ஐயோ எக்காளங்கள் (கி.பி 570 - கி.பி 1789)

முதல் நான்கு எக்காளங்களில் பல அழிவுகள் ஏற்பட்டாலும், அவை குறுகிய காலக்கட்டத்தில் முடிவடைந்து விட்டன (கி.பி 395-கி.பி 570). ஆனால் அடுத்த மூன்று எக்காளங்களை ஊதுவதற்கு முன்பு, ஒரு தூதன் பயங்கர எச்சரிப்பைக் கொடுக்கிறான். அப்படியானால் இந்த மூன்று எக்காளத்தின் காலங்கள் அதிகமாகவோ அல்லது ரோம சாம்ராஜ்ஜியத்தின் மீதான தண்டனைகள் தீவிரமாகவோ அல்லது இந்த இரண்டும் சேர்ந்ததுமாகவோ இருக்கலாம்.

‘‘பின்பு, ஒரு தூதன் வானத்தின் மத்தியிலே பறந்துவரக்கண்டேன்; அவன் மகா சத்தமிட்டு: இனி எக்காளம் ஊதப்போகிற மற்ற மூன்று தூதருடைய எக்காள சத்தங்களினால் பூமியில் குடியிருக்கிறவர்களுக்கு ஐயோ, ஐயோ, ஐயோ (ஆபத்துவரும்) என்று சொல்லக்கேட்டேன்.’’ (வெளி 8:13)

ஏற்கனவே தீர்க்கதரிசன புத்தகங்களில், எருசலேம் உட்பட பல தேசங்களின் மீதான அழிவுத்தீர்ப்புகளைக் குறித்து சொல்லப்பட்டுள்ள இடங்களில், ஒரு ‘ஐயோ’ (Woe) என்று அதன் தீவிரத்தைப் பற்றி சங்கேத மொழியில் குறிப்பிடப்பட்டிருக்கும். சமாரியா, அசீரியன் கையில் ஒப்புக்கொடுக்கப்படும் என்று சொல்லும் இடத்தில், ‘எப்பிராயீமுடைய வெறியரின் பெருமையான கிரீடத்துக்கு ஐயோ’ (ஏசாயா 28:1) என்றும் எருசலேம், பாபிலோன் வசம் ஒப்படைக்கப்படும் என்று எச்சரிக்கும் இடத்தில், ‘தாவீது வாசம்பண்ணின நகரமாகிய அரியேலே, அரியேலே, ஐயோ!’ (ஏசாயா 29:1) என்றும் கூறப்பட்டிருக்கிறது. ஒரு ஐயோ என்று சொல்லப்பட்ட இடங்களிலேயே இவ்வளவு பெரிய அழிவுகளும், சிறையிருப்புகளும் நிகழ்ந்துள்ளதை பரிசுத்த வேதம் உறுதிபடுத்தியிருக்க, மூன்று ஐயோ என்று சொல்லப்பட்டிருக்கும் அழிவுகளின் தீவிரத்தை நீங்களே கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.

ஐந்தாம் எக்காளம்

     போப்புகள் மேற்கு ரோமின் அரசியல் அதிகாரத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்ததினாலும் (கி.பி 538 களிலிருந்து), போப்புகளுக்கென்று தனி அரசியல் நிலப்பரப்பு வழங்கப்பட்டதினாலும் (கி.பி 756), மேற்கு ரோம சாம்ராஜ்ஜியம் போப்புகளின் தலைமையில் மீண்டும் வலிமை பெற ஆரம்பித்தது. முன்பு போல ரோம சாம்ராஜ்ஜியம் விரிவடையவில்லை தான்; ஆனால் போப்புகளின் அதிகாரத்தினால், சிதறியிருந்த மேற்கு ரோம சாம்ராஜ்ஜியம் மீண்டும் கத்தோலிக்க சபையின் பெயரால் ஒருங்கிணைக்கப்பட்டது. ஆங்காங்கே பல ராஜாக்கள் ஆண்டுவந்தாலும், போப்பாண்டவரின் உச்சகட்ட அதிகாரம் என்ற மையப்புள்ளியில் ஒருங்கிணைந்திருந்தனர். அதிலும் குறிப்பாக 11 ஆம் நூற்றாண்டிலிருந்து 13 ஆம் நூற்றாண்டு வரை ரோமன் கத்தோலிக்க சாம்ராஜ்ஜியம் உச்சகட்டத்திலிருந்து பலகோடி மக்களை கிறிஸ்துவைப் பற்றும் அன்பிலிருந்து வழிவிலகச்செய்வதில் வெற்றி கண்டது. ஆனால் இன்னொரு பக்கத்தில், கான்ஸ்டாண்டிநோபிளைத் தலைநகராய்க் கொண்டு ஆண்டுவந்த கிழக்கு ரோம சாம்ராஜ்ஜியம், இந்தக் காலக்கட்டத்தில் எழும்பிவந்த அரபு- இஸ்லாமிய அரசுகளால், எருசலேம் உட்பட மத்தியகிழக்குப் பகுதிகள், அரபுப் பகுதிகள், எகிப்து ஆகியவற்றின் பகுதிகளை கொஞ்சகொஞ்சமாக இழக்க ஆரம்பித்து பலவீனமடைய ஆரம்பித்தது. இந்தப் பின்னணியோடு நாம் ஐந்தாம் எக்காளத்திற்குள் செல்வோம். இந்த சம்பவங்களை மூன்று பாகங்களாகப் பிரித்துப்பார்ப்போம்.

பாகம் 1: பாதாளக்குழியைத் திறந்த நட்சத்திர நாயகன்

‘‘ஐந்தாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது வானத்திலிருந்து பூமியின்மேல் விழுந்த ஒரு நட்சத்திரத்தைக் கண்டேன்; அவனுக்குப் பாதாளக்குழியின் திறவுகோல் கொடுக்கப்பட்டது.’’ (வெளி 9:1)

வானத்திலிருந்து விழுந்த நட்சத்திரம் என்று உருவகமாக சொல்லிவிட்டு, ‘அவனுக்கு’ பாதாளக்குழியின் திறவுகோல் கொடுக்கப்பட்டது என்ற ஒரே வார்த்தையில் இந்த நட்சத்திரம் என்பது நேரடி அர்த்தம்கொண்டது அல்ல என்பது தெளிவாகின்றது. வானத்திலிருந்து விழுந்த நட்சத்திரம் என்பது சாத்தானாகிய லூசிபரைக் குறிக்கும் என்பது நமக்கு நன்றாகத்தெரியும். ஆனால் இந்த நட்சத்திரம் சற்று வித்தியாசமானதாகக் கூறப்பட்டுள்ளது.

பாதாளத்தின் திறவுகோல்

திறவுகோல் என்பதற்கு ஒரு காரியத்தை நடத்தும் அதிகாரம் என்று அர்த்தமாகும். அதுவும் பாதாளக்குழியைத் திறக்கும் அதிகாரம் அந்த சாத்தானின் தூதனுக்குக் கொடுக்கப்பட்டது.

‘‘தாவீதுடைய வீட்டின் திறவுகோலை அவன் தோளின்மேல் வைப்பேன்; ஒருவரும் பூட்டக் கூடாதபடிக்கு அவன் திறப்பான். ஒருவரும் திறக்கக் கூடாதபடிக்கு அவன் பூட்டுவான்.’’ (ஏசாயா 22:22)

‘‘மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.’’ (வெளி 1:18)

பெருஞ்சூளையின் புகை

‘‘அவன் பாதாளக்குழியைத் திறந்தான்; உடனே பெருஞ்சூளையின் புகையைப்போல அந்தக் குழியிலிருந்து புகைஎழும்பிற்று; அந்தக் குழியின் புகையில் சூரியனும் ஆகாயமும் அந்தகாரப்பட்டது.’’ (வெளி 9:2)

பெருஞ்சூளை என்பதற்கு ஆங்கிலத்தில் Great furnace என்று கொடுக்கப்பட்டுள்ளது. இதைப்போன்று மிகவலிமையான சூளை (Iron furnace) என்று பரிசுத்த வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரே இடம் ‘எகிப்து என்ற இருப்புக் காளவாய்’ (உபாகமம் 4:20, 1 இராஜாக்கள் 8:51, எரேமியா 11:4). அப்படியானால் இந்த இருப்புக்காளவாய் அல்லது பெருஞ்சூளை என்பதை அடிமைத்தனப்படுத்தும் இடமாக விளங்கிக்கொள்ளவேண்டும். இந்தப் பெருஞ்சூளையிலிருந்து எழும்பிய புகையால் சூரியன் அந்தகாரப்பட்டது. சூரியன் என்ற சங்கேத மொழிக்கு ராஜ்ஜியங்களைப் பற்றி சொல்லப்பட்டுள்ள இடங்களில் ராஜாவைக் குறிப்பதாகவும், ஆவிக்குரிய சம்பவங்களைப் பற்றி சொல்லப்படும் இடங்களில் ‘நீதியின் சூரியனான இயேசுவையும்’ குறிப்பதாகவும் விளங்கிக்கொள்ளவேண்டும். இதனால் தான் சபையானது ‘சூரியனை அணிந்த ஸ்திரீ என்றும் சொல்லப்பட்டுள்ளது. இந்தப் பெருஞ்சூளையின் புகையானது இயேசுவாகிய நீதியின் சூரியனைப் பற்றிய சுவிசேஷத்தையும், ஆவிக்குரிய ஆகாயத்தையும் மறைக்கும் அளவிற்கு எழும்பினது.

பாதாளக்குழியிலிருந்து வந்தவன் யார்?

இந்த இடத்தில் பாதாளக்குழி என்ற வார்த்தை, ஆங்கிலத்தில் ‘Bottomless pit’ என்றும், எபிரேய பாஷையில் ‘Abyss’ என்றும் கூறப்பட்டுள்ளது. இதே அர்த்தத்தில் வரும் பாதாளம் என்ற வார்த்தை வெளிப்படுத்தலில் இன்னும் மூன்று இடங்களில் வருகிறது.

  1. இரண்டு சாட்சிகளும் தங்கள் சாட்சியை 1260 வருடங்கள் சொல்லி முடித்தபின்பு அவர்களைக் கொன்றுபோட்ட ‘பாதாளத்திலிருந்து ஏறிவந்த மிருகம்’ (வெளி 11:7)
  2. இருந்ததும், இராததும், பாதாளத்திலிருந்து ஏறிவந்து நாசமடையப்போகும் மிருகம் (வெளி 17:8)
  3. பிசாசாகிய வலுசர்ப்பத்தை தூதன் ஆயிரம் வருஷம் தள்ளியடைத்த பாதாளம் (வெளி 20:2)

நன்மையான எந்த ஈவும், பூரணமான எதுவும் பரத்திலிருந்து, அதாவது மேலிருந்து கீழே இறங்கிவரும். அவற்றிற்கு இயேசுகிறிஸ்து என்ற அடித்தளம் உண்டு. ஆனால் ‘பாதாளத்திலிருந்து ஏறிவரும்’ புகை என்பது சாத்தானின் வல்லமையையே குறிக்கும். அதுவும் அடித்தளம் என்பதே இல்லாத இடத்திலிருந்து (Bottomless Pit) வரும் எதுவும் சாத்தானின் போதகமாக (False docrine/flase religion) மட்டுமே இருக்கமுடியும். இப்படி வஞ்சிக்கும் போதனைகளுக்கு நிச்சயமாக எந்த அடித்தளமும் இல்லை. இந்த வஞ்சிக்கும் போதனைகள் அல்லது மதங்களால் இயேசுவைப் பற்றிய சுவிசேஷத்தின் வெளிச்சத்திலிருந்து பலரை விலக்கும் அளவிற்கு மறைக்கமுடியும்.

தேவனுடைய அஸ்திபாரத்தின் மேல் வீடுகட்ட முயற்சித்த சாத்தான்

அப்படியானால் இதுவரை நாம் பார்த்த விளக்கங்களின்படி, இந்த ஐந்தாம் எக்காளத்தின் காலத்தில் வானத்திலிருந்து விழுந்த நட்சத்திரம் என்பவன்,

  • விழுந்துபோன வலுசர்ப்பமாகிய லூசிபரின் வழியில் வந்தவன்
  • புதியதொரு மதக்கொள்கையை தோற்றுவித்தவன் (Doctrine from bottomless pit). அதுவும் பரிசுத்த வேதத்தின் பெரும்பான்மையான, பழைய ஏற்பாட்டின் காரியங்களை தனக்கு உரிமையாக்கிக்கொண்ட மதக்கொள்கைகளைத் தோற்றுவித்தவன். (சாத்தான் இயேசுவையே வசனத்தின் மூலமாக சவால் விட்டவன் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்)
  • அந்தமதம் உலகின் பெரும்பான்மையான ஜனங்களை வஞ்சித்தது மட்டுமல்லாமல், நீதியின் சூரியனான இயேசுவின் சுவிசேஷத்தை மறைத்தது.
  • அதைத்தோற்றுவித்த அந்த நட்சத்திரம், தன்னை இறைதூதர் என்று சொல்லிக்கொண்டவன் (கள்ளதீர்க்கதரிசி)

இவை எல்லாம் யாரைக்குறிக்கிறது என்பது இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கும்.

முகமது நபியும், இஸ்லாமின் தோற்றமும்

நம் இயேசுகிறிஸ்து உலக வரலாற்றையே தீர்க்கதரிசனமாக சொல்லியிருக்கும்போது, உலகின் இரண்டாவது பெரிய மதமாக விளங்கும் இஸ்லாமைப் பற்றி சொல்லாமல் இருந்திருப்பாரா என்ன? இதைப் புரிந்துகொள்ளவேண்டுமென்றால் நாம் காலாகாலமாகத் தவறாகப் புரிந்துவைத்திருக்கும் இன்னொரு நம்பிக்கையைப் பற்றி இப்பொழுது சொல்லியே ஆகவேண்டும். இஸ்லாம் என்பது பழைய ஏற்பாட்டின் அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்ட ஒரு மதம் என்பது தான் அந்த தவறான நம்பிக்கை. இஸ்லாம் என்பது எந்தவித பின்னணியும் இல்லாமல் தன்னைத் திடீர் என்று தீர்க்கதரிசி என்று அழைத்துக்கொண்ட முகமது நபியால் தோற்றுவிக்கப்பட்ட புதிய மதக்கொள்கையாகும்.

உலகமெங்கும் சிதறி வாழ்ந்த ‘பரிசேய மார்க்க யூதர்கள்’ பின்பற்றிவந்த மோசேயின் நியாயப்பிரமாணங்களை அடிப்படையாகக்கொண்ட ‘தால்முட்’ (Talmud) என்ற புனிதநூல் கி.பி 6 ஆம் நூற்றாண்டுகளில் அரபுநாடுகளில் பிரபலமடைந்திருந்தது. அதிலிருந்த வாய்மொழிக் கோட்பாடுகள் (Oral Law), பாரம்பரியங்கள் மற்றும் புராண கதைகளைக் கடன்வாங்கி உருவாக்கப்பட்டது தான் முகமது நபியின் கோட்பாடுகளும், அவர்களது புனித நூலான குர்ஆனும். இதனடிப்படையில் தான் இஸ்லாமியர்களின் ரமலான் பண்டிகை, மோசே மூலம் கர்த்தர் சொன்ன ‘பாவநிவர்த்தி செய்யும் நாளான’ (Day of Atonement) 7வது மாதமான நிசானின் 10 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. அது மட்டுமல்லாமல் எருசலேமும் இஸ்லாமியர்களின் புனிதத் தலமாக நபியால் குறிப்பிடப்பட்டது.

சாத்தானுக்கு எப்போதும் தேவனின் இடத்தில் அமரவேண்டும் என்று ஆசை இருப்பது மட்டுமல்லாமல், அவரது போதனைகளையும் திருடி, அதைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்துவது மிகவும் பிடித்த ஒன்றாகும். அதனால் தான் படைப்பின் இரகசியங்கள், ஆபிரகாம், மோசே போன்ற முற்பிதாக்கள் முதல் தாவீதின் அரசாட்சி வரை பரிசுத்த வேதத்திலிருந்து தனக்கு எடுத்துக்கொண்டான். ஆனால் எருசலேமின் ராஜாவாகிய இயேவை மனுஷகுமாரன் இல்லை, வெறும் தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்று மறுதலிக்கும் போதனைகளை விதைத்தான். அவருக்கு நிகராக முகமது நபியை ஒரு இறைதூதராக நிலைநிறுத்தி வெற்றியும் கண்டான். எருசலேமையும் இஸ்லாமியர்களின் புனித இடம் என்று நம்பவைத்தான். ஏனென்றால் அவனுக்கு பாதாளத்தின் திறவுகோல் கொடுக்கப்பட்டு, அதன் புகை சுவிசேஷத்தை மறைக்கும் அளவிற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. இப்படி நபியால் ஸ்தாபிக்கப்பட்ட மதக்கொள்கைகள் இன்று வரை எத்தனை கோடி மக்களை வஞ்சித்துவருகிறது என்பது நான் சொல்லி உங்களுக்குத் தெரியவேண்டியதில்லை. இப்படி பெரும்பான்மையான ஜனங்களை வஞ்சித்துவரும் மார்க்கத்தைத் தோற்றுவித்த முகமது நபி தான் இந்த வானத்திலிருந்து விழுந்த நட்சத்திரம். பாதாளத்திலிருந்து எழும்பி வந்த புகை தான் இஸ்லாம் என்ற மதம். ஆகாயத்தின் சுடர்களைக் குறித்த இந்த சங்கேத மொழி வேறு ஒரு இரகசியத்தையும் நமக்கு வெளிப்படுத்துகிறது.

  • இந்தநட்சத்திரம் நிலைத்திருந்தது
  • அதன்புகை சூரியனை மறைத்தது.
  • அதனால்சூரியனை நம்பியிருக்கும் சந்திரன் தேய்வடைந்தது.

இந்த மூன்றும் சேர்ந்தால் வானம் எப்படிக் காட்சியளிக்குமோ, அந்த அடையாளம் தான் இன்றுவரை பல இஸ்லாமிய நாடுகளின் கொடிகளின் அடையாளங்களாக இருக்கின்றன.

படம் 57: பிறைநிலா, நட்சத்திரத்தை அடையாளமாகக்கொண்ட இஸ்லாமிய நாடுகளின் கொடிகள்

பாகம் 2: புகையிலிருந்து புறப்பட்ட வெட்டுக்கிளிகள்

இந்த முகமது நபி (கி.பி 570-கி.பி 632) ஸ்தாபித்த இஸ்லாம் மார்க்கத்தை உலக அளவில் பரப்பியவர்கள் ‘கலிபாக்கள்’ என்ற இஸ்லாமிய ராஜாக்கள். முகமது நபி இறந்த பின்பு அவரது மாமனார் அபுபக்கர் (Abu bakr) என்பவர் முதலாம் கலிபாவாக பொறுப்பேற்று அரபியர்களை ஒருங்கிணைத்தார். அவர்களை இஸ்லாம் மார்க்கத்திற்குள் வழிநடத்தி, உலகமெங்கிலும் அதனை போதிக்க வழிவகுத்தார்.

‘‘அந்தப் புகையிலிருந்து வெட்டுக்கிளிகள் புறப்பட்டுப் பூமியின்மேல் வந்தது; அவைகளுக்குப் பூமியிலுள்ள தேள்களின் வல்லமைக்கொப்பான வல்லமை கொடுக்கப்பட்டது.’’ (வெளி 9:3)

ஏற்கனவே நாம் பார்த்த இஸ்லாம் என்னும் மார்க்கத்திலிருந்து (புகை) வெட்டுக்கிளிகள் புறப்பட்டு வந்தன என்றும் அவற்றிற்கு தேள்களின் வல்லமை கொடுக்கப்பட்டது என்றும் யோவான் காண்கிறார்.

‘‘மீதியானியரும், அமலேக்கியரும், சகல கிழக்கத்திப் புத்திரரும், வெட்டுக் கிளிகளைப் போலத் திரளாய்ப் பள்ளத்தாக்கிலே படுத்துக்கிடந்தார்கள்; அவர்களுடைய ஒட்டகங்களுக்கும் கணக்கில்லை, கடற்கரை மணலைப்போலத் திரளாயிருந்தது.’’ (நியாயாதிபதிகள் 7:12)

‘‘அப்படியே மோசே தன் கோலை எகிப்து தேசத்தின்மேல் நீட்டினான்; அப்பொழுது கர்த்தர் அன்று பகல் முழுவதும் அன்று இரா முழுவதும் கீழ்காற்றைத் தேசத்தின்மேல் வீசப்பண்ணினார்; விடியக்காலத்திலே கீழ்காற்று வெட்டுக்கிளிகளைக் கொண்டுவந்தது.’’ (யாத்திராகமம் 10:13)

இந்த இடத்தில் நாம் புரிந்துகொள்ள வேண்டிய ஒன்று, இஸ்லாமியர்கள் மற்றும் அரேபியர்கள் எல்லாரும் இஸ்மவேல் வம்சத்தை சார்ந்தவர்கள் அல்ல. அரேபியர்கள் அல்லது இன்றைய இஸ்லாமிய நாடுகள் என்பவை இஸ்மவேலர், மீதியானியர், அமலேக்கியர் உட்பட பல கிழக்கத்திய ஜாதிகளின் கூட்டணியாகும். இந்த அரபுதேசங்கள் தான் இஸ்ரவேல் மற்றும் எகிப்துக்கு கிழக்கிலே இருக்கிறது. எனவே இந்த திசைகளிலிருந்து வரும் படையெடுப்புகள் எல்லாம் வெட்டுக்கிளிகளின் படையெடுப்புக்கு ஒப்பாக தீர்க்கதரிசன புத்தகங்களிலும் கூறப்பட்டுள்ளது

  • சுருக்கமாக, வெட்டுக்கிளிகள் = அரேபியர்கள் (இஸ்லாம் அரபு நாடுகள்)

கலிபாக்களின் ராஜ்ஜியம்

முகமது நபியைப் பின்பற்றி வந்த இந்த கலிபாக்கள், ஏழாம் நூற்றாண்டில் வலிமையான ராஜ்ஜியமாக உருவாக ஆரம்பித்தது மட்டுமல்லாமல், அப்போதைக்கு அருகில் இருந்த கிழக்கு ரோம சாம்ராஜ்ஜியத்தின் (பைசாந்திய ராஜ்ஜியம்) அரபு பகுதியான சிரியாவின் மீதும், எருசேலமின் மீதும் படையெடுக்க ஆரம்பித்தனர். அதில் ஆசியா மைனர் பகுதிகளில் இருந்த கிழக்கு ரோம சாம்ராஜ்ஜியத்தின் பகுதிகளைக் கைப்பற்றி ஐரோப்பாவிற்குள் காலடி எடுத்துவைத்து ஸ்பெயின் வரை சென்றனர். இதனால் கி.பி 632 முதல் பல நூற்றாண்டுகளுக்கு இஸ்லாமியர்களின் படையெடுப்பால் ரோம சாம்ராஜ்ஜியம் பல உபத்திரவங்களையும், அழிவுகளையும் சந்தித்தது.

தேள்களின் வல்லமை

தேள்கள் என்பது பரிசுத்த வேதத்தில் சர்ப்பத்தின் வல்லமைக்கு அடுத்ததாக கூறப்பட்டுள்ளது. அதாவது சாத்தானின் அதிகாரத்திற்கு ஒப்பான வல்லமை என்று பொருள்படும்.

‘‘அவர்களை அவர் நோக்கி: சாத்தான் மின்னலைப்போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன். இதோ, சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங் கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது.’’ (லூக்கா 10:18,19)

‘‘என் தகப்பன் (சாலமோன்) உங்கள் நுகத்தைப் பாரமாக்கினார், நான் உங்கள் நுகத்தை அதிக பாரமாக்குவேன்; என் தகப்பன் உங்களைச் சவுக்குகளினாலே தண்டித்தார், நான் உங்களைத் தேள்களினாலே தண்டிப்பேன் என்று ஜனங்களுக்குக் கடினமான உத்தரவு கொடுத்தான்.’’ (1 இராஜாக்கள் 12:14)

தேள்களுக்கு ஒப்பான வல்லமை என்பது கீழ்படியாதவர்களுக்குக் கொடுக்கப்படும் தண்டனையாகவும், விழுந்துபோன சாத்தானின் உபத்திரவத்திற்கும், வல்லமைக்கும் ஒப்பாகவும் வேதத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற எக்காளங்களைப் போல இந்த தேள்களுக்கு கொலை செய்து இரத்தம் சிந்தவைக்கும் அதிகாரம் கொடுக்கப்படவில்லை.

‘‘பூமியின் புல்லையும் பசுமையான எந்தப் பூண்டையும் எந்த மரத்தையும் சேதப்படுத்தாமல், தங்கள் நெற்றிகளில் தேவனுடைய முத்திரையைத் தரித்திராத மனுஷரைமாத்திரம் சேதப்படுத்த அவைகளுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது. மேலும் அவர்களைக் கொலைசெய்யும்படிக்கு அவைகளுக்கு உத்தரவு கொடுக்கப்படாமல், ஐந்துமாதமளவும் அவர்களை வேதனைப்படுத்தும்படிக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது; அவைகள் செய்யும்வேதனை தேளானது மனுஷரைக் கொட்டும்போது உண்டாகும் வேதனையையைப்போலிருக்கும்.’’ (வெளி 9:4,5)

விஷப்பாம்பு கொத்தினால் மரணம் நிச்சயம்; ஆனால் தேள்களின் விஷம் எல்லோருக்கும் மரணத்தை ஏற்படுத்துவதில்லை; மாறாக அதன் வலி மிகுந்த வேதனை தரக்கூடியதாகும். பூமியின் புல்லாகிய மனிதர்களையும், பச்சைப் பூண்டுகளையும், கனிதரும் மரங்களையும் சேதப்படுத்த அவைகளுக்கு அதிகாரம் கொடுக்கப்படவில்லை. அதற்கு மாறாக தேவனுடைய முத்திரையாகிய பரிசுத்த ஆவியைப் பெறாமல், ரோம சாம்ராஜ்ஜியத்தின் முத்திரையை தங்கள் கைகளிலும், நெற்றியிலும் தரித்துக்கொண்டு அதற்கு அடிமைகளாக தங்களை விற்றுப்போட்டவர்களை மட்டும் வேதனைப்படுத்தும் அதிகாரம் கொடுக்கப்பட்டது. இது எப்படி நிறைவேறியது என்பதைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமானால், இந்த அரபு இஸ்லாமிய படைவீரர்களுக்கு முகமது நபியின் மாமனாகிய அபுபக்கர் இட்ட பத்து யுத்த கட்டளைகளைத் தெரிந்துகொள்ளவேண்டும்.

  1. யுத்தகளத்தில் நீங்கள் யாரும் நம்பிக்கைத் துரோகம் செய்யக்கூடாது; நேர்மை தவறவும் கூடாது
  2. இறந்த எதிரியின் உடல்களை சேதப்படுத்தக்கூடாது
  3. படையெடுப்பின்போது பெண்கள், குழந்தைகள், முதியவர்களைக் கொல்லக்கூடாது
  4. கனிதரும் மரங்களை வெட்டி சாய்க்கக்கூடாது.
  5. மக்கள் வாழும் குடியிருப்புப்பகுதிகளை அழித்து நிர்மூலம் செய்யலாகாது.
  6. உணவுக்காகத் தவிர எதிரிகளின் விலங்கினங்களை கொல்லக்கூடாது.
  7. பேரீச்ச மரங்களை வெட்டி எரிக்கக்கூடாது
  8. கொள்ளைப் பொருள்களில் மோசடி செய்யக்கூடாது.
  9. யுத்தத்தில் கோழைத்தனம் கூடாது.

10.படையெடுத்துச்செல்லும் வழிகளில் துறவற வாழ்வில் இருப்பவர்களைத் தொந்தரவு செய்யக்கூடாது

எனவே, இந்த தேள்களைப் போன்ற வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு என்பது முகமது நபியின் வழித்தோன்றலாக வந்த அரபு இஸ்லாமிய படைவீரர்கள் என்பது நமக்குத் தெளிவாகிறது.

ஐந்துமாத வேதனை

இந்த வசனங்களில் சொல்லப்பட்டுள்ள தேள்களின் வேதனை என்பது சரீரப்பிரகாரமான வேதனை அல்ல; ஆவிக்குரிய வேதனை. கிறிஸ்துவைப் பற்றும் அன்பையும், இரட்சிப்பையும் ஏற்றுக்கொள்ளாமல் விக்கிரக ஆராதனை சபைகளைப் பின்பற்றிய ரோம சாம்ராஜ்ஜியத்தின் ஜனங்களுக்கு, மார்க்க ரீதியான தொந்தரவுகளைக் கொடுக்கும்படி இந்த அரேபியர்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. இதன் நிறைவேறுதலாக, அரேபியர்களால் கைப்பற்றப்பட்ட ரோம சாம்ராஜ்ஜியத்தின் பகுதிகளில் வாழ்ந்த முஸ்லிம்கள் அல்லாத ஜனங்கள் இரண்டாந்தர குடிமக்களாக நடத்தப்பட்டனர். இப்படி ஒடுக்கப்பட்ட கத்தோலிக்க கிறிஸ்தவர்களும், யூதர்களும் ‘திம்மிகள்’ (Dhimmi) என்று அழைக்கப்பட்டது மட்டுமன்றி, அவர்களிடமிருந்து அதிக வரிவசூல் செய்யப்பட்டது; மதவழிபாட்டு உரிமைகள் தவிர மற்ற பல சமூக உரிமைகள் மறுக்கப்பட்டது.

ஆனால் இதேவேளையில் இவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அளவிற்கு கொடுமைப்படுத்தப்படவில்லை என்றும் வரலாறு தெளிவாகக் கூறுகிறது. இந்த தேள்களைப் போன்ற சாத்தானின் மார்க்கரீதியான பாகுபாட்டினால் இவர்கள் வேதனை அடைந்த காலம் 150 வருடங்களாகும். (5 மாதங்கள்=150 நாட்கள்=150 தீர்க்கதரிசன வருடங்கள்). இன்றைக்குக் கூட இனத்தின் பெயராலோ, ஜாதியின் பெயராலோ, மதத்தின் பெயராலோ ஒடுக்கப்பட்ட சில சமுதாயத்தினரை நீங்கள் கேட்டுப்பாருங்கள். ‘நாங்கள் வாழவும் முடியாமல், சாகவும் முடியாமல் தவிக்கிறோம்’ என்று சொல்வார்கள். இதையேதான் அப்போது ஒடுக்கப்பட்ட கத்தோலிக்க கிறிஸ்தவர்களும், யூதர்களும் சொல்லியிருப்பார்கள் என்று யோவான் காண்கிறார்.

‘‘அந்நாட்களில் மனுஷர்கள் சாவைத்தேடியும் அதைக் காணாதிருப்பார்கள், சாகவேண்டுமென்று ஆசைப்படுவார்கள், சாவோ அவர்களுக்கு விலகி ஓடிப்போம்.’’ (வெளி 9:6)

இதே போலவே ஒரு மனநிலையில் தான், யூதா ராஜ்ஜியத்திலிருந்து பாபிலோனுக்கு சிறைசென்றவர்களும், தப்பிச்சென்று எகிப்தில் அடைக்கலம் பெற்ற மீதி யூதர்களும், இருப்பார்கள் என்று கர்த்தர் எரேமியாவுக்கு முன்னறிவித்தார்.

‘‘அவர்கள் நேசித்ததும், சேவித்ததும், பின்பற்றினதும், நாடினதும், பணிந்துகொண்டதுமாயிருந்த சூரியனுக்கும், சந்திரனுக்கும், வானத்தின் சர்வசேனைக்கும் முன்பாக அவைகளைப் (எலும்புகளை) பரப்பிவைப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் வாரி அடக்கம்பண்ணப்படாமல் பூமியின்மேல் எருவாகும். இந்தத் துஷ்ட வம்சத்தில் மீதியாயிருந்து, என்னால் எல்லா இடங்களிலும் துரத்திவிடப்பட்டு மீந்திருக்கிற யாவருக்கும், ஜீவனைப்பார்க்கிலும் மரணமே விருப்பமாயிருக்குமென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.’’ (எரேமியா 8:2,3)

பாகம் 3: வெட்டுக்கிளிகளைப் பற்றிய வர்ணனை

சில வருடங்களுக்கு முன்பு பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் படையெடுத்து வந்து தானியங்களை அழித்த காட்சிகளைப் போட்டுக்காட்டி, இது தான் கடைசி காலம்; ஐந்தாம் எக்காளத்தின் காலம் என்றெல்லாம் சிலர் சமூகவலைதளங்களில் பதிவிட்டிருந்தனர். சிலர், இந்த வெட்டுக்கிளிகள் என்பது கடைசி ஏழு வருடங்களில் வரப்போகும் அந்திகிறிஸ்துவின் ரோபோக்கள் கூட்டம்; அவைகளின் வால்களில் உள்ள ஆயுதத்தால் முத்திரை பெற்ற ஜனங்களைத் தாக்கிக் கொடுமைப்படுத்தும் என்றும் ஹாரிபாட்டர், டிரான்ஸ்பார்மர் கதைகளுக்கு இணையான விளக்கங்களைக் கொடுத்துவருகின்றனர். இவை நேரடி அர்த்தம் கொண்டவைகள் அல்ல என்று புரிந்துகொள்வதற்கு தான் அடுத்த சில வசனங்களை (வெளி 9:7-10) இயேசு யோவானுக்கு வெளிப்படுத்தியுள்ளார்.

  1. அந்த வெட்டுக்கிளிகளின் உருவம் யுத்தத்திற்கு ஆயத்தம்பண்ணப்பட்ட குதிரைகளுக்கு ஒப்பாயிருந்தது;
  2. அவைகளுடைய தலைகளின்மேல் பொன்மயமான கிரீடம் போன்றவைகளிருந்தன;
  3. அவைகளின் முகங்கள் மனுஷருடைய முகங்கள்போலிருந்தன.
  4. அவைகளுடைய கூந்தல் ஸ்திரீகளுடைய கூந்தல்போலிருந்தது; அவைகளின் பற்கள் சிங்கங்களின் பற்கள் போலிருந்தன.
  5. இருப்புக் கவசங்களைப்போல மார்க்கவசங்கள் அவைகளுக்கு இருந்தன;
  6. அவைகளுடைய சிறகுகளின் இரைச்சல் யுத்தத்திற்கு ஓடுகிற அநேகங் குதிரைகள் பூண்ட இரதங்களின் இரைச்சலுக்கு ஒப்பாயிருந்தன.

படம் 58: தேள்களுக்கு ஒப்பான வெட்டுக்கிளிகளும், போர்வீரனும்

இவை எல்லாம் குதிரைகளின் மீது அமர்ந்து, கேடகங்களைத் தாங்கி, பொன்நிற தலைக்கவசங்களை அணிந்து, நீளமான கூந்தலோடும், யுத்த இரைச்சலோடு வரும் அரேபிய படைவீரர்களைக் குறிக்கும் வார்த்தைகளாகும். உலகிலேயே குதிரைப்படை யுத்தங்களில் சிறந்தவர்கள் அரேபியர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. இந்த சங்கேத வார்த்தைகளுக்கு விளக்கங்களை யோவேல் ஏற்கனவே சொல்லி வைத்துள்ளார். இஸ்ரவேலுக்கு விரோதமாக அசீரியர்களும் (2 முறை), பாபிலோனியர்களும் (3 முறை) அடுத்தடுத்து படையெடுத்து வந்து, ஒருமுறை விட்டுச்சென்றதை மறுமுறை அழித்துப்போடுவார்கள் என்று முன்னமே எச்சரித்த யோவேலின் தீர்க்கதரிசன வார்த்தைகளை கவனியுங்கள்.

‘‘பச்சைப்புழு விட்டதை வெட்டுக்கிளி தின்றது; வெட்டுக்கிளி விட்டதைப் பச்சைக்கிளி தின்றது; பச்சைக்கிளி விட்டதை முசுக்கட்டைப்பூச்சி தின்றது. எண்ணிமுடியாத ஒரு பலத்த ஜாதி உன் தேசத்தின்மேல் வருகிறது; அதின் பற்கள் சிங்கத்தின் பற்கள்; துஷ்ட சிங்கத்தின் கடைவாய்ப்பற்கள் அதற்கு உண்டு.’’ (யோவேல் 1:4,6)

ஐந்தாம் எக்காளத்தின் போது அதிக சம்பவங்கள், அதிக காலக்கட்டத்தில் நடப்பதால் அதை எளிதில் புரிந்துகொள்ள மூன்று பகுதிகளாகப் பிரித்து விளக்கியுள்ளேன்.

  • முதல்பாகம் – முகமது நபியால் பழைய ஏற்பாட்டைத் திருடியும், புதிய ஏற்பாட்டில் இயேசுவின் இடத்தில் தன்னை வைத்தும் உருவாக்கப்பட்ட இஸ்லாம் மதத்தின் தோற்றம்.
  • இரண்டாம் பாகம் – முகமது நபியால் ஆரம்பித்துவைக்கப்பட்ட யுத்தங்களைத் தொடர்ந்து நடத்தி வந்த அரேபிய முஸ்லிம் படைகளைப் பற்றியும், அவர்கள் கிழக்கு ரோம சாம்ராஜ்ஜியத்தை வீழ்த்த ஆரம்பித்த சம்பவங்கள்
  • மூன்றாம்பாகம் – அரேபிய வீரர்கள் எப்படி இருப்பார்கள் என்ற வர்ணனை

ஐந்தாம் எக்காளத்தின் வில்லன்

ஐந்தாம் எக்காளத்தின் காலத்தில் ரோம குடிகள் மீது மார்க்க ரீதியான உபத்திரவங்களை கர்த்தர் அனுமதித்தார். இதில் முகமது நபி ஒரு ஆயுதமே ஒழிய, அவருக்குப் பின்னால் இருந்து இயக்கின வில்லன் யார் என்று அடுத்த வசனம் சொல்கின்றது.

‘‘அவைகளுக்கு ஒரு ராஜன் உண்டு, அவன் பாதாளத்தின் தூதன்; எபிரெயு பாஷையிலே அபெத்தோன் என்றும், கிரேக்கு பாஷையிலே அப்பொல்லியோன் என்றும் அவனுக்குப் பெயர்’’ (வெளி 9:11)

இந்த வெட்டுக்கிளிகளுக்கு ஒரு ராஜன் உண்டு என்று சொல்லப்பட்டிருக்கிறது. தேனீக்கள் கூட்டத்திற்கு ஒரு ராணி உண்டு என்பது நமக்குத் தெரியும். அதுபோலவே வெட்டுக்கிளிகள், ஒரு ராஜாவின் தலைமையில் படையெடுத்து வந்து பயிர்களை அழிக்கும் என்று சிலர் நம்புகின்றனர். ஆனால் நம் வேதம் என்ன சொல்கிறது?

‘‘பூமியில்  சிறியவைகளாயிருந்தும்,  மகா  ஞானமுள்ளவைகள்  நான்குண்டு……அவையாவன………..ராஜா இல்லாதிருந்தும், பவுஞ்சு பவுஞ்சாய்ப் புறப்படுகிற வெட்டுக்கிளிகளும்,” (நீதிமொழிகள் 30:24-27)

அப்படியானால், ராஜாவின் தலைமையில் புறப்பட்டு வரும் வெட்டுக்கிளிகள் என்பது நிஜவெட்டுக்கிளிகளை அல்ல; அரேபியர்களின் படையெடுப்பையே குறிக்கும்.

பாதாளத்தின் தூதன்

இந்த எக்காளத்தின் சம்பவங்களைத் தலைமை தாங்கி நடத்தும் தலைவன் அல்லது ராஜா, பாதாளத்தின் தூதன் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதை முதல் சில வசனங்களிலே, ‘பாதாளத்தின் திறவுகோலைக்கொண்டு திறந்த நட்சத்திரம்’ என்று பார்த்தோம். அதே நபரை தான் இங்கு ‘பாதாளத்தின் தூதன்’ (Angel from bottomless pit) என்று கூறப்பட்டுள்ளது. முதலில் அந்த நட்சத்திரம் முகமது நபி என்று பார்த்தோம். இங்கு இந்த தூதன் என்பவன் சாத்தானைக் குறிக்கும். எனவே சாத்தான் தான் இதன் பின்னால் இருந்து இயக்குகிறான் என்பது உறுதியாகிறது. அதனால் தான் பிறருக்காக ஜீவனைக் கொடுத்து பரலோக ராஜ்ஜியத்தை ஸ்தாபித்த இயேசுவின் போதனைகளுக்கு எதிரான போதனையாக, வன்முறையாலும், தீவிரவாதத்தினாலும் கடவுளுக்குத் தொண்டு செய்தால் பரலோகத்தை அடையலாம் என்ற மனநிலையை அந்த மார்க்கத்தாருக்கு சாத்தான் விதைத்துள்ளான். இதை நாம் தினசரி கண்கூடாகவே கண்டு வருகிறோம்.

‘‘அவர்கள் உங்களை ஜெபஆலயங்களுக்குப் புறம்பாக்குவார்கள்; மேலும் உங்களைக் கொலைசெய்கிறவன் தான் தேவனுக்குத் தொண்டுசெய்கிறவனென்று நினைக்குங் காலம் வரும். அவர்கள் பிதாவையும் என்னையும் அறியாதபடியினால் இவைகளை உங்களுக்குச் செய்வார்கள்.’’ (யோவான் 16:2,3)

அபெத்தோன் என்ற அப்பொல்லியோன்

நாம் ஏற்கனவே பார்த்த பாதாளக்குழி (Bottemless pit) என்ற வார்த்தை தான் ‘Abyss’ அல்லது நரகக்குழி என்றழைக்கப்படுகிறது. இந்த ‘Abaddon’ என்பவன் சாத்தானின் கூட்டத்தின் அதிகப்பட்ச தலைமையான ஏழாம் நிலையில் இருக்கும் தலைவன் என்று ‘சாத்தானின் வேதம்’ (Demonology) கூறுகிறது. இந்த எபிரேய வார்த்தை தான் ‘அப்பொல்லியோன்’ என்று கிரேக்க மொழியில் அழைக்கப்படுகிறது. இந்த Abyss ன் தலைவன் தான் பிசாசு என்ற வலுசர்ப்பம். பாதாளம் என்ற வார்த்தைக்கு வேதத்தில் பல அர்த்தங்கள் உண்டு. அதில் பாதாளத்தைக் குறிக்கும் இந்த குறிப்பிட்ட பதம் (Abyss) வெளிப்படுத்தல் தவிர வேதத்தின் பல பகுதிகளில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது.

  • பாதாளமும் அழிவும் கர்த்தரின் பார்வைக்குப் பிரத்தியட்சமாயிருக்கிறது. (நீதி 15:11)
  • யோனா’ஆழி என்னை சூழ்ந்தது’ என்று சொல்லியுள்ளார். (யோனா 2:5)
  • லேகியோன் பிசாசுகள், தங்களை பாதாளத்திற்குள் அனுப்பவேண்டாம் என்று இயேசுவை வேண்டிக்கொண்டன. (லூக்கா 8:31)
  • கிறிஸ்துவை பாதாளத்திலிருந்து ஏறிவரப்பண்ணுகிறவன் யார் என்று சொல்லாதே என்று பவுல் சொல்லுகிறார். (ரோமர் 10:7)

ஐந்தாம் எக்காளத்தின் காலக்கட்டம்

நாலாம் எக்காளம், மேற்கு ரோம சாம்ராஜ்ஜியம் வீழ்ச்சியடைந்த கி.பி 476 லிருந்து கத்தோலிக்க ரோம சாம்ராஜ்ஜியம் எழுச்சியடைந்த ஆறாம் நூற்றாண்டின் இறுதி வருடங்கள் வரை நீடித்தது என்று பார்த்தோம். அதனைத் தொடர்ந்து, கிழக்கு ரோம சாம்ராஜ்ஜியத்தை அழிக்க கர்த்தரால் அனுமதிக்கப்பட்டதே இந்த ஐந்தாம் எக்காளம் என்பதை அறிந்துள்ளோம். இது ஒரு குறிப்பிட்ட வருடத்தில் ஆரம்பித்து, குறிப்பிட்ட வருடத்தில் முடிவடைந்தது என்று சொல்வதை விட, இந்த நூற்றாண்டுகளில் நடந்த சம்பவம் என்று சொல்வதே சரியாக இருக்கும் என்று விசுவாசிக்கிறேன். ஏனென்றால் ஒரு புதிய மார்க்கத்தை ஒரே நாளில் உருவாக்கி, ஒரே வருடத்தில் கட்டமைக்க முடியாது. அதே போல் அரபு முஸ்லிம்கள் ரோம சாம்ராஜ்ஜியத்திற்குள் பல கட்டங்களாகத் தான் ஊடுருவினர். அவற்றில் ஒரு சில முக்கிய சம்பவங்களின் காலங்களைப் பார்ப்போம்.

  • முகமதுநபி பிறந்தது: கி.பி 570
  • இஸ்லாம்தோற்றுவிக்கப்பட்டது: கி.பி 610
  • அபுபக்கரின் ஆட்சி காலம்: கி.பி 632-634
  • ஜெருசலேமில் சாலமோன் ஆலய இடிபாட்டின் அருகே ‘Dome of the Rock’என்ற தங்கமுலாம் பூசப்பட்ட மசூதி கட்டப்பட்டது: கி.பி 692
  • போப்புகளுக்கென்று இத்தாலியில் அரசியல் நிலப்பரப்பு (Papal states) கொடுக்கப்பட்ட ஆண்டு : கி.பி 756
  • முகமதுநபியைப் பின்பற்றின கலிபாக்களின் பொற்காலம் : கி.பி 632 முதல் 11 ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை

இந்த எக்காளத்தின் காலம், வானத்தில் இருந்து விழுந்து, பாதாளத்தின் புகையை எழுப்பி, சூரியனை அந்தகாரமாக்கின நட்சத்திரமாகிய முகமது நபியின் காலமாகிய கி.பி 570 லிருந்து, அரபு இஸ்லாமியர்களின் வசமிருந்த அரபு பகுதிகள், மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் கிழக்கு ரோமப்பேரரசைக் கைப்பற்றிய, ஒட்டமான் ராஜ்ஜியம் எழுச்சியடைந்த 11 ஆம் நூற்றாண்டு வரையிலான காலக்கட்டமே ஆகும்.

முதலாம் ஆபத்து

இந்த காலத்தின் சம்பவங்கள், முதலாம் ஆபத்து என்று கூறப்பட்டுள்ளது. அதாவது ஒரு ‘ஐயோ’ முடிந்துவிட்டது; இன்னும் இரண்டு ஆபத்துக்கள் அல்லது ஐயோக்கள் வரவிருக்கிறது என்ற எச்சரிக்கையுடன் இந்த வசனங்கள் முடிவடைகிறது.

‘‘முதலாம் ஆபத்து கடந்துபோயிற்று; இவைகளுக்குப்பின்பு இன்னும் இரண்டு ஆபத்துகள், இதோ, வருகிறது.’’ (வெளி 9:12)

சிலுவைப் போர்கள்

ஐந்தாம் எக்காளத்தினால் கிழக்கு ரோம சாம்ராஜ்ஜியம் உபத்திரவங்களை அனுபவித்துக்கொண்டிருந்த காலக்கட்டத்தில், மேற்கு ரோம சாம்ராஜ்ஜியம், போப் ‘இரண்டாம் அர்பன்’ தலைமையில் இந்த அரபு-முஸ்லிம்களுக்கு எதிரான சிலுவைப்போர்களை (கி.பி 1094 முதல்) ஆரம்பித்தது. புனித நகரமாகிய எருசலேமையும், அங்கு புனித யாத்திரை செல்லும் ரோமக்குடிகளையும் அப்போதைக்கு பாலஸ்தீனத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த அரபு-இஸ்லாமிய படைகளிடமிருந்து பாதுகாத்து மீட்பதற்காகவே இந்தப் புனிதப்போர் என்று போப்புகள் பரப்புரை செய்தனர். இதில் ஒரு சில வெற்றிகளும், பெரும்பாலான தோல்விகளும் ஏற்பட்டது; ஏராளமான ஐரோப்பிய இளைஞர்கள் ‘கடவுளின் பெயரால்’ இரத்தம் சிந்தினர். ஆவிக்குரிய சர்வாயுதங்களைத் தரித்து, சாத்தானின் தந்திரங்களோடு யுத்தம் செய்யும்படி இயேசுவால் கற்பிக்கப்பட்ட சபை, போர் ஆயுதங்களைத் தரித்து சாத்தானின் தந்திரத்திற்கு பலியானது கொடுமை என்பது தான் ஏழு சிலுவைப்போர்கள் (கி.பி 1095 – கி.பி 1291) சொல்லும் செய்தி. இந்த ஆபத்துக்களிலாவது, ரோம ராஜ்ஜியம் இயேசுவை ஏற்றுக்கொண்டதா? வாருங்கள் விடை காண்போம்.

ஆறாம் எக்காளம்.

அரபு முஸ்லிம்களால் ஆவிக்குரிய வேதனைகளை அடைந்திருந்த கிழக்கு ரோம சாம்ராஜ்ஜியத்தின் மீது அடுத்த எக்காளத் தீர்ப்பு விதிக்கப்பட்டது

‘‘ஆறாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது அவனுக்கு முன்பாக இருந்த பொற்பீடத்தின் நான்கு கொம்புகளிலுமிருந்து ஒரு சத்தந்தோன்றி, எக்காளத்தைப் பிடித்திருந்த ஆறாம் தூதனை நோக்கி: ஐப்பிராத்தென்னும் பெரிய நதியண்டையிலே கட்டப்பட்டிருக்கிற நான்கு தூதர்களையும் அவிழ்த்துவிடு என்று சொல்லக்கேட்டேன்.’’ (வெளி 9:13,14)

ஐப்பிராத்து நதி

இந்த ஐப்பிராத்து நதி துருக்கியில் ஆரம்பித்து, சுமார் 2800 கிலோமீட்டர்கள் ஒடும் மேற்கு ஆசியாவிலேயே நீளமான நதியாகும். இந்த நதி, தேவனாகிய கர்த்தரால் உருவாக்கப்பட்ட நான்கு நதிகளில் ஒன்று என்பதால் வேதாகமத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

‘‘மூன்றாம் ஆற்றுக்கு இதெக்கேல் என்று பேர், அது அசீரியாவுக்குக் கிழக்கே ஓடும்; நாலாம் ஆற்றுக்கு ஐபிராத்து என்று பேர்.’’ (ஆதியாகமம் 2:14)

ஐப்பிராத்து நதியண்டையில் கட்டப்பட்டிருக்கிற நான்கு தூதர்களை அவிழ்த்துவிடுவது என்பது, துருக்கியிலிருந்து எழும்பும் வலிமையான (நான்கு) ராஜ்ஜியத்தை ஏவி விடுவது என்று பொருள்படும். இந்த நான்கு தூதர்களும் யுத்தத்தின் மேல் அதிகாரம் உள்ளவர்கள் என்பதை 1,44,000 பரிசுத்தவான்களைப் பற்றிய அத்தியாயத்தில் பார்க்க இருக்கிறோம். அங்கு சொல்லப்பட்ட நான்கு தூதர்களை, இந்த நான்கு தூதர்களுடன் ஒப்பிட்டுப்பார்ப்போம்.

அட்டவணை 24: வெளிப்படுத்தல் 7 மற்றும் 9 ஆம் அதிகார ஒப்பீடு

இந்த காலக்கட்டத்தில் தான் துருக்கியில் ‘ஒட்டமான் பேரரசு’ (Ottoman empire) தங்களைப் பெரும் ராஜ்ஜியமாக ஸ்தாபித்துக்கொண்டிருந்தார்கள். இவர்களைக் கொண்டுதான் கர்த்தர் கிழக்கு ரோம சாம்ராஜ்ஜியத்திற்கு அடுத்த அழிவை ஆயத்தப்படுத்தினார்.

அழிவிற்கான ஆயத்த காலம்

‘‘அப்பொழுது மனுஷரில் மூன்றிலொருபங்கைக் கொல்லும்படிக்கு ஒருமணிநேரத்திற்கும், ஒரு நாளுக்கும், ஒரு மாதத்திற்கும், ஒரு வருஷத்திற்கும் ஆயத்தமாக்கப்பட்டிருந்த அந்த நான்கு தூதர்களும் அவிழ்த்துவிடப்பட்டார்கள்.’’ (வெளி 9:15)

நாம் ஏற்கனவே கற்றுக்கொண்டபடி

ஒரு வருடம் + ஒரு மாதம் + ஒரு நாள் + ஒரு மணிநேரம் = 360+30+1வருடங்கள்+ 15 நாட்கள் = 391 தீர்க்கதரிசன வருடங்களும் 15 நாட்களுமாகும்

இந்த நான்கு தூதர்களும் (ஒட்டமான் ராஜ்ஜியம்) கிழக்கு ரோம சாம்ராஜ்ஜியத்தின் மூன்றில் ஒரு பங்கை அழிக்கும்படி 391 வருடங்கள் அவிழ்த்துவிடப்பட்டார்கள்.

391 வருடக் கணக்கு

ஒட்டமான் பேரரசு, துருக்கியின் ‘செல்ஜிக் வம்ச’ (Seljuks) ராஜாக்களால் 11 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மோகுல் வம்சம் (Timour’s moguls), செங்கிஸ்கானுடைய டார்டார் வம்சம் (Gengis Khans Tartars),துருக்கியை மையமாகக்கொண்ட துருக்கிய ஒட்டமான் வம்சம் (Ottoman Turks) ஆகியவை சேர்ந்துதான் ஒட்டமானியர்கள் என்றழைக்கப்படுகின்றனர். இந்த நான்கு வம்சத்தினரும் ஒன்றன்பின் ஒன்றாகப் படையெடுத்து கான்ஸ்டாண்டிநோபிளைத் தாக்கிக்கொண்டே இருந்தனர். இதனால் தான் ‘நான்கு தூதர்கள் கட்டவிழ்க்கப்பட்டார்கள்’ என்று சொல்லப்பட்டுள்ளது. கடைசியில் செல்ஜிக் ராஜாவின் கொள்ளுப்பேரனான ‘அல்ஃப் அர்ஸ்லன்’ (Alp Arslan) என்பவன் தான் இந்த ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தும் நோக்கில் அருகிலிருந்த கிழக்கு ரோம சாம்ராஜ்ஜியத்தின் தலைநகரான கான்ஸ்டாண்டிநோபிள் மேல் படையெடுக்க ஆரம்பித்தான். இவன் ராஜாவாகப் பதவியேற்ற கி.பி 1063 ஆம் ஆண்டுக்குப் பின், தனக்குப் போட்டியாக இருந்த தனது குடும்பநபர்களை ஒழித்துவிட்டு, செல்ஜிக் ராஜ்ஜியத்தின் பேரரசனாக தன்னை நிலைநிறுத்தி, ஆக்ஸஸ் நதி முதல் டைகிரிஸ் நதி வரையிலான பெர்சியாவை ஆளத்துவங்கினான். இவனது காலத்திலிருந்து தான் கிழக்கு ரோம சம்ராஜ்ஜியம் ஒட்டமான் ராஜ்ஜியத்தின் தொடர் தாக்குதலுக்கு உள்ளானதால், இந்த கி.பி 1063 ஆம் வருடமே இந்த எக்காளத்தின் தொடக்கப்புள்ளி ஆகும்.

கான்ஸ்டாண்டிநோபிளின் வீழ்ச்சி

அன்று ஆரம்பித்த தொடர் யுத்தங்களில் கிழக்கு ரோம சாம்ராஜ்ஜியம் பல உயிரிழப்புகளை சந்திக்க ஆரம்பித்தது. பதினோராம் கான்ஸ்டாண்டின் பேரரசனாக இருந்தபோது, அதன் மீது படையெடுத்த இரண்டாம் சுல்தான் முகமது (Sultan Mehmed-II) என்ற 21 வயதே நிரம்பிய ஒட்டமான் ராஜா, 53 நாட்கள் முற்றிகையின் இறுதியில் கான்ஸ்டாண்டிநோபிளை கி.பி 1453 ஆம் ஆண்டு மே மாதம் வீழ்த்தினான். நகரத்திற்கு உள்ளே நுழைந்த இவன் செய்த முதல் காரியம் என்ன தெரியுமா? போப்புகளுக்கு முதன்முதலில் பெரும் அதிகாரத்தைக் கொடுத்த ரோமப்பேரரசன் ஜஸ்டினியன் கி.பி 537 ல் கட்டிய ‘ஹாகியா சோஃபியா’ (Hagia Sophia) என்ற பிரமாண்டமான தேவாலயத்திற்குள் நுழைந்து, அதன் உள்ளே இருந்த சிலைகளை நொறுக்கிவிட்டு, இஸ்லாமிய மசூதியாக மாற்றினான். ‘இஸ்தான்புல்’ என்று மறுபெயரிடப்பட்ட கான்ஸ்டாண்டிநோபிள் இனறுவரை துருக்கியின் தலைநகராக இருந்துவருகிறது. அதன் முக்கிய வரலாற்று சின்னமே இந்த மசூதி தான்.

படம் 59: இஸ்தான்புலில் உள்ள ஹாகியா சோபியா மசூதி

இப்படியாக பல நூற்றாண்டுகள் சேர்த்துவைத்திருந்த சொத்துக்களையும், நினைவுச்சின்னங்களையும் ரோம சாம்ராஜ்ஜியம் இழக்க ஆரம்பித்தது. இந்த காலக்கட்டம் உலக வரலாற்றையே பிரித்த ஒரு நிகழ்வாக இன்றுவரை கருதப்படுகிறது. இந்த வருடத்தோடு மத்திய காலம் (Medieval age of history) முடிவடைகிறது.

சிதறிய ஐரோப்பிய குடிமக்கள்

மூன்றில் ஒரு பங்கு கொல்லப்பட்டது மக்கள் என்று நான் கருதவில்லை. மாறாக, மூன்றில் ஒருபங்கு ராஜ்ஜிய நிலப்பரப்பைக் கைப்பற்றியது தான் இப்படி கூறப்பட்டுள்ளது என்று விசுவாசிக்கிறேன். இப்படி ரோம சாம்ராஜ்ஜியம் முற்றிலும் வீழ்ச்சியடைந்ததால், கத்தோலிக்க கிறிஸ்தவ ராஜ்ஜியமாக இருந்த பகுதிகளில் இஸ்லாம் வேகமாகப் பரவியது. இப்படி ஐரோப்பா முஸ்லிம்களின் கைகளில் போய், ரோம சாம்ராஜ்ஜியம் தனது வல்லமையை இழந்ததால் தான், ஐரோப்பியர்கள் குடிபெயர நல்ல நிலப்பரப்பைத் தேடினார்கள்; இத்தாலியரான ‘கிறிஸ்டோபர் கொலம்பஸ்’ தனது பயணத்தை ஆரம்பித்தார். இதன் விளைவாக கி.பி 1492 ல் கண்டுபிடிக்கப்பட்டது தான் அமெரிக்கா. அதன் பின்பு அங்குள்ள ஆதிகுடிகளை அழித்துவிட்டு ஐரோப்பியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட கண்டம் தான் அமெரிக்கா.

391 வருடங்கள் மனுஷரில் மூன்றில் ஒரு பங்கை கொல்லும்படி கி.பி 1063ல் ஆயத்தமாக்கப்பட்ட ஒட்டமான் ராஜ்ஜியம், கி.பி 1453 ல் கிழக்கு ரோமப்பேரரசைக் கைப்பற்றியது. இந்த காலங்களுக்கு இடைப்பட்ட வருடங்களைக் கணக்கிட்டுப்பார்த்தால் மிகச்சரியாக 391 வருடங்கள் வரும். ஆம், ஐப்பிராத்து நதியின் வெள்ளத்தில் ரோம சாம்ராஜ்ஜியம் மூழ்கிற்று. கர்த்தரின் துல்லியமான தீர்க்கதரிசனத்திற்கு இதுவும் ஒரு சான்று.

இருபது கோடி இராணுவம்

இந்த 20 கோடி இராணுவ வீரர்கள் பங்குபெற்ற யுத்தம் இன்னும் நடக்கவில்லை; ஐரோப்பிய கூட்டமைப்பு மட்டுமல்லாது ரஷ்யா, சீனா போன்ற நாடுகளெல்லாம் அந்திகிறிஸ்துவின் படையில் சேர்ந்து இயேசுவிற்கு எதிராய் அர்மகெதோனில் யுத்தம் செய்யவருவார்கள் என்ற திரைக்கதை இன்றைக்கு பிரபலமான ஒன்று. பல திரைப்படங்களும் இந்தப் பெயரில் வெளிவந்துள்ளன. அதற்கு ஆதாரமாக சொல்லப்படும் வசனம் இதுதான்.

‘‘குதிரைச்சேனைகளாகிய இராணுவங்களின் தொகை இருபது கோடியாயிருந்தது; அவைகளின் தொகையைச் சொல்லக்கேட்டேன்.’’ (வெளி 9:16)

இத்தனை இரகசியங்களையும் சங்கேத மொழிகளில் கூறின இயேசு இதை மட்டும் எப்படி நேரடி அர்த்தத்தில் சொல்லியிருப்பார் என்று சிந்தித்துப் பாருங்கள். இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் கொடுக்கப்பட்ட அட்டவணையில் பார்த்தால் இந்த உண்மை புரியவரும். இங்கே யோவான் 20 கோடி வீரர்கள் திரண்டு நிற்பதைப் பார்க்கவில்லை. அவர் 1,44,000 பரிசுத்தவான்கள் மட்டும் முத்திரையிடப்பட்டார்கள் என்று எப்படி ‘சொல்லக்கேட்டாரோ’ அதுபோலவே இங்கும் ‘20 கோடி’ என்று சொல்லக்கேட்டார். வெளிப்படுத்தல் உட்பட புதிய ஏற்பாட்டுப் புத்தகங்கள் கிரேக்க மொழியில் எழுதப்பட்டது என்பதை மறந்துவிடக்கூடாது.

கிரேக்க மொழியில் பத்தாயிரம் என்பதற்கு Myriad வார்த்தையைக் குறிப்பிடுவார்கள். ஒரு சேனை செல்லும்போது Myriads of Myriads என்று குறிப்பிடப்படுவது வழக்கம்.

கடைசியாக கி.பி 1453 ல் கிழக்கு ரோம சாம்ராஜ்ஜியத்தை வீழ்த்திய ஒட்டமானிய படைகளில் செல்ஜக் மற்றும் துருக்கிய ஒட்டமானிய படைகள் இரண்டும் உண்டு. மேலும் இவர்களது ஒரு படை என்பது 10,000 வீரர்களைக் கொண்டது என்றும், அது one Myriad என்றும் அழைக்கப்படும் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

2 (Seljuk and turk Ottoman) Myriads of Myriads = 2×10,000×10,000 = 20,00,00,000 (20 கோடி)

குதிரைகளின் சாயல்

வாயிலிருந்து அக்கினியைக் கக்கும் டிராகன்கள், டைனோசர்கள் போன்றவற்றை கிராபிக்ஸ் காட்சிகளில் பார்த்திருப்போம். அதைப்போலவே இந்த ஒட்டமானியர் ஏறிவந்த குதிரைகளின் தோற்றங்களைப் பற்றி ஏராளமான காரியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

‘‘குதிரைகளுடைய தலைகள் சிங்கங்களின் தலைகளைப் போலிருந்தன; அவைகளுடைய வாய்களிலிருந்து அக்கினியும் புகையும் கந்தகமும் புறப்பட்டன. அவைகளுடைய வாய்களிலிருந்து புறப்பட்ட அக்கினி புகை கந்தகம் என்னும் இம்மூன்றினாலும் மனுஷரில் மூன்றிலொருபங்கு கொல்லப்பட்டார்கள். அந்தக் குதிரைகளின் வல்லமை அவைகளுடைய வாயிலேயும் வால்களிலேயும் இருக்கிறது; அவைகளுடைய வால்கள் பாம்புகளுக்கு ஒப்பானவைகளாயும், தலைகளுள்ளவைகளாயுமிருக்கிறது, அவைகளாலே சேதப்படுத்துகிறது.’’ (வெளி 9:17-19)

பீரங்கிகளின் யுத்தம் (War with cannon)

சீனர்கள் 12 ஆம் நூற்றாண்டிலேயே வெடிமருந்துகளை கண்டுபிடித்து உபயோகிக்க ஆரம்பித்தனர். ஆனால் உலகிலேயே முதன்முதலில் பிரமாண்ட பீரங்கிகளையும், வெடிமருந்துகளையும் பயன்படுத்தி யுத்தம் செய்தது ஒட்டமான் ராஜ்ஜியம் தான். கான்ஸ்டாண்டிநோபிளை பழைய முறைகளைப் பயன்படுத்தி வீழ்த்துவது ஒட்டமானியர்களுக்கு அவ்வளவு எளிதாக இல்லை. அப்பொழுதுதான் ஹங்கேரியை சேர்ந்த ‘ஓர்பன்’ என்ற பீரங்கி ஸ்பெசலிஸ்டை ஒட்டமானியர் அணுகினர். அவர் மூலமாக கான்ஸ்டாண்டிநோபிளின் மதில் சுவர்களுக்கு வெளியில் பிரமாண்டமான பீரங்கிகள் நிர்மாணிக்கப்பட்டன. இந்த தொடர் பீரங்கிகளின் தாக்குதலால் தான் நகரின் மதில் சுவர் இடிந்துவிழுந்தது; ஒட்டமானியர்களும் வெற்றிபெற்றார்கள். இந்த பீரங்கிகளின் பாகங்களை இன்றும் மியூசியங்களில் காணலாம். அதுமட்டுமல்லாமல் ஒட்டமானிய குதிரை வீரர்கள் ரைபிள் வகை துப்பாக்கிகளால் ஓடும் குதிரை மீது இருந்தபடியே சுடும் வகையில் பயிற்சி பெற்றிருந்தனர். அதுவரை பீரங்கியையே பார்த்திராத யோவானைப் போன்ற ஒருநபர் தரிசனத்தில் பீரங்கிகள் குண்டுமழை பொழிந்து அக்கினியையும், புகையையும் கக்கியதைப் பார்த்தால் எப்படி எழுதியிருப்பார்?

படம் 60: ஒட்டமானியர் காலத்து பீரங்கிகுழல்

  • குதிரைகள் – பீரங்கி வண்டிகள்
  • குதிரைகளின் தலைகள் சிங்கங்களின் தலைகளைப்போலிருந்தன –பீரங்கிகளின் பயமுறுத்தும் முன் வாய்ப்பகுதி
  • வாய்களிலிருந்து அக்கினியும் புகையும் கந்தகமும் புறப்பட்டன – பீரங்கியின் வாயிலிருந்து வெளிவரும் கரிமருந்து வெடிப்பதால் ஏற்படும் அக்கினி, புகை (fire and smoke and brimstone). Brimstone என்பது ஆதிகாலத்தில் எளிதில் தீ பிடிக்கும் கல் என அறியப்பட்டிருந்தது.
  • அவைகளுடைய வாய்களிலிருந்து புறப்பட்ட அக்கினி புகை கந்தகம் என்னும் இம்மூன்றினாலும் மனுஷரில் மூன்றிலொருபங்கு கொல்லப்பட்டார்கள் – இந்த பீரங்கி யுத்தத்தால் ஏராளமானோர் கொல்லப்பட்டதுமல்லாமல், ரோம சாம்ராஜ்ஜியத்தின் மூன்றில் ஒரு பங்கு நிலப்பரப்பு ஒட்டமானியர் வசம் சென்றது.
  • அந்தக் குதிரைகளின் வல்லமை அவைகளுடைய வாயிலேயும் வால்களிலேயும் இருக்கிறது – ஒரு பீரங்கியின் வல்லமை அதன் குழல்போன்ற முன்புறத்திலும், திரி இருக்கும் பின்பகுதியிலும் இருக்கும்.
  • அவைகளுடைய வால்கள் பாம்புகளுக்கு ஒப்பானவைகளாயும், தலைகளுள்ளவைகளாயுமிருக்கிறது, அவைகளாலே சேதப்படுத்துகிறது – பழைய காலத்து பீரங்கிகள் முழுவதும் மனிதனாலே இயக்கப்படும் ஒன்றாக இருந்தது. வெடிமருந்தை பீரங்கி குழலின் பின்புறம் (வால்) இருந்து தான் நிரப்புவார்கள்; பின் அதில் நீண்ட திரியை வைத்து தீக்கொளுத்துவார்கள்.

படம் 61: ஒட்டமானியர்களின் ராஜ்ஜியம்

குதிரைகளின் மேல் ஏறியிருந்தவர்கள்

‘‘குதிரைகளையும் அவைகளின்மேல் ஏறியிருந்தவர்களையும் நான் தரிசனத்தில் கண்டவிதமாவது; அவர்கள் அக்கினிநிறமும் நீலநிறமும் கந்தகநிறமுமான மார்க்கவசங்களையுடைய வர்களாயிருந்தார்கள்;’’ (வெளி 9:17)

குதிரைகள் மேல் ஏறியிருந்தவர்கள் என்பது பீரங்கிகள் மேல் ஏறி அதை இயக்குபவர்களைக் குறிக்கும் (Men riding on cannon). அந்த போர்வீரர்களின் உடைகளைப் பற்றிய ஆய்வுகள், அவர்கள் ஆரஞ்சு, நீலம் மற்றும் செவ்வந்தி நிறங்களிலான போர் உடைகளை அணிந்திருந்தார்கள் என்று குறிப்பிடுகின்றன.

நீண்ட எக்காள தொனி

ஆறாம் எக்காளமாகிய ஒட்டமான் ராஜ்ஜியத்தினால் ரோமப்பேரரசு ஆக்கிரமிக்கப்படும் காலம் 11 ஆம் நூற்றாண்டில் ஆரம்பித்தது என்று பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக கி.பி 1453 ல் கான்ஸ்டாண்டிநோபிள் வீழ்ந்தது. அதனைத் தொடர்ந்து இந்த ஒட்டமான் ராஜ்ஜியம் ஐரோப்பா மீது பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிவரை ஆதிக்கம் செலுத்திவந்தது. இந்த காலக்கட்டம், நெப்போலியனின் எழுச்சிவரை (கி.பி 1790கள்) நீடித்தது.

  • ஆறாம்எக்காளத்தின் காலம் = கி.பி 1063 முதல் கி.பி 1789 வரை

மனம்திரும்பாத ரோம சாம்ராஜ்ஜியம்

‘‘அப்படியிருந்தும், அந்த வாதைகளால் கொல்லப்படாத மற்ற மனுஷர்கள் பேய்களையும், பொன் வெள்ளி செம்பு கல் மரம் என்பவைகளால் செய்யப்பட்டவைகளையும், காணவும் கேட்கவும் நடக்கவுமாட்டாதவைகளாயுமிருக்கிற விக்கிரகங்களையும் வணங்காதபடிக்குத் தங்கள் கைகளின் கிரியைகளை விட்டு மனந்திரும்பவுமில்லை;’’ (வெளி 9:20)

பதினோராம் நூற்றாண்டு ஆரம்பித்த ஆறாம் எக்காளத்தின் நாட்களிலே நடந்த அழிவுகளால் மனம்திரும்பாமல், மீண்டும் சபைகளில் விக்கிரக வணக்கங்களைத் தொடர்ந்தனர். இந்தக்காலக்கட்டத்தில் ரோம சாம்ராஜ்ஜியம் முழுவதுமாக கத்தோலிக்க போப்புகளின் ஆதிக்கத்தில் தானே இருந்தது? அப்படியானால் அது எப்படி பேய்களையும், கைகளால் செய்யப்பட்ட விக்கிரகங்களையும் வணங்கியிருக்கமுடியும்? என்ற கேள்வி எழுகிறதா. இதற்கான பதிலைத் தான் இத்தனை அத்தியாயங்களில் படிப்படியாக சொல்லியுள்ளேன். கிறிஸ்தவத்தின் பெயரில் விக்கிரக வழிபாட்டை நடத்துவதற்கும், பேய்களை வணங்குவதற்கும் வித்தியாசமே இல்லை தானே?

மனம்திரும்பாத சபையின் செயல்கள்

‘‘தங்கள் கொலைபாதகங்களையும், தங்கள் சூனியங்களையும், தங்கள் வேசித்தனங்களையும், தங்கள் களவுகளையும் விட்டு மனந்திரும்பவுமில்லை.’’ (வெளி 9:21)

  1. கொலைபாதகம்

இந்த விசுவாச துரோகத்தைத் தட்டிக்கேட்டு, வேதவசனத்தின் வெளிச்சத்தில் நடக்கவேண்டும் என்று போதித்த, பின்பற்றிய உண்மை கிறிஸ்தவர்களை கத்தோலிக்க சாம்ராஜ்ஜியம் (தானியேலின் சின்னக்கொம்பு/யோவானின் முதலாம் மிருகம்) கொன்றுகுவித்து, 1260 வருடங்கள் பரிசுத்தவான்களை மேற்கொண்டதை ஏற்கனவே பார்த்துவிட்டோம். அந்த அக்கிரமங்கள் இந்த காலக்கட்டத்தில் ஏழாம் கிரகோரி மற்றும் மூன்றாம் இன்னொசெண்ட் என்ற போப்புகளின் காலக்கட்டமாகிய 11&12 ஆம் நூற்றாண்டுகளில் உச்சகட்டத்தில் இருந்தது. இந்தக் காலக்கட்டத்தில் சத்தியத்திற்கு சாட்சிகொடுத்தவர்களைக் கொன்று குவித்தனர். இதனால் தான், இந்த ஆறாம் எக்காளத்தின் வாதைகளில் கொல்லப்படாதவர்கள் மேலும் மேலும் பாவம் செய்து மனம்திரும்பவில்லை என்று யோவான் சொல்லுகிறார்.

  • எருசலேமின் புனிதத்தைக் காக்கவேண்டும் என்று ஜனங்களைத் தூண்டிவிட்டு கி.பி 1094 முதல் இருநூறு வருடங்கள் தொடர்ச்சியாக சிலுவைப்போர்கள் என்ற புனிதப்போர்களில் (Crusades) ஜனங்களை ஈடுபடுத்தியது. முதலில் இஸ்லாமியர்களுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட இந்த சிலுவைப்போர்கள், இடையில் கத்தோலிக்க சபைக்கு விரோதமானவர்கள் (Albigensian Crusades) என்று குற்றம்சாட்டப்பட்ட ஐரோப்பாவில் வாழும் கிறிஸ்தவ விசுவாசிகளுக்கு எதிராகவும் திருப்பப்பட்டது.
  • ’சிலுவைப்போர்களில் உயிரிழந்தால் நேரடியாகப் பரலோகம்’ என்ற போப் இரண்டாம் அர்பனின் பொய்யான வாக்குறுதியை நம்பி, இலட்சக்கணக்கான ஐரோப்பிய இளைஞர்கள் உயிர்தியாகம் செய்தனர். மாறாக போப்புகளின் செல்வாக்கும், செல்வமும் உச்சகட்டத்தை எட்டியது.
  • இந்தஐரோப்பிய சிலுவைப்போர்களின் விளைவுதான் வால்டென்சியன்ஸ் படுகொலைகள், அல்பிஜென்சியன் படுகொலைகள், கத்தாரி படுகொலைகள் – 12 மற்றும் 13 ஆம்நூற்றாண்டுகள்
  • சபைக்குவிரோதமானவர்களைக் களையெடுக்கும்போது, தவறுதலாகக் கத்தோலிக்க சபையினரும் பாதிக்கப்படுவதைக்கண்ட போப் மூன்றாம் இன்னொசெண்ட், குழுக்களாக அழிப்பதைவிட திருச்சபை விரோதிகள் என்று காட்டிக்கொடுக்கப்படுபவர்களை அழிக்க முடிவெடுத்தார். இதன் விளைவு தான் கத்தோலிக்க விசாரணைப் படுகொலைகள் – 15 மற்றும் 16 ஆம் நூற்றாண்டுகள்
  • ஜான்கால்வின் என்ற பரிசுத்தவானைப் பின்பற்றிய பெருங்கூட்டம் படுகொலை செய்யப்பட்ட புனித பர்திலோமேயு தினப் படுகொலை (Bartholomew’s day massacre)- கி.பி 1572
  • இந்தகாலக்கட்டங்களில் விக்கிரகங்களால் அலங்கரிக்கப்பட்ட ஏராளமான தேவாலயங்கள், இன்றைய மதிப்பிற்கு பலநூறுகோடி மதிக்கத்தக்க அளவிற்குக் கட்டப்பட்டன. அதில் ஒன்று தான் வாடிகனில் இருக்கும் புனித பேதுரு தேவாலயம் (Peter’s Basilica)
  1. சூனியங்கள் (Sorceries)

இன்று புறமதத்தினரின் சாமியார்கள் செய்யும் அற்புதங்கள், இயற்கைக்கு அப்பாற்பட்ட செயல்களை மட்டும் நாம் மந்திரம், தந்திரம், ஏமாற்றுவேலை, சூனியவித்தைகள் என்று சொல்லிவருகிறோம். ஆனால் இந்த ஆறாம் எக்காளத்தின் காலத்தில் ரோமின் மீது ஊற்றப்பட்ட வாதைகளினால் மனம்திரும்பாத கத்தோலிக்க சபையானது, தனது சபை மக்களை மேலும் வஞ்சித்து தன்னுடன் வைத்துக்கொள்ளும்படி, சாத்தானின் தந்திரங்களைக் கையாள ஆரம்பித்தது என்பது நமக்கு மிகுந்த அதிர்ச்சியளிக்கும் விஷயமாகும். இதற்குப் பின்னணியில் இருந்ததும் சாத்தான் தான் என்பது நமக்கு நன்றாகத் தெரிந்த ஒன்றுதான்.

இரத்தக்கண்ணீர்

மரியாள் மற்றும் இயேசுவின் சிலைகளிருந்து கண்ணீர், இரத்தம் வடிவது (Weeping Mary and Jesus) போன்ற ‘உண்மையான சம்பவங்களினால்’ மக்களை வஞ்சித்தது; இன்றும் வஞ்சித்து வருகிறது.

படம் 62: கண்ணீர் சிந்தும் மரியாளின் சிலை

எங்கள் அன்னையே (Our lady)

மரியாள் தனக்குக் காட்சி தந்தார், அந்த நேரத்தில் வியாதியிலிருந்து சுகம் தந்தார் என்று பரபரப்பை உண்டுபண்ணின சம்பவங்கள் விக்கிபீடியாவில் குவிந்து கிடக்கின்றன. இந்த மரியாள் காட்சிதரும் சம்பவங்களுக்கு ‘Marian Apparition’ என்று பெயர். அவைகளின் ஆரம்பகாலமும் இந்த ஆறாம் எக்காளத்தின் நாட்கள் தான். இப்படி மரியாளை தரிசித்து சுகம் பெற்றவர்கள் சொல்வது உண்மையா என்று ஆராய்ந்து, அதை அங்கீகரிக்க கத்தோலிக்க சபையில் தனி மேலிட குழுவே உள்ளது. தரிசனம் கண்ட சில நபர்கள் புனிதர்களாக அங்கீகரிக்கப்பட்டதும் உண்டு; அப்படிப்பட்ட புனிதர்களும் தரிசனத்தில் வந்து சுகம் கொடுத்ததாக நம்பி, அவர்களுக்கு சிலைகளும், அந்த இடங்களில் அவர்களின் பெயரைக் கொண்டு திருத்தலங்களும் கட்டப்பட்டன. இது இன்றுவரை நடந்துகொண்டிருக்கும் ஒரு சாத்தானின் வஞ்சிக்கும் செயலாகும். தரிசனம் காணும் நபர் அல்லது இடத்தின் பெயரால் மரியாளை அழைக்கும் பழக்கமும் இருக்கிறது. அதற்கு சில உதாரணங்கள் தான் ‘Our Lady of Lourdes, Our Lady of Fathima, Our Lady of china, etc’ இது மிகப்பெரிய பட்டியல், மேலும் தெரிந்துகொள்ள விக்கிபீடியாவைப் பாருங்கள். இதனை நம்பி கோடிக்கணக்கான கத்தோலிக்கர்கள் இந்த இடங்களுக்குப் புனித பிரயாணம் செல்வது, அங்குள்ள மரியாளுடைய சிலையை வணங்கினால் நன்மை கிடைக்கும் என்று நம்பி கிறிஸ்துவின் பிரமாணங்களை விட்டு விலகிச்செல்கின்றனர். நமது தமிழகத்தில் உள்ள ‘வேளாங்கன்னி மாதா’ திருத்தலமும் இதே வகையைச் சேர்ந்ததாகும். ஒரு நாளைக்கு மட்டும் எத்தனை ஆயிரங்கள் வஞ்சிக்கப்பட்டு நரக பாதையை நோக்கி செல்கிறார்கள் என்று நேரில் சென்று பார்த்தவர்களுக்குப் புரியும்.

படம் 63: வேளாங்கன்னி மாதா கோயில் மற்றும் சிலை

3.வேசித்தனங்கள்

சிலைவணக்கம் தான் ஆவிக்குரிய வேசித்தனம் என்று பரிசுத்த வேதம் பல இடங்களில் கூறுகிறது.

மரியாள் வணக்கம்

கத்தோலிக்க சபை இன்னும் இயேசுவின் தாயை ‘கன்னி மரியாள்’ என்றே அழைக்கிறது. கத்தோலிக்க திருச்சபை சட்டமான ‘கேட்டிகிசம்’ இவ்வாறு கூறுகிறது:

  • நாம்பரிசுத்த கன்னிகைக்கு மேலான வணக்கம் செலுத்துவதற்கான காரணங்கள் என்னவெனில் (1) கன்னிமரியாள் சர்வேசுரனுடைய (இயேசு) தாயார் (2) நமது இரட்சகர் சிலுவையில் உயிரை விடும்போது நமக்கு அவரைத் தாயாகக் கொடுத்தார் (3) அவள் பரலோகத்திற்கும், பூலோகத்திற்கும் ஆண்டவள், சிருஷ்டிகளுக்கெல்லாம் மேலான சிருஷ்டி.
  • அர்ச்சியசிஷ்டவர்களுக்கு (பரிசுத்தவான்களுக்கு) நாம் செய்யும் சங்கையானது வணக்கம் என்று சொல்லப்படும்; சர்வேசுரனுக்கு நாம் செலுத்துவது தேவ ஆராதனை. இது அவர் ஒருவருக்கு மாத்திரமே உரியது. தேவதாயார் (மரியாள்) மற்ற அர்ச்சியசிஷ்டவர்களை விட மகத்துவம் உடையவராக இருப்பதால் அவருக்கு விசேஷ வணக்கம் செலுத்துவதும் சரியே.
  • தேவமாதாவின் மீதான பக்தி முக்கியமாய் எதில் அடங்கியிருக்கிறது என்றால், பிள்ளைக்குரிய அன்புடன் அவளை நேசிப்பதிலும், பூரண நம்பிக்கையோடு அவளை நோக்கி வேண்டிக்கொள்வதிலும், அவளுடைய சகல புண்ணியங்களையும், விசேஷமாய் தாழ்ச்சியையும், பரிசுத்தத்தையும் கண்டு பாவிப்பதிலேயாம் என்று கேட்டிகிச புத்தகம் கூறுகிறது.
  • அவருக்கு இயேசுவைத் தவிர வேறு குழந்தைகள் பிறக்கவில்லை; அதாவது யோசேப்போடு குடும்பவாழ்வில் அவர் ஈடுபடவே இல்லை. எனவே அவர் ‘தெய்வத் தன்மையுள்ள தாய்’; அவர் தான் உலக சபைகளுக்கும் தாய் என்றும் கூறுகிறது. இதோ உங்கள் தாய் என்று இயேசு யோவானிடத்தில் கூறியதை ஆதாரமாக சொல்கிறார்கள்.
  • ஸ்திரீகளுக்குள் கிருபை பெற்றவள், பாக்கியவதி என்று தூதனாலும், எலிசபெத்தாலும் சொல்லப்பட்டதால் அவர் சகல கனத்திற்கும் வணக்கத்திற்கும் உரியவர் என்று போதிக்கிறது. (இதை அடிப்படையாகக் கொண்டு தான் ‘அருள் நிறைந்த மரியே வாழ்க, கர்த்தருடைய பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீயே…..’ என்ற மரியாளிடம் ஜெபிக்கும் ஜெபமும் உருவாக்கப்பட்டது.)

அவர்கள் இப்படி சொல்லியிருக்க அவர்கள் கையிலும் நம் கையிலும் இருக்கும் வேதம் வேறுவிதமாகவே போதிக்கிறது. அதிலும் குறிப்பாக இயேசுவின் பிறப்பு தான் கன்னிப்பிறப்பு என்றும் அது வரை தான் யோசேப்பும் மரியாளும் தாம்பத்திய வாழ்வில் ஈடுபடவில்லை என்று மத்தேயு மிகத்தெளிவாகக் கூறுகிறார். அப்படியானால் அடுத்தடுத்து அவர்களின் தாம்பத்திய வாழ்வு மூலமாகக் குழந்தைகள் பிறந்துள்ளது என்று தானே அர்த்தம். இந்த வார்த்தையைப் பேசினால் கத்தோலிக்க சகோதரர்களிடம் அடி கூட வாங்கிவிடுவோம். அந்தளவிற்கு அவர்கள் பொய்யான போதனைகளால் பயிற்சிவிக்கப்பட்டுள்ளார்கள்.

‘‘யோசேப்பு நித்திரை தெளிந்து எழுந்து, கர்த்தருடைய தூதன் தனக்குக் கட்டளையிட்டபடியே தன் மனைவியைச் சேர்த்துக்கொண்டு; அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் அவளை அறியாதிருந்து, அவருக்கு இயேசு என்று பேரிட்டான்.’’ (மத்தேயு 1:24,25)

‘‘இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா? யாக்கோபு யோசே சீமோன் யூதா என்பவர்கள் இவனுக்குச் சகோதரர் அல்லவா? இவன் சகோதரிகள் எல்லாரும் நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? இப்படியிருக்க, இதெல்லாம் இவனுக்கு எப்படி வந்தது? என்று சொல்லி, அவரைக் குறித்து இடறலடைந்தார்கள்.’’ (மத்தேயு 13;55-57)

இயேசுவோ அப்போஸ்தலர்களோ எந்த இடத்திலும் மரியாளை மனிதனுக்கு மேலானவர் என்றோ, தொழுதுகொள்ளவேண்டும் என்றோ சொல்லவில்லை. ஒரு சில வசனங்களைக் கண்மூடித்தனமாக வியாக்கியானம் செய்வது மட்டுமல்லாமல் ஒரு பெரும் கூட்டத்தையே அதை நம்பவைத்தது யாருடைய செயலாக இருக்கும்?

‘‘அவர் இவைகளைச் சொல்லுகையில், ஜனக்கூட்டத்திலிருந்த ஒரு ஸ்திரீ அவரை நோக்கி: உம்மைச் சுமந்த கர்ப்பமும் நீர் பாலுண்ட முலைகளும் பாக்கியமுள்ளவைகளென்று சத்தமிட்டுச் சொன்னாள். அதற்கு அவர்: (பாக்கியமுள்ளவை தான்) அப்படியானாலும், தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள் என்றார்.’’ (லூக்கா 11:27,28)

‘‘இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், வானராக்கினிக்குத் (Queen of heavenஇஸ்தார்/அஸ்தரோத்) தூபங்காட்டவும், அவளுக்குப் பானபலிகளை வார்க்கவும், நாங்கள் நேர்ந்துகொண்ட பொருத்தனைகளை எவ்விதத்திலும் செலுத்துவோமென்று, நீங்களும் உங்கள் ஸ்திரீகளும், உங்கள் வாயினாலே சொல்லி, உங்கள் கைகளினாலே நிறைவேற்றினீர்கள்; நீங்கள் உங்கள் பொருத்தனைகளை ஸ்திரப்படுத்தினது மெய்யே, அவைகளைச் செலுத்தினதும் மெய்யே.’’ (எரேமியா 44:25)

‘‘இதனால் நம்முடைய தொழில் அற்றுப்போகும்படியான அபாயம் நேரிட்டிருக்கிறதுமல்லாமல், மகா தேவியாகிய தியானாளுடைய கோவில் எண்ணமற்றுப்போகிறதற்கும், ஆசியா முழுமையும் பூச்சக்கரமும் சேவிக்கிற அவளுடைய மகத்துவம் அழிந்துபோகிறதற்கும் ஏதுவாயிருக்கிறது என்றான். அவர்கள் இதைக் கேட்டு, கோபத்தால் நிறைந்து: எபேசியருடைய தியானாளே பெரியவள் என்று சத்தமிட்டார்கள்.’’ (அப்போஸ்தலர் 19:27.28)

பாபேலில் ஆரம்பித்து, வானராக்கினியாக இஸ்ரவேலுக்குள்ளும் நுழைந்து, தியானாளாக (Diana) அப்போதைய எபேசு பட்டணத்திலும் வழிபடப்பட்ட ‘பரலோகத்தின் ராணி’ (Queen of heaven) வணக்கம், மரியாள் வணக்கமாக ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியத்திற்குள் நுழைந்தது. இதை கத்தோலிக்கர்கள் ஆகஸ்ட் 22 ஆம் தேதிகளில், மரியாள் திரித்துவ தேவனால் பரலோகத்தின் ராணியாக முடிசூட்டப்பட்ட நாளாகக் கொண்டாடுகின்றனர். இது நம் பரிசுத்த வேதத்தில் எங்குமே கொடுக்கப்படவில்லை. ஆனால் தீர்க்கதரிசிகள் இதன் பின்னணியில் யார் இருக்கிறான் என்பதை மேலே கண்ட வசன ஆதாரங்கள் மூலம் நமக்கு சொல்லிவைத்திருக்கின்றனர்.

படம் 64 : மரியாள் பரலோக ராணியாக முடிசூட்டப்படுதலும், பாபிலோனிய வணக்கமும்

‘‘மரியாள் மரியாதைக்குரிய பரிசுத்த பெண் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் எனக்கு இல்லை’’. இயேசு உலகத்தில் வெளிப்படத் தெரிந்துகொள்ளப்பட்ட பெண் எவ்வளவு பரிசுத்தமுள்ளவராக இருந்திருப்பார் என்று நான் அடிக்கடி நினைவுகூறுவது உண்டு. ஆனால் கத்தோலிக்க சபையின் தலைவரான அந்திகிறிஸ்து பல வைராக்கியமான கிறிஸ்தவர்களை மரியாள் வணக்கத்தின் மூலம் நரகத்திற்குக் கொண்டு செல்கிறான் என்பதை நிச்சயம் மறுக்கமுடியாது.

4.களவுகள்

ஆத்துமாக்களை களவுசெய்வதற்கு, கிறிஸ்துவின் ஆவி இல்லாத ஒரு நபரையோ, சபையையோ பிசாசானவன் பயன்படுத்த முடியும். இந்த ஆறாம் எக்காளத்தின் காலத்தில் தான் போப்புகள் தங்கள் அரசியல் மற்றும் மத லாபத்திற்காக ஆத்துமாக்களை பலிகொடுக்க ஆரம்பித்தனர்.

பாவமன்னிப்பு சீட்டு

இயேசுகிறிஸ்துவின் இரத்தம் மட்டுமே சகல பாவங்களையும் மன்னிக்கமுடியும் என்று வேதம் மிகத்தெளிவாகக் கூறுகிறது. ஆனால் இந்த ஆறாம் எக்காளத்தின் காலத்தில் (13 ஆம் நூற்றாண்டு) ‘ஹேல்ஸ்சை சார்ந்த அலெக்சாண்டர்’ என்பவரால் ஒரு புதிய பாவமன்னிப்புக் கோட்பாடு தோற்றுவிக்கப்பட்டது. இதற்கு போப்புகளின் அதிகாரப்பூர்வ அனுமதி கி.பி 1476 ல் கிடைத்தது. இதன்படி ஒரு மனிதன் மனம்திரும்பி பாவத்தை அறிக்கையிட்டு, கர்த்தரிடம் மன்னிப்பைப் பெற்றாலும், இந்த உலகில் வாழும் நாட்களில் அவர் சில நடைமுறைகளைப் பின்பற்றவேண்டியது அவசியம். அதனை நிறைவேற்ற புனிதத்தலங்களுக்குப் பயணம் செல்லுவது, ஆலயங்களுக்கு நிதிகள் அளிப்பது மற்றும் ஏதேனும் புண்ணியகாரியங்கள் செய்வது போன்றவைகளில் ஏதாவது ஒன்றை (Temporal satisfaction) செய்தே ஆகவேண்டும் என்று போதிக்கப்பட்டது. இது ஏற்கனவே மரித்துப்போன உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் பொருந்தும்; அவர்களுக்காக நீங்கள் இதை நிறைவேற்றாவிட்டால், அவர்கள் ‘உத்தரிக்கும் ஸ்தலம்’ (Purgatory place) என்ற இடத்தில் வேதனைப்படுவார்கள்; அவர்களுக்குப் பதிலாக நீங்கள் இதை நிறைவேற்றலாம் என்றும் போதிக்கப்பட்டது. இதை நம்பி முத்திரையைப் பெற்ற ஏராளமான கத்தோலிக்கர்கள் இதற்கு எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் பயந்து அடிபணிந்தனர். பன்னிரெண்டாம் நூற்றாண்டிலிருந்து, எந்தவொரு மனிதனும் பெரும் தொகையை செலுத்தினால் பிஷப் பட்டத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற ஊழல் போப்புகளின் சாம்ராஜ்ஜியத்தில் பெருகியிருந்தது. இந்த சூழ்நிலையில் கி.பி 1514 ஆம் ஆண்டில் ‘ஆல்பர்ட்’ என்ற ஆர்ச் பிஷப் இரண்டிற்கு மேற்பட்ட பட்டங்களைப் பெற அப்போதைய போப் ‘பத்தாம் லியோவை’ நாடினார். அதே நேரத்தில் லியோவிற்கு ரோமில் (தற்போதைய வாடிகன்) பிரமாண்டமான புனித பேதுரு தேவாலயத்தைக் கட்ட ஏராளமான பணம் தேவைப்பட்டது. இதனால் இருவரும் ஒரு உடன்பாட்டிற்கு வந்தனர். இதில் ஆல்பெர்ட், ஆஸ்பெர்க்கில் உள்ள Fugger banking family என்ற பெரும்பணக்காரர்களிடம் ஏராளமான கடன் வாங்கிக்கொள்ளலாம் என்றும், மேலே சொன்ன பரிகாரங்களில் ஒன்றான பாவமன்னிப்புச் சீட்டை விற்று சபைமக்களிடம் வசூலித்த பணத்தில் பாதியை அந்த கடனைக் கட்டுவதற்கும், மீதி பாதியை லியோவின் கனவுத்திட்டமான தேவாலயம் கட்டுவதற்குக் கொடுக்கவேண்டும் என்றும் உடன்படிக்கை செய்தனர். இதனால் ஆல்பர்டிற்கு இந்த பாவமன்னிப்பு சீட்டை சபைகளில் விற்கும் அதிகாரம் போப் மூலமாகக் கொடுக்கப்பட்டது. ஆல்பர்ட் இந்த வேலைகளை ஐரோப்பா முழுவதும் நிறைவேற்ற ‘ஜோகன் டெட்செல்’     என்ற நபரிடம் ஒப்படைத்தார்.

குருமார்கள் சொல்வதே வேதவாக்காக இருந்த அந்தக்காலக்கட்டத்தில், அப்பாவி ஜனங்கள் இதை நம்பினர். அதுவரை பாவமன்னிப்பு அறிக்கை செய்துவந்தவர்கள் கூட ‘நாம் தான் பாவமன்னிப்பு சீட்டு வாங்கிவிட்டோமே, இனி எப்படியும் வாழலாம்’ என்று இன்னும் துன்மார்க்கமாய் வாழ இந்தத் திட்டம் வழிவகுத்தது. இன்னொரு சாரார், இறந்துபோன தங்கள் உயிருக்குயிரானவர்கள் உத்தரிக்கும் ஸ்தலத்தில் வேதனைப்படக்கூடாது என்று ஏராளமான பணத்தைக் கொடுத்து வாங்கினர்.

மனதின் ஆழத்திலிருந்து ஒரு வேண்டுகோள்

ஒரு வேளை இந்த புத்தகத்தை வாசித்துக்கொண்டிருக்கும் நீங்கள் கத்தோலிக்க சபையை சார்ந்தவராகக் கூட இருக்கலாம். நான் இந்தப் புத்தகத்தை எழுதுவதன் நோக்கமே கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் உட்பட எல்லோரும், சத்தியத்தையும், அந்திகிறிஸ்துவின் வஞ்சனைகளையும் அறிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக மட்டுமே. தனிப்பட்ட முறையில் எந்த சபையின் மீதும் எனக்கு காழ்ப்புணர்ச்சி கிடையாது. நானும் கத்தோலிக்க பள்ளியில் தான் படித்தேன். ரோமன் கத்தோலிக்க சபையிலிருந்து இரட்சிக்கப்பட்ட பெண்ணைத் தான் திருமணம் செய்துள்ளேன்; எனது உறவினர்களில் மூன்றில் ஒரு பங்கு கத்தோலிக்க சபையை சார்ந்தவர்களே. கத்தோலிக்க திருச்சபையின் சமுதாயப்பணிகள், கல்வித்தொண்டு, மருத்துவசேவைகள் என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. அதனால் இந்தப்புத்தகத்தை எழுதும்போது கூட, ஒருவேளை நாம் ஒரு குறிப்பிட்ட கொள்கையுடையவர்களைப் புண்படுத்துகிறோமா? என்ற குற்ற உணர்ச்சிக்கு பலமுறை ஆளாகியிருக்கிறேன். ஆனால் இயேசுகிறிஸ்து சொல்லிவைத்துள்ள இரகசியங்களை ஆராயும்போது, போப்புகளின் ராஜ்ஜியம் தான் அந்திகிறிஸ்துவின் ராஜ்ஜியம் என்பதை ஆவியானவர் உணர்த்தியதால் தான் இதை எழுதுகிறேன். ஏனெனில், இயேசுகிறிஸ்து கடைசிகாலங்களைப் பற்றி தனது சீடர்களுக்குச் சொல்லும்போது சொன்ன முதல் வார்த்தையே ‘ஒருவனும் உங்களை வஞ்சியாதபடி எச்சரிக்கையாயிருங்கள்’ என்பது தான். சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துதான் வருவான் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

இதை வாசிக்கும் நீங்கள் உண்மையில் இயேசுவை விசுவாசித்து அவருக்காக வைராக்கியமாக வாழ நினைக்கும் கத்தோலிக்கராக இருந்தால், உங்கள் ஆவிக்குரிய கண்கள் நிச்சயம் திறக்கப்பட்டு கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற ஆரம்பித்து விடுவீர்கள். ஒருவேளை கத்தோலிக்க சபையின் மீதோ, மனிதர்களால் உருவாக்கப்பட்ட திருச்சபையின் சட்டதிட்டங்கள் மீதோ அல்லது போப் உட்பட பாதிரியார்கள் மீதோ உங்கள் விசுவாசம் இருக்குமானால் உங்கள் ஆத்துமாக்களுக்கு நீங்களே பொறுப்பு. உங்களுக்காகவும் ஜெபித்துக் கொண்டிருக்கிறோம். இந்த எச்சரிப்பு கத்தோலிக்க சபைகளுக்கு மட்டுமல்ல; பாராம்பரியங்களைப் பின்பற்றும் சபைகளுக்கும், ஆவிக்குரிய சபைகளென்று பெயர்பெற்றிருந்தும் வசனத்திற்குப் புறம்பாக நடக்கும் சபைகளுக்கும் பொருந்தும்.

பவுலின் எச்சரிக்கை

இதையே தான் அந்திகிறிஸ்துவைப் பற்றி பவுல் சொல்லிய அதிகாரத்தில் சொல்லி எச்சரிக்கிறார்.

‘‘எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது.’’(2 தெசலோனிக்கேயர் 2:3)

இயேசுவைப் பற்றும் விசுவாசிகளை/சபையை வழிவிலகச் செய்யும் துரோகச்செயல், கேட்டின் மகனாகிய அந்திகிறிஸ்துவால் நடத்தி முடியும் வரை இயேசுவின் வருகை இருக்காது என்று சொல்லிவிட்டு, அதற்கு முன் நடக்க வேண்டிய சில வரலாற்று சம்பவங்களையும் தீர்க்கதரிசனமாக சொல்லியிருக்கிறார்.

‘‘அவன் தன் காலத்திலே வெளிப்படும்படிக்கு, இப்பொழுது அவனைத் தடைசெய்கிறது இன்னதென்றும் அறிந்திருக்கிறீர்கள். அக்கிரமத்தின் இரகசியம் இப்பொழுதே கிரியைசெய்கிறது; ஆனாலும் தடைசெய்கிறவன் நடுவிலிருந்து நீக்கப்படுமுன்னே அது வெளிப்படாது.’’ (2 தெசலோனிக்கேயர் 2:6,7)

இப்பொழுது (முதல் நூற்றாண்டில்) ஆட்சியில் இருக்கும் சீசர்களின் ரோம சாம்ராஜ்ஜியம் (தடை செய்கிறவன்) ராஜ்ஜிய பாரத்திலிருந்து நீக்கப்படும் வரை அவன் (அந்திகிறிஸ்துவின் கத்தோலிக்க ரோம சாம்ராஜ்ஜியம்) வெளிப்பட முடியாது’ என்பதுதான் இதன் அர்த்தம். இதன்படி ஒருங்கிணைந்த ரோம சாம்ராஜ்ஜியத்தின் மேற்கு ராஜ்ஜியம் கி.பி 476 ல் வீழ்ந்து முடிந்த பின்பு தான் (சாவுக்கேதுவான காயம்) போப்புகளின் தலைமை ஓங்க ஆரம்பித்து, அவர்கள் 1260 வருடங்கள் உலகை ஆண்டார்கள். நிறைய பேர் பரிசுத்த ஆவியானவர் தான் இதில் சொல்லப்பட்டுள்ள ‘தடை செய்கிறவன்’ என்று போதித்து வருகின்றனர். அந்திகிறிஸ்துவின் கடைசி 7 வருட ஆட்சி ஆரம்பிப்பதற்கு சற்று முன் பரிசுத்த ஆவியானவர் பூமியைவிட்டு எடுத்துக்கொள்ளப்படுவார் என்பதே அவர்களது வாதம். பிரியமானவர்களே, இந்த இரகசியம் ராஜ்ஜியங்களைப் பற்றியும், மகா பாபிலோனாகிய ரோமைப் பற்றியதாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கொடிய வஞ்சகத்தின் காலம்

இதைத் தொடர்ந்து இந்த அக்கிரமக்காரனான அந்திகிறிஸ்துவின் ராஜ்ஜியத்தின் வருகை அல்லது ஆளுகை எப்படியிருக்கும் என்றும் பவுல் சொல்லியிருக்கிறார்.

‘‘அந்த அக்கிரமக்காரனுடைய வருகை (1)சாத்தானுடைய செயலின்படி சகல வல்லமையோடும் (2)அடையாளங்களோடும் (3)பொய்யான அற்புதங்களோடும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் (4)சகலவித வஞ்சகத்தோடும் இருக்கும்.’’ (2 தெசலோனிக்கேயர் 2:9,10)

மேலும் அவன் அல்லது அந்த ராஜ்ஜியம் ஏற்கனவே அழிவின் பாதையில் செல்பவர்களை எல்லா வகையான ‘ஆவிக்குரிய’ ஏமாற்று வித்தைகளினாலும் வஞ்சித்து அவர்களை முட்டாள்களாக்குவான் என்றும் பவுல் சொல்லுகிறார்.

‘‘இரட்சிக்கப்படத்தக்கதாய்ச் சத்தியத்தின்மேலுள்ள அன்பை அவர்கள் அங்கிகரியாமற்போனபடியால் அப்படி நடக்கும். ஆகையால் சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு, அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்.’’ (2 தெசலோனிக்கேயர் 2:9-12)

ஏனென்றால் அவர்கள் சத்தியபரனாகிய இயேசுவை நேசிக்காமல், இரட்சிப்புக்கு அதிபதியாம் அவரைத் தங்கள் இருதயத்தை விட்டு விலக்கினபடியால் இந்த கொடிய வஞ்சகத்தின் ஆவிக்கு தேவன் அவர்களை ஒப்புக்கொடுத்துவிடுவார் என்பதே இதன் விளக்கம் ஆகும். இதனால் தான் இன்று உலகத்தில் மூன்றில் ஒரு பங்கு ஜனங்கள் அந்திகிறிஸ்துவைப் பின்பற்ற ஆரம்பித்து இன்றுவரை பின்பற்றி வருகின்றனர். சத்தியத்தை விசுவாசியாததினால் நாம் அவர்களிடம் என்ன விளக்கம் கொடுத்தாலும், தாங்களும் இயேசுவைத் தான் ஆராதிக்கிறோம், மரியாளையும், தூதர்களையும் வணங்குகிறோம் என்று சொல்லி தான் வாக்குவாதம் செய்வார்கள். இதனை வாசித்து, அவர்களும் சத்தியத்தை விசுவாசிக்க ஜெபியுங்கள்.

ஏழாம் எக்காளம்

இவ்வளவு எக்காள எச்சரிக்கைகளுக்குப் பின்பும் மனம்திரும்பாத ரோம சாம்ராஜ்ஜியத்தை அழிக்க கர்த்தர் அடுத்த ‘ஐயோ எக்காளம்’ அல்லது ‘மூன்றாம் ஆபத்தை’ அனுப்பினார்.

‘‘இரண்டாம் ஆபத்து கடந்துபோயிற்று; இதோ, மூன்றாம் ஆபத்து சீக்கிரமாய் வருகிறது. ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின; அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம் பண்ணுவார் என்னும் கெம்பீர சத்தங்கள் வானத்தில் உண்டாயின.’’ (வெளி 11:14,15)

‘’ஏழாம் எக்காளம் ஊதியவுடன், உலகத்தின் ராஜ்ஜியங்கள் கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்ஜியங்களாயின என்று சத்தம் உண்டானது. ஏழாம் எக்காளம் ஊதப்பட்ட 18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து தான் முடிவுகாலம் ஆரம்பமானது என்று முன்பே பார்த்துவிட்டோம். அப்போது தான் ஒரு தேவரகசியம் நிறைவேறியது. ‘‘இனி காலம் செல்லாது; ஆனாலும் தேவன் தம்முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளுக்குச் சுவிசேஷமாய் அறிவித்தபடி, ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே அவன் எக்காளம் ஊதப்போகிறபோது தேவரகசியம் நிறைவேறும் என்று,’’ (வெளி 10:6)

தேவரகசியமும், முடிவுகாலமும்

இந்த தேவரகசியம் ‘ஏழாம் தூதன் எக்காளம்’ ஊதும்போது நிறைவேறும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஏழாம் தூதன் எக்காளம் ஊதும்போது மூன்று முக்கிய சம்பவங்கள் நடைபெறுகின்றன.

‘‘ஜாதிகள் கோபித்தார்கள், அப்பொழுது உம்முடைய கோபம் மூண்டது; மரித்தோர் நியாயத்தீர்ப்படைகிறதற்கும், தீர்க்கதரிசிகளாகிய உம்முடைய ஊழியக்காரருக்கும் பரிசுத்தவான்களுக்கும் உமது நாமத்தின்மேல் பயபக்தியாயிருந்த சிறியோர் பெரியோருக்கும் பலனளிக்கிறதற்கும், பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுக்கிறதற்கும், காலம்வந்தது என்று சொல்லி, தேவனைத் தொழுதுகொண்டார்கள். அப்பொழுது பரலோகத்தில் தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது, அவருடைய ஆலயத்திலே அவருடைய உடன்படிக்கையின் பெட்டி காணப்பட்டது; அப்பொழுது மின்னல்களும், சத்தங்களும், இடிமுழக்கங்களும், பூமியதிர்ச்சியும், பெருங்கல்மழையும் உண்டாயின.’’ (வெளி 11:18,19)

  1. கெம்பீர சத்தம்

முதலில் உலகத்தின் ராஜ்ஜியங்கள் கிறிஸ்துவின் ராஜ்ஜியங்களாகின என்ற ‘கெம்பீர சத்தம்’ உண்டாகியது. ஏழாம் எக்காளம் ஊதப்பட்ட காலத்தில் தான் அந்திகிறிஸ்துவின் ராஜ்ஜியமாகிய கத்தோலிக்க ரோம சாம்ராஜ்ஜியம் நெப்போலியனால் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது என்று இனி பார்க்கப்போகிறோம். இந்த ஏழாம் எக்காளம் என்பது ஏழு கலசங்களை ஊற்றுவதற்கான ஆரம்பமாகும். அதன்பின்பு உலகத்தின் ராஜ்ஜியம் கொஞ்ச காலமட்டும் வாடிகன் மற்றும் ஐரோப்பிய யூனியனுக்குக் கொடுக்கப்பட்டாலும், முழுக்கட்டுப்பாடும் இயேசுவிடம் தான் இருந்தது. இது தான் நாம் வாழும் காலம்; சுவிசேஷத்தின் காலம். இதே காலக்கட்டம் 12 ஆம் அதிகாரத்தில் வானத்தில் நடந்த யுத்தத்தின் முடிவில் வலுசர்ப்பம் பூமியில் தள்ளப்பட்ட காலமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

‘‘அப்பொழுது வானத்திலே ஒரு பெரிய சத்தமுண்டாகி: இப்பொழுது இரட்சிப்பும் வல்லமையும் நமது தேவனுடைய ராஜ்யமும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் உண்டாயிருக்கிறது; இரவும் பகலும் நம்முடைய தேவனுக்குமுன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ் சுமத்தும்பொருட்டு அவர்கள் மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழத் தள்ளப்பட்டுப்போனான்.’’ (வெளி 12:10)

ஏழாம் எக்காளம் என்பது வேறு, இயேசு வானத்தில் தூதர்களோடு நம்மை சேர்த்துக்கொள்ள வரும்போது ஊதப்படும் ‘தேவ எக்காளம் அல்லது கடைசி எக்காளம்’ என்பது வேறு. ஒரே இரண்டாம் வருகை மட்டும் தான் வேதத்தில் உள்ளது. வேத வசனங்களை ஒப்பிடாமல் நவீனகால விஞ்ஞான முன்னேற்றங்களோடு வெளிப்படுத்தலை ஒப்பிட்டு இரகசிய வருகை உண்டென்று நம்புவது சாத்தான் நம்மை திசைதிருப்புவதற்கு இடம்கொடுத்துவிடும்.

  1.  கெடுத்தவர்களைக் கெடுக்கும் காலம்

பூமியைக் கெடுத்த அந்திகிறிஸ்துவின் ராஜ்ஜியத்தைக் கெடுக்கும் காலமும் இந்த ஏழாம் எக்காளம் ஊதியபோது ஆரம்பித்தது. ஏனென்றால் ஏழாம் எக்காளம் ஊதிய பின்பு அழிவுகள் ஏற்படவில்லை; மாறாக ஏழு வாதைகள் நிறைந்த கலசங்கள் தூதர்கள் கையில் ‘பூமியின் மீது’ அதாவது மிருகத்தின் சிங்காசனத்தின் மீது கொட்டப்படும்படி, அதை ஏழு கட்டங்களாக அழித்து நிர்மூலமாக்கும்படி கொடுக்கப்பட்டது.

‘‘பின்பு, வானத்திலே பெரிதும் ஆச்சரியமுமான வேறொரு அடையாளமாகிய கடைசியான ஏழு வாதைகளையுடைய ஏழு தூதரைக் கண்டேன், அவைகளால் தேவனுடைய கோபம் முடிகிறது.’’ (வெளி 15:1)

இந்த கோபத்தின் காலத்தில் தான் பூமியில் தள்ளப்பட்ட வலுசர்ப்பத்தின் ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியம் மீது கோப கலசங்கள் அழிவுகளாக ஊற்றப்பட்டன. ஏனென்றால் இயேசு முத்திரையை உடைத்ததும், எக்காளங்கள் ஊதப்பட்டதும் பரலோகத்தில் நடந்த சம்பவங்களாக சொல்லப்பட்டாலும், அவற்றின்போது அழிவுகள் பூமியின் மேல் தான் நடந்தது. ஆனால் வாதைகள் நிறைந்த கலசங்கள் நேரடியாக பூமியில் தள்ளப்பட்ட வலுசர்ப்பத்தின் ராஜ்ஜியமான ரோம் மீதும் அதனைச் சார்ந்த ஐரோப்பா மீதும் ஊற்றப்பட்டது. இந்த கலசங்கள் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில், அதாவது முடிவுகாலத்தின் ஆரம்பத்தில் தான் ஊற்றப்பட்டது.

‘‘அப்பொழுது தேவாலயத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தம் அந்த ஏழு தூதருடனே: நீங்கள் போய் தேவனுடைய கோபகலசங்களைப் பூமியின்மேல் ஊற்றுங்கள் என்று சொல்லக்கேட்டேன்’’ (வெளி 16:1)

இந்தக் கலசங்கள் ஊற்றப்பட்டபோது தான் பதினெட்டாம் நூற்றாண்டின் கடைசி காலகட்டங்களில் மிருகத்தின் ராஜ்ஜியம் நெப்போலியனால் முற்றிலும் அழிக்கப்பட்டது.

‘‘ஐந்தாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை மிருகத்தினுடைய சிங்காசனத்தின்மேல் ஊற்றினான்; அப்பொழுது அதின் ராஜ்யம் இருளடைந்தது; அவர்கள் வருத்தத்தினாலே தங்கள் நாவுகளைக் கடித்துக்கொண்டு,’’ (வெளி 16:10)

இப்படியாக பூமியின் பரிசுத்தவான்களை 1260 வருடம் துன்புறுத்தி, தனது வஞ்சனைகளால் பூமியைக் கெடுத்த ராஜ்ஜியத்தை கெடுக்கும் காலம் முதல் ஆறு கலசங்களாக நிறைவேறியது; ஏழாம் கலசத்தின் அழிவு இன்னும் நிறைவுபெறவில்லை.

  1. பரலோகத்தில் திறக்கப்பட்ட தேவாலயம்

ஏழாம் எக்காளம் ஊதப்பட்ட பின்பு பரலோகத்தின் தேவாலயம் திறக்கப்பட்டதையும், அங்கே உடன்படிக்கை பெட்டி இருந்ததையும் யோவான் பார்க்கிறார். ஏழாம் எக்காளத்தின் தொடர்ச்சி தான் ஏழு வாதைகள் நிறைந்த கலசம் தூதர்களுக்குக் கொடுக்கப்பட்ட நிகழ்வு என்பதற்கு இன்னொரு ஆதாரத்தைத் தருகிறேன். ஏழு கலசங்களையுடைய தூதர்களைப் பார்த்த அதே காட்சியைத் தொடர்ந்து, யோவான் தேவாலயம் திறக்கப்பட்டதைப் பார்க்கிறார்.

‘‘இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, பரலோகத்திலே சாட்சியின் கூடாரமாகிய ஆலயம் திறக்கப்பட்டது; அந்த ஆலயத்திலிருந்து ஏழு வாதைகளையுடைய அவ்வேழு தூதர்களும் சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரந்தரித்து, மார்பருகே பொற்கச்சைகளைக் கட்டிக்கொண்டு புறப்பட்டார்கள்.’’ (வெளி 15:5,6)

இவ்வாறு திறக்கப்பட்ட தேவாலயத்தில் இருந்த தேவனுடைய மகிமையினால் எழும்பிய புகை, ஏழு வாதைகளும் பூமியில் ஊற்றப்பட்டு முடியும்வரை இருந்ததாம். அதனால் அது முடியும் வரை ஒருவரும் உள்ளே செல்லமுடியவில்லை.

‘‘அப்பொழுது, தேவனுடைய மகிமையினாலும் அவருடைய வல்லமையினாலும் உண்டான புகையினாலே தேவாலயம் நிறைந்தது; ஏழு தூதர்களுடைய ஏழு வாதைகளும் முடியும்வரைக்கும் ஒருவரும் தேவாலயத்திற்குள் பிரவேசிக்கக்கூடாதிருந்தது.’’ (வெளி 15:8

கர்த்தர் பரிசுத்தவான்களின் இரத்தத்திற்காகப் பழிவாங்கும் வேளையாகிய தேவனுடைய கோபாக்கினை முடிவுபெறும் வரை பரலோக தேவாலயத்தினுள் யாரும் நுழைய முடியவில்லை. இதைப் போலவே மோசே ஆசரிப்புக் கூடாரத்தின் எல்லா வேலைகளையும் முடித்த அடுத்த கணமே கூடாரத்தை தேவ மகிமை மூடியதால் மோசே கூட உள்ளே போகமுடியவில்லை என்று வேதம் கூறுகின்றது.

‘‘பின்பு, அவன் வாசஸ்தலத்தையும் பலிபீடத்தையும் சுற்றிப் பிராகாரத்தை நிறுத்தி, பிராகாரத்தின் தொங்குதிரையைத் தொங்கவைத்தான்; இவ்விதமாய் மோசே வேலையை முடித்தான். அப்பொழுது ஒருமேகம் ஆசரிப்புக் கூடாரத்தை மூடினது; கர்த்தருடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பிற்று. மேகம் அதின்மேல் தங்கி, கர்த்தருடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பினதினால், மோசே ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசிக்கக் கூடாமல் இருந்தது.’’ (யாத்திராகமம் 40:33-35)

இது தான் கடைசி எக்காளம் என்றும் இந்த நேரத்தில் தான் (மூன்றரை வருட முடிவில்) இயேசுவின் வருகை இருக்கும் என்று Mid tribulation Rapture கொள்கையாளர்கள் சிலர் தவறாக நம்பிவருகின்றனர். அந்திகிறிஸ்துவாகிய ரோமன் கத்தோலிக்க சாம்ராஜ்ஜியத்தின் மீது கடைசிகட்ட வாதைகளால் தீர்மானிக்கப்பட்ட அழிவுகளைத்தான் இந்த எக்காளம் குறிக்கிறதே தவிர, இயேசு தூதர்களோடு ஆகாயத்தில் வரும் ‘கடைசி எக்காளத்தை’ குறிக்கவில்லை. ஏனென்றால் இந்த ஏழாம் எக்காளத்தின்போது தூதர்களுக்குக் கொடுக்கப்பட்ட ஏழு வாதைகள் நிறைந்த கலசம் பூமியில் (ஐரோப்பாவில்) கொட்டப்படுவதன் மூலமாகத்தான் தேவனுடைய கோபம் நிறைவுபெறுகிறது என்று அடுத்த வசனம் கூறுகிறது. இது இரகசிய வருகைக்கான எக்காளத்தையும் குறிப்பதல்ல.

‘‘ஜாதிகள் கோபித்தார்கள், அ ப் பொழுது உம்முடைய கோபம் மூண்டது; மரித்தோர் நியாயத்தீர்ப்படைகிறதற்கும், தீர்க்கதரிசிகளாகிய உம்முடைய ஊழியக்காரருக்கும் பரிசுத்தவான்களுக்கும் உமது நாமத்தின்மேல் பயபக்தியாயிருந்த சிறியோர் பெரியோருக்கும் பலனளிக்கிறதற்கும், பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுக்கிறதற்கும், காலம்வந்தது என்று சொல்லி, தேவனைத் தொழுதுகொண்டார்கள்.’’ (வெளி 11:18)

ஏழாம் முத்திரையை இயேசு உடைக்கும்போது குறிப்பிட்ட எந்த அழிவும் ஏற்படவில்லை; மாறாக ஏழாம் முத்திரை உடைக்கப்படும்போது, ஏழு தூதர்களுக்கு ஏழு எக்காளங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டது என்று முந்தைய அத்தியாயத்தில் பார்த்தோம். அதேபோலவே, ஏழாம் எக்காளம் ஊதப்படும்போது எந்த அழிவின் சம்பவங்களும் நிகழவில்லை; மாறாக, ரோம சாம்ராஜ்ஜியத்தின் இறுதி அழிவைத் தீர்மானிக்கும் ‘தேவனின் கோபாக்கினையின் கலசங்கள்’ தூதர்களுக்குக் கொடுக்கப்பட்டது. இப்படி அதன் இறுதித் தீர்ப்பு நிர்ணயிக்கப்பட்டதால் தான் ‘இனி இந்த உலகத்தில் வேறு ராஜ்ஜியங்கள் இருக்கப்போவது இல்லை; உலகத்தின் ராஜ்ஜியங்கள் இயேசுவினுடைய ராஜ்ஜியமாக மாறின’ என்ற கெம்பீர வெற்றியின் சத்தங்கள் கேட்டது.

ஏழு கலசங்கள்: ஏழாம் எக்காளத்தின் தொடர்ச்சி

இந்த ஏழாம் எக்காளத்தைத் தொடர்ந்து வரும் ஏழு வாதைகள் ஊற்றப்பட்டதற்கான காரணங்களையும் யோவான் சொல்கிறார்.

  1. பல ஜாதி ராஜாக்கள் வெறிகொண்டு ஆட்சி செய்தார்கள். அதனால் அவர்கள் மேல் இயேசுவின் கோபம் மூண்டது. எனவே கடைசி ராஜ்ஜியத்தின் மேல் கோபாக்கினையின் கலசத்தை ஊற்றுவீர்
  2. மரித்தோர் நியாத்தீர்ப்படையும் காலம் நெருங்கிவிட்டது
  3. தீர்க்கதரிசிகளாகிய தேவனுடைய ஊழியக்காரர்களின் ஊழியங்களுக்கும், ரோமப்பேரரசில் இதுவரை உபத்திரவப்பட்டு, எப்பொழுது எங்களுக்கு நீதி செய்வீர் என்று பலிபீடத்தின் அடியிலிருந்து கதறின பரிசுத்தவான்களின் இரத்தப்பழிகளுக்குப் பதிலளிக்கிறதற்கு.
  4. இரத்த சாட்சியாய் மரிக்காவிட்டாலும், இயேசுவின் நாமத்தின் மேல் பயபக்தியாய் இருந்த சிறியோர், பெரியோர் அனைவருக்கும் பலனளிக்கிறதற்கு
  5. இயேசுவின் முதலாம் வருகை காலம் முதல் பூமியைக் கெடுத்த ரோம சாம்ராஜ்ஜியத்தை (ஓருங்கிணைந்த மற்றும் கத்தோலிக்க ரோம சாம்ராஜ்ஜியம்) கெடுத்து அழிக்கும் காலம் வந்ததினால் இந்த வாதைகள் நிறைந்த கலசங்கள் கொடுக்கப்பட்டன.

ஏழாவது எக்காளத்தின் காலத்தில் ரோம சாம்ராஜ்ஜியம், போப்புகளால் ஆளப்பட்ட கத்தோலிக்க ரோம சாம்ராஜ்ஜியத்தின் வடிவில் தான் இருந்தது. இதைதான் சின்னக்கொம்பு என்று பார்த்தோம். இது 1260 வருடங்கள் பூமியை ஆட்சிசெய்து முடிக்கும்போதுதான் அதன் மீது ஏழாவது எக்காளத்தில் கொடுக்கப்பட்ட வாதைகள் ஊற்றப்பட்டு அந்த ராஜ்ஜியம் முற்றுபெற்றது. இதனைத் தொடர்ந்து பூமி இயேசுவின் ராஜ்ஜியத்திற்குத் தயாராக இருந்தது என்றும், நியாயசிங்காசனங்கள் வைக்கப்பட்டது என்றும் தானியேல் கண்டார். இது ஒருநாள் சம்பவமல்ல. கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக கிருபையின் அல்லது சுவிசேஷத்தின் காலமாக நீடித்துக்கொண்டிருக்கிறது.

‘‘உன்னதமானவருக்கு விரோதமாக வார்த்தைகளைப் பேசி, உன்னதமானவருடைய பரிசுத்தவான்களை ஒடுக்கி, காலங்களையும் பிரமாணங்களையும் மாற்ற நினைப்பான்; அவர்கள் ஒருகாலமும், காலங்களும், அரைக்காலமும் செல்லுமட்டும் அவன் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள். ஆனாலும் நியாயசங்கம் உட்காரும்; அப்பொழுது முடிவுபரியந்தம் அவனைச் சங்கரிக்கும்படியாகவும் அழிக்கும்படியாகவும் அவனுடைய ஆளுகையை நீக்கிப்போடுவார்கள்.’’ (தானியேல் 7:25,26)

இந்த நியாயசங்கம் என்பது வேறு; நியாயத்தீர்ப்பு நாள் என்பது வேறு. இந்த நியாயசங்கம் என்பது இந்த சின்னக்கொம்பின் ஆளுகையை நீக்கிப்போடுவதற்காக அல்லது ஏழு வாதைகளால் முடிவுபரியந்தம் (இயேசுவின் வருகை பரியந்தம்) அதை முற்றிலும் அழிப்பதற்காக நிர்ணயிக்கப்பட்ட ஒன்றாகும்.

சின்னக்கொம்பு (போப்/ யோவானின் முதலாம் மிருகம்) மீது ஏழாவது எக்காளம் ஊதப்பட்டதால், ஒவ்வொரு வாதைகளாக ஊற்றுவது ஆரம்பித்த காலம்: கி.பி1790 முதல் (நெப்போலிய போர்கள்/ பிரெஞ்சுப்புரட்சி). இந்தக்காலக்கட்டத்தில் தான் நியாய சங்கம் அமர்ந்தது. (இது ஆவிக்குரிய அர்த்தமுடையது).

ஏழாவது எக்காளம் Vs கடைசி எக்காளம்

ஏழாவது எக்காளமும் (7th trumpet), கடைசி எக்காளம்/தேவ எக்காளம் (Last trumpet/trumpet of God) என்பது வேறுவேறு. ஏழாவது எக்காளம் எப்போது நிறைவேறும் என்பதைப்பற்றி தான் மேலே பார்த்தோம். தேவ எக்காளம் அல்லது கடைசி எக்காளம் என்பது, இயேசு தனது பரிவாரங்களோடு எல்லோர் கண்களுக்கும் முன்பாக ஆகாயத்தில் வந்து பரிசுத்த ஜனங்களைக் கூட்டிசேர்க்கும் ‘பகிரங்கமான இரண்டாம் வருகையின்’ காலத்தில் ஊதப்படுவதாகும்.

‘‘இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம். எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம்’’ (1 கொரிந்தியர் 15:51,52)

‘‘ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.’’ (1 தெசலோனிக்கேயர் 4:16)

‘‘நடுராத்திரியிலே: இதோ மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப்புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று. அப்பொழுது அந்தக் கன்னிகைகள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தீவட்டிகளை ஆயத்தப்படுத்தினார்கள்.’’ (மத்தேயு 25:6,7)

இந்த நேரத்தில் தான் மரித்தோர் உயிர்தெழுதலும், உயிரோடு இருப்பவர்கள் ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுவதும் நடந்தேறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *