ஏழத்தனையான வாதைகளின் இரகசியங்கள்

ரோம சாம்ராஜ்ஜியத்தின் மீது விதிக்கப்பட்ட மூன்று விதமான ‘ஏழத்தனையான’ அழிவுகளை இங்கு காலவரிசையின்படி அட்டவணைப்படுத்தியுள்ளேன்

அட்டவணை 26: முத்திரகள் உடைக்கப்பட்ட காலக்கட்டங்களும் சம்பவங்களும்

அட்டவணை 27: எக்காளங்கள் ஊதப்பட்ட காலக்கட்டங்களும் சம்பவங்களும்

அட்டவணை 28: கலசங்கள் ஊற்றப்பட்ட காலக்கட்டங்களும் சம்பவங்களும்

வாதைகள் புதிதல்ல

விசுவாச துரோகம் செய்து விலகிப்போன ரோம சாம்ராஜ்ஜியத்தின் மீது சாபங்களும், அழிவுகளும், வாதைகளும் நிறைவேறின என்று பார்த்தோம். இது இந்த ராஜ்ஜியத்திற்கு மட்டும் விதிக்கப்பட்ட சாபம் அல்ல. மோசேக்கு தேவனாகிய கர்த்தர் கொடுத்த கட்டளைகளை மீறி இஸ்ரவேலர் நடந்தால், அவர்களுக்கு அடுத்தடுத்து வரும் சாபங்களைப் பற்றி லேவியராகமம் 26 ஆம் அதிகாரம் தெளிவாகக் கூறுகிறது. (இதை வாசிக்கும் முன்பு ஒருமுறை லேவியராகமம் 26 ஆம் அதிகாரத்தை மேலோட்டமாவது வாசிக்கும்படி உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்). இஸ்ரவேலர் இரண்டு முக்கிய பாவங்களை செய்து கர்த்தரை கோபப்படுத்தும் போதெல்லாம், கர்த்தர் அடுத்தடுத்த ‘ஏழத்தனையான வாதைகளினால்’ வாதிப்பேன் என்று சொல்லியிருந்தார். இப்படி நான்கு ஏழத்தனையான தண்டனைகள் இந்த அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அவர் செய்யக்கூடாது என்று சொன்ன இரண்டு பாவங்களில், ஒன்று விக்கிரக ஆராதனை; இன்னொன்று ஓய்வுநாளை அசட்டை பண்ணுவது. இதில் சொல்லப்பட்டுள்ள ஓய்வுநாள் என்பது ஆராதனைக்குரிய ஓய்வுநாளை மட்டுமல்ல; தேசத்தின் நிலத்திற்குக் கொடுக்கப்படும் ஓய்வு அல்லது தேசம் தீட்டுப்படாமல் பாதுகாப்பது என்ற அர்த்தமும் வரும்.

‘‘நீங்கள் உங்களுக்கு விக்கிரகங்களையும் ரூபங்களையும் உண்டாக்காமலும், உங்களுக்குச் சிலையை நிறுத்தாமலும், சித்திரந்தீர்ந்த கல்லை நமஸ்கரிக்கும்பொருட்டு உங்கள் தேசத்தில் வைக்காமலும் இருப்பீர்களாக;  நான்  உங்கள்  தேவனாகிய  கர்த்தர்.  என்  ஓய்வுநாட்களை  ஆசரித்து,  என்  பரிசுத்த ஸ்தலத்தைக்குறித்துப் பயபக்தியாயிருப்பீர்களாக; நான் கர்த்தர். நீங்கள் எனக்குச் செவிகொடாமலும், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றின்படி செய்யாமலும், என் கட்டளைகளை வெறுத்து, உங்கள் ஆத்துமா என் நியாயங்களை அரோசித்து, என் கற்பனைகள் எல்லாவற்றின்படியும் செய்யாதபடிக்கு, என் உடன்படிக்கையை நீங்கள் மீறிப்போடுவீர்களாகில் (இந்த சாபங்கள் நேரிடும்)’’ (லேவியராகமம் 26:1,2,14,15)

