யோவான் கண்ட முதல் மிருகம் (கி.பி 538 - கி.பி 1798)

சென்ற அத்தியாயத்தில் ஸ்திரீயாகிய சபையோடு, வலுசர்ப்பமாகிய சாத்தான் செய்த ஆவிக்குரிய யுத்தங்களைப் பார்த்தோம். இந்த வலுசர்ப்பம் தனது அதிகாரத்தை ‘ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியத்திற்கு’ (ராஜ்ஜியம்=மிருகம்-1) எப்படிக் கொடுத்தது; பயன்படுத்தியது என்பதைத் தான் வெளி 13 ஆம் அதிகாரம் விளக்கமாகக் கூறுகிறது.மிருகம் என்பது ராஜ்ஜியங்களையும், சமுத்திரம்/தண்ணீர் என்பது ஜனத்திரளையும் குறிக்கும் என்பதை நாம் ஏற்கனவே தானியேலின் தரிசனங்களுக்கான விளக்கங்களிலிருந்து அறிந்துள்ளோம்.

‘‘பின்பு நான் கடற்கரை மணலின்மேல் நின்றேன். அப்பொழுது சமுத்திரத்திலிருந்து ஒரு மிருகம் எழும்பிவரக் கண்டேன்; அதற்கு ஏழு தலைகளும் பத்துக்கொம்புகளும் இருந்தன; அதின் கொம்புகளின் மேல் பத்து முடிகளும், அதின் தலைகளின்மேல் தூஷணமான நாமமும் இருந்தன.’’ (வெளி 13:1)

தானியேல் கண்ட முதல் மிருகமாகிய ‘சிங்கம்’ எப்படி அவர் வாழ்ந்த பாபிலோனிய சாம்ராஜ்ஜியத்தைக் குறித்ததோ, அதே போலவே யோவான் கண்ட முதல் மிருகம் அவரது காலத்தில் இருந்த ரோம சாம்ராஜ்ஜியத்தைக் குறிக்கும். இந்த முதல் மிருகம் தான் தானியேலின் தரிசனத்தில், நாலாவது வந்த பயங்கரமான பத்து கொம்புகளை உடைய மிருகமாகத் தெரிந்தது. இரண்டு பகுதிகளிலுமே இந்த மிருகம் ‘ஜனத்திரள் நிறைந்த’ அக்காலத்தைய ஐரோப்பிய கண்டத்திலிருந்து உருவான ராஜ்ஜியமாகக் கூறப்பட்டுள்ளது.

‘‘அப்பொழுது வெவ்வேறு ரூபமுள்ள நாலு பெரிய மிருகங்கள் சமுத்திரத்திலிருந்து எழும்பின.’’ (தானியேல் 7:3)

‘‘அதற்குப்பின்பு, இராத்தரிசனங்களில் நாலாம் மிருகத்தைக் கண்டேன்; அது கெடியும் பயங்கரமும் மகா பலத்ததுமாயிருந்தது; அதற்குப் பெரிய இருப்புப்பற்கள் இருந்தது; அது நொறுக்கிப் பட்சித்து, மீதியானதைத் தன் கால்களால் மிதித்துப்போட்டது; அது தனக்கு முன்னிருந்த எல்லா மிருகங்களைப்பார்க்கிலும் வேற்றுருவமாயிருந்தது, அதற்குப் பத்துக் கொம்புகள் இருந்தது.’’ (தானியேல் 7:7)

இந்த மிருகங்கள் ரோம சாம்ராஜ்ஜியத்தைக் குறித்த தரிசனங்கள் என்று ஏற்கனவே நாம் விளக்கமாகப் பார்த்தோம். அதை மீண்டும் ஒருமுறை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

  • தானியேலின் நாலாம் மிருகம்/ யோவானின் முதல் மிருகம்/ இரும்பாலான கால்/ இரும்பு பற்கள் உள்ள, காலால் மிதிக்கும் மிருகம் = ரோம சாம்ராஜ்ஜியம்
  • சமுத்திரம்= ஜனத்திரள் நிறைந்த ஐரோப்பிய கண்டம் மற்றும் மத்தியகிழக்கு நாடுகள்
  • மகாபலத்த மிருகம் = எழும்பிய ராஜ்ஜியங்களிலே இரும்பைப் போல பலத்த ராஜ்ஜியம்
  • பட்சித்தது/ மிதித்தது/ நொறுக்கியது = உலகின் எல்லா ராஜ்ஜியங்களையும் தன் காலின் கீழ் ஒரே சாம்ராஜ்ஜியமாகக் கொண்டுவந்தது
  • ஏழுதலைகள் = உலகின் ஏழு சாம்ராஜ்ஜியங்களையும் உள்ளடக்கிய பிசாசின் ராஜ்ஜியம்
  • பத்துகொம்புகள்/ பத்து தலைகள் = ஐந்தாம் நூற்றாண்டில் பத்து ராஜ்ஜியங்களாகப் பிரிந்த ஐரோப்பியதேசங்களை உள்ளடக்கிய ரோம ராஜ்ஜியம்
  • பத்துகொம்புகளின் மேல் பத்து முடிகள் அல்லது கிரீடம் = பிரிவடைந்த 10 ராஜ்ஜியங்களும் ஆட்சி அதிகாரம் பெற்ற கி.பி 476 க்கு பின்னான ‘பிரிவடைந்த ரோம சாம்ராஜ்ஜியத்தைக்’ குறிக்கும். இதை ஒருங்கிணைத்து தான் சின்னக்கொம்பாகிய போப்புகள் ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியத்தை ஸ்தாபித்தார்கள்

தலைகளின் மேல் தூஷணமான நாமம்

உலகில் இரண்டு நாமமுள்ள ஜனக்கூட்டம் அல்லது ராஜ்ஜியங்கள் தான் இருக்க முடியும். ஒன்று ‘தேவனின் நாமம்’ தரிக்கப்பட்ட ஜனங்கள். இன்னொன்று கிறிஸ்துவுக்கு எதிரான அந்திகிறிஸ்துவாகிய ‘பிசாசின் நாமம்’ தரிக்கப்பட்ட ஜனங்கள். இந்த தலைகளாகிய அந்திகிறிஸ்துவின் 7 சாம்ராஜ்ஜியங்களுமே பிசாசின் நாமத்தை அல்லது தேவ தூஷணத்தை அடிப்படையாகக் கொண்ட ராஜ்ஜியங்களாகும். தலைகளில் ஒரு பெயரை எழுத வேண்டுமானால் நெற்றியில் தான் எழுத முடியும். அப்படி நெற்றியில் தூஷணமான பெயரைத் தாங்கி நிற்கும் எந்த ராஜ்ஜியமும் அல்லது சபையும் அந்திகிறிஸ்துவினுடையதாகும் என்பதில் சந்தேகமே இல்லை. இதே மிருகம் தான் ஒரு ‘வேசி ஸ்திரீயை’ சுமந்து நிற்பதாக வெளி 17 ஆம் அதிகாரம் கூறுகிறது. அந்த ஸ்திரீயின் நெற்றியிலும் ஒரு நாமம் எழுதப்பட்டிருந்ததாம். அப்படியானால் அந்த நாமம் தான் இந்த முதலாம் மிருகத்தின் தலைகளில் எழுதப்பட்ட நாமமாகவும் இருக்கலாம்.

‘‘மேலும், இரகசியம், மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் என்னும் நாமம் அவள் நெற்றியில் எழுதியிருந்தது.’’ (வெளி 17:5)

அப்படியானால் இந்தப் பிரிவடைந்த ரோம சாம்ராஜ்ஜியங்கள் தாங்கி நின்ற ஸ்திரீ அல்லது சபை தான் அந்திகிறிஸ்துவின் சாம்ராஜ்ஜியமாகவும், உலகை வஞ்சிக்கும் சபையாகவும் இருக்கும் என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். இந்த ரோம சாம்ராஜ்ஜியத்திலிருந்து தோன்றிய ‘சின்னக்கொம்பாகிய’ போப்புகளும் ‘உன்னதமானவருக்கு விரோதமாக வார்த்தைகளைப் பேசிவந்தார்கள்’ என்று தானியேல் 7:25) சொன்னதை நினைவு கூறுங்கள்.

மகா பலம் எதினால்?

சிம்சோனிடம் தெலீலாள் ‘உன்னுடைய மகாபலம் எதினால் உண்டாயிருக்கிறது என்று சொல்’ என்று கேட்டாள். அதைப்போலவே, மற்ற ராஜ்ஜியங்களை ஒப்பிடும்போது இந்த ரோம சாம்ராஜ்ஜியத்தின் மகாபலம் எதினால் உண்டாயிற்று என்ற கேள்வி நமக்கு எழுவது நியாயம் தான். அதற்கான விடையை தான் அடுத்த வசனத்தில் இயேசு யோவானுக்கு வெளிப்படுத்தியுள்ளார்.

‘‘நான் கண்ட மிருகம் சிறுத்தையைப்போலிருந்தது; அதின் கால்கள் கரடியின் கால்களைப்போலவும், அதின் வாய் சிங்கத்தின் வாயைப்போலவும் இருந்தன; வலுசர்ப்பமானது தன் பலத்தையும் தன் சிங்காசனத்தையும் மிகுந்த அதிகாரத்தையும் அதற்குக் கொடுத்தது.’’ (வெளி 13:2)

இந்த ஒற்றை வசனத்தில் இயேசு அந்திகிறிஸ்துவின் ராஜ்ஜியமான ரோம சாம்ராஜ்ஜியத்தின் மொத்த பலத்திற்கான இரகசியத்தை முழுவதும் கூறிவிட்டார். அவரது ஞானம் எத்தனை பெரியது!!! யோவான் கண்ட இந்த முதலாம் மிருகமாகிய ரோம சாம்ராஜ்ஜியம், தானியேல் கண்ட முதல் மூன்று மிருகங்களின் உறுப்புகள் சேர்ந்த மொத்த வடிவமாகும்.

அட்டவணை 17: யோவான் கண்ட முதல் மிருகத்தின் தலை இரகசியம்

இது ஏதோ ஏதேச்சையான ஒரு கணக்கு அல்ல. வலுசர்ப்பமாகிய சாத்தானின் ஆவியால் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டு அவனுடைய ஆளுகைக்கு பயன்படுத்தப்பட்ட ராஜ்ஜியங்களைப் பற்றிய இரகசியமாகும். மேலே பார்த்த வசனத்தில் ‘வலுசர்ப்பமானது’ தனது அதிகாரத்தையும், தனது பலத்தையும் முழுவதுமாக, யோவான் கண்ட முதலாம் மிருகத்திற்குக் (ரோம்) கொடுத்தது என்று சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியானால் ஏவாளை வஞ்சித்த ‘பழைய பாம்பாகிய’ சாத்தான் தான் இத்தனை திட்டங்களுக்கும் பின் இருப்பவன் என்பது தெள்ளத்தெளிவாகிறது. கிறிஸ்து மாம்சத்தில் வெளிப்படுவதைத் தடுக்க இயலாத சாத்தான், அவரது சபையை வஞ்சிக்கத் தெரிந்துகொண்டது தான் ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியம். அவன் ரோம சாம்ராஜ்ஜியத்திற்கு, அதற்கு முன் இருந்த சாம்ராஜ்ஜியங்களின் ஒட்டுமொத்த பலத்தையும் கொடுத்ததைத்தான் இந்த வசனம் கூறுகின்றது.

படம் 35: யோவான் கண்ட முதல் மிருகம்

சிங்க வாய்

சிங்கம் என்பது பாபிலோன் சாம்ராஜ்ஜியம் என்பது நமக்குத் தெரிந்த விசயம் தான். சிங்கத்தின் வாய் என்பது பாபிலோன் சாம்ராஜ்ஜியம் அதிகம் ‘பேசி/கட்டளையிட்ட’ காரியம் ஆகும். கர்த்தர் எரேமியா தீர்க்கதரிசிக்கு ஆறுதலாக, வாக்குதத்தமாக சொன்ன ஒரு வசனத்தில் ‘என் வாய் போல்’ நீ இருப்பாய் என்று சொல்கிறார். இதில் கர்த்தரின் வாய் சொல்லும் வார்த்தைகளைச் சொல்லி எரேமியா இஸ்ரவேல் ஜனங்களுக்கு எச்சரித்தார்.

‘‘இதினிமித்தம் நீ திரும்பினால் நான் உன்னைத் திரும்பச் சீர்ப்படுத்துவேன்; என் முகத்துக்கு முன்பாக நிலைத்துமிருப்பாய் ; நீ தீழ்ப்பானதினின்று விலையேறப்பெற்றதைப் பிரித்தெடுத்தால், என் வாய்போலிருப்பாய்; நீ அவர்களிடத்தில் திரும்பாமல், அவர்கள் உன்னிடத்தில் திரும்புவார்களாக என்று கர்த்தர் சொல்லுகிறார்.’’ (எரேமியா 15:19)

(குறிப்பு: நான் 18 வயதில் இரட்சிக்கப்பட்ட பின்பும், கொஞ்சம் கொஞ்சமாக உலக இச்சைகளின் மேல் நாட்டம் கொண்டு கர்த்தரை விட்டுப் பின்வாங்கிப்போனபோது, அவர் என்னை சிட்சித்து, அடித்து, தமது மிகுந்த கிருபையினால் என்னைத் திரும்ப சேர்த்துக் கொண்டார். அப்பொழுது அவர் எனக்குக் கொடுத்த வாக்குத்தத்தம் தான் ‘நீ தீழ்ப்பானதினின்று விலையேறப்பெற்றதைப் பிரித்தெடுத்தால், என் வாய்போலிருப்பாய்’ என்ற வசனமாகும். அந்த வாயினால் தான் ஆவியானவரின் வார்த்தைகளை நான் உங்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறேன்)

பாபிலோனிய வாய் எதை சொல்லிற்று?

தானியேல் மற்றும் அவரது மூன்று நண்பர்களான அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்கள், பாபிலோனுக்குள் நுழைந்த உடன் என்ன நடந்தது தெரியுமா? அவர்கள் பெயரில் இருந்த தேவனாகிய கர்த்தரின் அடையாளம் அல்லது நாமம் அல்லது பெயர் மாற்றப்பட்டது; அதற்குப் பதிலாக பாபிலோனிய விக்கிரக தெய்வங்களின் பெயர் அல்லது நாமம் தரிக்கப்பட்டது.

‘‘பிரதானிகளின் தலைவன், தானியேலுக்கு பெல்தெஷாத்சார் என்றும், அனனியாவுக்கு சாத்ராக் என்றும், மீஷாவேலுக்கு மேஷாக் என்றும், அசரியாவுக்கு ஆபேத்நேகோ என்றும் மறுபெயரிட்டான்.’’ (தானியேல் 1:7) ‘‘ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பூமியெங்கும் குடியிருக்கிற சகல ஜனத்தாருக்கும் ஜாதியாருக்கும் பாஷைக்காரருக்கும் எழுதுகிறது என்னவென்றால்………….. கடைசியிலே என் தேவனுடைய நாமத்தின்படியே பெல்தெஷாத்சார் என்னும் பெயரிடப்பட்டு, பரிசுத்த தேவர்களின் ஆவியையுடைய தானியேல் என்னிடத்தில் கொண்டுவரப்பட்டான்; அவனிடத்தில் நான் சொப்பனத்தை விவரித்துச் சொன்னதாவது:’’ (தானியேல் 4:1 மற்றும் 8)

அட்டவணை 18: பாபிலோனிய பெயரிடப்பட்ட எபிரேயர்கள்

பாபிலோனிய ராஜாக்கள் பெயரிலும் இந்த அர்த்தங்கள் இருப்பதைக் காணலாம். அடுத்து சிங்கமாகிய பாபிலோனிய வாய் அவர்கள் நிறுத்திய பொற்சிலையை தாழ விழுந்து பணிந்து கொள்ளும்படி தேவ ஜனங்களை வற்புறுத்தியது; மீறினவர்களை அக்கினிச் சூளையில் போட்டது.

‘‘கட்டியக்காரன் உரத்த சத்தமாய்: சகல ஜனங்களும், ஜாதிகளும் பாஷைக்காருமானவர்களே, உங்களுக்கு அறிவிக்கப்படுகிறது என்னவென்றால்: எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தை நீங்கள் கேட்கும்போது, நீங்கள் தாழவிழுந்து, ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளக்கடவீர்கள்.’’ (தானியேல் 3:4,5)

தேவனின் நாமம் இருக்கும் இடத்தில் தன் நாமத்தை முத்திரை பதிப்பதும், தன்னைத் தான் தேவன் என்று காண்பித்து, தேவன் எனப்படுவது எதுவோ, ஆராதிக்கப்படுவது எதுவோ அதற்கு மேலாக தன்னை உயர்த்துவது தான் சாத்தானின் நோக்கமாகும். இந்த ‘விக்கிரக வணக்கமாகிய வேசித்தனத்தை தான்’ அவன் பாபிலோனிய வாயாக இருந்து செயல்படுத்தினான். அதிலும் குறிப்பாக நிம்ரோத் காலத்திய பாபேல் கடவுளான செமிராமிஸ்(அம்மா)-தம்மூஸ் (குழந்தை) கடவுள்கள் பாபிலோன் ராஜ்ஜியத்திலும் வழிபடப்பட்டது. இந்த அம்மா-குழந்தை வழிபாட்டை இன்றுவரை தொடரச் செய்தது தான் சாத்தானின் சூழ்ச்சியாகும். இது மட்டுமல்லாமல் இந்துக்கள் வணங்கும் திருமாலின் ஒரு அவதாரமான ‘நரசிங்க அவதாரமும்’ இந்த பாபிலோனிய வழிபாட்டின் தொடர்ச்சி தான். நரசிங்கம் என்றால் சிங்க முகத்தை உடைய கடவுள் என்று அர்த்தம். இதைப் பற்றி கர்த்தருக்கு சித்தமானால் தனி புத்தகத்தில் பேசலாம்.

இந்த நோக்கம் யாருடையது என்று பார்த்தால் ‘விழத்தள்ளப்பட்ட சாத்தானாகிய லூசிபருடையது’ என்று நாம்அறிந்துகொள்ளலாம். இதைத்தான் அவன் பாபேல்கோபுரம் கட்டும்போதும் செய்தான். பாபிலோனிலும் செய்தான்; கடைசிராஜ்ஜியமாகிய ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியத்திலும் செய்துவருகிறான்.

அவர்கள் இயேசுவையும், அவருடைய தாயாகிய மரியாளையும், பரிசுத்தவான்களையும் தானே வணங்கிவருகிறார்கள்என்று சாதாரணமாகக் கடந்து செல்லக்கூடிய காரியம் அல்ல.

இதன் பின்னால் இருக்கும் சாத்தானின் தந்திரங்களைத் தான் இயேசு யோவானுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். அதைத் தான் நாம் பின்வரும் அத்தியாயங்களிலும் பார்க்க உள்ளோம். இஸ்ரவேல், யூதா உட்பட விக்கிரகங்களை வழிபட்டு, தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை தூஷிக்கும் எந்த ராஜ்ஜியங்களையும் கர்த்தர் விட்டுவைக்கவில்லை; விட்டுவைக்கவும் மாட்டார் என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள். தான் வாசம் செய்த இடத்தில் மனாசே விக்கிரகங்களைக் கொண்டுவைத்தது தான் யூதா ஜனங்கள் பாபிலோனுக்கு சிறைகளாக ஒப்புக்கொடுக்கப்பட்டதன் ஒரே முக்கிய காரணம்.

கரடியின் கால்கள்

தானியேலின் தரிசனத்தில் கரடி என்ற இரண்டாவது மிருகம் ‘மேதிய-பெர்சிய ராஜ்ஜியம்’ என்று பார்த்தோம். இந்தக் கரடியின் கால்களை யோவானுக்கு இயேசு ஏன் இந்த பகுதியில் சுட்டிக்காண்பிக்கிறார்? கரடியின் கால்கள் தான் அந்தக் கரடியைத் தாங்கி நிற்கும் உறுப்பு ஆகும். வரலாற்றின்படி மேதிய-பெர்சிய ராஜ்ஜியங்கள் ‘மித்ராயிசம்’ என்ற தெய்வீகக் கொள்கையின் அடிப்படையில் நடத்தப்பட்டவைகளாகும். இந்த மித்ராயிச கொள்கை இன்றுவரை தொடர்ந்தாலும் அதன் வேர் மேதிய-பெர்சிய சாம்ராஜ்ஜியத்தின் காலத்திலிருந்து தான் ஆரம்பிக்கிறது. டேவிட் ஃபிங்கரட் என்ற வரலாற்று ஆய்வாளர் பின்வருமாறு கூறுகிறார்.

‘‘மித்ராஸ் கடவுள் வணக்கம், இயேசுகிறிஸ்துவின் காலத்தை ஒட்டிய ரோமானியப் பேரரசர்களின் முக்கிய கடவுள் வணக்கமாக சுமார் 300 வருடங்கள் மேலோங்கியிருந்தது. ரோமானியர்கள் இதை மிகப் பிரபலமாகப் பின்பற்றியிருந்தாலும், அதைத் தோற்றுவித்தவர்கள் பெர்சியர்கள் (இன்றைய ஈரான்) தான். அவர்களிடமிருந்து தான் இந்த நம்பிக்கை முதலில் அருகில் இருந்த பாபிலோனியர்களிடமும் (மெசபடோமியா) பின்பு கிரேக்கர்களிடம் பரவியது. பின்பு ரோமர்கள் காலத்தில் தான் இந்தியா, சீனா உட்பட உலகம் முழுவதும் பரவியது.’’

இதன்படி பார்த்தால் மித்ராயிச கொள்கை சாத்தானின் மிகப்பெரிய வஞ்சனைகளில் ஒன்று என்று தான் சொல்லவேண்டும். இப்படி கர்த்தர் தீர்க்கதரிசனமாகச் சொன்ன ராஜ்ஜியங்களான பாபிலோன், மேதிய-பெர்சியா, கிரேக்கம், ரோம சாம்ராஜ்ஜியங்களின் விக்கிரக வணக்கங்களின் பின்னணியில் இருந்த இந்த மித்ராயிசம், ரோம சாம்ராஜ்ஜியத்தின் அடுத்த வடிவமான கத்தோலிக்க ரோம சாம்ராஜ்ஜியத்தையும் விட்டுவைத்திருக்க வாய்ப்பிருக்கிறதா என்பதை சிந்தித்துப் பாருங்கள். மித்ராயிசம் என்பது ‘சூரியக் கடவுளை’ மையமாகக் கொண்ட வழிபாட்டு முறையாகும். ஒருங்கிணைந்த ரோமப்பேரரசு காண்ஸ்டாண்டைனுக்கு பின்பு கிறிஸ்தவத்தைத் தழுவியிருந்தாலும், அதன் பின்னணியில் மித்ராயிசம் இருந்தது என்பதை மறுக்க இயலாது. அதற்கு ஆதாரம் தான் 4 ஆம் நூற்றாண்டிலிருந்து கட்டப்பட்ட தேவாலயங்களில் இயேசு, மரியாள், யோசேப்பு, பவுல், பேதுரு உட்பட அனைத்து பரிசுத்தவான்களின் கற்பனை உருவப்படங்களை வரைந்து அவற்றின் தலையை சுற்றிலும் ‘சூரிய ஒளிவட்டத்தை’ (Halo around head) வரைந்து வைத்தது. ஆவியான தேவனுக்கு உருவம் கொடுத்தது மட்டுமல்லாமல், கிறிஸ்தவத்தைத் தழுவிய பெரும்பாலானோரை அதை வழிபடவும் வைத்து சாத்தான் தனது திட்டத்தை மிகப்பெரிய அளவில் விரிவாக்கினான். எனது கத்தோலிக்க நண்பர்களிடம் இதைப்பற்றி கேட்டால், நாங்கள் வழிபடவில்லை, சும்மா நினைவுகூறுவதற்காக வைத்திருக்கிறோம் என்றார்கள்.

படம் 36: கிறிஸ்தவசபைக்குள் சூரியவணக்கம்

jesus with halo
mary with halo

இது இன்றுவரை நடக்கும் ஒரு காரியம் மட்டுமல்ல; இஸ்ரவேலின் ராஜாக்களின் நாட்களிலேயே இந்த வியாதி இஸ்ரவேல் ஜனங்களையும் தொற்றியிருந்தது.

‘‘அவர் என்னைப் (எசேக்கியேல்) பார்த்து: நீ உள்ளே போய் அவர்கள் இங்கே செய்கிற கொடிய அருவருப்புகளைப் பார் என்றார். நான் உள்ளே போய்ப் பார்த்த போது, இதோ, சகலவித ஊரும்பிராணிகளும் அருவருப்பான மிருகங்களுமாகிய இவைகளின் சுரூபங்களும், இஸ்ரவேல் வம்சத்தாருடைய நரகலான சகல விக்கிரகங்களும் சுவரில் சுற்றிலும் சித்திரந்தீரப்பட்டிருந்தன.’’ (எசேக்கியேல் 8:9,10)

‘‘என்னைக் கர்த்தருடைய ஆலயத்தின் உட்பிராகாரத்திலே கொண்டுபோனார்; இதோ, கர்த்தருடைய ஆலயத்தின் வாசல் நடையிலே மண்டபத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே, ஏறக்குறைய இருபத்தைந்து புருஷர், தங்கள் முதுகைத் கர்த்தருடைய ஆலயத்துக்கும் தங்கள் முகத்தைக் கீழ்த்திசைக்கும் நேராகத் திருப்பினவர்களாய்க் கிழக்கே இருக்கும் சூரியனை நமஸ்கரித்தார்கள்’’ (எசேக்கியேல் 8:16)

இன்றைக்கும் நீங்கள் உலக வரைபடத்தில் பார்த்தால் இஸ்ரவேலுக்கு கிழக்கு திசையில் தான் பெர்சியா (ஈரான்) இருப்பதைப் பார்க்கலாம். எனவே, நாம் ஏற்கனவே பார்த்தபடி இந்த முதலாம் மிருகமான ரோம சாம்ராஜ்ஜியம், கரடியாகிய பெர்சியாவின் காலாகிய மித்ராயிச விக்கிரக வணக்கக் கொள்கையின் மேலே நிற்கிறது.

சிறுத்தையைப் போல உடம்பு

யோவான் கண்ட முதலாம் மிருகமாகிய ரோமப் பேரரசின் உடல் சிறுத்தையைப் போல அல்லது சிவிங்கியைப் போல (leopard) இருந்ததாம். தானியேலின் தரிசனத்தில் இந்த சிவிங்கி என்பது கிரேக்க சாம்ராஜ்ஜியத்தைக் குறிப்பதாகப் பார்த்தோம். அப்படியானால் ரோமப் பேரரசின் முக்கியக் கட்டமைப்பு கிரேக்கத்தின் கட்டமைப்பைப் போல இருந்தது என்று அர்த்தமாகும். பாபிலோன், பாபேல் காலத்திலிருந்தே சிலைவணக்கத்தையும், பெர்சியா மித்ராயிச வழிபாட்டு முறையையும் எப்படி பின்பற்றி வந்ததோ, அதுபோல கிரேக்கம் ‘தத்துவஞானக் கொள்கையை’ மட்டுமே கடவுள் வணக்கமாகப் பின்பற்றியது. கிரேக்க தத்துவம் என்பது வானியல், அரசியல் தத்துவம், கணிதம், கலை, சொல்லாட்சி உட்பட பல கொள்கைகளை உள்ளடக்கியது. கடவுளை விட மனிதனின் அறிவு மேலானது என்றும், அறிவு இயற்கையைப் பிரதிபலிக்கும் மனிதனின் ஒரு பண்பு என்ற கொள்கைகளை சாதிக்கும் பிளேட்டோ, சாக்ரடீஸ் போன்ற தத்துவ ஞானிகளின் தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டது. இது பல கடவுள் கொள்கையை ஆதரிக்கும் தத்துவங்கள் நிறைந்தது. இன்றைக்கு தத்துவம் என்றாலே கிரேக்கம் தான் என்று எல்லோருக்கும் தெரியும் வண்ணம் உலகம் முழுவதையும் அது ஆக்கிரமித்திருக்கிறது. தத்துவம் தான் மேலானது என்று ஏற்றுக்கொண்டால் கர்த்தருக்கு இடம் ஏது? அது யாரால் தோற்றுவிக்கப்பட்டிருக்க வேண்டும்? நிச்சயம் சாத்தானாகிய அந்திகிறிஸ்துவால் தான்.

கிரேக்கத்தை அரசாண்ட மகா அலெக்சாண்டர், கிரேக்கத்தை உலகப் பொதுமொழியாக மாற்ற முயற்சித்தார். இந்த கிரேக்க தத்துவம் கிரேக்கர்களை மட்டுமல்லாது, அவர்களை வீழ்த்திவிட்டு ராஜ்ஜியத்தைக் கைப்பற்றிய ரோமர்களையும் பற்றிக்கொண்டது. இந்தியர்களை ஆண்ட ஆங்கிலேயர்களுடைய மொழியைப் பேசும் நபர்கள் தான் இன்று வரை நம் நாட்டில் படித்தவர்களாகவும், நவநாகரீகம் உள்ளவர்களாகவும் நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம். அதுபோலவே அப்பொழுது ரோமர்களால் அரசாளப்பட்டாலும், கிரேக்க மொழி தெரிந்தவர்களும், கிரேக்க தத்துவம் தெரிந்தவர்களுமே அதிகம் மதிக்கப்பட்டனர். ரோமப்பேரரசர்களும் அதை விரும்பினர். இவ்வளவு ஏன்? ரோமர்கள் காலத்தில் பவுல் ஊழியம் செய்தபோது அவர் கிரேக்க நகரமான அத்தேனே பட்டணத்திற்கு (Athens) சென்றபோது நடந்த சம்பவங்கள் அப்போதைய ‘கிரேக்க மனதுடைய ரோமானிய குடிகளின்’ (Greek minded Romans) மனநிலையைத் தெளிவாக எடுத்துரைக்கிறது. அப்போஸ்தலர் 17 ஆம் அதிகாரத்தில் அவர் அத்தேனே பட்டணத்தாரைப் பற்றி சொல்லியுள்ள சில காரியங்களைப் பார்ப்போம்.

  • அத்தேனே பட்டணத்தில் பவுல் அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கையில், அந்தப் பட்டணம் விக்கிரகங்களால் நிறைந்திருக்கிறதைக் கண்டு, தன் ஆவியில் மிகுந்த வைராக்கியமடைந்து’
  • அப்பொழுது எப்பிக்கூரரும் ஸ்தோயிக்கருமான ஞானிகளில் (Epicurean and Stoic Greek philosophers) சிலர் அவனுடனே வாக்குவாதம் பண்ணினார்கள்.
  • அறியப்படாத தேவனுக்கு என்று எழுதியிருக்கிற ஒரு பலிபீடத்தைக் கண்டேன்; நீங்கள் அறியாமல் ஆராதிக்கிற அவரையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்.
  • அந்தஅத்தேனே பட்டணத்தாரெல்லாரும், அங்கே தங்குகிற அந்நியரும், நவமான காரியங்களைச் சொல்லுகிறதிலும் கேட்கிறதிலுமேயொழிய வேறொன்றிலும் பொழுதுபோக்குகிறதில்லை.
  • கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார்; அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே.

இந்த வசனங்களிலிருந்து கிரேக்கர்களைப் பற்றி நாம் அறிவது;

  1. பல தெய்வ வணக்கத்தைப் பின்பற்றினவர்களாயிருந்தார்கள்
  2. தத்துவங்களைப் பேசுவதிலும், கேட்பதிலும் அதிக பொழுது போக்கினர்
  3. தெய்வத்தை அறிவுப்பூர்வமாகத் தேடினார்கள். அறிவு நிலையினால் தெய்வத்தை அடைந்து விடலாம் என்ற நம்பிக்கை உடையவர்களாயிருந்தார்கள்.

எனவே இப்படிப்பட்ட கிரேக்க தத்துவமும், பல தெய்வ வணக்கமும் ரோம ராஜ்ஜியத்தின் உடல் அளவிற்கு முக்கியத்தும் வாய்ந்ததாக இருந்தது. இதைத்தான் இயேசு யோவானுக்கு சிறுத்தையின் உடலாக வெளிப்படுத்தியிருக்கிறார். இதில் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டிய ஒரு விசயம் என்னவென்றால், இந்த மிருகம் ‘பத்துகொம்புகள் மேல் பத்து முடிகளை உடையது’ என்று கூறப்பட்டதினால் இது ஒருங்கிணைந்த ரோமப்பேரரசு பத்தாக உடைந்த பின் ஏற்பட்ட, பிரிந்த ரோம சாம்ராஜ்ஜியத்தை தான் குறிக்கிறது. இது எதற்காக என்றால் இதிலிருந்து தான் ‘ரோமன் கத்தோலிக்க சாம்ராஜ்ஜியம்’ தோன்றியது. எனவே இவ்விரண்டும் ஒரே கொள்கையைப் பின்பற்றும் வழித்தோன்றல்களே அன்றி, கிறிஸ்தவத்தை பின்பற்றுவதால் மட்டும் கிறிஸ்துவின் சபை என்று அர்த்தமல்ல. ரோமர்கள் பின்பற்றிய அதே பல தெய்வ வணக்கத்தை இயேசு, யோசேப்பு, மரியாள், பரிசுத்தவான்கள் மற்றும் தூதர்களின் சிலைகளை வணங்கச் செய்ததன் மூலமாய், இன்றுவரை ஆதி ரோமப் பேரரசின் வழித்தோன்றலாகவே இருக்கிறது.

வலுசர்ப்பத்தின் பலம்

இத்தனை ராஜ்ஜியங்களையும், அவற்றின் விக்கிரக வழிபாட்டு முறைகளையும் உள்ளடக்கிய ரோம சாம்ராஜ்ஜியம், தன்னுடைய சொந்த பலத்தால் இவ்வளவு பெரிய ராஜ்ஜியமாக மாறவில்லை. ‘வலுசர்ப்பமான சாத்தான்’ தான் தனது பலத்தையும், தனது ராஜ்ஜியத்தின் சிங்காசனத்தையும், மிகுந்த அதிகாரத்தையும் கொடுத்தது என்று மேலே வாசித்ததை நினைவில்கொண்டால், இந்த முதலாம் மிருகமாகிய கத்தோலிக்க ரோம சாம்ராஜ்ஜியத்தின் வல்லமையின் பின்னணி உங்களுக்குப் புரியவரும். இதில் வலுசர்ப்பம் என்பதும் சிலை வணக்கத்தைப் பின்பற்றிய ஒருங்கிணைந்த ரோம சாம்ராஜ்ஜியத்தின் பின்னணியில் இருந்த பிசாசைக் குறிக்கும்.

யார் மகா பாபிலோன்?

இயேசு யோவானுக்கு வெளிப்படுத்திய ‘மகா பாபிலோன்’ என்பது ரோம சாம்ராஜ்ஜியத்தின் வழித்தோன்றலாக வந்த ‘கத்தோலிக்க ரோம சாம்ராஜ்ஜியத்தையும், அதன் சபையையும்’ தான் குறிக்கும் என்பதற்கு நான் மேலே சொன்ன ஆதாரங்கள் போதும் என்று நினைக்கிறேன். இன்னும் அடுத்த அத்தியாயத்தில் இதனை நிருபிக்க வசன ஆதாரங்களை அடுக்க உள்ளேன்.

சாத்தானின் தோல்வியும் வெற்றியும்

தனக்கு கீழ்ப்படியும் ராஜ்ஜியங்களின் மீதான மொத்த அதிகாரத்தையும், வல்லமையையும், சிங்காசனத்தையும் இன்னொரு நபருக்கு சாத்தான் கொடுக்க முயற்சி செய்து தோல்வியடைந்த சம்பவம் உங்களுக்கு நினைவிருக்கிறதா?

‘‘மறுபடியும் பிசாசு அவரை (இயேசுவை) மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து: நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான்.’’ (மத்தேயு 4:8,9)

நாம் பார்த்துக்கொண்டிருக்கும் ராஜ்ஜியங்களின் மகிமையையும், அதிகாரங்களையும் சாத்தான் ஒருசில கணங்களில் இயேசுவுக்குக் ஆவியில் காண்பித்திருப்பான் என்று நான் நம்புகின்றேன். உலகத்தின் சகல ராஜ்ஜியங்களும் சாத்தானின் ஆளுகைக்குள் இருக்கிறது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த சத்தியம். அவைகளை யாருக்கு கொடுக்க விரும்புகிறானோ, அவர்களுக்குக் கொடுப்பான். ஆனால் அவன் அதற்கு பிரதிபலனாக எதிர்பார்க்கும் ஒரே விஷயம் என்ன தெரியுமா? ‘தன் காலில் அவர்கள் சாஷ்டாங்கமாய் விழுந்து பணியவேண்டும்’. இயேசுவையே அவன் நிர்பந்தித்திருப்பானானால் பூமியின் ராஜாக்கள் எம்மாத்திரம்? தான் நினைத்ததை அவர்களைக் கொண்டு செய்துவருகிறான் என்பது தான் உண்மை. அப்படி செய்யத்துணிந்த அவன் அப்போஸ்தலர்களால் உருவாக்கப்பட்ட சபையின் பின் சந்ததி தலைவர்களை வஞ்சிக்க முடியாதா என்ன?

இயேசுவின் காலத்திற்குப் பின்பு சுவிசேஷம் பரவ ஆரம்பித்தபோது ரோமப்பேரரசின் மூலம் சீடர்களை சாத்தான் உபத்திரவப்படுத்தினான். ஆகிலும் சுவிசேஷம் வேகமாகப் பரவ ஆரம்பித்ததைக் கண்டு இதே ராஜ்ஜியத்தைக் கொண்டு மகா உபத்திரவப்படுத்தி சுவிசேஷத்தைத் தடைசெய்ய முயற்சித்தான். அந்த உபத்திரவத்திலும் சீடர்கள் இரத்தசாட்சியாய் மரித்து மேலும் சுவிசேஷத்தை விதைத்ததைக் கண்ட சாத்தான் ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பின்பு தனது திட்டத்தை (Strategy) மாற்றிக்கொண்டான். இப்போது கிறிஸ்தவர்களை எதிர்த்த ரோம ராஜ்ஜியத்தை கிறிஸ்தவத்தைத் தழுவ வைத்து கிறிஸ்தவத்தின் போர்வையில் உள்ளே நுழைந்து சபைகளையும், சபைத்தலைவர்களையும், விசுவாசிகளையும் வஞ்சிப்பது தான் அந்தத் திட்டம். அதிலும் சபைக்கு ஆளுகையின் அதிகாரத்தையும், புகழையும், செல்வாக்கையும் ஏற்படுத்தினால் அதன் தலைவர்கள் எளிதில் விழுந்துவிடுவார்கள் என்பது அவனுக்கு மிகவும் பரிச்சயமான திட்டம். இயேசுவின் அன்பை விட்டு யூதாசைப் பிரிக்க சாத்தான் பயன்படுத்தியது ஆயுதம் அல்ல; யூதத்தலைவர்களின் அங்கீகாரம் மற்றும் பணத்தாசை என்பதை நாம் இங்கு நினைவுகூற வேண்டும்.

இயேசுவிடம் சீடர்களிடம் தோல்வியடைந்த முயற்சி, ரோமின் ஆளுகைக்குள் வந்த கத்தோலிக்க சபையின் தலைவர்களிடம் வெற்றி கண்டது. அப்போஸ்தலர்களால் ஆரம்பிக்கப்பட்ட ஆதிசபை பல உபத்திரவங்களின் நடுவிலும் நன்றாகத் தான் சென்றுகொண்டு இருந்தது; ஆனால் ஐந்தாம் நூற்றாண்டின் இறுதியில் சபை மெல்ல மெல்ல ரோமின் பிஷப்புகளாக இருந்தவர்களிடம் செல்ல ஆரம்பித்தது. அவர்கள் தான் தங்களைப் போப்புகளாகவும், வானளாவிய அதிகாரம் கொண்டவர்களாகவும் அடையாளப்படுத்திக் கொண்டனர். காண்ஸ்டாண்டைனின் காலத்திலிருந்து சபைக்குள் அரசாங்கத்தின் தலையீடு ஆரம்பித்தது. ஜஸ்டினியன் என்ற பேரரசனின் காலத்திற்குப் பின்பு சபையானது அரசாங்கத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ரோமன் கத்தோலிக்க சாம்ராஜ்ஜியமாக மாறியது. பவுல் அப்போஸ்தலன் சொன்னது போல சபைப் பெரும் ‘விசுவாச துரோகியாக’ மாறியது. ரோம வழிபாடுகளும், ஆராதனை முறைகளும், கலாச்சாரங்களும் கிறிஸ்தவத்திற்குள் நுழைந்தது. ‘உலகத்தோடு ஒத்துவாழவேண்டும்’ என்று மேய்ப்பர்கள் தங்கள் கள்ளபோதனைகளால் மக்களை மயக்கினர். அரைகுறையாக கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்ட ரோமக்குடிகளால் இந்த நிலை இன்னும் மோசமாகியது. ஆனாலும் இதை எதிர்த்த ஒருசிலர் மட்டும் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு அப்போஸ்தலர்களின் உபதேசம் மற்றும் வேதத்தின் அடிப்படையில் வாழத்துணிந்தனர். அதனால் தான் இந்த ராஜ்ஜியத்தின் தலைவர்களான போப்புகள் ‘பாவமனுஷன், அக்கிரமக்காரன், அக்கிரமத்தின் இரகசியம்’ என்ற சாத்தானின் அடைமொழிகளோடு பவுலால் முன்மொழியப்பட்டனர். இப்படி தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதன் பலனை மறுதலிப்பது அல்லாமல் வேறு எதை விசுவாசதுரோகம் என்று சொல்லுவது?

சாவுக்கேதுவான காயம்

இப்படி வலுசர்ப்பத்தின் முழு பலத்தையும், அதிகாரத்தையும் பெற்ற இந்த ரோம சாம்ராஜ்ஜியமானது ஒரு பெரிய அழிவை சந்திக்க நேரிட்டது.

‘‘அதின் தலைகளிலொன்று சாவுக்கேதுவாய்க் காயப்பட்டிருக்கக் கண்டேன்; ஆனாலும் சாவுக்கேதுவான அந்தக் காயம் சொஸ்தமாக்கப்பட்டது. பூமியிலுள்ள யாவரும் ஆச்சரியத்தோடே அந்த மிருகத்தைப் பின்பற்றி,’’ (வெளி 13:3)

நாம் ஏற்கனவே முந்தைய அத்தியாயங்களில் பார்த்தபடி, ஒருங்கிணைந்த ரோமப் பேரரசு சில அரசியல் காரணங்களுக்காக டயோகிளிட்டியன் என்ற ராஜாவால் மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் மேற்கு மற்றும் கிழக்கு ராஜ்ஜியங்களாகப் பிரிக்கப்பட்டது. இதில் மேற்கு ரோம சாம்ராஜ்ஜியம் நாலாம் மற்றும் ஐந்தாம் நூற்றாண்டுகளில் படிப்படியாக சரிவை சந்தித்தது. ஜெர்மானிய பகுதிகளிலிருந்து படையெடுத்து வந்த விசிகோத் மற்றும் வாண்டல் என்ற பார்பேரிய மக்கள் கூட்டத்தால் கி.பி 476 ஆம் வருடத்திற்குள் மேற்கு ரோம் 10 ராஜ்ஜியங்களாக உடைந்தது என்று பார்த்தோம். இந்த சமயத்தில் காண்ஸ்டாண்டைநோபிளைத் தலைமையாகக் கொண்டிருந்த கிழக்கு ரோம சாம்ராஜ்ஜியம் தாக்குபிடித்துக்கொண்டது. இந்த மேற்கு ரோம சாம்ராஜ்ஜியத்தின் வீழ்ச்சி தான் யோவானுக்கு ‘மிருகத்தின் தலைகளில் ஒன்றுக்கு ஏற்பட்ட சாவுக்கேதுவான காயமாகக்’ காண்பிக்கப்பட்டது.

படம் 37: நாலாம் நூற்றாண்டின் இறுதியில் மேற்கு மற்றும் கிழக்கு ரோம சாம்ராஜ்ஜியம்

இதைத்தான் யோவான் இன்னொரு இடத்தில் சொல்லும்போது ‘‘ஞானமுள்ள மனம் இதிலே விளங்கும். அந்த ஏழு தலைகளும் அந்த ஸ்திரீ உட்கார்ந்திருக்கிற ஏழு மலைகளாம். அவர்கள் ஏழு ராஜாக்களாம்; இவர்களில் ஐந்துபேர் விழுந்தார்கள், ஒருவன் (ஆறாவது ராஜ்ஜியம்) இருக்கிறான், மற்றவன் இன்னும் வரவில்லை; வரும்போது அவன் கொஞ்சக்காலம் (1260 வருடங்கள்) தரித்திருக்கவேண்டும்.’’ (வெளி 17:9,10)

இந்த சாவுக்கேதுவான காயம் அடைந்தது, ஆறாவது தலை அல்லது ராஜ்ஜியமாகிய ஒருங்கிணைந்த ரோமப் பேரரசு ஆகும்.

காயத்தை சொஸ்தப்படுத்தியது யார்

ஏற்கனவே ரோம சாம்ராஜ்ஜியத்தைப் பற்றிய அத்தியாயத்தில் மேற்கு ரோம சாம்ராஜ்ஜியத்தின் வீழ்ச்சியைப் பற்றி பார்த்தோம். ஆனால் இந்த மேற்கு ரோம ராஜ்ஜியத்திலிருந்து எழும்பிய போப்புகளின் கத்தோலிக்க ராஜ்ஜியம் தான் அந்திகிறிஸ்துவின் ராஜ்ஜியம் என்றும் நான் ஏற்கனவே சொன்னேன். அப்படியானால் வீழ்ச்சியடைந்த மேற்கு ரோம ராஜ்ஜியத்தின் காயத்தை யார் சொஸ்தமாக்கினார்? கி.பி 476 ல் முழு வீழ்ச்சியைக் கண்ட மேற்கு ரோம ராஜ்ஜியம் 10 சிறு ராஜ்ஜியங்களாகப் பிரிந்தது. இனி ரோம் ஒரு சாம்ராஜ்ஜியமாக நீடிக்க முடியாது என்று உலகமே ஆச்சரியத்தோடே இந்த வீழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்த வேளையில் தான், அதின் மூன்று ராஜ்ஜியங்களை அழித்துவிட்டு எழும்பிய ‘சின்னக்கொம்பு’ தான் 1260 வருடங்கள் உலகை ஆட்சி செய்து, பரிசுத்தவான்களை துன்புறுத்தியது என்று நான் ஏற்கனவே சின்னக்கொம்பு என்ற அத்தியாயத்தில் சொன்னதை இப்போது நினைவுகூறுங்கள்.

‘‘அந்தப் பத்துக்கொம்புகள் என்னவென்றால், அந்த ராஜ்யத்திலே எழும்பும் பத்து ராஜாக்களாம்; அவர்களுக்குப்பின்பு வேறொருவன் எழும்புவான்; அவன் முந்தினவர்களைப்பார்க்கிலும் வேறாயிருந்து, மூன்று ராஜாக்களைத் தாழ்த்திப்போட்டு, உன்னதமானவருக்கு விரோதமாக வார்த்தைகளைப் பேசி, உன்னதமானவருடைய  பரிசுத்தவான்களை  ஒடுக்கி,  காலங்களையும்  பிரமாணங்களையும்  மாற்ற நினைப்பான்; அவர்கள் ஒருகாலமும், காலங்களும், அரைக்காலமும் (1260 வருடங்கள்) செல்லுமட்டும் அவன் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்.’’ (தானியேல் 7:24,25)

நான் திரும்பத் திரும்ப அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பதாக உங்களுக்குத் தோன்றலாம். இப்படி பல இடங்களில் ஞாபகப்படுத்தினால் மட்டுமே இந்த தீர்க்கதரிசனங்களில் சொல்லப்பட்டுள்ள வரலாற்று சம்பவங்களை உங்களால் புரிந்துகொள்ள முடியும். அவ்வளவு கடினமான ஒன்று தான். நான் முடிந்த வரை பரிசுத்த ஆவியானவரின் உதவியோடு எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் எழுதியுள்ளேன்.

இப்படி இந்த ராஜ்ஜியங்களிலிருந்து எழும்பிய சின்னக் கொம்பாகிய பாப்பஸி (Papacy) தான் இன்றுவரை உலகின் பணக்கார சபை. தனது பணம், மக்கள் செல்வாக்கு, அதிகாரபலம் (வலுசர்ப்பமானது கொடுத்த) ஆகியவற்றைக் கொண்டு, வீழ்ச்சியடைந்த மேற்கு ரோம ராஜ்ஜியத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் (கி.பி 538 க்குப் பின்) கொண்டு வந்து உலகை மட்டுமல்ல, இயேசுவின் பரிசுத்த சபையையும் ஆட்டிப் படைத்தது. அது மட்டுமல்லாமல் ‘விக்கிரக ஆராதனையையும், இயேசுவைத் தவிர அவரது இடத்தில் பிற நபர்களையும் கொண்டுவந்ததன் மூலம்’ தேவதூஷணமும் செய்தது. இப்படி உடைந்துபோயிருந்த மேற்கு ரோம ராஜ்ஜியத்தை மீண்டும் ஒருங்கிணைத்து ரோமன் கத்தோலிக்க சாம்ராஜ்ஜியமாக உருவாக்கிய போப்புகளால் தான் முதல் மிருகத்தின் தலையில் ஏற்பட்ட சாவுக்கேதுவான காயம் ஆற்றப்பட்டது.

உலக மக்கள் யாரைப் பின்பற்றினார்கள்?

இந்த 1260 வருடங்கள் ஐரோப்பா பல நாடுகளாகப் பிரிந்திருந்து அந்தந்த நாடுகளின் ராஜாக்களால் ஆளப்பட்டிருந்தாலும் கத்தோலிக்க கிறிஸ்தவம் என்ற மதத்தின் அடிப்படையில் ஒன்றுபட்டிருந்தது. அதாவது கத்தோலிக்க சபையின் சட்டதிட்டங்களுக்கும் போப்புகளின் தலைமைக்கும் கீழ்ப்படிந்துதான் இருந்தன. அதனால் தான் இந்த காலக்கட்டத்திலிருந்த பிரிவடைந்த ரோம சாம்ராஜ்ஜியத்தை ‘கத்தோலிக்க ரோம சாம்ராஜ்ஜியம்’ என்று அடிக்கடி குறிப்பிட்டுள்ளேன். ஏனெனில் இந்த நாடுகளின் ராஜாக்களால் கத்தோலிக்க கிறிஸ்தவத்தை அடிப்படையாகக்கொண்டு நடந்த அத்தனை உபத்திரவங்களும், மக்கள் மீதான ஆதிக்கங்களும், முடிவுகளும் போப்புகளின் நேரடி ஆணையின்பேரில் அல்லது அவர்களது ஒப்புதலின்பேரில் (Papal bull) மட்டுமே நடந்தன. இப்படி உருவான பாப்பஸி அல்லது கத்தோலிக்க ரோம சாம்ராஜ்ஜியத்தை உலகின் மக்கள் ஆச்சரியத்தோடு பின்பற்றினார்களாம். அப்படி பின்பற்றிய பல ஐரோப்பிய நாடுகள் இன்றுவரை ‘ரோமன் கத்தோலிக்க சபைக்கு’ விசுவாசிகளாக இருந்து வருகின்றன; இன்றுவரை உலகின் அதிக உறுப்பினர்களைக் கொண்ட ஒரே மதம் மற்றும் சபை இதுதான். இப்போது இந்த வசனத்தை மீண்டும் வாசித்துப் பாருங்கள்.

‘‘அதின் தலைகளிலொன்று சாவுக்கேதுவாய்க் காயப்பட்டிருக்கக் கண்டேன்; ஆனாலும் சாவுக்கேதுவான அந்தக் காயம் சொஸ்தமாக்கப்பட்டது. பூமியிலுள்ள யாவரும் ஆச்சரியத்தோடே அந்த மிருகத்தைப் பின்பற்றி,அந்த மிருகத்திற்கு அப்படிப்பட்ட அதிகாரங்கொடுத்த வலுசர்ப்பத்தை வணங்கினார்கள். அல்லாமலும்: மிருகத்திற்கு ஒப்பானவன் யார்? அதினோடே யுத்தம்பண்ணத்தக்கவன் யார்? என்று சொல்லி, மிருகத்தையும் வணங்கினார்கள்.’’ (வெளி 13:3,4)

இப்படி காயத்தை சொஸ்தமாக்கின ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியத்தின் ஆளுகையில் இருந்த பூமியில் நிகழ்ந்த சம்பவங்கள்:

  1. பூமியிலுள்ள யாவரும் இந்த ரோம ராஜ்ஜியத்தை (மிருகத்தை) ஆச்சரியத்தோடே பின்பற்றினார்களாம்
  2. இப்படி திரும்ப எழும்பிய ராஜ்ஜியத்திற்கு அப்படிப்பட்ட வல்லமையைக் கொடுத்த வலுசர்ப்பமாகிய சாத்தானை வணங்கினார்களாம். (ரோமன் கத்தோலிக்க சபை கிறிஸ்தவத்தின் பெயரில் யாரை வணங்குகிறது என்று புரிந்துகொள்ளுங்கள்; அவர்கள் இரட்சிக்கப்பட ஜெபியுங்கள்)
  3. இந்த ராஜ்ஜியத்திற்கு/ சபைக்கு ஒப்பாக உலகில் ஒன்றுமில்லை என்று அறிக்கையிட்டனர்
  4. இந்த ராஜ்ஜியத்தை வீழ்த்த யாராலும் முடியாது என்று கர்வம் கொண்டனர்

கடைசியாக, மிருகமாகிய இந்த ரோமப் பேரரசையும் அதாவது போப்புகளையும் கடவுளாக வைத்து வணங்கினர்.

தூஷணமும் யுத்தமும்

இந்த மிருகம் அடுத்ததாக என்ன செய்தது என்பதை அடுத்த வசனம் விளக்குகிறது

‘‘பெருமையானவைகளையும் தூஷணங்களையும் பேசும் வாய் அதற்குக் கொடுக்கப்பட்டது; அல்லாமலும், நாற்பத்திரண்டு மாதம் யுத்தம்பண்ண அதற்கு அதிகாரங் கொடுக்கப்பட்டது. அது தேவனைத் தூஷிக்கும்படி தன் வாயைத் திறந்து, அவருடைய நாமத்தையும், அவருடைய வாசஸ்தலத்தையம், பரலோகத்தில் வாசமாயிருக்கிறவர்களையும் தூஷித்தது. மேலும், பரிசுத்தவான்களோடே யுத்தம்பண்ணி அவர்களை ஜெயிக்கும்படிக்கு அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டதுமல்லாமல், ஒவ்வொரு கோத்திரத்தின்மேலும் பாஷைக்காரர்மேலும் ஜாதிகள்மேலும் அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டது’’ (வெளி 13:5-7)

முன்பு சொன்னது போல, சரிவடைந்த மேற்கு ரோம சாம்ராஜ்ஜியத்தை வலுசர்ப்பம் கொடுத்த பலத்தால் மீட்டெடுத்து ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியமாக (மிருகம்) ஆட்சி செய்த போப்புகளுக்கு 42 மாதங்கள்/ 3 1/2 வருடங்கள்/1260 நாட்கள்/ 1260 தீர்க்கதரிசன வருடங்கள் செயல்படுத்தும்படியாய், நான்கு முக்கிய வல்லமை கொடுக்கப்பட்டது. (இதைப்பற்றி சின்னக்கொம்பு என்ற அத்தியாயத்தில் விலாவாரியாக சொல்லியுள்ளேன்)

  1. பெருமையானவைகளைப் பேசியது: இதை ஏற்கனவே சின்னக்கொம்பு என்ற அத்தியாயத்தில் விவரித்துள்ளேன். தானியேல் கண்ட சின்னக்கொம்பும் இதுவும் ஒன்று தான்.
  2. தேவனையும், அவரது நாமத்தையும், அவரது வாசஸ்தலத்தையும், பரலோகத்தில் வாசமாயிருப்பவர்களையும் தூஷித்தது: இதையும் ஏற்கனவே சின்னக்கொம்பில் சொல்லியுள்ளேன். கூடுதலாக, இது பரலோகத்தில் வாசமாயிருக்கிற தூதர்களையும், பரிசுத்தவான்களையும் அவர்களது சாயலில் விக்கிரகங்களை உண்டுபண்ணி, உலக மக்களை வணங்கவைத்து அவர்களையும் தூஷித்தது. மனிதர்களுக்கு புனிதர் பட்டம் கொடுத்து அவர்களையும் வணங்கவைத்தது.
  3. பூமியின் பரிசுத்த ஜனங்களுக்கு விரோதமாக யுத்தம் பண்ண மட்டுமல்லாமல், அவர்களை (தற்காலிகமாக) ஜெயிக்கவும் அதிகாரம் கொடுக்கப்பட்டது.
  4. பூமியின் எல்லா ஜாதி மக்கள், தேசங்கள் மீது ஆளுகை செய்ய அதிகாரம் கொடுக்கப்பட்டது: ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியம் தான் இந்த 1260 வருடங்கள் உலகின் அசைக்க முடியாத சாம்ராஜியமாக இருந்தது என்பதை வரலாறு ஒருபோதும் மறைக்க முடியாது.

1260 வருட அந்திகிறிஸ்துவின் ஆட்சி

இதைத்தான் தானியேல்

‘‘உன்னதமானவருக்கு விரோதமாக வார்த்தைகளைப் பேசி, உன்னதமானவருடைய பரிசுத்தவான்களை ஒடுக்கி, காலங்களையும் பிரமாணங்களையும் மாற்ற நினைப்பான்; அவர்கள் (பரிசுத்தவான்கள்) ஒருகாலமும், காலங்களும், அரைக்காலமும் செல்லுமட்டும் அவன் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்.’’ (தானியேல்7:25) என்று கூறியுள்ளார்.

இதில் காலமும், காலங்களும், அரைகாலமும் என்பது 1வருடம்+2வருடங்கள்+அரை வருடம் = 3 1/2 வருடங்கள் அல்லது 1260 நாட்கள்; அதாவது 1260 தீர்க்கதரிசன வருடங்கள் என்று அர்த்தப்படும். மேலும் இந்த காலக்கட்டத்திற்குப் பின்வரும் காலத்தைத் தான் தானியேலுக்கு 12 ஆம் அதிகாரத்தில் கர்த்தர் முடிவுகாலமாகவும் வெளிப்படுத்தியுள்ளார்.

‘‘தானியேலாகிய நீயோவென்றால், முடிவுகாலமட்டும் இந்த வார்த்தைகளைப் புதைபொருளாக வைத்து வைத்து, இந்தப்புஸ்தகத்தை முத்திரைபோடு; அப்பொழுது அநேகர் இங்குமங்கும் ஓடி ஆராய்வார்கள், அறிவும் பெருகிப்போம் என்றான்.’’

இந்தக் காலக்கட்டங்களில் ரோமன் கத்தோலிக்க சாம்ராஜ்ஜியத்தால் பரிசுத்தவான்கள் துன்புறுத்தப்பட்ட விதத்தை ஏற்கனவே ‘சின்னக்கொம்பு’ அத்தியாயத்தில் விளக்கியுள்ளேன்; இனியும் பார்க்கப்போகிறோம். இந்த 1260 வருடங்களைக் குறித்த தீர்க்கதரிசன காலம் என்பதே ‘இயேசுவின் உண்மை சீடர்கள்’ ஒடுக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்ட காலகட்டமாகும். இதை இந்த அட்டவணையில் ஒப்பிட்டுப் பார்ப்போம்.

அட்டவணை 19: 1260 வருட உபத்திரவங்கள்-ஒப்பீடு

இந்த 1260 வருடங்களைக் குறித்த தீர்க்கதரிசனம் என்பது ஒரே சம்பவத்தையும், ஒரே காலக்கட்டத்தையும் பற்றி வெவ்வேறு இடங்களில் சொல்லப்பட்டிருக்கிறது என்பது உங்களுக்கு இப்போது புரிந்திருக்கும் என்று கர்த்தருக்குள் விசுவாசிக்கின்றேன். இந்த காலக்கட்டம், ‘பரிசுத்த சபை அல்லது பரிசுத்தவான்கள்’ அந்திகிறிஸ்துவாகிய ‘கத்தோலிக்க ரோமப் பேரரசால்’ அது ஆட்சியிலிருந்த ‘1260 வருடங்கள்’ பலவிதமான ‘கடைசிகால உபத்திரவங்களை’ அடைவார்கள் என்று இயேசுவால் யோவானுக்கும், தானியேலுக்கும் முன்னறிவிக்கப்பட்ட தீர்க்கதரிசனமாகும்.

கிறிஸ்துவையும் சத்திய வசனத்தையும் மட்டுமே பின்பற்றி மனிதனாகிய போப்புகளின் அதிகாரத்தையும் மனிதனால் உருவாக்கப்பட்ட திருச்சபையின் வேதத்திற்கு விரோதமான சட்டதிட்டங்களையும் புறக்கணித்த விசுவாசிகள் இந்த 1260 வருடங்கள் அனுபவித்த கொடுமைகளைப் பற்றி பேச தனிப்புத்தகம் வேண்டும். அவற்றில் சில காரியங்களை மட்டும் சுருக்கமாகக் கூறியுள்ளேன். இதன் தீவிரத்தை அறிய வரலாற்றுப் பதிவுகளை விரிவாக வாசித்துப்பாருங்கள்.

திருச்சபை துரோகிகள்

ரோமன் கத்தோலிக்க சபையில் திருமுழுக்கு பெற்று சபையில் அங்கத்தினராக இருக்கும் ஒருவர், அந்த சபையினால் உருவாக்கப்பட்ட மதக்கோட்பாடுகள், சட்டதிட்டங்கள் மற்றும் வழிபாட்டுமுறைகளை ஏற்றுக்கொள்ள மறுத்தால் அவர் திருச்சபை துரோகி (Heretics) என்று கருதப்படுவார். ஆனால் இந்த திருச்சபை சட்டதிட்டங்கள் மற்றும் வழிபாட்டுமுறைகள் எல்லாம் விக்கிரக வணக்கத்தைப் பின்பற்றிய ரோம சாம்ராஜ்ஜியத்தின் வழிவந்தவையே தவிர வேத வசனங்களை அடிப்படையாகக் கொண்டவை அல்ல. எனவே வேதவசனத்தின்படி நடக்க முயன்ற தனிநபர்கள் முதல் பல இனக்குழுக்கள் (Cathars, waldensians, Albigens) வரை திருச்சபை துரோகிகளாக முத்திரை குத்தப்பட்டு பல உபத்திரவங்களுக்கு ஆளாக்கப்பட்டனர்.

கத்தோலிக்க விசாரணை உபத்திரவங்கள் (Catholic Inquisitions)

திருச்சபை துரோகிகளை அடையாளம் காணவும், தண்டிக்கவும் தனி சட்டங்களையும் நீதிபதிகளையும் உடைய ‘விசாரணை நீதிமன்றங்கள்’ போப்புகளால் ஏற்படுத்தப்பட்டு அதை செயல்படுத்தும்படி ரோம சாம்ராஜ்ஜியத்தின் அங்கங்களாக இருந்த ராஜாக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப்பின் அதிகாரத்தை எதிர்த்த ஒரே காரணத்திற்காக மட்டுமே இவர்கள் குறிவைக்கப்பட்டனர். வழக்கம்போல பெரும்பாலான ராஜ்ஜியங்கள் செய்யும் ‘ஒரே மதம்’ என்ற கோட்பாட்டை நிலைநிறுத்துவதே இவர்களுடைய முக்கிய நோக்கமாக இருந்தது. திருச்சபையை ஒழுங்குபடுத்தும் நோக்கில் இப்படி செய்கிறோம் என்ற காரணத்தைக் கூறி ஆரம்பிக்கப்பட்ட இந்த விசாரணைகள் நாளடைவில் யூதர்களையும், இஸ்லாமியர்களையும் கத்தோலிக்கத்திற்கு கட்டாய மதமாற்றம் செய்யும் அளவிற்கு தீவிரமடைந்தது. இந்த விசாரணை உபத்திரவங்கள் ஐரோப்பாவில் 11 ஆம் நூற்றாண்டில் ஆரம்பிக்கப்பட்டு, 15 ஆம் நூற்றாண்டில் உச்சத்தை அடைந்து 18 ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்தது என்றால் எத்தனை பேர் உபத்திரவப்படுத்தப்பட்டிருப்பார்கள், எத்தனை பேர் கொலை செய்யப்பட்டிருப்பார்கள் என்று கணித்துக்கொள்ளுங்கள். இதில் திருச்சபை துரோகிகள் என்று கருதப்பட்டவர்கள் விசாரணைத் தீர்ப்புக்கு உட்படுத்தப்பட்டு அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளின் தன்மைக்கு ஏற்ப கீழ்கண்ட தண்டனைகள் வழங்கப்பட்டது.

  1. மிதமான தண்டனையாக ஆராதனை, திருவிருந்து உட்பட எந்தவித திருச்சபையின் காரியங்களிலிருந்தும் விலக்கப்பட்டனர். (Catholic ex-communications)
  2. அடுத்ததாக சிலர் இரட்டு உடை போன்ற உடைகளை மட்டுமே ஊருக்குள் நடமாடும்போது உடுத்தவேண்டும் என்ற ஆணைபிறப்பிக்கப்பட்டது. இது நம் ஊரில் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி அவமானப்படுத்துவது போல ஒன்றாகும்.
  3. சிலருக்கு கசையடிகள், சிறைச்சாலைத் தண்டனைக்கு உட்படுத்துவது போன்ற தண்டனைகள் கொடுப்பார்கள்.
  4. அடுத்த தீவிர தண்டனையாக நாடு கடத்துவதும் (Exile) உண்டு.
  5. உண்மையை வெளிக்கொண்டு வரவும், மற்ற துரோகிகளைக் காட்டிக்கொடுக்கவும் தண்ணீருக்குள் தலையை மூழ்கி எடுப்பது, முள் நாற்காலிகளில் அமரவைப்பது, தலைகீழாகத் தொங்கவிடுவது, மரப்படுக்கையில் படுக்கவைத்து கைகால்களை கயிறுகட்டி வெவ்வேறு திசைகளில் இழுப்பது உட்பட பல கொடுமைகளை இந்த கத்தோலிக்க ரோமப்பேரரசு நடத்தியது.
  6. கடைசிவரை தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஒத்துக்கொள்ளாமலும், மன்னிப்பு கேட்காமலும், திருச்சபை சட்டதிட்டங்களை இனி கைக்கொண்டு நடப்பேன் என்று சத்தியம் செய்யாமலும், கிறிஸ்துவின் அடிச்சுவடுகளை மட்டுமே பின்பற்றி நடப்பேன் என்று சாதிப்பவர்களை ஊராரின் கண்களுக்கு முன்பாக கம்பில் கட்டிவைத்து தீக்கொளுத்தி கொலை செய்வது தான் உச்சக்கட்ட தண்டனையாகும். சில காலக்கட்டங்களில் சிரச்சேதம் செய்வதும் நடந்துள்ளது.
  7. இதில் என்ன ஆச்சரியம் என்றால் ஐரோப்பாவில் நடத்தப்பட்ட அத்தனை புனித விசாரணைகள், நபர்கள், தண்டனைகள் விசாரணைக் குழுவால் ஒரு வரிவிடாமல் எழுதப்பட்டு ரோமுக்கு அனுப்பப்பட்டது. பல இலட்சம் பக்கங்களைக் கொண்ட பல ஆயிரம் புத்தகங்கள் இன்றுவரை வாடிகன் நூலகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளது. அந்த நூலகத்திற்கு போப்புகள், கார்டினல்கள் தவிர யாருக்கும் அனுமதி கிடையாது என்பதும், உலகிலேயே மர்மமான நூலகம் ‘வாடிகன் நூலகம்’ தான் என்பதும் உலகறிந்த செய்தி.
  8. திருச்சபையின் அட்டூழியங்களை எதிர்த்த மார்டின் லூதரையும் திருச்சபை துரோகி என முத்திரை குத்தி கொல்ல முயற்சித்தது போப்பாதிக்கம். ஆனால் ஜெர்மன் இளவரசரை லூத்தருக்கு ஆதரவாக ஆண்டவர் ஏற்படுத்தியதால் தான் இன்று சத்திய வேதம் நம் கைகளில் தவழ்கிறது. ஆனால் இந்தக்காலக்கட்டத்தில் (16- 18 ஆம் நூற்றாண்டு) ஏராளமான புராட்டஸ்டண்டுகள் துரோகிகளாக அடையாளம் காணப்பட்டு கொல்லப்பட்டனர்.
  9. புராட்டஸ்டண்ட் கொள்கைக்கு ஆதரவாக எழுதப்பட்ட  புத்தகங்களையும்,  மொழியாக்கம்  செய்யப்பட்ட பைபிள்களையும் பிடுங்கி எரித்தனர். மேலும் எந்தெந்த புத்தகங்களை மக்கள் வாசிக்கக்கூடாதென்ற பட்டியலை ‘தடை செய்யப்பட்ட புத்தகங்கள்’ (Index Librorum Prohibitorum) என்று வகைப்படுத்தி அவற்றை அச்சடிக்கவும் உபயோகிக்கவும் வாடிகன் தடை செய்தது.

இதனால் இவர்களுக்கு என்ன ஆதாயம் என்று உங்களுக்குத் தோன்றலாம். மதத்தின் அடிப்படையிலான பிரிவினைகளையும் உபத்திரவங்களையும் அந்தந்த ராஜாக்கள் அவர்களது அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும், எதிர்ப்பவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தவுமே இன்று நம் தேசத்தில் கூட செயல்படுத்திவருவதை நாம் கண்கூடாகக் கண்டு வருகிறோம். இதைத்தான் அன்றைய ரோம ராஜாக்களும், போப்புகளும் செய்தார்கள். கூடவே திருச்சபை அதிகாரத்தில் இருந்தவர்கள் செல்வச்செழிப்புடனும் சுகபோகத்துடனும் வாழ்ந்து வந்ததைத் தக்கவைத்துக்கொள்ளவும் இப்படி செய்துவந்தார்கள். இவ்வளவு ஏன்? இன்று தங்கள் கொள்கைகளுக்கு ஆதரவாக இருந்து வரும் சாமியார்களுக்கும், அரசாங்க அதிகாரிகளுக்கும் ஆட்சியில் முக்கிய பதவிகளைக் கொடுத்து கைமாறு செய்வதுபோல அன்றைக்கும் இந்த விசாரணைப் படுகொலைகளில் ஈடுபட்ட கத்தோலிக்க குருமார்கள், பிஷப்புகள், ஜெசுயிட்டுகள் பல பதவி உயர்வுகளையும், புனிதர் பட்டங்களையும் பெற்றார்கள். இந்த விசாரணைகளில் தீவிரமாக செயல்பட்ட சில குருமார்கள் பிற்காலத்தில் ‘போப்புகளாகவும்’ ஆனார்கள் என்பது தான் உச்சக்கட்ட கொடுமை. இரண்டு உதாரணங்களை மட்டும் கொடுத்துள்ளேன்.

  1. பிஷப் ஜியன் பீட்ரோ கராபா (Gian Pietro Carafa): இவர் ஸ்பெயின் மற்றும் இத்தாலியில் உள்ள வெனிஸ் நகரத்தில் நடந்த விசாரணையில் தீவிரமாக ஈடுபட்டு பல கொடூரங்களை நிகழ்த்தியவர். ‘திருச்சபை துரோகி எனது தந்தையாக இருந்தால் கூட அவரை எரிப்பதற்காக நான் விறகுகளைப் பொறுக்குவேன்’ என்று வெளிப்படையாகப் பிரகடனப்படுத்தியவர். இவர் தான் பின்னாளில் ‘போப் நாலாம் பால்’ (Pope Paul -IV 1555-1559 AD) ஆக மாறினார். இவரது காலத்தில் மட்டும் சுமார் ஒன்றரை இலட்சம் புராட்டஸ்டண்ட் ஆதரவாளர்கள் கொன்று குவிக்கப்பட்டதாக கத்தோலிக்க வராலாற்றாசிரியர் வெர்ஜிரியஸ் (Vergerius) கூறியுள்ளார்.
  1. குரு ஜாக்குவஸ் ஃபோர்னியர் (Jacques Fournier): பிரான்ஸிலுள்ள மொன்டெய்லு (Montaillou) என்ற இடத்தில் வாழ்ந்த கத்தார் (Cathar) என்ற இனத்தையே அழித்த இவர் பிற்காலத்தில் போப் பன்னிரெண்டாம் பெனிடிக்ட் (Pope Benedict VII, 1334-1342 AD) ஆக மாறினார்.

இதைத்தான் பரிசுத்தவான்களின் இரத்தத்தில் வெறிகொண்ட ஸ்திரீயாகிய சபை மிருகமாகிய ரோம சாம்ராஜ்ஜியத்தின் மீது அமர்ந்திருப்பதாக யோவான் கண்டு, அவளை பூமியின் ராஜாக்களும் ஜனங்களும் பின்பற்றியதைக் கண்டு ஆச்சரியப்பட்டதாகவும் எழுதிவைத்துள்ளார்.

‘‘மேலும், பரிசுத்தவான்களோடே யுத்தம்பண்ணி அவர்களை ஜெயிக்கும்படிக்கு அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டதுமல்லாமல், ஒவ்வொரு கோத்திரத்தின்மேலும் பாஷைக்காரர்மேலும் ஜாதிகள்மேலும் அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டது.’’ (வெளி 13:7)

‘‘அந்த ஸ்திரீ பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும், இயேசுவினுடைய சாட்சிகளின் இரத்தத்தினாலும் வெறிகொண்டிருக்கிறதைக் கண்டேன்; அவளைக் கண்டு நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்.’’ (வெளி 17:6)

ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்ற இந்த உபத்திரவங்கள் அவர்களது காலனி ஆதிக்க நாடுகளிலும் பரவியது. உதாரணமாக போர்ச்சுக்கீசியர்களின் இந்திய காலனியாக இருந்த கோவாவில் கூட (Goa Inquisition) பல கிறிஸ்தவர்கள் தங்கள் பழைய மார்க்க முறைகளைப் பின்பற்றுகிறார்கள் என்றும் புராட்டஸ்டண்ட் கொள்கையாளார்களாக வாழ்கிறார்கள் என்றும் சொல்லி உபத்திரவப்படுத்தியது; சிலர் கொலையும் செய்யப்பட்டார்கள். ஆனால் மற்ற இந்திய பிரதேசங்கள் இயேசுவின் சுவிசேஷத்திற்கு செவிசாய்த்த இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்திலிருந்ததால் நாம் சுவிசேஷத்தின் வெளிச்சத்தைப் பெற்றோம். அதனால் தான் இன்றுவரை இங்கிலாந்து ஐரோப்பிய யூனியனுடன் ஒட்டாமலே வாழ்ந்துவருகின்றது; கடைசி அழிவிற்கும் தப்புவிக்கப்படும். கிறிஸ்துவுக்குள் அன்பான கத்தோலிக்க சகோதரர்களே, புராட்டஸ்டண்ட் மறுமலர்ச்சியைப் பின்பற்றி உருவான சபைகளைப் பின்பற்றியும் அதன் வரலாறு அறியாத சகோதரர்களே, உங்களிடம் ஒரு கேள்வியை முன்வைக்கிறேன். நாம் பின்பற்றும் பரிசுத்த வேதத்தில் ஜனங்களை கிறிஸ்துவின் சீடர்களாக மாற்றவும், விசுவாசத்தில் பின்மாற்றம் அடைபவர்களை சீர்திருத்தவும் இப்படி ஒரு கொடூரமான முறைகளை இயேசு அல்லது அப்போஸ்தலர்கள் சொல்லிவைத்துச் சென்றுள்ளனரா? ‘நீங்கள் சொல்வது மாதிரி அல்ல; விபச்சாரம் செய்தவர்கள், இயேசுவின் தேவத்துவத்தை அவமதித்தவர்கள், பில்லி சூனியங்களில் ஈடுபட்டவர்கள் என குற்றம் சாட்டப்பட்டவர்களையே அப்படி செய்தார்கள்’ என்று கத்தோலிக்க ரோம சாம்ராஜ்ஜியத்தின் இந்த செயல்பாடுகளை ஆதரிப்பவர்கள் வாதிடுவது உண்டு. அவர்கள் சொல்வது உண்மை என்றே ஒரு வாதத்திற்கு வைத்துக்கொண்டாலும் வேதம் என்ன சொல்கிறது? இவர்கள் வாதிடுவது நியாயம் என்றால் விபச்சாரத்தில் கையும் களவுமாய் அகப்பட்ட பெண்ணை நோக்கி இயேசு தான் முதல் கல்லை எறிந்திருக்கவேண்டும்? அப்படிப்பட்டவர்களையே மன்னிக்க சொன்ன இயேசுவின் போதனைகளைப் பின்பற்றிய பரிசுத்தவான்கள் தான் இப்படிப்பட்ட உபத்திரவங்களுக்கு ஆளாக்கப்பட்டார்கள் என்பதை மத்தியகால சபை வரலாற்றைப் படித்து அறிந்துகொள்ளுங்கள்.

சித்திரவதை ஆயுதங்கள்

பரிசுத்தவான்களைத் துன்புறுத்திக் கொல்வதற்காக கத்தோலிக்க ராஜ்ஜியமும், போப்புகளும் பயன்படுத்திய ‘சித்திரவதை ஆயுதங்கள்’ இன்றுவரை Amsterdam and Carcassonne Museum களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவைகள் தான், பரிசுத்தவான்கள் மூன்றரை வருடங்கள் (1260 வருடங்கள்) உபத்திரவப்பட்டார்கள் என்பதற்கு இன்றுவரை சாட்சி பகருகின்றன.

படம் 38: பரிசுத்தவான்களை உபத்திரவப்படுத்த பயன்படுத்தப்பட்ட கொடூர முறைகள்

யார் இதை வணங்குவார்கள்?

விக்கிரக ஆராதனைக்காரரும், வேசிக்கள்ளரும், கொலைபாதகர்களும் பரலோக ராஜ்ஜியத்திற்குள் பிரவேசிப்பதில்லை என்று தேவன் பல இடங்களில் சொல்லியிருக்கிறார். அதையே இங்கும் கூறியிருக்கிறார்.

‘‘உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் யாவரும் அதை வணங்குவார்கள்.’’ (வெளி 13:8)

விக்கிரக ஆராதனையில் ஈடுபடும் புறமதஸ்தர் மட்டுமல்ல; கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் கத்தோலிக்க சபையினரும் பரலோகராஜ்ஜியத்தில் பிரவேசிக்க முடியாது. ஏனெனில் இவர்கள் பெயர்கள் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்படுவதில்லை. எனவே இதை வாசிக்கும் நீங்கள் கத்தோலிக்க சபையின் வழிபாட்டைப் பின்பற்றுபவர்களாக இருந்தால் இன்றே மனம்திரும்பி, இயேசுவின் இரத்தத்தினால் கழுவப்படும் பாவமன்னிப்பைப் பெற்று, விக்கிரக ஆராதனைக்கு விலகி ஓடுங்கள். ஒருவேளை நீங்கள் இயேசுவை மட்டும் ஆராதிப்பவர்களாக இருந்தால் உங்கள் கத்தோலிக்க நண்பர்களுக்கு இதை உணர்த்துங்கள். அவர்கள் நமக்கு பகைவர்கள் அல்ல; அவர்களும் பரலோகம் வர வேண்டும் என்ற வாஞ்சையில் தான் இவ்வளவு எழுதுகிறேன்.

சிறைபிடிக்கப்பட்ட முதல் மிருகம்

இப்படி 1260 வருடங்கள் அட்டூழியம் செய்த முதல் மிருகமான ரோமன் கத்தோலிக்க சாம்ராஜ்ஜியம் முடிவுக்கு வந்ததையும் கர்த்தர் எழுதி வைத்துள்ளார்.

‘‘சிறைப்படுத்திக்கொண்டு போகிறவன் சிறைப்பட்டுப்போவான்; பட்டயத்தினாலே கொல்லுகிறவன் பட்டயத்தினாலே கொல்லப்படவேண்டும். பரிசுத்தவான்களுடைய பொறுமையும் விசுவாசமும் இதிலே விளங்கும்.’’ (வெளி 13:10)

இந்த வசனம் போப்புகளின் 1260 வருட அதிகாரம் முடிவுக்கு வருவதைத் தான் குறிக்கிறதா? என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். இதேபோல் எகிப்து ராஜ்ஜியம், பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரிடம் ஒப்புக்கொடுக்கப்பட்டு அழிக்கப்பட்ட சம்பவத்தை எரேமியா கூறும்போது இதே வார்த்தைகளைத் தான் உபயோகப்படுத்துகிறார். தீர்க்கதரிசன வசனங்களுக்கென்றே தனி ஸ்டைல் இருக்கிறது என்பது இதைப் பார்க்கும்போது உங்களுக்குப் புரியும்.

‘‘அவர்களை நோக்கி: இதோ, என் ஊழியக்காரனாகிய நேபுகாத்நேச்சார் என்கிற பாபிலோன் ராஜாவை நான் அழைத்தனுப்பி, நான் புதைப்பித்த இந்தக் கற்களின்மேல், அவனுடைய சிங்காசனத்தை வைப்பேன்; அவன் தன் ராஜ கூடாரத்தை அவைகளின் மேல் விரிப்பான். அவன் வந்து, எகிப்துதேசத்தை அழிப்பான்; சாவுக்கு ஏதுவானவன் சாவுக்கும், சிறையிருப்புக்கு ஏதுவானவன் சிறையிருப்புக்கும், பட்டயத்துக்கு ஏதுவானவன் பட்டயத்துக்கும் உள்ளாவான்.’’ (எரேமியா 43:10,11)

எனவே வெளி 13:10 வசனம், முதல் மிருகமாகிய கத்தோலிக்க ரோம சாம்ராஜ்ஜியம், இன்னொரு ராஜாவால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதைக் குறிக்கிறது. பாபிலோன் ராஜ்ஜியம் யூதசபையை சிறைபடுத்திக்கொண்டு போனது; பின்பு மேதிய-பெர்சியர்களால் அழிக்கப்பட்டது. மகாபாபிலோனான ரோமன் கத்தோலிக்க சாம்ராஜ்ஜியம் இயேசுவின் பரிசுத்த சபையைக் கையகப்படுத்த நினைத்தது. (Babylonian Captivity of the church: Book wrote by Martin Luther)

நெப்போலியனும் போப்புகளும்

என்ன இது? வரலாற்றில் பிரபலமாக பேசப்படும் பெரும்பாலானோரை இவர் தீர்க்கதரிசன விளக்கங்களுக்குள்ளே இழுக்கிறாரே? என்று உங்களுக்குத் தோன்றலாம். அது தான் உண்மை. பூமியில் நடப்பவையும், நடக்கப் போகிறவைகளும் என் தேவாதி தேவனுக்கு தெரியாமல் இருப்பதில்லை. நாம் இதுவரை வரலாற்றில் படித்தவைகள் எல்லாம் ஏதோ தற்செயல் நிகழ்வுகள் அல்ல. சரியாக 1260 வருடங்கள் ஆட்சியில் இருந்த போப்புகளின் ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியம்/சபை அதிஉச்சத்தில் இருந்தது கி.பி 1000 க்கும் 1500 களுக்கும் இடைப்பட்ட காலத்தில் தான். கி.பி 1500 க்குப் பின் மார்டின் லூதரால் ஏற்பட்ட புராட்டஸ்டண்ட் புரட்சி இந்த சபைக்கு முதல் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. ஏனென்றால் பல இலட்சக்கணக்கான மக்கள் சத்தியத்தை அறிந்துகொண்டார்கள். இப்படி ஆரம்பித்த சரிவு பதினெட்டாம் நூற்றாண்டின் கடைசிவரைத் தொடர்ந்தது. அப்போது ஏற்பட்ட ‘பிரஞ்சுப் புரட்சியின்’ (French Revolution) விளைவாக உருவான கதாநாயகனான ‘நெப்போலியன் போனபாட்’ என்ற ராஜா, ரோம் மீது படையெடுத்து ரோமை துவம்சம் செய்தான். அப்போது ஆட்சியில் இருந்த ‘ஆறாம் பயஸ்’ என்ற போப், நெப்போலியனால் கைது செய்யப்பட்டு, ராஜ்ஜியம் பறிக்கப்பட்டு, சிறைக்கைதியாகக் கொண்டுபோகப்பட்டார். சிறையிருப்பில் இறந்தும் போனார். இப்படி இயேசுவின் பரிசுத்த சபையை பட்டயத்தாலும், சிறைப்படுத்தியும் துன்புறுத்திய போப்புகளின் ராஜ்ஜியம் மிகச்சரியாக கி.பி 1798 ல் நெப்போலியனின் பட்டயத்தால் சிறைபடுத்தப்பட்டு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இத்துடன் முதலாம் மிருகத்தின் கதை முடிந்தது என்று மட்டும் நினைக்காதீர்கள். இனி அடுத்த அத்தியாயத்தில் இரண்டாம் மிருகம் வரப்போகிறது.

பரிசுத்தவான்களின் பொறுமைக்கு கிடைத்த பரிசு

கடைசியாகப் பார்த்த வசனம் ‘பரிசுத்தவான்களுடைய பொறுமையும் விசுவாசமும் இதிலே விளங்கும்’ என்று முடிகிறது. இதில் சொல்லப்பட்ட பரிசுத்தவான்கள் யார்? அவர்கள் எதற்காகப் பொறுமையுடன் காத்திருந்தார்கள்? அவர்களின் பொறுமைக்கு என்ன பதில் கிடைத்தது? இந்த பரிசுத்தவான்கள் வேறு யாருமல்ல; கி.பி 313 வரை ரோம சாம்ராஜ்ஜியத்தால் உபத்திரவப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட பரிசுத்தவான்களின் ஆவியாகும். இந்த பரிசுத்தவான்கள் தான் ஐந்தாம் முத்திரை உடைக்கப்பட்ட காலமாகிய நாலாம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில் தேவனை நோக்கி முறையிடுகின்றனர்.

‘‘அவர் ஐந்தாம் முத்திரையை உடைத்தபோது, தேவவசனத்தினிமித்தமும் தாங்கள் கொடுத்த சாட்சியினிமித்தமும் கொல்லப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களைப் பலிபீடத்தின்கீழே கண்டேன். அவர்கள்: பரிசுத்தமும் சத்தியமுமுள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக்குறித்து எதுவரைக்கும் நியாயத்தீர்ப்புச்செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள். அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டது; அன்றியும், அவர்கள் தங்களைப்போலக் கொலைசெய்யப்படப்போகிறவர்களாகிய தங்கள் உடன்பணிவிடைக்காரரும் தங்கள் சகோதரருமானவர்களின் தொகை நிறைவாகுமளவும் இன்னுங்கொஞ்சக்காலம் (1260 வருடங்கள்) இளைப்பாறவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது’’ (வெளி 6:9-11)

தாங்கள் இரத்த சாட்சியாக மரிக்கும் அளவுக்கு தங்களைத் துன்புறுத்திய ரோம சாம்ராஜ்ஜியத்தை எப்போது பழிவாங்கப்போகிறீர்? என்று தேவனிடம் முறையிடும்போது, இந்தப் பழிவாங்குதல் நிறைவேற இன்னும் காலங்கள் ஆகவேண்டும் என்று அவர்களுக்கு சொல்லப்பட்டது. இந்த காலங்கள் எதற்காக என்றால் இன்னும் அநேக பரிசுத்த ஜனங்கள் ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியத்தால் 1260 வருடங்கள் துன்புறுத்தப்பட வேண்டும்; அந்த தொகை நிறைவேறும் அளவுக்கு நீங்கள் காத்திருங்கள் என்று சொல்லப்பட்டது. இந்த காத்திருப்பு முடிந்த காலம் தான் கி.பி 1798 ல் முதல் மிருகம் அழிக்கப்பட்ட காலம் ஆகும். ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியத்திற்கு அளிக்கப்பட்ட இந்த தீர்ப்பு தான் பரிசுத்தவான்களின் பொறுமைக்குக் கிடைத்த பரிசாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *