
- August 23, 2023
- admin
- 0
வெளிப்படுத்தின விசேஷம்: அறிமுகம்
இதுவரை நீங்கள் வாசித்த அத்தியாயங்கள் எல்லாமே, வெளிப்படுத்தின விசேஷத்தின் இரகசியங்களைப் புரிந்துகொள்வதற்கான அடிப்படைப் பாடங்களாகும். அவற்றின் மூலமாக சாம்ராஜ்ஜியங்களைப் பற்றிய பல இரகசியங்களை நீங்கள் புரிந்துகொண்டிருப்பீர்கள் என்று நான் விசுவாசிக்கிறேன்.
தானியேல் இயேசுவை தரிசித்தாரா?
வெளிப்படுத்திய விசேஷம் இயேசுவால் அவரது மார்பில் சாய்ந்திருந்த சீடனாகிய யோவானுக்கு கொடுக்கப்பட்டது என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் தானியேலுக்கு ராஜ்ஜியங்களைக் குறித்த இரகசியங்களை வெளிப்படுத்தியது யார்? என்ற கேள்விக்கு விடை தெரிந்தால் தான் இந்த இரண்டு புத்தகங்களிடையே உள்ள ஒற்றுமைகள், தொடர்புகள் மட்டுமன்றி, அவைகள் யாரிடமிருந்து பெறப்பட்டவைகள் என்ற உண்மையும் உங்களுக்குப் புரியவரும்.
அட்டவணை 14: தானியேலுக்கு வெளிப்படுத்தப்பட்ட ராஜ்ஜியங்களின் இரகசியங்கள்

தானியேலுக்கு ராஜ்ஜியங்களைக் குறித்த காரியங்கள் சொப்பனங்கள், தரிசனங்கள் மூலமாக வெளிப்படுத்தப்பட்டது. அதற்கான விளக்கங்கள் தூதர்கள் மூலம் கொடுக்கப்பட்டது. ஆனால் இரண்டு இடங்களில் ‘மனுஷக்குமாரனுக்கு ஒப்பானஒரு புருஷன்’ நிற்பதை தானியேல் பார்க்கிறார். அந்த நபர் அதிகம் பேசவில்லை; தரிசனம் மட்டும் கொடுக்கிறார். அவர் இயேசுகிறிஸ்து தான் என்பதற்கு சந்தேகமே இல்லாத ஆதாரங்களை ஆவியானவரின் உதவியோடு நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். இதையும் வேத வசனங்களின் அடிப்படையிலேயே பார்ப்போம். வெளிப்படுத்தின விசேஷத்திலே முதல் அதிகாரத்திலேயே யோவானுக்கு இயேசு மகிமையாகக் காட்சியளித்தார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதில் இயேசுகிறிஸ்துவைப் பற்றி யோவான் விவரித்த வர்ணனைகளையும், தானியேல் பார்த்த மனுஷகுமாரனின் வர்ணனைகளையும் நாம் ஒப்பிட்டுப் பார்க்க இருக்கிறோம்.
அட்டவணை 15: தானியேல் மற்றும் யோவானுக்கு தரிசனமான இயேசு
வ.எ
தானியேல் 10&12 ஆம் அதிகாரம்
வெளி 1&4 ஆம் அதிகாரம்
1
சணல் வஸ்திரந்தரித்து, தமது அரையில் ஊப்பாசின் தங்கக்கச்சையைக் கட்டிக்கொண்டிருக்கிற ஒரு புருஷனைக் கண்டேன். (10:5)
அப்பொழுது சணல்வஸ்திரம் தரித்தவரும் ஆற்றின் தண்ணீர்களின்மேல் நிற்கிறவருமாகிய புருஷன் தம்முடைய வலதுகரத்தையும் தம்முடைய இடதுகரத்தையும் வானத்துக்கு நேராக ஏறெடுத்து (12:7)
அந்த ஏழு குத்துவிளக்குகளின் மத்தியிலே நிலையங்கி தரித்து, மார்பருகே பொற்கச்சை கட்டியிருந்த மனுஷகுமாரனுக் கொப்பானவரையும் கண்டேன். (1:13)
2
அவருடைய சரீரம் படிகப்பச்சையைப் போலவும், அவருடைய முகம் மின்னலின் பிரகாசத்தைப் போலவும், அவருடைய கண்கள் எரிகிற தீபங்களைப்போலவும், அவருடைய புயங்களும் அவருடைய கால்களும் துலக்கப்பட்ட வெண்கல நிறத்தைப்போலவும்,
வீற்றிருந்தவர், பார்வைக்கு வச்சிரக்கல்லுக்கும் பதுமராகத்துக்கும் ஒப்பாயிருந்தார்; அந்தச் சிங்காசனத்தைச்சுற்றி ஒரு வானவில்லிருந்தது; அதுபார்வைக்கு மரகதம்போல தோன்றிற்று. (4:3)
அவருடைய சிரசும் மயிரும் வெண்பஞ்சைப் போலவும் உறைந்த மழையைப்போலவும் வெண்மையாயிருந்தது; அவருடைய கண்கள் அக்கினி ஜுவாலையைப் போலிருந்தது; அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம் போலிருந்தது;
அவருடைய முகம் வல்லமையாய்ப் பிரகாசிக்கிற சூரியனைப் போலிருந்தது. (1:14,15,16)
3
அவருடைய வார்த்தைகளின் சத்தம் ஜனக்கூட்டத்தின் ஆரவாரத்தைப் போலவும் இருந்தது. (10:6)
அப்பொழுது எனக்குப் பின்னாலே எக்காளசத்தம்போன்ற பெரிதான ஒரு சத்தத்தைக் கேட்டேன். (1:10)
அவருடைய சத்தம் பெருவெள்ளத்து இரைச்சலைப் போலிருந்தது. (1:15)
4
நான் தனித்துவிடப்பட்டு அந்தப் பெரிய தரிசனத்தைக் கண்டேன்; என் பெலனெல்லாம் போயிற்று; என் உருவம் மாறி வாடிப்போயிற்று; திடனற்றுப்போனேன். அவருடைய வார்த்தைகளின் சத்தத்தைக் கேட்டேன்; அவருடைய வார்த்தைகளின் சத்தத்தை நான் கேட்கும்போது, நான் முகங்கவிழ்ந்து, நித்திரை போகிறவனாய்த் தரையிலே முகங்குப்புற விழுந்துகிடந்தேன். (10:8,9)
நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; (1:17)
5
இப்போதும் கடைசிநாட்களில் உன் ஜனங்களுக்குச் சம்பவிப்பதை உனக்குத் தெரியப் பண்ணும்படிக்கு வந்தேன்; இந்தத் தரிசனம் நிறைவேற இன்னும் நாள் செல்லும் (தூதன்) என்றான். (10:14)
நீ கண்டவைகளையும், இருக்கிறவைகளையும், இவைகளுக்குப்பின்பு (கடைசிகாலம்) சம்பவிப்பவைகளையும் எழுது; (1:19)
வெளிப்படுத்தின விசேஷம் தானியேலின் தொடர்ச்சியா?
இப்போது தானியேல் தரிசனத்தில் கண்டது இயேசுகிறிஸ்து என்பது உங்களுக்குத் தெளிவாகப் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். இயேசு உலகில் வந்து சிலுவை மரணத்தினால் மகிமைப்படும் முன்பு தானியேலுக்கு சணல்வஸ்திரம் தரித்தவராகவும், மகிமையில் ஏறெடுத்துக்கொள்ளப்பட்ட பின்பு யோவானுக்கு நிலையங்கி தரித்து, ஏழு சபைகளின் நடுவில் (குத்துவிளக்குகள்) நிற்பவராகவும் காட்சியளித்தார். இயேசுகிறிஸ்து ஏதோ 2000 வருடங்களுக்கு முன்பு தான் பூமியில் தோன்றி மறைந்தவர் அல்ல. இதைத்தான் யோவானுக்கு பின்வருமாறு கூறினார்.
‘‘அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல்வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்; மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்;’’ (வெளி 1:17,18)
இரண்டுபேருக்குமே தரிசனத்தில் வெளிப்பட்டதன் நோக்கம், கடைசிகாலங்களைப் பற்றிய இரகசியங்களை சபைகளுக்கு வெளிப்படுத்துவதற்காகத் தான் என்பதும், தானியேல் தீர்க்கதரிசன புத்தகத்தின் இரண்டாவது பாகம் அல்லது தொடர்ச்சி தான் வெளிப்படுத்தின விசேஷம் என்பதும் இதிலிருந்து நமக்கு நன்றாகப் புலப்படும்.
‘இனிமேல் சம்பவிக்கப்போகிறது என்ன?’ என்ற கேள்வியோடு படுக்கைக்குச் சென்ற நேபுகாத்நேச்சாருக்கு சிலை தரிசனம் மூலமாக அவரது காலத்திலிருந்து இயேசுவின் இரண்டாம் வருகை வரை பூமியில் எழும்பி அழியும் ராஜ்ஜியங்களை தேவனால் காண்பிக்க முடியும் என்பதை நம்புகிறோம். அப்படியானால் ‘சீக்கிரத்தில் சம்பவிக்கவேண்டியவைகள்’ என்று யோவானுக்கு இயேசுவால் வெளிப்படுத்தப்பட்ட தரிசனங்களின் நிறைவேறுதல் இன்னும் ஆரம்பிக்கக்கூட இல்லை என்பதை எப்படி நம்ப முடியும்? ஆனால் நம் சபைகள் அதை ஆழமாக நம்புகின்றன. யோவானுக்கு வெளிப்படுத்தப்பட்ட காரியங்கள் அன்றிலிருந்து இன்றுவரை நடந்துகொண்டே இருக்கின்றன, தானியேலில் சொல்லப்பட்ட தரிசனங்களைப்போலவே வெளிப்படுத்தலின் தரிசனங்களும் தொடர் நிகழ்வுகள் என்பது தான் இந்தப் புத்தகத்தின் மூலம் நான் உங்களுக்கு சொல்லும் செய்தி.
தானியேலின் காலமான கி.மு 6 ஆம் நூற்றாண்டிலிருந்து இன்றுவரை உள்ள காலங்களில் எழும்பி அழிந்த ராஜ்ஜியங்களைப் பற்றி தானியேலுக்கும், யோவான் பத்மு தீவிலிருந்து எழுதிய கி.பி 96 க்குப் பின் இன்றுவரை வரும் ராஜ்ஜியங்களின் எழுச்சி மற்றும் வீழ்ச்சிகளைப் பற்றி யோவானுக்கும் இயேசு வெளிப்படுத்தியுள்ளார். தானியேலுக்கு சொல்லும்போது ஒவ்வொரு ராஜ்ஜியமும் அதற்கு அடுத்த ராஜ்ஜியத்தினாலே அழிக்கப்படும் என்று வெளிப்படுத்தப்பட்டது. முக்கியமாக, இயேசு பூமிக்கு வரும்போது உலக சாம்ராஜ்ஜியமாக இருந்த ரோம சாம்ராஜ்ஜியமும் அதன் வழித்தோன்றல்களான ரோமன் கத்தோலிக்க சாம்ராஜ்ஜியமும் தான் உலகின் கடைசி ராஜ்ஜியங்கள் என்பதையும், அதை அழித்து நிலையான ராஜ்ஜியத்தை இயேசுவே ஸ்தாபிப்பார் என்பதை தானியேலுக்கு கர்த்தர் வெளிப்படுத்தினார்.
இந்த ரோம சாம்ராஜ்ஜியம் எத்தனை வருடங்கள் இருக்கும், எப்படியெல்லாம் பரிசுத்தவான்களைத் துன்பப்படுத்தும் என்ற காரியங்களையும், அது எவ்வாறு அழிக்கப்படும் என்ற அழிவின் சம்பவங்களையும் தான் இயேசு யோவானுக்கு வெளிப்படுத்தினார். அவைகள் தான் முத்திரைகள் உடைக்கப்படும்போது, எக்காளங்கள் ஊதப்படும்போது, வாதைகளால் நிறைந்த கலசங்கள் கொட்டப்படுபோது பூமியில் (ரோம சாம்ராஜ்ஜியத்தின் ஐரோப்பிய கண்டங்களில்) ஏற்படும் உபத்திரவங்கள் மற்றும் அழிவின் காரியங்களாக சங்கேத மொழியில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
பெரிதாகிக்கொண்டே போகும் தரிசனங்கள் (Zoom in effect of visions)
தானியேலில் ஆரம்பித்து, வெளிப்படுத்தலின் கடைசி வரை ஆண்டவர் ஒரு வித்தியாசமான அணுகுமுறையோடு ராஜ்ஜியங்களைப் பற்றி வெளிப்படுத்தியிருக்கிறார். ஒரு நாவல் எவ்வாறு மெதுவாக, மேலோட்டமாக ஆரம்பித்து பின்பு கிளைமாக்ஸ் நெருங்கும்போது விறுவிறுப்பாகவும், ஆழமாகவும், விலாவாரியாகவும் செல்லுமோ அதைப்போலவே வெளிப்படுத்தலின் கடைசி வரைத் தொடர்கிறது. இன்னும் தெளிவாக ஒரு எடுத்துக்காட்டைக் கொண்டு விளக்குகிறேன். நீங்கள் உங்கள் மொபைல்போனில் பல குடும்ப நபர்களை ஒரு குரூப் போட்டோ எடுப்பதாக வைத்துக்கொள்வோம். அதை மீண்டும் காலரியில் சென்று பார்க்கும்போது, முதலில் மொத்த குடும்ப நபர்களையும் ஒரே பார்வையில் பார்ப்பீர்கள் அல்லவா; அதைப் போலத்தான் தானியேலில் ஆரம்ப தரினசங்கள் ராஜ்ஜியங்களைப் பற்றிய ஒரு கழுகுப்பார்வை கண்ணோட்டத்தைக் கொடுக்கிறது.
அடுத்து நீங்கள் ஒரு குறிப்பிட்ட தனிக் குடும்பத்தை மட்டும் பார்க்க எவ்வாறு போட்டோவைப் பெரிதாக்க Zoom செய்து அவர்களை கொஞ்சம் விரிவாகப் பார்ப்பீர்களோ, அதைப் போலத்தான் தானியேலின் கடைசி சில தரிசனங்கள், குறிப்பிட்ட சில ராஜ்ஜியங்களையும், சில ராஜாக்களையும் இன்னும் கொஞ்சம் விரிவாகச் சொல்கிறது. அதே போட்டோவில் நீங்கள் கடைசியாகப் பார்த்த தனிக்குடும்பத்தில் ஒரு நபரை மட்டும் இன்னும் நெருக்கமாக பார்க்க என்ன செய்வீர்கள்? இன்னும் Zoom செய்வீர்கள் அல்லவா? இதைத்தான் யோவான் அவரது காலத்தில் இருந்த ரோமப்பேரரசு மற்றும் அவருக்குப் பின் வந்த கத்தோலிக்க ரோமப்பேரரசாகிய சின்னக்கொம்பு, அதனைத் தொடர்ந்து வந்த வாடிகன் அரசு மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு, கடைசியில் எல்லா ராஜ்ஜியங்களையும் அழித்து வெளிப்பட்ட இயேசு என்று Zoom செய்யப்பட்ட நுணுக்கமான காரியங்களைத் தரிசனத்தில் பார்க்கிறார்.
அட்டவணை 16: விரிவாகிக்கொண்டே போகும் தரிசனம்
அதிகாரம்
தரிசனத்தின் வகை
எந்த சம்பவங்கள்/ராஜ்ஜியங்களைக் குறிக்கும்
தானி 2
சிலை
பாபிலோன் முதல் ரோம் வரை ராஜ்ஜியங்களைக் குறித்தும்,
பின்பு ரோம் எவ்வாறு அழிக்கப்பட்டு இயேசுவின் ராஜ்ஜியம் ஸ்தாபிக்கப்படும் என்பதை மேலோட்டமாக விளக்குவது
தானி 7
மிருகங்கள்
மேலே சொன்ன ராஜ்ஜியங்களை இன்னும் கொஞ்சம் விரிவாக சொல்லிவிட்டு, கத்தோலிக்க ரோம ராஜ்ஜியமான சின்னக்கொம்பைப் பற்றியும், இயேசுவின் அழிவில்லாத ராஜ்ஜியம் மற்றும் நியாயசங்கம் பற்றியும் விரிவாகக் கூறுகிறது.
தானி 8
ஆட்டுக்கடா-வெள்ளாட்டுக் கடா
மேதிய- பெர்சிய ராஜ்ஜியம் கிரேக்க ராஜ்ஜியத்தால் வீழ்த்தப்பட்ட சம்பவம். அதிலும் கிரேக்க சாம்ராஜ்ஜியத்தில் வந்த ஆண்டியோகஸ் எபிபேனஸ்-4 என்ற ராஜாவின் ‘அந்திகிறிஸ்துவை’ ஒத்த செயல்களை இன்னும் விரிவாகக் கூறுகிறது.
தானி 9
70 வாரங்கள்
ஜனங்களின் மீறிதலைப் போக்க மேசியா ‘ரோம ராஜ்ஜியத்தின்’ காலத்தில் வெளிப்பட்டு, அவர்களால் கொல்லப்பட்டு, அதன்பின்பு அவர்களால் கி.பி 70ல் இஸ்ரவேல் தேசம் அழிக்கப்படுவதைக் குறித்த இன்னும் அதிக விவரங்கள்
தானி 11&12
வடதிசை-தென்திசை ராஜாக்கள்
கிரேக்க ராஜ்ஜியத்திலிருந்து பிரிந்த செலுக்கிய மற்றும் எகிப்தின் தாலமி வம்ச ராஜாக்களுக்கு இடையிலான சண்டைகள், மற்றும் ஆண்டியோகஸ் எபிபேனஸ்-4 ஐப் பற்றிய இன்னும் நுணுக்கமான தகவல்கள், பின்பு அதைத் தொடர்ந்து வந்த அந்திகிறிஸ்துவாகிய போப்புகள், அதனைத் தொடர்ந்து முடிவுகால யுத்தங்களைப் பற்றிய சம்பவங்கள்
வெளி 2&3
7 சபைகளுக்கு கடிதம்
முதல்-மூன்றாம் நூற்றாண்டு சபைகள் பற்றிய தகவல்கள்
வெளி 13 & 17
மிருகங்கள், மிருகத்தின் மீது ஸ்திரீ
ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியமான ‘பாப்பஸி’ (papacy) ஐப் பற்றி மிக நுணுக்கமான தகவல்கள், அதன் அழிவு மற்றும் அதைத்தொடர்ந்து வரும் வாடிகன், எட்டாவதானவனும் அவ்வேழிலிருந்து தோன்றுகிறவனுமாக ஐரோப்பிய யூனியன்
வெளி 6&7
முத்திரைகள் பற்றிய தரிசனம்
முதல் 6 முத்திரகள் உடைக்கப்படும்போது
பாகாலைப் பின்பற்றிய ஒருங்கிணைந்த ரோமப் பேரரசின்மீது விதிக்கப்பட்ட தீர்ப்புகளால் அந்த ராஜ்ஜியத்திற்கு ஏற்பட்ட அழிவுகள் (கி.பி2-4 நூற்றாண்டுகள்)
வெளி 8&9
7 ஆம் முத்திரை உடைக்கப் படும்போது 7 எக்காளங்கள் கொடுக்கப் பட்டது
6 எக்காளங்கள் ஊதப்படும்போது அப்போது இருந்த ‘ரோம சாம்ராஜ்ஜியத்தின்’ ஆட்சி மேல் விதிக்கப்பட்ட தீர்ப்புகளால் அந்த ராஜ்ஜியத்திற்கு ஏற்பட்ட அழிவுகள் (5 ஆம் நூற்றாண்டு முதல் 17 ஆம் நூற்றாண்டு வரை)
வெளி 11, 15 & 16
7 ஆம் எக்காளம் ஊதப்பட்ட பின்னர் கடைசி அழிவிற்கான 7 வாதைகள் நிறைந்த கலசம் ஊற்றப்பட்டது
6 கலசங்கள் பூமியில் முதல் மற்றும் இரண்டாம் மிருகம்(ரோமன் கத்தோலிக்க & வாடிகன்) மீது ஊற்றப்பட்டபோது அந்த ராஜ்ஜியத்திற்கு ஏற்பட்ட அழிவுகள் (18 ஆம் நூற்றாண்டின் இறுதி முதல் முதலாம் உலகப்போர் முடிந்த 1920 ஆம் வருட காலம் வரை)
7 ஆவது கலசம் 1920 க்கு பின் ஆரம்பித்து இன்றுவரை தொடர்கிறது. இதன் முடிவுகாலத்தில் இயேசு வருவார்.
வெளி 19-22
இயேசுவை ராஜாதி ராஜாவாக கர்த்தாதி கர்த்தாவாக வெளிப் படுத்தியது
கடைசி யுத்தங்கள், அந்திகிறிஸ்து, பிசாசு மற்றும் கள்ளதீர்க்கதரிசியின் அழிவு, வெள்ளை சிங்காசன தீர்ப்பு, புதிய எருசலேம் மற்றும் பரலோகம் பற்றிய அதிக விவரங்கள்
சுருக்கமாக சொல்லப்போனால், உலக ராஜ்ஜியங்களைப் பெரிய குடும்ப போட்டோவாக எடுத்து, ஒவ்வொரு ராஜ்ஜியங்களான தனித்தனிக் குடும்பங்களாக ‘Zoom’ செய்து பார்த்து, கடைசி ராஜ்ஜியமான இயேசுவின் அழிவில்லா ராஜ்ஜியத்தை மட்டும் ‘Crop’ செய்து நம் மனதில் ‘Wall paper or profile photo’ வாக வைத்துக்கொள்ள உதவுபவை தான் இந்த தரிசனங்கள். வெளிப்படுத்தின விசேசத்திற்கும், தானியேலுக்கும் உள்ள இந்த தொடர்புகளை மனதில் வைத்துக்கொண்டே, இனி அடுத்துவரும் காரியங்களை வாசிக்கும்படி உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

ஏழு சபைகளின் இரகசியங்கள்
வெளிப்படுத்திய தீர்க்கதரிசனத்தின் முதல் மூன்று அதிகாரங்கள் யோவான் உயிரோடு இருந்த காலகட்டத்திலிருந்த ஏழு சபைகளுக்கு இயேசுவால் நேரடியாக கொடுக்கப்பட்ட செய்தியாகும். ஆதி சபையானது எருசலேமுக்கு வெளியே முதன் முதலில் ‘ஆசியா மைனர்’ பகுதிகளில் தான் நிறுவப்பட்டு, அப்போஸ்தலர்களால் வளர்க்கப்பட்டது. இது இன்றைய துருக்கி, கிரீஸ், இஸ்ரவேல், லெபனான், சிரியாவின் சில பகுதிகள் மற்றும் சில தீவுகளையும் உள்ளடக்கியதாகும்.
‘‘நீ கண்டவைகளையும், இருக்கிறவைகளையும், இவைகளுக்குப்பின்பு சம்பவிப்பவைகளையும் எழுது;’’ (வெளி 1:19)
‘‘அது நான் அல்பாவும் ஓமெகாவும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். நீ காண்கிறதை ஒரு புஸ்தகத்தில் எழுதி, ஆசியாவிலிருக்கிற எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா என்னும் பட்டணங்களிலுள்ள ஏழு சபைகளுக்கும் அனுப்பு என்று விளம்பினது.’’ (வெளி 1:11)
ஆதிசபைகளில் அப்போதைக்கு இருந்த குறை மற்றும் நிறைகள், அவை இரண்டாம் நூற்றாண்டிலிருந்து படவேண்டியப் பாடுகள், உபத்திரவங்கள், அந்த உபத்திரவங்களில் நிலைத்துநின்று ‘ஜெயங்கொள்கிறவர்களுக்கு’ கிடைக்கும் பரிசுகளைப் பற்றியும் தான் இரண்டாம் மற்றும் மூன்றாம் அதிகாரங்கள் கூறுகின்றன. இதிலிருந்து உபத்திரகாலம் என்பது அப்பொழுதே ஆரம்பித்துவிட்டது என்பது தெளிவாகின்றது. நிறையபேர் இந்த சபைகளுக்கு சொல்லப்பட்டது ஆவிக்குரிய அர்த்தங்கள் மட்டுமே உடையது; இரகசிய வருகையின்போது இருக்கும் சபைகளுக்குத் தான் இதில் சொல்லப்பட்டவைகள் பொருந்தும் என்று போதிக்கின்றனர். பவுல் எப்படி சபைகளுக்கு நிருபங்களை எழுதினாரோ, அதைப்போலவே இயேசுவால் இந்த ஏழு சபைகளுக்கு தூதன் மூலமாகக் கொடுக்கப்பட்டது தான் இரண்டாம் மற்றும் மூன்றாம் அதிகாரங்கள் ஆகும். இவைகள் அன்றைய சபைகளுக்கும் பொருந்தும்; இன்றைய சபைகளுக்கும் பொருந்தும்; அன்றிலிருந்து இன்றுவரை இருந்து, மறைந்த சபைகளுக்கும் பொருந்தும்.
இவைகள் இன்றைக்கும் ஆவிக்குரிய அர்த்தங்களாக நமக்கும் பொருந்தும் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் அவை எழுதப்பட்டது ஆதிசபைக்கு என்பதை யாரும் மறுக்கமுடியாது. இது அப்போதைய சபைகளுக்கு உள்ளே இருந்தவர்களுக்கும், வெளியே இருக்கும் நமக்கும் சொல்லப்பட்ட செய்தி. அதனால் தான் ஒவ்வொரு சபைகளுக்கும் சில காரியங்களை சொல்லிமுடித்துவிட்டு, ‘‘ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது.’’ என்று இயேசு சொல்லியிருக்கிறார். மேலும் பெர்கமு சபையின் (தற்போதைய துருக்கி) விசுவாசியான அந்திப்பா என்பவர் கி.பி 92 ல் இயேசுவைக் குறித்த சாட்சியின் நிமித்தம் ரோமப்பேரரசால் உயிரோடு எரித்துக்கொல்லப்பட்டார் என்ற வரலாற்று ஆதாரமும் நமக்கு இதை உணர்த்துகிறது. ‘அந்திப்பா கொல்லப்பட்ட நாட்களிலும்’ என்று கடந்தகாலத்தில் (Past tense) யோவானுக்கு சொல்லப்பட்டது என்றால், இனிதான் அந்திப்பா வரவேண்டுமா அல்லது நடந்து முடிந்த சம்பவத்தை அக்கால சபைக்கு நினைவுபடுத்த சொல்லப்பட்டதா? இது அன்றைய சபைகளுக்கு எழுதப்பட்ட கடிதம் தான் என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் இருக்கிறது
‘‘உன் கிரியைகளையும், சாத்தானுடைய சிங்காசனமிருக்கிற இடத்தில் நீ குடியிருக்கிறதையும் நீ என் நாமத்தைப் பற்றிக்கொண்டிருக்கிறதையும், சாத்தான் குடிகொண்டிருக்கிற இடத்திலே உங்களுக்குள்ளே எனக்கு உண்மையுள்ள சாட்சியான அந்திப்பா என்பவன் கொல்லப்பட்ட நாட்களிலும் என்னைப் பற்றும் விசுவாசத்தை நீ மறுதலியாமலிருந்ததையும் அறிந்திருக்கிறேன்.’’ (வெளி 2:13).
பத்து நாள் உபத்திரவம்
மூன்றாம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்த பல ரோமப்பேரரசர்கள், விசுவாசிகளை இயேசுகிறிஸ்துவை மறுதலிக்குமாறு நிர்பந்தித்தனர். கீழ்படிய மறுத்தவர்களை உபத்திரவப்படுத்தியது மட்டுமல்லாமல் பலரைக் கொலையும் செய்தனர். அதன் உச்சகட்டமாக டையோகிளிட்டியன் என்ற கொடுங்கோலன் பிறப்பித்த ஆணையினால் கி.பி 303 முதல் 313 வரை பத்து வருடங்கள் கிறிஸ்தவர்கள் ‘மகா உபத்திரவங்களை’ அடைந்தனர். இதுவும் இந்த சிமிர்னா சபைக்கு இயேசுவால் முன்னரே சொல்லப்பட்டது தான்.
‘‘நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படும்பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாள் உபத்திரப்படுவீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.’’ (வெளி 2:10)
நான் ஒரு கேள்வியை மட்டும் உங்கள் முன்பாக வைக்கிறேன். இதே உபத்திரவங்கள் நமது காலத்தில் நடைபெற்றால் நம்மில் எத்தனைபேர் ‘மரணபரியந்தம்’ உண்மையாயிருந்து, ‘ஜீவகிரீடத்தைப்’ பெறத் தகுதியுடையவர்களாய் இருக்கிறோம்?. நிச்சயம் ஒரு சதவீதம் பேர் கூட தேறுவது கடினம். நாம் இருப்பது கிருபையின் காலம். தேவனின் வருகையின் காலம். இந்த கடிதங்கள் இயேசுவால் யோவானுக்கு ‘சொல்லப்பட்டு’ எழுதப்பட்டவைகளாகும். இனி நாலாம் அதிகாரத்திலிருந்து கடைசிவரை எழுதப்பட்டுள்ள காரியங்கள், ராஜ்ஜியங்களைக் குறித்து யோவானுக்கு ‘தரிசனங்களாக’ வெளிப்படுத்தப்பட்டவைகளாகும். ஒவ்வொரு அதிகாரத்திலும் முதல் வசனத்தில் ‘கண்டேன்’ என்ற வார்த்தையை யோவான் பயன்படுத்தியுள்ளதன் மூலம் இதை அறிந்துகொள்ளலாம்.
‘‘இவைகளுக்குப்பின்பு, இதோ, பரலோகத்தில் திறக்கப்பட்டிருந்த ஒரு வாசலைக் கண்டேன்.’’ (வெளி 4:1)
இப்படியாக ஆரம்பித்த இந்த தரிசனங்கள் தான் யோவானுடைய காலத்திற்குப் பின் பூமியில் வரும் ‘கடைசிகால’ ராஜ்ஜியங்களைப் பற்றியும், அந்த காலக்கட்டங்களில் பரிசுத்தவான்கள் அடையப்போகும் உபத்திரவங்களைப் பற்றியும் சொல்கின்றது. அதன் பின்பு ‘முடிவுகாலங்களில்’ இயேசுவின் இரண்டாம் வருகையின்போது இந்த ராஜ்ஜியங்கள் எவ்வாறு இயேசுவால் அழிக்கப்பட்டு அவரது ஆயிரம் வருட அரசாட்சி, நியாயத்தீர்ப்பு, புதிய வானம் மற்றும் புதிய பூமி போன்ற காரியங்கள் நிறைவேறும் என்பதையும் வெளிப்படுத்தின விசேஷம் முழுவதுமாக விவரிக்கிறது. இப்படியாக இயேசுவின் ராஜ்ஜியம் ஸ்தாபிக்கப்படும் என்பதை தானியேலின் சிலை மற்றும் மிருகங்களைக் குறித்த தரிசனங்கள் ஏற்கனவே சொல்லிவிட்டன. அதன் விரிவாக்கம் தான் வெளிப்படுத்தின விசேஷம் ஆகும்.
இவைகள் எப்போது சம்பவிக்கும்?
‘‘சீக்கிரத்தில் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, தேவன் இயேசுகிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும், இவர் தம்முடைய தூதனை அனுப்பி, தம்முடைய ஊழியக்காரனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தினதுமான விசேஷம்.’’ (வெளி 1:1)
வெளிப்படுத்தலில் கர்த்தர் கூறியுள்ள தீர்க்கதரிசனங்கள் யாவும் ‘சீக்கிரத்திலே சம்பவிக்கவேண்டியவைகள்’ என்று இயேசு மிகத்தெளிவாக, முதல் வார்த்தையாகக் கூறியுள்ளார். இதற்கு மேலும் இந்த சம்பவங்கள் எல்லாம் முதலாம் நூற்றாண்டிலிருந்தே நிறைவேற ஆரம்பிக்கப்படவேண்டியவை என்பதற்கு என்ன ஆதாரம் வேண்டும்? தானியேல் மற்றும் வெளிப்படுத்தின தீர்க்கதரிசன புத்தகங்களில் பல இடங்களில் ‘முடிவுகாலம்’ என்ற வார்த்தையை நீங்கள் காணலாம். இவற்றில் முடிவுகாலங்கள் என்ற வார்த்தை இரண்டு விதமான சூழ்நிலைகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும். ஒரு குறிப்பிட்ட ராஜ்ஜியம் அழிக்கப்பட்டு அது முடிவுக்கு வரும் காலத்தை சில இடங்களிலும், எல்லா ராஜ்ஜியங்களும் நீக்கப்பட்டு இயேசுவின் முடிவில்லா ராஜ்ஜியம் ஸ்தாபிக்கப்படும் நாளை சில இடங்களிலும் முடிவுகாலம் என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.
வெளிப்படுத்தலின் முதல் அதிகாரம் ஒரு முன்னுரையையும், நேரடியாகப் புரிந்துகொள்ள முடியும் அர்த்தங்களையும் கொண்டிருப்பதால் நான் அதை விளக்கி பக்கங்களை நீட்டிக்க விரும்பவில்லை. இதே போல் இரண்டு மற்றும் மூன்றாம் அதிகாரங்கள் 7 சபைகளுக்கு வெளிப்படுத்தப்பட்ட, ஒரு சில இரகசியங்களை மட்டுமே கொண்டதாக இருப்பதால், மேலே சொன்ன காரியங்களோடு நிறுத்திக்கொள்கிறேன். நாலாம் அதிகாரம் தான் பரலோக தரிசனத்தின் ஆரம்பமாகும். இதில் யோவான் தேவனை தூதர்கள் மத்தியில் மகிமையான சிங்காசனத்தில் வீற்றிருப்பவராகக் கண்டது மட்டும் நேரடியாகவே விவரிக்கப்பட்டுள்ளது.
யூதா கோத்திரத்து சிங்கம்
அடுத்ததாக வெளிப்படுத்தல் 5 ஆம் அதிகாரத்தில் தான் யோவானின் தொடர் தரிசனங்கள் ஆரம்பிக்கிறது.
‘‘அன்றியும், உள்ளும் புறம்பும் எழுதப்பட்டு, ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப்பட்டிருந்த ஒரு புஸ்தகத்தைச் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய வலதுகரத்திலே கண்டேன்.’ (வெளி 5:10)
இந்த முத்திரிக்கப்பட்ட புத்தகம் தானியேலுக்கு ‘கடைசிகாலம் மட்டும்’ முத்திரிக்கப்பட்டதாக வைக்கப்படும் என்று சொல்லப்பட்ட புத்தகம் தான் என்று நான் கர்த்தருக்குள் நிச்சயமாக விசுவாசிக்கிறேன். இந்த புத்தகத்தின் முத்திரையை உடைக்க பரலோகத்தில் ஒருவருக்கும் தகுதியில்லை என்று கருதி யோவான் அழ ஆரம்பிக்கும்போது தான் ஒரு திருப்பம் ஆரம்பிக்கிறது.
‘‘அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான்.’’ (வெளி 5:5)
இந்த அதிகாரத்தில் யோவான் இயேசுவை மூன்று விதங்களில் பார்க்கிறார்.
- யூதா கோத்திரத்து சிங்கம்
- தாவீதின் வேர்.
- அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கிற ஆட்டுக்குட்டி (5:6)
இயேசு சிலுவையில் தன் இரத்தத்தை சிந்தியதால் தான் இந்த முத்திரைகளை உடைக்க பாத்திரவானானார்.
‘‘தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களை தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு,’’ (வெளி 5:9)
இப்படியாக ஆரம்பிக்கும் யோவானின் தரிசனங்கள், இனிவரும் அதிகாரங்கள் முழுவதும் சங்கேத மொழியாக சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் பரிசுத்த ஆவியானவரின் துணையோடு, வேத வசனங்களின் வெளிச்சத்தோடு அவற்றைப் புரிந்துகொள்ள இயேசு நமக்கு அனுமதித்திருக்கிறார். அதைத் தான் இனிவரும் அத்தியாயங்களில் பார்க்க இருக்கிறோம். கடைசியாக, திரும்பவும் ஒரு முறை சொல்கிறேன். இந்த தீர்க்கதரிசனங்கள் எல்லாம் கடகடவென ஒருசில வருடங்களில் முடிபவை என்ற எண்ணத்தை கொஞ்சம் ஒதுக்கிவைத்து விட்டு, இவை பூமியின் ராஜ்ஜியங்களின் தோற்றம் மற்றும் அழிவைக் குறித்ததாகையால் இதில் குறிப்பிடப்பட்டிருப்பவை எல்லாம் சில ஆண்டுகள் முதல் சில நூற்றாண்டுகள் வரை நீடிப்பவை என்ற எண்ணத்தோடு அணுகும்படி உங்களை கிறிஸ்துவுக்குள் வேண்டிக்கொள்கிறேன். இந்த தரிசனங்களைப் பற்றி அறிந்துகொள்வதற்கு முன் வெளிப்படுத்தின புத்தகத்தை ஒருமுறை நன்றாக வாசித்துவிட்டு அடுத்த அத்தியாயங்களை படிக்க உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.