- August 26, 2023
- admin
- 0
தீர்க்கதரிசன காலங்களும், எருசலேமின் அழிவும் (கி.பி 67- கி.பி 72)
தீர்க்கதரிசன புத்தகங்களை வியாக்கியானம் செய்வதற்கு, எருசலேம் சந்தித்த அழிவுகளைப் பற்றி நாம் அறிந்துகொள்வது மிகவும் அவசியமானது. பரிசுத்த வேதத்திலுள்ள பெரும்பாலான தீர்க்கதரிசன புத்தகங்கள், பல காலகட்டங்களில் எருசலேம் மீது நடைபெற்ற படையெடுப்புகள், முற்றிக்கைகள், லேசான மற்றும் நிர்மூலமாக்கப்பட்ட அழிவுகளை ஏராளமான இடங்களில் வெளிப்படுத்துகிறது. அப்படியென்றால் தானியேல் மற்றும் இயேசுவின் தீர்க்கதரிசனங்களில் அவை கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும் அல்லவா? வெளிப்படுத்தல் புத்தகம் ‘பரம எருசலேமைப்’ பற்றி பேசுவதால், அது எவ்வாறு மகாராஜாவின் நகரமாக ஸ்தாபிக்கப்படப் போகிறது என்பதைக் குறித்தே அதிகமாகப் பேசுகிறது.
நோக்கம் என்ன?
இந்த அத்தியாயத்தில் எருசலேமின் அழிவுகளைப் பற்றி பேசுவதற்கு என்ன நோக்கம் இருக்கிறது என்று நீங்கள் யோசிக்கலாம். எருசலேமின் அழிவுகளைப் பற்றிய வரலாறு தெரியாததாலும், அப்போது நடந்த சம்பவங்கள் எப்படி தீர்க்கதரிசனங்களின் நிறைவேறுதலாக நடந்து முடிந்தன என்று புரியாததாலும் தான், நாம் தானியேலின் ‘பாழாக்கும் அருவருப்பைக்’ குறித்த தீர்க்கதரிசனங்களையும், இயேசு அதையே மத்தேயு 24 ல் குறிப்பிட்டுள்ளதையும் தவறாக வியாக்கியானம் செய்யக் காரணமாகின்றது. இந்தக் காரியங்கள் நடந்து முடிந்துவிட்டதா? அல்லது இனி தான் நடக்கப்போகிறதா? என்று வரலாறு தெரிந்தால் தான் நமக்குப் புரியவரும்.
எருசலேம் என்னும் கன்னி மற்றும் கண்ணி
எருசலேம் மற்றும் இஸ்ரவேல் இயேசுவுக்கு நியமிக்கப்பட்ட ‘கன்னி’ மட்டுமல்ல; புறஜாதிகளுக்கு ஒரு ‘கண்ணியும்’ கூட. வரலாற்றாசிரியர் ‘சைமன் சிக்மண்ட் மாண்டிபையர்’ கூறும்போது ‘உலக வரலாற்றின் மையம் எருசலேம்’ என்றும் ‘உலக வல்லரசாக நினைத்த எல்லா ராஜாக்களும் எருசலேம் மீது கண்வைத்து அதனை கைப்பற்ற முயற்சித்தார்கள்’ என்றும் கூறுகிறார். நாம் இதுவரை பார்த்த ஆறு உலக சாம்ராஜ்ஜியங்களும் எருசலேம் மீது படையெடுத்தது மட்டுமல்லாமல், யூதர்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். உலகிலேயே அதிக முறை படையெடுப்புக்கு ஆளானதும், முற்றிகையிடப்பட்டதும், அழிக்கப்பட்டதும், சிறையிருப்புக்கு கொண்டுசெல்லப்பட்டதும் எருசலேம் தான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அப்படி சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த படையெடுப்புகள் மற்றும் அழிவுகளில், கடைசிகால தீர்க்கதரிசனங்களை வியாக்கியானம் செய்ய உதவும் மிக முக்கியமானவற்றை மட்டும் இந்த அத்தியாயத்தில் ‘வேத வசனங்களில் ஆதாரங்களோடு’ ஒப்பிட்டுப் பார்ப்போம்.
உலக சாம்ராஜ்ஜியங்களின் படையெடுப்புகள்
யூதா மற்றும் பென்யமீன் கோத்திரங்கள் தவிர இஸ்ரவேல் ராஜ்ஜியத்தின் கடைசி ராஜாவும், ஜனங்களும் அசீரிய ராஜ்ஜியத்தினால் சிறைக்கைதிகளாக கொண்டுபோய் நிரந்தரமாக அசீரியாவில் தங்கவைக்கப்பட்டார்கள் என்று நாளாகமம் மற்றும் இராஜாக்களில் பார்க்கிறோம்.
‘‘இஸ்ரவேலின் ராஜாவாகிய பெக்காவின் நாட்களில் அசீரியாவின் ராஜாவாகிய திகிலாத்பிலேசர் வந்து, ஈயோனையும், பெத்மாக்கா என்னும் ஆபேலையும், யனோவாகையும், கேதேசையும், ஆத்சோரையும், கீலேயாத்தையும், கலிலேயாவாகிய நப்தலி தேசமனைத்தையும் பிடித்து, குடிகளைச் சிறையாக அசீரியாவுக்குக் கொண்டுபோனான்.’’ (2 இராஜாக்கள் 15:29)
இந்த படையெடுப்பில் மீதமிருந்தவர்கள் 10 வருடங்கள் கழித்து மீண்டும் இரண்டாம் சிறையிருப்பாகக் கொண்டுபோகப்பட்டார்கள்.
‘‘அசீரியா ராஜா தேசம் எங்கும் போய், சமாரியாவுக்கும் வந்து அதை மூன்று வருஷம் முற்றிக்கை போட்டிருந்தான். ஓசெயாவின் ஒன்பதாம் வருஷத்தில் அசீரியா ராஜா சமாரியாவைப் பிடித்து, இஸ்ரவேலை
அசீரியாவுக்குச் சிறையாகக் கொண்டுபோய், அவர்களைக் கோசான் நதி ஓரமான ஆலாகிலும் ஆபோரிலும் மேதியரின் பட்டணங்களிலும் குடியேற்றினான்.’’
இதேபோல் யூதா ராஜ்ஜியத்தின் மக்களை நேபுகாத்நேச்சார் பாபிலோனுக்கு சிறைக்கைதிகளாகக் கொண்டுபோனான் என்பதையும், அவன் எவ்வாறு எருசலேமின் தேவாலயம், மதில்கள், மற்றும் பட்டணம் முழுவதையும் தீக்கிரையாக்கினான் என்பதையும் பாபிலோன் சாம்ராஜ்ஜியத்தைக் குறித்த அத்தியாயத்தில் விளக்கமாக ஏற்கனவே பார்த்துவிட்டோம். பாபிலோனுக்கு சென்ற யூதர்கள் 70 வருடங்கள் கழித்து மீண்டும் எருசலேமிற்கு திரும்பி வந்தார்கள்.
