யோவான் கண்ட இரண்டாம் மிருகம்

       ரோம சாம்ராஜ்ஜியம் தான் இயேசுவின் இரண்டாம் வருகை வரை ‘ஏதாவது ஒரு உருவத்தில்’ பூமியில் இருக்கும் என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் நாலாம் உலோகமாகிய இரும்பு அல்லது நாலாம் மிருகமாகிய கொடிய 10 கொம்புள்ள மிருகத்தின் காலத்தில் தான் ‘கையால் பெயர்த்தெடுக்கப்படாத கல்’ வந்து அல்லது ‘நியாய சங்கம்’ அமர்ந்து அந்த ராஜ்ஜியம் அழிக்கப்படும் என்று தானியேல் சொல்கிறார். இந்த ரோம சாம்ராஜ்ஜியம் நான்கு வடிவங்களில் வெளிப்படுகிறது. வெளிப்படுத்தலில் யோவான் கண்ட இரண்டாம் மிருகமும், முதல் மிருகமும் கிட்டத்தட்ட ஒன்றுதான்; ஒரே உறைக்குள் இரண்டு கத்திகள் என்று நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

இரண்டாம் மிருகத்தைப் பற்றி விளங்கிக்கொள்ள நமக்கு அவசியமான மற்றும் இதுவரை நாம் பார்த்த சில விளக்கங்களை மீண்டும் கொடுத்துள்ளேன். இதன்படி ரோம ராஜ்ஜியம் நான்கு வடிவங்களில் வெளிப்பட்டது.

  • தானியேலின் நாலாம் மிருகம்/ வலுசர்ப்பம் = ஒருங்கிணைந்த ரோம சாம்ராஜ்ஜியம் (வடிவம் 1 )
  • இரும்பும்களிமண்ணும் = கிழக்கு (இரும்பு) மற்றும் மேற்கு (களிமண்) ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியங்கள்(வடிவம் 2 )
  • 10கொம்புகள் = உடைந்த மேற்கு (களிமண்) ரோம சாம்ராஜ்ஜியம்-ஐரோப்பிய நாடுகள்
  • பூமியில்விழத்தள்ளப்பட்ட வலுசர்ப்பத்தின் ராஜ்ஜியம்/ சின்னக் கொம்பு/ யோவானின் முதல் மிருகம் = 1260 வருடங்கள் ஆண்ட கத்தோலிக்க ரோம சாம்ராஜ்ஜியம் (வடிவம் 3 )
  • யோவானின் இரண்டாம் மிருகம் = இன்றைய கத்தோலிக்க சபை/ ராஜ்ஜியம்/ வாட்டிகன்/ மறைமுக ரோம் (வடிவம் 3 ன் பிரதிநகல்)
  • எட்டவாதுமிருகம் = ஐரோப்பிய யூனியன் (வடிவம் 4 )
  • கள்ளதீர்க்கதரிசி = போப்

பூமியிலிருந்து தோன்றிய மிருகம்

‘‘பின்பு, வேறொரு மிருகம் பூமியிலிருந்து எழும்பக் கண்டேன்; அது ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாக இரண்டு கொம்புகளையுடையதாயிருந்து, வலுசர்ப்பத்தைப்போலப் பேசினது.’’ (வெளி 13:11)

சமுத்திரத்திலிருந்து எழும்பிய முதல் மிருகமாகிய ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியம், ஏற்கனவே இருந்த ரோம சாம்ராஜ்ஜியத்தைக் கையில் எடுத்து, தனி ராஜ்ஜியமாக தன்னை ஸ்தாபித்துக்கொண்டது என்று முந்திய அத்தியாயத்தில் பார்த்தோம். அது பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் முடிவுக்கு வந்தது. மாறாக இரண்டாவது மிருகம்/ ராஜ்ஜியம் பூமியிலிருந்து வந்ததாக யோவான் காண்கிறார். அப்படியானால் இரண்டாம் மிருகம், முதல் மிருகம் எழும்பிய இடத்திற்கு அப்படியே நேர் எதிர் பகுதியிலிருந்து வந்ததாக அறிகிறோம். முதல் மிருகம் ஐரோப்பிய கண்டத்தின் ராஜ்ஜியங்களின் வழித்தோன்றலாக வந்தது; ஆனால் இரண்டாம் மிருகம் ராஜ்ஜியம் என்ற அதிகாரத்தை, மக்கள் திரளை இழந்த கத்தோலிக்க சபையின் தலைமையிடமான வாடிகனிலிருந்து எழும்புகிறது. இந்த இரண்டாம் மிருகம், முதல் மிருகத்தின் வழித்தோன்றலாக, அதன் முடிவுகாலத்தில் தோன்றியது.

வாடிகனின் எழுச்சி

நெப்போலியனால் அதிகாரம் பறிக்கப்பட்ட கத்தோலிக்க சபை மற்றும் போப்பரசர்களின் ராஜ்ஜியம், பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏராளமான சரிவுகளை சந்தித்தது. கி.பி 1849 ல் கத்தோலிக்க சாம்ராஜ்ஜியத்தின் அத்தனை ஆளுகைப் பகுதிகளையும் குடியரசாக மாறிய இத்தாலி எடுத்துக்கொண்டது. அதிகாரம் பறிபோனது மட்டுமல்லாமல், ஐரோப்பாவில், குறிப்பாக இத்தாலியில் அதற்கு இருந்த பெரும்பாலான சபையின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, இத்தாலி அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த காலக்கட்டத்தில் இவர்கள் வெறும் சபையின் தலைவராக மட்டுமே செயல்பட முடிந்தது. இப்படி வீழ்ச்சியடைந்த போப்புகளின் அதிகாரம் 1922 ல் போப் ‘பதினோராம் பயஸ்’ என்பவர் பதவியேற்ற பின்பு எழுச்சியடைய ஆரம்பித்தது.

அதுவரை கத்தோலிக்க சபை மட்டுமல்ல, இத்தாலியின் ஆட்சியதிகாரமும் போப்புகளுடையது தான் (Roman Question) என்று சொல்லிக்கொண்டு வந்த போப்புகளின் வரிசையில் வந்த பயஸ், தனது ஆட்சிகாலத்தில் இத்தாலியுடன், குறிப்பாக அப்போதைய அதிபர் முசோலினியுடன் சுமூகப்போக்கை கடைபிடிக்கத் தொடங்கினார். இதன் விளைவாக போப்புகளிடமிருந்து பறிக்கப்பட்ட ஆளுகைப் பகுதிகளுக்கு இழப்பீடாக ஏராளமான சொத்துக்களை இத்தாலி அரசாங்கம் போப்புகளின் கையில் மீண்டும் ஒப்படைத்தது (Lateran pacts of 1929). இதனடிப்படையில் கி.பி 1929 ஆம் ஆண்டு ரோமிலிருக்கும் ‘வாடிகன் பகுதி’ போப்புகளின் ஆளுகைக்கு உட்பட்ட தனி நாடாக பிரகடனம் செய்யப்பட்டு ஆட்சி, பொருளாதார அதிகாரங்கள் மட்டுமன்றி மீண்டும் அகில உலக ரோமன் கத்தோலிக்க சபைகளின் தலைவராக போப் மாறினார்.

இதன் தொடர்ச்சியாகப் பல நூற்றாண்டுகளாக பிரிந்திருந்த மேற்கு ரோம ராஜ்ஜியத்தின் கத்தோலிக்க சபையும் (களிமண்), கிழக்கு சாம்ராஜ்ஜியத்தின் ஆர்தோடாக்ஸ் கிரேக்க சபையும் (இரும்பு) மீண்டும் ஒன்றிணைந்தனர். இவர்களுக்கு இடையிலான அத்தனை வழக்கு விசாரணைகள், தண்டனைகள் (Excommunication and heretic issues) திரும்பப்பெறப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இப்படியாக சுமார் 130 வருடங்களுக்குப் பின் மீண்டும் ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியம் ‘வாடிகன்’ என்ற குட்டி நாட்டின் வடிவில் மீண்டும் உலகில் தலைதூக்கியது. இது முன்பு போல் ஒரு பெரிய ராஜ்ஜியமாக முழு அதிகார பலத்துடன் இல்லாமல், ஒரு குட்டி நாடு அல்லது உலக கத்தோலிக்க சபைகளின் தாயகமாகத் தான் இருந்துவருகிறது. எனவே தான் மற்ற எல்லா ராஜ்ஜியங்களும் சமுத்திரத்திலிருந்து எழும்பி வந்ததைப் போல வராமல், அதற்கு நேரெதிராக சத்தமில்லாமல், எந்த ராஜ்ஜியங்களையும் வீழ்த்தாமல் பூமியிலிருந்து எழும்பினதாக யோவான் தரிசனத்தில் கண்டார்.

ஆட்டுக்குட்டிக்கு ஒப்பான மிருகம்

இந்த இரண்டாம் மிருகமாகிய ‘வாடிகன் அரசு’, இதுவரை இருந்த மற்ற ராஜ்ஜியங்களைப் போல ஆக்ரோஷமான ராஜ்ஜியமாக இல்லாமல், தன்னை உலக சமாதானத்தின் தூதுவராகவே இன்றுவரை காண்பித்துக் கொண்டிருக்கிறது. நம் பரிசுத்த வேதத்தின்படி ‘ஆட்டுக்குட்டியானவர்’ என்றாலே அது ‘இயேசுகிறிஸ்து’ என்று தான் அர்த்தம். அந்திகிறிஸ்துவாகிய இந்த போப்புகளின் ராஜ்ஜியம் ‘ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாக’ இருந்தது என்று சொல்லப்பட்டதன் மூலம் இதை நாம் அறிந்துகொள்ளலாம். இன்று அன்பு, சமாதானம், ஐக்கியம், இரக்கம், பரிவின் அடையாளமாக புறமதத்தினராலும் அடையாளம் காணப்படும் ஒரே உலகத்தலைவர் அல்லது குட்டி நாட்டின் ராஜா ‘போப்’ மட்டுமே என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மார்ட்டின் லூதர், முதல் மிருகமாகிய ரோமன் கத்தோலிக்க சாம்ராஜ்ஜியத்தைப் பற்றி எழுதும்போது ‘போப்புகளின் வரலாற்று புத்தகங்கள் புனிதர்கள், புனித தலங்கள், புனித செயல்கள், புனித வழிபாடுகள், சுத்திகரிப்பு, பாவமன்னிப்பு, மனிதநேய கோட்பாடுகள் உட்பட பல வெளிஉலகம் காணக்கூடிய காரியங்களால் நிறையும்படி எழுதப்பட்டுள்ளது. ஆனால் அவர்களின் விக்கிரக ஆராதனைகள், அவர்கள் சிந்திய பரிசுத்தவான்களின் இரத்தங்கள், கொலைகள், யுத்தங்கள், ராஜாக்களைத் தூண்டிவிட்டு உயிர்களை வேட்டையாடின சம்பவங்கள், ஒழுக்கக்கேடுகள் ஆகியவற்றைக் குறித்த வரலாற்றை யார் தான் சொல்லக்கூடும்?’’ என்று குறிப்பிட்டுள்ளார். இதிலிருந்து முதல் மிருகம் செய்த எல்லா மீறுதல்களையும், அக்கிரமத்தையும் முழுக்க மறுக்கவும், மறைக்கவும் செய்யும் முயற்சியில் இரண்டாம் மிருகமாகிய வாடிகன் தன்னை ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாக காண்பித்து வெற்றி கண்டு வருகிறது. இது தன் மற்றும் தன் முன்னோடியின் சுயரூபத்தின் ‘சாயலை’ உலகின் கண்களுக்கு மறைத்து தன்னை சமாதானத்தின் தூதுவராக வெளிப்படுத்துகிறது. ஆனால் உண்மையில் திரைக்குப் பின்னால் என்ன நடக்கிறது?

தயவுசெய்து வரலாற்று சம்பவங்களைத் திருப்பிப் பாருங்கள். பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டிருக்கிற பல வரலாற்று சம்பவங்கள் எவ்வளவு ஆவிக்குரிய முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதுபோலவே புதிய ஏற்பாட்டுக் காலமான இயேசுவின் பிறப்புக்குப் பின் இன்றுவரை நடந்த சம்பவங்கள் மிக முக்கியமானவை; வெறும் தற்செயல் நிகழ்வுகள் அல்ல. முதல் மிருகம் பரிசுத்தவான்களின் இரத்தத்தால் வெறிகொண்டதை, இரண்டாம் மிருகமான வாடிகனின் தலைவரான போப் ‘இரண்டாம் ஜான்பால்’ கி.பி 1995 ஆம் ஆண்டு ஒரு லெந்துகால ஆராதனையில் ‘அப்படி நடந்தது முழுவதும் உண்மை’ என்று தனது வாயாலே ஒத்துக்கொண்டு மன்னிப்பும் கேட்டுள்ளார். ‘யூதர்கள், பெண்கள், புராட்டஸ்டண்ட் சீர்திருத்தவாதிகள், திருச்சபைக்கு விரோதமானவர்கள் என முத்திரை குத்தப்பட்டவர்கள், முஸ்லிம்கள் உட்பட பலர் ரோமன் கத்தோலிக்க சபையால் கடந்த 2000 ஆண்டுகளாக பல வகைகளில் (உயிரோடு எரிக்கப்படுதல், படையெடுப்பு, திருச்சபையை விட்டுப் புறந்தள்ளுதல்) கொடுமைப்படுத்தப்பட்ட சம்பவங்களை நான் நினைவுகூர்ந்து அதற்கு மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன்’ என்று அவர் கூறியிருப்பதன் மூலம் இந்த ‘1260 வருடங்கள்’ பரிசுத்தவான்களை அது துன்புறுத்தியது என்பதையும், இப்போது ஆட்டுக்குட்டிபோல தன்னைக் காண்பிக்கிறது என்பதையும் நாம் புரிந்துகொள்ளலாம்.

வலுசர்ப்பத்தைப் போல பேசும் இரண்டாம் மிருகம்

வலுசர்ப்பமாகிய பிசாசு தான் ரோம சாம்ராஜ்ஜியத்திற்கும் அதைத் தொடர்ந்து வந்த கத்தோலிக்க ரோம சாம்ராஜ்ஜியத்திற்கும் தனது அதிகாரத்தையும், வல்லமையையும் கொடுத்தான். ஆனால் இங்கே இரண்டாவது மிருகம் ஆட்டுக்குட்டியைப் போல ‘தோற்றமளித்தாலும்’ அது பேசியது என்னவோ பழைய ‘வலுசர்ப்பத்தைப்’ போலத் தான். இந்த வலுசர்ப்பமாகிய ரோம சாம்ராஜ்ஜியம் என்ன பேசியது? அது ‘வெளிப்படையாகப்’ பேசியதெல்லாம் மரியாள் உட்பட பல விக்கிரக ஆராதனை, ஒரே உலக சாம்ராஜ்ஜியம், ஒரே மதம், ஒரே தலைமை. இதை செயல்படுத்துவதற்காகத் தான் வலுசர்ப்பம் முதலாம் மிருகத்திற்கு வல்லமையைக் கொடுத்தது; பரிசுத்தவான்களையும், உலக ராஜ்ஜியங்களையும் ஒடுக்கி ஓரளவு வெற்றியும் கண்டு, கடைசியில் அழிக்கப்பட்டது. ஆனால் ஆட்டுக்குட்டியைப் போல தன்னைக் காண்பித்துவரும் வாடிகனின் வாயும் ‘மறைமுகமாக’ வலுசர்ப்பத்தின் அத்தனை திட்டங்களாகிய விக்கிரக ஆராதனை, ஒரே உலக சாம்ராஜ்ஜியம், ஒரே மதம், ஒரே தலைமை என்ற பாப்பஸியின் ஆதித்திட்டத்தை நிறைவேற்றவே தீவிரமாய் இருக்கிறது என்பது நாம் இன்றுவரை கண்டு வரும் உண்மை

படம் 39: ஆட்டுக்குட்டிக்கு ஒப்பான இரண்டு கொம்புடைய தானியேலின் இரண்டாம் மிருகம்

சுருக்கமாகச் சொன்னால் முதலாம் மிருகமாகிய கத்தோலிக்க ராஜ்ஜியம் வெளிப்படையாக, ஆக்ரோஷமாக செய்ததை, இரண்டாம் மிருகமாகிய போப்புகளின் வாடிகன் அரசு மறைமுகமாக, சாந்தமாக செய்து வருகிறது. சாத்தானின் அதிகப்பட்ச ஆசையே விக்கிரக ஆராதனை மூலம் உலகம் தன்னை வணங்கவேண்டும், தேவனின் இடத்தில் தான் இருக்கவேண்டும் என்பது தான் என்பதை மீண்டும் நினைவில் கொள்ளுங்கள். மேலும் முதலாம் மிருகம் எப்படி அரசாட்சி-மதம் (Church-state alliance) என்ற கொள்கையைப் பின்பற்றியதோ, அதுபோலவே இரண்டாம் மிருகமும் மதத்தின் பெயரால் ராஜ்ஜியங்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இது தான் இரண்டு கொம்புகளுள்ள ஆட்டுக்குட்டியின் மறைமுக வேலையாகும்.

முதல் மிருகத்தின் காயங்கள்

முதல் மிருகமாகிய ரோமப் பேரரசு இரண்டு சந்தர்ப்பங்களில் காயமடைந்தது. முதலில் வாண்டல்ஸ், விசிகோத் ஆகியோரின் தொடர் படையெடுப்புகளினால் 10 ராஜ்ஜியங்களாகப் பிரிவடைந்து வல்லமையை இழந்தது. அதாவது மேற்கு ரோம சாம்ராஜ்ஜியம் மீண்டும் எழும்ப வாய்ப்பே இல்லை என்று உலக மக்கள் அனைவரும் முடிவுசெய்யும் அளவுக்கு அதன் தலைகளில் ஒன்று ‘சாவுக்கேதுவான காயம்’ (Deadly wound) அடைந்தது. இந்த காயம் தான் போப்புகளின் ரோமன் கத்தோலிக்க சபையால் ஆற்றப்பட்டு, மரண தருவாயில் இருப்பவன் மீண்டு வருவதைப் போல மீண்டு ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியமாக 1260 வருடங்கள் வலுசர்ப்பத்தின் அதிகாரத்தை உபயோகப்படுத்தி ஆட்சிசெய்தது.

இந்த மிருகம் 1260 வருடங்களின் முடிவில் மீண்டும் நெப்போலியனின் ‘பட்டயத்தால் காயம்’ (Wound by sword) அடைந்தது. இந்தக் காயம் முன் சொன்ன காயம் போல சாவுக்கேதுவான காயம் அல்ல. ஏனென்றால், நெப்போலியன் போப்புகளின் அரசியல் அதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாரே ஒழிய கத்தோலிக்க சபை அப்போதும் அடுத்தடுத்த போப்புகளால் நடத்தப்பட்டுக் கொண்டு தான் இருந்தது. வெளிப்படுத்தல் 13:10 ல் ‘சிறைப்படுத்திக்கொண்டு போகிறவன் சிறைப்பட்டுப்போவான்; பட்டயத்தினாலே கொல்லுகிறவன் பட்டயத்தினாலே கொல்லப்படவேண்டும்’ என்று சொல்லப்பட்டுள்ளது. இதில் முதல் மிருகம் சிறைபிடிக்கப்பட்டது மட்டும் தான் நெப்போலியனின் காலத்தில் நிறைவேறியது. ஆனால் முதல் மிருகத்தின் வழியில் வந்த இரண்டாம் மிருகம், இயேசுவின் இரண்டாம் வருகையின் காலத்தில் தான் கொல்லப்படும் என்று யோவானுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்.

‘‘அப்பொழுது மிருகம் (ராஜ்ஜியம்) பிடிக்கப்பட்டது; மிருகத்தின் முன்பாகச் செய்த அற்புதங்களால் அதின் முத்திரையைத் தரித்தவர்களையும் அதின் சொரூபத்தை வணங்கினவர்களையும் மோசம்போக்கின கள்ளத்தீர்க்கதரிசியுங்கூடப் (இரண்டாம் மிருகத்தின் தலைவன்) பிடிக்கப்பட்டான்; இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடே தள்ளப்பட்டார்கள்.’’ (வெளி 19:20)

சுருக்கமாக சொல்லப்போனால் முதலாம் மிருகம்

  • தலையில்ஒன்று சாவுக்கேதுவான காயம் அடைந்தது = கி.பி 476
  • பட்டயத்தினால் காயம்பட்டது மற்றும் சிறைபிடிக்கப்பட்டது = கி.பி 1798 (நெப்போலியனால்)
  • பட்டயத்தினால் காயப்பட்டு பிழைத்த முதல் மிருகம், இரண்டாம் மிருகத்தினால் சொரூபமாக உயிர்ப்பிக்கப்பட்டது = 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் ஆரம்பித்து 1929 ல் உச்சகட்டம் அடைந்தது.

இரண்டாம் மிருகத்தின் செயல்கள்

ஆட்டுக்குட்டிக்கு ஒப்பான இந்த இரண்டாம் மிருகம் அடுத்து என்னென்ன செயல்களில் ஈடுபட்டது என்பதைத்தான் வெளிப்படுத்தல் 13 ஆம் அதிகாரத்தின் மீதி வசனங்கள் (12-17) அடுக்குகிறது. அவைகளை உங்களுக்குப் புரியும்படி எளிமைப்படுத்தி கொடுத்துள்ளேன்.

இரண்டாம் மிருகம் (வாடிகன்) செய்த காரியங்கள் மற்றும் அதற்கு கொடுக்கப்பட்ட அதிகாரங்கள்:

  1. முதல் மிருகம் (1260 வருடம் ஆண்ட ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியம்) செய்து முடிக்காமல் மிச்சம் வைத்திருந்த (அதிகாரங்கள்) வேலைகளை நிறைவேற்றுவது
  2. முதல் மிருகத்தால் கொடுக்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி பல அற்புதங்களை செய்வது. (இந்த முதல் மிருகத்திற்கு அப்படிப்பட்ட அதிகாரம் கொடுத்தது வலுசர்ப்பம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்)
  3. இந்த அற்புத செயல்கள் மூலமாக பூமியின் குடிகளை வஞ்சிப்பது
  4. இந்த வஞ்சனை அல்லது மோசம் போக்குவதற்கு முக்கிய அடையாளமாக முதல் மிருகத்திற்கு ஒரு சொரூபத்தை (Image) உண்டுபண்ணுவது.
  5. அந்த சொரூபத்தை பூமியின் குடிகள் அனைவரும் ஆராதனை செய்து வணங்கும்படி செய்வது
  6. இந்த முதல் மிருகத்தின் சொரூபத்திற்கு (முதல் மிருகத்திற்கு அல்ல) ஆவியை அல்லது உயிரைக் கொடுக்கும்படி இரண்டாம் மிருகத்திற்கு வல்லமை கொடுக்கப்பட்டது.
  7. இந்த வல்லமையால், தான் செய்வித்த முதல் மிருகத்தின் சொரூபத்தை பேச வைத்தது
  8. இந்த வல்லமையால் முதல் மிருகத்தின் சொரூபத்தை வணங்காத யாவரையும் கொலை செய்யும்படிக்கு அதிகாரம்.
  9. பூமியின் எல்லா வகையான மனிதர்களும் தங்கள் வலது கை அல்லது நெற்றியில் தனது (இரண்டாம் மிருகத்தின்) முத்திரையைப் பெறும்படி வலியுறுத்தியது.
  10. இந்த இரண்டாம் மிருகத்தின் முத்திரை/ பெயர்/ எண்ணை ஏற்றுக்கொள்ளாதவர்களை எந்தவித வர்த்தகமும் செய்யவிடாமல் தடுத்தது.
  • மிருகத்தின் சொரூபம் = முதல் மிருகத்திற்கு சொந்தமானது
  • மிருகத்தின் முத்திரை/நாமம்/ எண் = இரண்டாம் மிருகத்திற்கு சொந்தமானது.

அதற்கு முன்பு, இவை யாவும் சங்கேத பாஷைகள் (Symbolic language) என்பதை மறுபடியும் ஞாபகப்படுத்த விரும்புகிறேன். இவைகள் நிஜமாகவே மிருகங்களாக வந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். நிச்சயம் அப்படி ஒரு கேலிக்கூத்தான சம்பவங்களை இயேசு சொல்லியிருக்கவே மாட்டார். இனி ஒவ்வொரு காரியங்கள் அல்லது சம்பவங்களை விரிவாகப் பார்ப்போம்

இரண்டாம் மிருகத்தின் அதிகாரங்கள்

‘‘அது முந்தின மிருகத்தின் அதிகாரம் முழுவதையும் அதின் முன்பாக நடப்பித்து, சாவுக்கேதுவான காயம் ஆறச்சொஸ்தமடைந்த முந்தின மிருகத்தைப் பூமியும் அதின் குடிகளும் வணங்கும்படி செய்தது.’’ (வெளி 13:12)

இரண்டாம் மிருகம், முதல் மிருகத்தின் அதிகாரத்தை நடப்பித்தது; இந்த முதல் மிருகத்திற்கு அதிகாரத்தைக் கொடுத்தது வலுசர்ப்பம் என்றும் ஏற்கனவே பார்த்தோம். இந்த வலுசர்ப்பம் முதல் மிருகத்திற்கு அப்படி என்ன அதிகாரம் கொடுத்தது? என்ன காரியத்தை நிறைவேற்றுவதற்கு இந்த அதிகாரத்தைக் கொடுத்தது? இதைப் பற்றிய ஆவிக்குரிய யுத்தங்கள் நிறைந்த இரகசியங்களை வெளிப்படுத்தல் 12 ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட ஸ்திரீக்கும் வலுசர்ப்பத்திற்கும் இடையே நடந்த போராட்டங்களில் விரிவாகப் பார்த்தோம்.

அதன்படி பார்த்தால் வலுசர்ப்பம் இயேசுவின் பரிசுத்தவான்களை உபத்திரவப்படுத்தி ‘முற்றிலும் அழிக்க’ 1260 வருடங்கள் ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியத்திற்கு அதிகாரம் கொடுத்தது. இந்த திட்டம் ஓரளவுக்கு மட்டுமே நிறைவேறியது; இதன் முடிவில் ‘புராட்டஸ்டண்ட் மறுமலர்ச்சியின்’ விளைவாக சுவிசேஷம் இன்னும் வேகமாகப் பரவி அநேக ஜனங்கள் இயேசுவை ஏற்றுக்கொண்டார்கள். சபையாகிய ஸ்திரீ முழுவதும் அழியாமல் இயேசுவால் காக்கப்பட்டது. அதற்கு பூமியில் பரவிய சுவிசேஷம் உதவியது. இப்படி பரிசுத்தவான்களை அழிப்பதற்குத் தான் வலுசர்ப்பத்தால் அதிகாரம் பெற்ற முதல் மிருகமாகிய கத்தோலிக்க ராஜ்ஜியம், முடிவடைந்த கி.பி 1798 க்கு பின்பும் அது விட்டுவந்த வேலைகளை முடிக்க இரண்டாம் மிருகமாகிய வாடிகனுக்கு வலுசர்ப்பம் அதிகாரம் கொடுத்தது. இவை எல்லாம் ஆவிக்குரிய இரகசியங்கள்; வெள்ளைத் தாள்களில் வெளியிடப்படும் அரசாணைகள் அல்ல.

முதல் மிருகம் நேரடியாக இரத்தம் சிந்த வைத்தது. இரண்டாம் மிருகம் ஆவிக்குரிய யுத்தங்களையும், மறைமுகமான யுத்திகளையும் பயன்படுத்துகிறது. அவற்றில் சில தான் அற்புத அடையாளங்கள், உலக வர்த்தகங்களில் தலையீடு, சமாதான தூதுவர் வேடம் உட்பட இன்னும் பல.

அற்புத செயல்கள்

முதலாம் மிருகம் விட்டுச்சென்ற அதிகாரத்தினால் இரண்டாம் மிருகம் அதன் முன்பாக வானத்தில் இருந்து அக்கினியை இறக்கத்தக்கதாக அற்புதங்களை செய்தது.

‘‘அன்றியும், அது மனுஷருக்குமுன்பாக வானத்திலிருந்து பூமியின்மேல் அக்கினியை இறங்கப் பண்ணத்தக்கதாகப் பெரிய அற்புதங்களை நடப்பித்து,’’ (வெளி 13:13)

இதைத்தான் அப்போஸ்தலனாகிய பவுல் இப்படியாக சொல்கிறார்.

‘‘அந்த அக்கிரமக்காரனுடைய வருகை சாத்தானுடைய செயலின்படி சகல வல்லமையோடும் அடையாளங்களோடும் பொய்யான அற்புதங்களோடும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்சகத்தோடும் இருக்கும்.’’ (2 தெசலோனிக்கேயர் 2:9,10)

அப்படி இந்த வாடிகனைத் தலைமையிடமாகக் கொண்ட ரோமன் கத்தோலிக்க தலைவராகிய போப்புகளும், கார்டினல்களும் என்ன அற்புதங்களை செய்தார்கள்? அல்லது எவைகளை அற்புதங்களாக வரையறுத்தார்கள்? இவை நிஜ அற்புதங்கள் அல்ல; பொய்யான அற்புதங்கள். சாத்தானாலும் அற்புதங்கள் செய்ய முடியும் என்பது எகிப்தில் மோசே இருந்த காலம் முதலே நமக்குத் தெரிந்த விசயம். இயேசு செய்த அற்புதம் இரட்சிப்புக்கு ஏதுவானது. ஆனால் சாத்தான் செய்யும் அற்புதம் ‘வஞ்சனைக்கு’ ஏதுவானது. எலியா வானத்திலிருந்து நிஜமாகவே அக்கினியை இறக்கினபோது ஜனங்கள் கர்த்தரே தேவன் என்று தொழுதுகொண்டார்கள்; போப்புகள் மற்றும் புனிதர்கள் பெயரில் சாத்தான் அக்கினியை இறக்கத்தக்கதான அற்புதங்களை செய்தபோது மிருகமாகிய ரோம ராஜ்ஜியத்தையும், போப்புகளையும், புனிதர்களின் சிலைகளையும் தொழுதுகொண்டார்கள்.

மரியாளின் திருவவதாரம் (Apparition of Mary)

இயேசுகிறிஸ்து ஒருவர் மட்டுமே பாவம் செய்யாதவர் என்று பரிசுத்த வேதம் திட்டமும் தெளிவுமாகக் கூறுகிறது. ஆனால் கத்தோலிக்க திருச்சபையானது ஆரம்பம் முதலே மரியாளையும் ‘பாவமற்றவர், பாவமன்னிப்பு தருபவர், பாவிகளுக்கு பரிந்துபேசுபவர், (இயேசுவிற்குப் பின் பல குழந்தைகளைப் பெற்ற பின்பும்) அவர் இன்னமும் கன்னித்தன்மையுடையவர், எல்லோருக்கும் தாயானவள் (Our Lady) என்று சொல்வது இயேசுவிற்குப் போட்டியாக இன்னொரு நபரைக் கொண்டுவரும் முயற்சியாகும். இதை விக்கிரக ஆராதனையாகிய வேசித்தனம் என்று சொல்வதைத் தவிர வேறு என்ன சொல்லமுடியும்.

‘‘எல்லாரும் (மரியாள் உட்பட) பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி, இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்;’’ (ரோமர் 3:23,24)

அப்படி மரியாள் பாவமற்றவர் என்று இயேசு சொல்லியிருந்தால் பவுல் ‘மரியாள் தவிர எல்லாரும் பாவஞ்செய்து…..என்று ஆரம்பித்திருப்பார். உலகத்தில் மனித வித்தினால் அல்லது சித்தத்தினால் பிறக்கும் எந்த மனுஷனுக்குள்ளும் ஆதாமின் மீறுதலால் வந்த பாவம் இருக்கும். அதற்கு மாற்றாகத்தான் ஆணின் வித்தின் உதவியில்லாமல் பரிசுத்த ஆவியால் கர்ப்பமடைந்த மரியாள் இயேசுவைப் பெற்றார். இந்தத் திட்டத்தின் மூலம் தான் பாவமனுஷனின் சாயல் இல்லாத இயேசு நமக்கு மீட்பராக வரமுடிந்தது.

ஆனால் மரியாள் தெய்வத்தன்மை உடையவர் என்று சொல்லி, அதைப் பிரபலமாக்கி உலகின் அநேகரை வஞ்சிக்க ஆரம்பிக்கப்பட்டது தான் மரியாளின் திருவவதாரம். ஒரு நபர் மரியாளை தன் கண்களால் மிகத்தெளிவாக தரிசித்ததாகக் கூறினால், அந்த தரிசனம் கத்தோலிக்க திருச்சபை வரையறுத்துள்ள பல சட்டதிட்டங்களின்படி உண்மை என்று நிருபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர் மரியாளை தரிசித்த இடத்தின் பெயரிலோ அல்லது அந்த சூழ்நிலையின் பெயரிலோ மரியாள் அழைக்கப்படுவார். இந்த தரிசன அனுபவம் பெரும்பாலும் ஏதேனும் வியாதியிலிருந்து அற்புத விடுதலை பெறுவதோடு சேர்ந்தும் நடக்கலாம். ஒரு நபரோ அல்லது பலரோ, ஒரு இடத்திலோ அல்லது ஒரே காலகட்டத்தில் பல இடங்களிலோ மரியாள் தரிசனம் தந்ததாகக் கூறி, அது ‘நிருபிக்கப்பட்டு’ அதனை பல இலட்சம் பேர் நம்பி வஞ்சிக்கப்படும் நிகழ்வு கி.பி 1061 முதல் இன்று வரை நடந்து வருகிறது.

கி.பி 1061 ல் இங்கிலாந்தில் உள்ள ‘வெயிசிங்ஹாம்’ என்ற இடத்தில் ஒரு பெண்ணுக்கு, மரியாள் அவர் காபிரியேல் மூலம் தேவ செய்தியைப் பெற்ற நாசரேத் இல்லத்தோடு காட்சியளித்து, அந்த இல்லத்தின் மாதிரியை செய்து புனித ஸ்தலமாக வழிபடச் சொன்னதாகத் தெரிவித்தார். பின்பு அது கத்தோலிக்க சபையால் அங்கீகரிக்கப்பட்டு அவர் சொன்னது போல் ஒரு ஆலயம் கட்டப்பட்டதாம். அது முதல் மரியாள், அந்த ஊரின் பெயரில் ‘Our Lady of Walsingham’ என்று அழைக்கப்பட்டார். இது ஒரு நபர் சார்ந்த விஷயம் அல்ல. மொத்த திருச்சபையும் இதை நம்பி அந்த இடத்திற்கு புனித யாத்திரை செல்வதும், வழிபடுவதும், மரியாள் ஏதாவது ஒரு உருவத்தில் தங்களுக்கு பாதுகாப்பாக இருந்து வருகிறார் என்ற போலியான நம்பிக்கையை பல இலட்சம் மக்களுக்கு ஏற்படுத்தும் வஞ்சிக்கும் செயலாகும்.

படம் 40: மரியாளின் பல திருவவதாரங்கள்

இன்றும் பிரபலமாக ‘Our Lady of Fathima’ என்ற பெயரில் அழைக்கப்படுவதும் இதுபோன்ற ஒரு பிசாசின் அற்புத செயலின் விளைவுதான். இதில் கி.பி 1917 ல் மரியாளை தரிசித்ததாக சொன்னது என்னவோ மூன்று சிறுமிகள் தான். ஆனால் அதே நேரத்தில் சுமார் 70,000 பேர் அற்புத விடுதலை பெற்றுள்ளதாக சபை வரலாறு தெளிவாகக் கூறுகிறது. இது ஒரு எடுத்துக்காட்டு மட்டும் தான். இதுபோன்ற ஏராளமான திருவவதார காட்சிகளை நீங்கள் ‘List of Marian apparitions’ என்று கூகுளில் தேடிப்பார்த்து நான் சொன்னது எவ்வளவு பெரிய வஞ்சனை என்று அறிந்துகொள்ளுங்கள். எல்லாவற்றையும் சொல்ல நமக்கு புத்தகத்தில் இடமில்லை. நம் தமிழ்நாட்டில் உள்ள ‘வேளாங்கன்னி மாதா’ திருத்தலமும் இந்தப் பட்டியலின் தான் வருகிறது. ஒரு நாளைக்கு எத்தனைபேர் அங்கு சென்று தரிசித்து, மொட்டையடித்து, பொருத்தனை செய்து வருகிறார்கள் என்பது நம் அனைவருக்கும் நன்கு தெரிந்த ஒன்று. அப்படியானால் உலகம் முழுவதும் இதுபோல் நடக்கும் காரியங்களால் எத்தனை இலட்சம்பேர் தினமும் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்று கற்பனை செய்துகொள்ளுங்கள்.

நம் கத்தோலிக்க சகோதரர்கள் கூட இன்றுவரை தங்கள் வீடுகளிலும், வாகனங்களிலும் இப்படி ஏதாவது ஒரு ‘Our Lady’ பெயரை எழுதிவைத்திருப்பதை நீங்கள் காணலாம். இதன் அர்த்தம் என்ன? வேதத்தில் இதற்கு ஆதாரம் இருக்கிறதா? என்றால் ஒருவருக்கும் தெரியாது. இது அந்திகிறிஸ்துவின் ராஜ்ஜியமாகிய ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியம் சபையை வஞ்சிக்க ‘வானத்திலிருந்து அக்கினியை இறக்கும் அளவிற்கு போலியான அற்புத செயல்களால்’ தன்னைப் பின்பற்றும் மக்களை நரகத்திற்குக் கொண்டுசெல்லும் வஞ்சனையாகும். இதுபோன்ற அற்புதங்களால் இரண்டாம் மிருகமாகிய வாட்டிகன், முதலாம் மிருகமான ரோமன் கத்தோலிக்க சாம்ராஜ்ஜியத்திற்கு ஒரு ‘சொருபத்தை செய்து’ வஞ்சிக்கப்பட்ட அனைவரையும் அதை வணங்கும்படி செய்ததாம்.

சத்தியத்தை விட்டு விலகச் செய்யும் அற்புதங்கள்

இயேசு செய்த அற்புதங்கள் பலரை அவரது வழியைப் பின்பற்ற செய்தது. அப்படியானால் அந்திகிறிஸ்துவின் அற்புதம் பலரை வழிவிலகச் செய்யவேண்டும் என்பது தான் நியதி. இஸ்ரவேல் ஜனங்கள் கானானுக்குப் பிரவேசிக்கும் முன்பு, விக்கிரகவணக்கத்தைக் குறித்து மோசே அவர்களை மிகக்கடுமையாக எச்சரித்தார். ஒருவேளை ஏதேனும் தீர்க்கதரிசி என்று சொல்லிக்கொண்டு அற்புதங்களை செய்யும் நபர்கள் சொன்னால் கூட விக்கிரகவணக்கம் செய்து வழிவிலகிவிடாதீர்கள் என்று எச்சரித்தார்.

‘‘உங்களுக்குள்ளே ஒரு தீர்க்கதரிசியாகிலும், சொப்பனக்காரனாகிலும் எழும்பி: நீங்கள் அறியாத வேறே தேவர்களைப் பின்பற்றி, அவர்களைச் சேவிப்போம் வாருங்கள் என்று சொல்லி, உங்களுக்கு ஒரு அடையாளத்தையும் அற்புதத்தையும் காண்பிப்பேன் என்று குறிப்பாய்ச் சொன்னாலும், அவன் சொன்ன அடையாளமும் அற்புதமும் நடந்தாலும், அந்தத் தீர்க்கதரிசியாகிலும், அந்தச் சொப்பனக்காரனாகிலும் சொல்லுகிறவைகளைக் கேளாதிருப்பீர்களாக; உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அன்புகூருகிறீர்களோ இல்லையோ என்று அறியும்படிக்கு உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சோதிக்கிறார்.’’ (உபாகமம் 13:1-3)

அவன் சொன்ன அற்புதங்கள் நடந்தாலும், அவனைப் பின்பற்றி கர்த்தரை விட்டு வழிவிலகிவிடாதீர்கள்; அவன் செய்தது அற்புதம் அல்ல; தேவனாகிய கர்த்தருக்கு விரோதமான துரோகப்பேச்சு என்று கூறுகிறார்.

‘‘அந்தத் தீர்க்கதரிசியும், அந்தச் சொப்பனக்காரனும் கொலைசெய்யப்படக்கடவன்; நீங்கள் நடக்கும்படி உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு விதித்த வழியை விட்டு உங்களை விலக்கும்படி, அவன், உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணினவரும் உங்களை அடிமைத்தன வீட்டிலிருந்து நீங்கலாக்கி மீட்டுக்கொண்டவருமான உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமான துரோகப் பேச்சைப் பேசினான்; இப்படிப்பட்ட தீமையை உங்களிடத்திலிருந்து விலக்குவீர்களாக.’’ (உபாகமம் 13:5)

இதே செயலை செய்துவந்த கள்ளதீர்க்கதரியான போப்புகளின் ‘விசுவாச துரோகப் பேச்சை’ விட்டு வெளியே வாருங்கள் என்றே கர்த்தர் அழைக்கிறார்.

மிருகத்தின் சொரூபம்

நாம் ஒரு ஆள் உயர கண்ணாடி முன்பு நின்று பார்த்தால், நம் சொரூபம் (Image) அப்படியே தெரியும். கண்ணாடியில் தெரிவது நம் உருவம் அல்லது சொரூபமே தவிர அது உண்மை அல்ல. ஆனால் அந்த சொரூபம் எந்த வகையிலும் நிஜ உருவத்திற்குக் குறைவானதாக இல்லாமல், அப்படியே அச்சு அசலாக இருக்கும்.

‘‘மிருகத்தின்முன்பாக அந்த அற்புதங்களைச் செய்யும்படி தனக்குக் கொடுக்கப்பட்ட சத்துவத்தினாலே பூமியின் குடிகளை மோசம்போக்கி, பட்டயத்தினாலே காயப்பட்டுப் பிழைத்த மிருகத்திற்கு ஒரு சொரூபம் பண்ணவேண்டுமென்று பூமியின் குடிகளுக்குச் சொல்லிற்று.’’ (வெளி 13:14)

இரண்டாம் மிருகம், முதல் மிருகத்தின் சொரூபத்தை செய்தது என்பது இரண்டாம் மிருகத்தின் அத்தனை சாயலையும் பிரதிபலிப்பதாகும். ஏற்கனவே, முதல் மிருகம் ஆக்ரோஷமாகப் பரிசுத்தவான்களைத் துன்புறுத்தி சபையை அழித்தது; இரண்டாம் மிருகம் ஆட்டுக்குட்டியைப்போல் தன்னை சாதுவாகக் காண்பித்து, வலுசர்ப்பம்போல் பேசியது என்று வாசித்திருப்பீர்கள். இந்த இரண்டாம் மிருகமாகிய வாடிகன் சாதுவாக தன்னைக் காட்டிக்கொண்டாலும், தன்னைப் பின்பற்றும் மக்களை முதல் மிருகமாகிய ரோமன் கத்தோலிக்க சாம்ராஜ்ஜியத்தின் சாயலை ‘வணங்கும்படி அல்லது அதற்கு கீழ்ப்பட்டு’ இருக்கும்படி செய்தது. சுருக்கமாக சொல்லப்போனால் செயல்பாட்டின் அடிப்படையில் இரண்டு மிருகமும் ஒன்றுதான்.

மேலே சொன்னது ஒரு பக்கம் இருக்க, இரண்டாம் மிருகமாகிய அந்திகிறிஸ்துவின் முதல் முக்கிய நோக்கமே, இயேசுவின் இடத்தைப் பிடிப்பது தான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இயேசு எப்படி தேவனின் சாயலோ, அதுபோலவே வலுசர்ப்பத்திடம் அதிகாரத்தைப் பெற்ற முதல் மிருகத்தின் சாயலை பூமியின் குடிகள் வணங்க வைப்பதே அதன் நோக்கமாகும். இது தேவனின் சாயலான இயேசுவுக்கும், முதல் மிருகத்தின் சாயலான அந்திகிறிஸ்துவுக்கும் இடையே உள்ள ஆவிக்குரிய யுத்த இரகசியமாகும்.

‘‘தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.’’ (2 கொரிந்தியர் 4:4)

‘‘அவர் (இயேசு) அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்.’’ (கொலோசேயர் 1:15)

‘‘இவர் (இயேசு) அவருடைய (தேவனுடைய) மகிமையின் பிரகாசமும், அவருடைய (தேவனுடைய) தன்மையின் சொரூபமுமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய், தம்மாலேதாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலதுபாரிசத்திலே உட்கார்ந்தார்.’’ (எபிரேயர் 1:3)

தானியேலின் காலத்தில் மிருகத்தின் சொரூபம்

தானியேல் பாபிலோனில் இருக்கும்போது பாபிலோன் சாம்ராஜ்ஜியம் (சிங்கம்) என்ன சொல்லியது?

‘‘எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தை நீங்கள் கேட்கும்போது, நீங்கள் தாழவிழுந்து, ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளக்கடவீர்கள்.’’ (தானியேல் 3:5)

இந்த மிருகம் சொன்ன கட்டளையின் சாயலைத் தான் இதற்கு அடுத்து வந்த மிருகமாகிய கரடியும் (மேதிய-பெர்சிய) பின்பற்றியது. இதுவும் தானியேலின் காலத்தில் தான் நடந்தது.

‘‘எவனாகிலும்   முப்பது    நாள்வரையில் ராஜாவாகிய உம்மைத்தவிர எந்த தேவனையானாலும்,மனுஷனையானாலும் நோக்கி, யாதொரு காரியத்தைக்குறித்து விண்ணப்பம்பண்ணினால், அவன் சிங்கங்களின் கெபியிலே போடப்பட, ராஜா கட்டளை பிறப்பித்து, உறுதியான தாக்கீது செய்யவேண்டுமென்று ராஜ்யத்தினுடைய எல்லாப் பிரதானிகளும், தேசாதிபதிகளும், பிரபுக்களும், மந்திரிமார்களும் தலைவர்களும் ஆலோசனைபண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.’’ (தானியேல் 6:7)

இதையே தான் அடுத்த மிருகமாகிய சிவிங்கியின் (கிரேக்கம்) வழியில் வந்த ஆண்டியோகஸ் எபிபேனஸ் செய்தான் என்றும் முந்தைய அத்தியாயங்களில் பார்த்தோம். அது தான் தானியேலுக்கு தரிசனமாக காண்பிக்கப்பட்ட ‘பாழாக்கும் அருவருப்பு’ ஆகும். இப்படி ஒவ்வொரு ராஜ்ஜியங்களும் பின்பற்றி வந்த ராஜ வணக்கம் மற்றும் விக்கிரக வணக்கத்தை ரோமும் பின்பற்றியது. அதனைத் தொடர்ந்து கிறிஸ்தவத்தைத் தழுவியதாக சொல்லிக்கொண்ட ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியமும் தேவாலயங்களுக்குள் சிலைகளை நிறுவி, அதை மக்கள் வழிபடவும் வைத்து, சாத்தானின் வழிபாட்டை உள்ளே கொண்டுவந்தது. இதைத்தான் கடைசி ராஜ்ஜியமான வாடிகனும் ‘சொரூபமாக’ வைத்து மக்களை வஞ்சித்து வருகிறது.

தேவனின் தற்சுரூபம் Vs மிருகத்தின் சொரூபம்

சபையின் தலையாகிய இயேசுவின் இடத்தில் தன்னை அமர்த்திக்கொண்டு, தன்னைத் தான் ‘Vicar of Christ’ (Earthly substitute for Christ) என்று சொல்லிகொள்ளும் போப்புகளும், அவர்கள் வழிகாட்டும் வழிபாட்டு முறைகளும், வேதத்திற்குப் புறம்பான திருச்சபை சட்டங்களும் தான் மிருகத்தின் சொரூபமாகும்.சாதாரண மனிதனாக இருக்கும் ஒருவர், உலக கத்தோலிக்க சபைகளின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அடுத்த நிமிடமே அவர் கால்களை மற்ற கார்டினல்களும், பிஷப்புகளும் முத்தமிட்டு ஆகவேண்டும். கிறிஸ்துவின் தாழ்மைக்கு அப்படியே எதிரான சுகவாழ்வு வாழ்ந்து வரும் போப்பாண்டவர்கள் தான் இந்த மிருகத்தின் சொரூபமாகும். இவர்கள் தான் வலுசர்ப்பத்தால் அதிகாரம் பெற்ற முதல் மிருகத்தின் இன்றைய உருவமாக இருந்து, பல கோடி மக்களை வஞ்சித்து வருகின்றனர்.

  • இரண்டாம் மிருகம் = வாடிகன்
  • மிருகத்தின் சொரூபம் = போப்புகள்

மிருகத்தின் சொரூபமாகிய போப்புகள், மீண்டும் உலகத்தலைவர்களில் ஒருவராக அமர்ந்து பேசும் அளவிற்கும், உலக நாடுகளில், சபைகளில் அவர்களின் தலையீட்டை ஏற்க விரும்பாத, வணங்காத நபர்களை/ ராஜ்ஜியங்களை அழிக்கவும் அதிகாரத்தை சாத்தானின் வல்லமையைப் பெற்ற மிருகம் கொடுத்தது.

தேவனுடைய முத்திரை

அடுத்து இரண்டாம் மிருகத்தின் முத்திரையைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்பு, தேவனுடைய முத்திரை என்றால் என்ன? என்பதை தெரிந்துகொள்வது அவசியம். அதற்கு கீழ்க்காணும் வசன ஆதாரங்களை கவனமாக வாசித்து, ஒவ்வொரு வசனத்திற்கும் இடையே உள்ள தொடர்புகளை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

‘‘மேலும், விருத்தசேதனமில்லாத காலத்தில் அவன் (ஆபிரகாம்) விசுவாசத்தினாலே அடைந்த நீதிக்கு முத்திரையாக விருத்தசேதனமாகிய அடையாளத்தைப் பெற்றான். ‘‘ (ரோமர் 4;11)

‘’அல்லாமலும், நீங்கள் கிறிஸ்துவைப்பற்றும் விருத்தசேதனத்தினாலே மாம்சத்துக்குரிய பாவசரீரத்தைக் களைந்துவிட்டதினால், கையால் செய்யப்படாத விருத்தசேதனத்தை அவருக்குள் பெற்றீர்கள். ஞானஸ்நானத்திலே அவரோடேகூட அடக்கம்பண்ணப்பட்டவர்களாகவும், அதிலே அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின தேவனுடைய செயலின்மேலுள்ள விசுவாசத்தினாலே அவரோடேகூட எழுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள்.’’ (கொலோசேயர் 2:11,12)

‘‘பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.’’ (அப்போஸ்தலர் 2:38)

‘‘அன்றியும், நீங்கள் மீட்கப்படும்நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்.’’ (எபேசியர் 4:30)

‘‘நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள்.’’ (எபேசியர் 1:13)

இந்த வசனங்களில் ஒரு தொடர்ச்சியான இரகசியம் இருப்பதை புரிந்துகொண்டிருப்பீர்கள் என்று விசுவாசிக்கிறேன்.

  • நீதியின் முத்திரை = மாம்ச விருத்தசேதனம் = ஞானஸ்நானம் = பரிசுத்த ஆவி = தேவனுடைய முத்திரை

சுருக்கமாக தேவனுடைய முத்திரை என்பது, இரட்சிக்கப்பட்டு, ஞானஸ்நானம் எடுத்து, விசுவாசிகளாகும்போது, தேவனால் இடப்படும் அடையாளமாகிய பரிசுத்த ஆவி. தேவனுடைய முத்திரை என்பது சரீரத்தின் மீது போடப்படும் முத்திரை அல்ல; அப்படியானால் இன்று பலர் போதிக்கிறபடி, அந்திகிறிஸ்துவின் முத்திரை மட்டும் எப்படி சரீரத்தில் போடப்படும் முத்திரையாக இருக்கமுடியும்? வாருங்கள் ஆவிக்குரிய விதத்தில் ஆராய்வோம்

தேவனுடைய முத்திரை எங்கு போடப்படுகிறது?

பரிசுத்த ஆவி அருளப்படாத பழைய ஏற்பாட்டுக் காலத்தில், வசனமாகிய/கட்டளையாகிய முத்திரையை ‘கையின் மணிக்கட்டிலும், கண்களுக்கு நடுவிலான நெற்றியிலும்’ தேவன் வைக்கச் சொன்னார். இது தேவனுடைய கட்டளைகளை ‘சிந்தையிலும், இருதயத்திலும், ஆத்துமாவிலும்’ பதித்து வைப்பதற்கு அடையாளம் என்று தேவன் கட்டளையிட்டார். இப்படி செய்வது தேவனின் கட்டளைக்கு இருதயப்பூர்வமாகக் கீழ்படிந்து, தங்களை தேவனுக்கு அடிமைகளாகத் தாழ்த்துவதற்கு அடையாளமாகும். பாராம்பரிய யூதர்கள் இன்றுவரை பத்துகட்டளைகளை எழுதி சிறு கூண்டுகளாக நெற்றியிலும், சிறு சுருள்களாக எழுதி கைகளிலும், நம் ஊரில் தாயத்து கட்டுவதுபோலக் கட்டிக்கொண்டு திரிகிறார்கள்.

படம் 41: நெற்றியிலும், மணிக்கட்டிலும் தோராவைக் கட்டிவைத்திருக்கும் பாரம்பரிய யூதர்கள்

‘‘இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் (நியாயப்பிரமாணங்கள்) உன் இருதயத்தில் இருக்கக்கடவது.  நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிற போதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிற போதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப்பேசி அவைகளை உன் கையின்மேல் அடையாளமாகக் கட்டிக்கொள்வாயாக; அவைகள் உன் கண்களுக்கு நடுவே ஞாபகக்குறியாய் இருக்கக்கடவது.’’ (உபாகமம் 6:6-8)

‘‘நீங்கள் என் வார்த்தைகளை உங்கள் இருதயத்திலும் உங்கள் ஆத்துமாவிலும் பதித்து, அவைகளை உங்கள் கையின்மேல் அடையாளமாகக் கட்டி, உங்கள் கண்களின் நடுவே ஞாபகக்குறியாக வைத்து,’’ (உபாகமம் 11:19)

தேவ கோபாக்கினை வெளிப்படும்போது கை மற்றும் நெற்றிகளில் இடப்படும் முத்திரைகளில் ‘நெற்றியில்’ இடப்படும் முத்திரைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஆவிக்குரிய அர்த்தமுடையது. மாம்சபிரகாரமான நெற்றி அல்ல. ‘கண்களுக்கு நடுவிலே’ என்பது நம் சிந்தையில் பதிய வைப்பதற்கு சமமானதாகும். எருசலேம் நகரம், நேபுகாத்நேச்சாரால் அழிக்கப்படும் முன்பு, விக்கிரகங்களை (சூரிய கடவுள் மற்றும் தம்மூஸ்) வணங்கிய யூதர்கள் அழிக்கப்படுவார்கள்; தேவனின் கட்டளைகளைத் தங்கள் இருதயத்தில், சிந்தைகளில் பதித்த, தேவனால் முத்திரையிடப்பட்டவர்கள் தப்புவிக்கப்படுவார்கள் என்ற ஆவிக்குரிய அர்த்தமுடைய தரிசனத்தை எசேக்கியேல் காண்கிறார்.

‘‘கர்த்தர் அவனை (சங்கார தூதனை) நோக்கி: நீ எருசலேம் நகரம் எங்கும் உருவப்போய், அதற்குள்ளே செய்யப்படுகிற சகல அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சுவிட்டழுகிற மனுஷரின் நெற்றிகளில் அடையாளம் போடு என்றார். பின்பு அவர் என் காதுகள் கேட்க மற்றவர்களை நோக்கி: நீங்கள் இவன் பின்னாலே நகரமெங்கும் உருவப்போய் வெட்டுங்கள்; உங்கள் கண் தப்பவிடாமலும், நீங்கள் இரங்காமலும், முதியோரையும், வாலிபரையும், கன்னிகைகளையும், குழந்தைகளையும், ஸ்திரீகளையும் சங்கரித்துக் கொன்றுபோடுங்கள்; அடையாளம் போடப்பட்டிருக்கிற ஒருவனையும் கிட்டாதிருங்கள் என் பரிசுத்த ஸ்தலத்திலே துவக்குங்கள் என்று என் காதுகள் கேட்கச் சொன்னார்; அப்பொழுது அவர்கள் ஆலயத்துக்கு முன்னே இருந்த மூப்பரிடத்தில் துவக்கம்பண்ணினார்கள்.’’ (எசேக்கியேல் 9:4-6)

இதேபோல், ஐரோப்பிய கண்டத்தின் மீது எக்காளங்கள், வாதைகளாக அழிவுகள் ஊற்றப்பட்ட காலக்கட்டத்தில், தேவனால் முத்திரையிடப்பட்ட அல்லது பரிசுத்த ஆவியால் (நெற்றியில்) முத்திரையிடப்பட்ட உண்மை விசுவாசிகளைப் பாதுகாக்கும்படி தேவன் தூதர்களுக்குக் கட்டளையிடுகிறார். இது முத்திரையாக அல்லது நாமமாக இருக்கலாம்.

“ஜீவனுள்ள தேவனுடைய முத்திரைக் கோலையுடைய வேறொரு தூதன் சூரியன் உதிக்குந்திசையிலிருந்து ஏறிவரக்கண்டேன்; அவன், பூமியையும் சமுத்திரத்தையும் சேதப்படுத்துகிறதற்கு அதிகாரம்பெற்ற அந்த நான்கு தூதரையும் நோக்கி: நாம் நமது தேவனுடைய ஊழியக்காரரின் நெற்றிகளில் முத்திரைபோட்டுத் தீருமளவும் பூமியையும் சமுத்திரத்தையும் மரங்களையும் சேதப்படுத்தாதிருங்கள் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டான்.’’ (வெளி 7;2,3)

‘‘பின்பு நான் பார்த்தபோது, இதோ, சீயோன் மலையின்மேல் ஆட்டுக்குட்டியானவரையும், அவரோடேகூட அவருடைய பிதாவின் நாமம் தங்கள் நெற்றிகளில் எழுதப்பட்டிருந்த இலட்சத்து நாற்பத்து நாலாரயிரம்பேரையும் நிற்கக்கண்டேன்.’’ (வெளி 14;1)

‘‘அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும்.’’ (வெளி 22:4)

மிருகத்தின் முத்திரை

அந்திகிறிஸ்துவின் ராஜ்ஜியமாகிய ரோமன் கத்தோலிக்க சபையைப் பின்பற்றி அதற்குக் கீழ்ப்படியும் பூமியின் ராஜ்ஜியங்களும், மனிதர்களும் அடையவிருக்கும் தண்டனை மிகக்கொடுமையானது. இது இந்த மிருகத்தின் முத்திரையை அல்லது அதன் நாமத்தைப் பெற்று, அதை வணங்கும் எல்லோருக்கும் பொருந்தும்.

‘‘பூமியின் புல்லையும் பசுமையான எந்தப் பூண்டையும் எந்த மரத்தையும் சேதப்படுத்தாமல், தங்கள் நெற்றிகளில் தேவனுடைய முத்திரையைத் தரித்திராத மனுஷரைமாத்திரம் சேதப்படுத்த அவைகளுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது.’’ (வெளி 9:4)

‘‘அவர்களுக்குப் பின்னே மூன்றாம் தூதன் வந்து, மிகுந்த சத்தமிட்டு: மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்கித் தன் நெற்றியிலாவது கையிலாவது அதின் முத்திரையைத் தரித்துக்கொள்கிறவனெவனோ, அவன் தேவனுடைய கோபாக்கினையாகிய பாத்திரத்திலே கலப்பில்லாமல் வார்க்கப்பட்ட அவருடைய உக்கிரமாகிய மதுவைக் குடித்து, பரிசுத்த தூதர்களுக்கு முன்பாகவும், ஆட்டுக்குட்டியானவருக்குமுன்பாகவும் அக்கினியினாலும் கந்தகத்தினாலும் வாதிக்கப்படுவான். அவர்களுடைய வாதையின் புகை சதாகாலங்களிலும் எழும்பும்; மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்குகிறவர்களுக்கும், அதினுடைய நாமத்தின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிற எவனுக்கும் இரவும் பகலும் இளைப்பாறுதலிராது.’’ (வெளி 14:9-11)

இப்பொழுது நீங்களே சொல்லுங்கள். மிருகத்தின் முத்திரை (Mark of the Beast) மற்றும் மிருகத்தின் நாமத்தின் முத்திரை (Mark of the name of the Beast) என்பது சரீரப்பிரகாரமான முத்திரையா? ஆவிக்குரிய யுத்தம் சம்பந்தப்பட்ட முத்திரையா?

‘‘அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும்,’’ (வெளி 13:16)

படம் 42: அந்திகிறிஸ்துவின் ‘அறிவியல்’ முத்திரை என்னும் தவறான நம்பிக்கைகள்

இன்றைக்குப் பெருகிவரும், ‘fancy and Fantasy teaching’ முறையில், எல்லா வார்த்தைகளின் நேரடி அர்த்தங்களையும் எடுத்து, மிருகம் என்பது ரோபோக்கள் எனவும், முத்திரை என்பது கை அல்லது நெற்றியில் வைக்கப்படும் ‘பயோ சிப்’ என்றும் வியாக்கியானம் செய்யப்படுகிறது. இன்றைக்கு நமக்கு உபத்திவங்கள் உண்டு தான் ஆனால்; தானியேல் மற்றும் வெளிப்படுத்தல் தீர்க்கதரிசனங்கள் நீண்ட காலங்களாக இருந்த, இருக்கும் ராஜ்ஜியங்களைப் பற்றிய இரகசியங்களாகும். ஏழு வருடங்களில் முழுவீச்சில் முடிந்துவிடும் கதையின் கிளைமாக்ஸ் அல்ல.

தேவனின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்த அல்லது இரட்சிக்கப்பட்டு பரிசுத்த ஆவியின் முத்திரையைப் பெற்ற ஒரு மனிதனின் சிந்தைகளிலும் (நெற்றி), செயல்களிலும் (கைகள்) இயேசு மட்டுமே இருப்பார். ஏனென்றால் இவர்கள் தேவனால் அல்லது அவரது நாமத்தால் முத்திரையிடப்பட்டவர்கள். இதற்கு அப்படியே எதிராக (Antichrist) பிசாசாகிய அந்திகிறிஸ்துவிற்கு தங்கள் சிந்தனைகளையும் (நெற்றி), தங்கள் செயல்களையும் (கைகள்) ஒப்புக்கொடுத்தவர்கள், அந்திகிறிஸ்துவினால் அல்லது அவனது நாமத்தினால் முத்திரையிடப்பட்டவர்களாவார்கள். விசுவாச துரோகி, கேட்டின் மகன், அக்கிரமக்காரன், எதிர்த்துநிற்கிறவன், தன்னைத் தான் உயர்த்துகிறவன், கள்ளதீர்க்கதரிசி, தேவனுடைய பிரமாணங்களுக்கு விரோதமானவன் (Lawlessness) என்று பல பெயர்களைப் பெற்றுள்ள அந்திகிறிஸ்து ஒரு தனிமனிதன் அல்ல. ஒரு ராஜ்ஜியம் மற்றும் அதன் தலைமையைக் குறிப்பதாகும். ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியம் தான் இந்த அந்திகிறிஸ்துவின் ராஜ்ஜியம் என்று பல இடங்களில் தெளிவாக சங்கேத மொழிகளில் கூறப்பட்டுள்ளது. இந்த ராஜ்ஜியம் தான் 1260 வருடங்கள் சபையைத் துன்புறுத்தியது என்று பார்த்தோம். இந்த 1260 வருட ஆட்சியைப் பற்றி சொல்லும் வெளிப்படுத்தல் 13 ஆம் அதிகாரத்தில் அதைப் பின்பற்றுகிறவர்களுக்கு ஜீவபுஸ்தகத்திலும், பரலோகத்திலும் இடமில்லை என்று இயேசு தீர்க்கமாகக் கூறுகிறார். எனவே ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் என்பது போல, நான் அந்த சபையின் பாரம்பரியங்களையும் பின்பற்றுகிறேன்; இயேசுவையும் உண்மையாக பின்பற்றுகிறேன் என்று சொல்பவர்கள் தங்களைத் தாங்களே திருப்திப்படுத்திக்கொள்ளலாமே ஒழிய, இயேசுவின் தீர்ப்பிற்குத் தப்ப முடியாது. நாங்கள் மரியாளையும், புனிதர்களையும் தொழுது ஆராதிக்கவில்லை; வணங்கத் தான் செய்கிறோம் என்ற சாக்குபோக்கு நியாயத்தீர்ப்பு நாளில் செல்லாது. இந்த கட்டுப்பாடு ரோமன் கத்தோலிக்க சபைக்கு மட்டுமல்ல; வெற்றுப் பாரம்பரியங்களைப் பின்பற்றும் சபைகளுக்கும், பாஸ்டர்களை ஆராதிக்கும் சபைகளுக்கும் பொருந்தும்.

‘‘உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் யாவரும் அதை வணங்குவார்கள். காதுள்ளவனெவனோ அவன் கேட்கக்கடவன்’’ (வெளி 13:8,9) ‘‘பின்பு, வேறொரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன். அது: என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய (மகா பாபிலோனாகிய அந்திகிறிஸ்துவின் சபை) பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்.’’ (வெளி 18:4)

கேட்க மனதுள்ளவன் கேட்கக்கடவன்; அழிவுக்கு தப்புவிக்க விரும்புகிறவன் வெளியே வரக்கடவன். இயேசுவின் இரண்டாம் வருகையிலே ‘சபை’ எடுத்துக்கொள்ளப்படாது. ‘கறைபடாத மணவாட்டிகளாக வாழும் சபை விசுவாசிகள்’ மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுவார்கள்.

யார் முத்திரை பெறுவார்கள்

உலகில் வாழ்ந்த, மற்றும் வாழும் எல்லா மனிதர்களும் ஏதாவது ஒரு முத்திரையைப் பெற்றுத்தான் ஆகவேண்டும்.

  • தேவனுடையவர்கள் = தேவனுடைய நாமத்தின் முத்திரை பெறுவார்கள்
  • மிருகத்திற்கு கீழ்படிகிறவர்கள் = மிருகத்தின் முத்திரை அல்லது மிருகத்தின் நாமத்தின் முத்திரையைப்பெறுவார்கள்

ராஜ்ஜியங்களை ஒருங்கிணைக்கும் நவீன அறிவியல்

இன்று பலர், கடைசி ஏழு வருடங்களில் அந்திகிறிஸ்து என்ற நபர் உலகின் அனைத்து மக்களையும் வலதுகை அல்லது நெற்றியில் பயோ சிப் பொருத்திக்கொள்ளும்படி வற்புறுத்துவான்; மறுப்பவர்கள் ‘சூப்பர் மார்க்கெட் முதல் ஏர்போர்ட் வரை’ உள்ளே நுழைய முடியாது என்று தீர்க்கதரிசனங்களை வேத வசனத்தின் அடிப்படையில் வியாக்கியானம் செய்யாமல், நவீன அறிவியலோடு ஒப்பிட்டுப் பேசிவருகிறார்கள். இந்த அறிவியல் முன்னேற்றங்கள் எல்லாம் தானியேலின் நான்கு ராஜ்ஜியங்கள் செய்தது போல, மீண்டும் உலகத்தை ஒருங்கிணைக்கும் முயற்சியே தவிர இந்த வசனங்களுக்கான விளக்கம் அல்ல. இது பாபேலைக் கட்டின நிம்ரோத் காலம் முதல் மேற்கொள்ளப்பட்ட முயற்சியாகும். அதை பாஷைகளைத் தாறுமாறாக்கி, ஜனங்களை சிதறடித்ததன் மூலம் கர்த்தர் தடுத்தார்.

‘‘பின்னும் அவர்கள்: நாம் பூமியின்மீதெங்கும் சிதறிப்போகாதபடிக்கு, நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பேர் உண்டாகப் பண்ணுவோம் வாருங்கள் என்று சொல்லிக்கொண்டார்கள்.’’ (ஆதியாகமம் 11:4)

இதே முயற்சிகளை நேபுகாத்நேச்சார், அலெக்சாண்டர், பல ரோம ராஜாக்கள் உட்பட பலர் ஏற்கனவே எடுத்து, அடுத்தடுத்த ராஜ்ஜியங்களிடம் தோற்றுப்போனார்கள். இன்றைக்கு அறிவியல் கண்டுபிடிப்புகளை வைத்து இதை செய்கிறார்கள்; அன்று அப்படி செய்ய வழி இல்லை என்ற ஒரே வித்தியாசம் மட்டும் தான் உண்டு. அன்றைக்கு அடுத்தடுத்த ராஜ்ஜியங்களால் வீழ்த்தப்பட்டதால் அவர்களது முயற்சி தோல்வியடைந்தது. இன்று கடைசி ராஜ்ஜியமாகிய ‘வாடிகனால்’ இயக்கப்படும் ‘ஐரோப்பிய யூனியன்’ இதே முயற்சியை நவீன அறிவியலின் உதவியைக் கொண்டு எடுத்துவரும் காலகட்டமாகிய ‘இந்த ராஜாக்களின் நாட்களிலே’ இயேசு வெளிப்பட்டு தனது ராஜ்ஜியத்தை ஸ்தாபிப்பார்.

கர்த்தரை அறியும் அறிவில் கலப்படம் செய்த வர்த்தகர்

‘‘அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது.’’ (வெளி 13:17)

இதில் சொல்லப்பட்டுள்ள வர்த்தகமாகிய ‘கொள்வதும், விற்பதும்’ நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் வணிக வர்த்தகம் அல்ல. இதை உலக வர்த்தகத்துடன் சம்பந்தப்படுத்திப் பார்ப்பதால் தான், பயோ சிப் இல்லாதவர்கள் கடைகளில் ஒரு பொருள் கூட வாங்கமுடியாமல் அந்திகிறிஸ்து செய்துவிடுவான் என்று நம்பிவருகிறோம். இந்த சங்கேத மொழிக்கு என்ன அர்த்தம் என்று பார்ப்போம். ரோம சாம்ராஜ்ஜியத்தின் காலத்தில் உலக வர்த்தகத்தின் வாசலாக இருந்த தீருவின் அழிவைக்குறித்து எசேக்கியேலுக்கு சொல்லப்பட்ட 27 மற்றும் 28 ஆம் அதிகாரங்களை வாசித்துப்பாருங்கள். அதின் அழிவும், வெளிப்படுத்தல் 18 ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட வர்த்தக ராஜ்ஜியமான மகா பாபிலோனின் அழிவும் கிட்டத்தட்ட ஓரே மாதிரி இருப்பதைக் காணலாம்.

‘‘மனுபுத்திரனே நீ தீருவின் அதிபதியை நோக்கி கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், உன் இருதயம் மேட்டிமைகொண்டு: நான் தேவன், நான் சமுத்திரத்தின் நடுவே தேவாசனத்தில் வீற்றிருக்கிறேனென்று நீ சொல்லி, உன் இருதயத்தை தேவனின் இருதயத்தைப்போல் ஆக்கினாலும், நீ மனுஷனேயல்லாமல் தேவனல்ல. நீ உன் ஞானத்தினாலும் உன் புத்தியினாலும் பொருள் சம்பாதித்து, பொன்னையும் வெள்ளியையும் உன் பொக்கிஷசாலைகளில் சேர்த்துக்கொண்டாய். உன் வியாபாரத்தினாலும் உன் மகா ஞானத்தினாலும் உன் பொருளைப் பெருகப்பண்ணினாய்; உன் இருதயம் உன் செல்வத்தினால் மேட்டிமையாயிற்று. ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ உன் இருதயத்தை தேவனின் இருதயத்தைப்போல ஆக்குகிறபடியினால், இதோ, ஜாதிகளில் மகா பலவான்களாகிய மறுதேசத்தார் உனக்கு விரோதமாய் வரப்பண்ணுவேன்; அவர்கள் உன் ஞானத்தின் அழகுக்கு விரோதமாய்த் தங்கள் பட்டயங்களை உருவி, உன் மினுக்கைக் குலைத்துப்போடுவார்கள். உன் வியாபாரத்தின் மிகுதியினால், உன் கொடுமை அதிகரித்து நீ பாவஞ்செய்தாய்; ஆகையால் நான் உன்னை தேவனுடைய பர்வதத்திலிருந்து ஆகாதவனென்று தள்ளி, காப்பாற்றுகிற கேருபாய் இருந்த உன்னை அக்கினிமயமான கற்களின் நடுவே இராதபடிக்கு அழித்துப்போடுவேன். உன் அழகினால் உன் இருதயம் மேட்டிமையாயிற்று; உன் மினுக்கினால் உன் ஞானத்தைக் கெடுத்தாய்; உன்னைத் தரையிலே தள்ளிப்போடுவேன்; ராஜாக்கள் உன்னைப் பார்க்கும்படி உன்னை அவர்களுக்கு முன்பாக வேடிக்கையாக்குவேன்.’’ (எசேக்கியேல் 28 ல் தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்கள்)

இந்த வசனங்கள் வியாபாரத்தின் மிகுதியால் தனது ஞானத்தைக் கெடுத்துக்கொண்ட தீருவைப் பற்றியும் அதன் அழிவையும் குறிப்பிடுகின்றன. கர்த்தருக்குப் பயப்படுதலும், அவரை அறிகிற அறிவின் மேன்மையையும் கலப்படம் செய்து விற்ற கத்தோலிக்க சபையின் போதனைகள் தான் இந்த வர்த்தகம் ஆகும். வெளிப்படுத்தல் 18 ஆம் அதிகாரத்திலும் மகா பாபிலோனான ரோம ராஜ்ஜியத்தைத் தான் உலக வர்த்தகத்தின் தலைமையிடமாக சொல்லப்பட்டுள்ளது. பூமியின் குடிகளைக் ‘கர்த்தரை அறியும் அறிவையும், ஞானமாகிய அவரிடத்தில் சேர்வதையும்’ தனது கலப்பட உபதேசங்கள் மூலம் (வர்த்தகம்) தடுத்தது. தனக்குக் கீழ்படிபவர்களுக்கு மட்டுமே ஞானஸ்நானம், திருவிருந்து, சபையில் பங்கு, கல்லறைகளில் பங்கு, உட்பட ஏராளமான முன்னுரிமைகளைக் கொடுத்தது. இந்த முன்னுரிமைகள் தனி மனிதனுக்கு மட்டுமல்ல; அப்போதைய ஐரோப்பிய ராஜ்ஜியங்களுக்கும் பொருந்தும்.

தனக்குக் கீழ்ப்படியாத ராஜாவையே மூன்று நாட்கள் தனது அரண்மனைக்கு வெளியே, கொட்டும் பனிமழையில், முழங்காலில் நின்று இரக்கத்திற்காக கெஞ்ச செய்ததும், தன்னைக் கிறிஸ்துவின் சாயல் என்று அழைத்துக்கொண்ட சின்னக்கொம்பு தான். கி.பி 1077 ஆம் ஆண்டு ஜெர்மனியின் நாலாம் ஹென்றி (Henry IV) போப் ஏழாம் கிரெகோரியிடம் (Gregory VII) கேனொசாவில் மன்னிப்பு கேட்கச்சென்றபோது நடந்த இந்த சம்பவம் ‘Road to Canossa or Walk to Canossa’ என்று பிரபலமாக அறியப்பட்ட ஒன்றாகும்.

படம் 43: கேனோசாவில் நாலாம் ஹென்றி பனியில் நின்று மன்றாடியது

மிருகமாகிய கத்தோலிக்க ரோம சாம்ராஜ்ஜியம் எல்லோரையும் தனது முத்திரையைப் பெறும்படியாகவும், வணங்கும்படியாகவும் வலியுறுத்தும் என்று வெளிப்படுத்தல் கூறுகின்றது. முத்திரையைப் பெற்றவர்கள் அவர்களுடன் வர்த்தகம் (ஆவிக்குரிய கொடுக்கல், வாங்கல்) செய்யமுடியும்; மதவழிபாட்டு முறைகளைப் பின்பற்ற முடியும். இல்லாவிட்டால் சபையை விட்டு புறந்தள்ளுவது சபைக்கு துரோகிகள் என்று சொல்லி கொடுமைப்படுத்துவது, சபை விசாரணை என்ற பெயரில் கொல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தது. 1500 வருட வரலாறு என்பதால் எல்லாவற்றையும் விரிவாக சொல்ல இடமில்லை. தயவு செய்து இந்த வரலாறுகளைப் படித்துப் பாருங்கள்.

மிருகத்தின் முத்திரையைப் பெறாமல், தேவனுக்குக் கீழ்படிந்து பரிசுத்த ஆவியினால் முத்திரிக்கப்பட்டவர்களை இந்த மிருகத்தின் ராஜ்ஜியம் 1260 வருடங்கள் கொடுமைப்படுத்தியது என்று பார்த்தோம். இன்னமும் உலக ராஜ்ஜியங்களைக் கையில் வைத்துக்கொண்டு தேவன் மேல் உள்ள விசுவாசத்தை விட்டு வழிவிலகச்செய்யும் செயல்களில் தீவிரமாக ஆனால் மறைமுகமாக (ஆட்டுக்குட்டி) வேலை செய்துவருகிறது என்பதையும் நாம் மறுக்கமுடியாது. இன்று இரகசிய வருகை என்ற போதகம் உட்பட சபைகளில் நிலவும் பல தவறான, புரட்டு மற்றும் கள்ள உபதேசங்களின் பிறப்பிடமே இரண்டாம் மிருகம் தான் என்பது உங்களில் அநேகருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதைத் தான் ‘பொய்யை விசுவாசிக்கத்தக்கதாக கொடிய வஞ்சகத்தை தேவன் அவர்களுக்கு அனுப்புவார்’ என்று பவுல் சொல்லியிருப்பார் என்று விசுவாசிக்கிறேன். எனவே இந்த மிருகமானது பூமியிலுள்ள தனக்கு கீழ்படிந்தவர்களாகிய பெரியோர், சிறியோர், பணக்காரர்கள், ஏழைகள், அடிமைகள் உட்பட எல்லோர் மேலும் தனது முத்திரையைப் பதித்தது. ஆனால் நிச்சயம் இயேசுவை மட்டும் பின்பற்றும் கூட்டத்தின் மீது இந்த முத்திரையை குத்த முடியாது; ஏனென்றால் அவர்கள் நெற்றியில் ஏற்கனவே பிதாவின் முத்திரை அல்லது பிதாவின் நாமத்தின் முத்திரை இருக்கும்.

இன்றைக்கு திடீரென்று நமது அரசாங்கம் ‘இந்தியாவில் பெரும்பான்மையானவர்கள் பின்பற்றும் மதவழிபாட்டைத் தவிர, மற்ற தெய்வங்களைப் பின்பற்றுபவர்களுக்கு எந்த அடிப்படை சலுகைகளும் வழங்கப்பட மாட்டாது, அவர்களின் எல்லா உரிமைகளும் பறிக்கப்படும்’ என்று ஒரு சட்டம் பிறப்பிக்கப்பட்டால் என்ன ஆகும் என்று கற்பனை செய்து பாருங்கள்! முதலில் எனது அரசு மருத்துவர் வேலை போகும்; வீட்டின் மின்சாரம் துண்டிக்கப்படும்; கடைகளில் பலசரக்கு மறுக்கப்படும்; பொதுபோக்குவரத்தை பயன்படுத்த முடியாது; காருக்கு டீசல் போடச்சென்றால் தர மாட்டார்கள்; எனது அவசரத்திற்குக் கூட கடைகளில் மருந்து மறுக்கப்படும். இதைத் தான் முதல் மிருகமாகிய கத்தோலிக்க ரோம சாம்ராஜ்ஜியத்தின் கட்டளைகளுக்குக் கீழ்படியாத விசுவாசிகள் ஆவிக்குரிய கொடுமைகளாக அனுபவித்தார்கள். இதைத் தான் ஆவிக்குரிய வகையில் இன்று வாடிகன் உலக மக்களின் மீது, விசுவாசிகளின் மீது திணித்து வருகிறது.

முத்திரை போடப்பட்ட காலம்

ஏழாம் எக்காளம் ஊதப்பட்ட 18 ஆம் நூற்றாண்டு கால இறுதியில், மிருகத்தின் முத்திரைக்கும் அதின் இலக்கத்திற்கும் உள்ளாகாமல் இருந்த பரிசுத்தவான்கள் பரலோகத்தில் தேவ சமூகத்தில் நிற்பதாக யோவான் காண்கிறார். எனவே இந்த மிருகத்தின் முத்திரை, நாமம், இலக்கம் என்பது முதல் மிருகத்தின் காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்ட ஒன்றாகும். அந்த சாயலைத்தான் இரண்டாம் மிருகமும் பின்பற்றுகிறது.

‘‘பின்பு, வானத்திலே பெரிதும் ஆச்சரியமுமான வேறொரு அடையாளமாகிய கடைசியான ஏழு வாதைகளையுடைய (ஏழாம் எக்காளத்திற்குப் பின்பான) ஏழு தூதரைக் கண்டேன், அவைகளால் தேவனுடைய கோபம் முடிகிறது. அன்றியும், அக்கினி கலந்த கண்ணாடிக் கடல்போன்ற ஒரு கடலையும், மிருகத்திற்கும் அதின் சொரூபத்திற்கும் அதின் முத்திரைக்கும் அதின் நாமத்தின் இலக்கத்திற்கும் உள்ளாகாமல் ஜெயங்கொண்டவர்கள் தேவ சுரமண்டலங்களைப் பிடித்துக்கொண்டு அந்தக் கண்ணாடிக் கடலருகே நிற்கிறதையும் கண்டேன்.’’ (வெளி 15;1,2)

இன்றைக்கு இரண்டாம் மிருகமாகிய வாடிகன், நேரடியாக அல்லாமல் ஆவிக்குரிய வகையில் அடிமைகளை உருவாக்கி வருகிறது. அதாவது முதல் மிருகம் போல் வலுக்கட்டாயமாக அதிகாரத்தை உபயோகிக்காமல், கள்ள போதனைகள் மூலம் பூமியின் குடிகளை வஞ்சித்து வருகிறது. அதனால் தான் இரண்டாம் மிருகமாகிய வாடிகனின் தலைமையான போப்புகளைக் ‘கள்ளத்தீர்க்கதரிசி’ என்ற இன்னொரு பெயரிலும் இயேசு அழைக்கிறார்.

‘‘அப்பொழுது (ஆறாம் கலசம் ஊற்றப்பட்ட காலமாகிய 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்), வலுசர்ப்பத்தின் (பிசாசு) வாயிலும் மிருகத்தின் (ஐரோப்பா) வாயிலும் கள்ளத்தீர்க்கதரிசியின் (போப்) வாயிலுமிருந்து தவளைகளுக்கு ஒப்பான மூன்று அசுத்த ஆவிகள் புறப்பட்டுவரக்கண்டேன்.’’ (வெளி 16:13)

‘‘அப்பொழுது (இயேசு வெள்ளைக் குதிரையில் வரும்போது) மிருகம் பிடிக்கப்பட்டது; மிருகத்தின் முன்பாகச் செய்த அற்புதங்களால் அதின் முத்திரையைத் தரித்தவர்களையும் அதின் சொரூபத்தை வணங்கினவர்களையும் மோசம்போக்கின கள்ளத்தீர்க்கதரிசியுங்கூடப் பிடிக்கப்பட்டான்; இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடே தள்ளப்பட்டார்கள்.’’ (வெளி 19:20)

அறுநூற்று அறுபத்தி ஆறு (666)

இன்று உலக கிறிஸ்தவர்களை ஆட்டிப்படைக்கும் ஒரு பேன்ஸி நம்பர் தான் 666. எனக்கு வெளிப்படுத்தலைப் பற்றித் தெரியாத காலத்தில் கூட ‘666’ என்றாலே அந்திகிறிஸ்து என்றும் அவனது ஆட்சியைக் குறித்த நடுக்கமும் இருந்தது. எனது கிளினிக்கில் நோயாளிகளுக்கு எடைபார்க்கும் இயந்திரத்தை எனது அருகில் வைத்திருப்பேன். எப்போதாவது சில நோயாளிகளின் எடை 66.6 கிலோ என்று காண்பிக்கும். எனக்கு அப்பொழுது கூட அந்திகிறிஸ்துவைப் பற்றிய வசனங்கள் ஞாபகத்தில் வருமளவிற்கு இந்த எண் நம்மை ஆட்டிப்படைத்திருக்கிறது. ஏனென்றால், பல காலக்கட்டங்களில் இந்த எண் பல வகைகளில் வியாக்கியானம் செய்யப்பட்டுள்ளது. நீங்கள் வலைதளத்தில் பார்த்தால் கி.பி 60 களில் வாழ்ந்த நீரோ மன்னனில் ஆரம்பித்து இன்று நாம் தினமும் உபயோகப்படுத்தும் World Wide Website (WWW), Bar code வரை, இது தான் அந்திகிறிஸ்துவின் இலக்கமான 666 என்று பல நூறு விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.

வஞ்சிக்கப்பட்டவர்கள் பெற்றுக்கொள்ளும் அடையாளங்கள், இந்த மூன்றில் ஏதாவது ஒன்றாக இருக்கும்

  1. மிருகத்தின் முத்திரை (Mark of the Beast)
  2. மிருகத்தின் நாமம் (Name of the Beast)
  3. மிருகத்தின் நாமத்தின் இலக்கம் (Number of the Beast’s name)

படம் 44: மிருகத்தின் நாமத்தின் இலக்கம் 666

முதல் இரண்டையும் நாம் ஏற்கனவே பார்த்துவிட்டோம். மூன்றாவது நாம் பார்க்க இருக்கும் ‘பேன்சி நம்பரான 666’.

‘‘இதிலே ஞானம் விளங்கும்; அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக்கடவன்; அது மனுஷருடைய இலக்கமாயிருக்கிறது; அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு.’’ (வெளி 13:18)

இந்த மிருகத்தின் நாமம் அல்லது பெயருக்கு ஒரு எண் உண்டு. அந்த எண் தான் 666 என்று  அர்த்தப்படும்.  ஒரு வகுப்பில் 200 மாணவர்கள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். தினசரி வருகைப்பதிவு எடுக்க ஒவ்வொரு பெயராக வாசிப்பதற்குள் வகுப்பு நேரம் முடிந்துவிடும். எனவே ஒவ்வொரு மாணவனுக்கும் பெயர் வரிசைப்படி ஒரு எண் கொடுப்பார்கள். குமார் என்ற மாணவன் 86 ஆம் இடத்தில் இருந்தால் அவனை 86 என்றே அழைத்து வருகையை உறுதிசெய்வார்கள். அவனது நாமத்தின் இலக்கம் (பெயரின் எண்) 86 என்று சொல்லலாம். அப்படியானால் அந்திகிறிஸ்துவின் பெயருக்குக் கொடுக்கப்பட்ட எண்ணை எப்படிக் கண்டுபிடிப்பது?

  • முதலாவது, இது அந்திகிறிஸ்துவாகிய போப்புகளின் (சின்னக்கொம்புகள்) பெயரின் எண்;
  • இரண்டாவது இது மனிதனைக் குறிக்கும்  எண்; 
  • மூன்றாவது இந்த பெயரின்  எண்  யோவான்  வெளிப்படுத்தலை  எழுதிய கிரேக்கமொழியைக் கொண்டு வியாக்கியானம் செய்யப்படவேண்டிய எண்.

இந்த மூன்று கோட்பாடுகளுக்கும் உட்படும், போப்புகளைக் குறிக்கும் கிரேக்க சொல் ‘LATEINOS’ ஆகும். இதற்கு லத்தீன் மனிதன் (LATIN MAN) என்று அர்த்தம். அதாவது லத்தீனைச் சேர்ந்த முதல் குடிமகனாகிய போப்புகளைக் குறிக்கும் பொதுப்பெயராகும். இது ஒரு குறிப்பிட்ட போப்பின் பெயரைக் குறிப்பதல்ல. இந்த ராஜ்ஜியத்தில் வரும் எல்லா போப்புகளின் பொதுவான பெயராகும். இந்த LATEINOS என்ற மனுஷனுடைய நாமத்தின் கிரேக்க எண் மதிப்பு ‘666’ ஆகும். யோவானும் சாதாரணமாக இதைக்கூறவில்லை. புத்தியுள்ளவன் இதைக் கணக்குப் பார்க்கக்கடவன்; ஏனென்றால் அது ஒரு மனுஷனுடைய இலக்கமாயிருக்கிறது என்று சொல்லியிருக்கிறார். இது மனுஷனுடைய நாமத்தின் இலக்கமாக இருந்தாலும், ஒரு மிருகத்தின் (ராஜ்ஜியத்தின்) நாமத்திலிருந்து தான் வருகிறது. அப்படியானால் அந்த ராஜ்ஜியத்தின் தலைமையான மனுஷனுடைய இலக்கத்தின் மதிப்பு தான் மிகச்சரியாக இருக்க முடியும். மேலும் பவுல் 2 தெசலோனிக்கேயரில் அந்திக்கிறிஸ்துவைப் ‘பாவமனுஷன்’ என்றே குறிப்பிடுகிறார். அப்படியானால் இது மனிதனுடைய இலக்கம் தானே!

அட்டவணை 20: பாவமனுஷனின் இலக்கம்

மற்ற பல பெயர்கள் இந்த காலக்கட்டத்தையும், இந்த கோட்பாடுகளையும் நிச்சயமாக நிறைவேற்றாது. உதாரணமாக நீரோ சீசர்’ என்ற பெயரின் எண் மதிப்பும் 666 என்று சொல்கிறார்கள். ஆனால் அவர் வாழ்ந்த காலக்கட்டம் கி.பி 60 களில்; நிச்சயமாக 1260 வருடங்கள் கிடையாது. WWW என்பதற்கு 666 என்று அர்த்தம் வரத்தான் செய்யும்; ஆனால் அது ‘மனிதனுடைய பெயரின் இலக்கம்’ அல்ல.

கர்த்தர் தானியேலுக்கு சொன்னதை நினைவில் கொள்ளுங்கள்.

‘‘நான் அதைக் கேட்டும், அதின்பொருளை அறியவில்லை; ஆகையால்: என் ஆண்டவனே, இவைகளின் (1260 வருட ஆட்சியின்) முடிவு என்னமாயிருக்கும் என்று கேட்டேன்.அதற்கு அவன் தானியேலே, போகலாம்; இந்த வார்த்தைகள் முடிவுகாலமட்டும் (கி.பி 1798 வரை) புதைபொருளாக வைக்கப்பட்டும் முத்திரிக்கப்பட்டும் இருக்கும். அநேகர் சுத்தமும் வெண்மையுமாக்கப்பட்டு புடமிடப்பட்டவர்களாய் விளங்குவார்கள். துன்மார்க்கரோ துன்மார்க்கமாய் நடப்பார்கள்; துன்மார்க்கரில் ஒருவனும் உணரான். ஞானவான்களோ உணர்ந்துகொள்ளுவார்கள்.’’ (தானியேல் 12:9,10)

சுருக்கமாக இந்த இரண்டாம் மிருகமாகிய வாடிகன், முதல் மிருகமாகிய ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியத்தின் இரண்டாவது நகல் (Photo copy) ஆகும். இயேசுவின் வருகை வரை ஏதோ ஒரு வகையில் ரோம சாம்ராஜ்ஜியம் பூமியில் இருக்கும்; அந்த காலத்தில் தான் நாம் இருக்கிறோம். அதை மிகவும் தெளிவாக ஒரு ராஜ்ஜியத்தோடு பின்னிப்பிணைந்துள்ள சபை என்பதையும் இயேசு வெளிப்படுத்தியுள்ளார். அவள் தான் மிருகத்தின் மேல் அமர்ந்திருக்கும் வேசியாகிய ‘மகா பாபிலோன்’. வாருங்கள், அடுத்த அத்தியாயத்தில் இன்னும் ‘Zoom’ செய்து மிகநுணுக்கமாக உள்ளே செல்லலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *