
- August 19, 2023
- admin
- 0
மிருகத்தின் மேல் ஏறியிருந்த ஸ்திரீ
கர்த்தருடைய பெரிதான கிருபையினால், நாம் பாபேலில் ஆரம்பித்து வாடிகன் வரை வந்திருக்கிறோம். தானியேலுக்கும், யோவானுக்கு வெளிப்படுத்தப்பட்ட ராஜ்ஜியங்களைக் குறித்த இரகசியங்கள், முதலில் மேலோட்டமாகவும், பின்பு நுணுக்கமான காரியங்களை இன்னும் ஆழமாகவும், ஒரு போட்டோவை Zoom செய்து பார்ப்பதுபோல வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்று ஏற்கனவே பார்த்துள்ளோம்.
யோவான் ரோமப்பேரரசின் காலத்தில் வாழ்ந்தவராக இருந்தபடியால், தானியேலுக்கு வெளிப்படுத்தப்பட்டதைவிட அவருக்கு ரோம சாம்ராஜ்ஜியம் மற்றும் அதன் முடிவுகால வழித்தோன்றல்களான ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியங்களைக் குறித்த வெளிப்பாடுகளை அதிகமாகவும், விரிவாகவும் இயேசு வெளிப்படுத்தியுள்ளார். நாம் இதுவரை ராஜ்ஜியங்களைக் குறித்து மட்டுமே பார்த்தோம். இந்த அத்தியாயத்தில் வெளிப்படுத்தல் 17 ஆம் அதிகாரத்தின்படி, ரோமன் கத்தோலிக்க சபையானது எப்படி ஒரு ராஜ்ஜியத்தின் மேல் இருந்து ஆளுகை செய்துவந்தது என்பதைப் பற்றிப் பார்க்கப்போகிறோம். இந்த ராஜ்ஜியமும், சபையும் சேர்ந்த தீர்க்கதரிசனங்களை நமக்கு அறிமுகப்படுத்துவது ‘ஏழு கலசங்களை உடைய தூதரில் ஒருவன்’ என்று கூறப்பட்டபடியினால், இந்த ராஜ்ஜியமும், சபையும் சேர்ந்த மிருகத்தின் மேல் அமர்ந்துள்ள ஸ்தீரீயின் காலம், கலசங்கள் ஊற்றப்பட்ட காலமான 17 ஆம் நூற்றாண்டில் தான் நிறைவுபெற்று, அழிவதற்குத் தயாராக உள்ளது என்பது தெளிவாகின்றது.
‘‘ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் வந்து என்னோடே பேசி: நீ வா, திரளான தண்ணீர்கள்மேல் உட்கார்ந்திருக்கிற மகா வேசியோடே பூமியின் ராஜாக்கள் வேசித்தனம் பண்ணினார்களே, அவளுடைய வேசித்தனமாகிய மதுவால் பூமியின் குடிகளும் வெறிகொண்டிருந்தார்களே; அவளுக்கு வருகிற ஆக்கினையை உனக்குக் காண்பிப்பேன் என்று சொல்லி; ஆவிக்குள் என்னை வனாந்தரத்திற்குக் கொண்டுபோனான்.’’ (வெளி 17:1-3)
இந்த 17 ஆம் அதிகாரத்திற்கு முந்திய அதிகாரமான 16 ஆம் அதிகாரம் தான் கத்தோலிக்க ரோம சாம்ராஜ்ஜியத்தின் மீது ஊற்றப்பட்ட அழிவுகளாகிய ஏழு வாதைகள் நிறைந்த கலசங்களைப் பற்றி சொல்கிறது. ஆனால் 17 ஆம் அதிகாரத்தில் இந்த மகா வேசியை யோவானுக்கு ஆவியில் அறிமுகப்படுத்தியது ‘ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதர்களில் ஒருவன்’ என்று சொல்லப்பட்டதன் மூலம், இந்த 17 ஆம் அதிகாரம், கோபாக்கினையின் அழிவுகள் பூமியில் (ஐரோப்பிய கண்டம்) ஊற்றப்பட்ட காலக்கட்டதில் ஆளுகையில் இருந்த ராஜ்ஜியம் மற்றும் சபை கலந்த ஆளுகைப் பற்றியதாகும்.
யார் இந்த வேசி ஸ்திரீ?
நீதியின் சூரியனாகிய இயேசுவை அணிந்திருந்த ஸ்திரீ என்பவள் பரிசுத்த மணவாட்டி சபை என்று ஏற்கனவே பார்த்தோம். இயேசுவிற்கு நியமிக்கப்பட்ட கன்னிகையான மணவாட்டிக்கு அப்படியே நேரெதிரானவள் வேசி ஸ்திரீ ஆவாள். வேசித்தனம் என்பது ‘தேவனாகிய கர்த்தர் மிகவும் அருவருக்கும் விக்கிரக ஆராதனை’ என்று ஆவிக்குரிய அர்த்தப்படும் என்று பரிசுத்த வேதத்தில் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. இங்கு ஒரு சில ஆதாரங்களை மட்டும் கொடுக்கிறேன். இந்த ஆவிக்குரிய அர்த்தத்தைப் பற்றி இன்னும் ஆழமாகத் தெரிந்துகொள்ள விரும்பினால் தயவுசெய்து ‘எசேக்கியேல் 16’ அதிகாரம் முழுவதையும் வாசித்துப்பாருங்கள். இதில் நான் விக்கிரக ஆராதனை என்று சொல்வது வெறும் சிலை வணக்கத்தை மட்டுமல்ல; பரிசுத்தவேதத்தில் சொல்லப்பட்டிராத ஆராதனைகளையும் சேர்த்து தான்.
‘‘(எருசலேமே) நீயோவென்றால் உன் அழகை நம்பி, உன் கீர்த்தியினால் சோரமார்க்கமாய் நடந்து, வழிப்போக்கரில் உனக்கு நேர்பட்ட யாவரோடும் வேசித்தனம்பண்ணி, உன் வஸ்திரங்களில் சிலவற்றை எடுத்து,பலவருணச் ஜோடிப்பான மேடைகளை உனக்கு உண்டாக்கி, அவைகளின்மேல் வேசித்தனம்பண்ணினாய்; அப்படிக்கொத்த காரியங்கள் ஒருக்காலும் சம்பவித்ததுமில்லை,
சம்பவிப்பதுமில்லை. நான் உனக்குக் கொடுத்த என் பொன்னும் என் வெள்ளியுமான உன் சிங்கார ஆபரணங்களை நீ எடுத்து, உனக்கு ஆண்சுரூபங்களை உண்டாக்கி, அவைகளோடே வேசித்தனம்பண்ணி (எசேக்கியேல் 16:15-17)
‘‘கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: உன் வேசித்தனத்தின் அசுத்தம் பாய்ந்தபடியினாலும் நீ உன் காமவிகாரிகளோடும் அருவருப்பாகிய உன் நரகலான விக்கிரகங்களோடும் வேசித்தனம்பண்ணி, இவைகளுக்கு உன் பிள்ளைகளின் இரத்தத்தைப் படைத்ததினால் உன் நிர்வாணம் திறக்கப்பட்டபடியினாலும்,’’ (எசேக்கியேல் 16:36)
குறிப்பாக, இயேசு ஆசியா மைனரில் உள்ள சபைகளுக்கு சொல்லும்போது விக்கிரக ஆராதனையையும் (Idolatry), கள்ள போதனைகளையும் (False Doctrine) ஆவிக்குரிய வேசித்தனம் என்று சொல்கிறார்.
‘‘ஆகிலும், உன்பேரில் எனக்குக் குறை உண்டு; என்னவெனில், தன்னைத் தீர்க்கதரிசியென்று சொல்லுகிற யேசபேல் என்னும் ஸ்திரீயானவள் என்னுடைய ஊழியக்காரர் வேசித்தனம்பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் அவர்களுக்குப் போதித்து, அவர்களை வஞ்சிக்கும்படி நீ அவளுக்கு இடங்கொடுக்கிறாய்.’’ (வெளி 2:20)
‘‘ஆகிலும், சில காரியங்களைக்குறித்து உன்பேரில் எனக்குக் குறை உண்டு; விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிப்பதற்கும் வேசித்தனம்பண்ணுவதற்கும் ஏதுவான இடறலை இஸ்ரவேல் புத்திரர்முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனை செய்த பிலேயாமுடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் உன்னிடத்திலுண்டு.’’ (வெளி 2:14)
- வேசிஸ்திரீ = வேதத்திற்குப் புறம்பான கள்ளப்போதனைகளால் ஜனங்களை விக்கிரக வணக்கத்திற்கு உட்படுத்தும் சபை
நாம் ஏற்கனவே சின்னக்கொம்பு அத்தியாயத்தில் பார்த்தபடி தேவனாகிய கர்த்தரின் பத்துகட்டளைகளில் ஒன்றான ‘வேறே தேவர்களை அல்லது சொரூபம், விக்கிரகத்தை வணங்கக் கூடாது’ என்ற கற்பனையையே நீக்கி ‘கேட்டிகிசமாக’ அல்லது திருச்சபை சட்டமாக வரையறுத்த ரோமன் கத்தோலிக்க சபையைத் தவிர வேறு எந்த சபையாவது இதில் பொருந்துமா என்று நீங்களே சொல்லுங்கள். இப்படி வேசித்தனம் செய்த அல்லது இயேசுவைத் தவிர மற்றவர்களையும் ஆராதிப்பதில் மக்களை ஈடுபடுத்தி வஞ்சித்த சபையோடு கூடிய ஒரே ராஜ்ஜியமும் இது தான்.
தீர்க்கதரிசன புத்தகங்களில் பல இடங்களில் இஸ்ரவேல் மற்றும் யூதா ராஜ்ஜியங்களையும் ‘வேசி’ என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால் ‘மகா வேசி’ (Great Harlot) என்பது பூமியை ஆளுவதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்ட ஏழு ராஜ்ஜியங்களில் ஒன்றாகத்தான் இருக்கமுடியும். இந்த ஏழு ராஜ்ஜியங்களின் பட்டியலில் இஸ்ரவேல் ஒருபோதும் வந்ததில்லை. ஏனென்றால் இஸ்ரவேல் தேசம் ஒருபோதும் பூமியை முழுவதுமாக ஆட்சி செய்யவில்லை. எனவே மகா வேசி என்பது ரோம ராஜ்ஜியத்தின் வழிவந்த ரோமன் கத்தோலிக்க சபையையே குறிக்கும். இந்த எல்லா சங்கேத மொழிகளும் யாரைக் குறிக்கின்றது என்று உங்களுக்கே புரியும் என்று நம்புகிறேன்.
வேசி இருந்த இடம்
திரளான தண்ணீர்கள் என்பது, பல ஜனக்கூட்டம் மற்றும் பாஷைக்காரர்கள் என்ற அர்த்தமாகும். அதாவது அப்போதைய காலக்கட்டத்தில் பூமியை ஆளுகை செய்துவந்த ஜனத்திரள் நிறைந்த ஐரோப்பிய கண்டம் மற்றும் மத்தியகிழக்கு நாடுகளாகும். இந்த காலகட்டத்தில் பூமியை ஆளுகை செய்துவந்ததும் ரோம் தான். மேலும் ரோமன் கத்தோலிக்க சபை தான் அன்றிலிருந்து இன்றுவரை அதிக ஜனத்திரள் கொண்ட சபை என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.
‘‘பின்னும் அவன் என்னை நோக்கி: அந்த வேசி உட்கார்ந்திருக்கிற தண்ணீர்களைக் கண்டாயே; அவைகள் ஜனங்களும் கூட்டங்களும் ஜாதிகளும் பாஷைக்காரருமாம்.’’ (வெளி 17:15)
எனவே இந்த வேசி இருந்த இடம் அப்போதைக்கு ஐரோப்பிய கண்டத்தின் மையமாக இருந்த ரோம். இதே திரளான தண்ணீர்களின் மேல் வாசம் செய்பவளைக் குறித்து எரேமியா தீர்க்கதரிசி சொன்னது நினைவிருக்கிறதா? ஆம், பாபிலோனின் பாரம் என்று அவர் சொன்ன தீர்க்கதரிசன அதிகாரங்களான எரேமியா 50 மற்றும் 51 ஆம் அதிகாரங்கள் பூமியில் ஏற்கனவே இருந்து அழிந்த பாபிலோனைப் பற்றி பின்வருமாறு கூறுகிறது.
‘‘திரளான தண்ணீர்களின்மேல் வாசம்பண்ணுகிறவளே, திரண்ட சம்பத்துடையவளே, உனக்கு முடிவும் உன் பொருளாசைக்கு ஒழிவும் வந்தது.’’ (எரேமியா 51:13)
எனவே தானியேலின் காலத்தில் இருந்ததும், யோவானின் காலத்தில் இராததுமான பாபிலோன், மறு உருவம் கொண்டு கடைசி கால ‘ஆவிக்குரிய பாபிலோனாக’ அதாவது ‘மகா வேசியாக’ உருவெடுத்து வரும் என்பதை இயேசு யோவானுக்கு காண்பித்தார்.
பூமியின் ராஜாக்களோடு எப்படி வேசித்தனம் செய்தது?
‘‘வேசியோடு இசைந்திருக்கிறவன் அவளுடனே ஒரே சரீரமாயிருக்கிறானென்று அறியீர்களா? இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று சொல்லியிருக்கிறதே.’’ (1 கொரிந்தியர் 6:16)
‘‘தன் மிகுதியான இனிய சொற்களால் அவனை வசப்படுத்தி, தன் உதடுகளின் மதுரவாக்கினால் அவனை இணங்கப்பண்ணினாள்’’ (நீதிமொழிகள் 7:21)
போப்புகளுடைய தலைமையை ஏற்று, ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியத்திற்குக் கீழ்படிந்து, கத்தோலிக்க சபையின் சட்டதிட்டங்களுக்கு இசைந்திருக்கும் எந்தவொரு ராஜ்ஜியமும் ‘வேசித்தனம் செய்யும் ராஜ்ஜியமாகும்’; எந்தவொரு சபையும் வேசி சபையாகும். கி.பி ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து இன்றுவரை பல ஐரோப்பிய ராஜ்ஜியங்களும், அவைகளிலிருந்து வெளியே சென்று குடியேறினவர்களால் தோற்றுவிக்கப்பட்ட அமெரிக்க கண்டங்களிலுள்ள பல நாடுகளும் (Latin America), மற்ற இந்தியா உட்பட உலக நாடுகளில் இயேசுவின் சீடர்களால் தோற்றுவிக்கப்பட்ட பல சபைகளும், இவர்களுக்கு இணங்கி அல்லது அவர்களின் போதனைகள் வேதத்திற்குப் புறம்பாக இருந்தாலும் இசைந்து இருக்கும் அளவிற்கு சாத்தான் பல கோடி மக்களின் மனதைக் குருடாக்கியுள்ளான். இதனால் தான் இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் முன்னணி சபையாக, மதமாக, ராஜ்ஜியமாக இது அதிகாரம் செலுத்தி வருகிறது. இந்த சபையைத் தான் பூமியின் குடிகள் ஆச்சரியத்தோடு பின்பற்றினார்கள். இப்படி இருக்கும் சபையையா, இத்தனை ராஜ்ஜியங்களும், ஜனங்களும் ஆவலோடு பின்பற்றிப் போகிறார்கள்? என்று யோவானும் தரிசனத்தில் ஆச்சரியப்பட்டதில் தவறேதும் இல்லை.
‘‘அந்த ஸ்திரீ பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும், இயேசுவினுடைய சாட்சிகளின் இரத்தத்தினாலும் வெறிகொண்டிருக்கிறதைக் கண்டேன்; அவளைக் கண்டு நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்.’’ (வெளி 17:6)
‘‘அதின் (மிருகத்தின்) தலைகளிலொன்று சாவுக்கேதுவாய்க் காயப்பட்டிருக்கக் கண்டேன்; ஆனாலும் சாவுக்கேதுவான அந்தக் காயம் சொஸ்தமாக்கப்பட்டது. பூமியிலுள்ள யாவரும் ஆச்சரியத்தோடே அந்த மிருகத்தைப் பின்பற்றி,…’’ (வெளி 13:3)
‘‘உலகத்தோற்றமுதல் ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள், இருந்ததும், இராமற்போனதும், இனி இருப்பதுமாயிருக்கிற மிருகத்தைப்பார்த்து ஆச்சரியப்படுவார்கள்.’’ (வெளி 17:8)
இதனைத் தான் ‘அவளுடைய வேசித்தனமான மதுவால் பூமியின் குடிகளும் வெறிகொண்டிருந்தார்கள்’ என்று அந்த தூதன் யோவானுக்குக் காண்பிக்கிறான். இதைப் பற்றி இதே அத்தியாயத்தில் சில பக்கங்களுக்குப் பிறகு பார்க்க இருக்கிறோம். ‘ஆச்சரியப்பட்டுத் தானே பின்சென்றார்கள்; இது எப்படி அவளின் வேசித்தனமான மதுவினால் வெறிகொள்வதற்கு சமமாகும்?’ என்று நீங்கள் நினைக்கலாம். உங்களுக்கு நிகழ்கால சம்பவங்களின் அடிப்படையில் இதை விளக்குகிறேன். இன்றைக்கு நம் நாட்டில் எப்படிப்பட்ட அரசியல் தலைவர்களை, தொண்டர்கள் கூட்டம் கூட்டமாகப் பின்தொடர்ந்து, வெறிகொண்டு அலைகிறார்கள்? நிச்சயமாக நீதிமான்களை அல்ல என்பது நம் அனைவருக்கும் நன்றாகத்தெரியும். பதிலாக, நாம் யாரையெல்லாம் அக்கிரமக்காரர்களாக, விபச்சாரக்காரர்களாக, கொலைவெறியர்களாக, நியாயத்தை ப் புர ட் டுபவர்களாக, எளியவரை ஒடுக்குகிறவர்களாக அறிந்துவைத்திருக்கிறோமோ, அவர்களைத் தான் பெரும்பாலான மக்கள் தலைவர்களாகக் கொண்டாடி வருகிறார்கள். இது இன்றைக்கு மட்டுமல்ல; அன்றிலிருந்தே மக்களை பாதாளத்திற்கு இழுத்துச்செல்லும் சாத்தானின் வஞ்சனையாகும்.
அவளுக்கு வரும் ஆக்கினை
இந்த தூதன் யோவானை ஆவிக்குள் வனாந்திரத்திற்குள் அழைத்துச் சென்றது, இந்த வேசி ஸ்திரீ யார் என்று காண்பிக்க மட்டுமல்ல; அவள் மீது அழிவு அல்லது ஆக்கினை எப்படி வரப்போகிறது என்பதையும் காண்பிக்கத் தான். இந்த வேசி ஸ்திரீயாகிய முடிவுகால ரோமன் கத்தோலிக்க சபையின் ராஜ்ஜியத்தின் மீது கோபாக்கினையின் கலசங்கள் எப்படி ஊற்றப்பட்டது என்பது 16 ஆம் அதிகாரத்திலும், இந்த ஸ்திரீயாகிய சபை எப்படி அழிக்கப்படும் என்பது 17 வது அதிகாரத்தின் கடைசியிலும் சொல்லப்பட்டுள்ளது.
மிருகத்தின் மீது ஏறியிருந்த ஸ்திரீ
இதில் இந்த மிருகத்தைப் பற்றி மட்டுமல்லாமல் அதன் மீது அமர்ந்துள்ள ஒரு ஸ்திரீயைப் பற்றியும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
‘‘அப்பொழுது ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையும் உடையதும் தூஷணமான நாமங்களால் நிறைந்ததுமான சிவப்புநிறமுள்ள மிருகத்தின்மேல் ஒரு ஸ்திரீ ஏறியிருக்கக் கண்டேன். ‘‘ (வெளி 17:3)
ஏழு தலைகளையும், பத்துகொம்புகளையும் உடைய மிருகம் என்றாலே ரோம சாம்ராஜ்ஜியம் தான் என்று தானியேல், யோவான் இருவருக்குமே கர்த்தர் வெளிப்படுத்தினார். அப்படியானால் இந்த மிருகத்தின் மீது அமர்ந்து பயணம் செய்யும் ஸ்திரீ என்பது, ரோம சாம்ராஜ்ஜியத்தின் மீது தன்னை நிலைநாட்டிக்கொண்ட ஒரு சபை என்று அர்த்தப்படும். இது ரோமன் கத்தோலிக்க சபையைத் தவிர வேறு எதையும் குறிக்காது.
படம் 45: மிருகத்தின் மீதிருக்கும் வேசி ஸ்திரீ

எது தேவ தூஷணம்
இந்த ரோம ராஜ்ஜியத்தின் மேல் தூஷணமான நாமங்கள் இருந்தது என்று சொல்லப்பட்டுள்ளது. இதற்கான விளக்கத்தை ஏற்கனவே ‘சின்னக்கொம்பு’ அத்தியாயத்திலும், முதலாம் மிருகத்தைப்பற்றிய விளக்கத்திலும் சொல்லியுள்ளேன். சுருக்கமாக தன்னைத் தான் தேவன் என்று சொன்ன ராஜ்ஜியம் என்று அர்த்தப்படும். அது ஏற்கனவே நாம் பார்த்தபடி போப்புகளால் ஆளப்பட்ட கத்தோலிக்க ராஜ்ஜியமாகும்.
‘‘பின்பு நான் கடற்கரை மணலின்மேல் நின்றேன். அப்பொழுது சமுத்திரத்திலிருந்து ஒரு மிருகம் எழும்பிவரக் கண்டேன்; அதற்கு ஏழு தலைகளும் பத்துக்கொம்புகளும் இருந்தன; அதின் கொம்புகளின்மேல் பத்து முடிகளும், அதின் தலைகளின்மேல் தூஷணமான நாமமும் இருந்தன.’’ (வெளி 13;1)
‘‘பெருமையானவைகளையும் தூஷணங்களையும் பேசும் வாய் அதற்குக் கொடுக்கப்பட்டது’’ (வெளி 13:5)
‘‘அதின் தலைமேலுள்ள பத்துக்கொம்புகளைக்குறித்தும் தனக்கு முன்பாக மூன்று கொம்புகள் விழுந்துபோக எழும்பினதுமாய், கண்களையும் பெருமையானவைகளைப் பேசும் வாயையுமுடையதுமாய், மற்றவைகளைப்பார்க்கிலும் பருமனாகத் தோன்றினதுமாயிருந்த அந்த வேறே கொம்பைக்குறித்தும், அவற்றின் பொருளை அறிய மனதாயிருந்தேன்.’’ (தானியேல் 7:20)
பவுல் சொன்னது போல தேவனுடைய இடத்தில் உட்கார்ந்து, தன்னைத் தான் தேவன் போல் காண்பித்து, ஆராதிக்கப்படுவதற்கு மேலாக தன்னை வைத்து, தேவதூஷணம் சொன்ன ஒரே ராஜ்ஜியம் கத்தோலிக்க ராஜ்ஜியமாகும். இதில் மிருகம் என்பது ராஜ்ஜியம் என்பது நமக்குத் தெரியும்; அதுவும் சிவப்பு நிறமுள்ள மிருகம் என்பதால் நிச்சயம் பரிசுத்தவான்களைத் துன்புறுத்தி, அவர்களின் இரத்தத்தின் வெறிகொண்டிருந்த மிருகமாகிய ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியத்தை தான் இது குறிக்கும். இந்த அதிகாரத்தில் மறுபடியும் ஒரு மிருகம் வருகிறதைக் குறித்து நீங்கள் குழம்ப வேண்டாம். ஏழு தலைகளும், பத்து கொம்புகளும் என்றாலே ரோமப்பேரரசு தான். ஆனால் இதில் ஒரு வித்தியாசம் இருப்பதால் தான் யோவான் ஆச்சரியப்படுகிறார். அவருக்கு தூதன் சொன்ன பதிலில் இந்த மிருகத்தைப் பற்றியும், வேசி ஸ்திரீயைப் பற்றியும் தூதன் இன்னும் சில விளக்கங்களைக் கொடுக்கிறார்.
‘‘அப்பொழுது, தூதனானவன் என்னை நோக்கி: ஏன் ஆச்சரியப்படுகிறாய்? இந்த ஸ்திரீயினுடைய இரகசியத்தையும், ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையுமுடையதாய் இவளைச் சுமக்கிற மிருகத்தினுடைய இரகசியத்தையும் உனக்குச் சொல்லுகிறேன். நீ, கண்ட மிருகம் முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை; அது பாதாளத்திலிருந்து ஏறிவந்து, நாசமடையப்போகிறது. உலகத்தோற்றமுதல் ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள், இருந்ததும், இராமற்போனதும், இனி இருப்பதுமாயிருக்கிற மிருகத்தைப்பார்த்து ஆச்சரியப்படுவார்கள்.’’ (வெளி 17:7,8)
இதில் முதலில் மிருகத்தைக் குறித்த இரகசியங்களைப் பார்த்துவிட்டுப் பின்பு ஸ்திரீயைக் குறித்த இரகசியங்களை ஆராய்வோம்.
மிருகத்தின் தன்மைகள்
- சிவப்பானமிருகம் – இயேசுவின் விசுவாசிகளை இரத்தம் சிந்த வைத்த ராஜ்ஜியம்
- ஸ்திரீயைசுமக்கும் மிருகம் – அரசியல் ரீதியாக சபையைத் தாங்கும் ராஜ்ஜியம்
- முன்னேஇருந்த மிருகம் -யோவானின் காலத்திற்கு முன்னே இருந்த ‘பாபிலோன் சாம்ராஜ்ஜியம்’
- இப்பொழுது இராமற்போன மிருகம் – யோவானின் காலத்தில் பாபிலோன் சாம்ராஜ்ஜியத்தின் மிச்சம் கூட இல்லை
- பாதாளத்திலிருந்து ஏறிவரும் மிருகம் – ஒரு ராஜ்ஜியமாக இல்லாமல் முற்றிலும் நிர்மூலமாக்கப்பட்ட பழைய பாபிலோன் மீண்டும் உயிர்பெற்று வருவதைக் குறிக்கும்
- இனிஇருப்பதும், நாசமடையப்போவதுமான மிருகம் – இப்படி பாதாளத்திலிருந்து மீண்டும் உயிர்பெற்று ஆவிக்குரிய மகா பாபிலோனான கத்தோலிக்க ரோம ராஜ்ஜியமாக வெளிப்படும். இந்த ராஜ்ஜியத்தின் காலத்தில் தான் இயேசுவின் இரண்டாம் வருகை இருக்கும்; அப்போது இந்த ராஜ்ஜியம் அழிக்கப்பட்டு இயேசுவின் நித்திய ராஜ்ஜியம் ஸ்தாபிக்கப்படும்.
பாதாளத்திலிருந்து வரும் மிருகம்
முதலில் பாதாளத்தில் தள்ளப்பட்ட மிருகம் யார் என்று பார்ப்பதற்கு ஆதாரமாக ஏசாயா 14 ஆம் அதிகாரத்திலிருந்து சில முக்கிய வசனங்களை மட்டும் கொடுத்துள்ளேன். இந்த அதிகாரத்தை நீங்கள் வாசித்துப்பார்த்தால், பாபிலோனை, வலுசர்ப்பத்தின் அதிபதியாகிய லூசிபருக்கு ஒப்பாக சொல்லப்படிருக்கும்.
‘‘நீ பாபிலோன் ராஜாவின்மேல் சொல்லும் வாக்கியமாவது: ஒடுக்கினவன் ஒழிந்துபோனானே! பொன்னகரி ஒழிந்துபோயிற்றே! கீழே இருக்கிற பாதாளம் உன்னிமித்தம் அதிர்ந்து, உன் வருகைக்கு எதிர்கொண்டு, பூமியில் அதிபதிகளாயிருந்து செத்த இராட்சதர் யாவரையும் உன்னிமித்தம் எழுப்பி, ஜாதிகளுடைய எல்லா ராஜாக்களையும் அவர்களுடைய சிங்காசனங்களிலிருந்து எழுந்திருக்கப்பண்ணுகிறது. நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே. ஆனாலும் நீ அகாதமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய்.’’
தேவனுக்கு மேலாக தன்னை உயர்த்தி, இருதயத்தில் மேட்டிமை கொண்ட லூசிபர் பாதாளத்தில் தள்ளப்பட்டது போல பாபிலோன் தள்ளப்படும் என்று அந்த ராஜ்ஜியம் தோன்றும் முன்னரே ஏசாயா முன்னறிவித்திருக்கிறார். இந்தப் பெருமையினால் தான் பாபிலோனின் முதல் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரும் சில காலங்கள் ராஜ்ஜியத்திலிருந்து தள்ளப்பட்டான்.
‘‘பன்னிரண்டு மாதம் சென்றபின்பு, ராஜா பாபிலோன் ராஜ்யத்தின் அரமனைமேல் உலாவிக்கொண்டிருக்கும்போது: இது என் வல்லமையின் பராக்கிரமத்தினால், என் மகிமைப் பிரதாபத்துக்கென்று, ராஜ்யத்துக்கு அரமனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா என்று சொன்னான். இந்த வார்த்ததை ராஜாவின் வாயில் இருக்கும்போதே, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரே, ராஜ்யபாரம் உன்னைவிட்டு நீங்கிற்று.’’ (தானியேல் 4:29-31)
இந்த அழிந்துபோன ‘பழைய மகா பாபிலோன்’ தான் யோவானின் காலத்திற்குப் பின்பு மீண்டும் பாதாளத்திலிருந்து ‘ரோமன் கத்தோலிக்க சாம்ராஜ்ஜியமாக’ உயிர்பெற்று வந்து, பூமியில் 1260 வருடங்கள் ஆட்சிசெய்து, பரிசுத்தவான்களைத் துன்புறுத்தியது. இரண்டு சாட்சிகளையும் துன்புறுத்திக் கொன்றது. (இரண்டு சாட்சிகள் யார் என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்க இருக்கிறோம்) இதைத் தான் சமுத்திரத்திலிருந்து வந்த ‘முதல் மிருகமாக’ யோவான் கண்டார் என ஏற்கனவே பார்த்தோம்.
‘‘அவர்கள் தங்கள் சாட்சியைச்சொல்லி முடித்திருக்கும்போது, பாதாளத்திலிருந்தேறுகிற மிருகம் (ரோம்) அவர்களோடே யுத்தம்பண்ணி, அவர்களை (இரண்டு சாட்சிகளையும்) ஜெயித்து, அவர்களைக் கொன்றுபோடும்.’’ (வெளி 11:7)
இந்த மிருகத்தை, தேவனுடைய ஜீவபுத்தகத்தில் பெயர் எழுதப்படாதவர்கள் ஆச்சரியத்தோடே பின்பற்றிப் போவார்கள் என்பதை வெளி 13 ல் முதல் மிருகத்தைப் பற்றிய அதிகாரத்திலும், வெளி 17 ஆகிய நாம் இப்போது பார்த்துக்கொண்டிருக்கும் அதிகாரத்திலும் கொடுக்கப்பட்டுள்ளது. இது தான் பாதாளத்திலிருந்து ஏறிவந்து நாசமடையப்போகும் மிருகம் என்று கூறப்பட்டுள்ளதால் ‘‘வெளி 11 ல் 1260 வருடங்களின் (42 மாதங்கள்) முடிவில் இரண்டு சாட்சிகளோடு யுத்தம் பண்ணியதும், வெளி 13 ல் முதல் மிருகமாக வந்து 1260 வருடங்கள் பரிசுத்தவான்களைத் துன்புறுத்தியதும், வெளி 17 ல் பரிசுத்தவான்களின் இரத்தத்தில் வெறிகொண்டிருந்த வேசி ஸ்திரீயை சுமந்த சிவப்பு மிருகமும் ஒரே மிருகம் அல்லது ஒரே ராஜ்ஜியத்தைக் குறிப்பது’’ மிகத்தெளிவாகிறது. வெளி 17 ல் தான் இந்த மிருகமாகிய ரோம சாம்ராஜ்ஜியம் சுமந்த வேசி ஸ்திரீயாகிய கத்தோலிக்க சபையைப் பற்றிய விளக்கம் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
அருவருப்புகளின் தாய்
இந்த வேசி ஸ்திரீ தான் ‘மகா நகரம்’ அல்லது ‘மகா பாபிலோன்’ என்றும் ‘பூமியிலுள்ள அருவருப்புகளின் தாய்’ என்றும் இந்த அதிகாரம் கூறுகிறது.
‘‘மேலும், இரகசியம், மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் என்னும் நாமம் அவள் நெற்றியில் எழுதியிருந்தது.’’ (வெளி 17:5)
‘‘நீ கண்ட ஸ்திரீயானவள் பூமியின் ராஜாக்கள்மேல் ராஜ்யபாரம் பண்ணுகிற மகா நகரமேயாம் என்றான்.’’ (வெளி 17:18)
- மகாநகரம் – ரோம் (வாடிகன்)
- மீண்டும்வந்த ஆவிக்குரிய மகா பாபிலோன் – ரோம் மற்றும் அதன் ஆவிக்குரிய ஆளுகைக்கு உட்பட்ட ஐரோப்பிய நாடுகள்
- ஸ்திரீ-சபை
- ராஜ்ஜியபாரம் பண்ணும் ஸ்திரீ – ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியத்திற்குட்பட்ட சபை
- வேசிகளுக்கும் அருவருப்புகளுக்கும் தாய் – பெருமை, கள்ளபோதனை, வஞ்சனை, விக்கிரக ஆராதனைகளை கர்ப்பந்தரிக்கும் தாய் அல்லது தலைமையிடம்.
- இரகசியம் – அக்கிரமத்தின் இரகசியம் என்று பவுல் அந்திகிறிஸ்துவைப் பற்றி கூறிய 2 தெசலோனிக்கேயரில் கூறப்பட்டுள்ள பல ஆவிக்குரிய இரகசியங்கள் நிறைந்த சபை.
இன்றுவரை இந்த சபை, தங்களை உலக கிறிஸ்தவத்தின் ‘தாய் சபை’ (Mother of all churches) என்று தன்னை அழைத்துக்கொள்வது மட்டுமல்லாமல், வாடிகனில் உள்ள தேவாலயங்களில் மரியாளை சபைகளுக்குத் தாயாக சித்தரிக்கும் ‘Mater Ecclesiae’ என்ற வாசகத்தைப் பொறித்துள்ளது. (தயவுசெய்து இதில் மரியாளை நான் தவறாக சித்தரிப்பதாக நினைத்துவிடாதீர்கள். மரியாளின் பெயரைத் தவறாக உபயோகித்து பூமியின் குடிகளை வஞ்சித்து வரும் சபையைப் பற்றிதான் நான் சொல்லிவருகிறேன்)
படம் 46: சபைகளின் தாய்-வாடிகன்

எருசலேம் மகா நகரமா?
அந்திகிறிஸ்து என்ற நபர் கடைசி ஏழு வருடங்களில் எருசலேம் தேவாலயத்தின் நடுவில் வந்து, அமர்ந்து உலகத்தை ஆட்சிசெய்வான் என்று நம்புபவர்கள், எருசலேம் தான் இந்த ‘மகா நகரம்’ என்று நம்புகின்றனர். இதுவரை ஆவியானவரின் உதவியோடு, பரிசுத்த வேதாகம ஆதாரங்களோடு நான் கொடுத்த காரியங்களின் அடிப்படையில் நீங்கள் யோசித்துப் பார்த்தால் எருசலேம் எந்த விதத்திலும் இந்தப் பெயருக்குப் பொருந்தாது என்பது தெரியவரும். அந்திகிறிஸ்து வரும் நகரம் எருசலேம் அல்ல என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று விசுவாசிக்கிறேன். மேலும் பவுல் சொல்லும்போது அப்போது இருந்த எருசலேமை நியாயப்பிரமாணத்திற்கு உட்பட்ட ‘ஆகாருக்கு ஒப்பான அரபிதேசத்து சீனாய் மலை’ என்றும் இயேசுவின் ராஜ்ஜியம் ஸ்தாபிக்கப்படும் காலத்தில் வரும் எருசலேம் ‘நம் எல்லாருக்கும் தாயானவள்’ என்றும் குறிப்பிடுகிறார்.
‘‘ஆகார் என்பது அரபிதேசத்திலுள்ள சீனாய்மலை; அந்த ஆகார் இப்பொழுதிருக்கிற எருசலேமுக்குச் சரி; இவள் தன் பிள்ளைகளோடேகூட அடிமைப்பட்டிருக்கிறாளே. மேலான எருசலேமோ சுயாதீனமுள்ளவள், அவளே நம்மெல்லாருக்கும் தாயானவள்.’’ (கலாத்தியர் 4:25,26)
இப்போழுது இருக்கிற எருசலேமை அடிமைப்பெண் ஆகாருக்கும், நியாயப்பிரமாணம் வழங்கப்பட்ட சீனாய் மலைக்கும் தான் ஒப்பிட்டுள்ளாரே தவிர, மகா நகரமாக அல்லது மகா பாபிலோனாக ஒப்பிடவில்லை. பரம எருசலேமே எல்லாருக்கும் தாயானவள் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால் வெளிப்படுத்தலில் அந்த வேசி ஸ்திரீயைத் தான் பூமியிலுள்ள வேசித்தனத்திற்கும், அருவருப்புகளுக்கும் தாய் என்று இயேசு சொல்கிறார். மேலும் இந்த மிருகங்களைக் குறித்த தரிசனங்களின் விளக்கங்களின்படி ‘ரோம்’ தான் மகா பாபிலோன் ஆகும்.
மேலும் அப்போஸ்தலனாகிய பேதுரு, ரோமிலிருக்கும்போது மற்ற தேசங்களிலுள்ள விசுவாசிகளுக்கு எழுதிய ஒரு நிருபத்தில், ரோமிலுள்ள சபையை பாபிலோனிலுள்ள சபை என்று ஆவிக்குரிய அர்த்தத்தில் குறிப்பிட்டுள்ளார். அவர் எழுதிய காலத்தில் பழைய பாபிலோன் என்ற ராஜ்ஜியமும், பெயரும் கூட கிடையாது என்று வரலாறு சொல்கிறது.
‘‘உங்களுடனேகூடத் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிற பாபிலோனிலுள்ள சபையும், என் குமாரனாகிய மாற்கும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.’’ (1 பேதுரு 5:13)
மேலும், இந்த ஸ்திரீயே பூமியின் மீது ராஜ்ஜியபாரம் பண்ணின மகாநகரம் என்று யோவானுக்கு சொல்லப்பட்டது. இஸ்ரவேல் தேசமோ, எருசலேம் நகரமோ ஒருக்காலத்திலும் பூமியின் மீது ராஜ்ஜியபாரம் பண்ணினதாக வேதத்தில் எங்கும் சொல்லப்படவில்லை. இரண்டாம் வருகைக்குப் பின்பு தான் எருசலேம் உலக ராஜ்ஜியங்களின் தலைமையிடமாக மாறும் என்று சகரியா காண்கிறார். ரோம் தான் பூமியின் மீது அன்றிலிருந்து இன்றுவரைக்கும் ஏதாவது ஒருவகையில் ராஜ்ஜியபாரம் பண்ணிவருகிறது.
‘‘நீ கண்ட ஸ்திரீயானவள் பூமியின் ராஜாக்கள்மேல் ராஜ்யபாரம் பண்ணுகிற மகா நகரமேயாம் என்றான்.’’ (வெளி 17:18)
வேசி ஸ்திரீயின் ஆடைகள்
‘‘அந்த ஸ்திரீ இரத்தாம்பரமும் சிவப்பான ஆடையுந்தரித்து, பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டு, தன் வேசித்தனமாகிய அருவருப்புகளாலும் அசுத்தத்தாலும் நிறைந்த பொற்பாத்திரத்தைத் தன் கையிலே பிடித்திருந்தாள்.’’ (வெளி 17:4)
இந்த ஸ்திரீயாகிய சபை இரத்தாம்பரமும் சிவப்பான (Purple and scarlet) ஆடை அணிந்திருந்தாளாம். இப்போது கத்தோலிக்க தலைவர்கள் அணியும் ‘கேசக்’ என்ன நிறங்களில் இருக்கும் என்று பார்ப்போம்.
- கார்டினல்கள் (Cardinals) – கருஞ்சிவப்பு (Scarlet)
- பிரிலேட்ஸ் (Prelates) – ஊதா (Purple)
- பிஷப்புகள்- சிவப்பு (Amaranth red)
மேலும் இந்த நிறங்கள் ஆவிக்குரிய அர்த்தங்கள் நிறைந்தவையாகும். தனக்கு ஒரு ஆசரிப்பு கூடாரத்தை அல்லது தான் தங்கும் வாசஸ்தலத்தைக் கட்ட கர்த்தர் மோசேக்குக் கட்டளை கொடுத்தபோது, இஸ்ரவேல் ஜனங்கள் கையில் வாங்குவதற்குக் கட்டளையிட்ட ஆபரணங்களில் இந்த நிறங்கள் அடங்கும்.
‘‘நீங்கள் அவர்களிடத்தில் வாங்கவேண்டிய காணிக்கையாவன, பொன்னும், வெள்ளியும், வெண்கலமும், இளநீலநூலும், இரத்தாம்பரநூலும், சிவப்புநூலும், மெல்லிய பஞ்சுநூலும், வெள்ளாட்டுமயிரும்,’’ (யாத்திராகமம் 25:3,4)
இவை ஒவ்வொன்றும் பிற்காலத்தில் இயேசு சிலுவை மரணத்தின் மூலமாய் நிறைவேற்றினதற்கு முன் அடையாளமாகும்.
- இளநீலம்- வானம் / பரலோகம் (Heaven)
- இரத்தாம்பரம் – ராஜ உத்தியோகத்தைக் குறிப்பது (Royalty)
- சிவப்பு-தியாகம் (Sacrifice)
கிறிஸ்துவின் இரட்சிப்பின் திட்டங்களுக்கு எதிரானவன் மட்டுமல்ல; அவரைப் போலத் தன்னைக் காண்பிப்பவன் தான் ‘அந்திகிறிஸ்து’ என்பதற்கு இதுவும் ஒரு சான்று. இவற்றையெல்லாம் தற்செயல் நிகழ்வுகளாக நாம் எடுத்துக்கொள்வதால் தான் ராஜ்ஜியங்களின் இரகசியங்களை ‘எதிர்காலத்திற்கு’ எடுத்துச்செல்ல முயற்சி செய்கின்றோம்.
ஸ்திரீயின் சிங்காரங்கள்
வாடிகனில் இருக்கும் போப்பின் அரண்மனையை அலங்கரிக்கும் ஆபரணங்களுக்கு விலைமதிப்பே கிடையாது. சில வருடங்களுக்கு முன்புவரை போப்புகள் அணிந்திருந்த கிரீடம் விலையுயர்ந்த முத்துக்களும், இரத்தினங்களும் பதிக்கப்பட்ட அணிகலன்.
படம் 47: போப்பாண்டவர்களின் விலைமதிப்பற்ற கிரீடம்

எருசலேம் தேவாலயத்திற்குப் பின்பு, மிக பிரமாண்டமான தேவாலயங்களை உலகின் எல்லா மூலைகளிலும் கட்டியது இந்த மத்திய கால ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியம் (Medieval age papacy). இந்த தேவாலயங்கள் இன்றும் பல இடங்களில் நிலைத்திருக்கிறது. இவைகளைக் கட்டுவதற்கும் அலங்கரிப்பதற்கும் ஐரோப்பிய கண்டத்தின் அந்த காலத்திய ராஜ்ஜியங்கள் ஏராளமான பணத்தையும், விலையுயர்ந்த பொருள்களையும் காணிக்கையாகக் கொடுத்தன.
பிரிவடைந்த ரோம சாம்ராஜ்ஜியத்தைப் போப்புகளின் கையில் ஒப்புக்கொடுத்த ராஜாவான ‘ஜஸ்டினியன்’ என்பவன், காண்ஸ்டாண்டிநோபிளில் (இன்றைய துருக்கியின் இஸ்தான்புல்) கி.பி 532 ல் கட்ட ஆரம்பித்த ‘ஹாகியா சொபியா’ (Hagia Sophia) பல விலையுயர்ந்த அலங்காரங்களோடு இயேசு, மரியாள், தூதர்கள், பரிசுத்தவான்களின் பல அடி உயர சிலைகளால் அலங்கரிக்கப்பட்டது. இது 1453 ல் கிழக்கு ரோம ராஜ்ஜியம் ஒட்டமானியர்களிடம் வீழ்ந்தபின்பு
இஸ்லாமிய மசூதியாக மாற்றப்பட்டு இன்றுவரை நினைவுச்சின்னமாக நிற்கிறது. சில தேவாலயங்களைக் கட்டிமுடிக்க 200 ஆண்டுகள் கூட ஆனது (Cathedral of Notre Dame) என்றால் அதன் பிரமாண்டத்தையும், செலவையும் கணக்கிட்டுக்கொள்ளுங்கள். பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதிகளில் போப் பத்தாவது லியோ என்பவர் தற்போது ரோமில் இருக்கும் புனித பேதுரு தேவாலயத்தைக் (St.Peter’s Cathedral) கட்ட ஏராளமான பணம் தேவைப்பட்டதால், ஐரோப்பிய ராஜ்ஜியங்களில் பாவமன்னிப்புச் சீட்டை விற்று பணத்தை சேர்த்தார். இது தான் மார்டின் லூதரின் எதிர்ப்புக்கான ஒரு காரணமும் கூட.
படம் 48: வாடிகனில் உள்ள புனித பேதுரு ஆலயம் மற்றும் சதுக்கம


இயேசு வாழ்ந்து மற்றும் கற்றுக்கொடுத்த எளிமை, தாழ்மை, உண்மை ஆகியவற்றிற்கு அப்படியே நேர் எதிர் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துவந்த போப்புகளை, இயேசுவின் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்த்த மார்டின் லூதரின் நெருங்கிய நண்பரான ‘லூக்காஸ் கிரானாச்’ (Lucas Cranach) அவற்றை 26 மரவேலைப்பாடுகளால் ஆன ஓவியங்களாக (Wood cuttings) வெளியிட்டார். தேவாலயத்தில் விற்கிறவர்களையும் கொள்ளுகிறவர்களையும் விரட்டிய இயேசுவை, சபையை வியாபார ஸ்தலமாக்கிய போப்புடன் ஒப்பிட்டார்; சிலுவையை சுமந்த இயேசுவை, பல்லக்கில் பயணம் செய்யும் போப்புடனும், சீடர்களின் கால்களைக் கழுவின இயேசுவை, போப்பின் கால்களை ஜனங்கள் முத்தமிடும் காட்சியுடனும் ஒப்பிட்டு, இதுபோல் 13 ஜோடிக் காட்சிகளை வெளியிட்டு அவரே அந்திகிறிஸ்து என்று பறைசாற்றினார்.
படம் 49: லூக்காஸ் கிரானாச்சின் மர ஓவியங்கள்






இன்று கூட பலர் போப்புகள் ஏன் இப்படி ஆடம்பரமான வாழ்க்கை வாழக்கூடாது? அதிகாரங்களில் தலையிடக்கூடாது? என்று கேட்கின்றனர். ‘மனுஷகுமாரனுக்கு தலைசாய்க்கக் கூட இடமில்லாதிருந்தால்’ தன்னைக் கிறிஸ்துவின் இடத்தில் காண்பிக்கும் நபர் எப்படி இருக்கவேண்டும்? கிறிஸ்துவின் சாயலைத் தரித்திருந்த பவுல் அப்போஸ்தலன் வாழ்ந்துகாட்டிய வாழ்க்கை முறை என்ன? இப்படியெல்லாம் கேள்வி எழுப்புவார்கள் என்று தெரிந்து தான் ‘பேதுரு என்ற முதல் ரோமின் பிஷப்பின் வழிவந்தவர்கள்’ என்ற பொய்யான வரலாற்றை உருவாக்கி, தங்களை நியாயப்படுத்திக் காண்பிக்குமளவுக்கு சாத்தான் இந்த சபையைப் பயன்படுத்திவருகிறான்.
அந்திகிறிஸ்து யாரைக் கனப்படுத்துவான்?
அந்திகிறிஸ்துவின் ராஜ்ஜியம், இப்படி தேவாலயங்களையும் அரண்மனைகளையும் அலங்காரம் செய்வதன் மூலமாக ‘யாரைக் கனப்படுத்தும்’ என்று தானியேல் தெளிவாகக் கூறிவைத்துள்ளார். தானியேல் 11 ஆம் அதிகாரத்தில் ஆண்டியோகஸ் எபிபேனசைப் பற்றிய வசனங்களுக்குப் பின் வரும் 36-39 வசனங்கள், ரோம ராஜ்ஜியத்தில் வரும் சபையைப் பற்றிய தீர்க்கதரிசனமாகும்.
‘‘ராஜா (ரோமன் கத்தோலிக்க) தனக்கு இஷ்டமானபடி செய்து, தன்னை உயர்த்தி, எந்த தேவனிலும் தன்னைப் பெரியவனாக்கி, தேவாதி தேவனுக்கு விரோதமாக ஆச்சரியமான காரியங்களைப் பேசுவான்; கோபம் தீருமட்டும் (1260 வருடங்கள்) அவனுக்குக் கைகூடிவரும்; நிர்ணயிக்கப்பட்டது நடந்தேறும்.’’ (தானியேல் 11:36)
இந்த ரோமன் கத்தோலிக்க ராஜாக்களான போப்புகள், இத்தனை பெரிய தேவாலயங்களைக் கட்டினாலும், அதன் மூலம் யாரைக் கனப்படுத்துவார்கள்? என்ற இரகசியத்தை தானியேல் தொடர்கிறார்.
‘‘அவன் தன் பிதாக்களின் தேவர்களை மதியாமலும், ஸ்திரீகளின் சிநேகத்தையும், எந்த தேவனையும் மதியாமலும், எல்லாவற்றிற்கும் தன்னைப் பெரியவனாக்கி, அரண்களின் தேவனைத் தன் ஸ்தானத்திலே கனம்பண்ணி தன் பிதாக்கள் அறியாத ஒரு தேவனைப் பொன்னினாலும், வெள்ளியினாலும், இரத்தினங்களினாலும், உச்சிதமான வஸ்துக்களினாலும் கனம்பண்ணுவான். அவன் அரணிப்பான கோட்டைகளுக்காகவும், அந்நிய தேவனுக்காகவும் செய்வது என்னவென்றால், அவைகளை மதிக்கிறவர்களுக்கு மகா கனமுண்டாக்கி, அவர்கள் அநேகரை ஆளும்படிச் செய்து, அவர்களுக்கு தேசத்தைக் கிரயத்துக்காகப் பங்கிடுவான்.’’ (தானியேல் 11:37-39)
இந்த ராஜ்ஜியம் இரண்டு விதமான நபர்களைக் கனம் செய்யும் என்று இந்த வசனங்கள் கூறுகின்றது.
- அரண்களின் தேவனைக் கனம் பண்ணுவான்
இந்த வசனங்களின்படி அவன்
- தன்பிதாக்களின் (ரோமர்கள் காலாகாலமாக வணங்கிவந்த) தேவர்களை மதிக்கமாட்டான்/ ஆராதிக்க மாட்டான்; மாறாக கிறிஸ்தவ புனிதர்களையும், இயேசுவின் பெற்றோரையும், குழந்தையாகிய இயேசுவையும் வணங்குவான்.
- ஸ்திரீகளின் சிநேகத்தையும் மதிக்க மாட்டான். அதாவது தனது விக்கிரக வணக்கத்திற்காக திருமண வாழ்க்கையைக் கூட தியாகம் செய்வான். கி.பி 1073 ல் பதவிக்கு வந்த போப் ஏழாம் கிரகோரி என்பவர், ரோம சபைகளை நன்றாக நடத்திச்செல்லவேண்டுமானால் அதன் குருக்கள் கண்டிப்பாக ‘பிரம்மச்சரியத்தை’ கடைபிடிக்கவேண்டும் என்று சட்டமாகக் கொண்டுவந்தார்.
- எந்ததேவனையும் மதியாமலும், எல்லாவற்றிற்கும் தன்னைப் பெரியவனாக்குவான் (Vicar of Christ)
- அரண்களின் தேவனைத் தன் ஸ்தானத்திலே கனம்பண்ணி, தன் பிதாக்கள் அறியாத ஒரு தேவனைப் பொன்னினாலும், வெள்ளியினாலும், இரத்தினங்களினாலும், உச்சிதமான வஸ்துக்களினாலும் கனம்பண்ணுவான்.
அந்திகிறிஸ்துவின் ராஜ்ஜியம் அதுவரை ரோமர்கள் அறியாத தேவனை கனம் பண்ணும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் எந்த தேவனையும் மதிக்காமல், எல்லாவற்றிற்கும் மேலாக தன்னைதான் பெரியவனாக்குவான் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இதிலிருந்து தன்னையும் தேவன் போல காண்பிப்பான்; தனது ஸ்தானத்தில் அரண்களின் தேவனை, விலையுயர்ந்த கற்களாலும், உலோகங்களாலும், பலவித அலங்காரங்களாலும் கனம்பண்ணுவான் என இரண்டு காரியங்கள் கூறப்பட்டுள்ளது. தானியேலின் இந்தப்பகுதி வேத அறிஞர்களைப் பல காலங்களாகக் குழப்பத்தில் ஆழ்த்திய பகுதியாகும். இதில் நான் கற்றுக்கொண்ட சில காரியங்களை உங்களுடன் பகிர்கிறேன்.
அரண்களின் தேவன் என்பது எபிரேய பாஷையில் ‘Deus Maozim’ என்று அழைக்கப்படுகிறது. இதற்கு ‘God of Fortress or god of strong hold’ என்று அர்த்தம். அண்டியோகஸ் எபிபேனஸ் என்ற செலுசிய ராஜா, எருசலேம் தேவாலயத்தின் மகா பரிசுத்த ஸ்தலத்தில் வைத்த ஜீயஸ் விக்கிரகம் என்பது ‘ஜீபிடர்’ (Jupiter) வணக்கத்தின் வழி வந்ததாகும். ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியம் தேவாலயங்களில் இதே சிலையை வைத்து ‘பீட்டர்’ (Peter) என்று மாற்றிவைத்து அதை வணங்கவைத்தது. இந்த பீட்டர் என்ற பேதுரு தான் ரோமின் முதல் பிஷப் என்றும், பேதுரு என்ற கல்லின் மீதுதான் அந்த சபைக் கட்டப்பட்டதாகவும் பொய்யான பிரச்சாரங்களை செய்து ஜனங்களை நம்பவைத்தது மட்டுமல்லாமல், புனித பேதுரு தேவாலயத்தை மிகபிரமாண்டமாகவும் கட்டியது. ரோம ராஜ்ஜியத்தால் கட்டப்பட்ட இதுபோன்ற தேவாலயங்களில் உள்ள சிலைகள், கட்டடக்கலைகள், பொருட்களின் விலை மதிப்பிடமுடியாதது. இன்றும் கத்தோலிக்க ஆலயங்களில் விக்கிரகங்களை சப்பரமாக தூக்கிச்செல்லும் பழக்கம் முதல் கொடிமரங்களை நாட்டுவது வரை, புறமதத்தினரின் அத்தனைப் பழக்கங்களையும் பின்பற்றிவருகிறார்கள் என்பது வேதனைக்குரிய செய்தி. அவர்கள் மட்டுமல்ல, வானளாவிய கோபுரங்களை உடைய கோடிக்கணக்கான மதிப்புடைய ஆலயங்களைக் கட்டிவரும் ‘புராட்டஸ்டண்ட’ சபைகளுக்குள்ளும் அந்திகிறிஸ்துவின் ஆவி நுழைந்துவிட்டது என்றே சொல்லலாம். அதிலும் மிஷனரிகள் அதிகம் ஊழியம் செய்த இடங்களாகிய கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள புராட்டஸ்டண்ட ஆலயங்களை இயேசுவின் போதனைக்கு மாறாக கோடிகளில் அலங்கரிப்பதை என்னவென்று சொல்வது?
படம் 50: சப்பரம் மற்றும் கெபிகள்


2 . தனது தேவர்களை மதி ப் பவர்களை கனம்பண்ணுவான்
- தான் கனம்பண்ணி வைத்திருக்கும் தேவர்களை மதித்து ஆராதிக்கிற எந்த ராஜ்ஜியத்தையும் கனம் பண்ணுவான்.
- அவர்கள்அநேகரை ஆளும்படி செய்வான்
ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியத்தின் வழிபாட்டு முறைகளைப் பின்பற்றிய ராஜ்ஜியங்களான பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி உட்பட பல ராஜ்ஜியங்களுக்கு தன்னால் முடிந்த அத்தனை அரசியல் ஆதாயங்களையும் செய்துகொடுத்தது சின்னக்கொம்பு. மத்தியகால சபைகளின் சொத்துக்கள் ஏராளமாக இருந்ததால், ராஜாக்களே அவர்களிடம் கையேந்தவேண்டிய நிலை இருந்தது. பதிமூன்றாம் நூற்றாண்டுக்குப் பின்பு ஐரோப்பாவில் குடியேற்றம் இல்லாத நிலப்பரப்புகள், தீவுகள் ஏராளமாகக் கண்டுபிடிக்கப்பட்டன. இவைகளை எல்லாம் போப்புகள் தங்களது ஆணைகளின் மூலம் (Papal Bull) தங்களுக்கு ஆதரவான போர்ச்சுக்கல், ஸ்பெயின் போன்ற நாடுகளுக்குப் பிரித்துப் பங்கிட்டுக்கொடுத்தனர்.
பொற்பாத்திரத்திம் எதற்கு பயன்பட்டது?
இப்படி அலங்கரிக்கப்பட்ட ஸ்திரீயின் கையில் ஒரு பொற்பாத்திரம் இருந்ததாக யோவான் பார்த்தார். அது எதற்காகப் பயன்படுத்தப்பட்டது என்று பார்ப்போம்.
‘‘அந்த ஸ்திரீ இரத்தாம்பரமும் சிவப்பான ஆடையுந்தரித்து, பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டு, தன் வேசித்தனமாகிய அருவருப்புகளாலும் அசுத்தத்தாலும் நிறைந்த பொற்பாத்திரத்தைத் தன் கையிலே பிடித்திருந்தாள்’’ (வெளி 17:4)
கர்த்தர் தனக்கு விரோதமாக நின்ற ராஜாக்களையும், தேசங்களையும் அழிக்க பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரை பயன்படுத்தினார் என்பதை ஏசாயா மற்றும் எரேமியா தீர்க்கதரிசன புத்தகங்களில் பல இடங்களில் பார்க்கலாம். அதனால் தான் ‘பாபிலோன் கர்த்தருடைய கையிலுள்ள பொற்பாத்திரம்’ என்று கூறியுள்ளார். இந்த பொற்பாத்திரத்தில் இருந்தது என்னவென்று நாம் அறிந்துகொண்டால் தான், ஸ்திரீயின் கையிலுள்ள பொற்பாத்திரத்தின் உள்ளே இருந்தவைகளை வியாக்கியானம் செய்ய முடியும்.
கர்த்தரின் கையில் பொற்பாத்திரம்
கர்த்தர் கையில் இருந்த பாபிலோன் என்ற பொற்பாத்திரத்திற்கு உள்ளே மது இருந்ததா? என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். அது என்ன மது? கர்த்தர் அதை எதற்காகப் பயன்படுத்தினார்? என்று பார்ப்போம்.
‘‘பாபிலோன் கர்த்தருடைய கையிலுள்ள பொற்பாத்திரம்; அது பூமி அனைத்தையும் வெறிக்கப்பண்ணினது; அதின் மதுவை ஜாதிகள் குடித்தார்கள்; ஆகையால் ஜாதிகள் புத்திமயங்கிப்போனார்கள்.’’ (எரேமியா 51:7)\
யூதா ராஜ்ஜியம் உட்பட பூமியின் பதினெட்டு தேசங்களின் ராஜாக்கள் பட்டயத்தால் விழுவார்கள் என்று எரேமியா தீர்க்கதரிசி மூலமாக கர்த்தர் உரைத்த 25 ஆம் அதிகாரத்தில், எரேமியாவின் கையில் ஒரு மதுபான பாத்திரத்தைக் கொடுக்கிறார். அதற்கு ‘தேவனுடைய கோபாக்கினையாகிய பாத்திரத்தில் கலப்பில்லாமல் ஊற்றப்பட்ட அவருடைய உக்கிரமான மது’ என்று பெயர். இந்தப் பாத்திரத்திலுள்ள மதுவை ராஜாக்கள் குடித்து மயக்கமாயிருக்கும் நேரத்தில் அவர்கள் மீது வரும் பட்டயத்தால் அழிவார்கள் என்று சொல்கிறார். இது தேவனாகிய கர்த்தர் ராஜாக்கள் மீதும் ஜாதிகளின் மீதும் கொண்டுள்ள கோபத்தினால் அழிக்கப்படுவதன் ஆவிக்குரிய அடையாளமானதாகும். நாம் நினைப்பதுபோல் போதை தரும் மதுபானம் அல்ல.
‘‘இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் என்னை நோக்கி: நான் உன்னை அனுப்புகிற ஜாதிகள் குடித்து, நான் தங்களுக்குள் அனுப்பும் பட்டயத்தால் அவர்கள் தள்ளாடி, புத்திகெட்டுப்போகும்படிக்கு, இந்த உக்கிரமாகிய மதுபானத்தின் பாத்திரத்தை நீ என் கையிலிருந்து வாங்கி அவர்கள் எல்லாருக்கும் அதிலே குடிக்கக்கொடு என்றார். அப்பொழுது நான் அந்தப் பாத்திரத்தைக் கர்த்தருடைய கையிலிருந்து வாங்கி, கர்த்தர் என்னை அனுப்பின எல்லா ஜாதிகளுக்கும் குடிக்கக் கொடுத்தேன். எருசலேமுக்கும் யூதாவின் பட்டணங்களுக்கும், அதின் ராஜாக்களுக்கும், அதின் பிரபுக்களுக்கும், அவர்களை இந்நாளிலிருக்கிறபடி வனாந்தரமும் பாழும் இகழ்ச்சிக்குறியாகிய ஈசல்போடுதலும் சாபமுமாக்கிப்போடும்படி குடிக்கக்கொடுத்தேன். நீங்கள் குடித்து, வெறித்து, வாந்திபண்ணி, நான் உங்களுக்குள் அனுப்பும் பட்டயத்தாலே எழுந்திராதபடிக்கு விழுங்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார் என்று நீ அவர்களுக்குச் சொல்லு.’’ (எரேமியா 25:15-18,27)
இப்படி பல ராஜாக்களை அழிப்பதற்கு கர்த்தர் பயன்படுத்திய ராஜா தான் நேபுகாத்நேச்சார். இதனால் தான் பாபிலோன் ‘கர்த்தர் கையிலுள்ள பொற்பாத்திரம்’ என்று கூறப்பட்டுள்ளது. அது பூமி அனைத்தையும் வெறிக்கப்பண்ணியது; அதைக் குடித்த ஜாதிகள் மயங்கிப்போனார்கள் என்று சொல்வதன் மூலம், பூமியின் பல ஜாதிகள் பாபிலோனின் பட்டயத்திற்கு முன்பு விழுந்துபோனார்கள் என்று அர்த்தமாகும்.
அதைக் குடித்தால் என்ன நடக்கும்?
இப்படி பல ராஜ்ஜியங்களை வீழ்த்திய பாபிலோனுக்கே கடைசியில் கர்த்தர் அந்தப் பாத்திரத்திலுள்ள மதுவைக் கொடுத்ததால் என்ன நடக்கும் என்று கர்த்தர் எரேமியாவுக்கு சொல்கிறார். அதன்படி அந்த மதுவைக் குடித்தவர்கள் வெறித்து, என்றைக்கும் விழிக்காத நித்திரையாகிய மரண அழிவை அடைவார்கள் என்றும் சொல்கிறார். அதாவது ஒரு ராஜ்ஜியத்தை, ராஜாவை அல்லது ஜாதிகளை நிர்மூலமாக அழிப்பதற்கு கர்த்தர் பயன்படுத்தும் பட்டயம் அல்லது படையெடுப்புகள் தான் மதுவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘‘அவர்கள் களிக்கும் சமயத்திலே நான் அவர்கள் குடிக்கும் பானத்தை அவர்களுக்குக் குடிக்கக்கொடுத்து, அவர்கள் துள்ளத்தக்கதாக அவர்களை வெறியாக்குவேன்; அதினால் அவர்கள் என்றென்றைக்கும் விழிக்காத நித்திரை அடைவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.’’ (எரேமியா 51:39)
‘‘அதின் பிரபுக்களையும் அதின் ஞானிகளையும் அதின் தலைவரையும் அதின் அதிகாரிகளையும் அதின் பராக்கிரமசாலிகளையும் வெறிக்கப்பண்ணுவேன்; அப்பொழுது அவர்கள் என்றென்றைக்கும் விழிக்காத தூக்கமாய்த் தூங்கி விழுவார்கள் என்று சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ள ராஜா சொல்லுகிறார்.’’ (எரேமியா 51:57)
மகா பாபிலோனுக்கு ஊற்றப்பட்ட மது
கடைசிகால மகா பாபிலோனான ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியத்தை வணங்கி, அதன் போதனைகளுக்குக் கீழ்ப்படிந்து, தங்களை ஆவிக்குரிய அடிமைகளாக ஒப்புக்கொடுப்பவர்களுக்கும் இந்த மது கொடுக்கப்படுமாம். அதன் முடிவு ‘நரக ஆக்கினை’ என்று யோவானுக்கு இயேசு வெளிப்படுத்தியுள்ளார். பழைய ஏற்பாட்டுக்காலத்தில் இந்த மது ராஜ்ஜியங்களை நிர்மூலமாக்குவதற்கு அடையாளமாக சொல்லப்பட்டுள்ளது. ஆனால் புதிய ஏற்பாட்டில் ‘மகா பாபிலோனாகிய’ ரோமின் மீதான எக்காளங்கள் மற்றும் கலசத்தினால் ஊற்றப்பட்ட தீர்ப்புகளாகவும், அதன் பின்பு நிரந்தரமான நரக தண்டனைக்கு ஒப்பாகவும் சொல்லப்பட்டுள்ளது. இவை ஐரோப்பாவில் பல யுத்தங்களினால் ஏற்பட்ட அழிவுகளைக் குறிக்கும். இப்போது இருக்கும் ஐரோப்பிய யூனியனின் ராஜ்ஜியங்களின் அழிவையும் குறிக்கும்.
‘‘அவர்களுக்குப் பின்னே மூன்றாம் தூதன் வந்து, மிகுந்த சத்தமிட்டு: மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்கித் தன் நெற்றியிலாவது தன் கையிலாவது அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிறவனெவனோ, அவன் தேவனுடைய கோபாக்கினையாகிய பாத்திரத்திலே கலப்பில்லாமல் வார்க்கப்பட்ட அவருடைய உக்கிரமாகிய மதுவைக் குடித்து, பரிசுத்த தூதர்களுக்குமுன்பாகவும், ஆட்டுக்குட்டியானவருக்குமுன்பாகவும் அக்கினியினாலும் கந்தகத்தினாலும் வாதிக்கப்படுவான்.’’ (வெளி 14:9,10)
‘‘அப்பொழுது (இனி வரவிருக்கும் 7 ஆம் கலசத்தின் அழிவு காலத்தில்) மகா நகரம் மூன்று பங்காகப் பிரிக்கப்பட்டது, புறஜாதிகளுடைய பட்டணங்கள் விழுந்தன. மகா பாபிலோனுக்கு தேவனுடைய உக்கிரமான கோபாக்கினையாகிய மதுவுள்ள பாத்திரத்தைக் கொடுக்கும்படி அது அவருக்கு முன்பாக நினைப்பூட்டப்பட்டது.’’ (வெளி 16:19)
வேசித்தனமாகிய உக்கிரமான மது
தேவன் கையிலுள்ள பாத்திரத்தைப் போல, அந்திகிறிஸ்துவாகிய சிவப்பான மிருகத்தின் மேல் இருந்த ஸ்திரீயின் கையிலும் ஒரு பொற்பாத்திரம் இருந்தது.
படம் 51: உக்கிரமான மதுவால் நிறைந்த பாத்திரத்துடன் வேசி ஸ்திரீ

தேவனாகிய கர்த்தர், தன்னைப் பின்பற்றாதவர்களை அழிக்க அந்தப் பாத்திரத்திலுள்ள ‘உக்கிரமாகிய மதுவைக்’ கொடுத்தார். அப்படியானால் அந்திகிறிஸ்து தன் கையிலுள்ள பாத்திரத்திலுள்ள மதுவைக் கொண்டு என்ன செய்வான் என்று உங்களால் யூகிக்க முடிகிறதா? நிச்சயமாக அவன் தன்னைப் பின்பற்றுகிறவர்களை நரகத்திற்கு இழுத்துச்செல்வதே முக்கிய நோக்கமாக இருக்கும் அல்லவா? இதனால் தான் ‘அவளுடைய வேசித்தனமாகிய மதுவால் பூமியின் குடிகளும் வெறிகொண்டிருந்தார்களே’ என்று 17:1 ல் யோவானுக்கு தூதன் அறிவிக்கின்றான். பாபிலோன் எப்படி கர்த்தரின் கையில் இருந்த பொற்பாத்திரத்தின் மதுவால் பூமியின் ராஜாக்களை அழித்ததோ, அதுபோலவே ‘மகா பாபிலோனாகிய’ ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியம், ஸ்திரீயாகிய சபையின் உதவியோடு தன் வேசித்தனமாகிய (விக்கிரக ஆராதனை, பெருமை, கள்ளபோதகம்) மதுவினால் பூமியின் ராஜாக்களையும், ஜாதிகளையும், அதாவது தன்னைப் பின்பற்றுபவர்களை மோசம்போக்கும்படி வெறிக்கச்செய்து, சத்தியத்தை அறியும் அறிவை விட்டு அவர்களை விலகச்செய்தது. இதைத்தான் அந்திகிறிஸ்துவின் அட்டகாசங்களைப் பற்றி பவுல் சொல்லிய 2 தெசலோனிக்கேயரிலும் பின்வருமாறு உள்ளது.
‘‘கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்சகத்தோடும் இருக்கும். இரட்சிக்கப்படத்தக் கதாய்ச் சத்தியத்தின்மேலுள்ள அன்பை அவர்கள் அங்கிகரியாமற் போனபடியால் அப்படி நடக்கும்.’’ (2 தெசலோனிக்கேயர் 2:10)
பழைய பாபிலோன் கர்த்தருடைய எருசலேம் தேவாலயத்திற்குச் செய்த செயலை அவர் மறக்கவில்லை. அவர் பாபிலோனை வீழ்த்தியதற்கு அதுவும் ஒரு காரணம்.
‘‘அம்புகளைத் துலக்குங்கள்; கேடகங்களை நன்றாய்ச் செப்பனிடுங்கள்; கர்த்தர் மேதியருடைய ராஜாக்களின் ஆவியை எழுப்பினார்; பாபிலோனை அழிக்கவேண்டுமென்பதே அவருடைய நினைவு; இது கர்த்தர் வாங்கும் பழி, இது தமது ஆலயத்துக்காக அவர் வாங்கும் பழி’’ (எரேமியா 51:11)
கைகளால் கட்டப்பட்ட ஆலயத்திற்கே அவர் பழிவாங்க நினைக்கும்போது, புதிய ஏற்பாட்டுக் காலத்தின் ஆலயமாகிய, சரீரமாகிய சபையை, தனது வேசித்தனமாகிய மதுவால் கெடுத்த ‘மகா பாபிலோனை’ சும்மா விடுவாரா? இப்படி செய்ததால் தான் மகா பாபிலோனாகிய ரோமும் அதனைச் சார்ந்த ஐரோப்பிய கூட்டணியும் விழும் என்று கர்த்தர் சொல்கிறார்.
‘‘வேறொரு தூதன் பின்சென்று: பாபிலோன் மகா நகரம் விழுந்தது! விழுந்தது! தன் வேசித்தனமாகிய உக்கிரமான மதுவைச் சகல ஜாதிகளுக்கும் குடிக்கக்கொடுத்தாளே! என்றான்’’ (வெளி 14:8)
மன்னா வைக்கப்பட்ட மற்றும் பரிசுத்த ஸ்தலத்தில் இருக்கவேண்டிய பொற்பாத்திரத்தில், பாபிலோன் ராஜாவாகிய பெல்ஷாத்சார் தனது மனைவிகளோடும், அதிகாரிகளோடும் மதுவை ஊற்றிக் குடித்தது மட்டுமல்லாமல் பாபிலோனிய தெய்வங்களைப் புகழ்ந்த அடுத்த நொடியே தேவனின் விரலினால் அவனுக்கு தீர்ப்பு எழுதப்பட்டது.
‘‘அப்பொழுது எருசலேமிலுள்ள தேவனுடைய வீடாகிய ஆலயத்திலிருந்து எடுக்கப்பட்ட பொற்பாத்திரங்களைக் கொண்டுவந்தார்கள்; அவைகளில் ராஜாவும் அவனுடைய பிரபுக்களும் அவனுடைய மனைவிகளும் அவனுடைய வைப்பாட்டிகளும் குடித்தார்கள். அவர்கள் திராட்சரசம் குடித்து, பொன்னும் வெள்ளியும் வெண்கலமும் இரும்பும் மரமும் கல்லுமாகிய தேவர்களைப் புகழ்ந்தார்கள். அந்நேரத்திலே மனுஷ கைவிரல்கள் தோன்றி விளக்குக்கு எதிராக ராஜ அரமனையின் சாந்து பூசப்பட்ட சுவரிலே எழுதிற்று; எழுதின அந்தக் கையுறுப்பை ராஜா கண்டான்.’’ (தானியேல் 5:3-5)
இது போலவே, தேவனாகிய கர்த்தரின் நாமத்தை மட்டுமே மகிமைப்படுத்த வேண்டிய சபையானது, விக்கிரக ஆராதனையை பின்பற்ற வைக்கும் அந்திகிறிஸ்துவின் ஆளுகைக்குள் சென்றதால் தான், ‘மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய்’ என்னும் நாமத்தை நெற்றியிலும், வேசித்தனமாகிய அருவருப்புகளாலும் அசுத்தத்தாலும் நிறைந்த பொற்பாத்திரத்தைத் தன் கையிலும் பிடித்திருந்தாள்’ என்று யோவான் காண்கிறார்.
ஸ்திரீயின் (சபை) பங்கு என்ன?
இந்த மிருகமாகிய ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியம் தனியாக மட்டும் இந்த இரத்தம் சிந்தும் காரியத்தை செய்யவில்லை. அதற்கு முக்கிய உடந்தையாக இருந்ததே ஸ்திரீயாகிய கத்தோலிக்க சபை தான். ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியத்திலும் ரோம ராஜாக்கள் இருக்கத்தான் செய்தார்கள். ஆனால் போப்புகள் தான் ராஜாக்களை நியமிக்கும் ‘கிங் மேக்கர்களாக’ இருந்தார்கள். அதிலும் குறிப்பாக 11 ஆம் நூற்றாண்டிலிருந்து 13 ஆம் நூற்றாண்டு வரை அவர்களின் ஆதிக்கம் எந்த அளவிற்கு உச்சத்தில் இருந்தது என்பதை தயவு செய்து வரலாற்று புத்தகங்களிலோ, வலைதளங்களிலோ சென்று பாருங்கள்.
‘‘அந்த ஸ்திரீ பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும், இயேசுவினுடைய சாட்சிகளின் இரத்தத்தினாலும் வெறிகொண்டிருக்கிறதைக் கண்டேன்; அவளைக் கண்டு நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்.’’ (வெளி 17:6)
இந்த ஸ்திரீ தனியாக இல்லை; மிருகத்தின் மீது ஏறியிருந்தாள் (Woman riding on the beast) என்று கூறப்பட்டுள்ளது. இந்த வசனம் தான் கத்தோலிக்க சபைக்கும், அரசியல் அதிகாரத்திற்கும் உள்ள தொடர்பைத் (Church – state alliance) தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
பூமியின் ராஜாக்களை மயக்கிய மது
‘‘அவளுடைய வேசித்தனத்தின் உக்கிரமான மதுவை எல்லா ஜாதிகளும் குடித்தார்கள்; பூமியின் ராஜாக்கள் அவளோடே வேசித்தனம்பண்ணினார்கள்; பூமியின் வர்த்தகர் அவளுடைய செல்வச்செருக்கின் மிகுதியினால் ஐசுவரியவான்களானார்கள் என்று விளம்பினான்.’’ (வெளி 18:3)
- ஜாதிகள்குடித்தார்கள்: ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியத்தின், பரிசுத்த வேதத்திற்குப் புறம்பான கோட்பாடுகளையும், விக்கிரக ஆராதனைகளையும் பின்பற்றி வெறிகொண்டதால் பட்டயம் நிர்மூலமாக்கும் மட்டும் அவர்களைப் பின்தொடர்ந்தது. கர்த்தரை அறியும் அறிவையும் ஞானத்தையும் வெறுத்ததால் தான் இந்த ஆக்கினை. இதைத் தான் எக்காளங்கள், கலசங்களின் காலங்களில் ஐரோப்பிய கண்டத்தில் நிகழ்ந்த அழிவுகளாகக் கூறப்பட்டுள்ளது.
- பூமியின்ராஜாக்கள் வேசித்தனம் செய்தார்கள்: பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி, ஆஸ்டிரியா, ஜெர்மனி உட்பட பல மத்திய கால ஐரோப்பிய நாடுகள் போப்புகளின் கட்டளைகளுக்கு மட்டுமே செவிகொடுத்து சத்தியம் மக்களுக்குப் பரவாமல் பார்த்துக்கொண்டன.
- பூமியின்வர்த்தகர்: தானியேல் கால பாபிலோன் பூமியின் எல்லா திசைகளின் வர்த்தகரோடு தொடர்பில் இருந்து தானும் செழிப்பாகி, அவர்களையும் செழிப்பாக்கியது. ஆவிக்குரிய விதத்தில் சொல்லப்போனால் சத்தியத்தை அறிவும் அறிவை விற்றுப்போட்டார்கள்.
‘‘(பாபிலோனே) உன் சிறுவயதுமுதல் நீ பிரயாசப்பட்டு எவர்களுடன் வியாபாரம்பண்ணினாயோ, அவர்களும் அப்படியே இருப்பார்கள், அவரவர் தங்கள் போக்கிலே போய் அலைவார்கள்; உன்னை இரட்சிப்பார் இல்லை.’’ (ஏசாயா 47:15)
ஆனால் கடைசிகால மகா பாபிலோனான ரோம், தனக்கு அடிபணிந்த ராஜ்ஜியங்களுடன் எல்லா வகையான கொடுக்கல் வாங்கல் வைத்துக்கொண்டது மட்டுமல்லாமல், ஆத்துமாக்களையும் வைத்து வியாபாரம் செய்தது. அதாவது, கிறிஸ்தவத்தின் பெயரால் ராஜ்ஜியங்களையும், செல்வங்களையும் சம்பாதித்து, பல கோடி மக்களின் இரட்சிப்பை வர்த்தகமாக மாற்றி வஞ்சித்தது.
‘‘இலவங்கப்பட்டையையும், தூபவர்க்கங்களையும், தைலங்களையும், சாம்பிராணியையும், திராட்சரசத்தையும், எண்ணெயையும், மெல்லிய மாவையும் கோதுமையையும், மாடுகளையும், ஆடுகளையும், குதிரைகளையும், இரதங்களையும், அடிமைகளையும், மனுஷருடைய ஆத்துமாக்களையும் இனிக் கொள்வாரில்லாதபடியால், அவளுக்காக அழுது புலம்புவார்கள்.’’ (வெளி 18:13)
இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று விசுவாசிக்கிறேன். பாதாளத்தில் தள்ளப்பட்ட பழைய பாபிலோன் தான் ஆவிக்குரிய மறுபிறவி எடுத்து ‘மகா பாபிலோனாக’ வந்து விட்டது.
லூசிபர் – (வலுசர்ப்பம்) பாபேல் பாபிலோன் மகா பாபிலோன்
இதுதான் இயேசுவின் இரண்டாம் வருகையின்போது அழியப்போகிறது. மற்ற எல்லா தீர்க்கதரிசனங்களும் நிறைவேறி விட்டன. ஏழாம் கலசத்தின் முடிவில் இந்த மகா பாபிலோன் முற்றிலும் அழிக்கப்பட்ட உடன் இயேசுவின் இரண்டாம் வருகை இருக்கும். சுமார் 1900 ஆண்டுகளாக ரோம ராஜ்ஜியம்/ஐரோப்பா அழிவுகளை சந்தித்து வந்ததை உலகம் எப்படி ஒரு வரலாற்று சம்பவமாக மட்டும் பார்த்ததோ, அதைப்போலத் தான் கடைசி கலசத்தினால் முற்றிலுமாக அழிக்கப்படும் யுத்தம் நிறைவேறும் காலத்திலும் பூமியின் குடிகள் உணர்வற்று இருப்பார்கள். இதற்குப் பின்பு தான் சடுதியில் இயேசுவின் வருகை இருக்கும். அந்த நாளையும், நாழிகையையும் அவர் ஒருவரே அறிவார்.
அட்டவணை 21: கடைசிகால மற்றும் முடிவகால சம்பவங்களின் காலவரிசை

இன்னொரு இரகசியம்
இதில் இன்னொரு இரகசியத்தையும் பரிசுத்த வேதாகமத்தின் ‘அச்சிடப்பட்ட எழுத்துக்களில்’ கண்டேன். அது என்னவென்றால், வேத வசனங்களில் எங்கெல்லாம் ‘கர்த்தருடைய நாமத்தைக் குறிக்கும்’ வார்த்தை வருகிறதோ, அவை எல்லாம் நம் தமிழ் மட்டுமல்லாமல் ஆங்கில வேதாகமங்களிலும் ‘கொட்டை எழுத்துகளில்’ (Bold letters) குறிப்பிடப்பட்டிருக்கும். நீங்கள் வேதப்புத்தகத்தைப் பார்த்தீர்களானால் இந்த வேசியின் நெற்றியில் எழுதியிருக்கும் தூஷணமான நாமம் மட்டும் கொட்டை எழுத்துக்களில் கொடுக்கப்பட்டிருக்கும். அப்படியானால் இந்த நாமம் தான் தேவனுக்கு விரோதமான உச்சகட்ட எதிராளியான சாத்தானின் ‘அந்திகிறிஸ்து சபையின்’ நாமம் என்ற முக்கியத்துவத்தை/ மகா இரகசியத்தைப் பரிசுத்த ஆவியானவர் இந்த வேதத்தை ஆக்கியோர்களுக்கு வெளிப்படுத்தியிருப்பார் என்று நான் கர்த்தருக்குள் விசுவாசிக்கிறேன்.
இந்த இரகசியத்தை நீங்கள் எல்லோரும் அறிந்து கிறிஸ்துவைப் பற்றிய விசுவாசத்தில் வளரவும், அறியாமல் அந்திகிறிஸ்துவின் சபைகளை பின்தொடர்பவர்களை கிறிஸ்துவுக்குள் கொண்டுவரவும், கிறிஸ்துவின் வருகையை எதிர்நோக்கி ஆவலோடு காத்திருக்க வேண்டும் என்ற உந்துதலினால் தான் இந்த புத்தகத்திற்கு ‘‘இரகசியம், மகா பாபிலோன்’ என்ற பெயரை வைக்க ஆவியானவர் எனக்கு கிருபை செய்தார்.
உயிர்த்தெழுந்து வந்த பாபிலோன்
இந்த மிருகத்தின் மீது ஏறியிருந்த ஸ்திரீ என்பது ரோம சாம்ராஜ்ஜியத்தின் மீது ஏறியிருந்து ஆளுகை செய்த சபை என்று பொருள்படும். இதனால் தான் இந்தப் புத்தகம் முழுவதும் ‘ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியம்’ என்று குறிப்பிட்டுள்ளேன். பழைய பாபிலோன் யூதர்களின் சபையை அடிமைப்படுத்தியது. இந்த மகா பாபிலோன் புதிய ஏற்பாட்டு சபையை அடிமைப்படுத்த நினைத்தது. யூதர்கள் மேசியாவாகிய இயேசுவை ஏற்றுக்கொள்ளாததினால் 2500 ஆண்டுகளுக்கு மேலாக அடிமைத்தனத்திலேயே இருந்து கி.பி 1948 ல் தான் தனிதேசமாக உருவெடுத்தனர். அதுபோல கிறிஸ்துவின் மணவாட்டி சபையானது அவரது இரண்டாம் வருகையின்போது பூரணப்படும்.
அட்டவணை 22: பழைய பாபிலோன், மகாபாபிலோன் ஒப்பீடு

ரோமன் கத்தோலிக்க சபையின் மையமான ரோமிலிருக்கும் வாடிகன் மற்றும் கடைசி மிருகமான ஐரோப்பிய யூனியன் எப்படி மற்றும் யாரால் அழிக்கப்படும் என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்க இருக்கிறோம். அதற்கு முன், ரோம சாம்ராஜ்ஜியத்தின் பல்வேறு வடிவங்கள் எப்படி பல மிருகங்களாகத் தீர்க்கதரிசன பாஷையில் சொல்லப்பட்டது என்பதை எளிதில் ஒப்பிட்டுப் புரிந்துகொள்ளும் வகையில் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையை மறக்காமல் வாசித்துப்பாருங்கள். எப்போதெல்லாம் யோவானின் தரிசனங்களில் வெவ்வேறான மிருகங்களைக் குறித்து குழப்பம் வருகிறதோ, அப்போதெல்லாம் இதை ஒருமுறை வாசித்தால் தெளிவு கிடைக்கும்.