‘‘அப்படியே சிறையிருப்பிலிருந்து திரும்பிவந்த இஸ்ரவேல் புத்திரரும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை நாடும்படி, பூலோக ஜாதிகளின் அசுத்தத்தை விட்டு, அவர்களண்டையிலே சேர்ந்த அனைவரும் அதைப் புசித்து, புளிப்பில்லாத அப்பப்பண்டிகையை ஏழுநாளாகச் சந்தோஷத்துடனே ஆசரித்தார்கள்; கர்த்தர் அவர்களை மகிழ்ச்சியாக்கி, அவர்கள் கைகளை இஸ்ரவேலின் தேவன் என்னும் தேவனுடைய ஆலயத்தின் வேலையிலே பலப்படுத்தத்தக்கதாய் அசீரியருடைய ராஜாவின் இருதயத்தை அவர்கள் பட்சத்தில் சார்ந்திருக்கப்பண்ணினார்.’’ (எஸ்றா 6;21,22)
இஸ்ரவேல் மற்றும் யூதா ராஜாக்கள் மேல் எகிப்தின் பார்வோன்களும் அவ்வப்போது படையெடுத்தனர்.
‘‘அவன் எருசலேமில் அரசாளாதபடிக்கு எகிப்தின் ராஜா அவனைத் தள்ளிவிட்டு, தேசத்தின்மேல் நூறு தாலந்து வெள்ளியும் ஒரு தாலந்து பொன்னுமான தண்டத்தைச் சுமத்தி, அவனுடைய அண்ணனாகிய எலியாக்கீமை யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் ராஜாவாக்கி, அவன் பேரை யோயாக்கீம் என்று மாற்றினான்; அவன் தம்பியாகிய யோவாகாசை எகிப்தின் ராஜாவாகிய நேகோ எகிப்திற்குக் கொண்டுபோனான்’’. (2 நாளாகமம் 36:3,4)
மேதிய-பெர்சிய சாம்ராஜ்ஜியம் பாபிலோனை வீழ்த்திய காலகட்டத்தில் இஸ்ரவேல் பாபிலோன் கட்டுப்பாட்டிற்குள் இருந்ததால், நேரடியாகவே பெர்சியனான கோரேசின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. அவனை கர்த்தர் ஏவினதால் தான் அவன் பாபிலோனிய யூதர்களை விடுவித்து மீண்டும் எருசலேமிற்கு அனுப்பினான். அதன் பின்பு தான் தேவாலயம், மதில்கள், நகரம் மீண்டும் கட்டப்பட்டது என்பதையும் ஏற்கனவே பார்த்துவிட்டோம். இதற்கு அடுத்துவந்த கிரேக்க சாம்ராஜ்ஜியத்தின் முதல் பேரரசனான மகா அலெக்சாண்டரும் எருசலேமின் மீது படையெடுத்து அதைத் தன் ஆளுகைக்கு கீழ் கொண்டுவந்தான். ஆனால் அவன் அதை அழிக்கவில்லை. அவனது வழித்தோன்றலாக வந்த மூன்றாம் மகா ஆண்டியோகஸ் மற்றும் ஆண்டியோகஸ் எபிபேனஸ்-IV என்ற இரண்டு செலுசிய ராஜாக்களும் எருசலேமை முற்றுகையிட்டு தாக்கினார்கள் என்றும் ஆண்டியோகஸ் எபிபேனஸ்-IV தான் தானியேல் 11 ல் சொல்லப்பட்ட பாழாக்கும் அருவருப்பை தேவாலயத்தின் மகாபரிசுத்த ஸ்தலத்தில் வைத்து ஏராளமான தீட்டுகளை செய்து தானியேல் 11 ன் பெரும்பாலான தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றினான் என்பதை கிரேக்க சாம்ராஜ்ஜியத்தின் தென் திசை மற்றும் வடதிசை ராஜாக்களின் யுத்தங்களைக் குறித்த அட்டவணையில் ஏற்கனவே பார்த்தோம்.
‘‘அவன் ஸ்தானத்தில் (அலெக்ஸாண்டரின் வழித்தோன்றலாக) அவமதிக்கப்பட்டவன் ஒருவன் (ஆண்டியோகஸ் எபிபேனஸ்- IV) எழும்புவான்; இவனுக்கு ராஜ்யபாரத்தின் மேன்மையைக் கொடாதிருப்பார்கள்; ஆனாலும் இவன் சமாதானமாய் நுழைந்து, இச்சகம் பேசி, ராஜ்யத்தைக் கட்டிக்கொள்வான். (இஸ்ரவேல்) தேசம் சுகவாழ்வோடும் சம்பூரணத்தோடும் இருக்கையில், அவன் உட்பிரவேசித்து, தன் பிதாக்களும் தன் பிதாக்களின் பிதாக்களும் (அலெக்சாண்டர்) செய்யாததைச் செய்வான், கொள்ளையிட்டுச்சூறையாடி, பொருளை அவர்களுக்கு இறைத்துப் பங்கிட்டு, அரண்களுக்கு விரோதமாகத் தனக்குள் உபாயங்களை யோசிப்பான்; சிலகாலமட்டும் இப்படியிருக்கும்.’’ (தானியேல் 11:21&24)
‘‘அவன் மகா சம்பத்தோடே தன் தேசத்துக்குத் திரும்பி, தன் இருதயத்தைப் பரிசுத்த உடன்படிக்கைக்கு விரோதமாக வைத்து, அதற்கானதைச் செய்து, தன் தேசத்துக்குத் திரும்பிப் போவான். ஆனாலும் அவனிடத்திலிருந்து புறப்பட்டசேனைகள் (திரும்ப) எழும்பி, அரணான பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, அன்றாடபலியை நீக்கி, பாழாக்கும் அருவருப்பை அங்கே வைப்பார்கள்.’’ (தானியேல் 11:28,31)
இவை அனைத்தும் ஆண்டியோகஸ் எபிபேனஸ்- IV எருசலேமின் மீது செய்தவைகளைக் குறிக்கும் தீர்க்கதரிசனமாகும். இவை அனைத்தும் கி.மு 167 லேயே நிறைவேறிவிட்டன; அதற்கான எராளமான சரித்திர சான்றுகளும் உள்ளன. இதே சம்பவம் தான் தானியேல் 8:9-12 ஐயும் குறிக்கிறது. குறிப்பாக ஒரு வசனத்தில் ‘‘அது சேனையினுடைய அதிபதி பரியந்தமும் தன்னை உயர்த்தி, அவரிடத்திலிருந்து அன்றாட பலியை நீக்கிற்று; அவருடைய பரிசுத்த ஸ்தானம் தள்ளுண்டது.’’ (தானியேல் 8:11) என்று கூறப்பட்டுள்ளது.
எனவே இந்த ஆண்டியோகஸ் எபிபேனஸ்- IV தான் கி.மு 167 ல் கீழ்க்காணும் காரியங்களை செய்தான் என்று ஏற்கனவே கிரேக்க சாம்ராஜ்ஜியத்தைப் பற்றிய அத்தியாயத்தில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன்.
- இஸ்ரவேலருக்கும் தேவனுக்கும் இடையில் இருந்த பரிசுத்த உடன்படிக்கைக்கு விரோதமாக இருந்தான்
- பரிசுத்தஸ்தலத்தைப் பரிசுத்த குலைச்சலாக்கினான்
- அன்றாடம் தேவாலயத்தில் நடக்கும் பலியை நீக்கி தனக்கு பன்றிகளின் இரத்தத்தால் பலியிட வைத்தான்
- பாழாக்கும்அருவருப்பாகிய ‘ஜீயஸ்’ விக்கிரகத்தை உள்ளே வைத்தான்.
இந்த பேரழிவு மற்றும் பரிசுத்த குலைச்சலால் தன் அழகை இழந்து நின்ற தேவாலயத்தை கிரேக்க சாம்ராஜ்ஜியம் வீழ்ந்தபின்பு மக்கபீய வம்சத்தினர் புதுப்பித்து மீண்டும் பலிகளை ஆரம்பித்ததை மக்கபேயர் புத்தகம் இவ்வாறு கூறுகிறது..
‘‘தெமேத்திரி மன்னரது ஆட்சியில், நூற்று அறுபத்தொன்பதாம் ஆண்டில் யாசோனும் (ஆண்டியோகஸ் எபிபேனசால் எருசலேம் மீது நியமிக்கப்பட்ட யூத ஆளுநர்- ஆங்கிலத்தில் ஜேசன்) அவனுடைய தோழர்களும் தூய நாட்டுக்கும் அதன் ஆட்சிக்கும் எதிராகத் துரோகம் செய்து, கோவில் வாயிலைத் தீக்கிரையாக்கி மாசற்ற குருதியைச் சிந்திய காலத்துக்குப்பின் எங்களுக்கு ஏற்பட்ட இன்னல் இடையூறுகளின்போது நாங்கள் உங்களுக்கு எழுதினோம்; ஆண்டவரிடம் மன்றாடினோம். எங்கள் மன்றாட்டு கேட்கப்பட்டது. நாங்கள் பலியும் உணவுப் படையலும் ஒப்புக்கொடுத்தோம்; (கிமு 164ல்) விளக்கேற்றினோம்; அப்பம் படைத்தோம். எனவே நீங்கள் கிஸ்லேவ் மாதம் கூடாரத் திருவிழாவைக் கொண்டாடக் கருத்தாயிருங்கள். நூற்று எண்பத்தெட்டாம் ஆண்டு (கி.மு 124) இது எழுதப்பெற்றது”
இவ்வாறு ‘கிஸ்லெவ்’ என்ற எபிரேய காலண்டரின் 9வது மாதத்தில் (ஆங்கில காலண்டரில் நவம்பரின் பின்பகுதியும் டிசம்பரின் முன்பகுதியும் சேர்ந்தது) மீண்டும் பரிசுத்தமாக்கப்பட்ட தேவாலயத்தில் ஏற்றப்பட்ட விளக்குகள் அதிசயவிதமாக தொடர்ந்து 8 நாட்கள் எரிந்ததாம். இதை ‘மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்ட நாளாக’ (Re-dedication) வருடந்தோறும் அதை அனுசரிக்க ஆரம்பித்தது, இயேசுகிறிஸ்துவின் நாட்கள் வரைத் தொடர்ந்தது. இன்று வரை யூதர்களால் Festival of Lights/Hanukkah என்று கொண்டாடப்பட்டு வருகிறது.
‘‘பின்பு எருசலேமிலே தேவாலயப் பிரதிஷ்டைபண்டிகை வந்தது; மாரிகாலமுமாயிருந்தது. இயேசு தேவாலயத்தில் சாலொமோனுடைய மண்டபத்திலே உலாவிக்கொண்டிருந்தார்.’’ (யோவான் 10:22,23)
இயேசுவின் தீர்க்கதரிசனங்கள்
கிரேக்க சாம்ராஜ்ஜியத்தின் செலுசிய வம்ச ராஜாக்களை வீழ்த்திவிட்டு உருவான ரோம சாம்ராஜ்ஜியத்தின் காலத்தில் தான் இயேசுகிறிஸ்து மனிதனாக இவ்வுலகிற்கு வந்தார். எனவே அவரது சிலுவை மரணத்தின் காலமாகிய கி.பி 30-31 க்கு பின்பு எருசலேம் சந்திக்க இருக்கும் அழிவுகளை அவரது வார்த்தைகளிலிருந்தே நாம் கற்றுக்கொள்ளவிருக்கிறோம். இப்பொழுது இயேசு சொன்ன மத்தேயு 24 ஆம் அதிகாரத்தை நினைவுகூறுங்கள்.
‘‘மேலும், பாழாக்குகிற அருவருப்பைக் குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே. (நடந்து முடிந்தவைகளை) வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன். நீங்கள் அதைப் பரிசுத்த ஸ்தலத்தில் (மீண்டும்) நிற்கக் காணும்போது, யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள்.’’ (மத்தேயு 24:15,16)
இந்த வசனத்தில் இயேசுகிறிஸ்து சொன்னது ‘கடைசி 7 வருட அந்திகிறிஸ்து’ என்றே இன்று வரை பலர் புரிந்துகொண்டுள்ளனர். இதன் அர்த்தம் ‘‘அன்றைக்கு தானியேல் சொன்னதுபோல ஆண்டியோகஸ் எபிபேனஸ் செய்துமுடித்தானே; அதுபோல இனிவரும் காலத்திலும் ஒருமுறை நடக்கும். அன்று அவன் ‘பாழாக்கும் அருவருப்பான’ ஜீயஸின் சிலையை மகாபரிசுத்த ஸ்தலத்தில் வைத்தான்; அதுபோல இன்னும் ஒரு காலம் வரப்போகிறது; அப்போது ‘பாழாக்குகிறவன் (டைட்டஸ்) அருவருப்பான செட்டைகளோடு வந்திறங்குவான்’. அவனைத் தொடர்ந்து பரிசுத்த ஸ்தலம் (எருசலேம் மட்டுமல்ல, எல்லா இடங்களிலும், மனிதர்கள் மனதிலும் கூட) 1260 வருடங்கள் ரோம சாம்ராஜ்ஜியத்தை சார்ந்த அந்திகிறிஸ்துவின் ஆளுகைக்கு ஒப்புக்கொடுக்கப்படும். அந்த அழிவு நடக்க ஆரம்பிப்பதை நீங்கள் காணும்போது எருசலேமை விட்டு ஓடிப்போங்கள் எனதருமை சீடர்களே’’’ என்று இயேசு தன்னைப் பின்பற்றிய சீடர்களுக்கு எச்சரிக்கையாக சொன்ன பகுதியாகும்.
இது எப்போது நிறைவேறியது என்பதைத்தான் இந்த மத்தேயு 24 ஆம் அதிகாரம் மற்றும் இயேசுவின் சில உவமைகளிலிருந்தும் நாம் இந்த அத்தியாயம் முழுவதும் பார்க்க இருக்கிறோம். இதன் முடிவில் இயேசுவின் இரண்டாம் வருகை இரகசியமாக இருக்குமா? அல்லது பகிரங்க வருகையாக மட்டும் இருக்குமா? என்பதை முழுக்க முழுக்க வேத வசனங்களின் அடிப்படையில் பார்க்கப்போகிறோம்.
கடைசி நாட்களும், எருசலேமின் அழிவும்
எருசலேம் பல காலகட்டங்களில் பல படையெடுப்புகள், முற்றிகைகள், அழிவுகள் மற்றும் சிறையிருப்பை சந்தித்திருந்தாலும், இயேசுவின் முதலாம் வருகைக்குப் பின்பு எருசலேம் சந்தித்த ஒரே மற்றும் பேரழிவைத் தெரிந்துகொண்டால் தான் கடைசிகாலம் (Last days) என்றால் என்ன? முடிவுகாலம் (நுனே னயலள) என்றால் என்ன? என்ற விளக்கங்களைப் புரிந்துகொள்ள முடியும்.
கி.பி 66-72 வரை இஸ்ரவேலில் என்ன நடந்தது?
மேசியா என்பவர் தங்களை அடிமைப்படுத்தியிருக்கும் ரோம சாம்ராஜ்ஜியத்தை வென்று, தாவீதின் சிங்காசனத்தில் அமர்ந்து எருசலேமையும், உலகத்தையும் ஆட்சிசெய்யும் ராஜாவாகத் தான் வருவார் என்று யூதர்கள் மிக உறுதியாக நம்பியிருந்தனர். இப்படிப்பட்ட எதிர்பார்ப்பு அவர்களுக்கு இருந்ததை பரிசுத்த வேதாகமத்தில் பல இடங்களில் பார்க்கமுடியும். ஆனால் இயேசுவின் பிறப்பும், போதனைகளும் அதற்கு மாறாக இருந்தது. தான் இரண்டாவது முறை வரும் காலத்தில் தான் ராஜாவாக வருவேன் என இயேசுவும் உறுதியாகக் கூறிவிட்டார்.
‘‘யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்து கொள்ள வந்தோம் என்றார்கள்.’’ (மத்தேயு 2:2)
‘‘ஆதலால் அவர்கள் வந்து, தம்மை ராஜாவாக்கும்படிப் பிடித்துக்கொண்டுபோக மனதாயிருக்கிறார்களென்று இயேசு அறிந்து, மறுபடியும் விலகி, தனியே மலையின்மேல் ஏறினார்’’ (யோவான் 6;15)
ஆனால் இயேசு குருத்தோலை பவனியில் தன்னை இஸ்ரவேலின் ராஜா என்று சீடர்கள் சொல்வதைத் தடுக்கவில்லை. ஆனால் அவர், இனிவரும் ராஜ்ஜியத்தின் ராஜாவாகத் தான் தன்னை வெளிப்படுத்தினார்.
‘‘குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு, அவருக்கு எதிர்கொண்டுபோகும்படி புறப்பட்டு: ஓசன்னா, கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று ஆர்ப்பரித்தார்கள்.’’ (யோவான் 12:13)
பிலாத்து ‘நீ யூதருடைய ராஜாவா?’ என்று கேட்டபோது, இயேசுவும் தன்னை ராஜா என்று ஒத்துக்கொண்டார். ஆனால் முதல் வருகை சத்தியத்தைக் குறித்து சாட்சி கொடுக்கவும், மனிதரைப் பாவத்திலிருந்து மீட்கவும் வந்ததாகவே சொல்லிவிட்டார்.
‘‘இயேசு பிரதியுத்தரமாக: என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல என்றார். அப்பொழுது பிலாத்து அவரை நோக்கி: அப்படியானால் நீ ராஜாவோ என்றான். இயேசு பிரதியுத்தரமாக: நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான்; சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என்சத்தம் கேட்கிறான் என்றார்.’’ (யோவான் 18:36,37)
இதையே தான் நிக்கோதேமு இயேசுவிடம் கேட்டபோது
‘‘உலகத்தை (ரோம சாம்ராஜ்ஜியத்தை) ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.’’ (யோவான் 3:17) என்று சொன்னார்.
ஏன்? இயேசுவோடே கூட இருந்த சீடர்கள் கூட கடைசிவரை இயேசு இஸ்ரவேலின் ராஜாவாக அமர்ந்து உலகத்தைத் தன் ஆட்சியின் கீழ் கொண்டுவந்துவிடுவார் என்று நம்பினர். இயேசு பரலோகத்திற்கு ஏறிச்செல்லும் நேரத்தில் கூட அந்த எதிர்பார்ப்பு அவர்களிடத்தில் இருந்தது.
‘‘அப்பொழுது கூடிவந்திருந்தவர்கள் அவரை நோக்கி: ஆண்டவரே, இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர் என்று கேட்டார்கள்.’’ (அப்போஸ்தலர் 1:6)
இவர்களின் எல்லா கேள்விகளுக்கும் யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷத்திலே ‘இரண்டாம் வருகையில் தான் யூதர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும்’ என்று இயேசு பதில் சொல்லிவிட்டார்.
‘‘புறஜாதிகளை வெட்டும்படிக்கு அவருடைய வாயிலிருந்து கூர்மையான பட்டயம் புறப்படுகிறது; இருப்புக்கோலால் அவர்களை அரசாளுவார்; அவர் சர்வவல்லமையுள்ள தேவனுடைய உக்கிரகோபமாகிய மதுவுள்ள ஆலையை மிதிக்கிறார். ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது.’’ (வெளி 19:15,16)
ஆனால் முதல் வருகையிலேயே இந்த எதிர்பார்ப்போடே இருந்த யூதர்களில் ஒரு பகுதியினர் மட்டுமே இயேசுவை ஏற்றுக்கொண்டனர். பெரும் பகுதியினர் மேசியாவின் வருகையை எதிர்பார்த்து ஏமாந்தவர்களாய், தங்கள் சுயபலத்தினால் ரோம சாம்ராஜ்ஜியத்தின் ஆளுகையிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ளும் முயற்சியில் ரோம அரசாங்கத்திற்கு எதிரான கலகத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். அவ்வப்போது சிறுசிறு கலகத்தில் ஈடுபட்ட அவர்கள், கி.பி 66 ல் ஒன்று கூடி மிகப்பெரிய கலகத்தில் ஈடுபட்டனர். இந்த கலகம் கி.பி 67 முதல் 70 வரை நீடித்த மிகப்பெரிய கலகமாகும்.
வெஸ்பாசியன் மற்றும் டைட்டஸ்
யூதர்கள் கலகம் செய்ய ஆரம்பித்த காலகட்டத்தில் ரோமப் பேரரசனாக இருந்தவன் தான் ‘நீரோ சீசர்’. இந்த கலகத்தை அடக்குவதற்கு தன் தளபதி வெஸ்பாசியனை இஸ்ரவேலுக்கு நீரோ அனுப்பிவைத்தான். வெஸ்பாசியன் இஸ்ரவேலின் ஒவ்வொரு பட்டணங்களாக முற்றிகையிட்டு, அழித்துக்கொண்டே வந்தான். அந்த சமயத்தில் (கி.பி68) நீரோ தற்கொலை செய்துகொண்டதால், ரோமப்பேரரசனாக தலைமை ஏற்க வெஸ்பாசியனுக்கு ரோமிலிருந்து அழைப்பு வந்ததால், அவன் தன் மகன் ‘டைட்டஸ்’ என்பவனை இஸ்ரவேலின் மீதி பட்டணங்களை அழிக்க அமர்த்திவிட்டு ரோம் திரும்பினான். இந்த டைட்டஸ் தான் எருசலேமின் மீது உச்சகட்ட வன்முறையை கட்டவிழ்த்தான். கி.பி 70 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ல் ஆரம்பித்த முற்றிகை 5 மாதங்கள் நீடித்து, அதன் இறுதியில் எருசலேம் வீழ்ந்தது. ஒட்டுமொத்த இஸ்ரவேலின் பட்டணங்களும் வீழ்ந்த நிலையில் ‘மசாடா மலைக்கோட்டை’ மட்டும் சுமார் 1000 யூதப்போராளிகளுடன் கி.பி 73 வரைத் தாக்குபிடித்து, பின்பு வீழ்ந்த கடைசி கோட்டையாக இன்றுவரை அதன் சிதிலங்கள் எஞ்சி நிற்கின்றது.
படம் 28: மசாடா கோட்டை
எருசலேமின் அழிவின் கொடூரங்கள்
ஜோசிபஸ் ஃப்ளேவியஸ் என்ற கலிலேய ஆளுநர் மற்றும் பிரபலமான வரலாற்றாசிரியரின் குறிப்புகளில் எருசலேமின் அழிவைக் குறித்த ஏராளமான குறிப்புகள் கிடைத்திருக்கிறது. அவர் எருசலேமின் அழிவை நேரில் கண்ட சாட்சி. அவரது குறிப்புகள் புத்தகங்களாக கூட வெளிவந்துள்ளது; இணையதளங்களிலும் கிடைக்கும். அவரது கூற்றுப்படி
- பஸ்காபண்டிகைக்கு உலகின் மூலைகளிலிருந்து இலட்சக்கணக்கான யூதர்கள் வந்திருந்த ஏப்ரலில் டைட்டஸ் எருசலேமை முற்றிகையிட்டதினால், மிகப்பெரிய பஞ்சம் ஏற்பட்டது
- எருசலேமிற்குள் மாட்டிக்கொண்டவர்களிடையே கலகம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி அழித்துக்கொண்டார்கள். நரமாமிசம் கூட உண்டனர்.
- ரோமபோர்சேவகர்களால் வெளியிலிருந்து இயந்திரங்கள் மூலம் வீசப்பட்ட கற்பாறைகள், கூர் ஆயுதங்களால் உயிரிழந்தவர்கள் மற்றும் பஞ்சம், அதனால் ஏற்பட்ட கொள்ளைநோய்களால் இறந்தவர்களின் சடலங்கள் தெருக்களில் இறைந்து கிடந்தன. சடலங்கள் மீது ஏறி தான் மக்கள் நடமாட முடிந்தது.
- எருசலேமை சுற்றியுள்ள சுமார் 10 மைல் வட்டாரத்திலுள்ள மரங்கள் அனைத்தும் வெட்டப்பட்டு அதனைக் கொண்டுதான் டைட்டஸ் கொத்தளங்களை அமைத்து கோட்டை மதில் சுவரை உடைத்து ஆகஸ்டில் எருசலேம் உள்ளே நுழைந்தான்.
- வார்த்தைகளால் சொல்ல முடியாத வெறியாட்டத்தை ரோம போர்ச்சேவகர்கள் வெளிப்படுத்தினர். இதனால் சுமார் பதினொரு இலட்சம் (11,00,000) ஜனங்கள் கொல்லப்பட்டனர் . ஏராளமானோர் சிறைபிடிக்கப்பட்டனர். புனித நகரின் தெருக்களில் இரத்த ஆறு ஓடியது.
- எருசலேம் தேவாலயத்தின் மீது யாரும் கைகூட வைக்கக்கூடாது என்று தான் டைட்டஸ் தன் வீரர்களுக்குக் கட்டளையிட்டிருந்தான். ஆனால் முறியடிக்கப்பட்ட தீவிர யூதர்கள் தேவாலய வளாகத்திற்குள் தஞ்சம் புகுந்து எதிர்தாக்குதல் நடத்தியதால், டைட்டசின் கட்டளைகளையும் மீறி ரோமப்போர்சேவகர்கள் தேவாலயம் மீது தீப்பந்த அம்புகளால் தாக்கினர். இதில் கேதுரு மரங்களால் அலங்கரிக்கப்பட்ட தேவாலயம் எளிதில் தீப்பற்றியது.
- எருசலேம் நகர மதில்கள், கட்டடங்கள் இடிக்கப்பட்டது. தேவாலயத்தின் சுவற்றில் பதிக்கப்பட்டிருந்த தங்கம் சுரண்டி எடுக்கப்பட்டது. நெருப்பினால் உருகிய தங்கம் ஆலய கற்களின் இடையில் ஓடிப் பதிந்திருந்ததால், அதை எடுக்க ரோம சேவகர்கள் ஒவ்வொரு கல்லாக பெயர்த்து எடுத்து தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றினார்கள்.
- இதில்தப்பிப்பிழைத்த யூதர்கள் ‘உலகம் முழுவதிலும்’ பல்வேறு நாடுகளுக்கு சிதறி ஓடி தஞ்சம் புகுந்தனர்.
- இந்தவெற்றியைக் கொண்டாடும் வகையில் தான் 50,000 பேர் அமர்ந்து கிளாடியேட்டர் விளையாட்டுக்களையும், பின்னாளில் கிறிஸ்தவர்கள் சிங்கங்களுக்கு இரையாக்கப்பட்டதைப் பார்த்து ரசிக்கும் ‘வெஸ்பாசியன் கொலொசியம்’ (Vespasian’s colosseum) ரோமில் கட்டப்பட்டது.
படம் 29: வெஸ்பாசியன் அரங்கம்
எருசலேம் அழிக்கப்பட்டதன் காரணம்
இதுவரை குறிப்பிட்டுள்ளது சில எடுத்துக்காட்டுகள் மட்டும் தான். விக்கிரகங்களை வணங்கியதற்காக பாபிலோனுக்கு சிறையிருப்புக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டபோது யூதர்கள் அனுபவித்த கொடுமைகள், ஏசாயா, எரேமியா, எசேக்கியேல் தீர்க்கதரிசன புத்தகங்களில் கூறப்பட்டுள்ளது. அதுவே அவ்வளவு கொடுமையாக இருந்திருந்தால், மேசியாவாகிய இயேசுவைப் புறக்கணித்த யூதர்கள் எவ்வளவு கொடூர அழிவை சந்தித்திருப்பார்கள் என்று கற்பனை செய்துபாருங்கள். அப்படி எச்சரித்த தீர்க்கதரிசிகளையும், கடைசியில் இயேசுவையும் யூதர்கள் கொலை செய்ததும் எருசலேமின் அழிவிற்கு முக்கிய காரணம்.
‘‘நீதிமானாகிய ஆபேலின் இரத்தம் முதல் தேவாலயத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே நீங்கள் கொலைசெய்த பரகியாவின் குமாரனாகிய சகரியாவின் இரத்தம்வரைக்கும், பூமியின்மேல் சிந்தப்பட்ட நீதிமான்களின் இரத்தப்பழியெல்லாம் உங்கள்மேல் வரும்படியாக இப்படிச் செய்வீர்கள்.’’ (மத்தேயு 23:35)
‘‘இவைகளெல்லாம் இந்தச் சந்ததியார்மேல் வருமென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்.’’ (மத்தேயு 23:36,38)
எருசலேம் அழிக்கப்பட்டு யூதர்கள் சிதறடிக்கப்பட்டதன் காரணங்களை பவுல் அப்போஸ்தலன் ரத்தினச்சுருக்கமாகக் கூறியுள்ளார்.
‘‘அந்த யூதர்கள்
(1) கர்த்தராகிய இயேசுவையும், (2)தங்கள் தீர்க்கதரிசிகளையும் கொலைசெய்தவர்களும்,
(3)எங்களைத் துன்பப்படுத்தினவர்களும்,
(4)தேவனுக்கேற்காதவர்களும்,
(5)மனுஷர் யாவருக்கும் விரோதிகளுமாயிருந்து,
(6)புறஜாதியார் இரட்சிக்கப்படுவதற்கு நாங்கள் அவர்களோடே பேசாதபடிக்குத் தடைபண்ணுகிறார்கள்; இவ்விதமாய் எக்காலத்திலும் தங்கள் பாவங்களை நிறைவாக்குகிறார்கள்;
அவர்கள்மேல் கோபாக்கினை பூரணமாய் வந்திருக்கிறது.’’ (1 தெசலோனிக்கேயர் 2:15,16)
அதே நேரத்தில், சொந்த ஜனத்திற்கே இவ்வளவு தண்டனைகள் என்றால், இயேசுவை சிலுவையில் அறைந்த ரோம சாம்ராஜ்ஜியம் எவ்வளவு வாதைகளை அடையவேண்டும்? இதைத்தான் முத்திரைகளாகவும், எக்காளங்களாகவும், வாதைகளாகவும் இயேசு யோவானுக்கு வெளிப்படுத்தினார். எனவே இன்னமும் எக்காளங்களும், வாதைகளும் ஊற்றப்படவில்லை என்று நாம் ஏமாந்துவிடக்கூடாது. இதை நாம் கடைசி அத்தியாயங்களில் ‘இவை என்னென்ன சம்பவங்களாக நிறைவேறின’ என்று பார்க்க இருக்கின்றோம்.
கி.பி 70 ல் அழிக்கப்பட்ட எருசலேம் மற்றும் இஸ்ரவேலின் பிற பட்டணங்கள் ரோமர்கள் மற்றும், புறஜாதி மக்களான சுற்றுப்புறத்து மக்களாலும், 7 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு இஸ்லாமியர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டு பாலஸ்தீனமாக இயங்கி வந்தது. கி.பி 1948 ல் தான் தேவதிட்டத்தின்படி ஐக்கியநாடுகளின் உதவியுடன் மீண்டும் ஒரு தேசமாக உருவெடுத்து, இன்றைய நவீன இஸ்ரவேலாக உள்ளது.
40 வருடங்கள் வாய்ப்பு
தன்னை சிலுவையில் அறைந்த யூதர்களை உடனடியாகப் பழிவாங்கவேண்டும் என்று இயேசு நினைக்கவில்லை. அவர்களுக்கு இன்னும் 40 வருட காலங்கள் மனம்திரும்ப வாய்ப்பு கொடுத்தார். காதேஸ் பர்னேயாவில் (பாரான் வனாந்திரம்) இருந்து கானானுக்குள் வேவு பார்க்க சென்ற சில மனுஷர் சொன்ன துர்செய்தியால் மோசேக்கு விரோதமாகக் கலகம் செய்த சந்ததியினர், கர்த்தரின் கோபத்திற்கு ஆளானதால் கானானுக்குள் பிரவேசிக்கும் முன்பு மரித்துப்போனார்கள்.
‘‘இந்த வனாந்தரத்தில் உங்கள் பிரேதங்கள் விழும்; உங்களில் இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்டவர்களாக எண்ணப்பட்டு, உங்கள் தொகைக்கு உட்பட்டவர்களும் எனக்கு விரோதமாய் முறுமுறுத்திருக்கிறவர்களுமாகிய அனைவரின் பிரேதங்களும் விழும்.’’ (எண்ணாகமம் 14:29)
ஆனால் அவர்களில் இருபது வயதிற்குக் கீழ்ப்பட்டவர்களாயிருந்த சந்ததிகள், இன்னும் 39 வருட வனாந்திர வாசம் நிறைவேறின பின்பு (மொத்தம் 40 வருடங்கள்) அவர்கள் கானானுக்குள் பிரவேசிப்பார்கள் என்று சொல்லப்பட்டது. அதாவது புதிய சந்ததிக்கு கர்த்தரின் கற்பனைகளைக் கற்றுக்கொள்ள வாய்ப்பு கொடுக்கப்பட்ட காலம் 40 வருடங்கள்.
‘‘அவைகள் வனாந்தரத்திலே விழுந்து தீருமட்டும், உங்கள் பிள்ளைகள் நாற்பதுவருஷம் வனாந்தரத்திலே திரிந்து, நீங்கள் சோரம்போன பாதகத்தைச் சுமப்பார்கள்.’’ (எண்ணாகமம் 14:33)
இதேபோலத்தான் கி.பி 30 ஆம் ஆண்டு இயேசுவை மேசியாவாக ஏற்க மறுத்து, பரம கானானை மறுதலித்த யூதர்கள் அழிந்து தீருமட்டும், அவர்களது அடுத்த சந்ததியாவது சுவிசேஷத்திற்கு செவிகொடுக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இயேசுவின் சிலுவை மரணத்தின்போது 20 வயதுள்ளவர்களே, எருசலேம் கி.பி 70 ல் அழிக்கப்படும்போது 60 வயது நிறைவேறியவர்களாகத்தான் இருந்திருப்பார்கள். மற்றவர்கள் எல்லாரும் 60 வயதுக்கும் குறைந்த வயதுள்ளவர்களாகத்தான் இருந்திருப்பார்கள். ஆனால் கி.பி 30 ல் 20 வயதுக்கு மேற்பட்டவர்களாய் வாழ்ந்தவர்களில் பெரும்பாலானோர் கி.பி 70 ல் மரித்திருப்பார்கள். இப்படி இயேசுவால் யூத சந்ததிக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டும் அவர்கள் சுவிசேஷத்தைப் புறக்கணித்தபடியால் மிகச்சரியாக 40 வருடங்கள் முடியும்போது நியமிக்கப்பட்ட அழிவு எருசலேமின் மீது வந்தது. இதை நிறைவேற்ற இயேசு பயன்படுத்திய ராஜ்ஜியம் தான் ரோம சாம்ராஜ்ஜியம். முதன் முறையாக சாலமோன் கட்டிய தேவாலயத்தை இடித்து, இஸ்ரவேலரை சிறைபிடித்துச் சென்றது ‘நேபுகாத்நேச்சாரின் பாபிலோன்’. இரண்டாவது முறையாக தேவாலயத்தை இடித்து, மகாபரிசுத்த ஸ்தலத்தை அசுத்தப்படுத்தியது மட்டுமல்லாமல் யூதர்களை உலகமெங்கும் சிதறடித்தது ‘ரோம் என்ற மகா பாபிலோன்’.
சீடர்களின் எதிர்பார்ப்பு
முந்தைய அத்தியாயத்தில் நாம் பார்த்தபடி, எருசலேமின் அழிவு எப்போது, எப்படி நிறைவேறும்? என்ற கேள்விக்கு அடுத்த கேள்வியாக இயேசுவின் இரண்டாம் வருகையின் காலமும், அடையாளங்களும் என்ன? என்ற கேள்வியை சீடர்கள் கேட்டதற்கு ஒரு முக்கியக் காரணம் இருக்கிறது. ஏற்கனவே இயேசு சிலுவையில் பாடுபட்டு மரிக்கவேண்டும் என்ற செய்தியை சில நாட்களுக்கு முன்பு கேட்டதிலிருந்து கொஞ்சம் குழப்பத்தில் இருந்த சீடர்களை இன்னொரு ஆச்சரியத்தில் ஆழ்த்தியதன் விளைவுதான் இந்த இரண்டு கேள்விகளுக்கான பதில்கள். அந்தக்கேள்விகளுக்கு மத்தேயு 24 ல் சொல்லப்பட்டபடி இயேசு சொன்ன பதிலிலிருந்து எருசலேம் சீக்கிரத்தில் ரோமர்களால் அழிக்கப்படும் என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் தனது இரண்டாம் வருகைக்கான காலம் மற்றும் அடையாளங்களைக் குறித்து இயேசு சொன்னக் காரியங்கள் இந்த எருசலேம் அழிவு நடைபெற்ற பின்பு உடனடியாக நடக்கும் என்று அன்று முதல் சீடர்கள் நம்பிவந்தனர். அதற்கான ஏராளமான ஆதாரங்களை புதிய ஏற்பாட்டிலிருந்து மேற்கோள் காண்பிக்க முடியும். இயேசுவைப் புறக்கணித்ததால் யூதர்கள் ரோமர்களால் அழிக்கப்படுவார்கள்; அந்த ரோமர்களை அழித்துவிட்டு உடனடியாக இயேசு தனது ராஜ்ஜியத்தைத் தாவீதின் சிங்காசனத்திலிருந்து ஸ்தாபிப்பார் என்று தான் அவர்கள் புரிந்துகொண்டனர். ஏனென்றால் இயேசுவின் வருகை உடனடியாக இருக்காது; அதற்கு முன்பு பல நூற்றாண்டுகளில் பல சம்பவங்கள் நடந்தேற வேண்டும் என்பதை கி.பி 60 களில் பவுல் அப்போஸ்தலனும், கி.பி 95 க்குப் பின் யோவானும் தான் வெளிப்படுத்தினார்கள். ஆனால் இரகசிய வருகை என்ற போதகமே கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக மட்டும் தான் போதிக்கப்பட்டு வருகிறது என்பதை மறந்துவிடாதீகள்.
மூன்றாம் எருசலேம் தேவாலயம்
முதல் தேவாலயம் சாலமொனால் கட்டப்பட்டது; இது நேபுகாத்நேச்சாரால் இடிக்கப்பட்டது. இரண்டாம் தேவாலயம் செருபாபேல் மேற்பார்வையில் கட்டப்பட்டது. இந்த தேவாலயம் இயேசுவின் காலத்தில் ஏரோதுவினால் புதுப்பிக்கப்பட்டது. ஆனால் கி.பி 70 ல் டைட்டஸ் என்ற ரோம தளபதியால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. இன்றுவரை மூன்றாம் எருசலேம் தேவாலயம் கட்டப்படவில்லை. ஆனால் இதனை அடிப்படையாக வைத்துதான் ‘எதிர்கால அந்திகிறிஸ்து’ (Futurism) கொள்கை தீவிரமாகப் பரப்புரை செய்யப்படுகிறது. மூன்றாம் தேவாலயம் கட்டப்பட்டு யூதர்கள் பலிசெலுத்த ஆரம்பித்த பின்பு தான் அந்திகிறிஸ்து ஆட்சி வரும் என்பதற்கு மூன்று வசனபகுதிகள் ஆதாரமாகக் கொடுக்கப்படுகின்றன.ஆனால் அவைகள் ஏற்கனவே நிறைவேறிவிட்ட தரிசனங்கள் என்பதற்கான ஆதாரங்கள் இதோ….
1.ஒரு வாரம் அல்லது ஏழுவருடம் அந்திகிறிஸ்து உடன்படிக்கையை உறுதிசெய்வான். அதன் பாதியாகிய மூன்றரை வருட முடிவில் எருசலேம் தேவாலயத்தின் பலியையும், காணிக்கையையும் நிறுத்துவான் என்று போதிக்கப்படுகிறது. இங்கு இந்த இரண்டு காரியங்களை நிறைவேற்றியது அந்திகிறிஸ்து அல்ல, இயேசுகிறிஸ்துவே என்பதற்கான வசன ஆதாரங்களை ‘தானியேலில் 70 வாரங்களைப் பற்றிய தரிசனத்தில்’ வாசித்திருப்பீர்கள்.
‘‘அவர் ஒரு வாரமளவும் அநேகருக்கு உடன்படிக்கையை உறுதிப்படுத்தி, அந்த வாரம் பாதி சென்றபோது பலியையும் காணிக்கையையும் ஒழியப்பண்ணுவார்;’’ (தானியேல் 9:27)
2. எருசலேம் தேவாலயம் கட்டிமுடிக்கப்பட்ட பிறகு தான் அந்திகிறிஸ்து என்பவன் தேவாலயத்தின் நடுவில் உட்கார்ந்து தேவன்போல் தன்னைக் காண்பிப்பான்; தன்னை ஆராதிக்க சொல்லுவான்; மீறினவர்களை ரோபோக்கள் மூலம் கொலை செய்வான் என்று நம்பப்படுகிறது.
‘‘அவன் எதிர்த்துநிற்கிறவனாயும், தேவன் என்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான்.’’ (2 தெசலோனிக்கேயர் 2:4)
இதில் அந்திகிறிஸ்து என்பவன் தனிமனிதன் அல்ல; ஒரு ராஜ்ஜியம் என்ற சத்தியத்தை நாம் அறிந்துகொண்டோம். அது போப்புகளால் ஆளப்பட்ட ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியம் என்றும், அது எவ்வாறு தேவனுக்கு மேலாகத் தன்னை உயர்த்தியது என்றும் பார்த்தோம்.
- பாழாக்கும் அருவருப்பான செட்டைகளோடு அவன் தேவாலயத்திற்குள் இறங்குவான் என்று, அந்திகிறிஸ்துவை ஒரு உலகப்பிரகாரமான மிருகத்திற்கு ஒப்பாக சிலர் கற்பனை செய்கிறார்கள். இது வலுசர்ப்பத்தின் ராஜ்ஜியமாகிய ரோமின் தளபதி டைட்டஸ் மகா பரிசுத்த ஸ்தலத்தை மிதித்து நாசம் செய்ததைத் தான் குறிக்கும். அசீரிய ராஜாவான சனகெரிப் எசேக்கியா ராஜா காலத்தில் எருசலேமை முற்றிக்கையிடுவான் என்பதைப் பற்றிய ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தில், அந்தப் படையெடுப்பு ‘செட்டைகளின் விரிவு’ என்று கூறப்பட்டுள்ளது.
“யூதாவுக்குள் புகுந்து பிரவாகித்துக் கடந்து, கழுத்துமட்டும் (தலையாகிய எருசலேம் மட்டும்) வரும் என்றார். இம்மானுவேலே, அவன் செட்டைகளின் விரிவு உமது தேசத்தின் விசாலத்தை மூடும்”. (ஏசாயா 8 : 8)
மேலும் கடைசி காலத்தில் அந்திகிறிஸ்துவின் ராஜ்ஜியமாகிய ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியம் தேவாலயங்களின் ஆராதனைக்குரிய இடங்கள் முழுவதும் சிலைகளை வைத்து வணங்குவதையும், அதன் மூலமாக பூமியின் குடிகளை 1500 வருடங்களுக்கு மேலாக வஞ்சித்து வருவதையுமே குறிக்கும். இந்த பாழாக்கும் அருவருப்பு பல காலக்கட்டங்களில் நான்கு வடிவங்களில் வெளிப்பட்டது.
- அண்டியோகஸ் எபிபேனஸ் ‘ஒலிம்பிஜியஸ்’ சிலையை நிறுவியது (கி.மு 168)
- டைட்டஸ்,எருசலேம் தேவாலயத்தை தரைமட்டமாக்கியது (கி.பி 70)
- தேவாலயமலையில் ‘Dome of the rock’ என்ற இÞலாமிய மசூதி நிறுவப்பட்டது (கி.பி 688 – 692)
- தேவாலயத்தை விக்கிரக கோயிலாக மாற்றியது (கத்தோலிக்க சபை : இன்றுவரை)
இதன்படி பார்த்தால் எருசலேமில் மூன்றாம் தேவாலயம் கட்டப்படுவதற்கும், அந்திகிறிஸ்துவின் வருகைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இவைகள் ஏற்கனவே நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் ஆகும். மேலும் இயேசுவின் இரண்டாம் வருகை என்பது எருசலேம் தேவாலயம் சம்பந்தப்பட்டது அல்ல; ஆவிக்குரிய தேவாலயமாகிய நம்மைக் குறித்தது.
‘‘இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம். எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம். அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளவேண்டும்.’’ (1 கொரிந்தியர் 15:51-53)
இதனால் முழங்காலுக்கும் தலைக்கும் முடிச்சி போடும்விதமாக வசனங்களைத் தொடர்புபடுத்தி சொல்லப்படும், வேதாகமத்தில் எங்கும் சொல்லப்படாத ‘இரகசிய வருகை’ என்பது கிடையாது என்பதும் உறுதியாகிறது. இயேசு ஆகாயத்தில் வெளிப்படுவதும், பூமியின் மேல் கால் பதிப்பதும் ஒரே காலத்தில் நடைபெறும் சம்பவங்கள் தான் என்பதற்கான ஆதாரங்களை அடுத்தடுத்த அத்தியாயங்களை வாசிக்கும்போது நீங்களே புரிந்துகொள்வீர்கள். ஆமென்.