சிறு புஸ்தகம்

    பரிசுத்த வேதத்தின் பழைய ஏற்பாட்டுப் புத்தகங்கள் ‘தோல் சுருள்களிலும்’, புதிய ஏற்பாட்டுப் புத்தகங்கள் ‘பாப்பைரஸ்’ (Papyrus) என்ற நாணற்செடியிலிருந்து செய்யப்படும் காகிதத்தைப் போன்ற தாள்களில் எழுதப்பட்டு அடுக்கான பக்கங்களாக தைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டிருந்தது. மத்தியகால சபைகளின் நாட்களில் கத்தோலிக்க குருக்களுக்கு மட்டுமே பைபிள் அனுமதிக்கப்பட்டது. ஒருவருக்கு பைபிள் வேண்டுமென்றால் தன் கைப்பட காகிதங்களில் எழுதியாக வேண்டும். நாம் தற்போது உபயோகிப்பது போல மெல்லிய காகிதங்கள் அப்போது கிடையாது. எனவே கைப்பிரதி பைபிள்கள் கனமானதாகவோ அல்லது பல பாகங்களாகப் பிரித்தோ தான் பயன்படுத்தப்பட்டது.

படம் 69: வேதப்புஸ்தகச் சுருள்

ஜொகன்ஸ் குட்டன்பர்க்’ என்பவர் முதன் முதலில் அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்ததும் அச்சடிக்கப்பட்ட முதல் புஸ்தகம் பைபிள் தான். இது GutenbergBible (1455 AD)  என்று அழைக்கப்படுகிறது. இந்த கண்டுபிடிப்புகளுக்குப் பின்பு தான் பைபிள் கையில் எடுத்துச்செல்லும் அளவான புஸ்தகமாகக் கிடைக்க ஆரம்பித்தது. இன்று பாக்கெட்டில் வைத்துச்செல்லும் அளவிற்கு சுருங்கிவிட்டது.

பரிசுத்த வேதத்தில் பலவிதமான ‘புஸ்தகங்களைப் பற்றி’ சொல்லப்பட்டுள்ளது.

  1. நியாயப்பிரமாண புஸ்தகம்
  2. வம்ச அட்டவணைப் புஸ்தகம்
  3. வரலாற்றுப் புஸ்தகங்கள் (நாளாகமம், யுத்த, யாசேர்)
  4. தீர்க்கதரிசன புஸ்தகம்
  5. ஞாபகப் புஸ்தகம்
  6. ஜீவபுஸ்தகம்

ஆனால் ‘சிறு புஸ்தகம்’ என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 10 ஆம் அதிகாரத்தில் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. அப்படியானால் இந்த அதிகாரம் நிறைவேறும் காலக்கட்டத்தில் தான் இந்த சிறு புஸ்தகம் வெளிப்படுகிறது என்று அர்த்தம்.

எந்த காலக்கட்டம்?

இந்த சிறு புஸ்தகத்தைப் பற்றி வரும் அதிகாரம் ஆறாம் எக்காளத்திற்கும், ஏழாம் எக்காளத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் வருகிறது. அதாவது கிழக்கு ரோம சாம்ராஜ்ஜியத்தில் ஒட்டமான் எழுச்சியடைந்த காலத்திற்குப் பின்பு (6th Trumpet – கி.பி 1063- 1453), ஆனால் ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியம் நெப்போலியனின் கைகளால் முற்றுபெற ஆரம்பித்த காலத்திற்கு முன்பு (7th trumpet – கி.பி 1789) என்ற இந்த கால இடைவெளியில் தான் இந்த சிறு புஸ்தகம் தூதனுடைய கைகளில் இருக்க யோவான் காண்கிறார்.

‘‘(6 ஆம் எக்காளத்தின் நாட்களுக்குப்) பின்பு, பலமுள்ள வேறொரு தூதன் வானத்திலிருந்து இறங்கிவரக்கண்டேன்; மேகம் அவனைச் சூழ்ந்திருந்தது, அவனுடைய சிரசின்மேல் வானவில்லிருந்தது, அவனுடைய முகம் சூரியனைப்போலவும், அவனுடைய கால்கள் அக்கினி ஸ்தம்பங்களைப்போலவும் இருந்தது. திறக்கப்பட்ட ஒரு சிறு புஸ்தகம் அவன் கையில் இருந்தது; ‘‘ (வெளி 10:1,2)

இந்த இரண்டு எக்காளங்களுக்கு இடையிலான காலக்கட்டத்தில், கிழக்குரோம சாம்ராஜ்ஜியம் (காண்ஸ்டாண்டிநோபிள்) ஒட்டமானியரிடம் வீழ்ந்த அடுத்த வருடத்திலேயே (கி.பி 1454) முதல் அச்சடிக்கப்பட்ட ‘சிறு புஸ்தகமாக’ இந்த பைபிள் எல்லோர் கைகளிலும் கிடைக்கும் என்பதை இயேசுகிறிஸ்து யோவானுக்கு சுமார் 1400 வருடங்களுக்கு முன்பே எவ்வளவு துல்லியமாக சொல்லியிருக்கிறார் பார்த்தீர்களா? ஆம், இந்த சிறு புஸ்தகம் என்பது நம் கைகளில் தவழும் பைபிள் தான் என்பதற்கான வேத ஆதாரங்களைத் தான் இனி பார்க்க இருக்கிறோம். ‘திறந்த மனதோடு’ உள்ளே வாருங்கள்.

திறக்கப்பட்ட சிறு புஸ்தகம்: வெற்றியின் அடையாளம்

தூதன் கையிலிருந்த சிறு புஸ்தகம் திறக்கப்பட்டவாறு இருந்தது என்று யோவான் காண்கிறார். ஆதிசபையின் நாட்களுக்குப் பின்னர் பல உபத்திரவங்களை சந்தித்த உண்மை விசுவாசிகள் உலகமெங்கும் சிதறினர். அவர்களில் சிலர் பழைய, புதிய ஏற்பாட்டு கைப்பிரதிகளை எடுத்துச்சென்று இரகசியமாகப் பாதுகாத்தனர். சிலர் கத்தோலிக்க ரோம ராஜ்ஜியத்தின் கொடுமைகளிலிருந்து தப்பிக்க பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்போது கையில் கிடைத்த பிரதிகளைக் கடத்திச்சென்றனர். இப்படி ஆங்காங்கே இருந்த பிரதிகள் மட்டும் தான் சாதாரண ஜனங்கள் கையில் இருந்தது. மற்றபடி கத்தோலிக்க குருக்கள் கையில் மட்டுமே லத்தீன் மொழியாக்கம் செய்யப்பட்ட வேத புஸ்தகத்தின் பிரதிகள் இருந்தது. அது ஆலய ஆராதனை நேரங்களில் லத்தீன் மொழியில் மட்டுமே வாசிக்கப்படும். லத்தீன் அறியாத மற்ற ஐரோப்பிய நாடுகளில் உள்ள கத்தோலிக்க சபையினர் அதை அறிய வாய்ப்பில்லாமல் போனது. மீறி வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்ய முயற்சித்தவர்கள் திருச்சபை விரோதிகள் என முத்திரை குத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டனர். இவ்வாறு சாதாரண மக்களுக்கு மூடப்பட்டதாக அல்லது மறைக்கப்பட்டதாக இருந்த வேதபுஸ்தகத்தின் எழுத்துக்கள், இந்த இடைப்பட்ட காலக்கட்டங்களில் பல்வேறு பரிசுத்தவான்களின் உயிர் தியாகத்தால் எல்லோர் கைகளிலும் அச்சிடப்பட்ட ‘சிறு புஸ்தகமாக’ கிடைத்ததை தூதன் வெற்றி வாகை சூடிய தோற்றத்தில் அறிவிக்கிறார்.

‘‘திறக்கப்பட்ட ஒரு சிறு புஸ்தகம் அவன் கையில் இருந்தது; தன் வலதுபாதத்தைச் சமுத்திரத்தின்மேலும், தன் இடதுபாதத்தைப் பூமியின்மேலும் வைத்து, சிங்கம் கெர்ச்சிக்கிறதுபோல மகாசத்தமாய் ஆர்ப்பரித்தான்; அவன் ஆர்ப்பரித்தபோது ஏழு இடிகளும் சத்தமிட்டு முழங்கின.’’ (வெளி 10:2,3)

படம் 70: சிறுபுஸ்தகத்துடன் தூதன்

தேவனுடைய வார்த்தையின் மேல் சாத்தானின் போர்

இந்த தூதன் வெற்றி முழக்கமிடுவதாக சொல்லப்பட்டிருந்ததிலிருந்து, அவன் இதற்கு முன் ஒரு யுத்தத்தில் ஈடுபட்டுள்ளான் என்றும் நாம் அறிந்துகொள்ளலாம். அதுதான் தேவனுடைய வார்த்தை ஜனங்களுக்குக் கிடைக்காமல் செய்ய சாத்தான் ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியத்தை பயன்படுத்தி பரிசுத்தவான்களுக்கு எதிராக செய்த யுத்தம் என்று ஏற்கனவே பலமுறை குறிப்பிட்டுள்ளேன். சத்திய வேதவசனங்களை ஜனங்கள் அறிந்துகொண்டால் அவர்கள் தனது கள்ளப்போதகங்களை வேறுபிரித்து அறிந்துகொள்வார்கள் என்பது சாத்தானுக்கு நன்கு தெரிந்த ஒன்று. ‘எழுதியிருக்கிறதே’ என்று சொல்லி சாத்தானைத் துரத்திய இயேசுவின் பரிசுத்த வேதவார்த்தைகள் ஜனங்களுக்குக் கிடைத்துவிட்டால், தான் பயன்படுத்திவரும் ரோமன் கத்தோலிக்க சபையின் அத்தனை வஞ்சனைகளும் ‘வெளிச்சத்திற்கு’ வந்துவிடும் என்று தெரிந்துதான் பல நூற்றாண்டுகளாக ஜனங்களின் கையில் வேதப்புத்தகம் கிடைப்பதை எதிர்த்து செயல்பட்டுவந்தான். ஜனங்கள் பைபிளை அறிந்துகொண்டால் ‘இயேசு உயர்த்தப்படுவார்’, போப்புகளின் அந்தஸ்து தாழ்த்தப்படும் என்று தெரிந்தே அவர்களும் இதை அனுமதித்தனர். இந்த தேவனின் வார்த்தைகளுக்கு எதிரான யுத்தம் கிழக்கு ரோம ராஜ்ஜியம் (காண்ஸ்டாண்டிநோபிள்) வீழ்ச்சியடைந்த அடுத்த வருடமே முடிவுக்கு வந்தது. இதன் பலனாக பைபிள் சாதாரண மக்கள் கைகளிலும் கிடைத்தது என்பதை ஒரு வரியில் சொன்னாலும், அதற்குப்பின் இருக்கும் பலரின் தியாகங்களைப் பார்க்காமல் நாம் இந்தப்பகுதியைப் புரிந்துகொள்ள முடியாது.

பைபிளின் வரலாறு (சிறு புஸ்தகம்)

  • முதலாம், இரண்டாம் நூற்றாண்டுகள்: சுவிசேஷ புத்தகங்கள் மற்றும் நிருபங்கள் கைப்பிரதிகளாக எடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது. குறிப்பாக அந்தியோகியாவில் (Antioch) இருந்த கிறிஸ்தவர்கள் இதைத் தீவிரமாக செய்துவந்தனர்.
  • சுமார்கி.பி. 400 களில்: பழைய ஏற்பாட்டின் 39 புத்தகங்களும், புதிய ஏற்பாட்டின் 27 புத்தகங்களும் வேதாகமமாகத் தொகுக்கப்பட்டது. இந்த காலத்தில் ரோமன் கத்தோலிக்க சபை மூலம் பைபிளாக வெளிவந்த The Vulgate பைபிளில் சில திருத்தங்களை தங்களுக்கு சாதகமாக செய்துகொண்டார்கள் என்ற புகார் இன்றுவரை இருக்கிறது.
  • ஆறாம்நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை: லத்தீன் மொழி தவிர மற்ற மொழிகளில் பைபிள் உபயோகப்படுத்தப்படுவது போப்புகளால் தடை செய்யப்பட்டது. மற்ற மொழிகளில் இருந்த பைபிள்கள் பொதுஇடங்களில் வைத்து எரிக்கப்பட்டது. மீறி, இரகசியமாக வைத்திருந்தவர்கள் திருச்சபையின் துரோகிகள் என்று குற்றம்சாட்டப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். இதைச் செய்தது திருச்சபைகளின் தாய் என்று தன்னை சொல்லிகொள்ளும் கத்தோலிக்க சபைதான் என்பதை நீங்களே வரலாற்றில் ஆய்வுசெய்து பாருங்கள்
  • வால்டென்ஸியன்ஸ் (waldensians 1170-1217 AD) என்ற இத்தாலியை சார்ந்த ஒரு கூட்டத்தினர், ‘திருச்சபை சட்டங்கள் அல்ல, வேதமே விசுவாசத்திற்கும், வாழ்க்கைக்கும் இறுதியான அதிகாரமுடையதாக இருக்கவேண்டும்’ என்று சொல்லி சுவிசேஷம் அறிவித்து வந்தனர். மேலும் ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது தாய்மொழியில் வேதம் இருக்கவேண்டும் என்று சொல்லி பைபிள் மொழிபெயர்ப்புகளிலும் ஈடுபட்டு வந்தனர். போப்புகள் இவர்களை ஒடுக்கி, துன்புறுத்தி, அந்த இனத்தையே படையெடுப்புகள் (Crusades) மூலம் அழித்தனர்.
  • இதேகாலக்கட்டத்தில் பிரான்ஸின் ஆல்ப் மலையோரங்களில் வாழ்ந்த ஒரு குழுவினர் (அல்பிஜென்ஸஸ்- Albigenses) ரோமன் கத்தோலிக்க சபையின் சொரூப வணக்கம், உத்தரிக்கும் ஸ்தலம், போப்புகளை வழிபடுவது போன்றவற்றை எதிர்த்து, சபையை புதிய ஏற்பாட்டின் அடிப்படையில் வழிநடத்திச்செல்ல நிர்பந்தித்தனர். போப் மூன்றாம் இன்னொசெண்ட் கி.பி 1208-1209 களில் இவர்களுக்கு விரோதமாகப் போர் தொடுத்து ஏராளமான படுகொலைகளை செய்து அழித்தார்.
  • ஜான்விக்ளிஃப் (கி.பி 1329-1384): இவர் கத்தோலிக்க சபையின் திருவிருந்து பற்றிய தவறான போதனைகளையும் (Transubstantiation) போப்புகளின் அட்டூழியங்களையும் எதிர்த்து பிரச்சாரம் செய்ததுடன், பைபிளை 1380-1384 களில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இதற்காக இவர் பல உபத்திரவங்களை சந்தித்தார். இவர் தான் ‘மறுமலர்ச்சியின் விடிவெள்ளி’ என்றழைக்கப்படுகிறார்.
  • ஜான்ஹஸ்: இவர் பரிசுத்த வேதத்தில் சொல்லப்படாத கத்தோலிக்க திருச்சபையின் உபதேசங்களையும், பழக்கவழக்கங்களையும் கண்டித்து புரட்சி செய்தார். இதனால் கி.பி 1415 ஆம் ஆண்டு கத்தோலிக்க சபை மன்றத்தின் ஆணையின்பேரில் உயிரோடு தீயிலிட்டு கொழுத்தப்பட்டார்.
  • ஜெரோம்சவனரோலா (கி.பி 1452-1498): இவரும் மறுமலர்ச்சிக் கொள்கைக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தததால் அப்போதைய போப் இவரை மரத்தில் தூக்கிலிட்டுக் கொன்றார். பின்னர் இவரது சடலம் பிளாரன்ஸ் நகர மையத்தில் தீயிலிட்டுக் கொளுத்தப்பட்டது.
  • ஜெர்மனியின் ஜோகன்ஸ் குட்டன்பெர்க் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட அச்சுஇயந்திரத்தால் முதல் அச்சடிக்கப்பட்ட புத்தகமாக பைபிள் வெளிவந்தது. அது Guternberg Bible என்றே அழைக்கப்பட்டது. சுவிசேஷம் பரவ வேண்டும், எல்லோர் கைகளிலும் பைபிள் என்ற சிறு புஸ்தகம் கிடைக்கவேண்டும் என்ற தேவனுடைய திட்டம் மிகச்சரியாக நிறைவேறியது (Between 6th and 7th trumpet). இதற்குப்பின்பு அச்சிடப்பட்ட பைபிள்கள், புத்தகங்கள், கைப்பிரதிகள் வெளியாவது எளிதாக மாறியது.
  • மார்டின்லூதர் கி.பி 1517 ஆம் ஆண்டு பைபிளை ஜெர்மன் மொழியில் வெளியிட்டார். இதிலிருந்து தான் சுவிசேஷமும், மறுமலர்ச்சியும் உலகமெங்கும் வெடித்துப்பரவியது. வால்டென்ஸியன்கள் தங்கள் கைகளில் இருந்த ஒரிஜினல் வேதசுருள்களைக்கொண்டு மிஷனரிகளை பல இடங்களுக்கு இரகசியமாக அனுப்பி சுவிசேஷத்தை விதைத்தார்கள். அந்த விதை தான் புராட்டஸ்டண்ட் மறுமலர்ச்சிக்கு வித்திட்டது. அது ஜான் விக்கிளிப் காலத்தில் வளர ஆரம்பித்தது; லூதரின் காலத்தில் பலன் கொடுத்தது; இன்று நாம் அதன் கனிகளை ருசித்துக்கொண்டிருக்கிறோம். இதற்கு மேல் இன்னொரு வசனம் கிடைக்காத இருண்டகாலம் வரும் என்ற நம்பிக்கை அடிப்படை ஆதாரமற்றது. விசுவாசிகளின் இருதயம் வேண்டுமானால் நம் காலக்கட்டங்களில் இச்சைகளினால் இருண்டு வசனம் நுழைய இடம்கொடுக்காத அளவுக்கு போகலாம்.
  • வில்லியம் டிண்டேல் என்பவர் புதிய ஏற்பாட்டை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டதால் (Tyndale Bible-1526 AD) கத்தோலிக்க சபையால் எரித்துக்கொல்லப்பட்டார். அவர் எரிந்து கொண்டிருக்கும்போது சொன்னது என்ன தெரியுமா? ‘‘ஆண்டவரே இங்கிலாந்து மன்னனின் கண்களைத் திறந்தருளும்’’
  • இந்தஇரத்த சாட்சியின் கூக்குரலைக் கேட்ட ஆண்டவர் இங்கிலாந்து மன்னர் எட்டாவது ஹென்றியின் கண்களைத் திறந்ததால் அவர் சுவிசேஷத்தை ஏற்றுக்கொண்டு கி.பி 1540 ல் The Great Bible என்ற அங்கீகரிக்கப்பட்ட வேதாகம மொழிபெயர்ப்பை வெளியிட்டார்.
  • கி.பி1560ல் முதல் முறையாக அதிக அளவில் அச்சடிக்கப்பட்ட, சாதாரண குடிமக்களுக்கும் கையில் கிடைத்த பைபிள் என்ற பெருமையை The Geneva Bible பெற்றது.
  • இந்தவரிசையில் கி.பி 1604 ஆம் ஆண்டு இங்கிலாந்து மன்னன் ஜேம்ஸ் என்பவரது முயற்சியால் அமைக்கப்பட்ட விசுவாசமிக்க ஒரு குழுவினரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்தது தான் இன்றுவரை உலக அளவில் அங்கீகாரம் பெற்று நம் கைகளில் தவழ்ந்துகொண்டிருக்கும் ‘The King James Version’ (KJV-1611).
  • இந்தகாலக்கட்டத்தில் தான் புறஜாதி இந்தியர்களான நம்மையும், நம்மைப்போன்ற உலகின் பல புறஜாதியினரையும் கர்த்தர் நினைவு கூர்ந்ததினால், இரண்டு நூற்றாண்டுகளுக்கு இந்தியா உட்பட உலகின் 25% நிலப்பரப்பை இங்கிலாந்து வசம் ஒப்புக்கொடுத்தார். அவர்களின் காலனியாதிக்கத்தின் விளைவாகத் தான் மிஷனரிகள் நம் நாட்டிற்கும் வந்து சுவிசேஷம் அறிவித்து நம்மையும் கிறிஸ்துவுக்குள்ளாக்கினார்கள். இந்த திட்டத்திற்கு உதவிகரமாக இருந்ததே இந்த சிறு புஸ்தகமாக இருந்த பைபிள் தான்.
  • தமிழகத்திற்கு மிஷனரியாக வந்த பர்தொலோமேயு சீகன்பால் தரங்கம்பாடியில் ஊழியம் செய்ததுமில்லாமல் முதன்முதலில் தமிழில் சுவிசேஷ புத்தகங்களை மொழிபெயர்த்தார்.
  • இதேசமயம் 1800 களில் வில்லியம் கேரி பல இந்திய மொழிகளில் பைபிளை மொழிபெயர்த்தார்.

படம் 70: நம் கைகளில் இருக்கும் வேதம்

இத்தனைத் தடைகளைத் தாண்டி நம் கைகளில் கிடைத்த பைபிளை உங்கள் கைகளில் சுமக்க வெட்கப்படுகிறீர்களா? இருதயத்தில் பதிக்க தாமதப்படுத்துகிறீர்களா? அதன்படி நடக்க யோசிக்கிறீர்களா? இல்லை இந்த தூதன் போல வெற்றிக்களிப்புடன் அதைக்கொண்டாடுகிறீர்களா? நீங்களே உங்களைப் பரிசோதித்துக்கொள்ளுங்கள்

தேவரகசியம்

இந்த சிறு புஸ்தகம் கைகளில் கிடைப்பதற்கும், தேவரகசியத்திற்கும் என்ன சம்பந்தம் என்று பார்ப்போம். ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியம் வீழ்ச்சியடைய ஆரம்பித்த இந்த காலக்கட்டத்தில், இந்த சிறு புஸ்தகம் வெளிவந்ததினால் தான் அவர்களால் சுவிசேஷம் பரவுவதைத் தடுக்க முடியவில்லை. ஒரு பக்கம் அரசியல் அதிகார வீழ்ச்சி; இன்னொரு பக்கம் சிறு புஸ்தகமாகிய பரிசுத்த வேதம் எல்லா ஜாதிகளுக்கும், தேசங்களுக்கும் கிடைத்ததனால் நிகழ்ந்த ஆவிக்குரிய எழுப்புதல் மற்றும் சபை மறுமலர்ச்சியினால் கத்தோலிக்க ராஜ்ஜியம் திகைத்து நின்றது. அதன் அழிவு நெருங்கிவிட்டதையும், அதன் பின்பு உலகமெங்கும் சுவிசேஷம் பரவப்போவதையும், பல கோடி மக்கள் இயேசுவின் உண்மை சீடர்களாக மாறப்போவதைக் குறிக்கும் செய்தியே இந்த தேவரகசியம்.

‘‘சமுத்திரத்தின்மேலும் பூமியின்மேலும் நிற்கிறதாக நான் கண்ட தூதன், தன் கையை வானத்திற்கு நேராக உயர்த்தி; இனி காலம் செல்லாது; ஆனாலும் தேவன் தம்முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளுக்குச் சுவிசேஷமாய் அறிவித்தபடி, ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே அவன் எக்காளம் ஊதப்போகிறபோது தேவரகசியம் நிறைவேறும் என்று,…சொன்னான்.’’ (வெளி 10:5,6)

ஏழாம் தூதன் எக்காளத்தை ஊதியதால் கொடுக்கப்பட்ட ஏழு வாதைகளால் ரோம சாம்ராஜ்ஜியம் படிப்படியாக அழிந்து அதன் இறுதியில் இயேசுவின் ராஜ்ஜியம் ஸ்தாபிக்கப்படும் என்று கர்த்தர் யோவானுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். இது தான் தேவரகசியம்.

‘‘ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின; அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம் பண்ணுவார் என்னும் கெம்பீர சத்தங்கள் வானத்தில் உண்டாயின.’’ (வெளி 11:15)

‘‘ஜாதிகள் கோபித்தார்கள், அப்பொழுது உம்முடைய கோபம் மூண்டது; மரித்தோர் நியாயத்தீர்ப்படைகிறதற்கும், தீர்க்கதரிசிகளாகிய உம்முடைய ஊழியக்காரருக்கும் பரிசுத்தவான்களுக்கும் உமது நாமத்தின்மேல் பயபக்தியாயிருந்த சிறியோர் பெரியோருக்கும் பலனளிக்கிறதற்கும், பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுக்கிறதற்கும், காலம்வந்தது என்று சொல்லி, தேவனைத் தொழுதுகொண்டார்கள்.’’ (வெளி 11:18)

பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுக்கும் காலம் தான் அவர்கள் மேல் ஊற்றப்பட்ட ஏழு கலசங்களின் காலமாகும். சுவிசேஷம் சிறு புஸ்தகத்தின் மூலமாக உலகமெங்கும் பரவி ராஜ்ஜியங்களை தேவனுக்கு சொந்தமாக்கி வந்ததும் இந்த காலக்கட்டம் தான். இந்த சுவிசேஷம் உலமெங்கும் பரவி புறஜாதிகள் அனைவரும் இயேசுவை அறிந்துகொள்ளும் காலம் வரைக்கும் இஸ்ரவேலர் இயேசுவை மேசியாவாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதும் தேவரகசியம்.

‘‘மேலும், சகோதரரே, நீங்கள் (ஒட்டவைக்கப்பட்டபடியால்) உங்களையே புத்திமான்களென்று எண்ணாதபடிக்கு ஒரு இரகசியத்தை நீங்கள் அறியவேண்டுமென்றிருக்கிறேன்; அதென்னவெனில், புறஜாதியாருடைய நிறைவு உண்டாகும்வரைக்கும் இஸ்ரவேலரிலொரு பங்குக்குக் கடினமான மனதுண்டாயிருக்கும்.’’ (ரோமர் 11:25)

இந்த தேவரகசியம் பாதி மட்டும் தான் நிறைவேறி உள்ளது. மீதி இன்னும் நிறைவேறி முடியவில்லை. அதற்கான காரணங்கள்

  1. ரோம ராஜ்ஜியத்தின் மேல் ஊற்றப்பட்ட ஆறு கலசங்கள் தான் முடிந்திருக்கிறது; ஏழாவது கலசம் இன்னும் நிறைவேறி முடியவில்லை.
  2. கடந்த இரண்டு நூற்றாண்டுகளாகத் தான் உலகளாவிய சுவிசேஷம் (புறஜாதியாரின் நிறைவு) நிறைவேறிக்கொண்டு வருகிறது; ஆனால் இஸ்ரவேலர் இயேசுவை இன்றுவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

வாய்க்கு மதுரம், வயிற்றுக்கு கசப்பு

யோவான் அந்த சிறு புஸ்தகத்தை தூதனின் கையிலிருந்து வாங்கி உண்டபின்பு என்ன நடந்தது?

‘‘நான் தூதனிடத்தில் போய்: அந்தச் சிறு புஸ்தகத்தை எனக்குத் தாரும் என்றேன். அதற்கு அவன்: நீ இதை வாங்கிப் புசி; இது உன் வயிற்றுக்குக் கசப்பாயிருக்கும், ஆகிலும் உன் வாய்க்கு இது தேனைப்போல மதூரமாயிருக்கும் என்றான். நான் அந்தச் சிறு புஸ்தகத்தைத் தூதனுடைய கையிலிருந்து வாங்கி, அதைப் புசித்தேன்; என் வாய்க்கு அதுதேனைப்போல மதூரமாயிருந்தது; நான் அதைப் புசித்தவுடனே என் வயிறு கசப்பாயிற்று.’’ (வெளி 10:9,10)

நம் ஊர்களில் பெரியவர்கள் இப்படி சொல்வதைக் கேட்டிருக்கிறேன்; ‘நீங்க சொல்றதைக் கேட்க நல்லாத்தான் இருக்கு, ஆனா நடைமுறையில் அது சாத்தியமாகுமா என்று தெரியலை’. இந்த வாக்கியம் நம் வேதவசனங்களுக்கு மிகப்பொருந்தும்; எல்லோருக்கும் வேதத்தின்படி நடக்க விருப்பமில்லை. அதனால் தான் இயேசு விதைகளைப் பற்றிய உவமையில் இதைத் தெளிவுபடுத்தியுள்ளார்

‘‘ஒருவன், ராஜ்யத்தின் வசனத்தைக் கேட்டும் உணராதிருக்கும்போது, பொல்லாங்கன் வந்து, அவன் இருதயத்தில் விதைக்கப்பட்டதைப் பறித்துக்கொள்ளுகிறான்; அவனே வழியருகே விதைக்கப்பட்டவன். கற்பாறை இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக்கேட்டு, உடனே அதைச் சந்தோஷத்தோடே ஏற்றுக்கொள்ளுகிறவன்; ஆகிலும் தனக்குள்ளே வேரில்லாதவனாய், கொஞ்சக்காலமாத்திரம் நிலைத்திருப்பான்; வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைவான். முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்கிறவனாயிருந்தும், உலகக்கவலையும் ஐசுவரியத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப் போடுகிறதினால், அவனும் பலனற்றுப்போவான்.’’.

‘‘நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாயிருந்து, நூறாகவும் அறுபதாகவும், முப்பதாகவும் பலன் தருவான் என்றார்.’’ (மத்தேயு 13:19-23)

எனவே தான் வசனத்தை உட்கொண்டது மட்டுமல்லாமல், அது எனக்கு இருதயத்திற்கு மகிழ்ச்சியாயிருந்தது என்று கர்த்தரை நேசித்த எரேமியா சொல்கிறார்.

‘‘உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்; உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது; ‘‘ (எரேமியா 15:16)

எசேக்கியேலைப் போல இந்த ‘மறுமலர்ச்சிக்காகப் பாடுபட்டவர்களும்’ வசனத்தை ஆசையோடு உட்கொண்டதால் தான் அவர்களால் சுவிசேஷத்தை புரிந்துகொண்டது மட்டுமல்லாமல், எதிர்ப்புகள் மத்தியிலும் உலகமெங்கும் கொண்டுசெல்ல முடிந்தது.

‘‘பின்பு அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நீ காண்கிறதைப் புசி; இந்தச் சுருளை நீ புசித்து, இஸ்ரவேல் சந்ததியாரிடத்தில் போய் அவர்களோடே பேசு என்றார். அப்படியே என் வாயைத் திறந்தேன்; அப்பொழுது அவர் அந்தச் சுருளை எனக்குப் புசிக்கக்கொடுத்து: மனுபுத்திரனே, நான் உனக்குக் கொடுக்கிற இந்தச் சுருளை உன் வயிற்றிலே உட்கொண்டு, அதினால் உன் குடல்களை நிரப்புவாயாக என்றார்; அப்பொழுது நான் அதைப் புசித்தேன்; அது என் வாய்க்குத் தேனைப்போல் தித்திப்பாயிருந்தது.’’ (எசேக்கியேல் 3:1-3)

எசேக்கியேல் தீர்க்கதரிசிக்கு தித்திப்பாக இருந்த கர்த்தரின் வார்த்தை இஸ்ரவேல் ஜனங்களுக்கு கசப்பாக இருந்தது. இப்படித்தான் ரோம ராஜ்ஜியத்தின் ஆளுகையில் உள்ளவர்களுக்கும், இயேசுவை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கும் இருக்கும் என்று இயேசு யோவானுக்கு சிம்பாலிக்காக கூறியுள்ளார்.

புதிய தீர்க்கதரிசன சாட்சிகள்

சிறு புஸ்தகமாகிய இந்த பைபிள் எல்லோர் கைகளிலும் கிடைத்த காலக்கட்டமாகிய 17 ஆம் நூற்றாண்டில் தான் ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியம் வீழ்ச்சியை சந்தித்தது என்று பார்த்தோம். அது ஆட்சிசெய்த 1260 வருடங்களில், அதற்கு விரோதமாக தீர்க்கதரிசனம் சொன்ன இரண்டு சாட்சிகளாகிய சபைகள் துன்புறுத்தப்பட்டது என்று அடுத்த அத்தியாயத்தில் பார்க்க இருக்கிறோம். இந்த 1260 வருடங்கள் பரிசுத்தவான்களின் சபைகள் சாட்சி சொல்லி முடித்துவிட்டன; இனி யார் அந்திகிறிஸ்துவிற்கு அல்லது பிசாசுக்கு எதிராக தீர்க்கதரிசனம் உரைக்கப்போகிறார்கள் என்பதற்கான பதிலையும் இயேசு சொல்லிவிட்டார்.

‘‘அப்பொழுது அவன் என்னை நோக்கி: நீ மறுபடியும் அநேக ஜனங்களையும், ஜாதிகளையும், பாஷைக்காரரையும், ராஜாக்களையுங்குறித்துத் தீர்க்கதரிசனஞ்சொல்லவேண்டும் என்றான்.’’ (வெளி 10:11)

ஆம், யோவானின் வயிற்றுக்குள் சென்ற இந்த சிறு புஸ்தகம் தான் இனி பல தேசத்து மக்களுக்கும், ராஜாக்களுக்கும் விரோதமாக சாட்சிசொல்ல வேண்டும் என்று இயேசு சொல்லிவைத்து சென்றுள்ளார். கர்த்தருடைய வசனம் கீழ்ப்படிபவர்களுக்கு தேனாகவும், எதிராக இருப்பவர்களுக்கு கசப்பாகவும் தீர்க்கதரிசனம் சொல்லும் என்பது தான் இதன் அர்த்தம். இந்த சிறு புஸ்தகமாகிய பைபிள் தான் இன்று நம் சபைகளில் நடக்கும் அக்கிரமங்களுக்கும், நம் அந்தரங்க பாவங்களுக்கும் விரோதமாக தீர்க்கதரிசனம் சொல்லிக்கொண்டிருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

‘‘ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசியாமற்போனால், அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை; நான் உலகத்தை நியாயந்தீர்க்கவராமல், உலகத்தை இரட்சிக்கவந்தேன். என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்.’’ (யோவான் 12:47,48)

‘‘இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கைக்கொள்ளுகிறவன் பாக்கியவான் என்றார்.’’ (வெளி 22:7)

தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு உபகாரம்

அந்திகிறிஸ்துவின் ராஜ்ஜியம் பூமியை 1260 வருடங்கள் (கி.பி 538-1798) ஆட்சி செய்யவேண்டும் என்பது நிர்ணயிக்கப்பட்ட ஒன்று என்று பலமுறைப் பார்த்துவிட்டோம். ஆனால் உண்மையில் சொல்லப்போனால் ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியம் புராட்டஸ்டண்ட் மறுமலர்ச்சியின் காலத்திற்குப் பின்பே (கி.பி 1500 களுக்கு பின்) பெரும்சரிவை சந்திக்க ஆரம்பித்ததாலும், சத்திய வசனம் பரவியதாலும் 16 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்தே பரிசுத்த ஜனங்கள் உபத்திரவப்படுத்தப்படுவது பெருமளவில் குறைய ஆரம்பித்தது.

  • அந்திகிறிஸ்துவின் உபத்திரவ கால ஆரம்பம் – கி.பி 538
  • உச்சக்கட்ட உபத்திரவம் – 11 முதல் 14 ஆம் நூற்றாண்டுகள்
  • உபத்திரவகாலம் முடிவுக்கு வந்தது – 16 ஆம் நூற்றாண்டு
  • அந்திகிறிஸ்துவின் ராஜ்ஜியம் முடிவுக்கு வந்தது – கி.பி 1798

ஏன் தீர்க்கதரிசனத்தின்படி பரிசுத்தவான்கள் 1260 வருடங்கள் உபத்திரவப்படுத்தப்படவில்லை? என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். இந்த இடத்தில் இயேசு சொன்ன இன்னொரு தீர்க்கதரிசனம் மற்றும் வாக்குதத்த வசனம் ஒன்றை நினைவுகூறவேண்டும்.

“ அந்நாட்கள் குறைக்கப்படாதிருந்தால் ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை ; தெரிந்துகொள்ளப்பட்ட வர்களினிமித்தமோ அந்த நாட்கள் குறைக்கப்படும்.’’ (மத்தேயு 24:22)

ஆமென் இயேசுவே, சீக்கிரம் வாரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *