- August 16, 2023
- admin
- 0
முதல் நான்கு எக்காளங்கள் (கி.பி 395 - கி.பி 570)
ஒருங்கிணைந்த விக்கிரகவணக்க ரோம சாம்ராஜ்ஜியத்தின் மீது சுமார் நாலாம் நூற்றாண்டின் முடிவு வரை நடந்த அழிவின் சம்பவங்கள் முத்திரைகளாக சொல்லப்பட்டிருந்தன. இனி அதன் தொடர்ச்சியாக அதே ராஜ்ஜியத்தின் மீது நடந்த நியாயத்தீர்ப்பின் சம்பவங்கள் எக்காளங்களாகக் கூறப்பட்டுள்ளது. இந்த எக்காளத்தின் காலக்கட்டத்தில் ரோம சாம்ராஜ்ஜியம் கிறிஸ்தவ சாம்ராஜ்ஜியமாக மாறி விட்டதே? பின்பு ஏன் அது அழிக்கப்பட வேண்டும்?
நோக்கம் மாறிய சபை
கான்ஸ்டாண்டைனின் காலத்திலிருந்து தியோடசியஸின் காலம் வரைக்கும் ரோம சாம்ராஜ்ஜியம் கிறிஸ்தவ ராஜ்ஜியமாக மாறியது உண்மை தான். ஆனால் இதிலும் ஒரு தீமை இருந்ததைப் பலர் அறியவில்லை. அதுவரை தீண்டத்தகாதவர்களாக எண்ணப்பட்ட கிறிஸ்தவர்கள், அரசாங்கத்தின் பல உயர்பதவிகளில் வைக்கப்பட்டனர். கிறிஸ்தவன் என்றாலே எல்லா உரிமைகளும் பறிக்கப்பட்ட நிலை மாறியது. எனவே உயர் கல்வி, உயர் பதவிகள் பெறவேண்டி, ரோம சம்ராஜ்ஜியத்தில் முன்பு விக்கிரகங்களை வணங்கிக்கொண்டிருந்த பலர், கிறிஸ்தவர்களாகத் தங்களை மாற்றிக்கொண்டனர்.
கான்ஸ்டாண்டைனும் தன் பங்கிற்கு சபைகளில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தார். ஆனால் இத்தகைய மாற்றங்கள் பல உபதேச கோளாறுகளுக்கும், சபைகளில் பிஷப்புகளின் ஆதிக்கத்திற்குமே வழிவகுத்து, கத்தோலிக்க திருச்சபையாக உருவெடுத்தது. இதன் பிஷப்புகள் தாங்கள் தான் உலக கிறிஸ்தவத்தின் தலைமையகம் என்ற நோக்கில் செயல்பட ஆரம்பித்தார்கள். சபை அதிகாரம் ஒரு இடத்தில் குவிய ஆரம்பித்தது. இப்படி அதிகார உச்சியில் சென்ற ரோமின் பிஷப் தான் ‘போப்பாண்டவர்’ என்று அழைக்கப்பட்டார். அதிலிருந்து திருச்சபையின் முழுக்கட்டுப்பாடும் ரோமின் கைகளில் வந்தது. அப்போஸ்தலனாகிய பேதுரு தான் ரோமின் முதல் போப் எனவும், அதன் வழி வந்தவர்களாகிய தாங்கள் தான் கிறிஸ்தவ சபைகளின் தாயகம் என்றும் பொய்யான பிரச்சாரங்கள் செய்து தங்களை ஸ்திரப்படுத்திக்கொண்டார்கள். இதன் விளைவாகத்தான் ரோமில் உள்ள வாடிகனில் பரி.பேதுரு தேவாலயம் (St.Peter’s basilica) என்ற விக்கிரகங்களால் அலங்கரிக்கப்பட்ட பிரமாண்ட ஆலயம் 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
இப்படி இயேசு கிறிஸ்துவின் மேல் உண்மையான அன்பில்லாத, தரிசனம் இல்லாத மதம் மாறிய மக்களாலும், பதவிசுகம் கண்ட குருமார்களாலும் சபையின் தடம் மாற ஆரம்பித்தது. குருமார்கள் ஒருபடி மேல் சென்று விக்கிரக ஆராதனைகளில் ஊறிப்போன ரோமர்களைத் திருப்திப்படுத்தும் விதமாக, தேவாலயங்களுக்குள் விக்கிரகங்களை வைக்க ஆரம்பித்தார்கள். அந்நிய தெய்வங்களை வைத்தால் அது வேதத்திற்குப் புறம்பானது என விசுவாசிகள் பிரச்சனை செய்வார்கள் என்று நினைத்த பிஷப்புகள், அந்திக்கிறிஸ்துவின் பிரதிநிதியாக மாறி பரிசுத்த வேதாகமம் மற்றும் அப்போஸ்தலர்களின் போதனைகளுக்கு விரோதமான காரியங்களை சபைகளுக்குள் கொண்டுவந்து ‘விசுவாச துரோகம்’ செய்தனர்.
இந்த காலக்கட்டத்தில் தான் பல ரோம பண்டிகைகளின் நாட்களில் கிறிஸ்தவ பண்டிகைகளும் (Saturnalla – Christmas, Festival of goddess of Ishtar-Easter, Halloween/demons day-All saints day, Weeping for tammuz-Lent 40 days) பல ரோமக்கடவுள்களின் சிலைகள் அப்போஸ்தலர்கள், பரிசுத்தவான்களின் பெயரிலும் மாற்றி அமைக்கப்பட்டது. இந்த மாற்றங்கள் ஓரிரு வருடங்களில் அல்ல, இரு நூற்றாண்டுகளில் ஏற்பட்ட மாற்றமாகும். நாம் ஆரம்ப அத்தியாயத்தில் பார்த்த பாபிலோனிய தாய்-சேய் வழிபாட்டு முறைகள் சபைகளுக்குள்ளும் புகுத்தப்பட்டதன் விளைவாக, மரியாளையும் அவர் கையில் இருக்கும் குழந்தை இயேசுவையும் (Mary-child Jesus Worship) வணங்கும் வழக்கம் உருவானது. இதனால் தான் இந்த வழிபாட்டு முறைகளைக் கொண்டு பூமியின் குடிகளை வஞ்சித்து, ராஜ்ஜியங்களை ஆண்டு வந்த கத்தோலிக்க ரோம சாம்ராஜ்ஜியமானது ‘மகா வேசி அல்லது மகா பாபிலோன்’ என்று யோவானுக்கு சொல்லப்பட்டது.
மத்தியஸ்தரான இயேசுவின் இடத்தில் மரியாளை வைத்து வழிபடும் முறையை இன்றும் கத்தோலிக்கர்களிடம் காணலாம். இதைக் குறித்து அவர்களிடம் விவாதித்துப்பாருங்கள், அவர்கள் எந்த அளவிற்கு வஞ்சிக்கப்பட்டு, வைராக்கியமாக இருக்கிறார்கள் என்று தெரியும். அவர்களும் இரட்சிக்கப்படவேண்டுமென்பதே இயேசுவின் விருப்பம், நமது ஜெபமும் கூட. இந்தப் பின்னணி தெரிந்திருந்தால் தான் கத்தோலிக்க ராஜ்ஜியம் எப்படி ரோம சாம்ராஜ்ஜியத்தின் மறுஉருவமாக மாறியது என்றும், அதன் மீது அழிவுகள் ஏன் விதிக்கப்பட்டது என்பதும் உங்களுக்குப் புரியும் என்று இதை சுருக்கமாக சொல்லியுள்ளேன். மூன்று நூற்றாண்டு வரலாற்றை மிகச்சுருக்கமாகக் கூறியுள்ளேன். ஆர்வமுள்ளவர்கள் சபை வரலாற்றைப் பற்றிய புத்தகங்களை வாசித்துப்பார்த்தால் இன்னும் கற்றுக்கொள்ளலாம்.
கடைசி ராஜ்ஜியம்: ரோம்
இந்த ரோம சாம்ராஜ்ஜியத்தின் மீது விதிக்கப்பட்ட அழிவின் தீர்ப்புகள் மட்டும் ஏன் இவ்வளவு விரிவாகக் கொடுக்கப்படவேண்டும்? என்ற கேள்வி உங்களுக்கு எழலாம்.
- இயேசுஉலகத்தில் மனிதனாக வந்தபோது இருந்த ரோம சாம்ராஜ்ஜியம் தான் கடைசி சாம்ராஜ்ஜியமாகத் தானியேல் கூறுகிறார்.
- அதற்குப்பின்வந்த கத்தோலிக்க சாம்ராஜ்ஜியம், வாடிகன், ஐரோப்பிய யூனியன் ஆகியவை ரோம சாம்ராஜ்ஜியத்தின் வடிவங்களே.
- இயேசுவின் இரண்டாம் வருகையின் காலங்களில் அவரால் அழிக்கப்படப்போவதும் இந்த ரோம சாம்ராஜ்ஜியத்தின் வழித்தோன்றல் மட்டுமே.
யார் மீது எக்காளத் தீர்ப்புகள்?
நாம் காலவரிசையின்படி பார்த்துக்கொண்டிருக்கும் அழிவுத்தீர்ப்புகளில், அடுத்து வரும் எக்காளங்களினால் விதிக்கப்பட்ட அழிவுகள், ஒருங்கிணைந்த ரோம சாம்ராஜ்ஜியம் முற்றிலும் அதிகாரம் இழந்ததையும், அதின் ‘சாவுக்கேதுவான காயத்தை ஆற்றிய’ மிருகமாகிய (யோவான் கண்ட முதலாம் மிருகம்) ரோமன் கத்தோலிக்க சாம்ராஜ்ஜியத்தின் மீதான அழிவுகளையும் பற்றி விரிவாக சொல்கிறது.
எக்காளம் எப்போதெல்லாம் ஊதப்படும்?
பரிசுத்த வேதத்தில் பல சூழ்நிலைகளில் எக்காளம் ஊதப்பட்டதைப்பற்றி கூறப்பட்டுள்ளது.
- முதன் முறையாக கர்த்தர் சீனாய் மலையிலிருந்து மோசேயோடும், இஸ்ரவேல் ஜனங்களோடும் பேசும்போது எக்காளம் தொனித்தது.
- இஸ்ரவேலரின் பண்டிகை நாட்களில் எக்காளம் ஊதப்பட்டது.
- அந்நிய தேவர்களை ஆராதிக்கும்போதும் எக்காளம் ஊதப்பட்டது. (தானியேல் 3:15)
- எதிரிகள் மீது படையெடுத்து செல்லும்போதும், முற்றிகையிடும்போதும் எக்காளம் ஊதப்பட்டது.
- யுத்தங்கள் ஆரம்பிக்கும்போதும், யுத்தம் முடிந்து வெற்றி அறிவிக்கப்படும்போதும் எக்காளம் ஊதப்பட்டது.
- கர்த்தரின் பெட்டி கொண்டு செல்லப்படும்போது ஊதப்பட்டது.
- ராஜாக்கள் அபிஷேகம் பண்ணப்படும்போது ஊதப்பட்டது.
- இயேசு யோவானோடு பேசும்போதும் எக்காள முழக்கம் கேட்டது.
- இயேசுவின் இரண்டாம் வருகையின் நாளில் கடைசி எக்காளம் ஊதப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
எக்காளத்தின் தீர்க்கதரிசன அர்த்தம்
ஆனால், தீர்க்கதரிசன புத்தகங்களில் எருசலேம் மற்றும் தேசங்கள் மீதான படையெடுப்புகள், அழிவுகளைப் பற்றி எச்சரிக்கும் இடங்கள் மற்றும் ஜனங்களைப் பாவத்தை விட்டு திரும்பும்படி அழைப்புவிடுக்கும் இடங்களில் எக்காளம் ஊதுங்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. பல இடங்களில் இந்த செய்தி உருவகமாகவே சொல்லப்பட்டுள்ளது. அது தான் ‘கர்த்தருடைய நாள்’ அல்லது துன்மார்க்கரை கர்த்தர் பழிவாங்கும் நாள் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அதில் ஒருசில வசனங்களை மட்டும் உங்களுக்குப் புரியும்வண்ணம் கொடுத்துள்ளேன்.
‘‘சத்தமிட்டுக் கூப்பிடு; அடக்கிக்கொள்ளாதே; எக்காளத்தைப்போல உன் சத்தத்தை உயர்த்தி, என் ஜனத்துக்கு அவர்கள் மீறுதலையும், யாக்கோபின் வம்சத்தாருக்கு அவர்கள் பாவங்களையும் தெரிவி.’’ (ஏசாயா 58:1) ‘‘பென்யமீன் புத்திரரே, நீங்கள் எருசலேமின் நடுவிலிருந்து ஏகமாய்க் கூடியோடி, தெக்கோவாவில் எக்காளம் ஊதி, பெத்கேரேமின்மேல் அடையாளமாகத் தீவெளிச்சங் காட்டுங்கள்; ஒரு தீங்கும் மகா சங்காரமும் வடக்கேயிருந்து (பாபிலோன்) தோன்றுகிறதாயிருக்கிறது.’’ (எரேமியா 6:1)
‘‘இவன் தேசத்தின்மேல் பட்டயம் வருவதைக்கண்டு, எக்காளம் ஊதி, ஜனத்தை எச்சரிக்கும்போது,’’ (எசேக்கியேல் 33:3)
‘‘உன் வாயிலே எக்காளத்தை வை; அவர்கள் என் உடன்படிக்கையை மீறி, என் நியாயப்பிரமாணத்துக்கு விரோதமாகத் துரோகம்பண்ணினபடியால் கர்த்தருடையவீட்டின்மேல் சத்துரு கழுகைப்போல் பறந்துவருகிறான்.’’ (ஓசியா 8:1)
‘‘சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், என் பரிசுத்த பர்வதத்திலே எச்சரிப்பின் சத்தமிடுங்கள்; தேசத்தின்குடிகள் எல்லாம் தத்தளிக்கக்கடவர்கள்; ஏனெனில் கர்த்தருடைய நாள் வருகிறது, அது சமீபமாயிருக்கிறது.’’ (யோவேல் 2:1)
எனவே இந்த எக்காளங்கள் ரோம ராஜ்ஜியத்தின் மீதான அழிவைப்பற்றியும், கத்தோலிக்க ரோம சாம்ராஜ்ஜியத்தின் ஜனங்கள் தங்கள் பொல்லாத வழிகளை விட்டு மனம்திரும்பும்படி அறைகூவல் விடுக்கும் சம்பவங்களாகவும் சங்கேத மொழிகளில் யோவானுக்கு வெளிப்படுத்தப்பட்ட இரகசியங்களாகும். ஆனாலும் இன்றுவரை அந்த சபை மாறவில்லை என்பது நாம் கண்கூடாகப் பார்த்துவரும் காரியமாகும்.
‘‘அப்படியிருந்தும், அந்த (ஆறாம் எக்காளத்தின்) வாதைகளால் கொல்லப்படாத மற்ற மனுஷர்கள் பேய்களையும், பொன் வெள்ளி செம்பு கல்மரம் என்பவைகளால் செய்யப்பட்டவைகளாயும் காணவும் கேட்கவும் நடக்கவுமாட்டாதவைகளாயுமிருக்கிற விக்கிரகங்களையும் வணங்காதபடிக்குத் தங்கள் கைகளின் கிரியைகளை விட்டு மனந்திரும்பவுமில்லை; தங்கள் கொலைபாதகங்களையும், தங்கள் சூனியங்களையும், தங்கள் வேசித்தனங்களையும் தங்கள் களவுகளையும் விட்டு மனந்திரும்பவுமில்லை.’’ (வெளி 9:20,21)
இனி ஒவ்வொரு எக்காளத்தின் காலங்களிலும் ஐரோப்பாவில் நிகழ்ந்த சம்பவங்களை வரலாற்றுடன் ஒப்பிட்டுப் பார்ப்போம். இந்த காலக்கட்டத்தில் ரோம சாம்ராஜ்ஜியம் மேற்கு மற்றும் கிழக்கு ராஜ்ஜியங்களாகப் பிரித்து ஆளப்பட்டது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
முதலாம் எக்காளம்
ஏற்கனவே உள்நாட்டு யுத்தங்கள், பஞ்சங்கள், கொள்ளைநோய்களால் சரிவை சந்தித்துக்கொண்டிருந்த ரோம சாம்ராஜ்ஜியத்தை, அவ்வப்போது ‘பார்பேரியர்கள்’ (Barberians) என்ற ஜெர்மன் பழங்குடியினர் படையெடுத்துத் தாக்கி வந்தார்கள் என்று முந்திய அத்தியாயத்தில் பார்த்தோம். இந்த பின்னணியில் தான் முதலாம் எக்காளம் ஊதப்பட்டது.
‘‘முதலாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது இரத்தங்கலந்த கல்மழையும் அக்கினியும் உண்டாகி, பூமியிலே கொட்டப்பட்டது; அதினால் மரங்களில் மூன்றிலொருபங்கு வெந்துபோயிற்று, பசும்புல்லெல்லாம் எரிந்துபோயிற்று.’’ (வெளி 8:7)
முதலாம் தூதன் எக்காளம் ஊதப்பட்ட பின் நடந்ததாக சங்கேத மொழிகளில் சொல்லப்பட்ட காரியங்களை ஒவ்வொன்றாக வேதவசனத்தின் அடிப்படையில் பார்ப்போம்.
கல்மழையும் அக்கினியும்
இஸ்ரவேல் ராஜ்ஜியத்தின் தலைநகரான சமாரியாவின் மேல் அசீரியன் படையெடுத்து வந்து அழிப்பான் என்று ஏசாயாவால் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனம், அந்தப் படையெடுப்பை இவ்வாறு விவரிக்கிறது.
‘‘இதோ, திராணியும் வல்லமையுமுடைய ஒருவன் (அசீரியன்) ஆண்டவரிடத்தில் இருக்கிறான்; அவன் கல்மழைப்போலவும், சங்காரப் புசல்போலவும், புரண்டுவருகிற பெருவெள்ளம்போலவும் வந்து, கையினாலே அதைத் (இஸ்ரவேலை) தரையில் தள்ளிவிடுவான்.’’ (ஏசாயா 28:2)
இதே போல் எருசலேமாகிய அரியேல் என்ற தாவீதின் நகரத்தின் மேல் வரும் அழிவைக்குறித்து ஏசாயா சொல்லும் இடத்தில், அந்நியர்களின் படையெடுப்பு வரும் விதத்தைக்குறிக்க ஏராளமான உருவக வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கிறார்.
‘‘உன்மேல் வருகிற அந்நியரின் திரள் பொடித்தூளத்தனையாகவும், பலவந்தரின் திரள் பறக்கும் பதர்களத்தனையாகவும் இருக்கும்; அது திடீரென்று சடிதியாய்ச் சம்பவிக்கும். இடிகளினாலும், பூமி அதிர்ச்சியினாலும், பெரிய இரைச்சலினாலும், பெருங்காற்றினாலும், புசலினாலும், பட்சிக்கிற அக்கினிஜுவாலையினாலும், சேனைகளின்கர்த்தராலே விசாரிக்கப்படுவாய்.’’ (ஏசாயா 29:5,6)
இதுபோல் இன்னும் ஏராளமான ஆதாரங்களைக் கொடுக்கமுடியும். இந்த தீர்க்கதரிசனங்களில் அந்நியர்களால் வரும் பெரும் படையெடுப்புகள் மற்றும் அழிவுகளைக் குறிப்பதற்கு, கல்மழை, புயல், பெருவெள்ளம், இடி, பூமி அதிர்ச்சி, பெரிய இரைச்சல் மற்றும் அக்கினி போன்ற சங்கேத மொழிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதில் கல்மழை என்பது எதிரி நாட்டின் படையைக் குறிக்கும். இரத்தம் கலந்த கல்மழை மற்றும் அக்கினி என்பது எதிரிகளின் படையெடுப்புகளால் பலர் செத்து இரத்தம் சிந்தப்படுவதைக் குறிக்கும்.
மூன்றிலொரு பங்கு வெந்துபோன மரங்கள்
நேபுகாத்நேச்சார் கண்ட சொப்பனத்தின் அர்த்தத்தைப் பற்றி தானியேல் சொல்லும் இடத்தில், மரம் என்பது ராஜாவைக் குறிக்கும் என்று தெளிவாக சொல்லியிருக்கிறார்.
‘‘நீர் கண்ட விருட்சம் வளர்ந்து பலத்து, வானத்தின் எல்லைபரியந்தம் காணப்படத்தக்கதாக அதின் உயரம் வானபரியந்தம் எட்டினது. அதின் இலைகள் நேர்த்தியும், அதின்கனி மிகுதியுமாயிருந்தது; எல்லா ஜீவனுக்கும் அதில் ஆகாரம் உண்டாயிருந்தது; அதின்கீழே வெளியின் மிருகங்கள் தங்கினது, அதின் கொப்புகளில் ஆகாயத்துப்பட்சிகள் தாபரித்தது. அது பெரியவரும் பலத்தவருமாயிருக்கிற ராஜாவாகிய நீர்தாமே;’’ (தானியேல் 4:20-22)
நியாயாதிபதிகள் புத்தகத்திலே ஜனங்கள் சீகேமிலே அபிமெலேக்கை ராஜாவாக்கியதைக் கண்டித்து யோதாம் சொன்ன ஒரு உவமையில், மரங்கள் என்பவை ராஜாக்களுக்கு ஒப்பாக பலமுறை சொல்லப்பட்டுள்ளது (நியாயாதிபதிகள் 9:6-15). எனவே முதலாம் எக்காளத்தின் காலத்தில் ரோம சாம்ராஜ்ஜியத்தின் ராஜாக்கள், தேசாதிபதிகள் மூன்றில் ஒருபங்கு பேர் ஒரு குறிப்பிட்ட படையெடுப்பினால் வெந்துபோனதை / அழிக்கப்பட்டதை இது குறிக்கிறது.
எரிந்துபோன பசும்புல்
‘‘அதற்கு: மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், அதின் மேன்மையெல்லாம் வெளியின் பூவைப்போலவும் இருக்கிறது. கர்த்தரின் ஆவி அதின்மேல் ஊதும்போது, புல் உலர்ந்து, பூ உதிரும்; ஜனமே புல்.’’ (ஏசாயா 40:6,7)
‘‘நான், நானே உங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்; சாகப்போகிற மனுஷனுக்கும், புல்லுக்கொப்பாகிற மனுபுத்திரனுக்கும் பயப்படுகிறதற்கும், வானங்களை விரித்து, பூமியை அஸ்திபாரப்படுத்தி, உன்னை உண்டாக்கின கர்த்தரை மறக்கிறதற்கும் நீ யார்?’’ (ஏசாயா 51:12)
‘‘மனுஷனுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாயிருக்கிறது; வெளியின் புஷ்பத்தைப்போல் பூக்கிறான்.’’ (சங்கீதம் 103:15)
அந்நியர்கள் படையெடுக்கும்போது ராஜாக்கள், பிரபுக்கள், தளபதிகள் மட்டும் அழிவை சந்திப்பதில்லை; ஏராளமான ஜனக்கூட்டங்களும் அழிக்கப்படுவார்கள். இப்படி இந்த படையெடுப்புகளினால் பல ஆயிரம் ஜனங்கள் மடிந்ததையே ‘பசும்புல்லெல்லாம் எரிந்தது’ என்று யோவானுக்கு இயேசு வெளிப்படுத்தினார்.
எப்போது இவை நிறைவேறியது?
இஸ்ரவேலர் கர்த்தருக்கு விரோதமாக பாவம் செய்யும்போது, கர்த்தர் பாபிலோன் ராஜாவை அவர்களுக்கு விரோதமாக எழுப்பினார். அந்த பாபிலோன் ராஜ்ஜியத்தில் யூதர்களின் 70 வருட சிறையிருப்பு முடிந்தபின்பு, கர்த்தர் கோரேஸ்-தரியு ராஜாக்களை எழுப்பி பாபிலோனை வீழ்த்தினார். கர்த்தர் ஒரு ராஜ்ஜியத்தை வீழ்த்த முடிவு செய்துவிட்டால் அண்டை நாட்டு ராஜ்ஜியங்களை எழுப்பிவிடுவார். இதே பாணியில் அவரால் ரோம சாம்ராஜ்ஜியத்திற்கு விரோதமாக எழுப்பப்பட்டவன் தான் ‘அலரிக்’ (Alaric) என்ற ‘விசிகோத்’ (Visigoth) வம்சத்தை சேர்ந்த ராஜா. இந்த விசிகோத் என்ற ஜெர்மானியப் பழங்குடியினர் தங்களுக்கென்று ஒரு நிலப்பரப்பு இல்லாமல் அலைந்துகொண்டிருந்தனர். அந்த சூழ்நிலையில் தான் அவர்கள் கண் ரோம் மீது பதிந்தது.
அலரிக் என்ற முதல் எக்காளம்
கி.பி 394 ஆம் ஆண்டு ராஜாவான அலரிக், தனது படைகளை கி.பி 408 ல் ரோம் நோக்கி நகர்த்தி சென்றான். கடுமையான முற்றிகைக்குப் பின் அவன் கி.பி 410 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரோமைக் கைப்பற்றினான். ரோமிற்கு உள்ளே நுழைந்த அவன் மூன்று நாட்கள் ரோம் முழுவதையும் சூறையாடி ஏராளமானோரைக் கொன்று, செல்வங்களைக் கொள்ளையிட்டான். 800 வருடங்களாக எதிரிகளின் காலடி படாத, நித்தியநகரம் (Eternal city) என்று மார்தட்டிக்கொண்ட ரோம் முதன்முதலில் ஒரு அந்நிய ராஜாவால் சூறையாடப்பட்டது உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ரோமப்பேரரசர்களான அகஸ்துராயன், ஹாட்டிரியன் போன்றவர்கள் கட்டிய பெருமையின் சின்னங்கள், பழைய ரோமப்பேரரசர்கள் அடக்கம் பண்ணப்பட்ட கல்லறைகள், மாடமாளிகைகள் உட்பட பல கோயில்களையும் இடித்துத் தரைமட்டமாக்கினர். எவையெல்லாம் கையில் எடுத்துச்செல்ல அல்லது தள்ளிச்செல்ல முடிந்த செல்வங்களாக இருந்ததோ, அவற்றை எல்லாம் எடுத்துச்சென்றனர். இந்த படையெடுப்பு மேற்கு ரோம சாம்ராஜ்ஜியத்தின் முதல் பேரழிவு.
எனவே முதலாம் எக்காளத்தினால் ரோமின் மீது விதிக்கப்பட்ட இந்த தீர்ப்பானது நிறைவேறிய காலம் கி.பி 395 முதல் கி.பி 410 வரையாகும்.
இரண்டாம் எக்காளம்
மேலே சொன்ன அலரிக் படையெடுத்து அழித்துவிட்டு வேறுபக்கம் போய்விட்டான். அதற்குப் பிறகு வந்த ரோமப்பேரரசர்கள் ரோமை அழிவிலிருந்து மீட்க முயற்சிசெய்தனர். ஆனாலும் அவர்களால் முந்தின மகிமையை மீட்டெடுக்க முடியவில்லை. இந்த சூழ்நிலையில் ரோமின் மீது அடுத்த பேரிடி விழுந்தது.
இரண்டாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது அக்கினியால் எரிகிற பெரிய மலைபோன்றதொன்று சமுத்திரத்திலே போடப்பட்டது. அதினால் சமுத்திரத்தில் மூன்றிலொருபங்கு இரத்தமாயிற்று. சமுத்திரத்திலிருந்த ஜீவனுள்ள சிருஷ்டிகளில் மூன்றிலொருபங்கு செத்துப்போயிற்று; கப்பல்களில் மூன்றிலொருபங்கு சேதமாயிற்று.’’ (வெளி 8:8,9)
ஏற்கனவே பல இடங்களில் விளக்கங்கள் கொடுக்கப்பட்டபடியால் நேரடியாகவே அர்த்தத்திற்கு வருகிறேன்.
- அக்கினி-அந்நிய படையெடுப்பு/அழிவு
- பெரியமலை/ பர்வதம் – ராஜ்ஜியம்
- சமுத்திரம்- ஜனக்கூட்டம்
- சமுத்திரத்திலுள்ள ஜீவனுள்ள சிருஷ்டிகள் – ஜனக்கூட்டம் மற்றும் உயிருள்ளவைகள்
- கப்பல்களில் சேதம் – கடல் யுத்தம்
ஜென்சரிக்: கடல் ராஜா (Genseric – Tyrant of the Sea)
வாண்டல்ஸ் (Vandals) இனக்குழுவைச் சேர்ந்த ஜென்செரிக் என்ற ராஜா தனது மக்களின் கப்பல் கட்டும் திறன் மற்றும் கப்பல் செலுத்தும் திறனைப் பயன்படுத்தி மத்திய தரைக்கடல் பகுதியில் தனது ஆதிக்கத்தை செலுத்த விரும்பினான். அதற்கு அவனது பகுதியில் இருந்த அட்லஸ் மலையின் ஏராளமான மரங்கள், கப்பல் கட்டும் பணிகளை எளிதாக்கின. இவன் முதன்முதலில் ரோம சாம்ராஜ்ஜியத்திற்குத் தேவையான உணவுதானியங்களை வழங்கிக்கொண்டிருந்த ரோமின் ஆப்பிரிக்க காலனி நாடுகளை, கடல் யுத்தங்கள் மூலம் தன்வசம் கொண்டுவந்தான். இந்த யுத்தங்களானது அவனது காலத்திற்கு முன் 600 வருடங்களில் செய்யப்படாத மிகப்பெரிய கப்பல் யுத்தமாக வரலாறு சொல்கிறது. இந்த யுத்தத்தில் சுமார் 500 வாண்டல்களின் கப்பல்களும், 600 ரோம கப்பல்களும் பங்கெடுத்ததாக வரலாறு பதிவிட்டுள்ளது. அப்படியானால் இந்த யுத்தத்தில் கடலில் எத்தனை உயிர்கள் பலியாகியிருக்கும் என்று யோசித்துப்பாருங்கள்.
இதற்குப்பிறகு ஜென்செரிக்கின் கண்கள் ரோமின் மீது பதிந்தது. அவனது மாலுமிகள் ‘அடுத்து எங்கே செல்லவேண்டும்?’ என்று கேட்டால் ‘பாய்மரங்களை இறக்கிவிடு; நம் கைகளில் வீழவேண்டும் என்று யார் மீது தீர்ப்பு எழுதப்பட்டிருக்கிறதோ அங்கே காற்று நம்மைக் கொண்டுசெல்லும்’ என்று வேடிக்கையாகக் கூறுவானாம். இவ்வாறு ரோமின் மீது படையெடுத்த ஜென்செரிக் கி.பி 455 ஆம் ஆண்டு ரோமை வீழ்த்தினான். அப்போது ரோமப்பேரரசனாக இருந்த ‘பெட்ரோனியஸ் மாக்ஸிமஸ்’ என்பவன் ரோமை விட்டுத் தப்பியோடும்போது கொல்லப்பட்டான். அரசனற்ற ரோம் வேறு வழியின்றி ஜென்செரிக்கிற்கு கதவுகளைத் திறந்தது. அப்போது ரோமின் போப்பாக இருந்த ‘முதலாம் லியோ’ ரோமிற்கு உள்ளே நுழைந்த ஜென்செரிக்கிடம், மக்களைக் கொல்லாமலும், உடைமைகளை சேதமாக்காமலும் வேண்டியதை எடுத்துக்கொள்ளும்படி வேண்டினாராம்.
அதன்படி அதிக உயிர்சேதம் செய்யாவிட்டாலும், போப்பின் வேண்டுகோளை மதிக்காமல் அவன் ரோமை 14 நாட்கள் கொள்ளையிட்டான். அவன் பெரிய நினைவுச்சின்னங்களில் இருந்த தங்கம், வெள்ளி, வெண்கலம் போன்றவற்றை உரிந்துகொண்டான். இப்படி பொதுக்கட்டிடங்களை இடித்துத் தரைமட்டமாக்கும் பழக்கம் இந்த அழிவின்போது உச்சத்தில் இருந்ததால் தான் ‘Vandelism-damaging the public properties’ என்ற வார்த்தை இன்றுவரை பிரபலமாக உள்ளது. இதன்படி இந்த யுத்தங்களில் மூன்றிலோரு பங்கு உயிர்கள் கடலில் மடிந்தன. கடல் இரத்தமாக மாறியது. ஏற்கனவே மூன்றில் ஒரு பங்கு ராஜ்ஜியத்தை இழந்த ரோம், இரண்டாவது பேரழிவை சந்தித்து அடுத்த மூன்றில் ஒரு பங்கை இழந்தது. இந்தக் காலக்கட்டம் கி.பி 425 லிருந்து கி.பி 455 வரை நீடித்தது. இரண்டாம் எக்காளம் நிறைவேறியது.
மூன்றாம் எக்காளம்
முதல் இரண்டு எக்காளங்களால் இரண்டுமுறை மூன்றில் ஒரு பங்கு ரோம ராஜ்ஜியம் அழிக்கப்பட்ட சூழ்நிலையில் மூன்றாம் எக்காளம் ஊதப்பட்டது.
‘‘மூன்றாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது ஒரு பெரிய நட்சத்திரம் தீவட்டியைப்போல எரிந்து, வானத்திலிருந்து விழுந்தது; அது ஆறுகளில் மூன்றிலொருபங்கின்மேலும், நீருற்றுகளின்மேலும் விழுந்தது. அந்த நட்சத்திரத்திற்கு எட்டியென்று பெயர்; அதினால் தண்ணீரில் மூன்றிலொருபங்கு எட்டியைப்போலக் கசப்பாயிற்று; இப்படிக் கசப்பான தண்ணீரினால் மனுஷரில் அநேகர் செத்தார்கள்.’’ (வெளி 8:10,11)
நாம் ஏற்கனவே பல இடங்களில் புரிந்துகொண்டபடி தீவட்டி / அக்கினி என்பது போரினால் ஏற்படும் அழிவையும், தண்ணீர் என்பது ஜனங்களையும் குறிக்கும்.
வானத்திலிருந்து விழுந்த நட்சத்திரம்
‘‘அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே’’ (ஏசாயா 14:12)’’
அவர்களிலே கொலைசெய்யப்பட்டவர்கள் வெளியே எறியுண்டுகிடப்பார்கள்; அவர்களுடைய பிரேதங்கள் நாற்றமெடுக்கும்; அவர்களுடைய இரத்தத்தினாலே மலைகளும் கரைந்துபோம். வானத்தின் சர்வசேனையும் கரைந்து, வானங்கள் புஸ்தகச்சுருளைப்போல் சுருட்டப்பட்டு, அவைகளின் சர்வசேனையும் திராட்சச்செடியின் இலைகள் உதிருகிறதுபோலவும், அத்திமரத்தின் காய்கள் உதிருகிறதுபோலவும் உதிர்ந்து விழும்.’’ (ஏசாயா 34:3,4)
லூசிபரின் சாம்ராஜ்ஜியமான பாபிலோன் விழுந்ததைக் குறிக்கும் இடத்தில், அவன் வானத்திலிருந்து விழுந்த நட்சத்திரமாக உருவகப்படுத்தப்பட்டுள்ளான். எனவே இந்த சங்கேத மொழி, ஜாதிகளை ஈனப்படுத்தின ரோம சாம்ராஜ்ஜியத்தின் பிரபுக்கள் மற்றும் ராஜாக்களின் அடுத்த அழிவைக் குறிக்கிறது.
எட்டி என்ற கசப்பு
எட்டிக்காயைப் போல கசக்கிறது என்ற சொல்லாடல் இன்று வரையிலும் வழக்கத்திலிருக்கிறது. அதையே தான் தீர்க்கதரிசன வார்த்தைகளிலும் ஆங்காங்கே சொல்லப்பட்டுள்ளது.
‘‘தங்களுடைய இருதயத்தின் கடினத்தையும், தங்கள் பிதாக்கள் தங்களுக்குக் கற்றுக்கொடுத்தபடி பாகால்களையும் பின்தொடர்ந்தார்களே என்று கர்த்தர் சொல்லுகிறார். ஆதலால், இதோ, நான் இந்த ஜனத்துக்குப் புசிக்க எட்டியையும், குடிக்கப் பிச்சுக்கலந்த தண்ணீரையும் கொடுத்து, அவர்களும், அவர்கள் பிதாக்களும் அறியாத புறஜாதிகளுக்குள்ளே அவர்களைச் சிதறடித்து, பட்டயம் அவர்களை நிர்மூலமாக்குமட்டும் அதை அவர்களுக்குப்பின்னாக அனுப்புவேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்’’ (எரேமியா 9:14-16)
‘‘எருசலேமின் தீர்க்கதரிசிகளிலும் திடுக்கிடத்தக்க காரியத்தைக் காண்கிறேன்; விபசாரம்பண்ணி, வஞ்சகமாய் நடந்து, ஒருவனும் தன் பொல்லாப்பை விட்டுத் திரும்பாதபடிக்குப் பொல்லாதவர்களின் கைகளைத் திடப்படுத்துகிறார்கள்; அவர்கள் எல்லாரும் எனக்குச் சோதோமைப்போலும், அதின் குடிகள் கொமோராவைப்போலும் இருக்கிறார்கள். ஆதலால் சேனைகளின் கர்த்தர் தீர்க்கதரிசிகளைக் குறித்து: இதோ, நான் அவர்களுக்குப் புசிக்க எட்டியையும், குடிக்கப் பிச்சுக்கலந்த தண்ணீரையும் கொடுப்பேன்; எருசலேமின் தீர்க்கதரிசிகளிலிருந்து மாயமானது தேசமெங்கும் பரம்பிற்றே என்று சொல்லுகிறார்.’’ (எரேமியா 23:14,15)
இங்கு எட்டி என்ற வார்த்தை, பாகாலைப் பின்பற்றிய, ராஜ்ஜியங்களின் மீதான கசப்பு தரும் பேரழிவுக்கு ஒப்பாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. இதையே தான் யோவான் சங்கேத மொழியாக எழுதியுள்ளார். நாம் வெளிப்படுத்தலில் வரும் அழிவுகளையும், எச்சரிக்கைகளையும், இயேசுவின் ராஜ்ஜியத்தின் இரகசியங்களையும் புரிந்துகொள்ளும் சங்கேத மொழிகளுக்கான அகராதி ஆக பயன்படுத்திக்கொள்ளத் தான் தீர்க்கதரிசன புத்தகங்களில் இப்படி ஏராளமான உருவக வார்த்தைகளைக் கர்த்தர் வெளிப்படுத்தியுள்ளார். இதைப்போலத் தான் இயேசு உலகத்திலிருக்கும்போது ‘உவமைகளினாலே’ பேசினார். அதன் நோக்கமும் அவரை உண்மையாய் பின்பற்றுகிறவர்களுக்கு மட்டுமே அவர் சொல்லும் இரகசியம் புரியவேண்டுமென்பதே.
எனவே, இந்த மூன்றாம் எக்காளம் என்பது ‘அட்டில்லா’ (Attila) என்ற ராஜா, ரோமப்பேரரசின் கடைசியாக மிஞ்சியிருந்த மூன்றிலொரு பகுதி ராஜ்ஜியத்தை அழித்த யுத்தங்களில் (கி.பி 434 – கி.பி 468) நதியோரங்களில் சிந்தப்பட்ட இரத்தத்தைப் பற்றியதாகும்.
அட்டில்லா: அழிவின் ஆயுதம்
ஏற்கனவே இரண்டு பேரழிவுகளை சந்தித்து (மூன்றில் இரண்டு பங்கு) தள்ளாடிக்கொண்டிருந்த ரோம சாம்ராஜ்ஜியத்திற்கு வந்த மூன்றாவது வில்லன் தான் ‘ஹன்’ வம்சத்தைச் சார்ந்த அட்டில்லா (Attila the hun). இவனது தலைமையிலான படையினர், போர்களில் தங்களைப் பாதுக்காக்க வேண்டுமென்ற எண்ணம் சிறிதும் இல்லாதவர்கள்; குதிரைகளில் செல்லும்போது தங்கள் தொடைகளுக்கும், குதிரையின் முதுகிற்கும் இடையில் விலங்குகளின் மாம்சத்தை வைத்துச்செல்லும்போது ஏற்படும் சூட்டினால் பாதிவெந்த நிலையில் இருப்பவைகளைக் கூட சாப்பிடும் கொடிய போர்வீரர்கள். அந்த காலக்கட்டத்தில் (கி.பி 406 – கி.பி 453) இவன் ‘Scourge of God’ என்று அழைக்கப்பட்டான் என்று வரலாறு சொல்கிறது. அதாவது, கர்த்தரால் நியாயம் தீர்க்கும்படி நியமிக்கப்பட்ட தண்டனையின் ஆயுதம் என்று அர்த்தம். இது எவ்வளவு உண்மை என்று அப்போதைய ரோமக் குடிமக்களைக் கேட்டால் தெரியும்.
‘‘ஓரேப் கன்மலையண்டையிலே மீதியானியர் வெட்டுண்டதுபோல் சேனைகளின் கர்த்தர் அவன் மேல் ஒரு சவுக்கை (scourge) எழும்பிவரப்பண்ணி, எகிப்திலே தமது கோலைக் கடலின்மேல் ஓங்கினதுபோல் அதை அவன்மேல் ஓங்குவார்.’’ (ஏசாயா 10:26)
‘‘ஆபிராமுடைய மனைவியாகிய சாராயின் நிமித்தம் கர்த்தர் பார்வோனையும், அவன் வீட்டாரையும் மகா வாதைகளால் (scourge) வாதித்தார்’’ (ஆதியாகமம் 12:17)
ஆரம்பத்தில் அட்டில்லா கான்ஸ்டாண்டிநோபுளைத் தலைமையாகக் கொண்ட கிழக்கு ரோம சாம்ராஜ்ஜியத்தைத் தாக்கினான். அவனது முற்றிகையைத் தாக்குப்பிடிக்காத இரண்டாம் தியோடோசியஸ், அட்டில்லாவுடன் சமாதான உடன்படிக்கை செய்தான்; ஏராளமான தங்கம், வெள்ளி, வாசனை திரவியங்களை வருடாவருடம் திறையாக செலுத்திவந்தான். இப்படி கிழக்கு ரோம சாம்ராஜ்ஜியத்தை அடக்கிய பின்னர் அவனது கண் கி.பி 440 க்கு மேல் ரோமைத் தலைநகராகக் கொண்ட மேற்கு ரோம சாம்ராஜ்ஜியத்தின் மீது பதிந்தது. அவன் வரிசையாக, திரேஸ் உட்பட பல ரோம ராஜ்ஜியத்தின் பகுதிகளைக் கைப்பற்றி ரோமின் முக்கிய நகரான ‘கால்’ (Gaul) என்ற நகரைக் கைப்பற்றினான். இந்த யுத்தத்தைப் பற்றி பின்வரும் வரலாற்று ஆதாரங்களைப் பார்க்கலாம்.
- சுமார் ஒன்றிலிருந்து ஏழு இலட்சம் வரையிலான ஹன் படையினர் வந்திருக்கலாம்.
- திரேஸ்பகுதியிலுள்ள ஏராளமான கத்தோலிக்க ஆலயங்கள், மடாலயங்கள் கொளுத்தப்பட்டன. பாதிரியார்கள், தவமிருப்பவர்கள் கொல்லப்பட்டனர்.
- ஐரோப்பாவில் நடந்த மிகக்கொடூரமான யுத்தமாக இது விவரிக்கப்பட்டுள்ளது. அதனால் தான் இந்த யுத்தம் Cadavera vero innumera (truely countless bodies) என்று வர்ணிக்கப்பட்டது. சுமார் இரண்டிலிருந்து மூன்று இலட்சம் இறந்த உடல்கள் அப்படியே கைவிடப்பட்ட நிலையில் கிடந்தது.
- அட்டில்லாவின் முக்கியமான போர் தந்திரமே ‘நதிகளின் நீர்பிடிப்புப் பகுதிகள், நதிகளின் கரையோரங்களில் போரிவது’ தான். அதனால் தான் அவனது பெரும்பாலான யுத்தங்கள் Rhine, Utus, Frigidus, Danude on nischavs river போன்ற பகுதிகளில் நடைபெற்றது. இதனால் நதிகள் இரத்தமாக மாறியதுடன் அதைக் குடிக்க இயலாது கசந்துபோனது.
மூன்றாம் எக்காளத்தின்போது அட்டில்லாவால் ஏற்பட்ட அழிவுகள் நிகழ்ந்த காலம் கி.பி 434 – கி.பி 468 ஆகும்
நான்காம் எக்காளம்
இதுவரை ஊதப்பட்ட மூன்று எக்காளங்களின் காலத்தில் ராஜாக்களும், பிரபுக்களும், போர்சேவகர்களும், ஜனங்களும் பெரும் அழிவை சந்தித்தனர் என்று பார்த்தோம். ஆனாலும் ஒவ்வொரு படையெடுப்புக்குப் பின்பும் மீண்டும் ஏதாவது ஒருவர் ரோமப்பேரரசனாக இருந்து காலத்தை ஓட்டிக்கொண்டிருந்தனர். இந்த சூழ்நிலையில் ஊதப்பட்ட நாலாம் எக்காளம், உலகளாவிய அதிகாரம் கொண்ட மேற்கு ரோம சாம்ராஜ்ஜியத்தை வரைபடத்திலேயே இல்லாமல் ஆக்கியது. இத்தோடு ஒருங்கிணைந்த ரோம சாம்ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியான மேற்கு ரோம் ஒரு சாம்ராஜ்ஜியமாக இல்லாமல் பத்து சிறு ராஜ்ஜியங்களாக உடைந்து போனது.
களிமண் கலந்த இரும்பு
தானியேல் நேபுகாத்நேச்சாரின் சொப்பனத்திற்கு சொன்ன விளக்கத்தில், இரும்பாலாகிய கால் ரோமைக் குறிக்கும் என்று நாம் அறிந்திருக்கிறோம். இந்த இரும்பாலாகிய கால்கள் அடுத்து இரும்பும், களிமண்ணும் கலந்த பாதங்களாகவும், விரல்களாகவும் பிரிந்தன என்று பார்த்தோம்.
- களிமண்-பலவீனமான பகுதி / சீக்கிரமே விழுந்துபோன மேற்கு ரோம சாம்ராஜ்ஜியம் (கி.பி 476 வரை)
- இரும்பு- பலமான, பல நூற்றாண்டுகளாக நிலைத்துநின்ற கிழக்கு ரோம சாம்ராஜ்ஜியம்- Byzanthine Empire (கி.பி 1454 வரை)
இதில் முதல் நான்கு எக்காளங்களின்போது அழிந்துபோன மேற்கு ரோம சாம்ராஜ்ஜியம், பத்து குட்டி ராஜ்ஜியங்களாகப் பிரிந்தது. இதில் மூன்று ராஜ்ஜியங்களைத் தள்ளிவிட்டு தோன்றிய ‘சின்னக்கொம்பு’ தான் பாப்பஸி என்றழைக்கப்படும் போப்புகளின் ராஜ்ஜியம். இந்த போப்புகள் உடைந்துபோன மேற்கு ரோம சாம்ராஜ்ஜியத்தை மீண்டும் மத அடிப்படையில் ஒருங்கிணைத்து உருவாக்கியது தான் ரோமன் கத்தோலிக்க சாம்ராஜ்ஜியம். இதில் ராஜாக்கள் ஆட்சி செய்தாலும், போப் தான் எல்லாவற்றிற்கும் தலையானவர். ராஜாக்களை நியமிப்பவரும் இவரே. இதில் ஜெர்மனியை ஆண்டு வந்த ராஜாக்கள் தங்களை ‘புனித ரோமப் பேரரசு’ (Holy Roman Empire) என்று அழைத்துக்கொண்டார்கள். இவர்கள் வேறு, நான் அடிக்கடி சொல்லியிருக்கும் ரோமன் கத்தோலிக்க சாம்ராஜ்ஜியம் வேறு. இந்த சின்னக்கொம்பு தான் ரோமன் கத்தோலிக்க சாம்ராஜ்ஜியத்தை ஆண்டுவந்தது. சரி, இந்த நாலாம் எக்காளத்தின்போது மேற்கு ரோம சாம்ராஜ்ஜியம் எப்படி நிரந்தரமாக அழிவுக்குள்ளானது என்று பார்ப்போம்.
‘‘நான்காம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது சூரியனில் மூன்றிலொரு பங்கும், சந்திரனில் மூன்றிலொருபங்கும், நட்சத்திரங்களில் மூன்றிலொருபங்கும் சேதப்பட்டது, அவற்றவற்றில் மூன்றிலொருபங்கு இருளடைந்தது; பகலிலும் மூன்றிலொருபங்கு பிரகாசமில்லாமற்போயிற்று, இரவிலும் அப்படியேயாயிற்று.’’ (வெளி 8:12)
இந்த எக்காளத்தின் இறுதியில் வானத்தின் மூன்று முக்கிய வெளிச்சம் கொடுக்கும் சேனைகளாகிய சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்களில் மூன்றிலொரு பங்கு சேதமடைந்தது மட்டுமல்லாமல், இருளடைந்தது என்று சொல்லப்பட்டுள்ளது. இதுவரை முதல் மூன்று எக்காளங்களில் மூன்று பகுதிகள் சேதமடைந்திருந்தாலும், நாலாம் எக்காளத்தில் நிகழ்ந்த சேதத்தில் ‘இருளடைந்தது’ என்ற வித்தியாசத்தைப் பார்க்கமுடியும். சூரியன், சந்திரன், நட்சத்திரம் என்பது மீண்டும் அரசியல் வானத்தின் ஆதிக்கங்களான ராஜாவையும், பிரபுக்களையும், மந்திரிகளையும் குறிக்கும். மொத்தத்தில் ஒரு ராஜ்ஜியம் இல்லாமல் போவதைத் தான் இருள் குறிப்பிடுகிறது.
‘‘மனுபுத்திரனே, நீ எகிப்தின் ராஜாவாகிய பார்வோனைக்குறித்துப் புலம்பி, அவனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: …உன்னை நான் அணைத்துப்போடுகையில், வானத்தை மூடி, அதின் நட்சத்திரங்களை இருண்டுபோகப்பண்ணுவேன்; சூரியனை மேகத்தினால் மூடுவேன், சந்திரனும் தன் ஒளியைக் கொடாதிருக்கும். நான் வானஜோதியான விளக்குகளையெல்லாம் உன்மேல் இருண்டு போகப்பண்ணி, உன் தேசத்தின்மேல் அந்தகாரத்தை வரப்பண்ணுவேன் என்று கர்த்தராகியஆண்டவர் சொல்லுகிறார்.’’ (எசேக்கியேல் 32:7,8)
இதைத்தான் உபத்திரவ காலம் முடிவடையும்போது நடக்கும் என்று இயேசுவும் சொல்லியுள்ளார்.
‘‘அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே (கி.பி 313 க்குப் பின்), சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக்கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்.’’ (மத்தேயு 24:29)
வேரை வெட்டிய ஓடோசர் (Odoacer the Heruli)
ஹெருலி இனத்தை சார்ந்த ஓடோசர் என்பவன், மேற்கு ரோம ராஜ்ஜியத்தின் கடைசி ராஜாவான ‘ரோமுலஸ் அகஸ்டுலஸ்’ (Romulus Agustulus) என்பவனை கி.பி 476 ல் வீழ்த்தி ராஜாவாகத் தன்னை முடிசூட்டிக்கொண்டான். இதனால் தான் எல்லா வரலாற்றாசிரியர்களும் மேற்கு ரோம சாம்ராஜ்ஜியம் வீழ்ந்து அழிந்த வருடம் கி.பி 476 என்று கூறுகின்றனர். நீங்கள் இணையத்தில் எங்கு பார்த்தாலும் இந்த வருடம் மிகத்தெளிவாகக் கூறப்பட்டிருக்கும். இப்படியாக சுமார் 75 வருடங்களில் நான்கு படையெடுப்புகளினால் மேற்கு ரோம சாம்ராஜ்ஜியம் ஒரு சாம்ராஜ்ஜியமாக இல்லாமல் வீழ்ந்து, சிறிது காலத்தில் பத்து குறு ராஜ்ஜியங்களாக உடைந்தது. இந்த உடைந்த மேற்கு ரோம சாம்ராஜ்ஜியத்திலிருந்து தோன்றி, காலப்போக்கில் தனி நாடுகளாக தங்களை உருவாக்கிக் கொண்டவைகள் தான் ஐரோப்பிய கண்டத்தின் தேசங்களாகும். எனவே ஐரோப்பாவும் ரோமும் ஒன்றுதான்.சுருக்கமாக சொல்லப்போனால் நான்காம் எக்காளம் கி.பி 469 ல் ஆரம்பித்து ஐந்தாம் எக்காளத்தின் சம்பவங்கள் ஆரம்பித்த கி.பி 570 வரை நீடித்தது. ஐந்தாம் எக்காளத்தின் ஆரம்பப்புள்ளியான கி.பி 570 ல் பூமிக்கு வந்த ‘நட்சத்திர நாயகன்’ யார் என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.