- August 24, 2023
- admin
- 0
கடைசி காலம், முடிவு காலம் என்றால் என்ன?
கடைசிக்காலம் என்பது, ‘ஏதோ, கடைசியில் வரும் சில வருடங்கள் மட்டும்’ என்ற நம் மனதில் ஆழப்பதிந்த கருத்தை ஒரு நிமிடம் ஒதுக்கிவையுங்கள். தீர்க்கதரிசன புத்தகங்கள் மற்றும் இயேசுவின் போதகங்களில் வரும் கடைசிகாலம் என்பது இயேசு மேசியாவாக உலகத்திற்கு வெளிப்பட்ட காலத்திற்கு பின் இருந்தே ஆரம்பிக்கிறது. நான் சொல்வதை உங்களால் அவ்வளவு சீக்கிரம் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் நாம் அப்படி பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறோம். அப்போஸ்தலர்கள் வாழ்ந்த காலத்திலேயே இயேசுவின் சீடர்கள் அவரது இரண்டாம் வருகையும், அதைத்தொடர்ந்து அவரது முடிவில்லா ராஜ்ஜியமும் வரும் என்று ஆசையோடு காத்திருந்தனர் என்பதை மறந்துவிடாதீர்கள்.
நீண்ட காலம்
இந்த கடைசி நாட்கள் அல்லது காலங்கள் (கி.பி 27 முதல் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிவரை) என்பது நான்கு பாகங்களைக் கொண்டது.
- இயேசு தம்மை மேசியாவாக வெளிப்படுத்தின கி.பி 27 லிருந்து எருசலேம், ரோம தளபதி வெஸ்பாசியன் மற்றும் அவனது மகன் டைட்டஸ் ஆகியோர்களால் அழிக்கப்பட்டு, யூதர்கள் உலகமெங்கும் சிதறடிக்கப்பட்ட கி.பி 70 வரையிலான காலகட்டம்
கி.பி 70 முதல் இயேசுவைப் பின்பற்றிய, சிதறடிக்கப்பட்ட யூதர்களால் சுவிசேஷம் உலகமெங்கும் கொண்டு செல்லப்பட்டு ஆசியா மைனரில் சபைகள் நிறுவப்பட்டு வளர்ந்த காலகட்டமாகிய இரண்டாம் நூற்றாண்டின் ஆரம்ப காலம் வரை.. இதற்கு ஆதாரமாக நாம் பார்த்தோமென்றால் யோவானுக்கு கி.பி 96 ல் வெளிப்படுத்தப்பட்ட விசேஷம் இப்படித்தான் ஆரம்பிக்கின்றது.
‘‘இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது. யோவான் ஆசியாவிலுள்ள ஏழுசபைகளுக்கும் எழுதுகிறதாவது:’’ (வெளி 1:3,4)
- சபை வளர்ந்தபோது அதன் உள்ளே இருந்து சந்தித்த சவால்களான வஞ்சனையான கள்ள போதனைகளும், அந்திகிறிஸ்துவின் ஆவியின் அடையாளங்களும் பெருகின காலம்; மற்றும் அப்போதைய ரோமப் பேரரசர்களால் சபை ‘உபத்திரவம் மற்றும் மகா உபத்திரவங்களை’ அடைந்த, வெளிப்புறத்திலிருந்து வந்த பிரச்சனைகளை சந்தித்த காலம். இந்த காலம் சுமார் இரண்டாம் நூற்றாண்டின் நடுவிலிருந்து கான்ஸ்டாண்டைன் கிறிஸ்தவ மதத்தைத் தழுவி, கிறிஸ்தவர்களை உபத்திரவங்களிலிருந்து விடுவித்த காலமான கி.பி 313 ஆம் ஆண்டு வரை.
- கிறிஸ்தவம் ரோம சாம்ராஜ்ஜியத்தின் மூலமாக உலகத்தின் பெரிய மதமாக மாற்றப்பட்டு (கி.பி 313 க்கு பின்), அதன் பின்னர் கத்தோலிக்க ரோம சாம்ராஜ்ஜியத்தின் தலைவர்களான போப்புகளின் கையில் 1260 வருடங்கள் ஒப்புகொடுக்கப்பட்டு, அவர்களால் பரிசுத்தவான்களும், சத்தியமும் ஒடுக்கப்பட்டு, மீண்டும் சாத்தான் தனது திட்டங்களை அவர்கள் மூலமாக நிறைவேற்றி முடித்த காலக்கட்டமாகிய 18 ஆம் நூற்றாண்டின் கடைசி வருடங்கள் வரையிலான மிக நீண்ட காலங்கள். இந்த காலகட்டத்தின் இறுதியில் தான் அந்திகிறிஸ்துவின் ராஜ்ஜியமாகிய ரோமன் கத்தோலிக்க சாம்ராஜ்ஜியம் முடிவுக்கு வந்தது.
இதற்கு என்ன ஆதாரங்கள்?
‘கொஞ்சம் விட்டால் இவர் அடிப்படைக் கருத்துக்களிலேயே கைவைப்பார் போலத்தெரிகிறதே’ என்று நீங்கள் நினைக்கலாம். கடைசிகாலம் இத்தனை நீண்ட காலமா? என்ற கேள்வி உங்களுக்கு வருவதில் தவறே இல்லை. இதற்கு ஆதாரமாக நாம் பார்க்கவிருக்கும் வசனங்களையும், அவை எந்தப் பின்னணியில் சொல்லப்பட்டது என்பதையும் கவனமாக வாசியுங்கள்.
இயேசு வெளிப்பட்ட காலம்
இயேசு இந்த உலகத்திற்கு மனிதனாக வந்து சென்ற நாட்களுக்குப் பின் வந்த காலத்திலிருந்தே கடைசிகாலம் ஆரம்பித்துவிட்டது என்பதற்கு, இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பின்பு அவரது சீடர்கள் எழுதிய நிருபங்களிலிருந்து ஏராளமான ஆதாரங்கள் கொடுக்கமுடியும். எபிரேயர் நிருபத்தை எழுதியவர், இயேசுவின் பிறப்பைப் பற்றி தீர்க்கதரிசனங்கள் வெளிப்பட்ட காலங்களை பூர்வகாலம் என்றும், இயேசு மூலமாய் பிதா சீடர்களுக்கு நேரடியாகப் பேசிய முதல் நூற்றாண்டை ‘இந்தக் கடைசி நாட்கள்’ என்றும் இயேசு வாழ்ந்த காலத்தையே கடைசிக்காலமாக சுட்டிக்காட்டுகின்றார்.
‘‘பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்.’’ (எபிரேயர் 1:1,2)
இன்னொரு இடத்தில், இயேசு நம் பாவங்களுக்காகத் தன்னையே பலியாக ஒப்புக்கொடுத்த காலமும் கடைசிக்காலம் என்று சொல்லப்பட்டுள்ளது.
‘‘பிரதான ஆசாரியன் அந்நிய இரத்தத்தோடே வருஷந்தோறும் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்கிறதுபோல, அவர் அநேகந்தரம் தம்மைப் பலியிடும்படிக்குப் பிரவேசிக்கவில்லை. அப்படியிருந்ததானால், உலகமுண்டானது முதற்கொண்டு அவர் அநேகந்தரம் பாடுபடவேண்டியதாயிருக்குமே; அப்படியல்ல, அவர் தம்மைத்தாமே பலியிடுகிறதினாலே பாவங்களை நீக்கும்பொருட்டாக இந்தக் கடைசிக்காலத்தில் (முதல் நூற்றாண்டில்) ஒரேதரம் வெளிப்பட்டார்.’’ (எபிரேயர் 9:25,26)
மேலே சொன்ன இதே பாணியைப் பின்பற்றி அப்போஸ்தலனாகிய பேதுருவும், இயேசு வெளிப்பட்ட காலத்தையே கடைசிகாலம் என்று சொல்கிறார்.
‘‘அவர் உலகத்தோற்றத்திற்கு முன்னே குறிக்கப்பட்டவராயிருந்து, தமது மூலமாய் தேவன்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்காக இந்தக் கடைசிக்காலங்களில் வெளிப்பட்டார்.’’ (1 பேதுரு 1:20)
இதில், இந்தக் கடைசிக்காலம் என்பது நாம் வாழும் காலம் அல்ல; பேதுரு நிருபத்தை எழுதிய முதல் நூற்றாண்டின் காலம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். மேலும் அப்போஸ்தலனாகிய யூதா எழுதின பொதுவான நிருபத்திலே, அவர் நிருபத்தை எழுதியக் காலத்திலேயே ‘கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை மறுதலிக்கிற பக்தியற்றவர்களாகிய சிலர் பக்கவழியாய் நுழைந்ததைக் குறித்து’ விசுவாசிகளுக்கு எச்சரித்து எழுதும்போது
‘‘கடைசிக்காலத்திலே தங்கள் துன்மார்க்கமான இச்சைகளின்படி நடக்கிற பரியாசக்காரர் தோன்றுவார்கள் என்று உங்களுக்குச் சொன்னார்களே.’’ (யூதா 1:18) என்று சொல்லியுள்ளார்.
இதை விட முத்தாய்ப்பாய், பூமியிலே பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பக்தன் யோபு, இயேசுவை ‘உயிரோடிருக்கிறவராக’ கடைசி நாளில் நிற்பார் என்று தீர்க்கதரிசனமாக உரைத்தார்.
‘‘என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசிநாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன்.’’ (யோபு 19:25)
இவர் கூறிய ‘இயேசு பூமியின் மேல் நிற்கும்’ கடைசிநாள் என்பது இரண்டாம் வருகையைக் குறிப்பது அல்ல; முதல் வருகையைக் குறிப்பது தான் என்பதை லூக்கா, அப்போஸ்தலர் நடபடிகளில் எழுதிவைத்துள்ள வசனங்களிலிருந்து ஆதாரத்திலிருந்து அறிந்துகொள்ளலாம்.
‘‘அவர் பாடுபட்டபின்பு, நாற்பது நாளளவும் அப்போஸ்தலருக்குத் தரிசனமாகி, தேவனுடைய ராஜ்யத்துக்குரியவைகளை அவர்களுடனே பேசி, அநேகம் தெளிவான திருஷ்டாந்தங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார்.’’ (அப்போஸ்தலர் 1:3)
யோபு, இயேசுவை உயிரோடு இருந்தவராக பூமியின் மேல் நிற்பதைக் காண்பேன் என்று சொன்னது முதல் வருகையைக் குறிக்கும்.
ஆதிசபையின் ஆரம்பநாள்
ஒரு உதாரணத்திற்கு யோவேல் தீர்க்கதரிசியின் கடைசி நாட்களைக் குறித்த தீர்க்கதரிசனத்தைப் பார்ப்போம். கடைசி நாட்களில் நடக்க இருப்பதாக யோவேல் தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்ட ஒரு பகுதியை, அப்போஸ்தலனாகிய பேதுரு, பெந்தேகோஸ்தே நாளில் கூடியிருந்த யூதர்கள் மத்தியில் பேசும்போது பின்வருமாறு அதைக் கோடிட்டுக் காட்டுகிறார்.
‘‘தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது. கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்; உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள்; என்னுடைய ஊழியக்காரர்மேலும், என்னுடைய ஊழியக்காரிகள்மேலும் அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள். அல்லாமலும் உயர வானத்திலே அற்புதங்களையும், தாழ பூமியிலே இரத்தம், அக்கினி, புகைக்காடாகிய அதிசயங்களையும் காட்டுவேன். கர்த்தருடைய பெரிதும் பிரகாசமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும். அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான் என்று தேவன் உரைத்திருக்கிறார்.’’ (அப்போஸ்தலர் 2:16-21)
யோவேலினால் கடைசிநாளில் நடக்கும் என உரைக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம், இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்ததற்கு 50 நாட்களுக்குப் பின்பு வந்த பெந்தேகோஸ்தே நாளில் ஊற்றப்பட்டதைக் கண்டு ஆச்சரியப்பட்டு நின்ற யூதர்கள் மத்தியில் தான் பேதுரு இதைக் கோடிட்டு காட்டியுள்ளார். இதில் ‘‘தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது’ (But this is that which was spoken by the prophet Joel) என்று நிகழ்காலமாக சொல்வதன் மூலமாக, ‘கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்’ என்று சொல்லப்பட்ட தீர்க்கதரிசனம் ‘இன்றிலிருந்து (கி.பி 31) நிறைவேற ஆரம்பித்திருக்கிறது’ என்று ஆதாரத்தோடு பேதுரு விளக்கியுள்ளார். இந்த தீர்க்கதரிசனத்தின்படி பரிசுத்த ஆவியின் அபிஷேகம் கிபி 31 லேயே ஊற்றப்பட ஆரம்பித்துவிட்டது. ஆனால் ‘வானம் மற்றும் பூமியில் இரத்தம், புகை, அக்கினி மற்றும் சத்துவங்கள் அசைக்கப்படும்’ என்பது ரோம சாம்ராஜ்ஜியத்தின் அழிவையும், அதைத்தொடர்ந்து வந்த கத்தோலிக்க ரோம சாம்ராஜ்ஜியத்தின் மீது ஊற்றப்பட்ட எக்காளங்கள், வாதைகளின் நாட்களின் நடந்த சம்பவங்களைக் குறிக்கும் சங்கேத மொழிகளாகும். இதை நாம் பின்வரும் அத்தியாயங்களில் விளக்கமாகப் பார்க்க இருக்கிறோம். இந்த நாட்களில் கர்த்தரைத் தொழுதுகொள்பவர்கள் இரட்சிக்கப்படுவார்கள் என்பது இதன் அர்த்தம்.
இதற்கு மேலும் பரிசுத்த வேதம் சொல்லும் கடைசிநாட்கள் இனிதான் வரப்போகிறது; அதற்கு முன்பு இரகசியமாக நாம் எடுத்துக்கொள்ளப்படுவோம் என்று நம்புவது வேதத்திற்குப் புறம்பானது. இதிலிருந்து இயேசு தம்மை மேசியாவாக வெளிப்படுத்தின காலம் முதல் ஆதிசபையின் ஆரம்பநாளான பெந்தேகோஸ்தே நாள் தான் கடைசிக்காலத்தின் ஆரம்ப நாட்கள் என்பது உறுதி. இன்னும் பல தீர்க்கதரிசனங்களிலிருந்து ஆதாரங்களை உங்களுக்கு நான் சொல்ல முடியும். அது தனி புத்தகமாக எழுதக்கூடிய அளவிற்கு இருப்பதால் சொல்லமுடியவில்லை
கடைசிநாட்களின் முடிவு
கடைசி நாட்களின் (கி.பி 27-1798) முடிவு நெருங்கிய காலமான பதினாறாம் நூற்றாண்டில் மார்டின் லூதரால் ஆரம்பிக்கப்பட்ட புராட்டஸ்டண்ட் மறுமலர்ச்சியால், பரிசுத்த வேதாகமங்கள் சாதாரண மக்கள் கையில் கிடைக்க ஆரம்பித்தது. அதன் விளைவால் உலகம் முழுவதும் சுவிசேஷம் மிகவேகமாகப் பரவ ஆரம்பித்தது. இதைத்தொடர்ந்து பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் தான் உலகை 1260 வருடங்கள் ஆளும்படி ஒப்புக்கொடுக்கப்பட்ட ரோமன் கத்தோலிக்க சாம்ராஜ்ஜியம் வீழ்ந்தது. இந்த வீழ்ச்சியின் காலம் தான் கடைசி நாட்களின் முடிவு மற்றும் முடிவுகாலத்தின் ஆரம்பப்புள்ளியாகும் (End of last days and beginning of End days). இப்படி சொல்வதினால் ரோமன் கத்தோலிக்க சபையை எதிர்த்தும், புராட்டஸ்டண்ட் சபையை ஆதரித்தும் எழுதுவதாக நினைக்கவேண்டாம். ராஜ்ஜியங்களிலும், சபையிலும் நடந்த ஒவ்வொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவமும் தீர்க்கதரிசனங்களின் நிறைவேறுதலாகும்; மார்டின் லூதரின் பிரிவினை உட்பட.
முடிவுகாலம்
முடிவுகால யுத்தங்களின்போது யூத ஜனங்களுக்கு வரவிருக்கும் பேரழிவையும், ஒரு பங்கு மீட்கப்படுவதையும் குறிக்கும் தரிசனத்தைத் தானியேல் கண்டவுடன் (தானியேல் 12:1-3), இது சம்பவிக்க எவ்வளவு காலம் செல்லும்? என்ற கேள்வியைக் கேட்கிறார்.
‘‘அப்பொழுது சணல்வஸ்திரம் தரித்தவரும் ஆற்றின் தண்ணீர்களின்மேல் நிற்கிறவருமாகிய புருஷன் தம்முடைய வலதுகரத்தையும் தம்முடைய இடதுகரத்தையும் வானத்துக்கு நேராக ஏறெடுத்து, ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமும் செல்லும் என்றும்; பரிசுத்த ஜனங்களின் வல்லமையைச் சிதறடித்தல் முடிவுபெறும்போதே இவைகளெல்லாம் நிறைவேறித் தீருமென்றும் என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவர்பேரில் ஆணையிடக் கேட்டேன். நான் அதைக் கேட்டும், அதின்பொருளை அறியவில்லை; ஆகையால்: என் ஆண்டவனே, இவைகளின் முடிவு என்னமாயிருக்கும் என்று கேட்டேன். அதற்கு அவன் தானியேலே, போகலாம்; இந்த வார்த்தைகள் முடிவுகாலமட்டும் புதைபொருளாக வைக்கப்பட்டும் முத்திரிக்கப்பட்டும் இருக்கும்.’’ (தானியேல் 12:7-9)
இதன்படி, யூத ஜனங்கள் சிதறடிக்கப்பட்டது முடிவுக்கு வந்த கி.பி 1948 க்குப் பின் மீண்டும் யூத ஜனங்கள் உபத்திரவப்படும் கடைசி யுத்தம் வரும் என்று சொல்லுகிறார். அதன் முடிவு எப்படியிருக்கும் என்று தானியேல் கேட்டதற்கு, அது முடிவுகாலமட்டும் இரகசியமாக இருக்கும் என்று பதில் வந்தது.
- அந்திகிறிஸ்துவின் 1260 வருடங்கள் முடிவடைந்த கி.பி 1798 ல் கடைசிக்காலம் முடிவுக்கு வந்தது
- அதன்பின்பு தான் முடிவுகாலம் ஆரம்பித்தது. புதைபொருளாக இருந்த வேதத்தின் தீர்க்கதரிசன வார்த்தைகள் முடிவுகாலத்தில் ஏற்பட்ட சுவிஷேசப் புரட்சியினால் பலர் புரிந்துகொள்ளும் காலம் வந்தது.
- யூதஜனங்களில் பாதி பேரழிவையும், மீதி பங்கு பாதுகாப்பையும் சந்திக்கவிருக்கும் மூன்றாம் உலக யுத்தத்தோடு முடிவுகாலம் முற்றுபெறும்.
- அதுமுற்றுபெற்ற பின்பு தான் இயேசுவின் இரண்டாம் வருகை இருக்கும். (கர்த்தருடைய நாள்/கிறிஸ்துவின் நாள்)
‘‘(கர்த்தருடைய நாளிலே) எருசலேமுக்கு விரோதமாக யுத்தம்பண்ணச் சகல ஜாதிகளையும் கூட்டுவேன்; நகரம் பிடிக்கப்படும்; வீடுகள் கொள்ளையாகும்; ஸ்திரீகள் அவமானப்படுவார்கள்; நகரத்தாரில் பாதி மனுஷர் சிறைப்பட்டுப்போவார்கள்; மீதியான ஜனமோ நகரத்தை விட்டு அறுப்புண்டுபோவதில்லை. கர்த்தர் புறப்பட்டு, யுத்தநாளிலே போராடுவதுபோல் அந்த ஜாதிகளோடே போராடுவார். அந்நாளிலே அவருடைய பாதங்கள் கிழக்கே எருசலேமுக்கு எதிரே இருக்கிற ஒலிவமலையின்மேல் நிற்கும்;’’ (சகரியா 14:1-4)
‘‘உன் ஜனத்தின் புத்திரருக்காக நிற்கிற பெரிய அதிபதியாகிய மிகாவேல் அக்காலத்திலே (முடிவுகாலத்திலே) எழும்புவான். யாதொரு ஜாதியாரும் தோன்றினதுமுதல் அக்காலமட்டும் உண்டாயிராத ஆபத்துக்காலம் வரும்; அக்காலத்திலே புஸ்தகத்தில் எழுதியிருக்கிறவர்களாகக் காணப்படுகிற உன் ஜனங்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள். பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து (இயேசுவின் இரண்டாம் வருகையில்) எழுந்திருப்பார்கள்’’ (தானியேல் 12:1,2))
பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்ப வருடங்களிலிருந்து, உலகின் கடைசி எல்கை வரை இயேசுவின் நாமம் பிரசிங்கிக்கப்பட்டுவரும் இன்று வரை உள்ள சுமார் 220 வருடங்கள் தான் முடிவு காலம். இதுதான் சகல ஜாதிகளுக்கும் ராஜ்ஜியத்தின் சுவிசேஷம் அறிவிக்கப்படும் கிருபையின் காலமும் கூட.
- பூர்வக்காலம் : பழைய ஏற்பாட்டு காலம்
- கடைசிக்காலம் : இயேசுவின் முதல் வருகை – கி.பி 1798
- முடிவுகாலம்/சுவிசேஷத்தின் காலம் : கி.பி 1800 – இன்றுவரை
- புறஜாதியாரின் காலம் முடிவது : கி.பி 1967
- கர்த்தருடைய பெரிதான நாள் : இறுதி யுத்தம் மற்றும் அதைத் தொடர்ந்து வரும் இயேசுவின் இரண்டாம் வருகை.
கடைசிக்கால மகா பாபிலோன்
கடைசிக்கால மகா பாபிலோன் என்பது பாதாளத்திலிருந்து மீண்டும் வந்த பழைய பாபிலோன் சாம்ராஜ்ஜியத்தின் மறுஉருவம் என்று பார்த்தோம். பூமியில் முதல் மனிதனைப் பாவம் செய்யவைத்து தேவமகிமையை இழக்கச் செய்த ‘பெருமைக்காரனாகிய’ லூசிபரின் இன்னொரு உருவம் தான் இந்த பழைய பாபிலோன் சாம்ராஜ்ஜியம் என்றும் ஏசாயா தீர்க்கதரிசன புத்தகத்தின் வாயிலாகப் பார்த்தோம். இது பல காலங்களில் பல உருகொண்டு பூமியில் பாவங்களையும், விக்கிரக ஆராதனையையும், தேவாதி தேவனுக்கு நிகராகத் தன்னை நிலைநிறுத்தும் முயற்சியை செய்தது. ஆரம்பம் முதல் இப்படி செய்து வந்த அந்திகிறிஸ்துவாகிய வலுசர்ப்பத்தின் அதிகாரம், இயேசுவின் இரண்டாம் வருகையின் காலத்தில், அவரால் அழிக்கப்படப்போகும் மகா பாபிலோனாக (ரோம சாம்ராஜ்ஜியத்தின் வடிவமாக) நிலைத்துநிற்கும். இது தான் மகாபாபிலோனைக் குறித்த ‘இரகசியம் (Mystery)’’.
இது ஏன் இரகசியம்?
இரகசியம் என்றாலே குறிப்பிட்ட சில நபர்களைத் தவிர யாருக்கும் தெரியாத காரியம் என்ற அர்த்தமாகும். எனவே தான் தானியேல் மற்றும் வெளிப்படுத்தலில் உள்ள எல்லா வார்த்தைகளும் சங்கேத மொழிகளில் கொடுக்கப்பட்டுள்ளது. அவை ஆவியானவரின் உதவியோடு ஆராய்பவர்களுக்கும், இயேசுவின் ராஜ்ஜியத்தை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருப்பவர்களுக்கும் மட்டுமே வெளிப்படுத்தப்படும் என்று தானியேலுக்கு கர்த்தர் கூறியிருக்கின்றார். அன்றைக்குப் பல காரியங்கள் தானியேலுக்கு தரிசனத்தில் வெளிப்படுத்தப்பட்டாலும், சில காரியங்களின் அர்த்தம் அவருக்கே சொல்லப்படாமல், ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும் இரகசியமாக வைக்கப்பட்டது. ஆனால் அந்த காலத்திற்குப் பின்பு அந்த இரகசியம் யாருக்கு, எப்படி வெளிப்படுத்தப்படும் என்றும் கர்த்தர் கூறியுள்ளார். இதுவரை நான் எழுதியுள்ள பல காரியங்கள் பலருக்கு, பல காலகட்டங்களில் வெளிப்படுத்தப்பட்டவைகளின் தொகுப்பு தான். ஒரு சில இரகசியங்களைப் புதிதாக ஆவியானவர் இந்த அடிமைக்கும் வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த இரகசியங்கள் முடிவுகாலத்தில் பலருக்குப் புரியவரும் என்றும் கூறியுள்ளார்.
‘‘தானியேலாகிய நீயோவென்றால், முடிவுகாலமட்டும் இந்த வார்த்தைகளைப் புதைபொருளாக வைத்து வைத்து, இந்தப்புஸ்தகத்தை முத்திரைபோடு; அப்பொழுது அநேகர் இங்குமங்கும் ஓடி ஆராய்வார்கள், அறிவும் பெருகிப்போம் என்றான்.’’ (தானியேல் 12:4)
‘‘அதற்கு அவன் தானியேலே, போகலாம்; இந்த வார்த்தைகள் முடிவுகாலமட்டும் புதைபொருளாக வைக்கப்பட்டும் முத்திரிக்கப்பட்டும் இருக்கும். அநேகர் சுத்தமும் வெண்மையுமாக்கப்பட்டு புடமிடப்பட்டவர்களாய் விளங்குவார்கள். துன்மார்க்கரோ துன்மார்க்கமாய் நடப்பார்கள்; துன்மார்க்கரில் ஒருவனும் உணரான். ஞானவான்களோ உணர்ந்துகொள்ளுவார்கள்.’’ (தானியேல் 12:9,10)
முடிவுகாலத்தில் அறிவு பெருகும் என்று கர்த்தர் தானியேலுக்கு வெளிப்படுத்தினது போல எந்தக் காலக்கட்டத்திலும் இல்லாத அளவிற்கு கடந்த 200 ஆண்டுகளில் தான் அறிவும், அறிவியல் வளர்ச்சியும் பெருகியுள்ளது. ஆனால் இந்த அறிவினால் அறிவியல், விஞ்ஞான கண்டுபிடிப்புகள் தான் அந்திகிறிஸ்துவின் ஆயுதம் என்று பலர் போதிப்பது தானியேல் மற்றும் யோவானுக்கு வெளிப்படுத்தப்பட்டது ‘தொடர் தீர்க்கதரிசனங்கள்’ என்ற அறியாமையின் வெளிப்பாடே. சிலர் தினமும் உலகில் நடக்கும் அறிவியல் கண்டுபிடிப்புகளை மட்டுமே பேசி ‘இந்த வசனம் நிறைவேறி விட்டது, அது நடந்தேறி வருகிறது’ என்று விஞ்ஞான வியாக்கியானங்களை செய்து மக்களை பீதிக்குள்ளாக்கும் வகையில் ‘யூ டியூபில்’ பேசிவருவது வருந்தத்தக்க விசயம்
இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த பல இரகசியங்களை உள்ளடக்கியது தான் கடைசி ராஜ்ஜியமான ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியம் மற்றும் அதன் நீட்சியான வாடிகனோடு இணைந்த ஐரோப்பிய யூனியன். இந்த ராஜ்ஜியங்கள் பல காலகட்டங்களில் பூமியில் நிகழ்ந்த பல நிகழ்வுகளின் பின்னணியில் மிக முக்கிய பங்குவகித்திருக்கின்றன என்பதும், அவைகள் மீது தேவ கோபாக்கினை இன்றுவரை ஊற்றப்பட்டு, இன்றைக்கு ஏழாம் கலசத்தின் காலக்கட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதும் தான் ‘இரகசியம்’. எனவே தான் இவைகள் உலக அறிஞர்களின் கண்களுக்குக் கூட மறைக்கப்பட்டுள்ளது; நமக்கும் எல்லா வரலாற்று நிகழ்வுகளும் தற்செயலாக அல்லது மனிதத் தவறுகளால் நிகழ்ந்து முடிந்ததாகத் தெரிகிறது. அதனால் தான் தேவன் இதை ‘இரகசியம், மகா பாபிலோன்’ என்று எழுதிவைத்துள்ளார். இப்படி சொல்வதைப் புரிந்துகொள்ள இன்னும் பல அத்தியாயங்களை நீங்கள் கடக்கவேண்டும்
புதிர் சேர்த்தல் (Puzzle game)
இயேசுவின் இரண்டாம் வருகை மற்றும் முடிவுகாலங்களைக் குறித்த தீர்க்கதரிசனங்களை, தனித்தனியாகப் பிரிந்திருக்கும் ஒரு விலங்கின் உடல் பாகங்களை மிகச்சரியாக சேர்க்கும் புதிர் விளையாட்டுக்கு (Puzzle game) ஒப்பிடலாம். அந்த விலங்கின் எல்லா பாகங்களையும் அந்தந்த இடத்தில் பொருத்தினால் மட்டுமே விலங்கின் முழு உருவம் கிடைக்கும். தலை இருக்க வேண்டிய இடத்தில் காலையோ, வயிறு இருக்கவேண்டிய இடத்தில் வாலையோ குழந்தைகள் பொருத்திப்பார்த்தால் எவ்வளவு விகாரமாக இருக்குமோ, அதைப்போலத் தான், தானியேல் மற்றும் வெளிப்படுத்தலின் சம்பவங்களை வரலாற்றுப் பின்னணியில் சரியான வரிசைப்படி பொருத்திப்பார்க்காமல் வியாக்கியானம் செய்தால் இந்த இரகசியமும் இருக்கும்.
படம் 31: புதிர் சேர்க்கும் விளையாட்டு
தேவரகசியம் என்றால் என்ன?
தானியேலுக்கு வெளிப்படுத்தப்படாத பல காரியங்கள் யோவானுக்கு இயேசுவால் வெளிப்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் ஒருசில காரியங்களை இயேசு சொல்லிவிட்டு அவைகளை எழுதாமல் முத்திரை போடு என்று சொன்னார். ஆனால் அவைகள் முற்றிலும் மறைக்கப்படாமல் (முடிவு) காலம் மிக சமீபமாக இருப்பதால் அவைகளும் முத்திரையிடப்பட வேண்டாம் என்று கடைசி அதிகாரத்தில் இயேசு யோவானுக்கு சொல்லிவிட்டார்.
‘‘அவ்வேழு இடிகளும் தங்கள் சத்தங்களை முழங்கினபோது, நான் எழுதவேண்டுமென்றிருந்தேன். அப்பொழுது: ஏழு இடிமுழக்கங்கள் சொன்னவைகளை நீ எழுதாமல் முத்திரைபோடு என்று வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக்கேட்டேன். சமுத்திரத்தின்மேலும் பூமியின்மேலும் நிற்கிறதாக நான் கண்ட தூதன், தன் கையை வானத்திற்கு நேராக உயர்த்தி; இனி காலம் செல்லாது; ஆனாலும் தேவன் தம்முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளுக்குச் சுவிசேஷமாய் அறிவித்தபடி, ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே அவன் எக்காளம் ஊதப்போகிறபோது தேவரகசியம் நிறைவேறும் என்று,…’’(வெளி 10:4-6)
‘‘பின்னும், அவர் என்னை நோக்கி: இந்தப் புஸ்தகத்திலுள்ள, தீர்க்கதரிசன வசனங்களை முத்திரைபோடவேண்டாம்; காலம் சமீபமாயிருக்கிறது.’’ (வெளி 22:10)
முடிவுகாலம் Vs கடைசிகாலம் Vs கர்த்தரின் நாள்
கடைசிகாலம் என்பது இயேசு தம்மை மேசியாவாக வெளிப்படுத்தின கி.பி 27 லிருந்து ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியம் (முதல் மிருகம்) 1260 வருடங்கள் ஆட்சிசெய்து, நெப்போலியனால் முறியடிக்கப்பட்ட பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிவரையிலான காலக்கட்டம் என்று ஏற்கனவே பார்த்துள்ளோம். இந்த கடைசி காலமும், முடிவுகாலமும் ஒன்றா? வெவ்வேறா? என்று சில வசனங்களின் ஆதாரத்தில் நாம் பார்க்க இருக்கிறோம். இது புரிந்தால் தான் நாம் இன்று எந்த காலக்கட்டத்தில் இருக்கிறோம்? கலசங்கள் இனிதான் ஊற்றப்படப்போகிறதா? என்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.
ஆங்கிலத்தில் இவைத் தெளிவாக வேறுபிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கும். கடைசிகாலம் என்பது Last days என்றும் முடிவுகாலம் என்பது End days என்றும் சொல்லப்பட்டுள்ளது. நீங்கள் எல்லா தீர்க்கதரிசன புத்தகங்களையும் கவனமாகப் பார்த்தால் அடிக்கடி ‘அந்நாளிலே’ ‘கர்த்தருடைய நாளிலே’ என்ற வார்த்தைகள் இடம்பெறுவதைக் காணலாம். இந்த வார்த்தைகள் ஒரு ராஜ்ஜியம் அல்லது தேசம் இன்னொரு ராஜ்ஜியத்தினால் படையெடுப்பின் மூலம் முற்றிலுமாக அழிக்கப்படும் காரியங்களைக் குறித்த தீர்க்கதரிசனம் வரும் இடங்களில் சொல்லப்பட்டிருக்கும். அவற்றில் பெரும்பாலும் நடந்து முடிந்துவிட்டன.
பாபிலோன் மீதான கர்த்தருடைய நாள்
‘‘ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா பாபிலோன்மேல் வரக்கண்ட பாரம்……. அலறுங்கள், கர்த்தரின் நாள் சமீபமாயிருக்கிறது, அது சர்வவல்லவரிடத்திலிருந்து மகா சங்காரமாய் வரும்…….. இதோ, நான் அவர்களுக்கு விரோதமாய் மேதியரை எழுப்புவேன்;’’ (ஏசாயா 13:1,6,17)
எகிப்தின் மேல் கர்த்தருடைய நாள்
‘‘நாள் சமீபமாயிருக்கிறது; ஆம், கர்த்தருடைய நாள் சமீபமாயிருக்கிறது; அது மந்தாரமான நாள், அது புறஜாதிகளுக்கு வரும் காலம். பட்டயம் எகிப்திலே வரும்;’’ (எசேக்கியேல் 30:3,4)
முடிவுபரியந்தம்
தானியேலுக்கு வெளிப்படுத்தப்பட்டபடி பூமியின் கடைசி ராஜ்ஜியமான எட்டாவது மிருகம் (ரோம சாம்ராஜ்ஜியத்தின் மிச்சம்) இயேசுவின் வருகையின்போது அழிக்கப்படும் காலம் தான் முடிவுகாலம். அதாவது சின்னகொம்பாகிய ரோமன் கத்தோலிக்க சாம்ராஜ்ஜியம் ஆட்சிசெய்த 1260 வருடங்கள் முடியும்போது இயேசுவின் நியாயசங்கம் உட்காரும் என்றே கூறப்பட்டுள்ளது. இதன் ஆட்சி முடிவுக்கு வந்ததே ஏழாம் எக்காளம் ஊதப்பட்டபோது தான். அப்போது ஆரம்பிக்கும் தீர்ப்புதான் கலசங்களாக ரோம சாம்ராஜ்ஜியத்தின் மீது ஊற்றப்பட்டு ‘முடிவுபரியந்தம்’ அதாவது இயேசுவின் இரண்டாம் வருகை பரியந்தம் ஐரோப்பா மீது ஊற்றப்படும்.
‘‘ஆனாலும் (இயேசுவின்) நியாயசங்கம் உட்காரும்; அப்பொழுது முடிவுபரியந்தம் அவனைச் (அந்திகிறிஸ்துவை) சங்கரிக்கும்படியாகவும் அழிக்கும்படியாகவும் அவனுடைய ஆளுகையை நீக்கிப்போடுவார்கள்.’’ (தானியேல் 7:26)
எனவே தான் இயேசு நமக்கு வாக்கு பண்ணும்போதும், எச்சரிக்கும்போதும் கடைசிபரியந்தம் என்று கூறாமல் ‘முடிவுபரியந்தம்’ என்ற வார்த்தையைக் குறிப்பிடுகிறார்.
‘‘இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார்.’’ (மத்தேயு 28:20)
‘‘என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்; முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்.’’ (மத்தேயு 10:22)
முடிவுகால எருசலேம்
தானியேல் 11,12 ஆம் அதிகாரங்கள் மூன்று காலக்கட்டங்கள் மற்றும் ராஜ்ஜியங்களைக் குறித்த தொடர் தீர்க்கதரிசனங்களை சொல்கிறது. இந்த அட்டவணையை நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
அட்டவணை 13: தானியேல் 11&12 ன் விளக்கம்
இதில் தானியேல் 12 ஆம் அதிகாரம், 11 ஆம் அதிகாரத்தின் தொடர்ச்சியே. அதில் 11:40 முதல் 11:45 வரையிலான சம்பவங்கள், முடிவு யுத்தகாலத்தில் ஐரோப்பிய ராஜ்ஜியங்களில் நடக்கும் சம்பவங்களாக இருக்கலாம். இதிலிருந்து எருசலேம் மீண்டும் முடிவுகால தீர்க்கதரிசனங்களோடு சம்பந்தப்பட ஆரம்பிக்கிறது. இந்த வசனங்களில் சொல்லப்பட்டுள்ள ‘சிங்காரமான தேசம்’ என்பது இஸ்ரவேலையே குறிக்கும். இந்த இறுதி யுத்தங்களின்போது அல்லது இயேசுவின் இரண்டாம் வருகை மிக நெருங்கும்போது யூதர்களுக்கு சம்பவிக்க இருக்கும் ஆபத்தையும், மீட்பையும் பற்றி தானியேல் 12 ஆம் அதிகாரத்தில் சொல்லிவைத்துள்ளார்.
‘‘உன் ஜனத்தின் புத்திரருக்காக நிற்கிற பெரிய அதிபதியாகிய மிகாவேல் அக்காலத்திலே எழும்புவான். யாதொரு ஜாதியாரும் தோன்றினது முதல் அக்காலமட்டும் உண்டாயிராத ஆபத்துக்காலம் வரும்; அக்காலத்திலே புஸ்தகத்தில் எழுதியிருக்கிறவர்களாகக் காணப்படுகிற உன் ஜனங்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள்.’’ (தானியேல் 12:1)
இதில் ‘அக்காலத்திலே’ என்பது முடிவுகாலத்தின் இறுதியைக் குறிக்கும். இந்த வசனம் இரண்டு முடிவுகால சம்பவங்களைக் குறிக்கிறது.
- இஸ்ரவேலருக்கு அவர்கள் இதுவரை காணாத ஆபத்து வரும்
- ஜீவ புஸ்தகத்தில் பெயர் எழுதப்பட்டவர்கள் தப்புவிக்கப்படுவார்கள்
இந்த சம்பவங்களின் தொடர்ச்சியாகத் தான் இயேசுவின் இரண்டாம் வருகையும், மரித்தோர் உயிர்த்தெழுதலும் நடைபெறும் என்று தானியேல் எழுதிவைத்துள்ளார்.
‘‘பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள். ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப் போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்.’’ (தானியேல் 12:2,3)
இந்த இரண்டு சம்பவங்கள் தான் சகரியா தீர்க்கதரிசிக்கு விரிவாக சொல்லப்பட்டுள்ளது.
‘‘இதோ, கர்த்தருடைய நாள் வருகிறது, உன்னில் கொள்ளையானது உன் நடுவிலே பங்கிடப்படும். எருசலேமுக்கு விரோதமாக யுத்தம்பண்ணச் சகல ஜாதிகளையும் கூட்டுவேன்; நகரம் பிடிக்கப்படும்; வீடுகள் கொள்ளையாகும்; ஸ்திரீகள் அவமானப்படுவார்கள்; நகரத்தாரில் பாதி மனுஷர் சிறைப்பட்டுப்போவார்கள்; மீதியான ஜனமோ நகரத்தை விட்டு அறுப்புண்டுபோவதில்லை. கர்த்தர் புறப்பட்டு, யுத்தநாளிலே போராடுவதுபோல் அந்த ஜாதிகளோடே போராடுவார். அந்நாளிலே அவருடைய பாதங்கள் கிழக்கே எருசலேமுக்கு எதிரே இருக்கிற ஒலிவமலையின்மேல் நிற்கும்; அப்பொழுது மகா பெரிய பள்ளத்தாக்கு உண்டாகும்படி ஒலிவமலை தன் நடுமையத்திலே கிழக்கு மேற்காய் எதிராகப் பிளந்துபோம்; அதினாலே, ஒ ரு பாதி வடபக்கத்திலும் ஒரு பாதி தென்பக்கத்திலும் சாயும். என் தேவனாகிய கர்த்தர் வருவார்; தேவரீரோடே எல்லாப் பரிசுத்தவான்களும் வருவார்கள்.’’ (சகரியா 14:1-5)
இந்த முடிவுகால யுத்தங்களையும், அதனைத்தொடர்ந்து இயேசுவின் இரண்டாம் வருகையையும் பற்றி தனி அத்தியாயமாக பார்க்க இருக்கிறோம்; அப்போது உங்களுக்கு இன்னும் தெளிவாகப் புரியவரும் (அத்தியாயம்-28 எட்டாவது ராஜ்ஜியமும், முடிவுகால யுத்தங்களும்)
நேற்று இன்று நாளை
ஒவ்வொரு ராஜ்ஜியத்திற்கும் ஒரு முடிவுநாள் அல்லது ‘கர்த்தருடைய நாள்’ இருந்தது. எட்டாவது ராஜ்ஜியம் முடிவதற்கும் ஒரு கர்த்தரின் நாள் வரவிருக்கிறது. இதன்படி பார்த்தால் கடைசிகாலம் நிறைவேறிவிட்டது; நாம் முடிவுகாலத்தில் இருக்கிறோம். பழைய ஏற்பாட்டின் ராஜ்ஜியங்களின் வரலாற்றைப் பார்க்கும்போது, அவைகள் ஒவ்வொன்றும் வீழ்ச்சியடைந்ததும், அடுத்த ராஜ்ஜியம் ஸ்தாபிக்கப்படும் காலமும் ஓரிரு நாட்கள் அல்ல; ஒரு ராஜ்ஜியம் வீழ்ச்சியடைவதற்கும், இன்னொரு ராஜ்ஜியம் எழுச்சியடைவதற்கும் பல வருடங்களிலிருந்து சில நூற்றாண்டுகள் வரை எடுத்திருக்கிறது. அப்படியானால் புதிய ஏற்பாட்டு ராஜ்ஜியங்களுக்கு இது பொருந்தும்; இயேசுவின் வருகையின் காலமான கடைசிகாலங்களுக்கு பொருந்தும். எல்லாம் 7 வருடங்களில் முடிவடைந்துவிடுபவை அல்ல. இயேசுகிறிஸ்து நேற்றைக்கும், இன்றைக்கும், நாளைக்கும் மாறாதவர் என்றால் அவர் சொன்ன தீர்க்கதரிசனங்கள் கடைசி 7 வருடங்களுக்கு மட்டும் பொருந்துவது அல்ல. ராஜ்ஜியங்கள் சிலகாலங்கள் அந்திகிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருந்தாலும் அவரே சதாகாலங்களிலும் ஆளுகை செய்பவர். நான் போதகர்களைக் குறைசொல்லவில்லை. நான் இதை ஆராய்ச்சி செய்துவரும் காலக்கட்டத்தில் கூட, வசனங்களில் தெளிவுள்ள மற்றும் சாட்சியுள்ள வாழ்க்கை வாழும் சில போதகர்களிடத்தில் இதைப் பற்றி கேட்கும்போது, ‘நீங்கள் சொல்வதை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை’ என்று தான் சொல்கிறார்கள். அவர்கள் சரியான வரலாற்று விளக்கங்களை அறியாமல் அல்லது பல காலமாக தங்களுக்குப் போதிக்கப்பட்டபடி தான் இப்படி போதிக்கிறார்கள் என்று புரிந்துகொண்டேன். ஏனென்றால் நானும் ஒருகாலகட்டத்தில் ‘இரகசிய வருகை’ உண்டென்று நம்பி, போதித்தவன் தான்.
எனவே முடிவுகாலம் என்பது
- மிருகமாகிய ரோம ராஜ்ஜியம் வீழ்த்தப்பட்ட பின்பு வரும் கி.பி 1800 லிருந்து ஆரம்பித்து இன்றைய காலம் உட்பட இயேசுவின் இரண்டாம் வருகை நடக்கவிருக்கும் காலத்தைக் குறிக்கும்
- மிருகத்தின் ராஜ்ஜியம் மீது கோபக்கலசங்கள் ஊற்றப்பட்டு ‘தேவனின் கோபம் முடியும்’ காலம்
- பரிசுத்தவான்களை ஒடுக்கி, சத்தியத்தை தரையில் தள்ளி, பூமியின் ராஜாக்களையும், ஜாதிகளையும் கெடுத்த ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியத்தைக் கெடுக்கும் காலம்
- முதல்கலசத்திலிருந்து ஆரம்பித்து இயேசுவின் வருகைக்கு சற்று முன்வரை நீடிக்கும் ஏழாம் கலசம் வரை ஊற்றப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக ரோம ராஜ்ஜியம் முடிவுக்கு வரும் காலம்
- இந்தபூமியில் இயேசுவின் ராஜ்ஜியம் ஸ்தாபிக்கப்பட சுவிசேஷம் சகல ஜாதிகளுக்கும் பிரசங்கிக்கப்பட்டு வரும் காலம்
யுத்தங்கள், அழிவுகள், விசுவாச துரோகம், கிறிஸ்துவின் பேரிலான உபத்திரவங்கள், கள்ள உபதேசங்கள், கள்ள தீர்க்கதரிசனங்கள், அசுத்த கிரியைகள் இன்று வரை நடந்துகொண்டிந்தாலும், அவை ஆதிசபை மற்றும் ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியம் உச்சியில் இருந்த காலத்தில் (கி.பி 11 முதல் 14 ஆம் நூற்றாண்டு வரை) நடந்தவைகளைப் பார்க்கிலும் எந்தவிதத்திலும் ஒப்பிடத்தக்க அளவு அதிகம் அல்ல. எனவே இனி தான் கடைசி காலம், முடிவு காலம் என்ற மாயையிலிருந்து வெளிவர, கிறிஸ்து சபைக்கு அறைகூவல் விடுக்கும் காலம்.