சூரியனை அணிந்திருந்த கர்ப்ப ஸ்திரீ

இதுவரை தானியேலுக்கு வெளிப்படுத்தப்பட்ட ராஜ்ஜியங்களைக் குறித்த தரிசனங்களைக் குறித்து பார்த்தோம். அதைப் போலவே யோவானுக்கு, அவரது காலத்திற்குப் பின்வரும் ராஜ்ஜியங்களைக் குறித்து இயேசு வெளிப்படுத்தியிருக்கிறார். அதைப் பற்றி நாம் அறிந்துகொண்டால் தான் முத்திரைகள், எக்காளங்கள், வாதைகள் பற்றிய இரகசியங்களை அறிந்துகொள்ள முடியும். வெளிப்படுத்தின விசேஷம் ஒரு வரலாற்று பதிவு அல்ல; கி.பி 96 க்குப் பின், நடக்க இருக்கும் சம்பவங்களைப் பற்றிய தரிசனங்களாகும். இதை வியாக்கியானம் செயவதற்கு முன் அது எழுதப்பட்டிருக்கும் முறைகளைப் பற்றி அறிந்துகொள்ளவேண்டும்.

  • அதில்அதிகார வரிசையாக கொடுக்கப்பட்டிருக்கும் தரிசனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அல்லது தொடர்ச்சியாக யோவானுக்கு வெளிப்படுத்தப்பட்டிருந்தாலும், அதே வரிசையில் தான் சம்பவிக்கும் என்று அர்த்தமல்ல.
  • இவற்றில் பெரும்பாலான அதிகாரங்கள் நடக்கவிருக்கும் சம்பவங்களைப் பற்றி சங்கேத மொழிகளாக எழுதப்பட்டவையாகும்.
  • சிலஅதிகாரங்கள் ‘வானத்தில் நடந்த’ ஆவிக்குரிய யுத்தங்கள் அல்லது வெளிப்படையாக உலகத்தில் நடக்கவிருக்கும் சம்பவங்களின் ஆவிக்குரிய நிழலாட்டமாகும்.
  • இதைப்போலவே பழைய ஏற்பாட்டிலுள்ள பெரும்பாலான தீர்க்கதரிசனங்களும் ஒரே கோர்வையான சம்பவங்களைக் குறிப்பிடவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

தானியேல் பாபிலோன் சாம்ராஜ்ஜியத்தின் காலத்தில், பாபிலோன் முதல் கடைசி ராஜ்ஜியம் வரை நடக்கவிருக்கும் காரியங்களைப் பற்றி எழுதினார். அதுபோலவே யோவான் கி.பி 96 ல் வெளிப்படுத்தலை எழுதும்போது ரோம சாம்ராஜ்ஜியம் ஆட்சியில் இருந்ததால் அந்த ராஜ்ஜியம் முதல் கொண்டு உலகத்தின் முடிவு வரை நடக்கவிருக்கும் சம்பவங்களை தரிசனமாகக் கண்டார். யோவானுக்கு வெளிப்படுத்தப்பட்ட ராஜ்ஜியங்களைக் குறித்த தரிசனங்கள் 12, 13 மற்றும் 17ஆம் அதிகாரங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. முதலில் வெளிப்படுத்தின விசேஷம் 12 ஆம் அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த அத்தியாயத்தைப் பார்ப்போம். இது மேலே சொன்னபடி பூமியில் நடந்த சம்பவங்களின் ஆவிக்குரிய நிழலாட்டம் நிறைந்த அதிகாரம்.

வானத்தில் காணப்பட்ட அடையாளம்

‘‘அன்றியும் ஒரு பெரிய அடையாளம் வானத்திலே காணப்பட்டது; ஒரு ஸ்திரீ சூரியனை அணிந்திருந்தாள், அவள் பாதங்களின் கீழே சந்திரனும், அவள் சிரசின்மேல் பன்னிரண்டு நட்சத்திரங்களுள்ள கிரீடமும் இருந்தன.’’ (வெளி 12:1)

வெளிப்படுத்தல் 12 ஆம் அதிகாரம் முழுவதுமே ‘ஆவிக்குரிய, வானத்தில் நடக்கும்’ யுத்தத்தைப் பற்றியது. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கடைசிகாலத்தின் முடிவாகிய 18 ஆம் நூற்றாண்டு வரை வலுசர்ப்பமாகிய சாத்தானால் ஆளப்படும் ‘பூமியின் ராஜ்ஜியங்களால்’ பரிசுத்தவான்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை யோவான் ‘ஆவிக்குரிய கண்களால்’ முன்னோட்டமாகக் காண்கிறார். நம் வாழ்க்கையில், இன்றிலிருந்து மரணம் வரை என்னென்ன நடக்க இருக்கிறது என்ற ‘ட்ரெயிலரை’ நம் கண்களுக்கு முன்பதாக திரையிட்டுக் காண்பித்தால் எப்படி இருக்குமோ, அதுபோலவே யோவான் காண்கிறார். ஆனால் அவர் கண்டது முழுவதும் சங்கேத மொழிகளால் அல்லது காட்சிகளால் நிறைந்த தரிசனமாகும். இதில் ஒவ்வொரு வார்த்தையும் முக்கியம்; அவற்றை வேத வசனங்களின் அடிப்படையிலேயே விளக்கம் கண்டு, வரலாற்று சம்பவங்களோடு இணைத்துப் பார்க்கப்போகிறோம்.

பெரிய அடையாளம்

வெளிப்படுத்தல் புத்தகத்திலே இந்த ஒரு இடத்தில் மட்டும் தான் வரவிருக்கும் சம்பவங்களை ‘பெரிய அடையாளம்’ (Great wonder or event of great significance) என்று கூறப்பட்டுள்ளது கவனத்திற்குரியது. இதே போல் பரிசுத்த வேதத்தில் ஒரு சில முக்கியமான இடங்களில் ஆவிக்குரிய காரியங்களைப் பற்றி தேவன் கூறும்போது இந்த வார்த்தையை உபயோகப்படுத்தியுள்ளார். தேவனாகிய கர்த்தர் ஓரேபிலே இஸ்ரவேலரோடே உடன்படிக்கை செய்தார். பின்பு இரண்டாவது முறையாக மோவாப் தேசத்திலே உடன்படிக்கை செய்து மோசேயுடனே பேசின சமயத்தில் இப்படி சொல்லியுள்ளார். அதில் அவர் எகிப்தில் செய்த ‘பெரிய அடையாளங்களை’ நினைவுபடுத்துகிறார்.

‘‘மோசே இஸ்ரவேலர் எல்லாரையும் வரவழைத்து, அவர்களை நோக்கி: எகிப்துதேசத்தில் உங்கள் கண்களுக்கு முன்பாகப் பார்வோனுக்கும் அவனுடைய எல்லா ஊழியக்காரருக்கும் அவனுடைய தேசமுழுவதற்கும், கர்த்தர் செய்த பெரிய சோதனைகளையும், பெரிய அடையாளங்களையும், அற்புதங்களையும் கண்ணாரக் கண்டீர்களே.’’ (உபாகமம் 29:2,3)

அடுத்து, இயேசுகிறிஸ்து கடைசிகால அடையாளங்களைப் பற்றி சொன்ன மத்தேயு 24 ஆம் அதிகாரத்தில் அந்திகிறிஸ்துவின் ஆவியை உடைய கள்ள கிறிஸ்துக்களும், கள்ளத்தீர்க்கதரிசிகளும் இதே பெரிய அடையாளங்களை செய்வார்கள் என்றும் கூறியுள்ளார்.

“ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்..’’ (மத்தேயு 24:24)

இதே போல் தான் யோவானுக்கு இந்த அதிகாரத்தில் வரும் சம்பவங்கள் பெரிய அடையாளமாகக் காண்பிக்கப்பட்டுள்ளது.

ஸ்திரீயின் அணிகலன்கள்

இந்த ஸ்திரீயைப் பற்றி சொல்லும்போது மூன்று அணிகலன்களை அவள் அணிந்திருந்ததாக சொல்லப்பட்டிருக்கிறது

  • சூரியனை ஆடையாக அணிந்திருந்தாள்
  • பாதங்களின் கீழ் சந்திரன் இருந்தது
  • தலையின் மீது பன்னிரண்டு நட்சத்திரங்களுள்ள கிரீடம் இருந்தது.

படம் 32: சூரியனையும், சந்திரனையும் அணிந்திருந்த கர்ப்பஸ்திரி

இதில் ஸ்திரீ என்பது யாரைக் குறிக்கிறது?

‘‘நான் உங்களைக் கற்புள்ள கன்னியாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காக தேவவைராக்கியமான வைராக்கியங் கொண்டிருக்கிறேன். ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன்’’ (2 கொரிந்தியர் 11:1,2)

‘‘புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து, (எபேசியர் 5:25)

‘‘மேலான எருசலேமோ (சபையோ) சுயாதீனமுள்ளவள், அவளே (அந்த ஸ்திரீ) நம்மெல்லாருக்கும் தாயானவள்’’ (கலாத்தியர் 4:26)

இந்த வசனங்களின்படி

  • ஸ்திரீ=கறைபடாத மணவாட்டி சபை/ குறிப்பாக எருசலேமிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட ஆதி சபை
  • சர்ப்பம்=சபையின் கற்பை கெடுப்பவன்/ இயேசுவை விட்டு விலக வைக்கும் சாத்தான்
  • இயேசுவை விட்டு விலகுவது = வேசித்தனம்/ கற்பை இழப்பது

யார் இந்த சூரியன்?

‘‘ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்;’’ (மல்கியா 4:2) ‘‘அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார்; அவர் முகம் சூரியனைப்போலப் பிரகாசித்தது, அவர் வஸ்திரம் வெளிச்சத்தைப்போல வெண்மையாயிற்று.’’ (மத்தேயு 17:2)

‘‘தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்’’ (சங்கீதம் 84:11)

சபையைப் பற்றி பேசப்படும் இந்த இடத்தில் சூரியன் என்பது சந்தேகமே இல்லாமல் ‘இயேசுவை’ மட்டுமே குறிக்கிறது. ராஜ்ஜியங்களைப் பற்றி சொல்லப்பட்ட இடங்களில் சூரியன் என்பது பேரரசர்களையும் குறிக்கும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். அப்படியானால் சூரியனை அணிந்த ஸ்திரீ= நீதியின் சூரியனாகிய இயேசுவை ஏற்றுக்கொண்ட ஆதிசபை

சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள்

சூரியன் பகலில் வெளிச்சத்தைக் கொடுக்கும்; சந்திரன் இரவில் வெளிச்சத்தைக் கொடுக்கும் என்பது நமக்கு நன்றாகத் தெரிந்த ஒன்று. கர்த்தர் கடைசி கால இஸ்ரவேலுக்கு சொல்லும்போது சூரியன், சந்திரன் இரண்டையும் கர்த்தரால் அளிக்கப்படும் ‘நித்திய வெளிச்சத்திற்கு’ ஒப்பாகக் கூறுகிறார்.

‘‘இனிச் சூரியன் உனக்குப் பகலிலே வெளிச்சமாயிராமலும், சந்திரன் தன் வெளிச்சத்தால் உனக்குப் பிரகாசியாமலும், கர்த்தர் உனக்கு நித்திய வெளிச்சமும், உன் தேவனே உனக்கு மகிமையுமாயிருப்பார். உன் சூரியன் இனி அஸ்தமிப்பதுமில்லை, உன் சந்திரன் மறைவதுமில்லை; கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்; உன் துக்கநாட்கள் முடிந்துபோம்.’’ (ஏசாயா 60:19,20)

இதையே வெளிப்படுத்தின விசேஷம் 21 ஆம் அதிகாரத்தில், பரலோகத்திலிருந்து வெளிப்படப்போகிற பரம எருசலேமைப் பற்றி சொல்லும் இடத்திலும் சொல்லி உறுதிப்படுத்துகிறார்.

‘‘பின்பு, கடைசியான ஏழு வாதைகளால் நிறைந்த ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் என்னிடத்தில் வந்து: நீ இங்கே வா, ஆட்டுக்குட்டியானவருடைய மனைவியாகிய மணவாட்டியை உனக்குக் காண்பிக்கிறேன் என்று சொல்லி, பெரிதும் உயரமுமான ஒரு பர்வதத்தின்மேல் என்னை ஆவியில் கொண்டுபோய், தேவனுடைய மகிமையை அடைந்த எருசலேமாகிய பரிசுத்தநகரம் பரலோகத்தைவிட்டு தேவனிடத்திலிருந்து இறங்கிவருகிறதை எனக்குக் காண்பித்தான்.’’ (வெளி 21:9,10)

‘‘வாசல்களின் அருகே பன்னிரண்டு தூதர்களிருந்தார்கள்; அந்த வாசல்களின்மேல் இஸ்ரவேல் சந்ததியாராகிய பன்னிரண்டு கோத்திரத்தாருடைய நாமங்களும் எழுதப்பட்டிருந்தன. நகரத்தின் மதிலுக்குப் பன்னிரண்டு அஸ்திபாரக் கற்களிருந்தன; அவைகள்மேல் ஆட்டுக்குட்டியானவருடைய பன்னிரண்டு அப்போஸ்தலரின் பன்னிரண்டு நாமங்களும் பதிந்திருந்தன.’’ (வெளி 21:13,14)

‘‘நகரத்திற்கு வெளிச்சங்கொடுக்கச் சூரியனும் சந்திரனும் அதற்கு வேண்டுவதில்லை; தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது, ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு. இரட்சிக்கப்படுகிற ஜனங்கள்

அதின் வெளிச்சத்திலே நடப்பார்கள் பூமியின் ராஜாக்கள் தங்கள் மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள்’’ (வெளி 21:23,24)

மேலும் ஏற்கனவே நட்சத்திரங்கள் என்பது சபையின் தூதர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

‘‘என் வலதுகரத்தில் நீ கண்ட ஏழுநட்சத்திரங்களின் இரகசியத்தையும், ஏழுபொன் குத்துவிளக்குகளின் இரகசியத்தையும் எழுது; அந்த ஏழு நட்சத்திரங்களும் ஏழு சபைகளின் தூதர்களாம்; நீ கண்ட ஏழு குத்துவிளக்குகளும் ஏழு சபைகளாம்.’’ (வெளி 1:20)

அப்படியானால் இந்த அணிகலன்களை அணிந்த ஸ்திரீ என்பது ‘‘இயேசுவின் நீதியையும், இரட்சிப்பையும் அணிந்து அவருடைய வசனத்தின் வெளிச்சத்தில், பன்னிரண்டு அப்போஸ்தலர்களால் இஸ்ரவேலின் எருசலேம் முதல் ஆசியா மைனர் வரை நிறுவப்பட்டு வழிநடத்தப்பட்ட ஆதிசபையைக் குறிக்கிறது’’. இந்த முதல் வசனம் புரிந்து விட்டால் இனி அடுத்த வசனங்களைப் புரிந்துகொள்வதற்கு இவ்வளவு விளக்கம் தேவைப்படாது.

இந்த ஸ்திரீக்கு என்ன நேர்ந்தது?

‘‘அவள் கர்ப்பவதியாயிருந்து, பிரசவவேதனையடைந்து, பிள்ளைபெறும்படி வருத்தப்பட்டு அலறினாள்.’’ (வெளி 12:2)

இதற்கான விளக்கத்தை வசனத்தின்படி பார்ப்போம்.

‘‘என் சிறுபிள்ளைகளே, கிறிஸ்து உங்களிடத்தில் உருவாகுமளவும் உங்களுக்காக மறுபடியும் கர்ப்பவேதனைப்படுகிறேன்’’ (கலாத்தியர் 4:19)

‘‘ஸ்திரீயானவளுக்குப் பிரசவகாலம் வந்திருக்கும்போது அவள் துக்கமடைகிறாள்; பிள்ளைபெற்றவுடனே ஒரு மனுஷன் உலகத்தில் பிறந்தானென்கிற சந்தோஷத்தினால் அப்புறம் உபத்திரவத்தை நினையாள். அதுபோல நீங்களும் இப்பொழுது துக்கமடைந்திருக்கிறீர்கள்.’’ (யோவான் 16:21)

‘‘இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம் (Beginning of birth pain). அப்பொழுது, உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள்; என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள்.’’ (மத்தேயு 24:8,9)

சரீரப்பிரகாரமான பிரசவ வேதனையின் இறுதியில் மாம்ச மனிதன் உலகத்தில் பிறக்கிறான். அதுபோல, ஆவிக்குரிய சபையாகிய ஸ்திரீயின் பிரசவவேதனையின் இறுதியில் ஆவிக்குரிய மனிதனாகிய விசுவாசி உருவாகிறான். மேற்கண்ட வசனங்களிலிருந்து நாம் தெரிந்துகொள்ளவேண்டியது,

  • கர்ப்பகாலம் = கிறிஸ்து ஒருவனுக்குள் உருவாவது/ இரட்சிக்கப்பட்ட விசுவாசிகள் சேர்ந்து சபை வளரும் காலகட்டம்
  • கர்ப்பவேதனையில் வருத்தப்பட்டு அலறுதல்= சபை கிறிஸ்துவுக்குள் வளர்ந்து வரும் காலகட்டத்தில் உபத்திரவங்களை சந்திப்பது.

இரண்டாம் அடையாளம்

முதல் பெரிய அடையாளத்திற்கு அடுத்து, வேறொரு ஆவிக்குரிய அர்த்தமுடைய அடையாளத்தை யோவான் வானத்தில் காண்கிறார். முதல் அடையாளத்தின் ஹீரோ பரிசுத்த மணவாட்டி சபை; இரண்டாம் அடையாளத்தில் வரும் வில்லன் தான் வலுசர்ப்பமாகிய சாத்தான்.

‘‘அப்பொழுது வேறொரு அடையாளம் வானத்திலே காணப்பட்டது; ஏழு தலைகளையும், பத்துக் கொம்புகளையும், தன் தலைகளின்மேல் ஏழு முடிகளையுமுடைய சிவப்பான பெரிய வலுசர்ப்பமிருந்தது.’’ (வெளி 12:3)

ஏழு தலைகளும், பத்து கொம்புகளும்

நாம் ஆரம்பத்தில் பார்த்தபடி ஏழு தலைகள் என்பது பூமியில் தோன்றிய ‘ஏழு சாம்ராஜ்ஜியங்களை’ குறிக்கும். இந்த ஏழு ராஜ்ஜியங்களும் வலுசர்ப்பமாகிய சாத்தானின் தலை என்பதன் மூலம் இவை எல்லாம் அவனுடைய ஆளுகைக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட ராஜ்ஜியங்கள் என்று விளங்குகிறது. இந்த அதிகாரம் ரோம சாம்ராஜ்ஜியத்தைப் பற்றிக் குறிப்பிடுவதால் பத்துகொம்புகள் என்பது ரோம சாம்ராஜ்ஜியத்தின் வழித்தோன்றலாக வந்த ‘பிரிவடைந்த 10 ராஜ்ஜியங்களை உள்ளடக்கிய ஐரோப்பிய தேசங்களைக் குறிக்கும்.

தலைகள் மீது கிரீடங்கள்

இதில் குறிப்பிடப்பட்டுள்ள முடிகள் அல்லது கிரீடங்கள் என்பது ராஜ்ஜிய பாரம் அல்லது அதிகாரத்தைக் குறிக்கும். அது தலைகளின் மீது இருந்தது என்று சொல்லப்பட்டதன் மூலம், ‘ஒருங்கிணைந்த ரோம சாம்ராஜ்ஜியம்’ அதிகாரத்தில் இருந்த காலகட்டமாகிய கி.பி 96 – 476 வரையிலான காலக்கட்டத்தைக் குறிப்பதாகும். இதை நான் ஏன் முக்கியப்படுத்திக் கூறுகிறேன் என்றால், அடுத்த அதிகாரத்தில் வரும் முதல் மிருகத்தின் ‘10 கொம்புகளின்’ மேல் கிரீடங்கள் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. அப்படியானால் அது பிரிவடைந்த ரோம சாம்ராஜ்ஜியம் மற்றும் அதனை ஒருங்கிணைத்து ஆண்ட ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியம் (கி.பி 476- 1798) அதிகாரத்தில் இருந்த காலக்கட்டமாகும். இதைப் பற்றி அடுத்த அத்தியாயத்தில் பார்க்க உள்ளோம்.

சிவப்பான பெரிய வலுசர்ப்பம்

இந்த வலுசர்ப்பம் யார் என்று இதே அதிகாரத்தில் நேரடியாகவே கூறப்பட்டுள்ளது.

‘‘உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது’’ (வெளி 12:9)

  • சிவப்பு=பரிசுத்தவான்களுடைய இரத்தம் சிந்த வைத்த
  • பெரிய=முக்கிய மற்றும் வலிமையான எதிரி
  • வலுசர்ப்பம் = பிசாசு/ சாத்தான்/ லூசிபர் / அந்திகிறிஸ்து

எனவே இந்த ரோமப்பேரரசாகிய ‘வலுசர்ப்பத்தால்’ சபையாகிய ஸ்திரீ அடையப்போகும் உபத்திரவங்களைப் பற்றி இந்த வசனங்கள் கூறுகிறது.

வலுசர்ப்பம் என்னவெல்லாம் செய்தது?

‘‘அதின் (வலுசர்ப்பத்தின்) வால் வானத்தின் நட்சத்திரங்களில் மூன்றிலொருபங்கை இழுத்து, அவைகளைப் பூமியில் விழத்தள்ளிற்று; பிரசவவேதனைப்படுகிற அந்த ஸ்திரீ பிள்ளைபெற்றவுடனே, அவளுடைய பிள்ளையைப் பட்சித்துப்போடும்படிக்கு அந்த வலுசர்ப்பம் அவளுக்கு முன்பாக நின்றது.’’ (வெளி 12:4)

வலுசர்ப்பமாகிய பிசாசின் ‘வால்’, ஸ்திரீயாகிய மணவாட்டி சபையின் சுவிசேஷத்தை ஏற்றுக்கொண்ட நட்சத்திரங்களாகிய தூதர்களை/ சுவிசேஷம் அறிவிப்பவர்களை பூமியில் (வானத்திற்கு எதிர்பதம்=ஆவியற்ற) விழும்படி வஞ்சித்தது.

‘‘மூப்பனும் கனம்பொருந்தினவனுமே தலை, பொய்ப்போதகம் பண்ணுகிற தீர்க்கதரிசியே வால்.’’ (ஏசாயா 9:15)

இயேசு கிறிஸ்து ஏற்கனவே மத்தேயு 24 ல் எச்சரித்தது போல, பல கள்ள கிறிஸ்துக்களும், கள்ள போதகர்களும், கள்ள தீர்க்கதரிசிகளும் ஆரம்ப கால சபையின் மூன்றில் ஒருபங்கு விசுவாசிகளை வஞ்சித்து, விசுவாசத்தை விட்டு விலக்கி ஆவியற்றவர்களாக்கினார்கள். இதுவும் வலுசர்ப்பமாகிய பிசாசின் செயலே. சபை வரலாற்றை நீங்கள் ஆராய்ந்து பார்த்தால், முதல் நான்கு நூற்றாண்டுகளில் சபை விசுவாசத்தில் எப்படி பெருகி வளர்ந்ததோ, அந்த அளவிற்கு ஏராளமான விசுவாச துரோகங்களையும், கள்ளபோதகங்களையும் சந்தித்தது. இதை முதல் நூற்றாண்டின் சம்பவங்களாக அப்போஸ்தலர் நடபடிகளிலும், எதிர்கால சபைகளுக்கு எச்சரிக்கைகளாக பவுல், பேதுரு, யோவான் மற்றும் யாக்கோபு சபைகளுக்குக் எழுதிய நிருபங்களிலும் காணலாம்.

ஸ்திரீக்கு முன் நின்ற வலுசர்ப்பம்

ஒரு பக்கம் கர்ப்பத்தில் (ஆரம்ப காலத்தில்) உருவாகிக்கொண்டிருந்த சபையை வஞ்சித்த வலுசர்ப்பம், இப்போது கர்ப்பவேதனையாகிய உபத்திரவகாலத்தினால் புடமிடப்பட்டு, பரிபூரணமாக்கப்பட்டு பிறந்த ‘சபையாகிய ஆண்பிள்ளையை’ பட்சித்துப்போடும்படி ஸ்திரீக்கு (சபை) முன்னால் எழும்பி நின்றது. இப்படியாக சபை வளர்ந்து பெருகி பரவும் காலத்தில், உபத்திரவப்படுத்தி ‘முற்றிலும் அழிக்க’ நினைத்தது.

ஸ்திரீயின் ஆண்பிள்ளை என்னவாயிற்று?

‘‘சகல ஜாதிகளையும் இருப்புக்கோலால் ஆளுகைசெய்யும் ஆண்பிள்ளையை பெற்றாள்; அவளுடைய பிள்ளை தேவனிடத்திற்கும் அவருடைய சிங்காசனத்தினிடத்திற்கும், எடுத்துக்கொள்ளப்பட்டது.’’ (வெளி 12:5)

ஸ்திரீயின் ஆண்பிள்ளை என்பது ஆதி மணவாட்டி சபையைத் தான் குறிக்கிறது என்று எப்படி சொல்லமுடியும்? இயேசுவைக் குறிக்கவில்லையா? என்று உங்கள் மனதில் தோன்றலாம். சங்கேத மொழிகளுக்கு விளக்கம் வசனம் தான் என்பதை மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன். இந்த ஆண்பிள்ளை ‘சகல ஜாதிகளையும் இருப்புக்கோலால் ஆளும்’ பிள்ளை என்று கூறப்பட்டுள்ளது. இதையே தான் இயேசு தியத்தீரா சபையின் தூதனுக்குக் கூறும்போது பின்வருமாறு கூறுகிறார்.

‘‘ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு, நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, ஜாதிகள்மேல் அதிகாரம் கொடுப்பேன். அவன் இருப்புக்கோலால் அவர்களை ஆளுவான்; அவர்கள் மண்பாண்டங்களைப்போல நொறுக்கப்படுவார்கள்.’’ (வெளி 2:26,27)

இதன்படி ஆதிசபை எதிர்கொள்ளவிருக்கும் உபத்திரவத்தில் இறுதிபரியந்தம் நிலைத்திருந்து ‘ஜெயம்கொள்ளும்’ பரிசுத்தவான்கள் எவர்களோ, அவர்கள் தான் இந்த சபையாகிய ஸ்திரீ உபத்திரவ காலத்தின் முடிவில் பெற்றெடுத்த சகல ஜாதிகளையும் இருப்புக்கோலால் ஆளும் ஆண்பிள்ளை என்று அர்த்தப்படும். மேலும் இந்த ஆண்பிள்ளையாகிய ‘உபத்திரவத்தில் நிலைத்திருந்து புடமிடப்பட்ட மற்றும் இரத்த சாட்சியாய் மரித்து ஜெயம்கொண்ட பரிசுத்தவான்கள்’ தான் தேவனிடத்திற்கும், அவருடைய சிங்காசனத்திற்கும் எடுத்துக்கொள்ளப்பட்டவர்கள். இதையும் இயேசு லவோதிக்கேயா சபைக்கு பின்வருமாறு சொல்லியுள்ளார்.

‘‘நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்.’’ (வெளி 3:21)

மேலும் ஸ்திரீ பெற்ற இந்த ‘முதற்பலனாகிய ஆண்பிள்ளை’ என்பது, நியாயப்பிரமாணத்தின் படி தேவனுக்கு மட்டுமே உரியதாகும். அதே போல இந்த ஆவிக்குரிய ஆண்பிள்ளை நிச்சயமாக தேவனுக்கென்று முதற்பலனாக பூமியிலிருந்து தெரிந்துகொள்ளப்பட்ட கூட்டமாகத் தான் இருக்க முடியும்.

‘‘அவர் சித்தங்கொண்டு தம்முடைய சிருஷ்டிகளில் நாம் முதற்பலன்களாவதற்கு நம்மைச் சத்திய வசனத்தினாலே ஜெநிப்பித்தார்.’’ (யாக்கோபு 1:18)

யார் இந்தக் கூட்டம்?

இந்த உபத்திரவப்பட்ட அல்லது இரத்தசாட்சியாய் மரித்த பரிசுத்தவான்களின் கூட்டத்தை யோவான் மீண்டும் ஏழாம் முத்திரை உடைக்கப்படுவதற்கு முன் பரலோகத்தில் இருக்கப் பார்க்கிறார். இவர்கள் ஏற்கனவே சிங்காசனத்திற்கு சென்றடைந்த கூட்டம் என்பதால் இனி நடக்க இருக்கும் உபத்திரத்தில் கொல்லப்பட்டவர்கள் என்று அர்த்தம் அல்ல. இவர்கள் முதல் ஐந்து நூற்றாண்டுகளில் கிறிஸ்துவுக்காக மரித்த, உபத்திரவப்பட்ட கூட்டமாகும்; இனி வரப்போவதாக போதிக்கப்படும் அந்திக்கிறிஸ்துவின் காலத்தில் கொல்லப்படப்போகிறவர்கள் அல்ல.

தவறான விளக்கங்கள்

இதே வெளி 12 ன் முதல் ஐந்து வசனங்கள் இரண்டு விதமான தவறான விளக்கங்களுக்கு உட்படுத்தப்படுகிறது.

விளக்கம் 1 : இந்த சூரியனை அணிந்த சந்திரனையும், நட்சத்திரத்தையும் உடைய ஸ்திரீயை யோசேப்பின் சொப்பனத்தோடு ஒப்பிட்டு ‘இஸ்ரவேல் தேசம் மற்றும் அதன் 12 கோத்திரங்கள்’ என்றும் இந்த ‘ஆண்பிள்ளை இயேசுகிறிஸ்து’ எனவும், ‘வலுசர்ப்பமாகிய’ ரோம ஆளுநர் ஏரோது, இயேசு என்ற பிள்ளையைக் கொல்ல வகைதேடியதற்கு ஒப்பிட்டு வியாக்கியானம் செய்யப்படுகிறது

உண்மையா?: இந்த விளக்கம் உண்மை அல்ல. ஏனென்றால் இந்த முதல் விளக்கம் இயேசுவின் பிறப்பின்போது நடந்தது. ஆனால் யோவானுக்கு ‘இனி சம்பவிப்பவைகள்’ என்று தரிசனமாக காண்பிக்கப்பட்டது கி.பி 96 ஆம் ஆண்டு வாக்கில் தான். எனவே இது கி.பி 96 க்குப் பின் நடக்கும் சம்பவங்களைப் பற்றியதாகும்.

‘‘சீக்கிரத்தில் (things which must shortly come to pass) சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு,….(வெளி 1:1)

‘‘நீ (தரிசனத்தில்) கண்டவைகளையும், (இப்போது) இருக்கிறவைகளையும், இவைகளுக்குப்பின்பு சம்பவிப்பவை களையும் எழுது; (வெளி 1:19)

விளக்கம் 2 : ரோமன் கத்தோலிக்க சபையினர் இன்னும் ஒருபடி மேலே சென்று, இந்த ஸ்திரீ இயேசுவின் தாயாகிய ‘மரியாள்’ தான் என்று சொல்லி சபையை நம்பவைத்து விட்டனர். அதனால் தான் இந்த ஆண்பிள்ளை ‘குழந்தை இயேசு’ என்றும் கூறுகின்றனர். மரியாள் தான் இன்னொரு உலக ரட்சகர் என்றும் நம்புகின்றனர்.

உண்மையா?: வெளிப்படுத்தின விசேஷத்தில் மரியாளைக் குறிக்கும் எந்த தீர்க்கதரிசனங்களும் குறிப்பிடப்படவில்லை. மரியாள் இயேசுவுக்கு இணையானவர், ஆராதிக்கத்தக்கவர் என்ற வஞ்சகத்தைத் திணிக்க, வசன ஆதாரங்கள் இல்லாமல் ரோமன் கத்தோலிக்க சபைகள் சொல்லிக்கொள்ளும் விளக்கமாகும்.

இதற்குப் பின்பு ஸ்திரீயின் நிலைமை என்ன?

ஸ்திரீ வேதனைப்பட்டுப் பெற்ற ஆண்பிள்ளையாகிய ஆதிசபையின் இரத்தசாட்சிகள் மற்றும் விசுவாசிகள், தேவனுடைய சிங்காசனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டுவிட்டாயிற்று. ஆனால் ஸ்திரீயாகிய சபைக்கு என்ன சம்பவித்தது? ஸ்திரீயின் பிள்ளையாகிய பரிசுத்தவான்களை முற்றிலும் அழிக்க முயற்சித்த வலுசர்ப்பமாகிய பிசாசு, ஸ்திரீயாகிய சபையை மட்டும் விட்டுவிடுமா என்ன?

‘‘ஸ்திரீயானவள் வனாந்தரத்திற்கு ஓடிப்போனாள்; அங்கே ஆயிரத்திருநூற்றறுபது நாளளவும் அவளைப் போஷிப்பதற்காக தேவனால் ஆயத்தமாக்கப்பட்ட இடம் அவளுக்கு உண்டாயிருந்தது. வானத்திலே யுத்தமுண்டாயிற்று; மிகாவேலும் அவனை ச் சேர்ந்த தூதர்களும் வலுசர்ப்பத்தோடே யுத்தம்பண்ணினார்கள்; வலுசர்ப்பமும் அதைச்சேர்ந்த தூதரும் யுத்தம்பண்ணியும் ஜெயங்கொள்ளவில்லை.’’ (வெளி 12:6,7)

‘‘வலுசர்ப்பமானது தான் பூமியிலே தள்ளப்பட்டதை அறிந்து, அந்த ஆண்பிள்ளையைப்பெற்ற ஸ்திரீயைத் துன்பப்படுத்தினது. ஸ்திரீயானவள் அந்தப் பாம்பின்முகத்திற்கு விலகி, ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமுமாகப் போஷிக்கப்படத்தக்கதாய் வனாந்தரத்திலுள்ள தன் இடத்திற்குப் பறந்துபோகும்படி பெருங்கழுகின் இரண்டு சிறகுகள் அவளுக்குக் கொடுக்கப்பட்டது.’’ (வெளி 12:13,14)

இந்த உபத்திரவ காலமாகிய ‘ஒருங்கிணைந்த ரோம சாம்ராஜ்ஜியத்தின்’ காலம் முடிவடையும் தருணத்தில் தான், காண்ஸ்டாண்டைன் கி.பி 313 ல் கிறிஸ்தவத்தைத் தழுவி உபத்திரவங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தான். அதன் பின்னர் ரோம் 10 ராஜ்ஜியங்களாகப் உடைந்த காலமான கி.பி 476 வரை சபை பெரிதாக எந்த ராஜாங்க உபத்திரவங்களையும் சந்திக்கவில்லை. ஆனால் ஏராளமான போதகப் பிரிவினைகளும், பிஷப்புகளின் ஆதிக்கமும் சபையை பலவீனப்படுத்த ஆரம்பித்தன. இந்த காலக்கட்டத்தில் தான் கி.பி 538 முதல் ரோமின் பிஷப்புகளான ‘போப்புகளின்’ கையில் அரசாங்க அதிகாரமும், சபையின் மீதான அதிகாரமும் சென்றது.

தரைக்குத் தள்ளப்பட்ட வலுசர்ப்பம்

இந்த ஸ்திரீயையும் அவள் பிள்ளையையும் ‘பட்சிக்க/ மகா உபத்திரவம் மூலம் முற்றிலும் அழிக்க’ வலுசர்ப்பம் போராடிக்கொண்டிருந்த காலத்தின் முடிவில் தான் வானத்தில் ஒரு பெரிய யுத்தம் (ஆவிக்குரிய) நடைபெற ஆரம்பிக்கிறது.

அணி 1: மிகாவேலும் அவனது தூதர்களும்

அணி 2: வலுசர்ப்பமாகிய சாத்தானும் அவன் தூதர்களும்

இந்த முதல் ஆவிக்குரிய யுத்தத்தில் ‘வலுசர்ப்பமும் அதைச்சேர்ந்த தூதரும் யுத்தம்பண்ணியும் ஜெயங்கொள்ளவில்லை’. மேலும் இதன் முடிவில் வலுசர்ப்பமாகிய சாத்தான் பூமியில் தள்ளப்பட்டான். அதாவது இதுவரை ஆவிக்குரிய யுத்தமாக நடந்துகொண்டிருந்தது, இப்போது முதல் பூமியில் நடக்க ஆரம்பிக்கப் போகிறது.

‘‘வானத்தில் அவர்கள் இருந்த இடமும் காணப்படாமற்போயிற்று. உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச்சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள்.’’ (வெளி 12:8,9)

‘‘வலுசர்ப்பமானது தான் பூமியிலே தள்ளப்பட்டதை அறிந்து, அந்த ஆண்பிள்ளையைப்பெற்ற ஸ்திரீயைத் துன்பப்படுத்தினது’’ (வெளி 12:13)

  • ஒருங்கிணைந்த ரோம சாம்ராஜ்ஜியம்= வலுசர்ப்பத்தின் பிரதிநிதி= உபத்திரவ மற்றும் மகா உபத்திரவ காலம்= வானத்தில் நடந்த யுத்தத்தால் முடிவுக்கு வந்த ராஜ்ஜியம்= கி.பி 96 முதல் 476 வரை.

    ஒருங்கிணைந்த ரோம சாம்ராஜ்ஜியம் முழுவதுமே தீவிர விக்கிரக ஆராதனையைப் பின்பற்றி வந்த ராஜ்ஜியமாகும். அவர்கள் பெரும்பாலும் பாபேல் காலத்தில் ஆரம்பித்து, எகிப்தால் வழிபடப்பட்டு, பின்பு கிரேக்கர்களால் வழிபடப்பட்ட விக்கிரக ஆராதனை முறைகளையே பின்பற்றினர். இதன் மூலமாக ரோமர்கள் காலத்தில் தான் சாத்தான் தனது முழுபலத்தையும் பெற்றிருந்தான். அப்படிப்பட்ட சாத்தான் வானத்தில் நடந்த யுத்தத்தில் கீழே விழத்தள்ளப்பட்டான். இது பல நூற்றாண்டுகளாக பூமியை ஆண்ட ஒருங்கிணைந்த ரோமப்பேரரசு காண்ஸ்டாண்டைனால் கிறிஸ்தவத்தைத் தழுவிய பின்பு போப்புகளின் கையில் ராஜ்ஜியம் சென்ற காலக்கட்டத்தைக் குறிக்கும். இந்த பாபேல் வழிபாட்டு முறைகளான சூரிய வழிபாடு, தாய்-சேய் தெய்வ வழிபாடு ஆகியவைகளை விட்டுக்கொடுக்க சாத்தானிற்கு மனதில்லை. இப்படி கீழே விழத்தள்ளப்பட்ட சாத்தான் மீண்டும் தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்ட பூமியில் தெரிந்துகொண்ட ராஜ்ஜியம் தான் ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியம்; இது சபையாகவும் இருந்ததால் தான் ‘விசுவாச துரோகத்தில்’ ஈடுபடும் என்று பவுலால் முன்னுரைக்கப்பட்டது.

    • தாய்-சேய் வழிபாட்டுக்கு சாத்தான் ஆயத்தம் பண்ணிவைத்திருந்த ராஜ்ஜியம் – ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியம்.
    • அதற்குத்தடையாக இருந்தது – இயேசு மற்றும் அப்போஸ்தலர்கள் போதித்த அடிப்படையில் மட்டுமே ஆராதனை இருக்கவேண்டும் என்று உறுதியாக இருந்த விசுவாசக் கூட்டம்.
    படம் 33: ரோமன் கத்தோலிக்க சபையில் தாய்-சேய் வழிபாடு

அடுத்த உபத்திரவம்: 1260 ஆண்டுகள்

இப்படி பூமியில் விழத்தள்ளப்பட்ட சாத்தான், இப்போது மிச்சமிருக்கும் சபையை (ஸ்திரீயை) துன்புறுத்த ஆரம்பிக்கிறான். அதற்கு அவன் தெரிந்துகொண்ட ராஜ்ஜியம் தான் கத்தோலிக்க ரோமப்பேரரசு/ போப்பரசு/ சின்னக்கொம்பு. இன்னமும் போப்பரசர்களை உலக கிறிஸ்தவர்களின் தலைவராக நீங்கள் பார்த்தால் அந்த நம்பிக்கைக்கு யாரும் பொறுப்பல்ல. வஞ்சிக்கப்படாதபடி எச்சரிக்கையாயிருங்கள். சாத்தானும் ‘ஒளியின் தூதனுடைய வேடத்தை’ தரித்து தான் வஞ்சிக்க வருவான். நேரடியாக கறுத்த உருவத்தோடு, கூர் பற்களோடும் கொம்புகளோடும் அல்லது ஏவாளுக்கு வந்ததைப் போல பாம்பாகவும் வர மாட்டான். இந்த தந்திரவாதியாகிய வலுசர்ப்பம், கிறிஸ்தவத்தைத் தழுவிய கத்தோலிக்க ரோம சாம்ராஜ்ஜியத்திற்குள் மீண்டும் சிலை வழிபாட்டின் வழியாக உள்ளே நுழைந்து இன்றுவரை பல கோடி மக்களை நரகத்தின் பாதையில் நடத்திசெல்கிறான்.

பூமியில் பரிசுத்த சபையோடு யுத்தம் செய்து துன்புறுத்திய காலம்= கத்தோலிக்க ரோமப்பேரரசு = போப்பரசு = சின்னக்கொம்பு = கி.பி 538 1798 வரை = 1260 வருடங்கள்.

கொஞ்ச காலம் என்பது இத்தனைப் பெரியதா?

தானியேல் மற்றும் வெளிப்படுத்தலின் தீர்க்கதரிசனங்களில் பல இடங்களில் ‘கொஞ்ச காலம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கொஞ்சகாலத்தை தான் பலர் மூன்றரை வருடங்கள் என்று நம்புகின்றனர். ஏன்? இயேசு சிலுவையில் மரிப்பதற்கு சற்று முன் வரை அவரது சீடர்களுக்கே இந்தக் குழப்பம் இருந்தது.

‘‘அப்பொழுது அவருடைய சீஷரில் சிலர்: நான் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், கொஞ்சக்காலத்திலே என்னைக் காணாதிருப்பீர்கள் என்றும், மறுபடியும் கொஞ்சக்காலத்திலே என்னைக் காண்பீர்கள் என்றும் அவர் நம்முடனே சொல்லுகிறதின் கருத்தென்ன என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டதுமன்றி; கொஞ்சக்காலம் என்கிறாரே, இதென்ன? அவர் சொல்லுகிறது இன்னதென்று நமக்கு விளங்கவில்லையே என்றார்கள்.’’ (யோவான் 16:17,18)

இந்த கொஞ்சகாலம் என்பது, இயேசு சீடர்களுக்கு இதைச்சொன்ன அந்த நாள் முதல் அவரது இரண்டாம் வருகையில் வெளிப்படையாக வரப்போகும் காலம் மட்டும் உள்ள மிக நீண்ட இடைவெளியாகும். இதில் இயேசு சொன்ன கொஞ்சகாலம் என்பது அவர் சிலுவையில் மரித்து மூன்று நாட்கள் பூமியின் அடியில் இருந்த காலம் அல்ல. ‘நான் பிதாவிடத்திற்குப் போகிறபடியால்’ என்று பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பின்பு யாரும் காணாமல் இருந்த கொஞ்சகாலம் என்று தெளிவாக இயேசு கூறியுள்ளார். இதற்கு இடைப்பட்ட காலத்தில் ‘நீங்கள் துக்கப்பட வேண்டியிருக்கும், உபத்திரவம் அடைய நேரிடும்’ என்றும் அடுத்தடுத்த வசனங்களில் கூறியுள்ளார். இயேசு இப்படி சொன்னது அவர் சிலுவையில் மரித்து, மூன்று நாட்கள் கழித்து எழுந்துவந்த கொஞ்சகால இடைவெளி அல்ல. அந்த மூன்று நாட்களை ‘இப்பொழுதே வந்துவிட்டது’ என்று அவர் கூறிவிட்டார்.

‘‘இதோ, நீங்கள் சிதறுண்டு, அவனவன் தன்தன் இடத்துக்குப் போய், என்னைத் தனியே விட்டுவிடுங்காலம் (கெத்சமனே முதல் கொல்கொதா வரை) வரும்; அது இப்பொழுது வந்திருக்கிறது; என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார். ஆனாலும் நான் தனித்திரேன், பிதா என்னுடனேகூட இருக்கிறார்.’’(யோவான் 16:32,33)

மேலும் இயேசுவின் இரண்டாம் வருகை வர கொஞ்சகாலம் செல்லும்; அதுவரை அவர் வருவார் என்ற வாக்குத்தத்தம் நிறைவேறப் பொறுமையோடு காத்திருக்கவேண்டும் என்று எபிரேயர் மூலம் ஆவியானவர் சபைகளுக்கு வெளிப்படுத்தியுள்ளார். இதிலிருந்து இயேசுவின் இரண்டு வருகைகளுக்கு இடைப்பட்ட காலம் கூட இயேசுவிற்கு கொஞ்சகாலமாகத் தான் என்பது தெளிவாகின்றது.

‘‘நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது. வருகிறவர் இன்னுங் கொஞ்சக்காலத்தில் வருவார், தாமதம்பண்ணார்.’’ (எபிரேயர் 10: 36,37)

இந்த கொஞ்சகாலம் என்பது அந்திக்கிறிஸ்துவாகிய போப்புகளின் ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியத்தின் ஆளுகையில் பரிசுத்தவான்கள் துன்பப்பட வேண்டிய காலமாகும். இதை சின்னக்கொம்பைப் பற்றி தானியேல் சொன்ன கால இடைவெளி மூலமும் தெரிந்துகொள்ளலாம்.

‘‘நீண்ட ஆயுசுள்ளவர் வருமட்டாகவும், நியாயவிசாரிப்பு உன்னதமானவருடைய பரிசுத்தவான்களுக்குக் கொடுக்கப்பட்டு, பரிசுத்தவான்கள் ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும் காலம் வருமட்டாகவும், (காலம்+காலங்கள்+அரைக்காலம்=1260 வருடங்கள்) இந்தக் கொம்பு பரிசுத்தவான்களோடே யுத்தம்பண்ணி அவர்களை மேற்கொண்டது என்று கண்டேன்.’’ (தானியேல் 7:21,22)

இதை மீண்டும் ஏழாவது ராஜ்ஜியம் (கத்தோலிக்க) ஆளுகை செய்யும் நாட்களைப் பற்றி யோவானுக்கு கூறிய பகுதியிலும் இயேசு வெளிப்படுத்தியுள்ளார்.

‘‘அவர்கள் ஏழு ராஜாக்களாம்; இவர்களில் ஐந்துபேர் விழுந்தார்கள், ஒருவன் (ஆறாவது ரோம ராஜா) இருக்கிறான், மற்றவன் (ஏழாவது கத்தோலிக்க ராஜா) இன்னும் வரவில்லை; வரும்போது அவன் கொஞ்சக்காலம் (1260 வருடங்கள்) தரித்திருக்கவேண்டும்.’’ (வெளி 17:10)

எனவே கொஞ்சகாலம் என்பது கடைசிகாலமாகிய இயேசுவின் முதல் வருகைக்குப் பின்னும், முடிவுகாலமாகிய நாம் வாழும் கிருபையின் மற்றும் சுவிசேஷத்தின் காலத்திற்கும் இடைப்பட்ட நீண்ட காலமாகும். இதை எளிதில் புரியும்படி காலவரிசைகளை கீழே கொடுத்துள்ளேன்.

படம் 34: கடைசிக்காலம், கொஞ்சகாலம், முடிவுகாலம்-ஒப்பீடு

சாத்தானுக்கு இருந்த கொஞ்சகாலம்

‘‘ஆகையால் (சாத்தான் தாழத் தள்ளப்பட்டதால்) பரலோகங்களே! அவைகளில் வாசமாயிருக்கிறவர்களே! களிகூருங்கள். பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்துவரும் என்று சொல்லக்கேட்டேன்.’’ (வெளி 12:12)

சாத்தான் வானத்திலிருந்து தள்ளப்பட்டதால் பரலோகத்தில் வாசமாயிருந்தவர்கள் களிகூர்ந்தார்கள். ஆனால் தான் விழத்தள்ளப்பட்ட பூமியில் ‘தனக்கு கொஞ்சகாலம் மட்டும்’ (1260 வருடங்கள்) உண்டென்று அறிந்தபடியால் மிகுந்த கோபத்துடன் சபையைத் துன்பப்படுத்த இறங்கியதாக யோவானுக்கு சொல்லப்பட்ட குரல் கேட்டது. அவன் பூமியில் தன்னுடைய கோபத்தை செயல்படுத்த பயன்படுத்திய ராஜ்ஜியம் தான் ‘ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியம்/ போப்பரசர்கள்.

வனாந்திர வாசம்

இந்தக் காலக்கட்டத்திலிருந்து தான், அதுவரை உபத்திரவங்களை அனுபவித்து, கொஞ்சம் மீண்டு வந்த சபை ‘வனாந்திர வாசத்திற்குள்’ சென்றது. வனாந்திர வாசம் என்பது வறட்சியான, வசனம் கிடைக்காத பஞ்ச காலகட்டத்தைக் குறிக்கும். இப்படிப்பட்ட வனாந்திர வாழ்க்கையின் அனுபவங்களை தாவீதின் சங்கீதங்களில் ஏராளமாகக் காணலாம். எகிப்து என்னும் இருப்புக்காளவாயில் உபத்திரவப்பட்ட இஸ்ரவேல் சபையை கர்த்தர் மீட்டெடுத்து, அதன்பின்பு ‘வனாந்திர வழியாய்’ நடத்திச்சென்று தான் கானானுக்குள் அனுமதித்தார். அதுபோலவே ஒருங்கிணைந்த ரோமப்பேரரசால் மகா உபத்திரவங்களை அனுபவித்த சபை, மீண்டும் 1260 வருடங்கள் வனாந்திர வாசத்தை அனுபவிக்க வேண்டியிருந்தது. இந்த வனாந்திரத்தில் பரிபூரணப்படுத்தப்பட்ட சபையின் தியாகங்களால் தான் நாம் இன்று இயேசுவின் சுவிசேஷத்தை அறிந்துகொண்டு கானானுக்குள் செல்லும் பாக்கியத்தை 200 வருடங்களுக்கு முன்பு பெற்றோம்.

1260 வருடங்கள்

ஏற்கனவே பல முறை இந்த 1260 வருட தீர்க்கதரிசனங்களைப் பற்றி பார்த்துவிட்டோம். பரிசுத்த வேதத்தில் எட்டு முறை வரும் இந்த 1260 வருடங்களைக் குறித்த எல்லா தீர்க்கதரிசனங்களும், கத்தோலிக்க ரோமப்பேரரசும் அதன் தலைவர்களான போப்புகளும் (சின்னக்கொம்பு) ஆண்ட கி.பி 538 – 1798 வரையிலான காலகட்டத்தையே குறிக்கும்.

  • 31/2 வருடங்கள்=42 மாதங்கள்=1260 எபிரேய காலண்டர் நாட்கள்=1260 தீர்க்கதரிசன வருடங்கள்.

ஸ்திரீயை போஷித்த தேவன்

வேதபுத்தகத்தின் நகல்கள் யார் கையிலும் கிடைக்காதவண்ணம் கவனமாகப் பார்த்துக்கொண்டு ‘வசன பஞ்சத்தை’ ஏற்படுத்திய இந்த 1260 வருட காலகட்டத்திலும் கூட, இஸ்ரவேலரை வனாந்திரத்தில் மன்னாவினாலும், காடைகளாலும் போஷித்த தேவன், பரிசுத்த சபை மற்றும் வசனங்கள் முற்றிலும் அழிந்துபோகாதபடிக்கு, வசனங்களையும் பாதுகாத்து 15 ஆம் நூற்றாண்டிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறுமலர்ச்சி ஏற்பட செய்தார், இதனால் 1260 வருடங்களின் இறுதியான 19 ஆம் நூற்றாண்டில் எல்லோருடைய கைகளிலும் சத்திய வேதம் என்னும் ‘‘சிறுபுஸ்தகம்’’ கிடைத்தது (வெளி 10 ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள இந்த காரியங்களை ‘சிறுபுஸ்தகம்’ என்ற தனி அத்தியாயமாகப் பார்க்க உள்ளோம்).

‘‘இந்த ஸ்திரீயானவள் வனாந்தரத்திற்கு ஓடிப்போனாள்; அங்கே ஆயிரத்திருநூற்றறுபது நாளளவும் (வருடங்கள்) அவளைப் போஷிப்பதற்காக தேவனால் ஆயத்தமாக்கப்பட்ட இடம் அவளுக்கு உண்டாயிருந்தது.’’

‘‘ஸ்திரீயானவள் அந்தப் பாம்பின்முகத்திற்கு விலகி, ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமுமாகப் போஷிக்கப்படத்தக்கதாய் வனாந்தரத்திலுள்ள தன் இடத்திற்குப் பறந்துபோகும்படி பெருங்கழுகின் இரண்டு சிறகுகள் அவளுக்குக் கொடுக்கப்பட்டது.’’

இந்த ஸ்திரீ பூமியில் விழத்தள்ளப்பட்ட பாம்பாகிய வலுசர்ப்பத்திடமிருந்து தப்பிக்க தேவனால் தேவையான ஆயத்தங்கள் செய்யப்பட்டது. ஆங்காங்கே விசுவாசிகள் இரகசியமாக தங்கள் விசுவாசத்தைக் காத்துக்கொண்டனர். இவர்களில் பலர் ரோமன் கத்தோலிக்க சபையின் துரோகிகளாகக் கருதப்பட்டு (Heretics) பல உபத்திரவங்களுக்கு உள்ளாக்கப்பட்டனர். அதாவது இந்த 1260 வருடங்கள் முடிவில் சபை அழிந்துவிடாமல் தேவன் பாதுகாத்ததால் தான் இன்றுவரை நாம் அவருடைய வேதத்தை வாசித்து, அவரை ஆராதிக்க முடிகிறது. இல்லையென்றால் கிறிஸ்தவமும் பண்டைய காலங்களில் இருந்து, அழிந்துபோன ஏதோவொரு மார்க்கமாக மாறியிருக்கும். ஆனால் நம் தேவனின் திட்டங்கள் அநாதிகாலம் முதல் நித்திய காலமாக நிலைத்திருக்கும் ஒன்றாகும்.

மேலும், சாத்தானாகிய அந்திகிறிஸ்துவின் பட்டயத்திற்குத் தப்பினவர்களை இளைப்பாறச் செய்வதற்காகத் தான் சபையானது வனாந்திரத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டது. அவர்களால் தான் மீண்டும் சபை உயிர்ப்பெற்றது. இதைப்போலத்தான் பாபிலோனின் பட்டயத்திற்குத் தப்பின இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தரின் இளைப்பாறுதலைப் பெறுவதற்காகவே வனாந்திரவழியாய், உபத்திரவ வழியாய் நடத்தப்பட்டது.

‘‘பட்டயத்திற்குத் தப்பி, மீந்த ஜனம் வனாந்தரத்தில் இரக்கம் பெற்றது; இஸ்ரவேலுக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிடப்போகிறேன் என்று கர்த்தர்சொல்லுகிறார்’’ (எரேமியா 31:2)

சபையையும் பரிசுத்தவான்களையும் முற்றிலும் அழிக்க ரோமன் கத்தோலிக்க சாம்ராஜ்ஜியம் எடுத்த முயற்சிகளை ஏற்கனவே ‘சின்னக்கொம்பு’ அத்தியாயத்தில் வாசித்திருப்பீர்கள். இதன் தீவிரத்தன்மையை தெரிந்துகொள்ள, முடிந்தால் வலைதளங்களில் ஆதாரப்பூர்வ வரலாற்றுத் தகவல்களைத் தரும் ‘விக்கிபீடியா, பிரிட்டானிக்கா’ உட்பட பல தளங்களில் Catholic inquisition, catholic excommunication, Catholic crusades, dark ages of Christianity, medivel church persecution என்ற தலைப்புகளில் வாசித்துப்பாருங்கள். சபையின் வரலாறு தெரியாமல் வழிவிலகிவிட வேண்டாம்.

கழுகின் சிறகுகள்

கழுகின் சிறகுகள் என்பது ‘கஷ்ட காலத்தில் கர்த்தரால் கொடுக்கப்படும் பாதுகாப்பு’ என்று அர்த்தப்படும்.

‘‘பாழான நிலத்திலும் ஊளையிடுதலுள்ள வெறுமையான அவாந்தர வெளியிலும் அவர் அவனைக் (இஸ்ரவேலை) கண்டுபிடித்தார், அவனை நடத்தினார், அவனை உணர்த்தினார், அவனைத் தமது கண்மணியைப்போலக் காத்தருளினார். கழுகு தன் கூட்டைக் கலைத்து, தன் குஞ்சுகளின்மேல் அசைவாடி, தன் செட்டைகளை விரித்து, அவைகளை எடுத்து, அவைகளைத் தன் செட்டைகளின்மேல் சுமந்துகொண்டுபோகிறதுபோல, கர்த்தர் ஒருவரே அவனை வழி நடத்தினார்; அந்நிய தேவன் அவரோடே இருந்ததில்லை.’’ (உபாகமாம் 32:10-12)

‘‘நான் எகிப்தியருக்குச் செய்ததையும், நான் உங்களைக் கழுகுகளுடைய செட்டைகளின்மேல் (வனாந்திரத்தில்) சுமந்து, உங்களை என்னண்டையிலே சேர்த்துக்கொண்டதையும், நீங்கள் கண்டிருக்கிறீர்கள்.’’ (யாத்திராகமம் 19:4)

வனாந்திரத்தில் சபையை போஷிப்பதற்கு ஏற்பாடு செய்த கர்த்தர், சபையைக் கழுகு தன் குஞ்சுகளை சிறகுகளில் தூக்கிசெல்வதுபோல சபை முழுவதும் அழியாமல் பாதுகாத்தார். ஐரோப்பா முழுவதும் பெரும்பாலான ராஜாக்கள் போப்பின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிபவர்களாகத் தான் இருந்தார்கள். ஆனால் சில காலங்களுக்குப் பின்பு இங்கிலாந்து அவரது கட்டளைகளுக்குக் கீழ்படிய மறுத்தது; சுவிசேஷத்தை ஏற்றுக்கொண்டது. மார்டின் லூதரின் காலத்தில் ஜெர்மனியின் ‘சாக்ஸ்சோனி’ பகுதியின் இளவரசராக இருந்த ‘மூன்றாம் பிரெடரிக்’ என்பவர் தான், லூதரை போப்புகளின் படைகள் கொன்றுவிடாதவாறு ஒரு வருடம் இரகசிய இடத்தில் வைத்துப் பாதுகாத்து வந்தார். இந்த ஒரு வருடத்திற்குள் லூத்தர் புதிய ஏற்பாட்டை ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்துவிட்டார். இதுபோன்ற கழுகின் செட்டைகளினால் தான், பல தலைமுறைகள் தாண்டியும் ஒரு விசுவாசக் கூட்டம் நிலைத்திருந்தது.

வெள்ளத்தை ஊற்றிய வலுசர்ப்பம்

எவ்வளவு தான் நாம் தேவனுக்குள் பாதுகாப்பு பெற்றிருந்தாலும், நம்மை விடாமல் துரத்துவது தான் சத்துருவின் வேலை என்பது நமக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும் ‘வெள்ளம்போல சத்துரு வரும்போது, கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாகக் கொடியேற்றுவார்’ என்பது தான் எத்தனை உண்மை? கத்தோலிக்க ரோமப்பேரரசு, மணவாட்டி சபையைத் துன்புறுத்திய காலம் முடிவடையும் தருணத்தில் தான் ‘மார்டின் லூதர்’ கத்தோலிக்க சபையின் ‘கிறிஸ்து விரோத’ செயல்களைக் கண்டித்து துவக்கிய புராட்டஸ்டண்ட் இயக்கம் (கி.பி 1517), ஐரோப்பாவில் மிகப்பெரிய ஆவிக்குரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. நிலைமை கைமீறி செல்வதைக் கண்ட ரோமன் கத்தோலிக்க சபையும், எதிர் சீர்திருத்த இயக்கத்தை (Counter Reformation) கி.பி 1545 ல் தோற்றுவித்தது. இதே சமயத்தில் லூதரைப் பின்பற்றிய, ஜெர்மனி முதல் பல ஐரோப்பிய நாடுகள், ரோமன் கத்தோலிக்க சபையின் அரசியல் மற்றும் மதத் தலையீடுகளிலிருந்து வெளியேறும் முயற்சியை ஆரம்பித்ததால் சிறுசிறு யுத்தங்கள் ஆரம்பித்தது. இந்த யுத்தம் கி.பி 1618-1648 வரை மிகப்பெரிய ‘முப்பதாண்டுகள் தொடர் யுத்தமாக’ (Thirty years war) மாறியதால் அச்சமயத்தில் ஜெர்மனியின் மக்கள் தொகையில் மட்டும் மூன்றில் ஒரு பங்கு மக்கள் மடிந்துபோனார்கள்.

‘‘அப்பொழுது அந்த ஸ்திரீயை வெள்ளங்கொண்டுபோகும்படிக்கு பாம்பானது தன் வாயிலிருந்து ஒரு நதிபோன்ற வெள்ளத்தை அவளுக்குப் பின்னாக ஊற்றிவிட்டது. பூமியானது ஸ்திரீக்கு உதவியாகத் தன் வாயைத் திறந்து, வலுசர்ப்பம் தன் வாயிலிருந்து ஊற்றின வெள்ளத்தை விழுங்கினது.’’ (வெளி 12:15,16)

  • பாம்பின் வாயிலிருந்து வந்த வெள்ளம் = தொடர் யுத்தங்கள்

தீர்க்கதரிசன புத்தகங்களில் பல இடங்களில் பெரும் யுத்தங்கள் பெருவெள்ளத்திற்கு ஒப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது. உதாரணம்:

‘‘இதோ, திராணியும் வல்லமையுமுடைய ஒருவன் (நேபுகாத்நேச்சார்) ஆண்டவரிடத்தில் இருக்கிறான்; அவன் கல்மழைப்போலவும், சங்காரப் புசல்போலவும், புரண்டுவருகிற பெருவெள்ளம்போலவும் வந்து, கையினாலே அதைத் தரையில் தள்ளிவிடுவான்’’ (ஏசாயா 28:2)

இதன் பின்னரும் சுவிசேஷத்தீ அணைந்துவிடவில்லை. இந்த பெருவெள்ளமாகிய யுத்தங்கள் கி.பி 1648 ல் ‘வெஸ்ட்பாலியா சமாதான உடன்படிக்கை’ (Peace of westphalia) மூலமாக முடிவுக்கு வந்தது. இதன்படி ஐரோப்பிய கண்டத்தில் சுமார் 1000 வருடங்களுக்குப் பிறகு ரோமன் கத்தோலிக்க சபைகள் அல்லாத சபைகளான லூத்தரன் புராட்டஸ்டண்ட் சபை (Lutheranism), ஜான் கால்வினின் புராட்டஸ்டண்ட் சபை (Calvinism) போன்ற சீர்திருத்த சபைகளை ஏற்றுக்கொள்ளவேண்டிய கட்டாயம் கத்தோலிக்க ரோமப்பேரரசுக்கு ஏற்பட்டது. இப்படி பூமியானது ஸ்திரீக்கு (சபைக்கு) உதவியாக தன் வாயைத் திறந்து வலுசர்ப்பம் ஊற்றிய வெள்ளத்தை (யுத்த அழிவை) விழுங்கியது.

இன்றுவரைத் தொடரும் யுத்தம்

மேலே சொன்ன வலுசர்ப்பமாகிய சாத்தான், முதலில் மிகாவேலோடும், பின்பு பூமியின் பரிசுத்தவான்களின் சபையோடும் செய்த யுத்தமானது, 1260 வருடங்களின் முடிவாகிய கி.பி 1798 ல் ரோமன் கத்தோலிக்க சாம்ராஜ்ஜியம் முழுவதுமாக வீழ்ச்சியடைந்ததுடன் நிற்கவில்லை.

‘‘அப்பொழுது வலுசர்ப்பமானது (தன்னிடமிருந்து தப்பிச்சென்ற) ஸ்திரீயின்மேல் கோபங்கொண்டு, தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும், இயேசுகிறிஸ்துவைக்குறித்துச் சாட்சியை உடையவர்களாகிய அவளுடைய சந்ததியான மற்றவர்களுடனே யுத்தம்பண்ணப்போயிற்று.’’(வெளி 12:17)

  • முதல்ஆண்பிள்ளை – ஆதிசபை
  • ஸ்திரீயின்மற்ற சந்ததி – நவீனகால சபை

இந்த வலுசர்ப்பமாகிய சாத்தான் ஆயிரம் வருட அரசாட்சியின் ஆரம்பத்தில் பாதாளத்தில் அடைக்கப்படுவான்.

” ஒரு தூதன் பாதாளத்தின் திறவுகோலையும் பெரிய சங்கிலியையும் தன்கையிலே பிடித்துக்கொண்டு வானத்திலிருந்திறங்கிவரக்கண்டேன். பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவுங் கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும்வரைக்கும் அது ஜனங்களை மோசம்போக்காதபடிக்கு அதைப் பாதாளத்திலே தள்ளியடைத்து, அதின்மேல் முத்திரைபோட்டான். “
(வெளிப்படுத்தினத விசேஷம் 20:1,2)

இது தெரிந்து தீராத கோபத்தோடு இருந்த சாத்தான், மறுபடியும் ‘இயேசுவை உண்மையாய் பின்பற்றும்’ விசுவாசிகளோடு தனது யுத்தத்தை இன்றுவரை தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறான். இனி அவன் பூமியின் ராஜ்ஜியங்களை எப்படி பயன்படுத்தினான் என்பதைத் தான் அடுத்த அத்தியாயத்தில் பார்க்க இருக்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *