- August 14, 2023
- admin
- 0
ஏழு கலசங்கள் (கி.பி 1789 முதல் இயேசுவின் இரண்டாம் வருகை வரை)
ஆறாம் எக்காளத்தின் காலத்தில் ஐரோப்பாவைப் புரட்டிப்போட்ட ஒட்டமான் ராஜ்ஜியம், பல நூற்றாண்டுகளுக்கு நீடித்தது. இந்தப் பின்னணியில் தான் 18 ஆம் நூற்றாண்டில் வீழ ஆரம்பித்திருந்த பாப்பஸி என்ற ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியத்தின் மீது ஏழு கலசங்கள் ஊற்றும்படி கொடுக்கப்பட்டது. இந்த ஏழு கலசங்களின் சம்பவங்களைப் பற்றி அறிந்துகொள்ளவேண்டுமென்றால், 18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப வருடங்களிலும் (கி.பி 1790-கிபி 1815) ஐரோப்பாவில் நடந்த அதிகார மாற்றங்களையும், யுத்தங்களையும் தெரிந்துகொள்வது அவசியம். அதை சுருக்கமாகப் பார்த்துவிட்டால் மற்ற விளக்கங்கள் உங்களுக்கு எளிதாக இருக்கும் என்று விசுவாசிக்கிறேன்.
பிரஞ்சுப் புரட்சி
இந்த ஒரு வார்த்தையைக் கேள்விப்படாமல் பத்தாம் வகுப்பை ஒருவரும் கடந்திருக்க முடியாது. நான் பத்தாம் வகுப்பில் இந்த வரலாறுகளைப் படிக்கும்போது மிக ரசித்துப் படிப்பேன். அதனால் தான் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சமூக அறிவியல் மற்றும் வரலாறு பாடத்தில் 98 மதிப்பெண்கள் எடுத்து மாநில ரேங்க் பட்டியலில் இடம்பெற்றேன். அப்போது கணிதம் தவிர மற்ற பாடங்களுக்கு 100 மதிப்பெண்களெல்லாம் போட மாட்டார்கள். நான் சிறுவயதிலேயே வரலாற்று சம்பவங்களைப் பற்றிய புத்தகங்களை அதிகம் படித்ததினால் தான் எனக்கு வரலாற்று அறிவு இருந்தது என்று சில வருடங்களுக்கு முன்வரை நினைத்துப் பெருமைப்பட்டது உண்டு. ஆனால் இதுபோன்ற புத்தகத்தை எழுதுவதற்கும், விளக்குவதற்கும் தான் இயேசு எனக்கு இந்த தாலந்தையும், ஆர்வத்தையும் தந்து என்னை உருவாக்கினார் என்று சில வருடங்களுக்கு முன் எனக்குப் புரிந்தபோது எனது பெருமை தரைமட்டமாகி விட்டது. கர்த்தருடைய நாமம் மாத்திரமே மகிமைப்படுவதாக.
பிரெஞ்சுப் புரட்சியின் காரணங்கள்
- அமெரிக்காவில் உள்ள பிரெஞ்சுக் காலனிகளைக் காப்பாற்றிக்கொள்ள செய்த போரினால் ஏற்பட்ட பெரும் பொருளாதார வீழ்ச்சி, உணவுப்பற்றாக்குறை
- பிரபுக்களுக்கும், கத்தோலிக்க குருக்களுக்கும் அளிக்கப்பட்டிருந்த வரிவிலக்கு, அதே நேரம் குடிமக்களின் மீது திணிக்கப்பட்ட அதிக வரிச்சுமை
- மக்களின் வாழ்வியல் முறைகள், கலாச்சாரம் எல்லாமே கத்தோலிக்க சபைகளினால் தீர்மானிக்கப்பட்டது. அதிலிருந்து விடுபடவேண்டும் என்று ஒரு சாரார் நினைத்தனர்.
- மதத்தலைவரால் இயக்கப்படும் மன்னராட்சி முறையை மாற்றும் நோக்கம்
- ஏழைகள் மற்றும் மத்தியதர வர்க்கத்தினர், நிலப்பிரபுக்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபட வேண்டும் என்று விரும்பியது
தலைகீழான பிரான்ஸ்
ரோமன் கத்தோலிக்க ஆதிக்கத்தில் இருந்த பிரான்ஸ், கி.பி 1789 ல் இருந்து 1800 க்குள், பிரஞ்சுப் புரட்சியினால் பெரும் ஆட்சி அதிகார மாற்றங்களுக்குள்ளானது. இந்த பத்து வருடங்களுக்குள் புரட்சியாளர்கள் மற்றும் இடதுசாரி அமைப்புகளால் கீழ்க்காணும் அரசியல் மாற்றங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நிகழ்ந்தன.
- கத்தோலிக்க சபையால் இயக்கப்படும் மன்னராட்சி
- அரசியலமைப்பு சட்டத்திற்குட்பட்ட குடியரசு
- புரட்சிகர சர்வாதிகார ஆட்சி
- அரசியலமைப்புக்குட்பட்ட குடியரசு (டைரக்டரி)
- கன்சலேட் முறையிலான மன்னராட்சி (நெப்பொலிய சர்வாதிகாரம்
பிரஞ்சுப் புரட்சியின் விளைவுகள்
பிரெஞ்சுப் புரட்சியின் விளைவாக ரோமன் கத்தோலிக்க சபையின் அதிகாரம் பெருமளவு குறைந்து, பிரான்ஸ் அரசின் நிலை பலப்பட்டது. பழைய ஆட்சியில் திருச்சபையே நாட்டின் மிகப்பெரும் நில உரிமையாளராக இருந்தது. நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 10% திருச்சபைக்கே சொந்தமாக இருந்தது. திருச்சபைக்கு அரசின் வரிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்த அதேவேளை, அதற்கு மக்களின் வருமானத்தில் பத்தில் ஒரு பங்கை வரியாகப் பெறும் உரிமை அளிக்கப்பட்டிருந்தது. திருச்சபையின் செல்வமும் அதிகாரமும் பல குழுக்களைக் பெருங்கோபம் கொள்ளச் செய்தன. நிதி நெருக்கடியைச் சமாளிக்க திருச்சபைச் சொத்துக்களை நவம்பர் 2, 1789 அன்று நாட்டுடைமையாக்கியது புதிய புரட்சிகர அரசு. அடுத்த சில மாதங்களில் துறவற மற்றும் சமய அமைப்புகள் அனைத்தும் புதிய சட்டங்கள்மூலம் ஒழிக்கப்பட்டன. துறவிகள் மீண்டும் இல்வாழ்க்கைக்குத் திரும்ப ஊக்குவிக்கப்பட்டனர். அவர்களில் சில விழுக்காட்டினரே அவ்வாறு செய்தனர். பெரும்பாலான பாதிரியார்கள் தேசிய மன்றத்தில் உறுதிமொழி எடுக்க மறுத்ததால் அவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டன. அவர்கள் வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்பட்டனர் அல்லது துரோகக் குற்றம் சாட்டப்பட்டு கொலை செய்யப்பட்டனர். போப் ஆறாம் பயஸ், புதிய குடிமைச் சட்ட அமைப்பை ஏற்க மறுத்துவிட்டார். இதனால் பிரான்சில் மேலும் கத்தோலிக்கத் திருச்சபை தனிமைப்படுத்தப்பட்டது. கத்தோலிக்க திருச்சட்டங்கள் புறந்தள்ளப்பட்டு, பெரும்பாலானோர் ‘கடவுள் இல்லை’ என்ற கொள்கையைப் பின்பற்ற ஆரம்பித்தனர். இதனால் பாவமும், அசுத்தங்களும், களியாட்டுக்களும் பெருகியது.
அழிவுகள்
ஜேக்கோபின்களின் “பயங்கர ஆட்சி” தொடங்கியது. ஜேக்கோபின்கள் கையில் முழு அரசு அதிகாரம் இருந்த 1793-94 காலகட்டத்தில் அவர்கள் நிகழ்த்திய கொடுங்கோல் செயல்கள் அவர்களது ஆட்சிக்கு இப்பெயரைப் பெற்றுத் தந்தது. அக்கால ஆவணங்களின் படி, பயங்கர ஆட்சி காலத்தில் குறைந்த பட்சம் 16,600 பேர் மரணதண்டனை விதிக்கப்பட்டு கொல்லப்பட்டனர். ஏறத்தாழ 40,000 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணையின்றி கொல்லப்பட்டிருக்கலாமெனப் பல வரலாற்றாளர்கள் கருதுகின்றனர். பிரான்சின் ‘வெண்டீ’ பகுதியில் 1793 ஆம் ஆண்டு புரட்சிகர அரசுக்கு எதிராகக் கலகம் மூண்டது. அப்பகுதி மக்கள் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையில் அரசு கொண்டு வந்த மாற்றங்களை விரும்பவில்லை. புரட்சிகர அரசு வெண்டி கலகத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்கியது. இரு தரப்பிலும் பல படுகொலைகளும் கொடூரங்களும் நிகழ்த்தப்பட்டன. இதில் 1,17,000 முதல் 2,50,000 பேர் வரை பலியாகினரெனக் கணக்கிடப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாது ஆங்காங்கே நடந்த மோதல்களில் நூற்றுக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டனர்.
நெப்போலியனின் எழுச்சி
புரட்சியின் முந்தைய கட்டங்களில் ஏற்பட்ட சேதங்களால் பிரான்சின் பொருளாதாரம் வெகுவாக சீர்குலைந்திருந்தது. நிதிநிலையைச் சீர்செய்து செலவுகளைச் சமாளிக்க ‘டைரக்டரி அரசு’ பிற நாடுகளிலிருந்து கிடைக்கும் கப்பத்தையும், கொள்ளையினையும் நம்பியிருந்தது. எனவே அயல்நாடுகளுடன் போர் தொடர்வதை விரும்பியது. அமைதி ஏற்பட்டு இராணுவத்தினர் நாடு திரும்பினால் அதிருப்தியடையும் போர்வீரர்களாலும், அதிகார ஆசை கொண்ட தளபதிகளாலும் டைரக்டரியின் ஆட்சிக்கு ஆபத்து நிகழ்வது உறுதியென்பதால், போர் தொடர்வதே அரசுக்கு ஏற்புடையதாக இருந்தது. இதனால் இராணுவத்தின் நிலையும், அதிக அளவில் வெற்றிகள் பெற்று புகழ்பெற்றிருந்த இராணுவத் தளபதியான ‘நெப்போலியன் பொனபார்ட்டின்’ நிலையும் வலுப்பெற்றன.
நவம்பர் 9, 1799 இல் நெப்போலியன் டைரக்டரிக்கு எதிராகப் புரட்சி செய்து ஆட்சியைக் கைப்பற்றினார். தனது முழுக்கட்டுப்பாட்டில் செயல்பட்ட “கன்சலேட்” என்ற ஆட்சிமுறையை நிறுவினார். நடைமுறையில் நெப்போலியன் பிரான்சின் சர்வாதிகாரியாகவே செயல்பட்டார். கி.பி 1804 இல் வெளிப்படையாகப் பிரான்சின் பேரரசராக முடிசூடிக்கொண்டார். நெப்போலியனின் முடி சூடலுடன் பிரெஞ்சுப் புரட்சியின் குடியரசு காலம் முடிவுக்கு வந்தது.
நெப்போலியப் போர்கள்
இவன் பிரெஞ்சுப் புரட்சியில் ஒரு தளபதி, பிரெஞ்சுக் குடியரசின் ஆட்சியாளன், பிரெஞ்சுப் பேரரசன், இத்தாலியின் மன்னன், சுவிஸ் கூட்டமைப்பின் இணைப்பாளன், ரைன் கூட்டாட்சியின் காப்பாளன் ஆகிய பதவிகளை வகித்துள்ளான். 19 ஆம்நூற்றாண்டின் முதற் பத்தாண்டுகளில் ஐரோப்பாவின் ஒவ்வொருமுக்கிய நாட்டுக்கு எதிராகவும் படை எடுத்தான். தொடர்ச்சியான பல போர் வெற்றிகளினாலும், விரிவான கூட்டணிகளினாலும் அவன் ஐரோப்பிய கண்டத்தையே தனது மேலாண்மைக்கு உட்படுத்தியிருந்தான். நெப்போலியப் போர்கள் என்பது நெப்போலியன் தலைமையிலான பிரான்சிற்கும், பிற ஐரோப்பிய கூட்டணி நாடுகளுக்கும் இடையே 1803 ஆம் ஆண்டிலிருந்து 1815 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நடந்த பல்வேறு போர்களைக் குறிக்கும். இப்போர்கள் ஐரோப்பாவில் பேரழிவை ஏற்படுத்தியிருந்தாலும், பிரெஞ்சுப் புரட்சி மனித வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாக அனைத்து தரப்பு வரலாற்றாளர்களாலும் கருதப்படுகிறது. வரலாற்றின் தொடக்க நவீன காலத்தின் (சுமார் கி.பி 1500 இல் தொடங்கியது) முடிவாகவும், நவீன காலத்தின் ஆரம்பமாகவும் கருதப்படுகிறது.
சின்னக்கொம்பை முறித்த நெப்போலியன்
கி.பி 1796 ஆம் ஆண்டு முதல், பிரஞ்சுப்படைகள் இத்தாலியை ஊடுருவ ஆரம்பித்தன. போப் ஆறாம் பயஸ் தான் இத்தாலிய படைகளின் தலைவர். இதன் தொடர்ச்சியாக நெப்போலியனின் தளபதி ‘பெர்த்தியர்’ என்பவர் கி.பி 1798ல் ரோமை நோக்கிப் படையெடுத்தார். அவரது கையில் ரோம் எளிதில் வந்து விழுந்தது. நேராக போப்பிடம் சென்ற அவர் ரோமின் அதிகாரத்தைவிட்டு விலகுமாறு வற்புறுத்தியது மட்டுமல்லாமல், அதைக் குடியரசாகவும் பிரகடனம் செய்தார். இந்நிலையில் அதிகாரத்தை விட்டுத்தர மறுத்த போப் ஆறாம் லியோவை சிறைக்கைதியாகப் பிடித்து ‘செர்டோஸா’ நகரில் சிறைவைத்தார். கி.பி 1799 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் சிறையிருப்பில் இருந்த போப் மரித்துப்போனார். இது ஐரோப்பிய வரலாற்றில் மிகப்பெரிய சம்பவமாகப் பார்க்கப்பட்டது. இந்த சின்னக்கொம்பாகிய போப்புகளின் ரோமன் கத்தோலிக்க சாம்ராஜ்ஜியம் 1260 வருட ஆட்சிக்குப் பின் (கி.பி 538 – 1798) நெப்போலியனால் வீழ்த்தப்பட்டது. இதைத்தான் யோவான் முதல் மிருகத்தைப் பற்றிய தரிசனத்தில் பின்வருமாறு கண்டார்.
‘‘சிறைப்படுத்திக்கொண்டு போகிறவன் சிறைப்பட்டுப்போவான்; பட்டயத்தினாலே கொல்லுகிறவன் பட்டயத்தினாலே கொல்லப்படவேண்டும் (ராஜ்ஜியம் முற்றுப்பெறவேண்டும்). பரிசுத்தவான்களுடைய பொறுமையும் விசுவாசமும் இதிலே விளங்கும்.’’ (வெளி 13:10)
எக்காளங்களை ஒத்திருக்கும் கலசங்கள்
ஏழாம் எக்காளம் ஊதப்பட்டதும் ‘ராஜ்ஜியங்கள் இயேசுவிற்கு சொந்தமாயின’ என்ற சத்தம் கேட்டது. எக்காளங்கள் ஊதப்பட்டபோது நிறைவேறின தீர்க்கதரிசன சம்பவங்களுக்கும், கலசங்களை ஊற்றினபோது நிறைவேறின தீர்க்கதரிசன சம்பவங்களுக்கும் ஒரே விதமான சங்கேத மொழியை யோவான் உபயோகப்படுத்தியிருப்பதைக் காணலாம்.
அட்டவணை 25: எக்காளங்கள் மற்றும் கலசங்கள்-ஒப்பீடு
முதலாம் கலசம்
எக்காளங்கள் என்பது மக்கள் மனம்திரும்பும்படி கொடுக்கப்பட்ட எச்சரிக்கையாகும். அதனால் அவைகள் பல நூற்றாண்டுக்கணக்கில் நிறைவேறின. ஆனால் வாதைகளால் நிறைந்த கலசம் என்பது, மனம்திரும்பாத மற்றும் மனம்திரும்ப வாய்ப்பில்லாத ராஜ்ஜியத்தை அழிப்பதற்காக ஊற்றப்படுவதாகும். இந்த அழிவுகள் அடுத்தடுத்து குறுகிய காலக்கட்டத்தில் நிகழ்பவை.
‘‘அப்பொழுது தேவாலயத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தம் அந்த ஏழு தூதருடனே: நீங்கள் போய் தேவனுடைய கோபகலசங்களைப் பூமியின்மேல் ஊற்றுங்கள் என்று சொல்லக்கேட்டேன். முதலாம் தூதன் போய், தன் கலசத்திலுள்ளதைப் பூமியின்மேல் ஊற்றினான்; உடனே மிருகத்தின் முத்திரையைத் தரித்தவர்களும் அதின் சொரூபத்தை வணங்குகிறவர்களுமாகிய மனுஷர்களுக்குப் பொல்லாத கொடிய புண்ணுண்டாயிற்று.’’ (வெளி 16:1,2)
இதை அப்படியே எடுத்துக்கொள்ளாமல் வசனத்தின் ஆதாரத்தோடும், வரலாற்று ஆதாரத்தோடும் ஒப்பிட்டுப்பார்ப்போம்.
கொடிய புண் என்ற பாவசுபாவம்
ஏற்கனவே ஆறாம் எக்காளத்தினால் ஏற்பட்ட வாதைகளினால் ரோம சாம்ராஜ்ஜியம் இன்னும் மனம்திரும்பவில்லை என்று பார்த்தோம். தீர்க்கதரிசிகளின் பல எச்சரிப்புக்குப் பின்னும், அறிவில்லாமலும், உணர்வில்லாமலும், அதிகமாய் விலகிப்போகும் இருதயமுள்ளவர்களாயிருந்த இஸ்ரவேலரை நோக்கி ஏசாயா, முதலாம் அதிகாரத்தின் முதல் எட்டு வசனங்களில் சொல்லியிருப்பதை வாசித்துப்பாருங்கள். இதனால் தான் அவர்கள் கொடிய புண்களால் பாதிக்கப்பட்டார்கள் என்று ஏசாயா கூறுகிறார்.
‘‘மாடு தன் எஜமானையும், கழுதை தன் ஆண்டவனின் முன்னணையையும் அறியும்; இஸ்ரவேலோ அறிவில்லாமலும், என் ஜனம் உணர்வில்லாமலும் இருக்கிறது என்கிறார்.ஐயோ, பாவமுள்ள ஜாதியும், அக்கிரமத்தால் பாரஞ்சுமந்த ஜனமும், பொல்லாதவர்களின் சந்ததியும், கேடு உண்டாக்குகிற புத்திரருமாயிருக்கிறார்கள்; கர்த்தரைவிட்டு, இஸ்ரவேலின் பரிசுத்தருக்குக் கோபமுண்டாக்கி, பின்வாங்கிப்போனார்கள். இன்னும் நீங்கள் ஏன் அடிக்கப்படவேண்டும்? அதிகமாய் விலகிப்போகிறீர்களே; தலையெல்லாம் வியாதியும், இருதயமெல்லாம் பலட்சயமுமாய் இருக்கிறது. உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைமட்டும் அதிலே சுகமில்லை; அது காயமும் வீக்கமும், நொதிக்கிற இரணமுமுள்ளது; அது சீழ் பிதுக்கப்படாமலும், கட்டப்படாமலும், எண்ணெயினால் ஆற்றப்படாமலும் இருக்கிறது.’’ (ஏசாயா 1:3-6)
‘‘கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்; உன் புண் ஆறாததாயும் உன் காயம் கொடியதாயும் இருக்கிறது.’’ (எரேமியா 30:12)
‘‘என் மதிகேட்டினிமித்தம் என் புண்கள் அழுகி நாற்றமெடுத்தது.’’ (சங்கீதம் 38:5)
மனம்திரும்பாமல் மீண்டும் பாவசுபாவத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களையே இந்த கொடியபுண் குறிக்கும்.
யாருக்குக் கொடிய புண்?
மிருகத்தின் முத்திரையைத் தங்கள் சிந்தைகளிலும் (நெற்றி), கைகளிலும் (செயல்கள்) பெற்றுக்கொண்டு, அதின் சொரூபமாகிய திருச்சபை சட்டதிட்டங்களைப் பின்பற்றி அந்திகிறிஸ்துவை ஆராதிப்பவர்கள் மேல் மட்டுமே இந்தக் கொடிய புண் உண்டாயிற்று. பிரெஞ்சுப் புரட்சி ஆரம்பித்த இந்தக் காலக்கட்டத்திற்கு முன்பே, பிரான்சில் ஏராளமான புராட்டஸ்டண்டுகள் இரத்தசாட்சியாய் மரித்திருந்தார்கள்; மீதமுள்ளோர் பலர் ஜெர்மனி உட்பட மற்ற தேசங்களுக்குத் தப்பியோடி தஞ்சம் புகுந்தனர். இப்போது பிரான்ஸில் கத்தோலிக்கர்களும், குருக்களும் மட்டுமே இருந்துவந்தனர். இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் சொல்லியிருந்தபடி, பிரெஞ்சுப் புரட்சியினால் ஏற்பட்ட தாக்கத்தினால் கத்தோலிக்கத்தை விட்டுப் பலர் விலகினர். இதனால் கத்தோலிக்க குருக்கள் பலர் கொல்லப்பட்டனர். அவர்களின் அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டது. இந்தத் தாக்கம் பிரான்ஸிலிருந்து மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவி, மிருகமாகிய அந்திகிறிஸ்துவின் கொள்கைகளைப் பின்பற்றிய கத்தோலிக்க சபையின் ஆதிக்கம் அழிய ஆரம்பித்தது. சுமார் 20,000 குருக்கள் தங்கள் பட்டத்தைத் துறந்தனர். 10,000 பேர் வரை துறவரத்தைத் துறந்து திருமணம் செய்துகொண்டனர். ஏராளமான கத்தோலிக்க தேவாலயங்கள் மூடப்பட்டு, திருச்சபை சொத்துக்கள் தேசியமயமாக்கப்பட்டன. இந்த காலக்கட்டத்தில் மக்களின் வாழ்க்கை ஒழுக்கக்கேடுகளுக்கு உள்ளானதால், இது கொடியபுண்ணான பாவத்திற்கு ஒப்பிடப்பட்டுள்ளது.
காலக்கட்டம்
இந்த முதலாம் கலசத்தினால் ஏற்பட்ட வாதையான பிரெஞ்சுப் புரட்சியினால் ரோமன் கத்தோலிக்க சாம்ராஜ்ஜியத்திற்கு ஏற்பட்ட அழிவுகள் கி.பி 1789 முதல் கி.பி 1799 வரை நீடித்தது. இந்த கலசம் அந்திகிறிஸ்துவின் ராஜ்ஜியமான பூமியின் மீது ஊற்றப்பட்டது.
இரண்டாம் கலசம்
நமது காலத்தில் கூட ஆட்சியாளர்கள் தங்கள் குறைகளை மக்களிடமிருந்து மறைப்பதற்காக அண்டைநாடுகள் மீது யுத்தம் செய்வது உண்டு. அதுபோலத்தான் பிரெஞ்சுப் புரட்சியின் காலத்தில், பிரான்ஸ் மக்களைத் திசைதிருப்ப புரட்சியாளர்கள் இராணுவத்தை யுத்தகளத்திலேயே வைத்திருந்தனர். பிரஞ்சுப் புரட்சி முடிவடையும் காலத்தில் பிரான்ஸை தன் கைவசம் கொண்டுவந்திருந்த நெப்போலியன் தன்னுடைய கூட்டாளிகளான ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து ஆகியோருடன் சேர்ந்து, பிரிட்டனின் வலிமையான கடற்படையை எதிர்த்து பல கடல் யுத்தங்களில் ஈடுபட்டார். கி.பி 1793 களிலிருந்து கி.பி 1805 வரை மட்டும் ஐரோப்பிய நாடுகளிடையே சுமார் 40 கடல் யுத்தங்கள் நடைபெற்றது. இதில் பிரான்ஸ் மற்றும் அதன் கூட்டணி நாடுகள் ஏராளமான சேதத்தை அடைந்தன. நூற்றுக்கணக்கான (600 க்கு மேல்) கப்பல்கள் சேதமடைந்தன; ஆயிரக்கணக்கான வீரர்கள் உயிரிழந்தனர். இவை ரோமன் கத்தோலிக்கத்தைக் கடுமையாக பின்பற்றின நாடுகள் அதிக சேதம் அடைந்த யுத்தங்களாகும். இந்தக் காலக்கட்டத்தில் சீர்திருத்தவாதிகளின் முயற்சியால் மறுமலர்ச்சி அடைந்த சபையைப் பின்பற்றின இங்கிலாந்து பெரும் வெற்றி பெற்றது. அதாவது மிருகத்தின் முத்திரையைப் பெறாதவர்கள் தப்புவிக்கப்பட்டனர்.
‘‘இரண்டாம் தூதன் தன் கலசத்திலுள்ளதைச் சமுத்திரத்திலே ஊற்றினான்; உடனே அது செத்தவனுடைய இரத்தம்போலாயிற்று; சமுத்திரத்திலுள்ள பிராணிகள் யாவும் மாண்டுபோயின.’’ (வெளி 16:3)
இங்கு சமுத்திரம் என்பது கடலைக் குறிப்பது அல்ல. சமுத்திரம் என்பது மீண்டும் ஜனத்திரள் மிகுந்த ஐரோப்பிய நாடுகளைக் குறிக்கும். அதுவும் குறிப்பாக மிருகமாகிய ரோமன் கத்தோலிக்கத்தின் முத்திரையைப் பெற்ற நாடுகளைக் குறிக்கும். இதற்கு சற்றுமுன்னான காலமாகிய 17 ஆம் நூற்றாண்டில் மார்டின் லூதரால் மறுமலர்சியடைந்த சபைகள் அதிகம் உள்ள ஜெர்மனி மற்றும் பிரிட்டன் பெரிய பாதிப்படையவில்லை. மேலே சொன்னதுபோல இந்தக்காலக்கட்டத்தில் பல கடல் யுத்தங்களில் சிந்திய இரத்தத்தினால் அந்திகிறிஸ்துவின் ராஜ்ஜியம் ‘செத்தவனுடைய இரத்தம்’ போல ஆயிற்று. சமுத்திரத்தில் யுத்தம் செய்த பிராணிகளாகிய பல மனிதர்கள் மாண்டார்கள். இதே காலக்கட்டத்தில் தான் ‘இரண்டு சாட்சிகள்’ தங்கள் சாட்சிகளை சொல்லிமுடித்த காலமும் வருகிறது. இந்த சாட்சிகளுக்கும் இப்படிப்பட்ட அதிகாரம் கொடுக்கப்பட்டது.
‘‘அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லிவருகிற நாட்களிலே மழைபெய்யாதபடிக்கு வானத்தை அடைக்க அவர்களுக்கு அதிகாரமுண்டு; அவர்கள் தண்ணீர்களை இரத்தமாக மாற்றவும், தங்களுக்கு வேண்டும்போதெல்லாம் பூமியைச்சகலவித வாதைகளாலும் வாதிக்கவும் அவர்களுக்கு அதிகாரமுண்டு.’’ (வெளி 11:6)
மீண்டும் ஒரு காரியத்தை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். கீழ்க்காணும் தீர்க்கதரிசன சம்பவங்கள் எல்லாம் 6 ஆம் நூற்றாண்டு முதல் 18 ஆம் நூற்றாண்டு வரையிலான 1260 வருடங்களில் சமகாலத்தில் (Contemporary events) நடந்த சம்பவங்களாகும்.
- சின்னக்கொம்பு அல்லது யோவான் கண்ட முதலாம் மிருகமாகிய ரோமன் கத்தோலிக்க ஆட்சி
- இரண்டு சாட்சிகளாகிய சபைகள் இரட்டு வஸ்திரமுடித்தி தீர்க்கதரிசனம் சொன்ன சம்பவங்கள்
- சூரியனை அணிந்த ஸ்திரீயாகிய சபையை, வலுசர்ப்பமாகிய பிசாசு அந்திகிறிஸ்துவாக இயங்கிய ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியத்தின் காலத்தில் துன்புறுத்தியதைப் பற்றிய ஆவிக்குரிய தரிசனம்
- சிறு புஸ்தகத்தால் (பைபிள்) சபைகளில் ஏற்பட்ட மறுமலர்ச்சி- இது 13 ஆம் நூற்றாண்டு முதல் 18 ஆம் நூற்றாண்டு வரை நடந்தது.
காலக்கட்டம்
இப்படி கத்தோலிக்க ஐரோப்பிய நாடுகள், மறுமலர்ச்சி அடைந்த ஐரோப்பிய நாடுகளால் கடல் வழி யுத்தங்கள் மூலம் அழிக்கப்பட்ட சம்பவங்கள் நிறைந்த இந்த இரண்டாம் கலசம் கி.பி 1793 முதல் கி.பி 1805 வரையில் நிறைவேறியது.
மூன்றாம் கலசம்
நெப்போலியனின் கடல் யுத்தங்களால் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட அழிவுகளைப் பார்த்தோம். அடுத்த வாதையானது நதிகளின் மேல் ஊற்றப்பட்டது எனப் பார்க்கிறோம். இதே போல் மூன்றாம் எக்காளம் ஊதும்போது ‘ஆட்டில்லா’ என்ற அந்நியனின் படையெடுப்பால் ரோமின் நதிக்கரைகளில் நடந்த படுகொலைகளைப் பார்த்தோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
‘‘மூன்றாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஆறுகளிலும், நீரூற்றுகளிலும் ஊற்றினான்; உடனே அவைகள் இரத்தமாயின.’’ (வெளி 16:4)
பிரெஞ்சுப் புரட்சி மற்றும் நெப்போலிய யுத்தங்களின்போது பல ஆயிரக்கணக்கான படுகொலைகள் நதிகளின் படுகைகளில் நடந்தன என்பதற்கான ஏராளமான வரலாற்று ஆதாரங்கள் இருக்கிறது. நெப்போலியன், ஜெர்மனி மீதும், ஆஸ்திரியா மீதும் யுத்தம் செய்தபோது இந்த சம்பவங்கள் ரைன் மற்றும் டனுயூப் நதிகளின் கரைகளில் நிறைவேறியது. கி.பி 1797 ல் நெப்போலியன் ஆஸ்திரியாவைத் தாக்கும்போது அவன் தெரிந்துகொண்ட பாதை, அல்பைன் நதியின் வழியாக இத்தாலியின் வெனிஸ் நகரை அடைவது தான். இந்த யுத்தங்களின் போது அல்பைன் நதிகளில் இரத்த வெள்ளம் ஓடியது. இந்த யுத்தங்களில் நெப்போலியன் சிலவற்றில் வென்றாலும், ஏராளமான பிரான்ஸ் வீரர்களை இழந்தான்.
பிரான்ஸ் மீது எதற்காக இந்தத் தீர்ப்பு?
ஏற்கனவே இயேசுகிறிஸ்து ஐந்தாம் முத்திரையை உடைக்கும்போது, பலிபீடத்தின் கீழிருந்த ஒருங்கிணைந்த ரோம சாம்ராஜ்ஜியத்தால் கொல்லப்பட்ட பரிசுத்தவான்களின் இரத்தம், எதுவரைக்கும் எங்கள் இரத்தத்திற்காகப் பழிவாங்காமல் இருப்பீர்? என்று இயேசுவிடம் கேள்வி கேட்டனர். அதற்கு அவர் இன்னும் பல பரிசுத்தவான்கள் உங்களைப்போல இரத்தம் சிந்தவேண்டியிருக்கிறது; அவர்களின் தொகை நிறைவேறிய உடனே உங்கள் கேள்விக்கு விடை கிடைக்கும் என்றார். அந்தத் தொகை, ரோமன் கத்தோலிக்க சாம்ராஜ்ஜியத்தின் காலத்தில் (1260 வருடங்கள்) நிறைவேறிய உடன் கலசங்கள் மூலமாய் பழிவாங்கும் படலமும் ஆரம்பமாயிற்று. இந்த பிரான்ஸ் தான் போப்புகளின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து 13 ஆம் நூற்றாண்டிலிருந்து 16 ஆம் நூற்றாண்டு வரை ‘வால்டென்சியன்ஸ், அல்பிஜென்சியன், மற்றும் புராட்டஸ்டண்டுகள்’ மீது போர்களைத் தொடுத்து (Crusades) கிட்டத்தட்ட பத்து இலட்சத்திற்கும் அதிகமானபேரைக் கொன்று இனப்படுகொலைகளை செய்தது என்று நாம் ஏற்கனவே பார்த்தோம். இவர்கள் அழிக்கப்பட்டதற்கான ஒரே காரணம், ‘பரிசுத்த வேதத்தின்படி வாழ்ந்தது’ மட்டுமே. இதனால் தான் பிரான்ஸ் பேரழிவை சந்தித்தது என்று தண்ணீர்கள் மேல் அதிகாரம் கொண்ட தூதன் அடுத்த வசனங்களில் கூறுகிறார்.
‘‘அப்பொழுது தண்ணீர்களின் தூதன்: இருக்கிறவரும் இருந்தவரும் பரிசுத்தருமாகிய தேவரீர் இப்படி நியாயந்தீர்க்க நீதியுள்ளவராயிருக்கிறீர்.அவர்கள் பரிசுத்தவான்களுடைய இரத்தத்தையும் தீர்க்கதரிசிகளுடைய இரத்தத்தையும் சிந்தினபடியினால், இரத்தத்தையே அவர்களுக்குக் குடிக்கக்கொடுத்தீர்; அதற்கு பாத்திரராயிருக்கிறார்கள் என்று சொல்லக்கேட்டேன். பலிபீடத்திலிருந்து வேறொருவன்: ஆம்,சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள் என்று சொல்லக்கேட்டேன்.’’ (வெளி 16:5-7)
இந்த தண்டனைத் தீர்ப்புகளை ஆமோதித்து வேறொருவன் பலிபீடத்திலிருந்து பதில் சொன்னதையும் மேற்கண்ட வசனத்தில் பார்க்கலாம். இதைத்தான் ‘தேவனுடைய கோபாக்கினையின் பாத்திரமாகிய மது’ என்று முந்தைய அத்தியாயங்களில் பார்த்தோம். அவர்கள் இந்த மதுவால் வெறிகொண்டிருக்கும்போது, பட்டயத்திற்கு இரையாவார்கள் என்று பல தீர்க்கதரிசிகள் சொல்லியிருகிறார்கள். இது தான் தேவனின் சத்தியமும், நீதியுமான நியாயத்தீர்ப்புகள்.
தீர்க்கதரிசனம் சொல்பவர்களும், நிறைவேற்றுபவர்களும்
தீர்க்கதரிசிகள், தீர்க்கதரிசன வார்த்தைகளை சொல்லுவார்கள்; அதை நிறைவேற்றுபவர்களுக்கு, தாங்கள் ஏற்கனவே சொல்லப்பட்ட ஒரு தீர்க்கதரிசனத்தை தான் நிறைவேற்றுகிறோம் என்று நிச்சயமாய் தெரியாது. எரேமியா சொன்ன தீர்க்கதரிசனத்தை தான் நிறைவேற்றுகிறோம் என்று நேபுகாத்நேச்சாருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அது நடந்து முடிந்த பின்னர் வேண்டுமானால் தானியேல் சொல்லியிருக்கலாம். அண்டியோகஸ் எபிபேனஸ் என்ற கிரேக்க செலுசிய ராஜா, எருசலேம் தேவாலயத்தைத் தீட்டுப்படுத்தும்போது, தானியேல் இதை சொல்லியிருக்கிறார் என்பதை அறிந்திருக்கமாட்டான். வெள்ளாட்டுக்கடாவாகிய அலெக்சாண்டர், உலகை வெல்லும் வழியில் எருசலேமைக் கைப்பற்றியபோது, ‘தானியேலில் சொல்லப்பட்ட வெள்ளாட்டுக்கடா நீர் தான்’ என்று யூத ரபிக்கள் சுட்டிக்காண்பித்ததைக் கண்டு வியப்புற்றவனாய், எருசலேம் தேவாலயத்திற்குத் தீங்கிழைக்காமல் காணிக்கை செலுத்தி சென்றதாக வரலாற்றுப் பதிவு சொல்கிறது.
இதைபோலவே, இந்த கலசங்களின் நிறைவேறுதலாக வந்த நெப்போலியன் கூட ஒரு முறை தற்செயலாக சொன்ன வார்த்தை தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதல் தான். அவன் இத்தாலியை நோக்கிப் படையெடுத்து செல்லும்போது ‘‘I want no more Inquisition, no more Senate, I shall be an Attila to the state of Venice’’ என்று கூறினான். அதாவது, வெனிஸ் நகருக்கு தீர்ப்பு எழுத எனக்கு விசாரணையும் தேவையில்லை; ஆலோசனை சபையும் தேவையில்லை; நான் வெனிஸ் நகருக்கு ஒரு ‘அட்டிலாவைப்போல’ இருப்பேன்’ என்று கூறியதன் மூலம் மூன்றாம் எக்காளத்தின்போது ‘அட்டிலா’ ரோமை அழித்ததை நினைவுகூர்ந்தது தற்செயல் நிகழ்வு அல்ல; தீர்க்கதரிசனங்களின் நிறைவேறுதலே.
காலக்கட்டம்
இந்த மூன்றாம் கலசத்தினால் நதிகள் இரத்தமாக மாறிய பிரெஞ்சு யுத்தங்கள் நடந்த காலம் கி.பி 1796 முதல் 1806 வரையாகும்
நான்காம் கலசம்
தகிக்கும் சூரியன்
‘‘நான்காம் தூதன் தன் கலசத்திலுள்ளதைச் சூரியன்மேல் ஊற்றினான்; தீயினால் மனுஷரைக் தகிக்கும்படி அதற்கு அதிகாரங் கொடுக்கப்பட்டது.’’ (வெளி 16:8,)
சூரியன் என்பது அரசியல் வானில் ‘ராஜாவைக்’ குறிக்கும் என்று பல இடங்களில் சொல்லியுள்ளேன். இது தீயினால் மனுஷரைத் தகிப்பது என்பது ‘ராஜாவினால் ஏற்படும் உபத்திரவத்தைக்’ குறிக்கும்.
‘‘வெயில் ஏறினபோதோ, தீய்ந்துபோய், வேரில்லாமையால் உலர்ந்து போயிற்று…ஆகிலும் தனக்குள்ளே வேரில்லாதவனாய், கொஞ்சக்காலமாத்திரம் நிலைத்திருப்பான்; வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைவான்.’’(மத்தேயு 13:6&21)
எனவே இது நெப்போலியன் என்ற சூரியனால் ஐரோப்பிய மக்கள் துன்பம் மற்றும் உபத்திரவமடைய இந்தக் கலசம் மூலம் வாதைகள் ஊற்றப்பட்டது. நெப்போலியன் பிரெஞ்சுப் புரட்சியின் இறுதியில் பிரான்ஸின் அதிகாரத்தைக் கைப்பற்றியவுடன், தனது அதிகாரத்தை உலகமெங்கும் நிறுவும் நோக்கத்துடன் ஐரோப்பா முழுவதும் படையெடுத்தான். இந்த யுத்தங்களினால் ஏராளமான உயிர்சேதங்கள், பொருள் சேதங்கள் ஏற்பட்டன. இந்தக் காலக்கட்டத்தில், போப்புகளின் அதிகாரம் முழுவதும் பறிக்கப்பட்டதாலும், மறுமலர்ச்சி சபைகளின் வளர்ச்சியாலும் ரோமன் கத்தோலிக்க சபையின் அதிகாரம் தேய்ந்துபோனது.
இன்னமும் மனம்திரும்பாத மக்கள்
‘‘அப்பொழுது மனுஷர்கள் மிகுந்த உஷ்ணத்தினாலே தகிக்கப்பட்டு, இந்த வாதைகளைச் செய்ய அதிகாரமுள்ள தேவனுடைய நாமத்தைத் தூஷித்தார்களேயல்லாமல், அவரை மகிமைப்படுத்த மனந்திரும்பவில்லை;’’ (வெளி 16:9)
வழக்கம்போல் இந்த தீர்ப்புகளினால் மனிதர்கள் மனம்திரும்பவில்லை; மாறாக தேவனை தூஷிக்கும் செயல்களிலே ஈடுபட்டார்கள். இதனால் தான் அடுத்த கொடுமையான வாதைகளையும் அவர்களும் அவர்கள் சார்ந்த ராஜ்ஜியமும் சந்திக்க நேர்ந்தது.
காலக்கட்டம்
இந்த நெப்போலிய யுத்தங்களினால் ஐரோப்பா உபத்திரவத்தை சந்திக்க ஆரம்பித்த கி.பி 1803 லிருந்து நெப்போலியன் சிறைபிடிக்கப்பட்ட கி.பி 1815 வரையாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் பதினைந்து வருடங்களில் இந்த நெப்போலிய யுத்தங்களால் ஏற்பட்ட பாதிப்புகளை வரலாறு உத்தேசமாகக் கூறுகிறது.
- இராணுவஇழப்பு : 25 முதல் 35 இலட்சம் வரை
- பொதுமக்கள் இழப்பு :5 முதல் 30 இலட்சம் வரை
- மொத்தஉத்தேச இழப்பு :32 முதல் 65 இலட்சம் வரை
ஐந்தாம் கலசம்
இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் சொன்னபடி, நெப்போலியனால் போப் ஆறாம் பயஸ் கி.பி 1798 ல் கைது செய்யப்பட்ட காலத்திலிருந்து போப்புகளின் ராஜ்ஜியமாக இருந்த ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியம் இருளடைந்தது. இங்கு அடிக்கடி ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியம் என்று சொல்வது, மன்னர்களால் ஆளப்பட்டாலும், போப்புகளால் இயற்றப்பட்ட திருச்சபை சட்டங்களுக்கு (Ecclesiastical power) உட்பட்ட பல ஐரோப்பிய தேசங்களாகும். அதே நேரத்தில் போப்புகளால் நேரடியாக நிர்வகிக்கப்பட்ட இத்தாலியின் சில பிரதேசங்களுக்கு போப்புகள் தான் ஆளும் ராஜாவாக (Temporal power) இருந்தார்கள். அவை எல்லாம் Papal states, States of the Church, St.Peter’s state என்ற பல பெயர்களில் அழைக்கப்பட்டன. நெப்போலியனால் போப்புகளின் அரசியல் அதிகாரம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டாலும் அதற்குப் பின்பும் போப்புகள் பட்டத்திற்கு வந்துகொண்டுதான் இருந்தனர். ஆனால் அவர்கள் பல் பிடுங்கப்பட்ட பாம்புகளாகத் தான் இருக்கமுடிந்தது. அதைப் பற்றிய சம்பவங்கள் தீர்ப்பாக எழுதப்பட்டது தான் ஐந்தாம் கலசத்தின் கால சம்பவங்களாகும்.
‘‘ஐந்தாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை மிருகத்தினுடைய சிங்காசனத்தின்மேல் ஊற்றினான்; அப்பொழுது அதின் ராஜ்யம் இருளடைந்தது; அவர்கள் வருத்தத்தினாலே தங்கள் நாவுகளைக் கடித்துக்கொண்டு, தங்கள் வருத்தங்களாலும், தங்கள் புண்களாலும், பரலோகத்தின் தேவனைத் தூஷித்தார்களேயல்லாமல், தங்கள் கிரியைகளை விட்டு மனந்திரும்பவில்லை.’’ (வெளி 16:10,11)
மிருகத்தின் சிங்காசனம்
யோவான் பார்த்த இரண்டு வகையான மிருகங்களும் ஒரே இனத்தை சார்ந்தது தான். முதல் மிருகத்தின் பிரதி நகல் தான் இரண்டாவது மிருகம் என்று சம்பந்தப்பட்ட அத்தியாயங்களில் பார்த்தோம். இந்த ஐந்தாம் கலசத்தின் வாதைகள் முதலாம் மிருகமாகிய 1260 வருடங்கள் பூமியை ஆட்சி செய்து பரிசுத்தவான்களைத் துன்புறுத்தி, பூமியின் குடிகளை பிசாசின் வஞ்சனைக்குள் நடத்திய ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியத்தின் மீது ஊற்றப்பட்டது. இதுவரை நடந்த எல்லா வாதைகளுமே தேசங்களிலும், ராஜாக்கள் மேலும் நிறைவேறியது. இந்த வாதை நேரடியாக மிருகத்தின் ஆளுகையான ‘சிங்காசனத்தின் மேல்’ ஊற்றப்பட்டது. இது இந்த மிருகத்தின் ஆளுகை (Temporal power) நெப்போலியனால் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதிலிருந்து ஆரம்பிக்கிறது. மிருகமாகிய இதற்கு இந்த சிங்காசனத்தைக் கொடுத்தது வலுசர்ப்பம் என்று ஏற்கனவே பார்த்துள்ளோம். அப்படியானால் இதை நேரடியாக சாத்தானின் சிங்காசனத்தின் மீது ஊற்றப்பட்ட அழிவாகவே எடுத்துக்கொள்ளலாம்.
இருளடைந்த மிருகத்தின் ராஜ்ஜியம்
மிருகத்தின் சிங்காசனமாகிய ரோம் மீதும் அதன் ஆளுகைக்குட்பட்ட பகுதிகள் மேலும் வந்த இந்த தீர்ப்பால் கி.பி 1798 லிருந்து கி.பி 1870 வரை பின்வரும் அதிகார மாற்றங்கள் நிகழ்ந்தன.
- கத்தோலிக்க சபைகள் தசமபாகம் மற்றும் வரி வசூல் செய்வது தடைசெய்யப்பட்டது.
- சபையின்ஏராளமான நிலங்கள், சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு அரசாங்கமயமாக்கப்பட்டது.
- ஏராளமான துறவற மடாலயங்கள் மூடப்பட்டது.
- எட்டாம்நூற்றாண்டிலிருந்தே போப்புகளின் ஆதிக்கத்திலிருந்த பல இத்தாலியின் மாநிலங்கள், பிரெஞ்சுப் பகுதியாக அறிவிக்கப்பட்டது
- ரோம்நகரானது பிரெஞ்சு ராஜ்ஜியத்தின் இரண்டாம் தர நகரமாக்கப்பட்டதால் மிருகத்தின் ராஜ்ஜியம் இருளடைந்தது.
- நெப்போலியன் எல்லோருக்கும் மதசுதந்திரம் கொடுத்து மதநல்லிணக்கக் கொள்கையோடு இருந்ததால் மற்ற புராட்டஸ்டண்ட், இஸ்லாம், யூத மதங்களைப் போல கத்தோலிக்கமும் ஒரு மதப்பிரிவாக மட்டுமே கருதப்பட்டது.
- கி.பி1849 ல் ரோமக்குடியரசு தோற்றுவிக்கப்பட்டதால் அப்போது போப்பாக இருந்த ஒன்பதாம் பயஸ் ரோமை விட்டு தப்பியோடினார்.
- கி.பி1861 ல் மிச்சமிருந்த போப்புகளின் மாநிலங்களும் (Lazio and Rome) இத்தாலி அரசாங்கத்தோடு இணைக்கப்பட்டது.
முடிவுபரியந்தம் சங்கரிக்கப்படும் மிருகம்
தானியேல் கண்ட சின்னக்கொம்பு 1260 வருடங்கள் முடியும்போது அவனை முடிவுபரியந்தம் அழிக்கும்படி நியாயசங்கம் உட்காரும் என்று பார்த்தோம்.
‘‘ஆனாலும் நியாயசங்கம் உட்காரும்; அப்பொழுது முடிவுபரியந்தம் அவனைச் சங்கரிக்கும்படியாகவும் அழிக்கும்படியாகவும் அவனுடைய ஆளுகையை நீக்கிப்போடுவார்கள்’’ (தானியேல் 7:26)
இதில் நாம் தெளிவாகக் கவனிக்கவேண்டிய இரண்டு காரியங்கள் இருக்கிறது.
- இந்த ராஜ்ஜியமானது (சின்னக்கொம்பு / மிருகம்) தேவனால் ஒருசில வருடங்களில் மட்டும் அழிக்கப்படுவதாக சொல்லப்படவில்லை. ‘முடிவுபரியந்தம்’ அவனை சங்கரிக்கவும், அழிக்கவும் நியாய சங்கத்திற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. ஏற்கனவே நாம் முந்தைய அத்தியாயங்களில், கடைசிகாலம் என்பது இயேசு பூமிக்கு வந்ததிலிருந்து சின்னக்கொம்பு 1260 வருடம் ஆண்டு முடித்த 18 ஆம் நூற்றாண்டின் இறுதிவரை என்றும், முடிவுகாலம் என்பது 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து இயேசுவின் இரண்டாம் வருகையின் காலம் வரைக்கும் என்று கற்றுக்கொண்டோம். இதன்படி இந்த மிருகமானது ‘முடிவுகாலமான இயேசுவின் இரண்டாம் வருகைக்கு சற்று முன்பு வரைக்கும்’ சங்கரிக்கப்படும். அதாவது வாதைகள் நிறைந்த கலசங்களான தேவனின் கோபாக்கினை தொடர்ந்து ஊற்றப்படும்.
- இப்படி சங்கரிக்கும்படியாகவும், அழிக்கப்படும்படியாகவுமே இந்த மிருகத்தின் ‘ஆளுகை நீக்கப்படும்’ என்று தானியேல் காண்கிறார். இந்த ஆளுகை நீக்கப்பட்ட அல்லது மிருகத்தின் ராஜ்ஜியம் இருளடைந்த தீர்ப்புதான் ஐந்தாம் கலசமாக ஊற்றப்பட்டது.
சுருக்கமாகச் சொன்னால், ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியம் இருளடைய ஆரம்பித்த 18 ஆம் நூற்றாண்டின் கடைசி வருடங்களிலிருந்து ஆரம்பித்த கலசங்களாலான தீர்ப்புகள், இயேசுவின் இரண்டாம் வருகை மட்டும் தொடரும். அதாவது ஏழாவது கலசத்தின் தீர்ப்பு இயேசுவின் வருகையினால் மட்டுமே முற்றுப்பெறும் என்பது தான் இந்த சத்தியம். எனவே இயேசுவின் இரண்டாம் வருகை என்பது ஒரே வருகையாக மட்டுமே இருக்கமுடியும்; இரகசிய வருகை என்பது அந்திகிறிஸ்துவாகிய சாத்தானின் கட்டுக்கதை என்பது தான் மீண்டும் சொல்லவரும் சத்தியம்.
மீண்டும் தேவதூஷணம்
இந்த சின்னக்கொம்பு / யோவான் கண்ட மிருகத்தின் முக்கிய அடையாளமே தேவதூஷணம் என்று பல இடங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறதை முந்தைய அத்தியாயங்களில் வாசித்திருப்பீர்கள். தேவன் தண்டனை கொடுக்கும்போதெல்லாம் பிசாசின் வழக்கமான பதிலடியும் அதுதான். இந்த ஐந்தாம் கலசத்தின் இறுதியிலும் பிசாசின் கிரியைகளை விட்டு கத்தோலிக்க சபை மனம்திரும்பாமல், அடுத்தகட்ட தேவதூஷணங்களின் மூலமாக சபைமக்களை சத்தியத்தை அறியவிடாமல் வஞ்சிக்க ஆரம்பித்தது. அவை தனி புத்தகமாக எழுதும் அளவிற்கு விவரிக்கப்பட வேண்டியவை. நாம் இதில் சுருக்கமாகப் பார்ப்போம்.
அமல உற்பவி மரியாள் (கி.பி 1854)
‘மாசுமறுவற்ற கன்னிமரியாளின் திருஇருதயம்’ (Immaculate conception or sacred heart of virgin Mary) என்ற வாக்கியம் இன்றுவரை கத்தோலிக்க சபைகளில் பிரபலமான ஒன்று. மரியாள், பிதாவாகிய தேவனுக்குக் கீழ்ப்படிந்த அன்பு, ‘தன்னுடைய மகனாகிய’ இயேசுவின் மேல் கொண்ட தாய்மை அன்பு, மற்றும் உலகமக்களின் மேல் இரக்கம் கூர்ந்த கருணை அன்பு ஆகியவற்றை உள்ளடக்கிய திருஇருதயமாக மரியாளைப் போற்றவேண்டும் என இந்தக்கோட்பாடு கூறுகிறது. இப்படிப்பட்ட நற்பண்புகளைக் கொண்ட கன்னி மரியாளின் திருஇருதயத்திற்கு மதிப்புகொடுத்து, அவரைப்போற்றிப் புகழ்வது என்பது, இயேசுவின் திருஇருதயத்தை நாம் தொழுதுகொண்டு ஆராதனை செய்வதற்கு சமம் என்றும் போதிக்கப்படுகிறது.
இதற்கு எந்த வேத ஆதாரங்களும் கிடையாது; அப்போஸ்தலர்களும் இதை சொல்லவில்லை. 17 ஆம் நூற்றாண்டில் ஜான் யூடஸ் (John Eudes) என்பவரால் தோற்றுவிக்கப்பட்டு, 19 ஆம் நூற்றாண்டில் கத்தோலிக்க திருச்சபையின் சட்டமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த வஞ்சிக்கும் ஆராதனை, பவுல் சொல்லிய ‘தேவன் என்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும்’ என்ற வரியை நமக்கு ஞாபகப்படுத்துகிறது அல்லவா? இன்றுகூட அநேக கத்தோலிக்கர்கள் அமலி, அமலோற்பவம் என்று பெயரிடக் காரணமும் இதுதான். அவர்கள் இந்தப் பின்னணியை அறியாமல் தான் செய்கிறார்கள். இயேசு குழந்தையாக தேவாலயத்திற்குக் கொண்டுவரப்பட்டபோது சிமியோன் உரைத்த தீர்க்கதரிசனத்தில் ‘மரியாளின் இருதயத்தை ஒரு பட்டயம் ஊடுருவும்’ என்று சொன்னார். இது இயேசுகிறிஸ்து சிலுவையில் பாடுபட்டு மரித்ததைக் குறிப்பதாகும். இந்த சம்பவங்கள் நிறைவேறியதால் மரியாளின் இருதயத்தில் பட்டயம் ஊடுறுவி, மொத்தத்தில் ஏழு இடங்களில் காயப்பட்டு, அதிலிருந்து இரத்தம் வடிவதாக காட்சியளிக்கும் படத்தின் பின்னணி இதுதான்.
படம் 66: அமல உற்பவி மரியாள்
இதனை ‘Our lady of Seven sorrows’ என்றழைக்கிறார்கள். இதுபோன்ற சத்தியத்திற்குப் புறம்பான, சாத்தானின் போதனைகளால் சபையை வஞ்சித்து, இன்றுவரை உலகின் பெரிய கிறிஸ்தவப் பிரிவாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
போப்பாண்டவரின் தவறாவரம் (Papal Infallibility-1870-1870)
‘போப்பாண்டவர் தான் திருச்சபையின் தவறைத் தட்டிக்கேட்கும் உச்சவரம்பைப் பெற்றவர். ஆனால் போப்பாண்டவர் தனது கோட்பாடுகளில் எந்த தவறுக்கும் உட்பட்டவர் அல்ல’ என்று இது கூறுகிறது. அதாவது போப்புகளின் செயல் எந்த பாவத்தின் வரையறைக்கும் உட்பட்டது அல்ல என்பது கத்தோலிக்க திருச்சபையின் சட்டம். இது முற்றிலும் வேதவசனத்திற்கு எதிரானது. ஏனென்றால் இயேசுவைத் தவிர ‘எல்லாரும் பாவம் செய்து தேவமகிமையற்றவர்களானோம்’ என்று பவுல் குறிப்பிட்டுள்ளார். இதுவரை வந்துசென்ற 265 போப்புகளில் பலர் பாலியல், ஓரினச்சேர்க்கை, கொலை, ஊழல், இனப்படுகொலை போன்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளதை வரலாறு ஒருபோதும் மறக்கவோ, மறைக்கவோ முடியாது. அந்த பட்டியலை இந்தப் புத்தகத்தில் சேர்க்கவேண்டிய அவசியம் இல்லை என்றே கருதுகிறேன். அப்படியிருந்தும் அவர்கள் தவறாவரம் பெற்றவர்கள் என்று அவர்களே சொல்வது, போப்புகள் இயேசுவின் இடத்தில் அல்லது அதற்கு மேலாக தங்களை உயர்த்தும் அந்திகிறிஸ்துவின் பிரதிநிதிகள் என்பது தெளிவாகிறது.
இப்படிப்பட்ட புதிய கோட்பாடுகளினால் சபை மேலும் தேவனை தூஷித்ததே தவிர மனம்திரும்பவில்லை. இந்த ஐந்தாம் கலசத்தின் காலம் கி.பி 1798 லிருந்து கி.பி 1870 வரை நீடித்தது.
ஆறாம் கலசம்
ஆறாம் எக்காளத்தின்போது, ஐப்பிராத்து நதியண்டையில் கட்டப்பட்டிருந்த நான்கு தூதர்கள் அவிழ்த்துவிடப்பட்டார்கள். இது ஐரோப்பா மீது, ஒட்டமான் ராஜ்ஜியம் கட்டவிழ்த்து விடப்பட்டதைக் குறிக்கும் என்று எக்காளங்களைப் பற்றிய அத்தியாயத்தில் பார்த்தோம். ஆனால் ஆறாம் கலசத்தின்போது, இதே ஐப்பிராத்து நதியின் மீது கலசம் ஊற்றப்பட்டதால், அந்த நதி வற்றிப்போனது என்று யோவான் சொல்கிறார்.
‘‘ஆறாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஐப்பிராத்து என்னும் பெரிய நதியின்மேல் ஊற்றினான்: அப்பொழுது சூரியன் உதிக்குந் திசையிலிருந்தும் ராஜாக்களுக்கு வழி ஆயத்தமாகும்படி அந்த நதியின் தண்ணீர் வற்றிப்போயிற்று.’’ (வெளி 16:12)
வற்றிய ஐப்பிராத்து நதி
ஐப்பிராத்து நதி என்பது ஒட்டமான் பேரரசைக் குறிக்கும். அது வற்றிப்போனது என்பது ஒட்டமான் பேரரசின் வீழ்ச்சியைக் குறிக்கும். 13 ஆம் நூற்றாண்டிலிருந்து உலகை ஆட்டிப்படைத்த ஒட்டமான் கலிபாக்கள் மற்றும் சுல்தான்களின் ஆதிக்கம், பிரெஞ்சுப் புரட்சியினால் ஐரோப்பிய நாடுகள் விழிப்படைந்த காலமாகிய 18 ஆம் நூற்றாண்டின் இறுதிவரை நீடித்தது. ஆனால் 19 ஆம் நூற்றாண்டின் பாதிக்குமேல் இந்த ராஜ்ஜியம் வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. கிரீஸ் (கிரேக்கம்) தேசத்திடம் முதல் அடியை வாங்கிய ஒட்டமான் ராஜ்ஜியம், பின்பு வரிசையாக ரஷ்யா, எகிப்து நாடுகளிடம் அடிவாங்கியது. இந்தக் காலக்கட்டத்தில் சுவிசேஷம் உலகமெங்கும் பரவுவதற்காக கர்த்தரால் எழுப்பப்பட்ட பிரிட்டன், ஒட்டமான் ராஜ்ஜியத்தின் பல ஐரோப்பிய, ஆப்பிரிக்க பகுதிகளைக் கைப்பற்றி அதை மேலும் பலவீனப்படுத்தியது. 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பகாலங்களில், துருக்கியை அரசியலமைப்பு சட்டம் கொண்ட நாடாக மாற்றவேண்டும் என்ற மக்களின் தாகத்தால் பல புரட்சிகள் ஏற்பட்டன (Young Turk revolution-1908). இப்படி படிப்படியாக சரிவை சந்தித்த மன்னராட்சி முறை கி.பி 1922 ல் முடிவுக்கு வந்தது.
முதலாம் உலக யுத்தத்தின் தாக்கம்
இந்நிலையில், முதலாம் உலக யுத்தத்தில் (கி.பி 1914-1918) ஒட்டமான் அரசு ஜெர்மனியுடன் இணைந்துகொண்டதால், நேசநாடுகளின் தாக்குதலுக்கு உள்ளானது. போரில் நேசநாடுகள் வென்றதால் ஒட்டமான் ராஜ்ஜியத்தின் மீதி பகுதிகள் நேசநாடுகளால் பங்கிடப்பட்டது. இதன் இறுதியில் ஒப்படைக்கப்பட்ட நிலப்பரப்புகளைக் கொண்டு தான் இன்றைய நவீன துருக்கி அமைந்துள்ளது. சுமார் 400 வருடங்களாக எருசலேமைத் தன்வசம் வைத்திருந்த ஒட்டமான் பேரரசு வீழ்ந்ததால், பாலஸ்தீனமாக இருந்த இஸ்ரவேல் நிலப்பகுதிகள் பிரிட்டன் வசம் சென்றது. யூதர்களின் சீயோன் போராளிக்குழு (Zion Movement) முதலாம் உலக யுத்தத்தில் பிரிட்டனுக்கு உதவிசெய்தால், பாலஸ்தீனத்தின் ஒருபகுதி யூதர்களுக்குக் கொடுக்கப்படும் என்ற உறுதிமொழியை ‘பால்பர் ஒப்பந்தம்’ (Balfour Decleration) மூலம் கி.பி 1917 ல் பிரிட்டன் உறுதிசெய்தது. ஆனால் இது நிறைவேற சுமார் 30 வருடங்கள் சென்றது. ஐக்கியநாடுகளின் தலையீட்டால் தான் ஏற்கனவே இஸ்ரவேலாக இருந்து கி.பி 70 க்குப் பின் பல அழிவுகளை சந்தித்து, பின்பு பாலஸ்தீனமாகப் பெயரிடப்பட்ட நிலப்பகுதிகளில் சில பகுதிகள் யூதர்களுக்கு என்று பிரித்துக்கொடுக்கப்பட்டு, மீண்டும் கி.பி 1948 ல் இஸ்ரவேல் தேசம் உருவானது. ஆனால் இன்றைக்கு வரலாறு தெரியாத கிறிஸ்தவர்கள் கூட, ஏன் இஸ்ரவேல் இப்படி பாலஸ்தீனத்தை ஆக்கிரமிக்கிறது? என்று கேள்வி கேட்கின்றனர்.
கிழக்கிலிருந்து வரும் ராஜாக்கள் யார்?
ஐப்பிராத்து நதியாகிய ஒட்டமான் துருக்கி ராஜ்ஜியம் வற்றிப்போவதன் நோக்கமே, ஐப்பிராத்துக்கு கிழக்கிலிருக்கும் ராஜ்ஜியங்கள் ஐப்பிராத்தைத் தாண்டி அதன் மேற்குப் பகுதிக்கு வருவதற்காகத் தான் என்று யோவான் காண்கிறார். இது எப்படி நிறைவேறியது என்று பார்ப்போம்.
படம் 67: நவீனகால மேற்கு மற்றும் கிழக்கு நாடுகள்
இதுவரை வெளிப்படுத்தலில் சொல்லப்பட்டுள்ள எல்லா யுத்தங்களும், அழிவுகளும் ஐரோப்பிய மற்றும் ஆசியா மைனர் பகுதிகளை மையமாக்க கொண்டே நடந்தது. ஒட்டமான் ராஜ்ஜியம் ஐரோப்பாவிற்கும், ஆசியாவிற்கும் நடுவில் பெரும் வர்த்தகப்பாதையாகவும், படையெடுப்புகளைத் தடுக்கும் தடுப்பாகவும் இருந்ததால், இந்தியா உட்பட எந்த ஆசிய ராஜ்ஜியங்களும் அதைத்தாண்டி மேற்கே செல்லமுடியவில்லை. ஆனால் இந்த ஒட்டமான் ராஜ்ஜியம் வீழ்ச்சியடைந்த காலத்திற்குப் பின்பு, ஐப்பிராத்து நதிக்குக் கிழக்கில் இருக்கும் ஆசிய நாடுகளான இந்தியா, ஜப்பான், ரஷ்யா, போன்ற நாடுகள் எல்லாம் அடுத்து வரும் யுத்தங்களில் கலந்துகொள்வதற்கு வழியை ஏற்படுத்தியது. எனவே தான் ஐப்பிராத்து நதி வற்றிப்போனதால், சூரியன் உதிக்கும் திசையான கிழக்கில் இருக்கும் ராஜ்ஜியங்கள் முதன்முறையாக வெளிப்படுத்தலின் காட்சிக்குள் நுழைகின்றன.
இந்த தீர்க்கதரிசனம் உலகப்போர்களின் வாயிலாக நிறைவேறியது. முதலாம் மற்றும் இரண்டாம் உலகப்போர்களின் மையமாக ஐரோப்பா இருந்தாலும், ரஷ்யா, பிரிட்டிஷ் இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகள் இதில் பங்குபெற்றன. மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டால் சீனா அதில் நிச்சயம் பெரிய பங்குவகிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. ‘மேற்கில் உள்ள’ அமெரிக்காவும் ஈடுபட்டதே என்று உங்களுக்கு சந்தேகம் வரலாம். அமெரிக்காவில் சென்று குடியேறியவர்கள் ஐரோப்பியர்களும், ரோம காலனியாதிக்கத்தில் இருந்த ஆப்பிரிக்க கறுப்பினத்தவர்கள் மட்டுமே என்பதை நினைவில்கொள்ள வேண்டும். இந்த ஒட்டமான் ராஜ்ஜியம் வீழ்ந்த ஆறாம் கலசத்தின் காலத்தில் தான் உலக யுத்தங்கள் ஆரம்பித்தன. அதையும் நம் இயேசு சொல்லாமல் இல்லை. வாருங்கள் பார்ப்போம்.
மூன்று அசுத்த ஆவிகள்
‘‘ஆறாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஐப்பிராத்து என்னும் பெரிய நதியின்மேல் ஊற்றினான்: அப்பொழுது சூரியன் உதிக்குந் திசையிலிருந்தும் ராஜாக்களுக்கு வழி ஆயத்தமாகும்படி அந்த நதியின் தண்ணீர் வற்றிப்போயிற்று. அப்பொழுது, வலுசர்ப்பத்தின் வாயிலும் மிருகத்தின் வாயிலும் கள்ளத்தீர்க்கதரிசியின் வாயிலுமிருந்து தவளைகளுக்கு ஒப்பான மூன்று அசுத்த ஆவிகள் புறப்பட்டுவரக்கண்டேன்.’’ (வெளி 16:12,13)
ஐப்பிராத்து நதியின் மேல் கலசம் ஊற்றப்பட்டபோது இரண்டு முக்கிய சம்பவங்கள் நடந்தன.
- நாம் இப்போது பார்த்தபடி, ஒட்டமான் பேரரசின் அழிவால் கிழக்கு தேசத்து ராஜாக்கள் மேற்கே வருவதற்கான வழி ஏற்பட்ட சம்பவம்
- இன்னொன்று வலுசர்ப்பமாகிய பிசாசு, மிருகமாகிய ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு, கள்ளத்தீர்க்கதரிசியான போப் ஆகிய மூவரின் வாயிலிருந்து வந்த தவளைக்கு ஒப்பான மூன்று அசுத்த ஆவிகள்.
அசுத்த ஆவிகளின் வேலை
‘‘அவைகள் (மூன்று அசுத்த ஆவிகள்) அற்புதங்களைச் செய்கிற பிசாசுகளின் ஆவிகள்; அவைகள் பூலோகமெங்குமுள்ள ராஜாக்களைச் சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தத்திற்குக் கூட்டிச்சேர்க்கும்படிக்குப் புறப்பட்டுப்போகிறது.’’ (வெளி 16:14)
இந்த மூன்று அசுத்த ஆவிகள், போலியான அற்புதங்களை செய்கிற பிசாசின் ஆவிகள் என்று சொல்லப்பட்டுள்ளது. இவைகளின் வேலை என்ன தெரியுமா? ஏற்கனவே தனது கையில் இருக்கும் வாடிகனை மையமாகக் கொண்ட ஐரோப்பா மற்றும் ஐப்பிராத்து நதி (ஒட்டமான்) வற்றியதால் வழி ஏற்படுத்தப்பட்ட கிழக்கு தேசத்து ராஜாக்கள், என்ற பூலோகம் எங்குமுள்ள ராஜாக்களை சர்வவல்ல தேவனின் ‘மகாநாளின் யுத்தத்திற்குக் கூட்டிசேர்க்கும்படி’ புறப்பட்டதாம். இந்த மகாநாளின் யுத்தம் என்றால் என்ன என்று அத்தியாயம் 28 ல் குறிப்பிட்டுள்ளேன். இது ராஜ்ஜியங்களில் பேரழிவை ஏற்படுத்தும் யுத்தத்தைக் குறிக்கும். அப்படியானால் ஒட்டமான் பேரரசு வீழ்ச்சியடைந்த பின்பு நடந்த பெரிய யுத்தங்களான, உலகமகா யுத்தங்களாகும் (World wars)
தவளைக்கு ஒப்பான மூன்று ஆவிகள்
நதியின் தண்ணீர் வற்றியவுடன் தவளைகள் என்ன செய்யும்? நிச்சயம் அடுத்து வாழ்வாதாரம் தரும் இடத்தைத் தேடி செல்லும். ஒட்டமான் ராஜ்ஜியம் வற்றியவுடன் சாத்தான் தனது ராஜ்ஜியத்தை நிலைப்படுத்திக்கொள்ள பயன்படுத்திய யுக்தியே உலகமகா யுத்தங்களாகும். இந்த உலக யுத்தங்களில் ரோம சாம்ராஜ்ஜியத்தின் அடுத்த வடிவமான ‘வாடிகனின்’ பங்கு என்ன என்பது உலகில் பெரும்பாலானோருக்குத் தெரியாது. அதைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டுமானால் கடைசியில் குறிப்பிடப்பட்டிருக்கும் புத்தகங்களை வாசித்துப்பாருங்கள். அத்தனையும் சொல்ல இங்கு இடமில்லை. இரண்டாம் உலகப்போர் நடந்த காலங்களில் போப்பாக இருந்த ‘பன்னிரெண்டாம் பயஸ்’ ஹிட்லருடன் உடன்படிக்கை செய்து பல இலட்சம் யூதர்கள் இனப்படுகொலை செய்யப்படுவதற்குக் உடந்தையாக இருந்தார். வாடிகன் தனிநாடாக அங்கீகரிக்கப்பட்ட கி.பி 1929 ல் முசோலினியுடன் செய்த உடன்படிக்கை தான் அவரது நண்பரான ஹிட்லருடன் மீண்டும் உடன்படிக்கை செய்யவைத்தது. போரில் ஹிட்லர் தோற்றபோது அவரது நாஜிப்படையின் தலைவர்கள் ‘லத்தீன் அமெரிக்க நாடுகளான’ தெற்கு அமெரிக்க நாடுகளுக்குத் தப்பிச்செல்ல உதவிய பெருங்குற்றச்சாட்டும் இவர் மீது உள்ளது. இதற்கு இவர்கள் பயன்படுத்திய யுக்திகள் தான் ‘The Rat Line’ என்று பிரபலமாக அறியப்படுகிறது. அதனால் தான் போப் பன்னிரெண்டாம் பயஸ் ‘Hitler’s Pope’ என்று வரலாற்றாசிரியர்களால் அழைக்கப்படுகிறார். இந்த ஆவிகள் வலுசர்ப்பம், மிருகம் (ஐரோப்பா) மற்றும் கள்ளதீர்க்கதரிசிகளின் (போப்) வாயிலிருந்து வெளிவந்ததாக யோவான் கண்டார்.
இந்த ஆறாம் கலசத்தின் விளைவாக ஏற்பட்டது தான் உலகமகா யுத்தங்கள். பூமியின் ராஜாக்களை யுத்தம் செய்யக் கூட்டிசேர்த்த ஆவிகள் மூன்று என்று என்று கூறப்பட்டுள்ளதால், இவை மூன்று உலகப்போர்களைக் குறிக்கும் என்று நான் விசுவாசிக்கிறேன். அதில் இரண்டு உலக யுத்தங்கள் முடிவடைந்து விட்டன. மூன்றாம் உலகப்போருக்கு உலகம் தயாராகிக்கொண்டிருக்கிறது என்பதை நான் சொல்லி உங்களுக்குத் தெரியவேண்டியதில்லை. இந்த கடைசி யுத்தமாகிய அர்மகெதோன் யுத்தத்தைப் பற்றி அத்தியாயம் 28 ல் வாசித்துப்பாருங்கள். இந்த மூன்றாம் யுத்தம், கடைசி கலசமாகிய ஏழாம் கலசத்தின் காலத்தில் நடக்கலாம் என்று விசுவாசிக்கிறேன். அதன் இறுதியில் இயேசுகிறிஸ்து ராஜாவாக மீண்டும் வருவார். எனவே தான் ஆறாம் கலசத்தின் முடிவில் இயேசு இந்த எச்சரிக்கையை மீண்டும் கொடுத்துள்ளார்.
‘‘இதோ, திருடனைப்போல் வருகிறேன். தன் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்.’’ (வெளி 16:15)
எனவே ஆறாம் கலசம், ஒட்டமான் ராஜ்ஜியம் கிரேக்கத்திடம் முதல் வீழ்ச்சியை சந்தித்த கி.பி 1820 முதல், கடைசி அழிவை சந்தித்த முதலாம் உலகப்போரின் முடிவான கி.பி 1918 வரை நீடித்தது.
ஏழாம் கலசம்
ஆறாம் கலசம் ஒட்டமான் ராஜ்ஜியத்தின் அழிவைக் குறித்தாலும், அப்போது வெளிவந்த மூன்று அசுத்த ஆவிகள் பூமியின் ராஜாக்களை உலகமகா யுத்தத்திற்கு கூட்டிசேர்த்தன என்று பார்த்தோம். அதன் விளைவால் நிகழ்ந்த இரண்டு உலகப்போர்களில் பேரழிவை சந்தித்தது ஐரோப்பா தான். மூன்றில் ஒரு பங்கு ஜனங்கள் அழிந்துபோகும் அளவிற்கு அவை பேரழிவை ஏற்படுத்தின. இந்த இரண்டு உலகப்போர்களின் நடுவிலே அந்திகிறிஸ்துவின் ஆவி சும்மா இருக்கவில்லை. ரோம சாம்ராஜ்ஜியத்தின் அடுத்த வடிவமான ‘வாடிகனை’ சத்தமில்லாமல் ஸ்தாபித்தான். இதைத்தான் யோவானும் ‘ஆட்டுக்குட்டிக்கு ஒப்பான’ இரண்டு கொம்புகளையுடைய, சமாதான தூதனைப் போன்ற ஒரு மிருகம் என்று குறிப்பிடுகிறார். ரோம சாம்ராஜ்ஜியத்தின் மற்ற வடிவங்கள் எல்லாம் வெளிப்படையாகவே அராஜகத்தோற்றம் கொண்டிருந்தது. அதனால் தான் கெடியும், பயங்கரமுமான மிருகம் என்று தானியேல் கண்டார். ஆனால் இந்த வாடிகன் என்ற ஏழாவது ராஜ்ஜியம் தன்னை இன்றுவரை உலகின் சமாதான தூதுவனாகவே காண்பித்து வருவது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அதுபேசியது என்னவோ வலுசர்ப்பமான பிசாசின் போதனைகளைத் தான்; செய்த செயல்கள் எல்லாம் முந்தின மிருகமாகிய ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியத்தின் செயல்கள் தான்.
‘‘பின்பு, வேறொரு மிருகம் பூமியிலிருந்து எழும்பக் கண்டேன்; அது ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாக இரண்டு கொம்புகளையுடையதாயிருந்து, வலுசர்ப்பத்தைப்போலப் பேசினது. அது முந்தின மிருகத்தின் அதிகாரம் முழுவதையும் அதின் முன்பாக நடப்பித்து, சாவுக்கேதுவான காயம் ஆறச்சொஸ்தமடைந்த முந்தின மிருகத்தைப் பூமியும் அதின் குடிகளும் வணங்கும்படி செய்தது’’. (வெளி 13:11,12)
இந்த வாடிகன் என்ற நகரை கி.பி 1929 ஆம் ஆண்டு முசோலினி போப்பின் ஆளுகைக்குட்பட்ட தனி நாடாக அங்கீகரித்து, மீண்டும் போப்புகளுக்கு ஒரு குட்டி சிங்காசனத்தை ஏற்படுத்திக்கொடுத்தார். இதற்கு முன் இருந்த ராஜ்ஜியங்களைப் போல இதற்கு அரசியல் அதிகாரம் கிடையாது என்றாலும், ஐரோப்பிய கூட்டமைப்பு என்ற எட்டாவது மிருகத்துடன் கைகோர்த்து செயல்பட்டு வருகிறது. இந்த வரலாற்றுப் பின்னணியில் நாம் ஏழாம் கலசத்தைப் பார்ப்போம்.
‘‘ஏழாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஆகாயத்தில் ஊற்றினான்; அப்பொழுது பரலோகத்தின் ஆலயத்திலுள்ள சிங்காசனத்திலிருந்து: ஆயிற்று என்று சொல்லிய பெருஞ்சத்தம் பிறந்தது. சத்தங்களும் இடிமுழக்கங்களும் மின்னல்களும் உண்டாயின; பூமி மிகவும் அதிர்ந்தது, பூமியின்மேல் மனுஷர்கள் உண்டான நாள்முதற்கொண்டு அப்படிப்பட்ட பெரிய அதிர்ச்சியுண்டானதில்லை.’’ (வெளி 16:17,18)
‘‘தாலந்து நிறையான பெரிய கல்மழையும் வானத்திலிருந்து மனுஷர்மேல் விழுந்தது; அந்தக் கல்மழையினால் உண்டான வாதையினிமித்தம் மனுஷர்கள் தேவனைத் தூஷித்தார்கள்; அந்த வாதை மகா கொடியதாயிருந்தது.’’ (வெளி 16:21)
நாம் ஏற்கனவே பல இடங்களில் இந்த சங்கேத வார்த்தைகளுக்கான விளக்கத்தைப் பார்த்துவிட்டபடியால் நேரடியாகவே சொல்கிறேன்.
- ஆகாயம்- ஆகாயத்து அதிகார பிரபுவாகிய பிசாசின் ராஜ்ஜியம்
- பெருஞ்சத்தம் – வெற்றி அல்லது முடிவை அறிவிக்கும் சத்தம்
- பூமிஅதிர்ச்சி – பெரும் யுத்தங்களினால் ராஜ்ஜியங்கள் கவிழ்க்கப்படுதல்
- பூமியில்மனுஷர் உண்டான நாள் முதல் ஏற்படாத பெரிய அதிர்ச்சி – மூன்றாம் உலகப்போர்
- தாலந்துநிறையான பெரிய கல்மழை – மூன்றாம் உலகப்போரில் பயன்படுத்தப்படப்போகும் அணுகுண்டுகள் உட்பட வானத்திலிருந்து விழும் பேரழிவு ஆயுதங்கள்
ஏழாம் கலசத்தின் அழிவுகள்
மகாநகரம் என்பது ரோம் நகரையும், மகா பாபிலோன் என்பது அதை மையமாகக் கொண்ட ரோம சாம்ராஜ்ஜியத்தின் பல வடிவங்களையும் குறிக்கும். இந்த மூன்றாம் யுத்தத்தின் காலத்தில் இருக்கப்போகும் ரோம் மகாநகரம் என்பது வாடிகனையும், மகா பாபிலோன் என்பது கடைசி ரோம ராஜ்ஜியத்தின் வடிவமான ஐரோப்பிய யூனியனையும் குறிக்கும்.
‘‘அப்பொழுது மகா நகரம் மூன்று பங்காகப் பிரிக்கப்பட்டது, புறஜாதிகளுடைய பட்டணங்கள் விழுந்தன. மகா பாபிலோனுக்கு தேவனுடைய உக்கிரமான கோபாக்கினையாகிய மதுவுள்ள பாத்திரத்தைக் கொடுக்கும்படி அது அவருக்கு முன்பாக நினைப்பூட்டப்பட்டது. தீவுகள் யாவும் அகன்றுபோயின, பர்வதங்கள் காணப்படாமற்போயின.’’ (வெளி 16:19,20)
ஏழாம் கலசம் ஊற்றப்படுபோது ஐந்துவிதமான அழிவுகள் ஏற்படும் என்று யோவான் காண்கிறார்.
- மகாநகரமாகிய ரோமின் வாடிகனின் ஆளுகை மூன்றுபங்காகப் பிரிக்கப்படும்
- புறஜாதிகளின் பட்டணங்கள் (ஆசிய மற்றும் கிழக்கு ராஜ்ஜியங்கள்) விழும்
- மகா பாபிலோனாகிய ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் அழிவை சந்திக்கும்
- குட்டி ராஜ்ஜியங்களாகிய தீவுகள் அகன்றுபோகும்
- மற்ற ராஜ்ஜியங்களாகிய பர்வதங்கள் காணப்படாமல் போகும்.
மூன்று பங்காகப் பிரிக்கப்பட்ட மகாநகரம்
மூன்று பங்காகப் பிரிக்கப்படுவது என்பது மூன்றுவிதமான அழிவுகளால் நிர்மூலமாக்கப்படுவதைக் குறிக்கும். எருசலேமின் அழிவைப்பற்றி எசேக்கியேலிடம் கர்த்தர் கூறும்போது இந்த வாக்கியங்களைப் பயன்படுத்துகின்றார்.
‘‘பின்னும் அவர்: மனுபுத்திரனே, சவரகன் கத்தியாகிய கருக்கான கத்தியை வாங்கி, அதினால் உன் தலையையும் உன் தாடியையும் சிரைத்துக்கொண்டு, பின்பு நிறுக்கும் தராசை எடுத்து, அந்த மயிரைப் பங்கிடக்கடவாய். மூன்றில் ஒரு பங்கை எடுத்து முற்றிக்கைபோடும் நாட்கள் முடிகிறபோது நகரத்தின் நடுவிலே அக்கினியால் சுட்டெரித்து, மூன்றில் ஒரு பங்கை எடுத்து, அதைச் சுற்றிலும் கத்தியாலே வெட்டி, மூன்றில் ஒரு பங்கை எடுத்துக் காற்றிலே தூற்றக்கடவாய்; அவைகளின் பின்னாக நான் பட்டயத்தை உருவுவேன். அதில் கொஞ்சம்மாத்திரம் எடுத்து, அதை உன் வஸ்திரத்தோரங்களில் முடிந்துவைப்பாயாக. பின்னும் அதில் கொஞ்சம் எடுத்து, அதைத் தீயின் நடுவில் எறிந்து, அதை அக்கினியால் சுட்டெரிப்பாயாக; அதிலிருந்து இஸ்ரவேல் வம்சத்தார் அனைவருக்கும் விரோதமாக அக்கினி புறப்படும்.’’ (எசேக்கியேல் 5:1-4)
இங்கு கர்த்தர் ஒரு கணக்கைப் போடுகிறார். அதை உங்களுக்குப் புரியும் வகையில் ஒரு உதாரணத்தை சொல்லி விளக்குகிறேன். ஒரு ஜனத்தை மொத்தமாக எடுத்துக்கொண்டால் 100% என்று வைத்துக்கொள்ளலாம். இதில் மூன்றில் ஒருபங்கு என்பது 33%. இப்படி மூன்றுபங்குகளாக எடுத்துக்கொண்டால் 99%. மீதமுள்ள 1% என்ற கொஞ்சத்தை மட்டும் வஸ்திரத்து ஓரத்தில் முடிந்துவைக்க சொன்னார். மற்ற மூன்றுபங்குகளுக்கும் என்ன ஆயிற்று?
‘‘உன்னிலே மூன்றில் ஒரு பங்கு கொள்ளைநோயால் சாவார்கள், பஞ்சத்தாலும் உன் நடுவிலே மடிந்துபோவார்கள்; மூன்றில் ஒரு பங்கு உன்னைச் சுற்றிலும் இருக்கிற பட்டயத்தால் வெட்டுண்டு விழுவார்கள்; மூன்றில் ஒரு பங்கை நான் சகல திசைகளிலும் சிதறிப்போகப்பண்ணி, அவர்கள் பின்னே பட்டயத்தை உருவுவேன்.’’ (எசேக்கியேல் 5:12)
- முதல் மூன்றில் ஒருபங்கு முற்றிகைபோடுதல் முடியும்போது, முற்றிகையினால் உணவுகிடைக்காமலும், கொள்ளைநோயினாலும் சாவார்கள்.
- அடுத்த மூன்றில் ஒருபங்கு முற்றிகை போட்டு முடித்து எதிரிகள் உள்ளே நுழைவதால் பட்டயத்திற்கு இரையாவார்கள்
- அடுத்த மூன்றில் ஒரு பங்கு தப்பியோடி அல்லது எதிரிகளால் சிறைபிடிக்கப்பட்டு புறதேசங்களுக்கு சென்றாலும் அங்கேயும் பின்னால் பட்டயம் வரும்.
- வஸ்திரத்து ஓரத்தில் முடிந்துவைக்கப்பட்ட கொஞ்சம்பேர் தான் கர்த்தரை உண்மையாகப் பின்பற்றிய பாதுகாக்கப்பட்ட ஜனம்.
இதே தீர்ப்பு தான் மூன்றாம் உலக யுத்தத்தின் முடிவிலும் உலகத்திற்கு விதிக்கப்பட்டுள்ளது. இதன் முடிவில் வாடிகன் அழியும்; ஐரோப்பிய கூட்டணி நாடுகள் அழியும்; போரில் பங்கேற்ற மற்ற ராஜ்ஜியங்களும் அழியும். ஆனால் இயேசுவை உண்மையாய் பின்பற்றிய கொஞ்ச ஜனம் மாத்திரம் யுத்த முடிவில் வரவிருக்கும் ராஜாதி ராஜாவாம் இயேசுவின் வருகையில் அவரோடு கூட (வஸ்திரத்தின் ஓரத்தில் முடிந்துவைக்கப்பட்டு) எடுத்துக்கொள்ளப்படுவார்கள். அந்த பட்டியலில் இருக்கவேண்டும் என்பது தான் நம் ஒவ்வொருவரின் வாஞ்சையாக இருக்கவேண்டும். இதனால் தான் இயேசு பரலோக ராஜ்ஜியத்தின் ரகசியங்களைப் பல வழிகளின் சொல்லிவைத்தார்.
‘‘இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.’’ (மத்தேயு 7:13,14)
‘‘சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வாரென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகிலும் மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார்.’’ (லூக்கா 18:8)
மகாநகரம் மற்றும் மகா பாபிலோனின் அழிவுகளைப் பற்றி எட்டாவது ராஜ்ஜியத்தைப் பற்றிய அத்தியாயத்தில் இனி விளக்க உள்ளேன். எட்டாவது ராஜ்ஜியம் ஏழாம் கலசத்தின் முடிவிலே அழிக்கப்படுவதால் அதைக் கடைசியாக கொடுத்துள்ளேன். இந்த ஏழாம் கலசம் என்பது ரோம சாம்ராஜ்ஜியத்தின் கடைசி வடிவங்களான வாடிகன் (மகாநகரம்), கத்தோலிக்க சபை (மிருகத்தின் மேலிருந்த ஸ்திரீ), ஐரோப்பிய கூட்டமைப்பு (8 ஆவது மிருகம்), மற்றும் கள்ளதீர்க்கதரிசியின் (போப்) கடைசி அழிவைக் குறிக்கும் காலமாகும். இது கி.பி 1929 ல் ஆரம்பித்துள்ளது; 2 உலகப்போர்கள் உட்பட பல சம்பவங்கள் நடந்துவிட்டன; இன்னும் முடிவுபெறவில்லை. இவ்வளவும் நடந்து முடிந்தால் தான் இயேசு இந்த உலகத்திற்கு ராஜாதி ராஜாவாக தூதர்களோடும், தேவ எக்காளத்தோடும் வானத்தில் வந்து நம்மை சேர்த்துக்கொள்ளும் காலம் வரும். அந்த நாழிகைக்காக விழிப்போடு காத்திருப்போம். ஆமென்.