்காரியங்களைப் பற்றி அறிவுரைகள் சொல்லும் அளவிற்கு நான் முதிர்ந்தவன் அல்ல; ஆயினும் பவுல் அப்போஸ்தலன் சொல்லிச்சென்ற இந்த அறிவுரைகளைப் பின்பற்றி நித்தியஜீவனை சுதந்தரித்துக்கொள்ள உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன். (1 தெசலோனிக்கேயர் 5:1-11)

  1. சகோதரரே இவைகள் நடக்குங்காலங்களையும் சமயங்களையுங்குறித்து உங்களுக்கு எழுதவேண்டுவதில்லை.
  2. இரவிலே திருடன் வருகிறவிதமாய்க் கர்த்தருடைய நாள் வருமென்று நீங்களே நன்றாய் அறிந்திருக்கிறீர்கள்.
  3. சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல, அழிவு சடிதியாய் அவர்கள்மேல் வரும்; அவர்கள் தப்பிப்போவதில்லை.
  4. சகோதரரே, அந்த நாள் திருடனைப்போல உங்களைப் பிடித்துக்கொள்ளத்தக்கதாக நீங்கள் அந்தகாரத்திலிருக்கிறவர்களல்லவே.
  5. நீங்களெல்லாரும் வெளிச்சத்தின் பிள்ளைகளும், பகலின் பிள்ளைகளுமாயிருக்கிறீர்கள்; நாம் இரவுக்கும் இருளுக்கும் உள்ளானவர்களல்லவே.
  6. ஆகையால் மற்றவர்கள் தூங்குகிறது போல நாம் தூங்காமல் விழித்திருந்து தெளிந்தவர்களாயிருக்கக்கடவோம்.
  7. தூங்குகிறவர்கள் இராத்திரியிலே தூங்குவார்கள்; வெறிகொள்ளுகிறவர்கள் இராத்திரியிலே வெறிகொள்ளுவார்கள்.
  8. பகலுக்குரியவர்களாகிய நாமோ தெளிந்தவர்களாயிருந்து, விசுவாசம் அன்பு என்னும் மார்க்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவையும் தரித்துக்கொண்டிருக்கக்கடவோம்.
  9. தேவன் நம்மைக் கோபாக்கினைக்கென்று நியமிக்காமல், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் இரட்சிப்படைவதற்கென்று நியமித்தார்.
  10. நாம் விழித்திருப்பவர்களானாலும் நித்திரையடைந்தவர்களானாலும், தம்முடனேகூட நாம் ஏகமாய்ப் பிழைத்திருக்கும்படி அவர் நமக்காக மரித்தாரே.

ஆகையால் நீங்கள் செய்துவருகிறபடியே, ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள். ஆமென்