சாலமோனின் விக்கிரகவணக்க பாவத்தினால் தான் இஸ்ரவேல் ராஜ்ஜியம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அதில் இஸ்ரவேல் ராஜ்ஜியத்தில் வந்த யெரோபெயாமின் பாவத்தினாலும், (தாணிலும், பெத்தேலிலும் பொன் கன்றுக்குட்டிகளை வைத்து இஸ்ரவேலரை வழிபடச்செய்த பாவம்) யூதா ராஜ்ஜியத்தில் வந்த மனாசே செய்த இதே பாவத்தினாலும், லேவியராகமம் 26 ல் சொல்லப்பட்ட அடுத்தடுத்த ஏழத்தனையான சாபங்கள் இரண்டு ராஜ்ஜியங்கள் மீதும் வந்தது. அவைகள் எசேக்கியேல் தீர்க்கதரிசி கூறியதுபோல பஞ்சம், பட்டயம், துஷ்ட மிருகங்கள் மற்றும் கொள்ளைநோய்களினால் வந்த அழிவுகளாகும். ஒவ்வொரு ஏழத்தனையான சாபத்தினால் அழிவுகளை அனுபவித்த பின்னரும் மனம்திரும்பாமல் போனதால், கடைசி மற்றும் கொடுமையான சாபமாகிய தேசத்திலிருந்து வேரோடு பிடுங்கப்பட்டு புறஜாதி ராஜ்ஜியங்களுக்கு அடிமைச் சிறையிருப்புக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டனர். இந்தக் கடைசி அழிவிற்குக் காரணம், கர்த்தர் தாமே இஸ்ரவேலருக்கு எதிராகத் திரும்பினது தான்.

‘‘இன்னும் இவைகள் எல்லாவற்றாலும் நீங்கள் எனக்குச் செவிகொடாமல், எனக்கு எதிர்த்து நடந்தால், நானும் உக்கிரத்தோடே உங்களுக்கு எதிர்த்து நடந்து, நானே உங்கள் பாவங்களினிமித்தம் உங்களை ஏழத்தனையாய்த் தண்டிப்பேன்’’ (லேவியராகமம் 26:27,28)

இந்த சாபங்களின் நிறைவேறுதலாகத் தான் இஸ்ரவேல் ராஜ்ஜியம் அசீரியருடைய கைகளிலும், யூதா ராஜ்ஜியம் பாபிலோனியர்கள் கையிலும் அடிமைகளாக ஒப்புக்கொடுக்கப்பட்டது. ஆனாலும் சிறையிருப்பின் தேசத்தில் இருக்கும்போது தங்கள் அக்கிரமங்களை ஒத்துக்கொண்டு மனம்திரும்பினால், முற்பிதாக்களுக்கு செய்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்து, மீண்டும் இரங்கி இஸ்ரவேல் தேசத்திற்கு கொண்டுவருவேன் என்று கர்த்தர் இதில் சொல்லிவைத்திருக்கிறார்.

‘‘அவர்கள் எனக்கு விரோதமாகத் துரோகம்பண்ணி நடப்பித்த தங்கள் அக்கிரமத்தையும், தங்கள் பிதாக்களின் அக்கிரமத்தையும் அறிக்கையிடுகிறதுமன்றி, அவர்கள் எனக்கு எதிர்த்து நடந்தபடியினால், நானும் அவர்களுக்கு எதிர்த்து நடந்து, அவர்களுடைய சத்துருக்களின் தேசத்திலே அவர்களைக் கொண்டுபோய்விட்டதையும் அறிக்கையிட்டு, விருத்தசேதனமில்லாத தங்கள் இருதயத்தைத் தாழ்த்தி, தங்கள் அக்கிரமத்துக்குக் கிடைத்த தண்டனையை நியாயம் என்று ஒத்துக்கொண்டால், நான் யாக்கோபோடே பண்ணின என் உடன்படிக்கையையும், ஈசாக்கோடே பண்ணின என் உடன்படிக்கையையும், ஆபிரகாமோடே பண்ணின என் உடன்படிக்கையையும் நினைப்பேன்; தேசத்தையும் நினைப்பேன்.’’ (லேவியராகமம் 26:40-42)

இதைத்தான் தானியேல் அன்று செய்தார் என்று தானியேல் 9 ஆம் அதிகாரத்தில் அவர் செய்த ஜெபம் கூறுகிறது. அந்த ஜெபத்திற்குப் பின்பு தான் இஸ்ரவேலர் பாபிலோனிலிருந்து விடுதலை பெற்றது மட்டுமல்லாமல், நித்திய உடன்படிக்கையின் மத்தியஸ்தரான இயேசுவைப் பற்றிய 70 வார தீர்க்கதரிசனமும் தானியேலுக்கு வெளிப்படுத்தப்பட்டது.

‘‘இஸ்ரவேலர் எல்லாரும் உமது நியாயப்பிரமாணத்தை மீறி, உமது சத்தத்துக்குச் செவிகொடாமல் விலகிப்போனார்கள். அவருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; ஆகையால் தேவனுடைய தாசனாகிய மோசேயின் நியாயப்பிரமாணப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சாபமும் ஆணையாக்கினையும் எங்கள்மேல் சொரியப்பட்டன. எருசலேமில் சம்பவித்ததுபோல வானத்தின்கீழ் எங்கும் சம்பவியாதிருக்கிற பெரிய தீங்கை எங்கள்மேல் வரப்பண்ணினதினால், அவர் எங்களுக்கும் எங்களை நியாயந்தீர்த்த நியாயாதிபதிகளுக்கும்  விரோதமாகச்  சொல்லியிருந்த  தம்முடைய  வார்த்தைகளை  நிறைவேற்றினார். மோசேயின் நியாயப்பிரமாணப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடியே இந்தத் தீங்கெல்லாம் எங்கள்மேல் வந்தது; ஆனாலும் நாங்கள் எங்கள் அக்கிரமங்களை விட்டுத் திரும்புகிறதற்கும், உம்முடைய சத்தியத்தைக் கவனிக்கிறதற்கும், எங்கள் தேவனாகிய கர்த்தரின் முகத்தை நோக்கிக் கெஞ்சினதில்லை.’’ (தானியேல் 9:11-13)

விசுவாசதுரோகம் செய்த ராஜ்ஜியத்தின் மீது நியாயத்தீர்ப்பு

சொந்த ஜனத்திற்கே இந்தகதி என்றால், இயேவை சிலுவையில் அறைந்த, பரிசுத்தவான்களை இரத்தம் சிந்தவைத்த, பெரும்பகுதி கிறிஸ்தவர்களை விக்கிரகங்களை வணங்கச்செய்தும், பரிசுத்த ஆலயமாகிய சரீரத்தையும், சபையையும் விசுவாச துரோகத்தில் விழத்தள்ளின ரோம ராஜ்ஜியம் மற்றும் ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியத்திற்கு நியாயத்தீர்ப்பு கொடுக்காமலிருக்க தேவன் அநீதியுள்ளவர் இல்லையே. புதிய ஏற்பாட்டு சபைக்கு எல்லா நாட்களும் பரிசுத்தமானது தான்; எல்லா இடங்களிலும் தேவனை ஆராதிக்கும் உரிமையையும் கர்த்தர் கொடுத்திருக்கிறார். ஆனால் வேதவசனத்தைப் புரட்டும் வேசிசபையைத் தண்டிக்காமல் கர்த்தர் விடமாட்டார் அல்லவா? உடன்படிக்கைக்குத் துரோகம் செய்த இஸ்ரவேலருக்கு வந்த தீங்குகளினால் மனம்திரும்பாதபோதெல்லாம் ஏழத்தனையாக வாதை வந்ததுபோலவே, விசுவாசதுரோகம் செய்த அந்திகிறிஸ்துவின் ரோம சாம்ராஜ்ஜியத்தின் மீது வாதைகள் ஏழத்தனையாக (7 முத்திரைகள், 7 எக்காளங்கள், 7 கலசங்கள் ) விதிக்கப்பட்டது.

லேவியராகமம் 26 ஆம் அதிகாரத்தில் நான்கு தடவை ஏழத்தனையான வாதைகள் கூடும் என்று கூறப்பட்டுள்ளது. அதில் மூன்று ‘ஏழத்தனையான வாதைகள்’ பிறரால் அவர்களுக்கு ஏற்பட்டது. நாலாம் ‘ஏழத்தனையான வாதை’ தேவனாகிய கர்த்தர், அவரே அவர்களுக்கு விரோதமாகத் திரும்பியதால் தேசம் அழிக்கப்பட்டு சிறையாகச் சென்றார்கள். இதைப்போலவே தான் ரோம சாம்ராஜ்ஜியமும் ஒவ்வொரு ஏழத்தனையான வாதைகளால் வாதிக்கப்பட்ட பின்பும் மனம்திரும்பாமல் மென்மேலும் தண்டிக்கப்பட்டது.

‘‘அப்படியிருந்தும் (6 எக்காளங்களுக்குப் பின்பும்), அந்த வாதைகளால் கொல்லப்படாத மற்ற மனுஷர்கள் பேய்களையும், பொன் வெள்ளி செம்பு கல்மரம் என்பவைகளால் செய்யப்பட்டவைகளாயும் காணவும் கேட்கவும் நடக்கவுமாட்டாதவைகளாயுமிருக்கிற விக்கிரகங்களையும் வணங்காதபடிக்குத் தங்கள் கைகளின் கிரியைகளை விட்டு மனந்திரும்பவுமில்லை;’’ (வெளி 9:20)

‘‘ஐந்தாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை மிருகத்தினுடைய சிங்காசனத்தின்மேல் ஊற்றினான்; அப்பொழுது அதின் ராஜ்யம் இருளடைந்தது; அவர்கள் வருத்தத்தினாலே தங்கள் நாவுகளைக் கடித்துக்கொண்டு, தங்கள் வருத்தங்களாலும், தங்கள் புண்களாலும், பரலோகத்தின் தேவனைத் தூஷித்தார்களேயல்லாமல், தங்கள் கிரியைகளை விட்டு மனந்திரும்பவில்லை.’’ (வெளி 16:10,11)

இஸ்ரவேல் ஜனங்கள் முதல் மூன்று ‘ஏழத்தனையான வாதைகளை’ அனுபவித்தும் மனம்திரும்பாமல் போனதால் தான் நாலாம் முறை கர்த்தரே அவர்களுக்கு எதிர்த்துநின்றார். அதுபோலவே, ரோம சாம்ராஜ்ஜியம் மற்றும் ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியங்கள் மேல் முதல் மூன்று ‘ஏழத்தனையான’ வாதைகளாகிய 7 முத்திரைகள், 7 எக்காளங்கள், 7 கலசங்கள் நிறைவேறிய பின்பும் அவர்கள் மனம்திரும்பமாட்டார்கள். எனவே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே தனது இரண்டாம் வருகையின் காலத்தில் அவர்களுக்கு எதிராக யுத்தம் செய்து மிருகத்தை/ ரோம சாம்ராஜ்ஜியத்தை முற்றிலும் அழித்து அக்கினிக்கு இரையாக்கிவிடுவார். அல்லேலூயா.

இரண்டாம் வாய்ப்பு உண்டா?

பாபிலோனில் சிறையிருந்த இஸ்ரவேலருக்கு மீண்டும் எருசலேமுக்குத் திரும்ப இரண்டாம் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அவர்கள் மனம்திரும்பினால் கர்த்தர் இரங்குவார் என்று லேவியராகமும் சொல்கிறது. அப்படி நிறைவேறியதால் தான் இயேசுவின் ‘முதல் வருகை’ பூமியில் நிகழ்ந்தது. ஆனால் வெளிப்படுத்தலில் சொல்லப்பட்டுள்ள அழிவுகள் எல்லாம் இஸ்ரவேலர் மீதோ, கிறிஸ்தவ விசுவாசிகள் மீதோ நிறைவேறுபவை அல்ல; அந்திகிறிஸ்துவின் ராஜ்ஜியத்தின் மீது விதிக்கப்பட்ட நியாயத்தீர்ப்பு தண்டனைகளாகும். எனவே அவர்கள் மனம்திரும்ப வாய்ப்பில்லை; ‘சாத்தான் மனம்திரும்ப வாய்ப்பு இருக்கிறதா என்ன?’ அதனால் தான் இந்த மூன்று ஏழத்தனையான வாதைகள் அந்திகிறிஸ்துவின் ராஜ்ஜியத்தின் மீது நிறைவேறினாலும் அது மனம்திரும்பப்போவதில்லை. எனவே தான் நாலாம் ஏழத்தனையான வாதையான கடைசி நிர்மூலம் ‘இயேசுவின் இரண்டாம் வருகையின்போது’ இருக்கும். அதற்குப் பின் அக்கினிதீர்ப்பு மட்டும் தான் உண்டே தவிர இரண்டாம் வாய்ப்பு கிடையாது.

‘‘பின்பு, மிருகமும் பூமியின் ராஜாக்களும் அவர்களுடைய சேனைகளும், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவரோடும் அவருடைய சேனையோடும் யுத்தம்பண்ணும்படிக்குக் கூடிவரக்கண்டேன். அப்பொழுது மிருகம் பிடிக்கப்பட்டது; மிருகத்தின் முன்பாகச் செய்த அற்புதங்களால் அதின் முத்திரையைத் தரித்தவர்களையும், அதின் சொருபத்தை வணங்கினவர்களையும் மோசம் போக்கின கள்ளத்தீர்க்கதரிசியுங்கூடப் பிடிக்கப்பட்டான்; இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடே தள்ளப்பட்டார்கள்.’’ (வெளி 19:19,20)

இயேசுவின் இரண்டாம் வருகைக்கு முன் உள்ள காலக்கட்டங்களில் இயேசுகிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு சாட்சியுள்ள வாழ்க்கை வாழ்பவர்கள் மட்டுமே இயேசுவின் இரண்டாம் வருகையில் எடுத்துக்கொள்ளப்படுவார்கள். இதைத் தான் இயேசு ஆறாம் கலசம் முடிந்தவுடன் யோவானுக்கு சொன்னார்.

‘‘இதோ, திருடனைப்போல் (7 ஆம் கலசத்தின் முடிவில்) வருகிறேன். தன் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்’’ (வெளி 16:15)

‘‘கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும். அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்; கர்த்தர் சொன்னபடி, சீயோன் பர்வதத்திலும் எருசலேமிலும் கர்த்தர் வரவழைக்கும் மீதியாயிருப்பவர்களிடத்திலும் இரட்சிப்பு உண்டாயிருக்கும்.’’ (யோவேல் 2:31,32)

இயேசுவின் இரண்டாம் வருகைக்கு முன்பே இஸ்ரவேலரில் மீதியானவர்களுக்கு இரட்சிப்பு ஏற்படும்; அந்திகிறிஸ்துவின் உபத்திரவகாலத்தின்போது அல்ல. உலகமெங்கிலும் உள்ள புறஜாதிகளுக்கு சுவிசேஷம் அறிவிக்கப்பட்டு, அவர்களின் தொகை நிறைவான பின்னரே இஸ்ரவேலர் இயேசுவை மேசியாவாக ஏற்றுக்கொள்வார்கள்; இது சீக்கிரத்தில் நிறைவேறப்போகும் காலத்திற்கு மிகசமீபத்தில் நாம் வாழ்ந்துவருகிறோம்.

‘‘மேலும், சகோதரரே, நீங்கள் உங்களையே புத்திமான்களென்று எண்ணாதபடிக்கு (சுபாவக்கிளைகளாகிய அவர்கள் மீண்டும் ஒட்டவைக்கப்படுவார்கள் என்ற ) ஒரு இரகசியத்தை நீங்கள் அறியவேண்டுமென்றிருக்கிறேன்; அதென்னவெனில், புறஜாதியாருடைய நிறைவு உண்டாகும்வரைக்கும் இஸ்ரவேலரிலொரு பங்குக்குக் கடினமான மனதுண்டாயிருக்கும். இந்தப்பிரகாரம் (வெட்டப்பட்ட சுபாவக்கிளைகள் மீண்டும் ஒட்டவைக்கப்படுவதுபோல) இஸ்ரவேலரெல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள். மீட்கிறவர்  சீயோனிலிருந்து  வந்து,  அவபக்தியை  யாக்கோபை  விட்டு  விலக்குவார்  என்றும்;  நான் அவர்களுடைய பாவங்களை நீக்கும்போது, இதுவே நான் அவர்களுடனே செய்யும் உடன்படிக்கை என்றும் எழுதியிருக்கிறது.’’ (ரோமர் 11:25)

மேலே சொன்ன காரியங்களை லேவியராகமம் 26ஐ அடிப்படையாகக்கொண்டு எளிதில் புரியும்படி ஒருசில உதாரணங்களுடன் இந்த அட்டவணையில் குறிப்பிட்டுள்ளேன்

அட்டவணை 29: ஏழத்தனையாகப் பெருகும் வாதைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *