- August 25, 2023
- admin
- 0
இயேசுவின் உவமைகளில் ராஜ்ஜியங்களின் இரகசியங்கள்
இயேசு இந்த உலகில் ஊழியம் செய்த காலங்களில் பெரும்பாலான நேரங்களில் ‘பரலோக சாம்ராஜ்ஜியத்தைக்’ குறித்தே பேசினார். அதைத் தான் தானியேலுக்கு ‘கையால் பெயர்த்தெடுக்கப்படாத கல், உயரமான பர்வதமாக மாறியது’ என்று வெளிப்படுத்தினார். தான் உலகில் வாழ்ந்த காலம் முழுவதும் அந்த ராஜ்ஜியத்திற்கு அனைவரையும் தயார்படுத்துவதையே முழுமுக்கிய நோக்கமாகக் கொண்டிருந்தார்.
உவமைகளின் தனித்துவம்
இயேசு தனது பிரசங்கங்களில் ஒரு தனித்துவத்தைக் கடைபிடித்தார். அதாவது, தன்னுடைய படிப்பறிவில்லாத மற்றும் உண்மை சீடர்கள் மட்டும் புரிந்துகொள்ளும் வகையில் ‘பரலோக ராஜ்ஜியத்தைக் குறித்த இரகசியங்களை’ உவமைகளாகவே பேசினார். இந்த மறைபொருள் உபதேசம் சற்று வித்தியாசமானது. ஞானிகளுக்கு மட்டும் தான் மறைபொருள்களை புரிந்துகொள்ள முடியும் என்ற சூழ்நிலைதான் யோசேப்பு, தானியேலின் காலங்கள் தொட்டு இருந்துவந்தது. ஆனால் இயேசுவின் மறைபொருள்கள் நிறைந்த உவமைகள், அவரை விசுவாசிப்பவர்களுக்கு மட்டுமே புரியும் தனித்துவம் நிறைந்தது. அதனால் தான் அதன் அர்த்தத்தை வேதபாரகர்கள், பரிசேயர், சதுசேயர்களால் புரிந்துகொள்ளமுடியவில்லை.
‘‘அவர் அநேக விஷேசங்களை உவமைகளாக அவர்களுக்குச் சொன்னார்; கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப்புறப்பட்டான்.’’ (மத்தேயு 13:3)
‘‘அப்பொழுது, சீஷர்கள் அவரிடத்தில் வந்து: ஏன் அவர்களோடே உவமைகளாகப் பேசுகிறீர் என்று கேட்டார்கள். அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: பரலோகராஜ்யத்தின் ரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது. அவர்களுக்கோ அருளப்படவில்லை.’’ (மத்தேயு 13:10,11)
‘‘இவைகளையெல்லாம் இயேசு ஜனங்களோடே உவமைகளாகப் பேசினார். உவமைகளினாலேயன்றி, அவர்களோடே பேசவில்லை. என் வாயை உவமைகளால் திறப்பேன், உலகத்தோற்றமுதல் மறைபொருளானவைகளை வெளிப்படுத்துவேன் என்று தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.’’ (மத்தேயு 13:34,35)
இரகசியங்கள் யாருக்கு வெளிப்படுத்தப்படும்?
பரலோக ராஜ்ஜியத்தை விதை விதைக்கிறவனுக்கு ஒப்பாக, நிலத்தில் புதைந்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாக, நல்ல முத்துக்களைத் தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாக, கடுகுக்கு ஒப்பாக மற்றும் வலைக்கு ஒப்பாகக் கூறியதன் அர்த்தமே, நாம் அப்படிப்பட்ட மேலான ராஜ்ஜியத்தைத் தேடிப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காகத் தான். இந்த இரகசியங்கள் உலகப்பிரகாரமான ஞானிகளுக்குக் கூட அருளப்படவில்லை. எனவே, பரலோகராஜ்ஜியம் என்ற ‘கடைசி மற்றும் அழியாத சாம்ராஜ்ஜியத்தைக்’ குறித்த காரியங்கள், அதைத் தேடி அலைபவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் ஒரு அரிய சொத்தாகும். அதனால் தான் பரலோகராஜ்ஜியம் உட்பட எல்லா ராஜ்ஜியங்களைக் குறித்த இரகசியங்கள் தானியேலுக்கு தரிசனங்களில் மறைபொருளாக வெளிப்படுத்தப்பட்டது; யோவானுக்கு பல சங்கேத மொழிகளில் வெளிப்படுத்தப்பட்டது. இதை நேரடியாக எழுதப்பட்டவாறே நாம் புரிந்துகொண்டோம் என்றால், ஏதோ மிருகங்களையும், ரோபோக்களையும் வைத்து எடுக்கப்படும் கார்டூன் படம் போல் தான் தெரியும். இயேசுவின் உவமைகள் எப்படி ஒரு உள் அர்த்தம் கொண்டிருந்தனவோ, அதுபோலவே தானியேல் மற்றும் யோவானின் வெளிப்பாடுகளும் உள் அர்த்தம் கொண்டவைகள் ஆகும்.
இந்த இரகசியங்களில் சில, தானியேலுக்குக் கூட புதைபொருளாக வைக்கப்பட்டது. ஆனால் யோவானுக்கு வெளிப்படுத்தப்பட்ட காரியங்கள், உண்மையாய் அதைத்தேடும் நீதிமான்களுக்கு மறைக்கப்படவில்லை. இதைத்தானியேலின் கடைசி அதிகாரம் மற்றும் வெளிப்படுத்தலின் கடைசி அதிகாரத்தின் வசனங்களில் தெளிவாக ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
‘‘அதற்கு அவன் தானியேலே, போகலாம்; இந்த வார்த்தைகள் முடிவுகாலமட்டும் புதைபொருளாக வைக்கப்பட்டும் முத்திரிக்கப்பட்டும் இருக்கும். அநேகர் சுத்தமும் வெண்மையுமாக்கப்பட்டு புடமிடப்பட்டவர்களாய் விளங்குவார்கள். துன்மார்க்கரோ துன்மார்க்கமாய் நடப்பார்கள்; துன்மார்க்கரில் ஒருவனும் உணரான். ஞானவான்களோ உணர்ந்துகொள்ளுவார்கள்’’ (தானியேல் 12:9,10)
‘‘பின்னும், அவர் என்னை நோக்கி: இந்தப் புஸ்தகத்திலுள்ள, தீர்க்கதரிசன வசனங்களை முத்திரைபோடவேண்டாம்; (முடிவு) காலம் சமீபமாயிருக்கிறது. அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.’’ (வெளி 22:10,11)
இயேசு உலகில் வருவதற்கு முன்பு தானியேலுக்கு புதைபொருளாக வைக்கப்பட்ட முடிவுகாலங்களைக் குறித்த தரிசனங்கள், அவரது சிலுவை மரணம் மற்றும் உயித்தெழுதலுக்குப் பின்பு யோவானுக்கு வெளிப்படுத்தப்படும்போது முத்திரையிடப்படவில்லை. அதை உடைக்கும் அதிகாரத்தையும் இயேசுவின் இரத்தமே பெற்றுத் தந்தது. இதைத் தான் வெளிப்படுத்தலின் ஆரம்ப தரிசனங்களில் யோவான் பார்க்கிறார்.
‘‘ஒருவனும் அந்தப் புஸ்தகத்தைத் திறந்து வாசிக்கவும் அதைப் பார்க்கவும் பாத்திரவானாகக் காணப்படாததினால் நான் மிகவும் அழுதேன். அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான். தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களை தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு,’’ (வெளி 5:4,5,9)
எருசலேமின் அழிவைப் பற்றிய உவமைகள்
இயேசு எருசலேமின் அழிவைப் பல இடங்களில் நேரடியாகவே சொல்லியிருக்கிறார். இருந்தபோதிலும் சில உவமைகளிலும் அதை மிகத்தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
‘‘வேறொரு உவமையைக் கேளுங்கள்: வீட்டெஜமானாகிய ஒரு மனுஷன் இருந்தான், அவன் ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வேலியடைத்து, அதில் ஒரு ஆலையை நாட்டி, கோபுரத்தையும் கட்டி, தோட்டக்காரருக்கு அதைக் குத்தகையாக விட்டு, புறதேசத்துக்குப் போயிருந்தான்.’’ (மத்தேயு 21:33)
என்று ஆரம்பிக்கிற இந்த உவமையில் திராட்சத்தோட்டத்து எஜமான், குத்தகைக்கு விட்டவர்களிடம் கனிகளை வாங்கிவர தனது ஊழியக்காரர்களை ஒன்றன்பின் ஒன்றாக அனுப்புகிறார். ஆனால் குத்தகைக்காரனோ எல்லா ஊழியக்காரர்களையும் கொன்றுவிடுகிறான்.
‘‘கடைசியிலே அவன்: என் குமாரனுக்கு அஞ்சுவார்கள் என்று சொல்லி, தன் குமாரனை அவர்களிடத்தில் அனுப்பினான்.’’ (மத்தேயு 21:37)
ஆனாலும் எஜமானனின் சொந்த குமாரனையும் தோட்டத்திற்குப் ‘புறம்பாகத் தள்ளி’ கொலை செய்தார்கள். இப்படி உவமையை சொல்லிவிட்டு ஜனங்களிடம் இயேசு ஒரு கேள்வியைக் கேட்டார்.
‘‘அப்படியிருக்க, திராட்சத்தோட்டத்தின் எஜமான் வரும்போது, அந்த தோட்டக்காரரை என்ன செய்வான் என்று கேட்டார். அதற்கு அவர்கள்: அந்தக் கொடியவரைக் கொடுமையாய் அழித்து, ஏற்றகாலங்களில் தனக்குக் கனிகளைக் கொடுக்கத்தக்க வேறே தோட்டக்காரரிடத்தில் திராட்சத்தோட்டத்தைக் குத்தகையாகக் கொடுப்பான் என்றார்கள்.’’ (மத்தேயு 21:40,41)
இதில்
- பிதா-திராட்சைதோட்டக்காரர் (யோவான் 15:1)
- திராட்சைத்தோட்டம் – பூமிக்குரிய இஸ்ரவேல்/ ஆவிக்குரிய தேவனுடைய ராஜ்ஜியம்
- கனி-விசுவாச வாழ்க்கை
- குத்தகைக்கு எடுத்தவர்கள் – இஸ்ரவேலர்கள்
- ஊழியக்காரர்கள் – தீர்க்கதரிசிகள் (மத்தேயு 23:37)
- குமாரன்-இயேசுகிறிஸ்து
- வேறேகுத்தகைக்காரர்கள் – புறஜாதி கிறிஸ்தவர்கள்
இந்த உவமையில் யூதர்கள் ஏற்கனவே பல தீர்க்கதரிசிகளைக் கொலை செய்தது போல, இயேசுவையும் புறக்கணித்து கொலை செய்வார்கள்; அதன் பின்பு இஸ்ரவேலும் யூதர்களும் ரோமர்களால் அழிக்கப்பட்டு (அந்தக் கொடியவரைக் கொடுமையாய் அழித்து) ராஜ்ஜியத்தின் பங்கு புறஜாதியாரிடம் கொடுக்கப்படும் என்று இயேசு முன்னரே அறிவித்து விட்டார். அதை அவரே அடுத்த வசனத்தில் நேரடியாகவே சொல்லிவிட்டார்.
‘‘ஆகையால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்.’’ (மத்தேயு 21:43)
இதில் இயேசுவைக் கொலை செய்த யூதர்கள் கொடுமையாக அழிக்கப்படுவார்கள் என்ற தீர்க்கதரிசனம் தான் கி.பி 67-70 களில் நிறைவேறியது. இதைத்தான் எபிரேயர் நிருபத்தை ஆக்கியோனும் அப்போதைய யூதர்களுக்கு எச்சரிக்கையாக எழுதினார். மோசே மூலம் கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணத்தைத் தள்ளுகிறவனுக்கே சாவு நியமிக்கப்பட்டுருந்தால், தேவனுடைய குமாரனாகிய இயேசுவைத் தள்ளினது மட்டுமல்லாமல் கொலையும் செய்ய உடந்தையாக இருந்த யூத சந்ததிக்கு எவ்வளவு கொடிதான ஆக்கினை வரும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்தக் கேள்வி அன்றைய யூதர்கள் முதல் இன்றைய பின்மாற்றம் அடைபவர்கள் வரை பொருந்தும்.
‘‘மோசேயினுடைய பிரமாணத்தைத் தள்ளுகிறவன் இரக்கம்பெறாமல் இரண்டுமூன்று சாட்சிகளின் வாக்கினாலே சாகிறானே; தேவனுடைய குமாரனைக் காலின்கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பானென்பதை யோசித்துப்பாருங்கள்.’’ (எபிரேயர் 10:28,29)
குமாரனின் கலியாணத்திற்கு அழைப்பு கொடுத்த ராஜா
மேலே சொன்ன உவமையைத் தொடர்ந்து இன்னொரு உவமையையும் இயேசு சொன்னார். அதுவும் பரலோக ராஜ்ஜியத்தைக் குறித்தது தான்.
‘‘பரலோகராஜ்யம் தன் குமாரனுக்குக் கலியாணஞ்செய்த ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது.’’ (மத்தேயு 22:2) இதில் ராஜா தன்னுடைய குமாரனின் கலியாண விருந்திற்கு அழைக்கப்பட்டவர்களை (இஸ்ரவேலரை) வரச்சொல்லி தன் ஊழியக்காரர்களை (தீர்க்கதரிசிகள் மற்றும் இயேசு) அனுப்பியும் அவர்கள் அசட்டைபண்ணி ராஜாவின் ஊழியக்காரரைக் கொலையும் செய்தார்கள்.
‘‘ராஜா அதைக் கேள்விப்பட்டு, கோபமடைந்து, தன் சேனைகளை அனுப்பி, அந்தக் கொலைபாதகரை அழித்து, அவர்கள் பட்டணத்தையும் சுட்டெரித்தான்.’’ (மத்தேயு 22:7)
இதிலும் இயேசுவைக் கொலை செய்த யூதர்களும் அவர்கள் பட்டணமாகிய எருசலேமும் பெரும் அழிவை சந்திக்கும் என்ற தீர்க்கதரிசனம் அடங்கியிருக்கிறது. இதுமட்டுமல்லாமல், அதற்குப் பின்பு அழைக்கப்படாத புறஜாதியாருக்கு சுவிசேஷம் சென்றதையும், அவர்களில் பரிசுத்தவான்களுக்கு பரலோக ராஜ்ஜியமும், துன்மார்க்கருக்கு நரக ஆக்கினையும் உண்டு என்பதையும் இந்த உவமையில் இயேசு மிக அழகாகக் கூறியுள்ளார்.
‘‘அப்பொழுது, அவன் தன் ஊழியக்காரரை நோக்கி: கலியாண விருந்து ஆயத்தமாயிருக்கிறது, அழைக்கப்பட்டவர்களோ அதற்கு அபாத்திரராய்ப்போனார்கள். ஆகையால், நீங்கள் வழிச்சந்திகளிலே போய், காணப்படுகிற யாவரையும் கலியாணத்திற்கு அழைத்துக்கொண்டு வாருங்கள் என்றான்.’’ (மத்தேயு 22:8,9)
‘‘சிநேகிதனே, நீ கலியாண வஸ்திரமில்லாதவனாய் இங்கே எப்படி வந்தாய் என்று கேட்டார். அதற்கு அவன் பேசாமலிருந்தான். அப்பொழுது, ராஜா பணிவிடைக்காரரை நோக்கி: இவனைக் கையுங்காலும் கட்டிக்கொண்டுபோய், அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளிலே போடுங்கள் என்றான்.’’ (மத்தேயு 22:12,13)
பரலோக ராஜ்ஜியத்தைப் பற்றிய உவமைகளையும், இரகசியங்களையும் இன்னும் தோண்டினால் அதை எழுத இந்தப் புத்தகம் காணாது என்பதால் இத்துடன் முடித்துக்கொள்கிறேன். ‘கிழக்கிலும், மேற்கிலுமிருந்து அநேக ஜனங்கள் தேவனுடைய ராஜ்ஜியத்தில் பந்தியிருப்பார்கள்’ என்று சொல்லி புறஜாதியாரான நம்மையும் அழைத்து சேர்த்துக்கொண்ட நம் இயேசுவின் அன்பை என்னவென்று சொல்வது?
முடிவு காலங்கள்: அத்திமர உவமை
நாம் ஏற்கனவே இதற்கு முந்தைய அத்தியாயத்தில் மத்தேயு 24 ஐ இரண்டு பாகங்களாகப் பார்த்தோம். இப்போது மூன்றாம் பாகமாகிய உவமையின் பாகத்தைப் பார்க்கப் போகிறோம். இது 32 ஆம் வசனத்தில் ஆரம்பித்து அதிகாரத்தின் கடைசி வரை செல்கிறது. இயேசுவால் சபிக்கப்பட்ட அத்திமரமாகிய இஸ்ரவேல் கி.பி 70 ல் பட்டுப்போயிற்று.
“காலையிலே அவர் (எருசலேம்) நகரத்துக்கு திரும்பி வருகையில், அவருக்குப் பசி உண்டாயிற்று. அப்பொழுது வழியருகே ஒரு அத்திமரத்தைக் கண்டு, அதனிடத்திற் போய், அதிலே இலைகளையன்றி வேறொன்றையும் காணாமல்: இனி ஒருக்காலும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக்கடவது என்றார்; உடனே அத்திமரம் பட்டுப்போயிற்று.” (மத்தேயு 21:18,19)
ஆனால் அது மீண்டும் துளிர்விடும் என்றே இயேசு சொல்லிவைத்துச் சென்றார். அதுதான் கி.பி 1948 ஆம் வருடம்.
‘‘அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்த காலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள். அப்படியே இவைகளையெல்லாம் நீங்கள் காணும்போது, அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள்.’’ (மத்தேயு 24:32& 33)
இதே முடிவுகாலத்தை குறித்து இயேசு சொன்னவைகளை லூக்கா சொல்லும்போது ‘அத்திமரத்தை மட்டுமல்ல, மற்ற எல்லா மரங்களையும் பாருங்கள்’ என்று சொல்லிவிட்டு தான் இந்த உவமையை ஆரம்பிக்கிறார்.
‘‘அன்றியும் அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்: அத்திமரத்தையும் மற்றெல்லா மரங்களையும் பாருங்கள். அவைகள் தளிர்க்கிறதை நீங்கள் காணும்போது வசந்தகாலம் சமீபமாயிற்றென்று அறிகிறீர்கள்’’
இதில் அத்திமரம் துளிர்விடுவது என்பது இஸ்ரவேல் மீண்டும் தேசமாக உருவாவதைக் குறிப்பதாக வைத்துக்கொண்டாலும், மற்ற மரங்கள் என்பது இஸ்ரவேலை சுற்றி உள்ள மற்ற மத்திய கிழக்கு நாடுகள் உலக சாம்ராஜ்ஜியங்களின் காலனி ஆதிக்கத்திலிருந்து சுதந்திரம் அடைவதைக் குறிக்கும் என்றும், இதுவும் கி.பி 1950 களுக்குப் பின் நிறைவேறிவருகிறது என்று சில வேத அறிஞர்கள் கருதுகின்றனர். எனவே இந்த உவமை மீண்டும் இயேசு வெளிப்படப்போகும் காலம் நெருங்கிவருவதையே குறிப்பதாகும். எனவே இந்த உவமையின் மையம் அத்திமரமோ, வேறு மரமோ அல்ல; மாறாக தளிர்விடும் ‘வசந்தகாலம்’ தான். மத்தேயு 24 ன் முதல் இரண்டு பாகங்களில் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்கள் நிறைவேறி முடிக்கும் ‘காலத்தை’ மட்டுமே முதன்மைப்படுத்தி சொல்லப்பட்ட தீர்க்கதரிசனமே ஒழிய, இஸ்ரவேல் மீண்டும் உருவாவதை மட்டும் குறித்த தீர்க்கதரிசனம் அல்ல. அதைத்தான் இயேசுவும் ‘அப்படியே இவைகளையெல்லாம் நீங்கள் காணும்போது வாசலருகே வந்திருக்கிறேன் அல்லது எனது இரண்டாம் வருகை சமீபம்’ என்ற அர்த்தத்தில் சொல்லியிருக்கிறார்.
காலங்களைப் பற்றிய விளக்கங்கள்
இப்படி வசந்தகாலத்தைப் பற்றி சொல்லியதுடன் நிற்காமல், மேலும் பல காலங்களைப் பற்றிய உருவகங்களைத் தொடர்ச்சியாக அடுத்த வசனங்களில் இயேசு சொல்லியிருக்கிறார். நீங்கள் மிக முக்கியமாகத் தெரிந்துகொள்ளவேண்டிய விசயம் என்னவென்றால், இனிவரும் வசனங்கள் எல்லாம் இயேசுவின் இரண்டாம் வருகையையும், அதைத் தொடர்ந்து அவரது முடிவில்லா ராஜ்ஜியம் ஸ்தாபிக்கப்படுவதையும் தான் தெளிவாகக் கூறியிருக்கிறதே தவிர, அவர் இரகசியமாக வரப்போகிறாரா அல்லது இரகசியமாகவும், பகிரங்கமாகவும் வரப்போகிறாரா என்பதைக் குறிப்பிடவில்லை. இதில் தெளிவு இல்லாததால் என்ன மாதிரியான தவறான வியாக்கியானங்கள் சொல்லப்படுகின்றன என்பதையும் நாம் பார்க்க இருக்கிறோம்.
‘‘அந்த நாளையும் அந்த நாழிகைகளையும் என் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்.’’ (மத்தேயு 24:36)
இதில் அந்த நாள் மற்றும் நாழிகை என்பது இயேசுவின் இரண்டாம் வருகையையே குறிக்கிறது. இயேசு எந்த நாளிலே, எத்தனை மணி நேரத்திலே வருவார் என்பது தான் இரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறதே தவிர, அவர் இரகசியமாகத் தான் வருவார் என்பதற்கான ஆதாரம் இது அல்ல. இதைப் புரிந்துகொண்டால் தான் அடுத்த வசனங்கள் உங்களுக்கு இன்னும் தெளிவாகப் புரியும்.
நோவாவின் காலம்
‘‘நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும். எப்படியெனில், ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள் வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண்கொண்டும் பெண்கொடுத்தும், ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள்; அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும். அப்பொழுது, இரண்டுபேர் வயலில் இருப்பார்கள்; ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், ஒருவன் கைவிடப்படுவான். இரண்டு ஸ்திரீகள் எந்திரம் அரைத்துக்கொண்டிருப்பார்கள்; ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், ஒருத்தி கைவிடப்படுவாள்.’’ (மத்தேயு 24:37-41)
இந்த வசனங்களில் நோவாவின் காலத்தை, மனுஷகுமாரன் வரும் காலத்தோடு ஒப்பிடப்பட்டுள்ளது. இதைப் பலர் இரண்டு வருகைக்கு ஒப்பான உவமையாக எடுத்துக்கொண்டு போதிக்கின்றனர். ஜலப்பிரளயத்தை உலகத்தின் அழிவிற்கும், அதற்கு முன்னாக நோவாவும் அவரது குடும்பமும் பேழைக்குள் பாதுகாக்கப்பட்டதை அந்திகிறிஸ்துவின் ஆட்சிகாலத்திற்கு முன்னான இரகசிய வருகையில் சபை எடுத்துக்கொள்வதற்கும் ஒப்பிட்டு போதிக்கின்றனர். ஆனால் உண்மையில் இவ்வசனங்கள், நோவாவின் காலத்தில் ஜனங்கள் கடைசி அழிவு வரும்வரை எப்படி ‘காலத்தின் அருமையை உணராதிருந்தார்களோ’, அதுபோலத் தான் இந்த கடைசி நாட்களில் இருக்கும் மக்களும் எத்தனை முறை எச்சரித்தாலும் இயேசுவின் வருகை நடக்கும் நாள் வரையில் உணராமலும், மனம் திரும்பாமலும் வழக்கமான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருப்பார்கள் என்பதையே விவரிக்கிறது. இதை நீங்களே ஆராய்ந்து பாருங்கள்.
சிலர் ஜலப்பிரளயம் வருவதற்கு முன்பு நோவாவின் குடும்பம் காக்கப்பட்டது போல, கடைசி 7 வருடங்களில் அந்திகிறிஸ்துவின் உபத்திரவ காலத்திற்கு முன்பு பரிசுத்த சபை எடுத்துக்கொள்ளப்படும் என்று நம்புகின்றனர். ஒருவேளை அப்படியே எடுத்துக்கொண்டாலும், நோவாவின் காலத்தில் மனம் திரும்பாமல் வெள்ளத்தில் அகப்பட்டவர்களுக்கு இரண்டாம் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்பதை மனதில் கொள்ளவேண்டும். நோவாவின் குடும்பத்தைத் தவிர எல்லாரும் அழிந்து போனார்கள். அந்திகிறிஸ்துவின் 7 வருட ஆட்சிக்குப் பின்பு தான் இயேசு பகிரங்கமாக வெளிப்பட்டு, உபத்திரவங்களைத் தாங்கி விசுவாசத்தைக் காத்துக்கொண்ட யூதர்களையும், மற்ற ஜனங்களையும் மீண்டும் அழைத்துச் செல்வார் என்ற ‘இரண்டாம் வாய்ப்பு’ தான் பலருடைய விசுவாசத்தை வழுவச் செய்யும் தவறான போதனையாகும். மேலும் இயேசுகிறிஸ்து வானத்தில் தூதர்களோடும், எக்காள சத்தத்தோடும் வெளிப்படும்போது, ஒரு கூட்டம் எடுத்துக்கொள்ளப்படும், ஒரு கூட்டம் கைவிடப்படும் என்று தான் மேற்கண்ட வசனங்கள் சொல்கின்றதே தவிர, விசுவாசிகள் இரகசியமாய் எடுத்துக்கொள்ளப்படுவார்கள் என்று சொல்லவில்லை. கைவிடப்பட்ட ஒரு கூட்டத்தாருக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்கப்பட்டதா என்பதை ஆரய்ந்து பாருங்கள்.
லோத்தின் நாட்கள்
கடைசி நாட்களின் சம்பவங்களை லோத்தின் நாட்களில் நடைபெற்ற அழிவையும், அவர் குடும்பம் மட்டும் காப்பாற்றப்பட்டதையும் ஒப்பிட்டு இயேசு கூறியுள்ளார்.
‘‘லோத்தினுடைய நாட்களில் நடந்ததுபோலவும் நடக்கும்; ஜனங்கள் புசித்தார்கள், குடித்தார்கள், கொண்டார்கள், விற்றார்கள், நட்டார்கள், கட்டினார்கள். லோத்து சோதோமை விட்டுப் புறப்பட்ட நாளிலே வானத்திலிருந்து அக்கினியும் கந்தகமும் வருஷித்து, எல்லாரையும் அழித்துப்போட்டது. மனுஷகுமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்.’’ (லூக்கா 17:28-30)
இதில் லோத்துவின் குடும்பத்தை கர்த்தர் அழிவுக்கு சற்றுமுன் தப்புவித்தார். அவருடைய குடும்பம் சோதோமை விட்டு வெளியேறிய மறுகணமே சோதோம் அழிக்கப்பட்டது. இதில் நாம் கவனிக்க வேண்டிய மூன்று முக்கிய விஷயங்கள் பின்வருமாறு…..
- லோத்தின் நாட்களில் சோதோம் மக்கள் எப்படி அழிவுக்கு சற்று முன் வரை சாப்பிட்டு, திருமணம் செய்து, ஆடிப்பாடி, உணர்வில்லாமல், மனம்திரும்பாமல் இருந்தார்களோ, அதைப் போலவே இயேசுவின் வருகைக்கு முந்தின நொடிப்பொழுது வரை விசுவாசிக்காத மக்களும் இருப்பார்கள்
- நீதிமானான லோத்தின் குடும்பம் எப்படி மீட்கப்பட்டதோ, அப்படியே கடைசி காலங்களிலும் நீதிமான்களாய் வாழ்பவர்கள் இயேசுவின் பகிரங்க வருகையில் எடுத்துக்கொள்ளப்படுவார்கள்.
- லோத்தின் குடும்பம் வெளியேறிய அடுத்த நொடிப்பொழுதே சோதோம் எப்படி அழிக்கப்பட்டதோ, அப்படியே மனுஷகுமாரன் வந்து தனது ஜனத்தை சேர்த்துக்கொண்ட பின்பு துன்மார்க்கமாய் வாழ்ந்தவர்கள் நரக அழிவுக்கு ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்; பூமியின் ராஜ்ஜியங்கள் அழிக்கப்படும். இதில் சொல்லப்பட்ட அழிவு
என்பது அந்திகிறிஸ்துவின் ராஜ்ஜியத்தின் மேல் ஊற்றப்படும் அழிவு அல்ல. அதில் உபத்திரவங்களை சகித்தவர்கள் எப்படி மொத்தமாக அழித்த அக்கினியிலிருந்தும், கந்தகத்திலிருந்தும் தப்ப முடியும்?
இரண்டாம் வாய்ப்பு உண்டென்றால் சோதோமில் பாவம் செய்தவர்களில் ஒருசிலருக்காவது மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்க வேண்டுமே? மேலும் இதில் மனுஷகுமாரன் ‘வெளிப்படும்’ நாளில் என்று கூறப்பட்டுள்ளதே ஒழிய ‘இரகசியமாக’ வரும் நாளில் என்று கூறப்படவில்லை.
திருடனைப் போல் எப்படி வருவார்?
மேலே சொன்ன விளக்கங்களை உறுதிப்படுத்தும் வகையில் இயேசு சொன்னது தான் ‘திருடனைப் போல’ என்ற உவமை ஆகும்.
‘‘உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள். திருடன் இன்ன ஜாமத்தில் வருவானென்று வீட்டெஜமான் அறிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டானென்று அறிவீர்கள். நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்.’’ (மத்தேயு 24:42-44)
சிலர் இயேசு திருடனைப் போல வருவேன் என்று சொன்னதால், திருடன் எப்படி விலை உயர்ந்த பொருள்களைத் திருட வருவானோ, அதுபோல இயேசுவின் விலையேறப்பெற்ற இரத்தத்தாலே மீட்டுக்கொள்ளப்பட்ட விசுவாசிகளை எடுத்துக்கொள்ள திருடனைப் போல ‘யாருக்கும் தெரியாமல் இரகசியமாக வந்து’ சபையை எடுத்துக்கொள்வார் என்று நம்புகின்றனர். இது ‘A theif in the night’ மற்றும் ‘Left behind’ போன்ற ஹாலிவுட் திரைப்படங்களினால் சபைகளில் ஏற்பட்ட வஞ்சனையின் தாக்கமே. இந்த வசனங்களை சற்று நன்றாக உற்றுக் கவனித்தால் இயேசு ‘திருடன் யாருக்கும் தெரியாமல் ஒளிந்து வரும் விதத்தை’ மையப்படுத்தியிருக்கிறாரா? அல்லது ‘திருடன் வரும் நேரத்தை’ மையப்படுத்தியிருக்கிறாரா? என்பது உங்களுக்கே புரியவரும். ‘இன்ன நாழிகையிலே, இன்ன ஜாமத்திலே, நினையாத நாழிகையிலே’ என்ற வார்த்தைகள், இயேசு யாரும் உணராதிருக்கிற, யாரும் யூகிக்க முடியாத ‘நேரத்தில்/காலத்தில்’ தான் வருவார் என்பதைத் தான் குறிக்குமே தவிர, இரகசியமாக அல்லது யாருக்கும் தெரியாமல் வருவார் என்பதைக் குறிக்கும் வார்த்தைகள் அல்ல. இதைத்தான் பவுல் அப்போஸ்தலன் சொல்லும்போது
‘‘சகோதரரே இவைகள் நடக்குங்காலங்களையும் சமயங்களையுங்குறித்து உங்களுக்கு எழுதவேண்டுவதில்லை. இரவிலே திருடன் வருகிறவிதமாய்க் கர்த்தருடைய நாள் வருமென்று நீங்களே நன்றாய் அறிந்திருக்கிறீர்கள். சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல, அழிவு சடிதியாய் அவர்கள்மேல் வரும்; அவர்கள் தப்பிப்போவதில்லை.’’ (1 தெசலோனிக்கேயர் 5:1-3)
இதிலும் அவர் கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிற விதமாய் என்று, அவர் வரும் காலங்களையும், சமயங்களையுமே கூறுகின்றார். இதில் கர்த்தருடைய நாள் என்பது குறிப்பிட்ட ஒரு நாள் என்ற அர்த்தம் அல்ல; மாறாக இயேசுவின் வருகையின் நாளையும், அதனைத் தொடர்ந்து உலகத்தின் அழிவையுமே குறிக்கும். இயேசுவின் வருகைக்கு சற்று முன் மகா உபத்திரவ காலம் இருக்கும் என்று தான் இன்று போதிக்கப்படுகிறது. ஆனால் எப்படி ஒரு நிறைமாத கர்ப்பிணிக்கு பிரசவவலி திடீரென்று வருமோ, அதைப்போல கர்த்தருடைய நாள் வரும் என்றும், உபத்திரவத்தின் காலத்தில் அல்ல, மாறாக உலகம் சமாதானமாய் தான் இருக்கிறது என்று சொல்லப்படும் காலத்தில் தான் சடுதியாய் வருகை இருக்கும் என்றும் பவுல் கூறுகிறார்.
இதைத்தான் இயேசு, ஆதிசபை அடையப்போகும் உபத்திரவங்களை ‘வேதனைகளுக்கு ஆரம்பம்’ என்று குறிப்பிடுகிறார். அப்படியானால் பிரசவம் நெருங்கும் காலம் பவுல் குறிப்பிட்டபடி கடைசியில் தான் வரும் என்பதில் சந்தேகமே இல்லை.
‘‘இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம். But all this is only the first of the birth pains, with more to come’’ (மத்தேயு 24:8)
எஜமான் வரும் நேரம்/காலம்
இதை அடுத்து ‘வெளியூர் சென்ற தன் எஜமான் வர காலம் செல்லும்’ என்று எண்ணி அக்கிரமம் செய்த விசாரணைக்காரனைக் குறித்த உவமையும், எஜமான் யாரும் அறியாத ‘வேளையில்’ வருவார் என்பதைத் தான் இன்னும் உறுதிபட வெளிப்படுத்துகிறது.
‘‘அந்த ஊழியக்காரனோ பொல்லாதவனாயிருந்து: என் ஆண்டவன் வர நாள் செல்லும் என்று தன் உள்ளத்திலே சொல்லிக்கொண்டு, தன் உடன்வேலைக்காரரை அடிக்கத் தொடங்கி, வெறியரோடே புசிக்கவும் குடிக்கவும் தலைப்பட்டால், அந்த ஊழியக்காரன் நினையாத நாளிலும், அறியாத நாழிகையிலும், அவனுடைய எஜமான் வந்து,’’ (மத்தேயு 24:48-50)
எனவே மத்தேயு 24 ன் மூன்றாவது பாகம் இயேசு திடீரென்று யாரும் யூகிக்க முடியாத நேரத்தில் வருவார் என்பதைத் தான் திரும்பத் திரும்பக் கூறுகின்றதே தவிர, இயேசு ஒரு முறை இரகசியமாக வருவார்; பின்பு பகிரங்கமாக வருவார் என்று எங்கும் சொல்லவில்லை. இதேபோல் ‘கலியாணத்திற்கு சென்ற எஜமானுக்காக கதவைத் திறக்கக் காத்திருக்கும் ஊழியக்காரனைப் பற்றிய’ இன்னொரு உவமையில் எஜமான் வரும் காலநேரத்தையே மையப்படுத்தி சொல்லப்பட்டுள்ளது.
‘‘எஜமான் வரும்போது, விழித்திருக்கிறவர்களாகக் காணப்படுகிற ஊழியக்காரரே பாக்கியவான்கள். ‘‘ (லூக்கா 12:37)
பத்து கன்னிகைகளும், பரலோக ராஜ்ஜியமும்
மத்தேயு 24 ல் கடைசி காலங்களைப் பற்றி சொல்லிவிட்டு, தொடர்ச்சியாக மத்தேயு 25 ல் இயேசு சொன்ன ‘பரலோக ராஜ்ஜியத்தைக் குறித்த’ உவமை தான் ஐந்து புத்தியுள்ள மற்றும் ஐந்து புத்தியில்லாத கன்னிகைகளைப் பற்றியதாகும். இந்த உவமை எல்லோருக்கும் நன்றாகத் தெரிந்த உவமை என்பதால் அதனைப் பற்றி விளக்காமல், அதின் சில சாரம்சங்களை மட்டும் கொடுக்கிறேன்.
- இரண்டுவகையான கன்னிகைகளுக்கும் ஒரே ஒரு வாய்ப்பு மட்டும் தான் கொடுக்கப்பட்டது
- மணவாளன் எல்லோருடைய கண்களுக்கும் தெரியும்படியாகத்தான் வந்தார்; வெளிப்படையாகத் தான் வந்தாரே தவிர இரகசியமாக வரவில்லை.
- மணவாளன் வந்துவிட்டார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்ற சத்தத்தை இரண்டு வகையான கன்னிகைகளும் கேட்டார்கள். ஆயத்தமாயிருந்தவர்கள் ஒரே தவணையில் எடுத்துக்கொள்ளப்பட்டார்கள்.
- மணவாளன் வரும்போது ஆயத்தமில்லாமல் காணப்பட்ட புத்தியிலாத கன்னிகைகளுக்கு இரண்டாம் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. ‘ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடே கூடக் கலியாண வீட்டிற்குள் பிரவேசித்தார்கள்; கதவும் அடைக்கப்பட்டது.’
இந்த உவமையை சொல்லி விட்டு இயேசு பின்வருமாறு கூறினார்.
‘‘மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்.’’ (மத்தேயு 25:13)
மேற்கண்ட உவமைகளில் கூட இயேசுவின் வருகையும், நியாயத்தீர்ப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதே தவிர இரகசிய வருகையைக் குறித்தும், அந்திகிறிஸ்துவின் 7 வருட ஆட்சியைக் குறித்தும், இரண்டாம் வாய்ப்பைக் குறித்தும் எந்த வார்த்தைகளும் சொல்லப்படவில்லை. மேலும், ‘சபை’ வருகையில் எடுத்துக்கொள்ளப்படும் என்று போதிக்கப்படுகிறது. சபையில் இயேசுவின் அடிச்சுவடிகளைப் பின்பற்றும் உண்மை விசுவாசிகள் இருந்தால் அவர்கள் மட்டுமே இரண்டாம் வருகையில் எடுத்துக்கொள்ளப்படுவார்களே தவிர, சபையில் அங்கத்தினராக இருக்கும் அனைவரும் எடுத்துக்கொள்ளப்படுவார்கள் என்ற அர்த்தம் அல்ல. இது தான், ஒருவர் எடுத்துக்கொள்ளப்படுவான், ஒருவன் கைவிடப்படுவான் என்பதாகும். இயேசுவின் வருகையைக் குறித்து யார் என்ன சொன்னாலும், அவர் சொல்வது வேதத்தில் உள்ளபடி ஒத்துப்போகிறதா என்று ஆராய்ந்து பாருங்கள்.
இப்படி சபையின் பாரம்பரியத்தை மட்டும் பின்பற்றி, போப்புகளும், பாதிரியார்களும் என்ன சொல்கிறார்களோ அதை மட்டும் பின்பற்றி, வேதபுத்தகத்தில் இருக்கும் அடிப்படை சத்தியங்களைக் கூட அறியாதவாறு தங்கள் காதுகளையும் இருதயத்தையும் அடைத்துக்கொண்டு இருப்பதால் தான் ரோமன் கத்தோலிக்க சபை இன்னும் அந்திகிறிஸ்துவின் ஆளுகைக்குள் இருக்கிறது. அவர்கள் மட்டும் அல்ல; வேதத்திற்குப் புறம்பாக போதிக்கும் எந்த சபையும் அந்திகிறிஸ்துவின் சபையே; எந்த போதகரும் வஞ்சனையின் ஆவிக்கு உட்பட்டவரே. திருமண்டல சட்டங்களும், தேர்தல்களும், ஆட்சி அதிகாரங்களும் விசுவாசத்தை மறுதலிப்பதாக இருந்தால் அந்த சபைகளும் அந்திகிறிஸ்துவுக்கு செவிசாய்க்கும் சபைகள் தான். இயேசுவின் வருகையில் பங்கடைய வேண்டுமானால் இன்றே விழித்துக்கொள் சபையே. காதுள்ளவன் கேட்கக்கடவன்.