
- August 17, 2023
- admin
- 0
ஏழு முத்திரைகள் (கி.பி 96 - கி.பி 395)
இயேசு நிலையங்கி தரித்தவராய் யோவானுக்கு தரிசனம் தந்துவிட்டு, ஏழு சபைகளுக்குக் கடிதம் எழுதச்சொன்னார். அதன்பின்பு, யோவானைப் பரலோக தரிசனத்திற்கு நேராக எடுத்துச்சென்றார். அங்கு யோவானிடம் இயேசுவின் குரல், ‘இவைகளுக்குப் பின்பு சம்பவிக்கப் போகும் சம்பவங்களை உனக்குக் காண்பிக்கப்போகிறேன்’ என்று சொன்னது.
‘‘இவைகளுக்குப்பின்பு, இதோ, பரலோகத்தில் திறக்கப்பட்டிருந்த ஒரு வாசலைக் கண்டேன். முன்னே எக்காளசத்தம்போல என்னுடனே பேச நான் கேட்டிருந்த சத்தமானது: இங்கே ஏறிவா, இவைகளுக்குப்பின்பு சம்பவிக்கவேண்டியவைகளை உனக்குக் காண்பிப்பேன் என்று விளம்பினது.’’ (வெளி 4:1)
இவைகளுக்குப் பின்பு சம்பவிக்கப்போவது என்பது, யோவான் வெளிப்படுத்தலை எழுதிய காலத்திற்கு 2000 வருடங்களுக்குப் பின்புதான் நடக்கப்போகிறது என்ற அர்த்தத்தில் பலர் போதிக்கின்றனர். இங்கு நாம் யோவானுக்கு இயேசு வெளிப்படுத்தலின் முதல் வார்த்தையாக சொன்னதை மறந்து விட்டது தான் காரணம்.
‘‘சீக்கிரத்தில் (Soon/Shortly) சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, தேவன் இயேசுகிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும், இவர் தம்முடைய தூதனை அனுப்பி, தம்முடைய ஊழியக்காரனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தினதுமான விசேஷம்’’ (வெளி 1:1)
இவைகளுக்குப் பின்பு (கி.பி 96) சீக்கிரத்தில் நடக்கவேண்டிய சம்பவங்களைத் தான் இயேசு யோவானுக்குக் காண்பிக்க ஆரம்பித்தார். அதாவது யோவான் பத்மு தீவிலிருந்த அந்தக் காலக்கட்டத்திலிருந்தே அவைகள் சம்பவிக்கப் போகிறது என்பது தான் இதன் அர்த்தம்.
முத்திரையிடப்பட்ட புத்தகம்
பரலோகத்தில் சிங்காசனத்தில் வீற்றிருந்தவரையும், ஜீவன்களையும், மூப்பர்களையும் பார்த்து முடித்த பின்னர் அவர் கண்ட காட்சி தான் முத்திரிக்கப்பட்ட புஸ்தகம்.
‘‘அன்றியும், உள்ளும் புறம்பும் எழுதப்பட்டு, ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப்பட்டிருந்த ஒரு புஸ்தகத்தைச் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய வலதுகரத்திலே கண்டேன்.’’ (வெளி 5:1)
ஒரு புத்தகம் முத்திரையிடப்பட்டிருக்கிறது என்றால், அதிலிருந்து மூன்று காரியங்களை நாம் அறிந்துகொள்ளவேண்டும்.
- அது இரகசிய செய்திகளைக் கொண்டிருக்கலாம்
- தகுதியான நபர் அல்லது உடைப்பதற்கு அதிகாரம் பெற்ற நபரால் மட்டுமே அதைத் திறக்கமுடியும்.
- அதைத் திறந்தாலும், அதிலுள்ள இரகசியங்களை அறிந்த ஒருவரால் மட்டுமே அதைப் புரிந்துகொள்ள முடியும்.
இந்த ஏழு முத்திரைகளில் ஒவ்வொன்றையும் உடைக்கும்போது, அதைத்தொடர்ந்து சில சம்பவங்கள் நடைபெறுகின்றன. இவை அனைத்தும் அந்திகிறிஸ்துவின் ராஜ்ஜியமான ரோம சாம்ராஜ்ஜியத்தின் மீதான அழிவுகளைக் குறிக்கும் தீர்ப்புகளாகும்.
முத்திரைகளை உடைக்கத் தகுதியான நபர்
இந்த முத்திரிக்கப்பட்ட புத்தகத்தை உடைக்கத் தகுதியான நபர் யார்? என்று தூதன் கேட்டபோது, ஒருவரும் இல்லாததைக் கண்டு யோவான் அழுதுவிட்டார். இது நமக்கு வேண்டுமானால் சாதாரண காரியமாகத் தெரியலாம். ஆனால் யோவானுக்கு இந்த முத்திரையை உடைப்பதைத் தொடர்ந்து வரும் சம்பவங்கள் முக்கியமானதாகத் தெரிந்ததால், அதை உடைப்பதற்கு யாரும் தகுதியாக இல்லையோ, என்று ஏங்கி அழுகிறார்.
‘‘புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரவான் யாரென்று மிகுந்த சத்தமிட்டுக் கூறுகிற பலமுள்ள ஒரு தூதனையுங் கண்டேன். வானத்திலாவது, பூமியிலாவது, பூமியின் கீழாவது, ஒருவனும் அந்தப் புஸ்தகத்தைத் திறக்கவும், அதைப் பார்க்கவும் கூடாதிருந்தது. ஒருவனும் அந்தப் புஸ்தகத்தைத் திறந்து வாசிக்கவும் அதைப் பார்க்கவும் பாத்திரவானாகக் காணப்படாததினால் நான் மிகவும் அழுதேன்.’’ (வெளி 5:2-4)
எப்படி இயேசு மட்டுமே தகுதியானார்?
‘‘அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான்.’’ (வெளி 5:5)
‘‘தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களை தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு,’’ (வெளி 5:9)
இந்த ஏழு முத்திரைகளை உடைக்க பூமியிலுள்ள எந்த மனுஷனாலும், பூமியின் கீழ் பாதாளத்திலுள்ளவர்களாலும், பரலோகத்தில் இருக்கும் 24 மூப்பர்கள் மற்றும் கோடானுகோடி தூதர்களுக்கும் தகுதி இல்லாமல் போயிற்று. ஆனால் ஆட்டுக்குட்டியானவராகிய இயேசு ஒருவருக்கே அந்த தகுதி இருந்ததற்கான காரணங்களை யோவான் கூறியுள்ளார்.
- அவர் யூதா கோத்திரத்து சிங்கமும், தாவீதின் வேருமானவர்
- அவர் இதை உடைத்து புத்தகத்திலுள்ளவைகளை வெளிப்படுத்த பிசாசின் மேலும், மரணத்தின் மேலும் ஜெயம்கொண்டார்.
- அவர் ஒருவரே எல்லோருடைய பாவங்களுக்காகவும் அடிக்கப்பட்டு, இரத்தம் சிந்தி நம்மை மீட்டுக்கொண்டார்.
‘‘அங்கே அவர்கள் அவரைக் கண்டு பணிந்துகொண்டார்கள், சிலரோ சந்தேகப்பட்டார்கள். அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.’’ (மத்தேயு 28:17,18)
ஆம், இத்தனை தகுதியுள்ள இயேசுவிடம் மட்டுமே இந்த முத்திரைகளை உடைப்பதற்காக அந்த புத்தகம் அவர் கையில் கொடுக்கப்பட்டது.
‘‘அந்த ஆட்டுக்குட்டியானவர் வந்து, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தவருடைய வலதுகரத்திலிருந்த புஸ்தகத்தை வாங்கினார்.’’ (வெளி 5:7)
ஏழு முத்திரைகள்
முத்திரைகளைப் பற்றி ஏராளமான விளக்கங்களைப் பலரும் பல காலக்கட்டங்களில் சொல்லியுள்ளனர். அதில் பலர் இந்த முத்திரைகள் சபை இரகசியமாக எடுத்துக்கொள்ளப்பட்ட பின்பு வரும் அந்திகிறிஸ்துவின் கொடுமையான ஆட்சியின் காலத்திற்கு சற்று முன் அல்லது பின்பு தான் உடைக்கப்படும் என்ற ‘Futurism’ கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டே சொல்லியிருக்கிறார்கள். இந்த விளக்கம் முற்றிலும் தவறானதாகும் என்பது இத்தனை அத்தியாயங்களை வாசித்த உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று விசுவாசிக்கிறேன். இதில் எனக்கு ஆவியானவர் கற்றுக்கொடுத்த விளக்கங்களை வேத வசனங்களின் ஆதாரத்தோடு வரலாற்றை ஒப்பிட்டுக் கொடுத்துள்ளேன். இதுதான் சரியான விளக்கம் என்று நான் நிரூபிக்க விரும்பவில்லை. ஆனால் இந்த காலக்கட்டங்களில் தான் இவை நிறைவேறியது என்பதில் உறுதியாக இருக்கிறேன். ஒரு சில வருடங்கள் வேண்டுமானால் வரலாற்றில் முன்பின் இருக்கலாம்.
ஆனால் இந்த முத்திரையை உடைத்த பின் நிகழ்ந்த சம்பவங்கள் எல்லாம் சிலை வணக்கத்தைப் பின்பற்றின, இயேசுவை சிலுவையில் அறைந்த ஒருங்கிணைந்த ரோம சாம்ராஜ்ஜியத்தின் மீது விதிக்கப்பட்ட தீர்ப்புகள் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.
முதல் முத்திரை
‘‘ஆட்டுக்குட்டியானவர் முத்திரைகளில் ஒன்றை உடைக்கக்கண்டேன். அப்பொழுது நான்கு ஜீவன்களில் ஒன்று என்னை நோக்கி: நீ வந்து பார் என்று இடிமுழக்கம்போன்ற சத்தமாய்ச் சொல்லக்கேட்டேன். நான் பார்த்தபோது, இதோ, ஒரு வெள்ளைக்குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் வில்லைப் பிடித்திருந்தான்; அவனுக்கு ஒரு கிரீடங் கொடுக்கப்பட்டது; அவன் ஜெயிக்கிறவனாகவும் ஜெயிப்பவனாகவும் புறப்பட்டான்.’’ (வெளி 6:1,2)
வெண்மை என்றாலே பரிசுத்தம், தூய்மை என்பதைக் குறிக்கும்.
- பரிசுத்தவான்களுக்கு வெண்வஸ்திரம் கொடுக்கப்பட்டது.
- இயேசுவின் தலை முடியும் உறைந்த மழையைப்போல வெண்மையாக இருந்தது. (வெளி 1:14)
- இயேசுவும், பரலோக சேனைகளும் வெள்ளைக் குதிரை மேல் ஏறிவந்தார்கள். (வெளி 19:11,14)
- இயேசுவின் வசனத்தால் புடமிடப்பட்டவர்கள். (அநேகர் சுத்தமும் வெண்மையுமாக்கப்பட்டு, புடமிடப்பட்டவர்களாய் விளங்குவார்கள் – தானியேல் 12:10)
படம் 52: வெள்ளைக்குதிரை

யார் வெள்ளைக் குதிரை மேல் ஏறிச்செல்லுவார்?
‘‘பரலோகத்திலுள்ள சேனைகள் வெண்மையும் சுத்தமுமான மெல்லிய வஸ்திரந்தரித்தவர்களாய், வெள்ளைக் குதிரைகளின் மேல் ஏறி, அவருக்குப் பின்சென்றார்கள்.’’ (வெளி 19:14)
இயேசுவைப் பின்பற்றுகிறவர்களே வெள்ளைக்குதிரையின் மேல் ஏறிச்செல்வார்கள்.
அம்பு இல்லாத வில்
அம்பு இல்லாத வில்லினால் சரீரப்பிரகாரமான யுத்தம் செய்யமுடியாது; இரத்தம் சிந்துதலையும் ஏற்படுத்தாது. அப்படியானால் ஆவிக்குரிய யுத்தத்தினால், இரத்தம் சிந்தாத வெற்றியான ஆத்துமாக்களை வெற்றிகொள்ளும் ஒரு யுத்தத்தில் தான் இந்த வில் பயன்படுத்தப்படும். இந்த வில் தேவனுடைய வார்த்தை அல்லது சுவிசேஷம் தான் என்பது சந்தேகமே இல்லை.
‘‘கர்த்தர் நதிகளின்மேல் கோபமாயிருந்தாரோ? தேவரீர் உம்முடைய குதிரைகளின்மேலும் இரட்சிப்புண்டாக்குகிற உம்முடைய இரதங்களின்மேலும் ஏறிவருகிறபோது, உமது கோபம் நதிகளுக்கும் உமது சினம் சமுத்திரத்திற்கும் விரோதமாயிருந்ததோ? கோத்திரங்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த வாக்கின்படியே உம்முடைய வில் நாணேற்றப்பட்டதாக விளங்கினது; சேலா. நீர் பூமியைப் பிளந்து ஆறுகளை உண்டாக்கினீர்.’’ (ஆபகூக் 3:8,9)
ஜெயிக்கிறவன் ஜெயிப்பவன்
இந்த குதிரை மேல் ஏறியிருந்தவன் ஜெயம் பெற்றவனாக இருந்தானாம். அதனால் தான் அவன் தலையில் கிரீடம் இருந்தது. வெளிப்படுத்தல் தீர்க்கதரிசன புத்தகத்தில் ‘ஜெயங்கொள்கிறவன் எவனோ’ என்ற வார்த்தை பல இடங்களில் வருகிறது. இவை எல்லாமே வசனத்தினால் தங்களைக் காத்துக்கொண்டவர்களையே குறிக்கிறது.
‘‘மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்.’’ (வெளி 12:11)
- வெள்ளைநிறம் -பரிசுத்தம்/ தூய்மை/ நீதி
- குதிரை-யுத்தம்
- வில்-இரத்தம் சிந்தாமல் ஜெயிக்கும் ஆயுதம், அதாவது தேவனுடைய வார்த்தை
- கிரீடம்-ஜெயிப்பவன் தலையில் சூடப்படுவது
- வெள்ளைக்குதிரையின் மீது ஏறியிருந்தவன் – ரோம சாம்ராஜ்ஜியத்தின் காலத்தில் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டு அநேகர் ஆதாயப்படுத்தப்பட்ட காலம். (ஆதிசபை வேகமாக வளர்ந்த காலம்)
- காலக்கட்டம் : கி.பி 96 – கி.பி 180
வரலாற்று ஒப்பீடு
இயேசுவின் உலகப்பிரவேசத்திற்குப் பிறகு அவருடன் இருந்த அப்போஸ்தலர்களால் சுவிசேஷம் பரவ ஆரம்பித்தது. அப்போஸ்தலனாகிய தோமா கூட இந்தியாவிற்கு வந்தார். ஆனால் கி.பி 54 முதல் 68 வரை கொடுங்கோலனான நீரோவின் ஆட்சிகாலத்தில் சுவிசேஷம் ஒடுக்கப்பட்டது. அதற்குப் பின்பும் டொமிடீயனின் காலம் வரை இந்தத் தடை தொடர்ந்தது. இந்த முத்திரையின் ஆரம்பப்புள்ளி, கிறிஸ்தவர்களைக் கொடுமைப்படுத்திய டொமிடீயன் (Domitian) இறந்த காலமாகிய கி.பி 96 லிருந்து ஆரம்பிக்கிறது. இவன் தான் யோவானை பத்மு தீவில் சிறைவைத்தவன். இதன் முடிவுப்புள்ளி கொமோடஸ் (Commodus) என்ற ரோமப்பேரரசன் ஆட்சிக்கு வந்த காலமாகும் (கி.பி 180). சில எதிர்ப்புகள் இருந்தாலும் இந்த இடைப்பட்ட காலக்கட்டத்தில் தான், சுவிசேஷம் ரோம ராஜ்ஜியத்தின் ஆளுகைக்குள் இருந்த ஐரோப்பா மற்றும் ஆசியா மைனரில் வேகமாகப் பரவியது. ஏராளமானோர் கிறிஸ்துவை சொந்த ரட்சகராக ஏற்றுக்கொண்டனர். எனவே முதலாம் முத்திரை என்பது ரோம சாம்ராஜ்ஜியத்தில் சுவிசேஷம் வேகமாகப் பரவி அநேகரை கிறிஸ்துவுக்குள் வெற்றி சிறந்த காலத்தின் சம்பவமாகும்.
இரண்டாம் முத்திரை
இரண்டாம் முத்திரையின் சம்பவங்கள் எல்லாம் முதல் முத்திரையின் சம்பவங்களின் தொடர்ச்சியே. ராஜ்ஜியங்களைப் பற்றிய தரிசனங்களைப் பற்றி வேதம் தொடர்ச்சியாகவே சொல்லிவைத்திருக்கிறது என்பதை நான் மீண்டும் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
‘‘அவர் இரண்டாம் முத்திரையை உடைத்தபோது, இரண்டாம் ஜீவனானது: நீ வந்துபார் என்று சொல்லக்கேட்டேன். அப்பொழுது சிவப்பான வேறொரு குதிரை புறப்பட்டது; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு, பூமியிலுள்ளவர்கள் ஒருவரையொருவர் கொலைசெய்யத்தக்கதாக சமாதானத்தைப் பூமியிலிருந்தெடுத்துப்போடும்படியான அதிகாரம் கொடுக்கப்பட்டது; ஒரு பெரிய பட்டயமும் அவனுக்குக் கொடுக்கப்பட்டது.’’ (வெளி 6:3,4)
ராஜ்ஜியங்களையும், யுத்தங்களையும் பற்றி பேசும்போது, சிவப்பு என்றாலே ‘இரத்தம் சிந்துதல்’ என்பதைக் குறிக்கும். ஆவிக்குரிய அர்த்தங்களில் சிவப்பு என்பது பாவத்தையும் குறிக்கும். இங்கு சிவப்பு ‘குதிரை’ என்று சொல்லப்பட்டுள்ளதால் யுத்தம் அல்லது அழிவு சம்பந்தப்பட்ட இரத்தம் சிந்துதலையே குறிப்பதாகும்.
‘‘தங்களோடு யுத்தம்பண்ண ராஜாக்கள் வருகிறதை மோவாபியரெல்லாரும் கேட்டபோது, அவர்கள் ஆயுதம் தரிக்கத்தக்க வயதுள்ளவர்களையும், அதற்கு மேல் தரமானவர்கள் எல்லாரையும் கூட்டி அழைத்துக்கொண்டு வந்து எல்லையிலே நின்றார்கள். மோவாபியர் அதிகாலமே எழுந்தபோது சூரியன் தண்ணீரின் மேல் பிரகாசித்ததினால் அந்தத் தண்ணீர் அவர்களுக்கு இரத்தம்போல் சிவப்பாய்க் காணப்பட்டது.’’ (2 இராஜாக்கள் 3:21,22)
படம் 53: சிவப்பு குதிரை

இந்த சிவப்புக்குதிரையின் மேல் இருந்தவனுக்கு மூன்று விதமான அதிகாரங்கள் கொடுக்கப்பட்டது.
- பூமியிலிருந்து சமாதானத்தை எடுத்துப்போட
- பூமியிலுள்ளவர்கள் ஒருவரையொருவர் கொலைசெய்ய
- கையில் பெரிய பட்டயம்
- பூமியிலிருந்து சமாதானத்தை எடுத்துப்போட்டால் என்ன நடக்கும்? சண்டைகளும், விரோதங்களும், உபத்திரவங்களும் தானே நடக்கும்.
- இந்தசமாதானக் குறைச்சல் எப்படி வந்தது? பட்டயம் உள்ளே நுழைந்ததால் தான் வந்தது.
- அப்படியானால் இந்த இரண்டும் ரோம ராஜ்ஜியம் ஆண்ட ஐரோப்பாவில் யுத்தங்களால் வந்த விளைவுகளையே குறிக்கிறது.
- இந்தசமாதானக் குறைச்சலான காலக்கட்டங்களில் ஏராளமான உபத்திரவம் மற்றும் இரத்தம் சிந்துதலுக்கு மத்தியிலேயே சுவிசேஷம் பரவியது.
எப்படிப்பட்ட யுத்தம்?
பரிசுத்த வேதாகமத்தில் ஏராளமான யுத்தங்களைப் பற்றி கூறப்பட்டிருந்தாலும், சில யுத்தங்கள் சிறப்பு வாய்ந்தவை. ஏனென்றால் பெரும்பாலான யுத்தங்களில் இரு நாட்டுப் படைவீரர்களும் ஒருவரையொருவர் தாக்கி அழித்துக்கொள்வார்கள். ஆனால் சில யுத்தங்களில் ஒரே நாட்டு வீரர்கள், அவர்களுக்குள்ளே சண்டையிட்டு, வெட்டி அழிந்துபோகும் யுத்தங்கள் கர்த்தரால் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. அதற்குப் பெயர் தான் உள்நாட்டு யுத்தம் அல்லது கலவரம் என்று பெயர்.
‘‘அவர்கள் (யோசபாத்தின் படை) பாடித்துதிசெய்யத் தொடங்கினபோது, யூதாவுக்கு விரோதமாய் வந்து பதிவிருந்த அம்மோன் புத்திரரையும், மோவாபியரையும், சேயீர் மலைத்தேசத்தாரையும், ஒருவருக்கு விரோதமாய் ஒருவரைக் கர்த்தர் எழும்பப்பண்ணினதினால் அவர்கள் வெட்டுண்டு விழுந்தார்கள். எப்படியெனில், அம்மோன் புத்திரரும் மோவாபியரும், சேயீர் மலைத்தேசக்குடிகளைச் சங்கரிக்கவும் அழிக்கவும் அவர்களுக்கு விரோதமாய் எழும்பினார்கள்; சேயீர் குடிகளை அழித்துத் தீர்ந்தபோது, தாங்களும் தங்களில் ஒருவரையொருவர் அழிக்கத்தக்கவிதமாய்க் கைகலந்தார்கள்.’’ (2 நாளாகமம் 20:22,23)
‘முந்நூறுபேரும் (கிதியோனின் படை) எக்காளங்களை ஊதுகையில், கர்த்தர் பாளயமெங்கும் ஒருவர் பட்டயத்தை ஒருவருக்கு விரோதமாய் ஓங்கப்பண்ணினார்; சேனையானது சேரோத்திலுள்ள பெத்சித்தாமட்டும், தாபாத்திற்குச் சமீபமான ஆபேல்மேகொலாவின் எல்லைமட்டும் ஓடிப்போயிற்று.’’ (நியாதிபதிகள் 7:22)
ரோம ராஜ்ஜியத்தின் உள்நாட்டு யுத்தங்கள் (Roman Civil war)
அப்படியானால் இந்த ஒருவரையொருவர் கொலை செய்யத்தக்கதாக நடந்த யுத்தம், ரோம சாம்ராஜ்ஜியத்தின் ராஜாக்கள் தங்களுக்குள் செய்த உள்நாட்டு யுத்தங்களாகும். முதல் முத்திரையின் காலம் முடிந்தவுடன், ரோம சாம்ராஜ்ஜியத்தின் பேரரசனாக அமர்வதற்கு பலர் போட்டியிட்டனர். இதனால் அதிகார ஆசையில் அவர்கள் ஒருவரையொருவர் அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதிலும் குறிப்பாக கி.பி 193 ஆம் வருடத்தில் மட்டுமே ‘ஐந்து ராஜாக்கள்’ போட்டியிட்டு யுத்தங்களில் ஈடுபட்டனர். (Year of Five Emperors: pertinax, didius Julianus, Pescennius Niger, Clodius Albius and Spetimius Severus) இதன் இறுதியில் செப்டிமஸ் செவிரஸ் ஆட்சியைக் கைப்பற்றினான். ஆனாலும் இதனை எதிர்த்து பெசீனியஸ் நைகர் போர் தொடுத்ததால், இருதரப்பு ரோம வீரர்களும் தங்களுக்குள் யுத்தம் செய்து பெரும் அழிவை சந்தித்தனர். இந்த உள்நாட்டு யுத்தங்களால் இரத்தம் சிந்துதல் நிகழ்ந்த காலக்கட்டமாகிய கி.பி 180 முதல் கி.பி 235 வரையிலான காலக்கட்டத்தையே இரண்டாம் முத்திரை உடைக்கப்பட்டதைத் தொடர்ந்த சம்பவங்கள் குறிப்பிடுகின்றன. இது இயேசுவால் ஒருங்கிணைந்த ரோம சாம்ராஜ்ஜியத்தின் மீது விதிக்கப்பட்ட முதல் தண்டனைத் தீர்ப்பும் கூட.
நம்முடைய வாழ்நாளிலே கூட உலகநாடுகளில் ஏராளமான உள்நாட்டுக் கலவரங்களையும், ஆட்சி அதிகாரங்களுக்கான உள்நாட்டு யுத்தங்களையும் பார்த்திருக்கிறோம். அப்படி பல வருடங்களாக உள்நாட்டு யுத்தங்களிலே அழிவுகளை சந்திக்கும் நாடுகள் எப்படிப்பட்ட விளைவுகளை சந்தித்திருக்கிறது என்பதை ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்களேன். அப்படிப்பட்ட நாடுகள் பின்வரும் பாதிப்புகளில் ஒன்றையோ, அதற்கு மேற்பட்டவைகளையோ சந்திக்கலாம்.
- பண வீக்கம் அல்லது பொருளாதார சரிவு
- அதனால் அதிக வரிச்சுமை
- பஞ்சம் மற்றும் உணவுப்பற்றாக்குறை
- கொள்ளை நோய்கள்
இந்த பின் விளைவுகளுக்கு ரோம ராஜ்ஜியத்தின் உள்நாட்டு யுத்தங்களும் விதிவிலக்கல்ல.
‘‘அவர் மூன்றாம் முத்திரையை உடைத்தபோது, மூன்றாம் ஜீவனானது: நீ வந்துபார் என்று சொல்லக்கேட்டேன். நான் பார்த்தபோது, இதோ, ஒரு கறுப்புக்குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் ஒரு தராசைத் தன் கையிலே பிடித்திருந்தான். அப்பொழுது, ஒரு பணத்துக்கு ஒருபடி கோதுமையென்றும், ஒரு பணத்துக்கு மூன்றுபடி வாற்கோதுமையென்றும், எண்ணெயையும் திராட்சரசத்தையும் சேதப்படுத்தாதே என்றும், நான்கு ஜீவன்களின் மத்தியிலிருந்து உண்டான சத்தத்தைக் கேட்டேன்.’’ (வெளி 6:5,6)
படம் 54: கறுப்புக்குதிரை

கறுப்பு: நாசம் அல்லது அழிவின் நிறம்
பல தீர்க்கதரிசனங்களில், தேசங்கள் மீது வரும் அழிவுகளின் பின்விளைவாக கறுப்பு நிறம் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளதைப் பார்க்கலாம். அவற்றில் ஒருசிலவற்றை மட்டும் கொடுத்துள்ளேன்.
‘‘பின்னும் நான் பார்க்கும்போது, கர்த்தராலும், அவருடைய உக்கிரகோபத்தாலும் பயிர்நிலம் வனாந்தரமாயிற்று; அதின் பட்டணங்களெல்லாம் இடிந்துபோயின. தேசமெல்லாம் பாழாய்ப்போம்; ஆகிலும் சர்வசங்காரம் செய்யேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். இதினிமித்தம் பூமி புலம்பும்; உயர இருக்கிற வானங்கள் கறுத்துப்போம்; நான் அதைச் சொன்னேன், அதை நிர்ணயம் பண்ணினேன்; நான் மனஸ்தாபப்படுவதும் இல்லை; நான் அதைவிட்டுத் திரும்புவதும் இல்லை.’’ (எரேமியா 4:26-28)
‘‘என் ஜனமாகிய குமாரத்தியின் காயங்களினால் நானும் காயப்பட்டேன்; கரிகறுத்திருக்கிறேன்; திகைப்பு என்னைப் பிடித்தது.’’ (எரேமியா 8:21)
உணவுப்பற்றாக்குறை
ஒரு பணத்திற்கு ஒருபடி கோதுமை, ஒரு பணத்திற்கு மூன்றுபடி வாற்கோதுமை என்பது பஞ்சம் அல்லது உணவுப்பற்றாக்குறையைக் குறிக்கும். இது ரோம சாம்ராஜ்ஜியத்தின் உள்நாட்டு யுத்தங்களின் விளைவாக ஏற்பட்டதாகும்.
‘‘என் உடன்படிக்கையை மீறினதற்குப் பழிவாங்கும் பட்டயத்தை உங்கள்மேல் வரப்பண்ணி, நீங்கள் உங்கள் பட்டணங்களில் சேர்ந்தபின், கொள்ளைநோயை உங்கள் நடுவிலே அனுப்புவேன்; சத்துருவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவீர்கள். உங்கள் அப்பம் என்னும் ஆதரவுகோலை நான் முறித்துப்போடும்போது, பத்து ஸ்திரீகள் ஒரே அடுப்பில் உங்கள் அப்பத்தைச் சுட்டு, அதைத் திரும்ப உங்களுக்கு நிறுத்துக்கொடுப்பார்கள்; நீங்கள் சாப்பிட்டும் திருப்தியடையமாட்டீர்கள்’’ (லேவியராகமம் 26:25,26)
‘‘நான் எருசலேமிலே அப்பம் என்னும் ஆதரவுகோலை முறிக்கிறேன்; அவர்கள் அப்பத்தை நிறையின்படியே விசாரத்தோடே சாப்பிட்டு, தண்ணீரை அளவின்படியே திடுக்கிடுதலோடே குடிப்பார்கள்.’’ (எசேக்கியேல் 4:17)
இஸ்ரவேலின் ராஜாவாகிய யோராமின் நாட்களிலே, சீரிய ராஜா பெனாதாத் சமாரியாவைக் கடுமையாக முற்றிக்கையிட்டான். அப்பொழுது வெளியிலிருந்து கொள்முதல் செய்யும் தானிய வர்த்தகம் பாதிக்கப்பட்டதினால் ஏற்பட்ட பஞ்சத்தின் தீவிரத்தைப் பற்றி வேதம் சொல்லியிருக்கும் வார்த்தைகள் இதுதான்.
‘‘அதினால் சமாரியாவிலே கொடிய பஞ்சமுண்டாயிற்று; ஒரு கழுதைத் தலை எண்பது வெள்ளிக்காசுக்கும், புறாக்களுக்குப் போடுகிற காற்படி பயறு ஐந்து வெள்ளிக்காசுக்கும் விற்கப்படுமட்டும் அதை முற்றிக்கைபோட்டார்கள்.’’ (2 இராஜாக்கள் 7:25)
ஆனால் இந்த முற்றிக்கை முடிவுக்கு வரும்போது என்ன நடக்கும் என்று கர்த்தர் எலிசாவிற்கு கொடுத்த வார்த்தை இது.
‘‘அப்பொழுது எலிசா: கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; நாளை இந்நேரத்தில் சமாரியாவின் வாசலிலே ஒரு மரக்கால் கோதுமை மாவு ஒரு சேக்கலுக்கும், இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும் விற்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.’’ (2 இராஜாக்கள் 7:1)
பரிசுத்த வேதம் பல இடங்களில் வர்த்தகங்களைப் பற்றியும், பொருளாதார நெருக்கடிகளைப் பற்றியும் சொல்லியிருக்கிறது. இந்த பாணியையே இயேசுவும் வெளிப்படுத்தலின் இரகசியங்களைப் பற்றி சொல்லும் இடங்களில் சங்கேத மொழியாகப் பயன்படுத்தியிருக்கிறார். மேலும் தராசு என்பது பொருளாதாரம், வர்த்தகம், அளந்து பயன்படுத்துவது என்பதைக் குறிக்கும்.
மூன்றாம் நூற்றாண்டு பொருளாதார சீரழிவு (Third century crisis)
நீங்கள் வரலாற்றை ஆராய்ந்து பார்த்தால், மூன்றாம் நூற்றாண்டில் ரோம சாம்ராஜ்ஜியம் சந்தித்த மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி பற்றி வாசிக்கலாம். இந்த பொருளாதார நெருக்கடிக்கான காரணங்களாவன:
- உள்நாட்டு யுத்தங்களுக்காக ஒவ்வொரு தலைவர்களும் தங்களுக்கென்று ஒரு படையைத் திரட்டினர். அந்தப் படைவீரர்களுக்குத் தேவையான உணவு, இரண்டு மடங்கு சம்பளம் ஆகியவற்றிற்கு பொதுமக்களிடம் பல மடங்கு வரி வசூல் செய்யப்பட்டது.
- இதனால்வர்த்தகம் பாதிக்கப்பட்டது. விலைவாசி உயர்ந்தது.
- பணமதிப்பு குறைந்ததினால் வரியானது பணமாக வசூலிக்கப்படாமல் எண்ணெயாகவும், திராட்சரசமாகவும் பண்டமாற்றுபொருளைப் போல வாங்கப்பட்டது. (எண்ணெயையும், திராட்ச ரசத்தையும் சேதப்படுத்தாதே என்ற சத்தம்)
- இந்தநேரத்தில் ரோம் மீது படையெடுத்து வந்த பார்பேரியர்களை வேறு எதிர்கொள்ளவேண்டியது இருந்ததால், சூழ்நிலை இன்னும் மோசமாகியது.
எனவே இந்த மூன்றாம் முத்திரை என்பது ரோம சாம்ராஜ்ஜியத்தின் பொருளாதார சரிவு மற்றும் கொடூரமான வரிவிதிப்பு விதிக்கப்பட்ட காலமான கி.பி 235 முதல் கி.பி 250 வரையிலான காலக்கட்டத்தைக் குறிக்கிறது.
உள்நாட்டு யுத்தங்களை சந்திக்கும் எந்த தேசமும், அதன்பின்னர் பஞ்சங்களையும், கொள்ளைநோய்களையும் சந்திக்கவேண்டும் என்பது எழுதப்படாத விதி. மூன்றாம் முத்திரையின் காலத்தில் ரோம சாம்ராஜ்ஜியத்தில் ஏற்பட்ட பணமதிப்பிழப்பின் காரணமாகவும், போர்வீரர்களின் பெருக்கத்தின் காரணமாகவும் விவசாயம் நலிவடைந்தது. அதனால் ரோம சாம்ராஜ்ஜியத்தின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் பெரும் பஞ்சங்களும், கொள்ளைநோய்களும் ஏற்பட்டன.
‘‘அவர் நாலாம் முத்திரையை உடைத்தபோது, நாலாம் ஜீவனானது: நீ வந்துபார் என்று சொல்லுஞ் சத்தத்தைக் கேட்டேன். நான் பார்த்தபோது, இதோ, மங்கினநிறமுள்ள ஒரு குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர்; பாதாளம் அவன்பின் சென்றது. பட்டயத்தினாலும், பஞ்சத்தினாலும்,சாவினாலும், பூமியின் துஷ்டமிருகங்களினாலும்,பூமியின் காற்பங்கிலுள்ளவர்களைக் கொலைசெய்யும்படியான அதிகாரம் அவைகளுக்குக் கொடுக்கப்பட்டது.’’ (வெளி 6:7,8)
நாலாம் மிருகத்தின் மேல் ஏறியிருந்தவனைப் பற்றி மூன்று காரியங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
- அவனுக்கு மரணம் என்று பெயர்
- பாதாளம் அவன் பின் சென்றது.
- நான்கு விதமான வாதைகளினால் பூமியின் காற்பங்கு (25%) ஜனங்களை அழிக்கும் அதிகாரம் கொண்டவன்.

மங்கின நிறம்: மரணத்தின் அடையாளம்
இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமல் விக்கிரகங்களை வணங்கி, நரபலியிட்டு வந்ததினால், எரேமியா மற்றும் எசேக்கியேல் தீர்க்கதரிசிகள் மூலமாக கர்த்தர் ஏராளமான எச்சரிப்புகளைக் கொடுத்தார். அவைகள் எல்லாம் இஸ்ரவேல் ஜனங்களுக்கு அழிவைக்கொண்டுவரும் தண்டனைகளாக சொல்லப்பட்டுள்ளன.
‘‘உங்களை அழிப்பதற்கு நான் அனுப்பும் அழிவுக்கேதுவான பஞ்சத்தின் கொடிய அம்புகளை நான் அவர்களுக்குள்ளே எய்யும்போது, நான் பஞ்சத்தை உங்கள்மேல் அதிகரிக்கப்பண்ணி, உங்கள் அப்பம் என்னும் ஆதரவுகோலை முறித்துப்போடுவேன். பஞ்சத்தையும், உன்னைப் பிள்ளையில்லாமற்போகப்பண்ணும் துஷ்டமிருகங்களையும் உங்களுக்கு விரோதமாக அனுப்புவேன்; கொள்ளைநோயும் இரத்தஞ்சிந்துதலும் உன்னில் சுற்றித்திரியும்; பட்டயத்தை நான் உன்மேல் வரப்பண்ணுவேன்; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன் என்றார்.’’ (எசேக்கியேல் 5:16,17)
‘‘ஆகையால், கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்; நான் மனுஷரையும் மிருகங்களையும் நாசம்பண்ணும்படி எருசலேமுக்கு விரோதமாகப் பட்டயம், பஞ்சம், துஷ்டமிருகங்கள், கொள்ளைநோய் என்னும் இந்நான்கு கொடிய தண்டனைகளையும் அனுப்பும்போது எவ்வளவு அதிக சங்காரமாகும்?’’ (எசேக்கியேல் 14:21)
எந்தவொரு ராஜ்ஜியத்தையும் கர்த்தர் அழிக்க அல்லது தண்டிக்க தீர்மானித்துவிட்டால் பஞ்சம், பட்டயம், துஷ்டமிருகங்கள் மற்றும் கொள்ளைநோய் ஆகிய நான்குவிதமான கொடிய அழிவுகளை வரப்பண்ணுவார். அதுதான் ரோம சாம்ராஜ்ஜியத்தின் மீதும் ‘மங்கின நிறமுள்ள’ குதிரையாக விதிக்கப்பட்டது. அதன் மேல் ஏறியிருந்தவன், இத்தனை வாதைகளினால் பூமியிலுள்ள (ரோம சாம்ராஜ்ஜியத்தின் ஆளுகைக்குட்பட்ட ஐரோப்பா) ஜனங்களை கொல்வதற்கு அதிகாரம் பெற்ற ‘மரணம்’ என்ற பெயருள்ளவனாய் இருந்தான்.
பாதாளமும் மரணமும்
மரணித்தவர்கள் செல்லும் இடம் பாதாளம் ஆகும். குப்பைகளை எடுக்க வருகிறவர்கள் தங்களுடன் குப்பை வண்டியை இழுத்துவருவார்கள். அதே போல் மரணத்திற்கு அதிகாரம் உடையவனின் பின்னால் பாதாளம் சென்றதில் ஆச்சரியமில்லை. இதனை அனுமதித்த இயேசுவிடம் தான் அத்தனை அதிகாரமும் இருக்கிறது என்பதையும் மறந்துவிடக்கூடாது.
‘‘மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.’’ (வெளி 1:18)
‘‘அவர் ஐந்தாம் முத்திரையை உடைத்தபோது, தேவவசனத்தினிமித்தமும் தாங்கள் கொடுத்த சாட்சியினிமித்தமும் கொல்லப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களைப் பலிபீடத்தின்கீழே கண்டேன். அவர்கள்: பரிசுத்தமும் சத்தியமுமுள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக்குறித்து எதுவரைக்கும் நியாயத்தீர்ப்புச்செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள்.’’ (வெளி 6;9,10)
மகா உபத்திரவம் (The Great Persecution/ Diocletian persecution)
இந்தக் காலக்கட்டத்தில் ராஜாவாக இருந்த டயோகிளிட்டியனின் காலத்தில் தான் கிறிஸ்தவ விசுவாசிகள் மகா உபத்திரவங்களை சந்தித்தார்கள் என்று ஏற்கனவே ரோம் சாம்ராஜ்ஜியத்தைப் பற்றிய அத்தியாயத்தில் சொல்லியுள்ளது உங்களுக்கு நினைவிருக்கும் என்று விசுவாசிக்கிறேன். இவனது காலத்தில், குறிப்பாக சிமிர்னா சபையை சேர்ந்த விசுவாசிகள் 10 வருடங்கள் மகா உபத்திரவங்களை சந்திப்பார்கள் என்று இயேசு முன்னமே யோவானுக்கு சொல்லியிருந்தார்.
‘‘நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படும்பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்து நாள் உபத்திரப்படுவீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.’’ (வெளி 2:10)
இந்த பத்து வருட மகா உபத்திரவகாலம் கி.பி 303 முதல் 313 வரை நீடித்தது என்பதற்குப் பல வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. கான்ஸ்டாண்டைன் ரோமப்பேரரசைக் கைப்பற்றி கிறிஸ்தவத்தைத் தழுவியதால் கி.பி 313 க்குப் பின் சிறிதுகாலங்கள் கிறிஸ்தவ விசுவாசிகள் உபத்திரவப்படுத்தப்படுவது நிறுத்தப்பட்டது. இந்த உபத்திரவம் ரோம ராஜாக்களால் நிகழ்த்தப்பட்டாலும் அவர்களுக்குப் பின் இருந்து செயல்பட்டது சாத்தான் என்று ஆவிக்குரிய யுத்தங்களைப் பற்றி விளக்கமாகப் பேசும் வெளிப்படுத்தல் 12 ஆம் அதிகாரம் கூறுகிறது.
‘‘அப்பொழுது வேறொரு அடையாளம் வானத்திலே காணப்பட்டது; ஏழு தலைகளையும், பத்துக் கொம்புகளையும், தன் தலைகளின்மேல் ஏழு முடிகளையுமுடைய சிவப்பான பெரிய வலுசர்ப்பமிருந்தது. அதின் வால் வானத்தின் நட்சத்திரங்களில் மூன்றிலொருபங்கை இழுத்து, அவைகளைப் பூமியில் விழத்தள்ளிற்று; பிரசவவேதனைப்படுகிற அந்த ஸ்திரீ பிள்ளைபெற்றவுடனே, அவளுடைய பிள்ளையைப் பட்சித்துப்போடும்படிக்கு அந்த வலுசர்ப்பம் அவளுக்கு முன்பாக நின்றது.’’ (வெளி 12:3,4)
இது உபத்திரவத்தின் மத்தியில் வளர்ந்து வருகிற சபையைப் பற்றி குறிக்கும் என்று ‘சூரியனை அணிந்த ஸ்திரீ’ என்ற அத்தியாயத்தில் சொல்லியுள்ளேன்.
யார் இந்த பலிபீடத்தின் கீழிருந்த ஆத்துமாக்கள்?
தேவனாகிய கர்த்தருக்கு செலுத்தப்படும் பலிகளின் இரத்தத்தைக் கொம்புகளின் மீது பூசிவிட்டு, மீதி இரத்தத்தை பலிபீடத்தின் அடிப்பகுதியிலே ஊற்றிவிடும்படி, கர்த்தர் மோசேக்கு கட்டளயிட்டது குறித்து நீங்கள் வாசித்திருப்பீர்கள்.
‘‘அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, உன் விரலினால் பலிபீடத்தின் கொம்புகள்மேல் இட்டு, மற்ற இரத்தம் முழுவதையும் பலிபீடத்தின் அடியிலே ஊற்றி,’’ (யாத்திராகமம் 29:12)
‘‘அப்பொழுது ஆசாரியன் அதின் இரத்தத்தில் கொஞ்சம் தன் விரலால் எடுத்து, தகனபலிபீடத்துக் கொம்புகளின்மேல் பூசி, மற்ற இரத்தத்தைத் தகன பலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிட்டு,’’ (லேவியராகமம் 4:25)
இந்த இரத்தம் ஊற்றப்பட்ட பின்பு அந்த பலிபீடத்தின் மீது தகனிக்கப்படும் கொழுப்பு தேவனுக்கு சுகந்த வாசனையாய் இருந்தது. அதுபோலவே ரோம சாம்ராஜ்ஜியத்தினால் கொல்லப்பட்டு, தேவனுக்கென்று முதற்பலனாய் எடுத்துக்கொள்ளப்பட்ட, இரத்த சாட்சிகளாய் மரித்த பரிசுத்தவான்களுடைய ஆத்துமாக்கள் பலிபீடத்தின் கீழ் இருப்பதாக யோவான் பார்த்தது மீண்டும் ஒரு சிம்பாலிக் அல்லது சங்கேத மொழி விளக்கமாகும். இந்த ஆத்துமாக்கள் வேறு யாருமல்ல. இந்த காலக்கட்டத்தில் தேவனுக்கு சாட்சியாய் நின்றதினிமித்தம் கொல்லப்பட்ட கிறிஸ்தவர்களாவார்கள்.
‘‘மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்.’’ (வெளி 12;11)
‘‘அப்பொழுது, மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற இவர்கள் யார்? எங்கேயிருந்து வந்தார்கள்? என்று கேட்டான். அதற்கு நான்: ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். அப்பொழுது அவன்: இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்.’’ (வெளி 7:13,14)
ஆத்துமாக்களின் கோரிக்கை
ஐந்தாம் முத்திரையின் காலம் வரை ரோம சாம்ராஜ்ஜியத்தால் கொல்லப்பட்ட பரிசுத்தவான்களின் ஆத்துமாக்கள், தங்களைக் கொன்ற ரோம சாம்ராஜ்ஜியத்தை எப்போது அழித்து, பழிவாங்குவீர்? என்று தேவனை நோக்கிக் கூப்பிட்டார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதற்கு ‘இன்னும் பலர் இரத்த சாட்சியாய் மரிக்க வேண்டியுள்ளது. அந்தத் தொகை நிறைவேறும் வரை கொஞ்சகாலம் (1260 வருடங்கள்) நீங்கள் இளைப்பாறுங்கள்’ என்று அவர்களுக்கு சொல்லப்பட்டது. அதாவது, ஒருங்கிணைந்த ரோம சாம்ராஜ்ஜியத்தைத் தொடர்ந்து வரும், ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியத்தின் காலத்திலும் பரிசுத்தவான்கள் கொலை செய்யப்படுவார்கள்; அவர்களது தொகை நிறைவேறுமளவும் நீங்கள் காத்திருங்கள்; அது நிறைவுபெறும்போது அந்த ராஜ்ஜியத்தின் மீது நியாயத்தீர்ப்பு விதிக்கப்படும் என்று அவர்களுக்கு சொல்லப்பட்டது.
படம் 56: மகா உபத்திரமும், பலிபீடத்தின் கீழ் ஆத்துமாக்களும்


கர்த்தராகிய இயேசு தம்முடையவர்களைக் குறித்து மிகுந்த அக்கறையுள்ளவர். ஆனால் பழிவாங்குவதற்கு என்று ஒரு காலம் உள்ளது. அதற்குமேல் அவர் தம்முடைய பரிசுத்தவான்களின் இரத்தம் சிந்துதலைப் பார்த்துக்கொண்டிருக்க மாட்டார்.
‘‘அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ? சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வாரென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.’’ (லூக்கா 18:7,8)
அவர் சொன்னபடி, இந்த பரிசுத்தவான்களின் தொகை (1,44,000- அத்தியாயம் 27) நிறைவேறியவுடன், பரிசுத்தவான்களைக் கொன்று அழித்த ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியமான மகா வேசியிடம் பழிவாங்கினார்.
‘‘தன் வேசித்தனத்தினால் பூமியைக்கெடுத்த மகா வேசிக்கு அவர் நியாயத்தீர்ப்புக்கொடுத்து, தம்முடைய ஊழியக்காரரின் இரத்தத்திற்காக அவளிடத்தில் பழிவாங்கினாரே என்றார்கள்.’’ (வெளி 19;1)
‘‘தீர்க்கதரிசிகளுடைய இரத்தமும் பரிசுத்தவான்களுடைய இரத்தமும் பூமியில் கொல்லப்பட்ட அனைவருடைய இரத்தமும் அவளிடத்தில் காணப்பட்டது என்று விளம்பினான்’’ (வெளி 18:24)
இடைக்கால நிவாரணம்
ஏதாவது ஒரு அழிவுகள் ஏற்படும் காலங்களில், அந்த அவசர நிலையை சமாளிப்பதற்கு இடைக்கால நிவாரணம் என்று பண உதவியோ அல்லது பொருள் உதவியோ வழங்குவது அரசாங்கத்தின் வழக்கம். அதுபோல தங்களைக் கொன்ற ராஜ்ஜியத்தைப் பழிவாங்குவதற்கு நீண்ட காலம் காத்திருக்கவேண்டிய பரிசுத்தவான்களின் ஆத்துமாக்களுக்கு ஒரு இடைக்கால நிவாரணத்தை இயேசு வழங்கினார். அது தான் ‘வெள்ளை அங்கி’.
‘‘அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டது; அன்றியும், அவர்கள் தங்களைப்போலக் கொலைசெய்யப்படப்போகிறவர்களாகிய தங்கள் உடன்பணிவிடைக்காரரையும் தங்கள் சகோதரருமானவர்களின் தொகை நிறைவாகுமளவும் இன்னுங்கொஞ்சக்காலம் இளைப்பாறவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது.’’ (வெளி 6:11)
இந்த வெள்ளை அங்கி என்பது ‘பரிசுத்தவான்களின் நீதியே’ என்பதும், அந்த நீதி இயேசுகிறிஸ்துவே என்பதும் நாம் தெரிந்துகொள்ளவேண்டிய சத்தியம்.
‘‘சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம் தரித்துக்கொள்ளும்படி அவளுக்கு அளிக்கப்பட்டது; அந்த மெல்லியவஸ்திரம் பரிசுத்தவான்களுடைய நீதிகளே.’’ (வெளி 19:8)
‘‘கர்த்தருக்குள் பூரிப்பாய் மகிழுகிறேன்; என் தேவனுக்குள் என் ஆத்துமா களிகூர்ந்திருக்கிறது; மணவாளன் ஆபரணங்களினால் தன்னை அலங்கரித்துக்கொள்ளுகிறதற்கும், மணவாட்டி நகைகளினால் தன்னைச் சிங்காரித்துக்கொள்ளுகிறதற்கும் ஒப்பாக, அவர் இரட்சிப்பின் வஸ்திரங்களை எனக்கு உடுத்தி, நீதியின் சால்வையை எனக்குத் தரித்தார்.’’ (ஏசாயா 61:10)
‘‘அவர் ஆறாம் முத்திரையை உடைக்கக்கண்டேன்; இதோ, பூமி மிகவும் அதிர்ந்தது; சூரியன் கறுப்புக் கம்பளியைப்போலக் கறுத்தது; சந்திரன் இரத்தம்போலாயிற்று.’’ (வெளி 6:12)
வெளிப்படுத்தலில் சொல்லப்பட்டுள்ள பூமி அதிர்ச்சி என்பது நேரடி அர்த்தம் கொண்டதல்ல. இதற்கான வியாக்கியானங்கள் பெரும்பாலான தீர்க்கதரிசன புத்தகங்களில் சொல்லப்பட்டுள்ளது.
‘‘நீ யூதாவின் தலைவனாகிய செருபாபேலோடே சொல்லவேண்டியது என்னவென்றால், நான் வானத்தையும் பூமியையும் அசையப்பண்ணி, ராஜ்யங்களின் சிங்காசனத்தைக் கவிழ்த்து, ஜாதிகளுடைய ராஜ்யங்களின் பெலத்தை அழித்து, இரதத்தையும் அதில் ஏறியிருக்கிறவர்களையும் கவிழ்த்துப்போடுவேன்;’’ (ஆகாய் 2;21,22)
‘‘அவைகளுக்குள் (ஏதோம்) இடிந்துவிழும் சத்தத்தினாலே பூமி அதிரும்; கூக்குரலின் சத்தம் சிவந்த சமுத்திரமட்டும் கேட்கப்படும்.’’ (எரேமியா 49:21)
‘‘பாபிலோன் பிடிபட்டதின் சத்தத்தினால் பூமி அதிரும், அதின் கூப்பிடுதல் ஜாதிகளுக்குள்ளே கேட்கப்படும்.’’ (எரேமியா 50:46)
எனவே தீர்க்கதரிசன பாஷையின்படி பூமி அதிர்ச்சி என்பது ஒரு ராஜ்ஜியம் கவிழ்க்கப்படும் அல்லது இடிந்து அழியும் அல்லது பிடிபட்டு முடிவடையும் என்று அர்த்தப்படும். நாம் அன்றாடம் பயன்படுத்தும் வழக்கத்தில் சொன்னால், அரசியல் புரட்சி என்று அர்த்தப்படும். அரசியலைப் பற்றி பேசும் இடங்களில் பின்வரும் அர்த்தங்களைப் பற்றி ஏற்கனவே விவரித்துள்ளேன்.
- சூரியன்- ராஜா
- சந்திரன்- பிரபுக்கள், மூப்பர்கள், மதத்தலைவர்கள்
- இரட்டு- துக்கம்
- மலைகள்/பர்வதங்கள் – ராஜ்ஜியங்கள்
வானத்தின் சத்துவங்கள்
‘‘அத்திமரமானது பெருங்காற்றினால் அசைக்கப்படும்போது, அதின் காய்கள் உதிருகிறதுபோல, வானத்தின் நட்சத்திரங்களும் பூமியிலே விழுந்தது.’’ (வெளி 6:13)
வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும் என்பது ஒரு ராஜ்ஜியத்தின் தலைவர்கள், பிரபுக்கள், மதத்தலைவர்கள் வீழ்த்தப்படுவதைக் குறிக்கும். இந்தக் காலக்கட்டத்தில், அதாவது மகா உபத்திரவம் முடிவடையும் நாளில் இந்த ரோமப்பேரரசு கவிழ்க்கப்படும் என்பதை இயேசுகிறிஸ்து தனது சீடர்களுக்கு சொல்லிவைத்துச்சென்றார்.
‘‘அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக்கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்.’’ (மத்தேயு 24:29)
அத்திமரம் பெருங்காற்றினால் அசைக்கப்படும்போது அதின் காய்கள் உதிர்வது என்பது ஒரு ராஜ்ஜியத்தின் மேல் யுத்தக் காற்று வீசும்போது அதன் பலமான அரண்கள் எல்லாம் விழுந்துபோவதற்கு ஒப்பாகக்கொடுக்கப்பட்டுள்ளது.
‘‘நீயும் வெறிகொண்டு ஒளித்துக்கொள்வாய்; நீயும் உன் சத்துருவுக்குத் தப்ப அரணான கோட்டையைத் தேடுவாய். உன் அரண்களெல்லாம் முதல்பழுக்கும் பழங்களுள்ள அத்திமரங்களைப்போல இருக்கும்; அவைகள் குலுக்கப்பட்டால் அவைகளின் பழம் தின்கிறவன் வாயிலே விழும்.’’ (நாகூம் 3:11,12)
சுருட்டப்படும் வானம்
‘‘வானமும் சுருட்டப்பட்ட புஸ்தகம்போலாகி விலகிப்போயிற்று; மலைகள் தீவுகள் யாவும் தங்கள் இடங்களைவிட்டு அகன்றுபோயின.’’ (வெளி 6:14) வானம் சுருட்டப்பட்ட புத்தகம் போலாகி விலகிப்போயிற்று என்பது ஒரு ராஜ்ஜியத்தின் பாதுகாப்பு விலகி, எதிரிகளின் தாக்குதலுக்கு எளிதான இலக்காவதைக் குறிக்கும்,
‘‘வானத்தின் சர்வசேனையும் கரைந்து, வானங்கள் புஸ்தகச்சுருளைப்போல் சுருட்டப்பட்டு, அவைகளின் சர்வசேனையும் திராட்சச்செடியின் இலைகள் உதிருகிறதுபோலவும், அத்திமரத்தின் காய்கள் உதிருகிறதுபோலவும் உதிர்ந்து விழும். வானங்களில் என் பட்டயம் வெறிகொண்டது; இதோ ஏதோமின்மேலும், நான் சங்காரத்துக்கு நியமித்த ஜனத்தின் மேலும், அது நியாயஞ்செய்ய இறங்கும்.’’ (ஏசாயா 34:3,4)
மேலும் மலைகள் என்பது பெரிய ராஜ்ஜியங்களையும், தீவுகள் சிறிய ராஜ்ஜியங்களையும் குறிக்கும். அப்படியானால் இதுவரைப் பார்த்த வசனங்கள், ரோம சாம்ராஜ்ஜியத்தின் அரண்கள் விழுந்து, பாதுகாப்பு விலகி, ராஜாக்கள் வீழ்ந்து, ராஜ்ஜியம் அழிவை சந்திப்பதைக் குறிக்கிறது. ஆனால் அடுத்த சில வசனங்களைப் பார்க்கும்போது, இந்த ராஜ்ஜியம் அரசியல் ரீதியாக வீழ்ச்சியடைந்ததை விட, மதரீதியான அல்லது இதுவரை அவர்கள் பின்பற்றி வந்த விக்கிரகவணக்கத்தின் வீழ்ச்சியாகவே சித்தரிக்கப்பட்டுள்ளதைப் பார்க்கலாம்.
விக்கிரக வணக்க ரோமப்பேரரசின் வீழ்ச்சி ( Fall of pagan Roman empire)
மேலே சொன்ன அரசியல் மாற்றங்கள், கான்ஸ்டாண்டைன் கையில் ரோம ராஜ்ஜியம் சென்றதையும், கிறிஸ்தவர்கள் உபத்திரவப்படுத்தப்பட்டது நிறுத்தப்பட்டதையும் குறிக்கிறது. ஆனால் கான்ஸ்டாண்டைன் கிறிஸ்தவர்களை அங்கீகரித்தது மட்டுமல்லாமல் (Edict of Milan), உயர்பதவிகளிலும் அமர வைத்தான். சபைகளின் சட்டதிட்டங்களில் பல சீர்திருத்தங்களை உருவாக்கினான். (குறிப்பு: இந்த சீர்திருத்தங்களில் பல சர்ச்சைகள் உள்ளன. அவற்றைப் பற்றி சொல்ல தனிப்புத்தகம் தேவைப்படும்) இதனைத்தொடர்ந்து ரோம சாம்ராஜ்ஜியத்தின் பெரும்பாலான பகுதிகளில் விக்கிரக கோயில்களை மூடும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இவனைத் தொடர்ந்துவந்த ஜீலியன் என்ற ராஜா மீண்டும் கொஞ்சகாலம் திறந்துவைத்தான்.
ஆனால் ஜீலியனைத் தொடர்ந்து வந்த ‘தியோடோசியஸ்’ என்ற ராஜா மீண்டும் விக்கிரகக்கோயில்களை மூடியது மட்டுமல்லாமல், விக்கிரக கோயில்கள் மற்றும் பொதுஇடங்களில் உள்ள சிலைகள் அடித்து நொறுக்க உத்தரவிட்டான். கிறிஸ்தவத்தை ரோமப்பேரரசின் அதிகாரப்பூர்வ மதமாக அங்கீகரித்து ஆணையாக வெளியிட்டது ‘தியோடோசியஸ்’ என்ற இந்த ரோமப்பேரரசன் தான் (Edict of Thessalonica 380 AD). இந்த கி.பி 313 முதல் கி.பி 395 வரையிலான காலக்கட்டத்தில் விக்கிரகவணக்கத்தை மட்டுமே பின்பற்றி வந்த ரோமப்பேரரசின் மதரீதியான பழக்கவழக்கங்கள் ஒழிக்கப்பட்டது. அதாவது ஞயபயn Eternal city என்றழைக்கப்பட்ட ரோம் வீழ்ச்சியைக் கண்டது. இந்தப் பின்னணியில் பின்வரும் வசனங்களை நாம் ஆராய்வோம்.
ஒளித்துக்கொண்ட ராஜ்ஜியம்
‘‘பூமியின் ராஜாக்களும், பெரியோர்களும், ஐசுவரியவான்களும், சேனைத்தலைவர்களும், பலவான்களும், அடிமைகள் யாவரும், சுயாதீனர் யாவரும், பர்வதங்களின் குகைகளிலும் கன்மலைகளிலும் ஒளித்துக்கொண்டு, பர்வதங்களையும் கன்மலைகளையும் நோக்கி: நீங்கள் எங்கள்மேல் விழுந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்;’’ (வெளி 6;15,16)
நாம் நேரடியாகவே இதன் அர்த்தத்திற்கு செல்வோம். இதில் சொல்லப்பட்டபடி ரோம சாம்ராஜ்ஜியத்திலுள்ளவர்கள், குகைகளிலும் கன்மலைகளிலும் ஒளிந்துகொண்டார்கள் என்பது விக்கிரக வணக்க ஆராதனை முறைகள் ரோம் ராஜ்ஜியத்தில் ஒழிக்கப்பட்டதையும், கோயில்கள் மூடப்பட்டதையும் குறிக்கும் சங்கேத மொழியாகும். இதற்கு ஆதாரமாக ஏசாயா சொன்னதைப் பாருங்கள்.
‘‘விக்கிரகங்கள் கட்டோடே ஒழிந்துபோம். பூமியைத் தத்தளிக்கப்பண்ணக் கர்த்தர் எழும்பும்போது, அவருடைய பயங்கரத்திற்கும், அவருடைய மகிமைப்பிரதாபத்திற்கும் விலகி, கன்மலைகளின் கெபிகளிலும் பூமியின் குகைகளிலும் புகுந்துகொள்வார்கள். பூமியைத் தத்தளிக்கப்பண்ணக் கர்த்தர் எழும்பும் அந்நாளிலே, அவருடைய மகிமைப்பிரதாபத்திற்கும் விலகி, கன்மலைகளின் வெடிப்புகளிலும் குன்றுகளின் சந்துகளிலும் புகுந்துகொள்ளும்படிக்கு, மனுஷன் பணிந்துகொள்ளத் தனக்கு உண்டாக்கியிருந்த தன் வெள்ளி விக்கிரகங்களையும், தன் பொன் விக்கிரகங்களையும், மூஞ்சூறுகளுக்கும் துரிஞ்சில்களுக்கும் எறிந்துவிடுவான்.’’ (ஏசாயா 2:18-21)
எகிப்திலிருந்து இஸ்ரவேல் மக்களை கர்த்தர் மீட்டுக்கொண்ட நாளில், எகிப்தியரின் தலைச்சன்களை சங்கரித்து ‘அவர்கள் தேவர்கள்மேல் நீதியை செலுத்தினார்’ என்று பார்க்கிறோம் (யாத்திராகமம் 12:12). அதைப்போலவே ரோம தேவர்களின் மீது நீதியை செலுத்தி இயேசு தனது ஜனங்களாகிய கிறிஸ்தவ விசுவாசிகளை மீட்டுக்கொண்ட இந்த சம்பவங்களைத் தான் ஆறாம் முத்திரை (கி.பி 313-கி.பி 395) விவரிக்கிறது. இதன் முடிவில் ரோம சாம்ராஜ்ஜியத்தின் விக்கிரக தேவர்கள் அடியோடு ஒழிக்கப்பட்டனர். சுமார் பாதிக்கும் மேற்பட்ட ரோம சாம்ராஜ்ஜியத்திற்கு உட்பட்ட தேசங்களும், ஜனங்களும் கிறிஸ்தவத்தைத் தழுவினர். பாகாலைப் பின்பற்றிய ரோம சாம்ராஜ்ஜியம், கிறிஸ்தவத்தைத் தழுவியது சாத்தானின் மீது விழுந்த பேரிடி தான்.
பழிவாங்குதல் முடிந்துவிட்டதா?
அப்பாடா, கிறிஸ்தவர்களுக்கு நல்ல காலம் பிறந்துவிட்டது. இனி எந்த உபத்திரவமும் இல்லை என்று விசுவாசிகளால் சில காலங்களுக்கு மட்டுமே நிம்மதிப்பெருமூச்சி விடமுடிந்தது. ஏனென்றால் தீர்க்கதரிசனங்கள் மற்றும் தீர்ப்புகளின் கால்வாசியைத் தான் இந்தக் காலக்கட்டம் தாண்டியிருந்தது. இதுவரை நடந்தது ரோம சாம்ராஜ்ஜியத்தின் திருப்பங்கள் நிறைந்த சம்பவங்கள். இதற்குப்பின்பு தான் கிறிஸ்தவ திருச்சபை வரலாற்றில் நடக்கவேண்டிய முக்கிய சம்பவமான ‘விசுவாச துரோகம்’ நிறைவேற வேண்டியிருந்தது. இந்த விசுவாச துரோகத்தைப் பற்றி ஏற்கனவே விரிவாகக் கூறியுள்ளேன். விசுவாச துரோகம் என்பது கிறிஸ்தவத்தைப் பின்பற்றியவர்களால் நிறைவேற்றப்பட்டவேண்டிய ஒன்று. இது நிறைவேற வேண்டிய காலக்கட்டத்தைப் பற்றி பவுல் தெளிவாகக்கூறியுள்ளார்.
‘‘எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது. அவன் எதிர்த்துநிற்கிறவனாயும், தேவன் என்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான்.’’ (2 தெசலோனிக்கேயர் 2:3,4)
‘‘அவன் தன் காலத்திலே (1260 வருட ஆட்சிக்காக) வெளிப்படும்படிக்கு, இப்பொழுது அவனைத் தடைசெய்கிறது இன்னதென்றும் அறிந்திருக்கிறீர்கள். அக்கிரமத்தின் இரகசியம் இப்பொழுதே கிரியைசெய்கிறது; ஆனாலும் தடைசெய்கிறவன் நடுவிலிருந்து நீக்கப்படுமுன்னே அது வெளிப்படாது. நீக்கப்படும்போது, அந்த அக்கிரமக்காரன் வெளிப்படுவான்; அவனைக் கர்த்தர் தம்முடைய வாயின் சுவாசத்தினாலே அழித்து, தம்முடைய வருகையின் பிரசன்னத்தினாலே நாசம்பண்ணுவார்”. (2 தெசலோனிக்கேயர் 2 : 6-8)
நாம் ஏற்கனவே பல அத்தியாயங்களில் பார்த்தபடி, அக்கிரமக்காரனாகிய அந்திகிறிஸ்துவின் ராஜ்ஜியமாகிய ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியம் வெளிப்பட வேண்டுமானால், அதற்கு முன் அது வெளிப்படத் தடையாக இருந்த ஒருங்கிணைந்த சீசர்களால் ஆளப்பட்ட ரோம சாம்ராஜ்ஜியம் நீக்கப்படவேண்டும். இதன் நிறைவேறுதலாகத் தான் ஒருங்கிணைந்த ரோம சாம்ராஜ்ஜியம் படிப்படியாக நீக்கப்பட்டு, கிறிஸ்தவம் ரோம சாம்ராஜ்ஜியத்தின் ஆட்சி மதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஆறாம் நூற்றாண்டில் அக்கிரமக்காரனாகிய ‘சின்னக்கொம்பு’ அல்லது ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியம் வெளிப்பட்டது. இந்த கிறிஸ்தவ ராஜ்ஜியம் என்று சொல்லிக்கொண்ட சபையானது எப்படி விசுவாச துரோகம் செய்தது என்பதைத் தான் பல இடங்களில் விரிவாகப் பார்த்துவருகிறோம். இந்த அக்கிரமக்காரன் அல்லது அந்த ராஜ்ஜியத்தின் தலைவனான போப்புகள் தான் தன்னைத் தேவன்போல காண்பிக்கும் Vicar of Christ என்றும் பார்த்தோம். இந்த ராஜ்ஜியத்தைத் தான் தேவன் தனது வாயின் சுவாசத்தினால் அழிக்கும் ‘மகா பாபிலோனாக’ சொல்லிவைத்துள்ளார். எனவே இந்த முத்திரைகளினால் மட்டும் ரோம ராஜ்ஜியத்தின் மீதான தீர்ப்பு முடிந்துவிடவில்லை. இதற்குப் பின்பு ரோம ராஜ்ஜியத்தின் மீது அடுத்த தீர்ப்புகளாகிய ‘எக்காளங்கள்’ ஊதப்பட்டதன் மூலம் அது 10 ராஜ்ஜியங்களாக உடைந்தது.
‘‘அவர் ஏழாம் முத்திரையை உடைத்தபோது, பரலோகத்தில் ஏறக்குறைய அரைமணிநேரமளவும் அமைதல் உண்டாயிற்று. பின்பு, தேவனுக்குமுன்பாக நிற்கிற ஏழு தூதர்களையுங் கண்டேன், அவர்களுக்கு ஏழு எக்காளங்கள் கொடுக்கப்பட்டது.’’ (வெளி 8:1,2)
‘‘அப்பொழுது, ஏழு எக்காளங்களையுடைய ஏழு தூதர்கள் எக்காளம் ஊதுகிறதற்குத் தங்களை ஆயத்தப்படுத்தினார்கள்.’’ (வெளி 8:6)
ஏழாம் முத்திரையை இயேசு உடைத்தபோது, ஏழு எக்காளங்கள் ஏழு தூதர்களின் கைகளில் கொடுக்கப்பட்டது. அவர்களும் அதை ஊதுகிறதற்குத் தங்களை ஆயத்தப்படுத்தினார்கள். அவை என்னவென்று பார்க்க நீங்கள் ஆயத்தமா? வாருங்கள் அடுத்த அத்தியாயம் செல்வோம்.