உயிர்த்தெழுந்து வந்த இரண்டு சாட்சிகள்

இயேசுகிறிஸ்து யோவானுக்கு வெளிப்படுத்திய விசேஷத்தில் அதிகம் பரிச்சயம் இல்லாதவர்களுக்குக் கூட அதிகம் ஆர்வத்தைத் தூண்டிய வார்த்தை 666. அதனைத் தொடர்ந்து அதிகக் கற்பனையைத் தூண்டிய இன்னொன்று ‘இரண்டு சாட்சிகளைப் பற்றிய’ தீர்க்கதரிசனம் ஆகும். வெளிப்படுத்தலின் அத்தனை வசனங்களையும் நேரடி அர்த்தமாக எடுப்பதால் இன்று இணையதளங்களிலும் மட்டுமல்லாமல் ஆலய உபதேசங்களிலும் பல கற்பனைக் கதைகள் உலாவி வருகின்றது. அவற்றில், அந்திகிறிஸ்துவின் கடைசி ஏழு வருடங்களில் இரண்டு சாட்சிகளான மோசேயும், எலியாவும் மீண்டும் வெளிப்படுவார்கள் என்ற வியாக்கியானம் மிகப்பிரபலமான ஒன்று. இதன் அடிப்படையில் ஏராளமான திரைப்படங்களும் எடுக்கப்பட்டுள்ளன. ஒருசிலர் ஏனோக்கும், எலியாவும் என்று சொல்லி அதற்கு ஆதாரமாகப் பல விளக்கங்களைக் கொடுக்கின்றனர்.

படம் 71 : முடிவுகால இரண்டு சாட்சிகள் கற்பனைக்காட்சி

அவர்கள் எந்த அடிப்படையில் இதை சொல்லிவருகிறார்கள் என்பதற்கு ஏராளமான ஆதாரங்களுடன் கூடிய புத்தகங்களும் இருக்கிறது. நாம் இதுவரைப் பார்த்த தானியேல் மற்றும் வெளிப்படுத்தலின் தீர்க்கதரிசனங்கள், சம்பவங்கள் அனைத்தும் சங்கேத மொழிகளால் நிறைந்தவை என்றால், இந்த இரண்டு சாட்சிகள் மட்டும் எப்படி ‘இரண்டு மனிதர்களாக’ இருக்கமுடியும்? வாருங்கள் அதற்கான விடையைப் பார்ப்போம்.

ஆவிக்குரிய எருசலேம்

வெளிப்படுத்தல் 11 ஆம் அதிகாரத்தை யோவான் ஆரம்பிக்கும்போது பரிசுத்த நகரமாகிய ஆவிக்குரிய எருசலேமாகிய சபை, 42 மாதங்கள் அல்லது 1260 எபிரேய நாட்கள் அல்லது 1260 தீர்க்கதரிசன வருடங்கள் புறஜாதியாரால் (கிறிஸ்துவை உடையவர்கள் அல்லாதவர்களால்) மிதிக்கப்படுவார்கள் என்று முகவுரையுடன் ஆரம்பிக்கிறார். இந்த 1260 வருடங்கள் நாம் ஏற்கனவே பலமுறை விளக்கம் பார்த்த ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியம் பூமியை ஆண்ட காலமாகும். அந்த காலத்தில் பூமியின் பரிசுத்தவான்கள் எவ்வாறு துன்புறுத்தப்பட்டார்கள் என்றும் நாம் கற்றுக்கொண்டோம்.

‘‘பின்பு கைக்கோலுக்கு ஒப்பான ஒருஅளவுகோல் என்னிடத்தில் கொடுக்கப்பட்டது. அப்பொழுது தேவதூதன் நின்று, என்னை நோக்கி: நீ எழுந்து, தேவனுடைய ஆலயத்தையும், பலிபீடத்தையும் அதில் தொழுதுகொள்ளுகிறவர்களையும் அளந்துபார். ஆலயத்திற்குப் புறம்பே இருக்கிறபிராகாரம் புறஜாதியாருக்குக் கொடுக்கப்பட்டபடியால் அதை அளவாமல் புறம்பாக்கிப்போடு; பரிசுத்த நகரத்தை அவர்கள் நாற்பத்திரண்டு மாதமளவும் மிதிப்பார்கள்’’ (வெளி 11:1,2).

இந்த காலக்கட்டத்தில் தான் இயேசுவின் இரண்டு சாட்சிகளும் வெளிப்படுவார்கள் என்றும், இந்த இரண்டு சாட்சிகள் யார் என்றும் யோவான் சொல்லியிருக்கிறார்.

‘‘என்னுடைய இரண்டு சா ட் சிகளும் இர ட் டு வஸ்திரமுடுத்திக்கொண்டிருக்கிறவர்களாய், ஆயிரத்திருநூற்றறுபது நாளளவும் தீர்க்கதரிசனஞ்சொல்லும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுப்பேன். பூலோகத்தின் ஆண்டவருக்கு முன்பாக நிற்கிற இரண்டு ஒலிவமரங்களும் இரண்டு விளக்குத்தண்டுகளும் இவர்களே.’’ (வெளி 11:3,4)

படம் 72: இரண்டு ஒலிவமரங்களும், இரண்டு விளக்குத்தண்டுகளும்

இரண்டு ஒலிவமரங்கள்

பரிசுத்த வேதாகமத்தில் ஒலிவமரங்களைக் குறித்து ஏராளமான வசனங்கள் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் இங்கு இரண்டு ஒலிவமரங்களும் இரண்டு சாட்சிகள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. தேவனை அறிந்த ஜனக்கூட்டம் மட்டுமே சாட்சியாக இருக்கமுடியும்.

‘‘பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.’’ (அப்போஸ்தலர் 1:8)

எரேமியா தீர்க்கதரிசி எருசலேம் மற்றும் யூதாவிற்கு விரோதமாய் சொன்ன தீர்க்கதரிசனத்தில் அவர்களை ‘ஒலிவமரமென்று’ கர்த்தரே பெயரிட்டார் என்று சொல்லியிருக்கிறார்.

‘‘நல்ல கனி உண்டாயிருக்கிற நேர்த்தியும் பச்சையுமான ஒலிவமரமென்னும் பேரைக் கர்த்தர்உனக்கு இட்டார்; ஆனால் மகா அமளியின் சத்தமாய் அதைச் சுற்றிலும் நெருப்பைக்கொளுத்துகிறார், அதின் கொம்புகள் முறிக்கப்பட்டது.’’ (எரேமியா 11:16)

அப்போஸ்தலனாகிய பவுல் இரண்டுவிதமான ஒலிவமரங்களைப் பற்றி சொல்லியிருக்கிறார். ஒன்று சுபாவ ஒலிவமரமாகிய யூதஜனங்கள், மற்றொன்று காட்டொலிவமரமாகிய புறஜாதி கிறிஸ்தவர்கள்.

‘‘சில கிளைகள் முறித்துப்போடப்பட்டிருக்க, காட்டொலிவமரமாகிய நீ அவைகள் இருந்த இடத்தில் ஒட்டவைக்கப்பட்டு, ஒலிவமரத்தின் வேருக்கும் சாரத்துக்கும் உடன்பங்காளியாயிருந்தாயானால், நீ அந்தக் கிளைகளுக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டாதே; பெருமை பாராட்டுவாயானால், நீ வேரைச் சுமக்காமல், வேர் உன்னைச் சுமக்கிறதென்று நினைத்துக்கொள்.’’ (ரோமர் 11:17,18)

‘‘சுபாவக்கிளைகளை தேவன் தப்பவிடாதிருக்க, உன்னையும் தப்பவிடமாட்டார் என்று எச்சரிக்கையாயிரு.’’ (ரோமர் 11;21)

அப்படியானால் இரண்டு ஒலிவமரங்கள் என்பது யூத சபை ஜனங்களையும், புறஜாதியாராயிருந்து இயேசுவை ஏற்றுக்கொண்ட கிறிஸ்தவர்களையும் குறிக்கும்.

இரண்டு விளக்குத்தண்டுகள்

இந்த இரகசியத்திற்கான விளக்கத்தை யோவானுக்கு வெளிப்படுத்தலின் ஆரம்ப அதிகாரத்திலேயே இயேசு சொல்லிவிட்டார்.

‘‘என் வலதுகரத்தில் நீ கண்ட ஏழுநட்சத்திரங்களின் இரகசியத்தையும், ஏழுபொன் குத்துவிளக்குகளின் இரகசியத்தையும் எழுது; அந்த ஏழு நட்சத்திரங்களும் ஏழு சபைகளின் தூதர்களாம்; நீ கண்ட ஏழு குத்துவிளக்குகளும் ஏழு சபைகளாம்.’’ (வெளி 1:20)

ஏழு விளக்குத்தண்டுகள் ஏழு சபைகளென்றால், இரண்டு விளக்குத்தண்டுகள் இரண்டு சபைகளைக் குறிக்கும். அப்படியானால்,

  • ஒருஒலிவமரம் மற்றும் விளக்குத்தண்டு – யூத சபை
  • இன்னொரு ஒலிவமரம் மற்றும் விளக்குத்தண்டு – புறஜாதி கிறிஸ்தவ சபை (கத்தோலிக்க அல்லாத)

இந்த ஒலிவமரமும், விளக்குத்தண்டும் ஒன்றையொன்று சார்ந்தவை என்பதற்கு சகரியாவின் தரிசனம் விளக்கத்தைத் தருகிறது.

‘‘பின்பு நான் அவரை நோக்கி: குத்துவிளக்குக்கு வலதுபுறமாகவும் அதற்கு இடதுபுறமாகவும் இருக்கிற இந்த இரண்டு ஒலிவமரங்கள் என்னவென்று கேட்டேன். மறுபடியும் நான் அவரை நோக்கி: இரண்டு பொற்குழாய்களின் வழியாய்த் தொங்கி, பொன்னிறமான எண்ணெயைத் தங்களிலிருந்து இறங்கப்பண்ணுகிறவைகளாகிய ஒலிவமரங்களின் இரண்டு கிளைகள் என்னவென்று கேட்டேன். அப்பொழுது அவர்; இவைகள் இரண்டும் சர்வலோகத்துக்கும் ஆண்டவராயிருக்கிறவரின் சமுகத்தில் நிற்கிற அபிஷேகம் பெற்றவர்கள் என்றார்.’’ (சகரியா 4:11,12,14)

இரட்டு வஸ்திரம்

இந்த இரண்டு சபைகளும் 1260 வருடங்கள் இரட்டு வஸ்திரம் உடுத்திக்கொண்டு சாட்சியாக இருந்தன என்று யோவான் காண்கிறார். இரட்டு என்பது துன்பத்தின் வழியாகக் கடந்துபோகும் காலத்தில் உடுத்துவதாகும். நாம் ஏற்கனவே இந்த 1260 வருடங்கள் தான் சபைகள் பல உபத்திரவங்களை அடைந்தது என்றும், அந்தக் காலக்கட்டத்தில் சபையானது முழுவதும் அழிந்துவிடாமல் வனாந்திரத்தில் பாதுகாக்கப்பட்டது என்றும் ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.

‘‘ஸ்திரீயானவள் வனாந்தரத்திற்கு ஓடிப்போனாள்; அங்கே ஆயிரத்திருநூற்றறுபது நாளளவும் அவளைப் போஷிப்பதற்காக தேவனால் ஆயத்தமாக்கப்பட்ட இடம் அவளுக்கு உண்டாயிருந்தது.’’ (வெளி 12:6)

இந்த 1260 வருடங்களில் ரோமன் கத்தோலிக்க சபையானது பூமியின் குடிகளை சிலை வணக்கத்தை நோக்கி தடம்மாறச் செய்துகொண்டும், அதை ஏற்க மறுத்து, இயேசுவைப் பற்றும் விசுவாசத்தை மட்டும் பேசி சாட்சியாய் வாழ்ந்த உண்மை விசுவாசிகளைக் கொலைசெய்தும் வந்தது. இந்தக் காலத்தில் மட்டும் ஐரோப்பாவில் சத்தியத்திற்கு சாட்சி சொன்ன சுமார் 5,00,00,000 உண்மைக் கிறிஸ்தவர்களைக் Catholic inquisition என்ற பெயரால் கொன்று குவித்துள்ளது. நான் சொல்வது உங்களுக்கு நம்பமுடியவில்லை என்றால் Medieval, Roman, Spanish, Portuguess, Peruvian and Mexican INQUISITION என்ற விசாரணைக் கொலைகளைப் பற்றி வரலாற்றை ஆராய்ந்து பாருங்கள்.

எருசலேம், யூதேயா, மத்தியகிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்து வந்த ஏராளமான யூதர்கள், போப் இரண்டாம் அர்பன் என்பவரால் கி.பி 1095 முதல் ஆரம்பிக்கப்பட்ட ‘சிலுவைப் போர்களில்’ கொல்லப்பட்டார்கள். இஸ்லாமியர் வசம் இருந்த எருசலேமில் இருக்கும் இயேசுவின் கல்லறையையும், அதன் புனிதத்தையும் காப்பதற்காகத் தான் இந்தப் படையெடுப்பு என்று அப்பாவி மக்களையும், பணக்கார இளைஞர்களையும் தவறான போதனைகளால் வழிநடத்தினார் போப் அர்பன். செல்லும் வழியில் ஏராளமான யூதர்கள் கொலைசெய்யப்பட்டு, அவர்களது உடைமைகள் கொள்ளையிடப்பட்டன (Rhineland Massacre). இந்த படையெடுப்புகளின்போது யூதர்கள் தங்கள் மத நம்பிக்கைக்காக உயிரை விட்டார்கள் (kiddush ha-shem). இப்படி ஆரம்பிக்கப்பட்ட சிலுவைப் போர்கள் சுமார் 300 வருடங்கள் நீடித்தன என்றால் அதன் அழிவைக் கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.

இந்தப்புத்தகத்தில் கிறிஸ்தவ விசுவாசிகள் அடைந்த உபத்திரவங்களை மட்டுமே விரிவாக எழுதியுள்ளேன். இதற்கு இணையாக ஐரோப்பாவில் சிதறடிக்கப்பட்டு வாழ்ந்துவந்த யூதர்களும் பல இனக்கொடுமைகளை சந்தித்தனர். கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாத யூதர்கள் இயேசுகிறிஸ்துவைக் கொலை செய்தவர்கள் என்ற பரப்புரையின் அடிப்படையில் துன்புறுத்தப்பட்டனர், பலர் கொல்லப்பட்டனர். 16 ஆம் நூற்றாண்டில் ரோமில் வாழ்ந்த யூதர்கள் ‘Ghetto’ என்ற இனமுகாம்களில் மட்டுமே வாழ அனுமதிக்கப்பட்டனர் (இன்றைய இலங்கை அகதிகள் முகாம் போல). அதன் பின்னர் ‘Spanish Inquisition’ காலத்தில் யூதர்கள் ஸ்பெயின் தேசத்திலிருந்து வெளியேற வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு துரத்தப்பட்டனர். யூதர்களின் தோராவுக்கு அடுத்த புனித நூலான ‘தால்முட்’ (Talmud) திருச்சபை விரோத நூலாக போப்புகளால் அறிவிக்கப்பட்டு அவர்கள் கைகளிலிருந்து பறிக்கப்பட்டு தீயிலிட்டு எரிக்கப்பட்டது. பல இடங்களில் யூதர்கள் கட்டாயமாக கத்தோலிக்க மதமாற்றம் செய்யப்பட்டு திருமுழுக்கு கொடுக்கப்பட்டது. அதன் பின்னரும் இரகசியமாக யூதவழிபாட்டு முறைகளைப் பின்பற்றியவர்கள் திருச்சபை துரோகிகள் என முத்திரை குத்தப்பட்டு பல உபத்திரவங்கள் முதல் மரணம் வரை சந்தித்தனர். இவ்வளவு கொடுமைகள் மத்தியிலும் யூத சபையினரும், புறஜாதி கிறிஸ்தவ சபையினரும் தங்கள் சாட்சியைக் காத்துக்கொண்டதால் ‘அவர்கள் இரட்டு வஸ்திரமுடுத்தி தீர்க்கதரிசனம்’ சொன்னார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.

வாயிலிருந்து புறப்பட்ட அக்கினி

இவர்களது விசுவாசத்தை அந்திகிறிஸ்துவின் போதனைகளானது சேதப்படுத்த முயற்சி செய்தபோது அவர்கள் எப்படி அதனை மேற்கொண்டார்கள் என்பதற்கும், அவர்கள் எப்படி தீர்க்கதரிசனம் சொன்னார்கள் என்பதற்கும் அடுத்த வசனம் விளக்கம் தருகிறது.

‘‘ஒருவன் அவர்களைச் சேதப்படுத்தமனதாயிருந்தால், அவர்களுடைய வாயிலிருந்து அக்கினி புறப்பட்டு, அவர்களுடைய சத்துருக்களைப் பட்சிக்கும்; அவர்களைச் சேதப்படுத்த மனதாயிருக்கிறவன் எவனோ அவன் அப்படியே கொல்லப்படவேண்டும்.’’ (வெளி 11:5)

வாயிலிருந்து வரும் அக்கினி என்பது பரிசுத்த வேத வசனமாகிய ‘தேவனுடைய வார்த்தையைக்’ குறிப்பதாகும்.

‘‘என் வார்த்தை அக்கினியைப்போலும், கன்மலையை நொறுக்கும் சம்மட்டியைப்போலும் இருக்கிறதல்லவோ? என்று கர்த்தர் சொல்லுகிறார்.’’ (எரேமியா 23:29)

‘‘ஆகையால் சேனைகளின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நீங்கள் இந்த வார்த்தையைச் சொன்னபடியினால், இதோ, நான் உன் வாயிலிட்ட என் வார்த்தைகளை அக்கினியும், இந்த ஜனத்தை விறகும் ஆக்குவேன், அது இவர்களைப் பட்சிக்கும்.’’ (எரேமியா 5:14)

எரேமியா தன்னை அழிக்க முயன்ற யூதா ராஜாக்கள் மற்றும் ஜனங்களுக்கு நடுவிலிருந்துகொண்டே அவர்களின் அழிவைக்குறித்தும், பாபிலோன் சிறையிருப்பைக் குறித்தும் தீர்க்கதரிசனம் சொல்லிக்கொண்டே வந்தார். அவரையும் அவர்கள் கிணற்றில் போடுவது முதல் கொலை முயற்சிவரைக்கும் செய்துவந்தார்கள். இப்படி இரட்டு வஸ்திரம் உடுத்தி தேவனுடைய வார்த்தையை சொல்லி ராஜ்ஜியத்தின் அழிவைக் குறித்து சொல்லிவந்த எரேமியாவைப் போல, 1260 வருடங்கள் இந்த இரண்டு சபைகளும் வேத வசனங்களைக் கொண்டு தங்களைப் பாதுகாத்தது மட்டுமல்லாமல், ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியத்தின் வஞ்சிக்கும் போதனைகளை எதிர்த்தும் நின்றார்கள். அதில் பலர் துன்பமும், மரணமும் அடைந்தார்கள். சபை மறுமலர்ச்சி மற்றும் சிறு புஸ்தகமாகிய பைபிளின் வசனங்கள் மூலம் பல ஐரோப்பிய நாடுகள் போப்புகளின் கையிலிருந்து விடுபட்டன.

மூன்று அதிகாரங்கள்

இந்த 1260 வருடங்களில் இரண்டு சபைகளுக்கும் மூன்றுவிதமான அதிகாரங்கள் கொடுக்கப்பட்டன.

‘‘அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லிவருகிற நாட்களிலே மழைபெய்யாதபடிக்கு வானத்தை அடைக்க அவர்களுக்கு அதிகாரமுண்டு; அவர்கள் தண்ணீர்களை இரத்தமாக மாற்றவும், தங்களுக்கு வேண்டும்போதெல்லாம் பூமியைச்சகலவித வாதைகளாலும் வாதிக்கவும் அவர்களுக்கு அதிகாரமுண்டு.’’ (வெளி 11:6)

  1. மழைபெய்யாது வானத்தை அடைக்க

ஆவிக்குரிய பஞ்சகாலம் என்பது கர்த்தருடைய வசனம் கிடைக்காத காலமாகும்.v

‘‘இதோ, நான் தேசத்தின்மேல் பஞ்சத்தை அனுப்பும் நாட்கள் வரும்; ஆகாரக் குறைவினால் உண்டாகிய பஞ்சமல்ல, ஜலக்குறைவினால் உண்டாகிய தாகமுமல்ல, கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சத்தை அனுப்புவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.’’ (ஆமோஸ் 8:11)

இந்த காலக்கட்டத்தில் விக்கிரக வணக்கத்தைப் பின்பற்றி சத்தியத்தைத் தரையில் தள்ளிய ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியத்தின் கீழிருந்த சபைகளுக்கு தேவனுடைய சத்திய வசனம் கிடைக்காமல் வானம் அடைக்கப்பட்டதாம். அவர்களுக்கு சத்தியம் கிடைக்காமல் போனதற்கான காரணத்தை பவுல் அந்திகிறிஸ்துவைப் பற்றி சொல்லிய 2 தெசலோனிக்கேயரில் காணலாம்.

‘‘கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்சகத்தோடும் இருக்கும். இரட்சிக்கப்படத்தக்கதாய்ச் சத்தியத்தின்மேலுள்ள அன்பை அவர்கள் அங்கிகரியாமற்போனபடியால் அப்படி நடக்கும். ஆகையால் சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு, அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்.’’ (2 தெசலோனிக்கேயர் 2:10-12)

பிரியமானவர்களே, இந்த பஞ்சகாலம் இனிதான் வரப்போகிறது என்று சொல்லப்படும் போதனைகளைப் பின்பற்றி பயந்துபோக வேண்டாம். இந்த பஞ்சகாலம், அந்திகிறிஸ்துவின் பொய்யான போதனையைப் பின்பற்றி மரியாளையும், தூதர்களின் சிலைகளையும் வணங்கி மோசம்போன கத்தோலிக்க சபை, சத்தியத்தை அறியாத பலகோடி உண்மை பக்தர்களை வழிவிலகச் செய்த காலக்கட்டத்தைக் குறிக்கும். ஒருவேளை இதை வாசித்துக்கொண்டிருக்கும் நீங்கள் மிகவும் உண்மையாக, கத்தோலிக்க சபையின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வழிபாட்டு முறைகளை செய்துகொண்டிருப்பவராக இருந்தால், இன்றே மனம்திரும்பி இயேசு ஒருவருக்கு ஆராதனையும், கனமும் கொடுங்கள்.

இஸ்ரவேல் ராஜாக்கள் காலத்தில், ராஜாவும் ஜனங்களும் பாகாலை வணங்கிவந்த நாட்களில் மழைபெய்யாதபடி எலியா வானத்தை அடைத்தார். அவர்கள் கர்மேல் பர்வதத்தின் சம்பவத்திற்குப் பின்பு ‘கர்த்தரே தெய்வம்’ என்று அறிக்கையிட்ட பின்பு தான் வானம் திறக்கப்பட்டு அவர்கள் மேல் மழை பொழிந்தது. இதே சம்பவமாகத் தான் இந்த இரண்டு சாட்சிகள் தீர்க்கதரிசனம் சொல்லிவந்த 1260 வருடங்களில், ஆவிக்குரிய அர்த்தத்தில் நிறைவேறியது. இந்த வருடங்களில் சத்தியத்தை அறியும் அறிவு அவர்கள் கண்களுக்கு மறைக்கப்பட்டு, அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாக கொடிய வஞ்சகத்தின் ஆவியை தேவன் அனுமதித்தார் என்று பவுல் சொல்லியுள்ளார். இந்த வருடங்கள் முடியும் காலக்கட்டத்தில் தான் மார்டின் லூதரை கர்த்தர் எழுப்பி, வேத எழுத்துக்கள் எல்லோர் கையிலும் கிடைக்கச்செய்து சுவிசேஷம் உலகம் எங்கும் பரவியது. இது ‘கையளவு மேகமான மறுமலர்ச்சியினால் வந்த சுவிசேஷத்தின் பெருமழை’.

  1. தண்ணீர்களை இரத்தமாக மாற்றும் அதிகாரம்

தண்ணீர் என்றாலே ‘ஜனத்திரள் அல்லது பல தேசத்து ஜாதிகள்’ என்று பலமுறை குறிப்பிட்டுள்ளேன். தண்ணீர்கள் இரத்தமாக மாறுவது என்பது ‘ஜனத்திரள் மீதான அழிவையே’ குறிக்கிறது. இதை வாசிக்கும்போது நமக்கு மோசே எகிப்தில் செய்த சம்பவம் நினைவுக்கு வரவேண்டும். மோசே எகிப்தின் நதிகளை இரத்தமாக மாற்றியது எந்த காலக்கட்டத்தில் தெரியுமா? இஸ்ரவேல் சபையினரின் அடிமைத்தனம் முடிவுபெற்ற 430 ஆவது வருடம் ஆகும். இந்த இறுதித் தீர்ப்புகளின் விளைவாகத்தான் பார்வோனிடமிருந்து இஸ்ரவேலர் விடுதலை பெற்றதுடன், பார்வோனும் அழிக்கப்பட்டான். இதேபோல் தான் ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியத்திற்கு முடிவுகட்டப்பட்ட காலமான முதல் நான்கு வாதைகள் ஊற்றப்பட்டதால் நிகழ்ந்த அழிவுகளின் காலத்தில் இந்த ராஜ்ஜியத்தின் ஆளுகைக்கு உட்பட்ட ஏராளமான ஜனங்கள் ‘நெப்போலிய யுத்தங்களில்’ கொல்லப்பட்டனர். இந்த யுத்தங்களில் கி.பி 1793 – 1794 களில் (முதல் கலசம்) சுமார் இரண்டரை இலட்சம் மக்கள் கொல்லப்பட்டனர். கி.பி 1793-1805 களில் (இரண்டாம் கலசம்) நடந்த கடல் யுத்தங்களில் ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியத்தைத் தழுவிய ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் பேரழிவுகளை சந்தித்தது.

  1. பூமியை வாதைகளால் வாதிக்கும் அதிகாரம்

இப்படி ஜனத்திரள்கள் அழிக்கப்படும் சம்பவங்களே தண்ணீர்கள் இரத்தமாக மாறும் என சங்கேத மொழிகளில் கூறப்பட்டுள்ளது. இந்த சாட்சிகள் ‘தங்களுக்கு வேண்டும்போதெல்லாம்’ பூமியை வாதைகளால் வாதிக்கும் அதிகாரம் பெற்றதினால், அவர்களின் ஜெபங்களுக்குப் பதிலளிக்கும் விதமாகவும், இரத்தம் சிந்தலுக்குப் பழிவாங்கவும் தான் அந்திகிறிஸ்துவின் ராஜ்ஜியத்தை அழிக்கும் விதமாக எக்காளங்களால் ஏற்பட்ட அழிவுகள் மற்றும் வாதைகளால் நிறைந்த கலசங்களை ஊற்றும்படி தூதர்களுக்குக் கொடுக்கப்பட்டது. இந்த இரண்டு சாட்சிகள் என்பது ‘எலியாவைப் போல வானத்தை அடைக்கவும், மோசேயைப் போல தண்ணீரை இரத்தமாகவும் மாற்றும்’ அதிகாரம் பெற்ற ஆவிக்குரிய சபைகளின் அடையாளங்களே தவிர, எலியா மற்றும் மோசே என்ற இரண்டு மனிதர்கள் உயிரோடு மீண்டும் வரும் ‘மாஜிக்’ சம்பவம் அல்ல.

ஒருவேளை இந்த சாட்சிகளில் ஒருவர் எலியாவாக இருந்தால் இயேசு மறுரூபமலையிலேயே யோவானுக்கும், பேதுருவுக்கும் சொல்லியிருப்பார். எலியாவின் ஆவியை உடையவனாகிய யோவான் ஸ்நானகன் தான் ‘முந்தி வரவேண்டும்’ என்று சொன்னாரே ஒழிய, பின்னாளில் எலியா வருவார் என்று எங்கும் சொல்லவில்லை.

‘‘இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: எலியா முந்தி வந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்துவது மெய்தான். ஆனாலும், எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள்; இவ்விதமாய் மனுஷகுமாரனும் அவர்களால் பாடுபடுவார் என்றார்.’’ (மத்தேயு 17:11,12)

மேலும் ஒரு தனிமனிதன் மீண்டும் ‘பரலோகத்திலிருந்து’ இறங்கிவருவதும், மீண்டும் ஏறிச்செல்வதும் வேதத்தில் சொல்லப்படவில்லை.

‘‘அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,’’ (எபிரேயர் 9:21)

‘‘பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை.’’ (யோவான் 3:13)

கொல்லப்பட்ட இரண்டு சாட்சிகள்

இந்த இரண்டு சாட்சிகளாகிய சபைகளும் தங்களது சாட்சியில் உறுதியாயிருந்த 1260 வருடங்கள் முடியும் காலத்தில் ஒரு முக்கிய திருப்பம் நடந்தது.

‘‘அவர்கள் தங்கள் சாட்சியைச்சொல்லி முடித்திருக்கும்போது, பாதாளத்திலிருந்தேறுகிற மிருகம் அவர்களோடே யுத்தம்பண்ணி, அவர்களை ஜெயித்து, அவர்களைக் கொன்றுபோடும்.’’ (வெளி 11;7)

ஏற்கனவே பூமியின் பரிசுத்தவான்களோடு 1260 வருடங்கள் யுத்தம் பண்ணி மேற்கொண்ட சின்னக்கொம்பு அல்லது முதலாம் மிருகத்தைப் பற்றி முந்தைய அத்தியாயங்களில் விரிவாகப் பார்த்தோம். அந்த மிருகமாகிய ‘ரோமப்பேரரசின் வடிவமான கத்தோலிக்க ராஜ்ஜியம்’ தான் பாதாளத்திலிருந்து ஏறிவந்த மிருகம் என்றும் பார்த்தோம். இந்த ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியம் தான் இந்த இரண்டு சாட்சிகளாகிய சபைகளின் சத்தியங்களை பல நூற்றாண்டுகளாக Catholic inquisition என்ற பெயரில் அழிக்க முயற்சிசெய்து, பரிசுத்த வேதத்தை யாரையும் படிக்கவிடாமல், தனது சட்டதிட்டங்களால் பூமியை வஞ்சித்து வந்தது. இந்த காலக்கட்டத்தில் பரிசுத்த வேதத்தின் சத்தியங்களின் படி வாழவும் அதைப் பிரசங்கிக்கவும் முயற்சி செய்த பல விசுவாசிகளை பல காலக்கட்டங்களில் ஒடுக்கியது; இந்த சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்படாமல் இயேசுவின் போதனைகளை மட்டும் பின்பற்றியவர்களையும், வேதப்புத்தகத்தின் பிரதிகளை வைத்திருந்தவர்களும் ‘திருச்சபை துரோகிகள்’ (Heretics) என்ற முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கிவைக்கப்பட்டது     மட்டுமல்லாமல், கொன்றும் அழிக்கப்பட்டார்கள்.

ஒரு காலக்கட்டத்தில் போப்புகள் மற்றும் உலகளாவிய மற்ற பிஷப்புகள் கூடும் கூட்டமான லேட்டரன் கவுன்சில் (4th Lateran council- May 1514) கூட்டத்தில் கத்தோலிக்க திருச்சபையானது பின்வருமாறு அறிக்கை வெளியிட்டது: ‘போப்புகளின் அதிகாரத்தை எதிர்த்தவர்கள் முற்றுபெற்றுவிட்டார்கள், இனி எதிர்ப்பதற்கு யாருமே இல்லை; மொத்த கிறிஸ்தவ உலகமும் இன்றிலிருந்து போப்பின் தலைமையின் கீழ் மட்டும் வந்துவிட்டது’. சத்தியத்தின் சார்பில் நின்ற சபைகளை நாம் கொன்று அழித்துவிட்டோம் என்பதே அவர்கள் சொன்ன செய்தி. ஆம், இந்த சாட்சிகளை இந்த மிருகம் கொன்றுவிட்டது.

மகா நகரத்தில் சாட்சிகளின் உடல்கள்

இப்படி ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியத்தால் கொன்றழிக்கப்பட்ட சபைகளாகிய சாட்சிகளின் உடல்கள் மகா நகரத்தின் வீதிகளில் கிடக்கும் என்று யோவான் காண்கிறார்.

‘‘அவர்களுடைய உடல்கள் மகாநகரத்தின் விசாலமான வீதியிலே கிடக்கும். அந்த நகரம் சோதோம் என்றும் எகிப்து என்றும் ஞானார்த்தமாய்ச் சொல்லப்படும்; அதிலே நம்முடைய கர்த்தரும் சிலுவையிலே அறையப்பட்டார்.’’ (வெளி 11:8)

இதில் சொல்லப்பட்ட மகா நகரம் எருசலேம் நகரம் அல்ல; ரோம் நகரம் தான் என்று ஆணித்தரமான ஆதாரங்களோடு முந்தைய அத்தியாயங்களில் சொல்லியிருக்கிறேன். இந்த நகரம் தான் எகிப்து என்றும் சோதோம் என்றும் ‘ஞானார்த்தமாய்’ சொல்லப்படும் நகரம் என்று சொல்லப்பட்டுள்ளது. ஞானார்த்தமாய் என்றாலே நேரடி அர்த்தம் கொண்டது அல்ல என்று தானே பொருள். இதே வார்த்தையை யோவான் 666 ஐப் பற்றி சொல்லும் போது ‘ஞானமுள்ள மனம்’ இதிலே விளங்கும் என்று சொல்கிறார். இவைகள் எல்லாம் மிக ஆழமான இரகசியங்களைக் குறிப்பதாகும். எகிப்து என்பது விக்கிரக ஆராதனையையும், சோதோம் என்பது அருவருப்பான இச்சைகள் மட்டுமல்லாது, ஆகாரத்திரட்சி, கர்வம், செல்வசெழிப்பையும் குறிக்கும். இவைகள் எல்லாம் மகா நகரமாகிய ரோமிற்கு மட்டுமே பொருந்தும்.

‘‘இதோ, கெர்வமும், ஆகாரத் திரட்சியும், நிர்விசாரமான சாங்கோபாங்கமுமாகிய இவைகளே உன் சகோதரியான சோதோமின் அக்கிரமம்’’ (எசேக்கியேல் 16:49)

எருசலேம் பரிசுத்த நகரம் என்று அழைக்கப்பட்டுள்ளதே ஒழிய, மகா நகரம் என்று சொல்லப்படவில்லை. வெளிப்படுத்தலின் 16, 17, 18 ஆம் அதிகாரங்களில் மகா நகரமாகிய பாபிலோன் என்ற ரோமைப் பற்றி பல இடங்களில் சொல்லப்பட்டுள்ளது. இந்த ‘பாதாளத்திலிருந்து ஏறிவந்த’ கடைசிகால பாபிலோனாகிய ரோம் தான் மகா நகரம் ஆகும்.

இயேசு அறையப்பட்டது எருசலேமில் தானே? என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். ஆனால் இவற்றை நீங்கள் மறந்துவிடக்கூடாது.

  • அப்போதும் இஸ்ரவேல், ரோம சாம்ராஜ்ஜியத்தின் ஆளுகையில் இருந்த ஒரு தேசம் தான்
  • ரோமகவர்னராகிய பிலாத்துவால் தான் இயேசு மரணதண்டனை தீர்ப்பைப் பெற்றார்
  • ரோமர்களின் தண்டனை முறையான சிலுவை மரணத்தையே அவர் அடைந்தார்.

அப்படியானால் இயேசு மகா நகரமாகிய ரோமின் ஆளுகைக்கு கீழ் இருந்த எருசலேமுக்கு வெளியிலான யூதேயாவின் பகுதியில் தான் சிலுவையில் அறையப்பட்டார்.

‘‘ஏனென்றால், எந்த மிருகங்களுடைய இரத்தம் பாவங்களினிமித்தமாகப் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரதான ஆசாரியனாலே கொண்டுவரப்படுகிறதோ, அந்த மிருகங்களின் உடல்கள் பாளயத்துக்குப்புறம்பே சுட்டெரிக்கப்படும். அந்தப்படியே, இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ்செய்யும்படியாக நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார்.’’ (எபிரேயர் 13:12)

“இதோ, எருசலேமுக்குப்போகிறோம்; அங்கே மனுஷகுமாரன் பிரதான ஆசாரியரிடத்திலும் வேதபாரகரிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவார்; அவர்கள் அவரை மரண ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, புறத்தேசத்தாரிடத்தில் ஒப்புக்கொடுப்பார்கள். அவர்கள் அவரைப் பரியாசம்பண்ணி, அவரை வாரினால் அடித்து, அவர்மேல் துப்பி, அவரைக் கொலைசெய்வார்கள்; ஆகிலும் மூன்றாம் நாளிலே அவர் உயிரோடே எழுந்திருப்பார் என்றார்.” (மாற்கு 10:33,34)

இந்த ஆதாரங்களின்படி பார்த்தால் இரண்டு சாட்சிகளின் உடல்களும் மகா நகரமாகிய ‘ரோமின்’ ராஜ்ஜியமான ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியத்தின் ஆளுகையின் பகுதிகளில் உயிரற்ற சடலமாக அல்லது அழிக்கப்பட்ட சபைகளாக இருந்தன. இந்த சம்பவம் இன்றுவரை கத்தோலிக்க சபைகளின் ஆராதனைகளில் பின்பற்றப்படுகிறது என்பது இன்னொரு ஆச்சரியமான செய்தி. ஆம், இந்த ராஜ்ஜியம் தான் திருவிருந்தில் பயன்படுத்தப்படும் அப்பம், உண்மையில் இயேசுவின் சரீரமாக மாற்றப்படுகிறது (Transsubstantiation conflict) என்ற கள்ளபோதனையைக் கொண்டு வந்தது. அதுமட்டுமல்லாமல் அப்பத்தை மட்டும் சபை மக்களுக்குக் கொடுத்துவிட்டு, திராட்சைரசத்தை குருக்கள் மட்டும் குடித்து, இயேசு மிக ஆசையாக நேசித்த திருவிருந்து கட்டளையையே மாற்றி ‘இயேசுவின் மரணத்தை இரத்தம் சிந்துதல் இல்லாத செத்த சரீரமாக’ மட்டும் மாற்றிவிட்டது. இத்தனையையும் செய்துவரும் சபை எப்படி இயேசுவின் உடலின் ஒரு அங்கமாக இருக்கமுடியும் என்பதை நீங்கள் என்றாவது சிந்தித்தது உண்டா? இருந்திருக்க முடியாது; ஏனென்றால் அந்திகிறிஸ்து இன்னும் வரவில்லை என்று காத்திருக்கும் பட்டியலில் தான் பெரும்பாலானோர் இருக்கின்றோம். சபையே விழித்திடு.

மூன்றரை நாட்கள் வீதியில் கிடந்த உடல்கள்

எலியாவும், மோசேயும் அந்திகிறிஸ்துவின் ஆட்சியில் எருசலேம் வீதிகளில் நின்று அக்கினியை இறக்கி அற்புதங்களை செய்வது போலவும், அவர்கள் அந்திகிறிஸ்துவினால் கொல்லப்பட்டு வீதிகளில் உடல்கள் கேட்பாரற்றுக் கிடப்பது போலவும், மூன்றரை நாட்களுக்குப் பின்பு அவர்கள் திடீரென்று உயிர்பெற்று வானத்திற்குள் எடுத்துக்கொள்ளப்படுவது போலவும் சித்தரிக்கப்படும் ஏராளமான வீடியோக்கள் இணையதளங்களில் இன்று மிகவும் பிரபலமடைந்து வருகின்றன. மேலே சொன்னபடி இரண்டு சாட்சிகளாகிய சபைகள் அழிக்கப்பட்டது பூமியின் குடிகளுக்கு, அதிலும் குறிப்பாக இந்த சாட்சிகளால் வாதிக்கப்பட்ட ஜனங்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை தான் கொடுத்தது. எனவே அவர்களில் ஒருவரும் இதைக்குறித்து, சத்தியம் அழிக்கப்படும் நிலைக்கு சென்றதைக் குறித்து கவலைப்படுவதை விட, கத்தோலிக்க திருச்சபையின் எதிரிகள் அழிந்ததைப் பார்த்து ஆனந்தம் அடைந்தார்கள்.

‘‘ஜனங்களிலும், கோத்திரங்களிலும், பாஷைக்காரரிலும், ஜாதிகளிலுமுள்ளவர்கள் அவர்களுடைய உடல்களை மூன்றரை நாள் வரைக்கும் பார்ப்பார்கள், அவர்களுடைய உடல்களைக் கல்லறைகளில் வைக்கவொட்டார்கள். அவ்விரண்டு தீர்க்கதரிசிகளும் பூமியின் குடிகளை வேதனைப்படுத்தினபடியால் அவர்கள் நிமித்தம் பூமியில் குடியிருக்கிறவர்கள் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து, ஒருவருக்கொருவர் வெகுமதிகளை அனுப்புவார்கள்.’’ (வெளி 11:9,10)

மூன்றரை நாட்கள் என்பது மூன்றரை தீர்க்கதரிசன வருடங்களாகும். ஏனென்றால் இந்த இரண்டு சாட்சிகளும் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டார்கள்; இனி கத்தோலிக்க போதனைகளுக்கு எதிரிகள் இல்லை என்று அறிவிக்கப்பட்ட காலத்தை ஒட்டிய மூன்றரை வருடங்கள், இந்த சபைகளின் சலனங்களே இல்லாமல் இருந்தது என்ற வரலாற்றை ‘The 1823 encyclopedia britannica’ பதிவுசெய்துள்ளது. இந்த காலக்கட்டங்களில் இரத்தசாட்சிகளாக மரித்த பரிசுத்தவான்களின் உடல்களை, கத்தோலிக்க கல்லறைகளில் வைக்க அனுமதி மறுக்கப்பட்டது. ஏனென்றால் இப்படி கொல்லப்பட்டவர்கள் திருச்சபைக்கு துரோகிகளாகக் கருதப்பட்டனர். பலரது உடல்கள் ஆறுகள், ஏரிகளில் கூட எறியப்பட்டது.

இப்படி சபைகளில் சீர்திருத்தம் செய்யப் பாடுபட்ட பல பரிசுத்தவான்கள் அதிகம்பேர் உபத்திரவப்படுத்தப்பட்டது போப்புகளின் அதிகாரம் உச்சத்தில் இருந்த காலக்கட்டமான 11 முதல் 13 ஆம் நூற்றாண்டு வரையாகும். அதிலும் குறிப்பாக போப் மூன்றாம் இன்னொசெண்ட் மற்றும் ஏழாம் கிரகொரி ஆகியோரின் காலக்கட்டத்தில் மிகுந்த உபத்திரவம் அடைந்தனர். இதைப் பற்றி ‘சிறுபுஸ்தகம்’ என்ற அத்தியாயத்தில் விரிவாக எழுதியுள்ளேன். இந்த உண்மை விசுவாசிகளை ஒடுக்கிவிட்டோம் என்று பெருமைகொண்டு பல இடங்களில் விருந்து மற்றும் கொண்டாட்டங்கள் நடைபெற்றதாம். அதிலும் குறிப்பாக போப் லியோ என்பவர் கொண்டாடிய விதங்களை வரலாற்று ஆசிரியரும் வேத அறிஞருமான எலியாட் (E.B.Elliott) என்பவர் ஆவணப்படுத்தியுள்ளார்.

காலூன்றி நின்ற இரண்டு சாட்சிகள்

இப்படி முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக கருதப்பட்ட, சாட்சியாய் வாழ்ந்துவந்த உண்மை விசுவாசக்கூட்டம் மீண்டும் காலூன்றி நின்றார்கள்.

‘‘மூன்றரை நாளைக்குப்பின்பு தேவனிடத்திலிருந்து ஜீவஆவி அவர்களுக்குள் பிரவேசித்தது, அப்பொழுது அவர்கள் காலூன்றி நின்றார்கள்; அவர்களைப் பார்த்தவர்களுக்கு மிகுந்த பயமுண்டாயிற்று. இங்கே ஏறிவாருங்கள் என்று வானத்திலிருந்து தங்களுக்கு உண்டான பெரிய சத்தத்தை அவர்கள் கேட்டு, மேகத்தில் ஏறி வானத்திற்குப் போனார்கள், அவர்களுடைய சத்துருக்கள் அவர்களைப் பார்த்தார்கள்.’’ (வெளி 11:11,12)

இந்த இரண்டு சாட்சிகளும் அழிந்துபோனார்கள் என்று Lateran council அறிவிக்கப்பட்டது கி.பி 1514 ஆம் வருடம் மே மாதம் 5 ஆம் தேதி; மிகச்சரியாக மூன்றரை வருடங்கள் கழித்து என்ன நடந்தது தெரியுமா? ஆம், 1517 ஆம் வருடம் அக்டோபர் 31 ஆம் தேதியில் ஜெர்மனியின் விட்டன்பர்க் நகரில் கத்தோலிக்க குருவாகவும், அங்குள்ள வேதபாடக் கல்லூரியில் ஆசிரியராகவும் இருந்த மார்டின் லூதரை ஆண்டவர் ஆயத்தப்படுத்தினார். பல சடங்காச்சாரங்கள் (Penance) மூலமாக மட்டுமே ஒருவரின் ஆத்துமா இரட்சிப்படையும் என்ற கத்தோலிக்க சபையின் உபதேசங்களை எதிர்த்து, இயேசுவைப் பற்றும் விசுவாசத்தினாலும், அவருடைய கிருபையினாலும் மட்டுமே இரட்சிக்கப்படமுடியும் என்று இவர் போதித்தார். இயேசுவுடன் மனிதன் தொடர்புகொள்ள போப், மரியாள் உட்பட எந்த மத்தியஸ்தர்களும் தேவையில்லை என்றும், நேரடியாக அவரை அப்பா பிதாவே என்று கூப்பிடலாம் என்று வேதத்தின் அடிப்படையில் போதித்தார். இதுவரை இப்படி ஒரு சத்திய உபதேசத்தைக் கேள்விப்படாத ஐரோப்பிய மக்கள் ஆச்சரியமடைந்து வேதத்தை வாசிக்க ஆரம்பித்தார்கள்.

இவரை எழுப்பியதன் விளைவாக ரோமன் கத்தோலிக்க சபையின் வேதத்திற்குப் புறம்பான செயல்பாடுகளையும், போப்புகளின் கிறிஸ்து விரோத செயல்பாடுகளையும் கண்டித்து ’95 Thesis’ என்ற 95 கட்டுரைகளை எழுதி 31, அக்டோபர் 1517 ஆம் ஆண்டு அந்நகரின் தேவாலயக் கதவில் ஆணிகளால் அறைந்தார். அதை வாசித்த அநேகரின் கண்கள் திறக்கப்பட்டு மிகப்பெரிய சீர்திருத்தப் புரட்சியே வெடித்தது. இதே நேரத்தில் அச்சு இயந்திரங்கள் பயன்பாட்டில் இருந்தபடியால், அவை பல ஆயிரம் பிரதிகளாக எடுக்கப்பட்டு ஐரோப்பா முழுவதும் பரவியது. அது ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியத்தால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு உலகையே உலுக்கியதன் விளைவாக ‘புராட்டஸ்டண்ட் மறுமலர்ச்சி’. (இன்று இந்த சபைகளில் சில பாராம்பரியங்களையும், கள்ளபோதகங்களையும் பின்பற்றி செத்த சபைகளாக மாறிவிட்டது வேறு விசயம்)

படம் 74: மார்டின் லூதர்

ஆம், மரித்துவிட்டதாகக் கருதப்பட்ட இந்த சாட்சிகளுக்குள் தேவனுடைய ஜீவ ஆவி பிரவேசித்ததினால் அவர்கள் காலூன்றி ‘மறுமலர்ச்சி சபையாக’ அல்லது மீண்டும் பரிசுத்த வேதாகமத்தை மட்டும் பின்பற்றும் சபையாக எழுந்துநின்றார்கள். இதைப்போலவே பழைய ஏற்பாட்டுக் காலத்தில் இஸ்ரவேலருக்குள் நடக்கவிருக்கும் ஒரு சம்பவத்தை எசேக்கியேல் தீர்க்கதரிசி ஏற்கனவே எழுதிவைத்துள்ளார்.

‘‘கர்த்தராகிய  ஆண்டவர்  இந்த  எலும்புகளை  நோக்கி:  இதோ  நான் உங்களுக்குள் ஆவியைப் பிரவேசிக்கப்பண்ணுவேன்; அப்பொழுது உயிரடைவீர்கள்.’’ (எசேக்கியேல் 37:5)

‘‘எனக்குக் கற்பிக்கப்பட்டபடி நான் தீர்க்கதரிசனம் உரைத்தேன்; அப்பொழுது ஆவி அவர்களுக்குள் பிரவேசிக்க, அவர்கள் உயிரடைந்து, காலூன்றி, மகா பெரிய சேனையாய் நின்றார்கள்.’’ (எசேக்கியேல் 37:10)

இப்படி காலூன்றி நின்ற சபையாகிய சாட்சிகள் மகா பெரிய சேனையாய், கத்தோலிக்க அதிகாரத்தினாலும், கோட்பாடுகளினாலும், அச்சுறுத்தல்களினாலும் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்ததால் தான் பின்வரும் நன்மைகள் நிகழ்ந்தன.

  • வேதாகமம் இலத்தீனிலிருந்து ஜெர்மானிய மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது
  • அதன்பின்பு எல்லா ஐரோப்பிய நாடுகளின் மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது. இங்கிலாந்து முழு சுவிசேஷத்தையும் அங்கீகரித்து ‘The King James version (1611 AD)’ பைபிளை ஆங்கிலத்தில் வெளியிட்டது
  • ஐரோப்பா அல்லாத பல நாடுகள் இங்கிலாந்தின் வசம் கர்த்தரால் கொஞ்சகாலம் ஒப்புக்கொடுக்கப்பட்டது. அதனால் இந்தியா உட்பட பல நாடுகளுக்கு சுவிசேஷம் தீயாகப் பரவியது.
  • கோடிக்கணக்கானோர் சத்தியத்தை அறிந்துகொண்டு, விசுவாசித்து, கிருபையினாலே இரட்சிக்கப்பட்டார்கள். அதற்கு முன்பு பிறப்பு முதல் இறப்பு வரை அத்தனையும் கத்தோலிக்க குருக்கள் கையில் தான் இருந்தது; பாவமன்னிப்பும், இரட்சிப்பும் உட்பட
  • போப்புகளின் அதிகாரம் தேய்ந்துபோக ஆரம்பித்தது.

இதுவரை எதிர்த்து நின்ற ஒவ்வொருவரையும் அழித்து வந்த ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியத்தினால் இந்த திரள் சேனையை ஒன்றும் செய்யமுடியாமல் போனதினால், இன்னும் போப்புகளை ஆதரித்து வந்த தேசங்களுக்கும், ஜனங்களுக்கும் பயம் உண்டாயிற்று. இந்த இரட்சிப்பைப் பெற்ற சபையானது (சாட்சிகள்) உன்னதங்களில் அவரோடு கூட உட்காரும் வாய்ப்பையும் பெற்றது தான், மேகங்களின் மேல் ஏறி வானத்திற்கு சென்றார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

‘‘அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள். கிறிஸ்து இயேசுவுக்குள் அவர் நம்மிடத்தில் வைத்த தயவினாலே, தம்முடையகிருபையின் மகா மேன்மையான ஐசுவரியத்தை வருங்காலங்களில் விளங்கச்செய்வதற்காக, கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்.’’ (எபேசியர் 2:5-7)

எதிர் யுத்தம்

இப்படி மார்டின் லூத்தரால் ஏற்பட்ட சுவிசேஷப்புரட்சியினால் ஐரோப்பா தலைகீழாக மாறியதையும், தங்களுக்கு அதிகாரம் குறைந்து வருவதையும் கண்ட தீவிர கத்தோலிக்க குருக்களால் பல எதிர் சீர்திருத்தங்கள் (Counter reformation) கொண்டுவரப்பட்டன. அதாவது இன்று நமது நாட்டில் இயேசுவை ஏற்றுக்கொண்ட புறமதத்தவரை தங்கள் ‘தாய் மதத்திற்கு’ திரும்ப அழைக்கும் சம்பவங்கள் நடைபெறுவது போல கத்தோலிக்க சபையின் அருமைபெருமைகளை எடுத்துச்சொல்ல பல இயக்கங்கள் 16 ஆம் நூற்றாண்டின் மத்தியில் அதிலும் குறிப்பாக ‘டிரெண்ட் கவுன்சிலின்’ (Council of Trent-1545) தீர்மானத்திற்குப் பின் தோற்றுவிக்கப்பட்டன. அதன் ஒரு பகுதிதான் இரகசிய வருகை என்ற Futurism கொள்கை என்று பலமுறை சொல்லியுள்ளேன். ஆனால் ‘சிறுபுஸ்தகம்’ மூலம் பரவிய சத்தியத்தின் வெளிச்சத்திற்கு முன் இந்த இருளால் நிற்கமுடியாததினால் மாற்றுவழிகளைத் தேட ஆரம்பித்தனர். இதன் முக்கிய நோக்கமே கல்விநிறுவனங்களை தோற்றுவிப்பது, மருத்துவப்பணிகளை செய்வது, மிஷனரிகளை அனுப்புவது போன்ற சமூகப்பணிகள் மூலம் நற்பெயரை சம்பாதிப்பதுடன் இழந்த அதிகாரத்தை மீட்டெடுப்பதாகும். அவைகளில் ஒன்று தான் இக்னேசியஸ் (St.Ignatius of Loyola) என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட ‘Society of Jesus’ ஆகும். பல போப்புகள் இந்தக் காலக்கட்டங்களில் இந்த இயக்கத்தில் தீவிரமாக இயங்கினார்கள். அதில் ஒருவரான வின்செண்ட் தே பால் (Vincent de paul) என்பவரின் பெயரால் இன்றுவரை ஏழைகளுக்கு ஆதரவு வழங்கப்பட்டு வருகிறது. எனவே தான் நெப்போலியனால் முறியடிக்கப்பட்ட முதலாம் மிருகமாகிய கத்தோலிக்க ரோம சாம்ராஜ்ஜியத்தைத் தொடர்ந்து வந்த வாட்டிகன் ‘ஆட்டுக்குட்டிக்கு ஒப்பான’ சாதுவான இரண்டாம் மிருகமாக யோவானுக்கு வெளிப்படுத்தப்பட்டது. இதில் சொல்லப்பட்டவைகள் உண்மைதானா என்று ஆராய்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.

பூமி அதிர்ச்சி

இப்படி இந்த சாட்சிகள் காலூன்றி நின்று மேகத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட காலக்கட்டம் 16 முதல் 18 ஆம் நூற்றாண்டு வரையிலான சம்பவங்கள் ஆகும். இந்த காலத்தின் முடிவில் தான் கி.பி 1790 களில் நெப்போலியனால் ஏற்பட்ட யுத்தங்கள் மற்றும் பிரெஞ்சுப் புரட்சியினால் ரோமன் கத்தோலிக்க ஆளுகைக்கு உட்பட்ட ஐரோப்பிய தேசங்களில் ஏராளமான அழிவு ஏற்பட்டது. இந்த பிரெஞ்சுப்புரட்சி தான் பூமி அதிர்வாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பங்கள் அனைத்தும் ஏழாம் எக்காளத்திற்கு சற்றுமுன் ‘ஆறாம் எக்காளாம்’ ஊதப்பட்ட காலங்களில் நடந்த சம்பவங்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

‘‘அந்நேரத்திலே பூமி மிகவும் அதிர்ந்தது, உடனே அந்த நகரத்தில் பத்திலொருபங்கு இடிந்து விழுந்தது; மனுஷரில் ஏழாயிரம்பேர் பூமியதிர்ச்சியினால் அழிந்தார்கள்; மீதியானவர்கள் பயமடைந்து பரலோகத்தின் தேவனை மகிமைப்படுத்தினார்கள். இரண்டாம் ஆபத்து கடந்துபோயிற்று; இதோ, மூன்றாம் ஆபத்து சீக்கிரமாய் வருகிறது. ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான்;…..’’ (வெளி 11:13-15)

ரோம சாம்ராஜ்ஜியத்தின் ‘பத்தில் ஒரு நாடான’ பிரான்Þ போப்பாதிக்கத்தை முற்றிலும் எதிர்த்து நின்றதால் அதன் மீதான அதிகாரத்தை ரோம் இழந்தது. இந்த ஏழாயிரம்பேர் என்பது பிரஞ்சுப்புரட்சியினால் இறந்த நிறைவின் தொகையைக் குறிக்கும். நேரடியாக 7000 பேர் இறந்துபோனார்கள் என்ற அர்த்தமல்ல. இதன் முடிவில் தான் ஏற்கனவே நாம் பலமுறை பார்த்தபடி ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியத்தின் 1260 வருட ஆட்சி நெப்போலியனால் கிபி 1798 ல் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இது ஏழாம் எக்காளம் என்று நாம் ஏற்கனவே பார்த்துவிட்டோம். உங்களுக்கு சந்தேகம் இருப்பின் இதில் சொல்லப்பட்ட எல்லா சம்பவங்களையும் வரலாற்றில் புரட்டிப்பாருங்கள். ஏராளமான புத்தகங்களும், இணையதள வரலாறும் உங்களுக்கு முன்பாக இருக்கிறது. சோதித்துப்பார்த்து நலமானதைப் பற்றிக்கொள்ளுங்கள். ஆமென்.

1 comment on “உயிர்த்தெழுந்து வந்த இரண்டு சாட்சிகள்

  1. sir, clarify the time line of Two witnesses. They are not connected with 1260 years of church persecution which starts from 538-1798. two testimonies timeline ends in 1517…if they ( two churches) testify in this time their time will end 1798 only ..pls clarify sir. Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *