கடைசி காலங்கள் பற்றி இயேசுவின் தீர்க்கதரிசனங்கள்

தானியேலைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது, புதிய ஏற்பாட்டில் இயேசுகிறிஸ்து சொன்ன தீர்க்கதரிசனங்களை எதற்காகப் பார்க்கப்போகிறோம் என்று நீங்கள் நினைக்கலாம். இயேசுகிறிஸ்து உலகத்தின் கடைசிநாட்களில் என்ன நடக்கும் என்று கூறியது மட்டுமல்லாமல், தானியேல் தீர்க்கதரிசியின் புத்தகத்தை வாசித்தால் தான் இவைகள் உங்களுக்கு புரியும் என்று அவரே சொல்லியிருக்கிறார்.

‘‘மேலும், பாழாக்குகிற அருவருப்பைக் குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே. (அவனுடைய புத்தகத்தை) வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன். (மத்தேயு 24:15)

பெரும்பாலானோர் மத்தேயு 24 ஆம் அதிகாரம் மற்றும் அதே கடைசிகால சம்பவங்களைக் கூறும் மாற்கு 13, லூக்கா 17,21 ஆம் அதிகாரங்கள் இயேசுவின் ‘இரகசிய வருகையை’ மட்டுமே குறிப்பதாகப் போதிக்கின்றனர். இந்த அதிகாரங்கள் இயேசுவின் இரண்டாம் வருகையை மட்டும் குறிப்பிடாமல், இயேசு பரத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பின்பு எருசலேம் சந்திக்க இருக்கும் பேரழிவையும் மிக விளக்கமாகக் கூறும் தீர்க்கதரிசனங்களாகும். இதில் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டாம் வருகை ‘இரகசிய வருகை மற்றும் பகிரங்க வருகையா? அல்லது பகிரங்க வருகை மட்டும் தானா? என்பதை இந்த அத்தியாயத்தின் முடிவில் நீங்களே புரிந்துகொள்வீர்கள். கடைசிகாலத்தைக் குறித்து இயேசு சொன்ன தீர்க்கதரிசனங்களை, மத்தேயு, மாற்கு மற்றும் லூக்கா ஆகிய மூன்று சுவிசேஷங்களை ஒருங்கிணைத்து நான் விளக்க உள்ளேன். அதற்கு முன்பு எது உபத்திரவகாலம், மகா உபத்திரவகாலம், கடைசிகால உபத்திரவம் என்று தெரிந்துகொண்டால் இயேசுவின் தீர்க்கதரிசனங்களை எளிதில் புரிந்துகொள்ளலாம்.

உபத்திரவ காலம் யாருக்கு?

இயேசு சொன்ன உபத்திரவ காலங்கள் என்பது ஆதி சபைக்கு மட்டும் தான் நேரடியாகப் பொருந்தும். நமது காலத்திய சபைகளுக்கு அவை ஆவிக்குரிய விதத்தில் வேண்டுமானால் பொருந்தும். இன்று கூட கிறிஸ்தவர்கள் சில இடங்களில் உபத்திரவங்களை சந்தித்து வருவது உண்மைதான். ஆனால் ஆதி சபை அடைந்த உபத்திரவங்களை அறியாமல் இருந்தால் வசனங்களைத் தவறாக வியாக்கியானம் செய்ய நேரிடும். ஆதிசபை மூன்று காலக்கட்டங்களில் உபத்திரவங்களை சந்தித்தது.

  1. உபத்திரவ காலம்:

பெந்தேகோஸ்தே நாளுக்கு பின்பிருந்தே இயேசுவின் சபை ‘யூத மதத் தலைவர்கள் மூலம்’ உபத்திரவத்தை சந்தித்தது. இதை அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தில், பவுலும், பேதுருவும், அவர்களோடே கூட இருந்த சீடர்களும் அடைந்த உபத்திரவங்களாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஸ்தேவான் முதல் இரத்த சாட்சியாக மரித்தது முதல் உபத்திரவம் இன்னும் அதிகமானது.

‘‘அவனைக் (ஸ்தேவானை) கொலைசெய்கிறதற்குச் சவுலும் சம்மதித்திருந்தான். அக்காலத்திலே எருசலேமிலுள்ள சபைக்கு மிகுந்த துன்பம் உண்டாயிற்று. அப்போஸ்தலர்தவிர, மற்ற யாவரும் யூதேயா சமாரியா தேசங்களில் சிதறப்பட்டுப்போனார்கள்.’’ (அப்போஸ்தலர் 8:1)

இப்படி ஆரம்பித்த உபத்திரவம் பின்பு ரோமப் பேரரசர்களால் தீவிரப்படுத்தப்பட்டது. கி.பி 60 களில் நீரோ மன்னனால் பெரும் உபத்திரவம் ஏற்பட்டது. அதன் பின்பு கி.பி 66 லிருந்து 70 வரைக்கும் எருசலேம் உட்பட இஸ்ரவேலின் பட்டணங்கள் அனைத்தும் அடைந்த உபத்திரவங்களையும், அழிவுகளையும் அடுத்த அத்தியாயத்தில் பார்க்க இருக்கிறோம். கி.பி 70 க்கு பின் ரோமப்பேரரசர்களால், குறிப்பாக ‘டொமிடியன்’ என்ற ரோம அரசனின் காலத்தில் (கி.பி 89-96) தொடர்ச்சியான, அதேவேளையில் ஓரளவு தீவிரமான உபத்திரவங்களை இயேசுவை ஏற்றுக்கொண்ட கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாமல், யூதர்களும் அடைந்தனர். இந்த ராஜாவின் காலத்தில் தான் யோவான் ‘பத்மு தீவுக்கு’ நாடு கடத்தப்பட்டார். அங்கிருந்து அவர் ஆசியா மைனரிலுள்ள ஏழு சபைகளுக்கு எழுதும்போது, சபை அப்போது (கி.பி 96 ல்) சந்திந்துக்கொண்டிருக்கும் உபத்திரவங்களைக் குறிப்பிட்டுள்ளது மட்டுமல்லாமல், இன்னும் சபை உபத்திரவங்களை சந்திக்க நேரிடும் என்றும், அப்பொழுது சபை எப்படி விசுவாசத்தில் இறுதி பரியந்தம் நிற்கவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

‘‘(எபேசு சபையே) உன் கிரியைகளையும், உன் பிரயாசத்தையும், (உபத்திரவத்தில்) உன் பொறுமையையும், நீ பொல்லாதவர்களைச் சகிக்கக்கூடாமலிருக்கிறதையும், “‘ (வெளி 2;2)

‘‘(சிமிர்னா சபையே) நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படும்பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாள் (10 தீர்க்கதரிசன வருடம்) உபத்திரப்படுவீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன். ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; (இந்த உபத்திரவங்களில் இரத்த சாட்சியாய் மரித்து) ஜெயங்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்றெழுது.’’ (வெளி 2:10,11)

‘‘(பெர்கமு சபையே) உன் கிரியைகளையும், சாத்தானுடைய சிங்காசனமிருக்கிற இடத்தில் நீ குடியிருக்கிறதையும் நீ என் நாமத்தைப் பற்றிக்கொண்டிருக்கிறதையும், சாத்தான் குடிகொண்டிருக்கிற இடத்திலே உங்களுக்குள்ளே எனக்கு உண்மையுள்ள சாட்சியான அந்திப்பா என்பவன் கொல்லப்பட்ட நாட்களிலும் என்னைப் பற்றும் விசுவாசத்தை நீ மறுதலியாமலிருந்ததையும் அறிந்திருக்கிறேன்.’’ (வெளி 2:13)

ஏழு சபைகளுக்கு சொல்லப்பட்டவைகளெல்லாம் முடிவுகாலத்தில் இருக்கும் சபைகளுக்கு மட்டுமே சொல்லப்பட்டது என்று சிலர் வாதிடுகின்றனர். யோவானின் சீடராக இருந்த அந்திப்பா, யோவான் வெளிப்படுத்தலை எழுதும் காலத்திற்கு முன்பு ரோமப்பேரரசால் கொல்லப்பட்டு இரத்தசாட்சியாய் மரித்த வரலாற்று சம்பவம் இதில் குறிப்பிடப்பட்டிருப்பதால் இவைகள் அப்போதைய காலத்தில் உபத்திரவங்களை சந்தித்து வந்த ஆதிசபைகளை உற்சாகமூட்டவும், எச்சரிக்கவும் எழுதப்பட்ட கடிதங்களாகும். நான் மீண்டும் சொல்கிறேன், இவை இன்று வரை நம் சபைகளுக்கும் ஆவிக்குரிய வகையில் பொருந்தும் என்பதில் சந்தேகமே இல்லை. எனவே ஸ்தேவானின் இரத்த சாட்சியான மரணத்திற்குப் பின் (கி.பி 34) ஆரம்பித்த இந்த உபத்திரவ காலம் மூன்றாம் நூற்றாண்டின் கடைசிவரை தொடர்ந்தது. ‘‘ஆனாலும் சபை பெருகியது’’.

  1. மகா உபத்திரவ காலம்

ஆதிசபை ஆங்காங்கே கொடுமைகளை அனுபவித்துக்கொண்டிருந்த காலக்கட்டத்தில், உபத்திரவத்தின் மத்தியிலும் அது வளர்ந்து பெருகியது. ஆனால் உச்சகட்டமாக கி.பி 303 லிருந்து 313 வரை ‘டயோகிளிட்டியன்’ (Diocletian) என்ற ரோமப்பேரரசனின் காலத்தில் சபை மகா உபத்திரவங்களை சந்தித்தது. (பத்துநாள்/10 தீர்க்கதரிசன வருடம் உபத்திரப்படுவீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு). இந்த மகா உபத்திரவகாலம் கான்ஸ்டாண்டைன் ஆட்சிக்கு வந்த சில வருடங்களுக்குப் பின்பு (கி.பி 313) முடிவுக்கு வந்தது. இந்த மகா உபத்திரவகாலத்தில்

  • ஆயிரக்கணக்கானோர் இரத்த சாட்சிகளாக மரித்தனர்
  • ஆராதனைகள் சட்டப்பூர்வமாக தடை செய்யப்பட்டது
  • இயேசுவை மறுதலிக்காதவர்கள் உயிரோடு எரிக்கப்பட்டும், தோலுரிக்கப்பட்டும், சிங்கங்களுக்கு இரையாக்கப்பட்டும் கொல்லப்பட்டனர்.
  • கிறிஸ்தவர்களுக்கு சமுதாயத்தில்  இருந்த  அனைத்து  அடிப்படை  உரிமைகளும்  பறிக்கப்பட்டது (Civil rights)

படம் 27: ரோம ராஜாங்க உபத்திரவங்கள்

  1. கடைசிகால உபத்திரவங்கள் (1260 வருடங்கள் பற்றிய தீர்க்கதரிசனம்)

நான் ஏற்கனவே சொன்னது போல கடைசிகாலம் என்பது ஒருசில வருடங்கள் மட்டும் நடப்பது அல்ல. அது முதல் நூற்றாண்டிலிருந்தே ஆரம்பித்துவிட்டது. மூன்றாம் கட்ட உபத்திரவகாலம் என்பது சபை, அந்திகிறிஸ்துவாகிய தானியேலின் ‘சின்னக்கொம்பு’ அல்லது வெளிப்படுத்தலின் ‘முதலாம் மிருகத்தின்’ காலகட்டங்களில் படப்போகிற உபத்திரவங்களைக் குறிக்கும். இது மற்ற உபத்திரவ காலங்களை விட மிக நீண்ட காலமாகும். இதைத்தான் தானியேல் மற்றும் வெளிப்படுத்தலில் ஆறு இடங்களில் 1260 தீர்க்கதரிசன வருடங்களாகக் கூறப்பட்டுள்ளது. இதை 1260 நாட்கள் அல்லது மூன்றரை வருடங்கள் என்று நேரடி அர்த்தத்துடன் புரிந்துகொண்டதால் தான், கடைசி மூன்றரை வருடங்களில் அந்திகிறிஸ்து என்ற நபர் கொடூரனாக வெளிப்படுவான் என்று நம்பிவருகிறோம். இந்த 1260 வருடங்கள் என்பது அந்திகிறிஸ்துவின் ராஜ்ஜியமாகிய கத்தோலிக்க ரோம சாம்ராஜ்ஜியம் அரசாணையின் படி உருவான கி.பி 538 முதல் நெப்போலியனால் முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட கி.பி 1798 வரையிலான காலக்கட்டமாகும். (இந்த 1260 தீர்க்கதரிசன வருடங்கள் தனி அட்டவணையாக அத்தியாயம் 16 ல் கொடுக்கப்பட்டுள்ளது.)

கடைசிகாலம் என்பது எப்போது ஆரம்பித்தது என்று தெரியாததாலும், தீர்க்கதரிசனங்களில் கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகள் சங்கேத மொழிகள் நிறைந்தது என்று புரியாததாலும், நாம் வேத்தில் எங்கும் நேரடியாகக் கொடுக்கப்படாத இரகசியவருகையை நம்பும் சூழ்நிலை உள்ளது; அல்லது சில வசனங்களின் வார்த்தைகளை மட்டும் எடுத்து வியாக்கியானம் செய்யும்போதும் இந்தத் தவறுகள் நேரிடலாம். (உதாரணமாக: எடுத்துக்கொள்ளப்படுதல் / caught up, திருடனைப்போல / Secret coming like a theif, ஆகாயத்தில் வருவார், பூமியில் இறங்குவார்). அந்திகிறிஸ்துவின் ஆளுகையும், இயேசுவின் வருகையும் ராஜ்ஜியங்களைப் பற்றிய இரகசியங்களோடு பின்னிப்பிணைந்தது என்பதால் பல நூற்றாண்டுகளின் வரலாற்றை ஒப்பிடவேண்டியது அவசியம். பிசாசு கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிப்பான்.

இயேசுவையே கண்ணீர் விடச்செய்த பேரழிவு

இயேசு எருசலேம் தேவாலயத்தை விட்டுப் புறப்பட்டுப் போகையில் சீடர்கள் அவரிடம் தேவாலயத்தின் அழகைக் காட்டும்போது, அந்த தேவாலயம் முழுவதுமாக இடிக்கப்படும் என்று தீர்க்கதரிசனமாகக் கூறினார். இதில் இயேசு கூறியது ‘கல்லினால் கட்டப்பட்ட’ எருசலேம் தேவாலயத்தை தான்.

‘‘இயேசு தேவாலயத்தை விட்டுப் புறப்பட்டுப்போகையில், அவருடைய சீஷர்கள் தேவாலயத்தின் கட்டடங்களை அவருக்குக் காண்பிக்க அவரிடத்தில் வந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: இவைகளையெல்லாம் பார்க்கிறீர்களே, இவ்விடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.’’ (மத்தேயு 24:1,2)

இன்னொரு இடத்தில் தனது சரீரமாகிய ஆலயம் சிலுவையில் அடிக்கப்படும்; ஆனால் மூன்று நாளைக்குள் உயிர்த்தெழுவார் என்பதையும் கூறியுள்ளார்.

‘‘இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள், மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன் என்றார்.’’ (யோவான் 2:19)

இன்னொரு இடத்தில் தேவாலயத்தை மட்டுமல்ல; இந்த எருசலேம் நகரமும் அவ்வாறு ‘ஒரு கல்லின் மேல் ஒரு கல் இராதபடிக்கு’ இடிக்கப்படும் நாட்கள் வரும் என்று சொல்வதன் மூலமாக, தேவாலயமும், எருசலேம் நகரமும் ஒரே படையெடுப்பின் காலகட்டத்திலேயே நிர்மூலமாக்கப்படும் என்று உறுதியாகத் தெரிகிறது.

‘‘அவர் (எருசலேமுக்கு) சமீபமாய் வந்தபோது நகரத்தைப்பார்த்து, அதற்காகக் கண்ணீர்விட்டழுது, உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும், இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாயிருக்கிறது. உன்னைச் சந்திக்குங்காலத்தை நீ அறியாமற்போனபடியால், உன் சத்துருக்கள் உன்னைச் சூழ மதில்போட்டு, உன்னை வளைந்துகொண்டு, எப்பக்கத்திலும் உன்னை நெருக்கி, உன்னையும் உன்னிலுள்ள உன் பிள்ளைகளையும் தரையாக்கிப்போட்டு, உன்னிடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்குச் செய்யும் நாட்கள் வரும் என்றார்.’’ (லூக்கா 19:41-44)

இயேசு அவர்கள் முகமாய்த் திரும்பி: எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள். லூக்கா 23:28

இயேசு கண்ணீர் விட்டு அழுத ஒருசில சம்பவங்களில் இதுவும் ஒன்று என்றால், அந்த அழிவு எவ்வளவு கொடூரமாக இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.

சீடர்களின் கேள்வியும், இயேசுவின் பதிலும்

இந்த தீர்க்கதரிசனத்தை சொல்லிவிட்டு சற்று தூரம் போய் சீடர்களுடன் ஒலிவமலையில் தனியாக அமர்ந்திருக்கும்போது அவரது சீடர்கள் ‘மூன்று விதமான கேள்விகளை’ இயேசுவிடம் எழுப்புகின்றனர்.

‘‘பின்பு, அவர் ஒலிவமலையின் மேல் உட்கார்ந்திருக்கையில், சீஷர்கள் அவரிடத்தில் தனித்துவந்து: இவைகள் (தேவாலயமும், நகரமும் இடிக்கப்படுவது) எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள்.’’ (மத்தேயு 24:3)

‘‘பின்பு, அவர் தேவாலயத்துக்கு எதிராக ஒலிவமலையின் மேல் உட்கார்ந்திருக்கையில், பேதுருவும் யாக்கோபும் யோவானும் அந்திரேயாவும் அவரிடத்தில் தனித்து வந்து: இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? இவைகளெல்லாம் நிறைவேறுங்காலத்துக்கு அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள்.’’ (மாற்கு 13:3,4)

‘‘அவர்கள் அவரை நோக்கி: போதகரே, இவைகள் எப்பொழுது சம்பவிக்கும், இவைகள் (தேவாலயமும், நகரமும் இடிக்கப்படுவது) சம்பவிக்கும் காலத்துக்கு அடையாளம் என்ன என்று கேட்டார்கள்.’’ (லூக்கா 21:7)

மூன்று கேள்விகள்

  1. ‘இவைகள்’, அதாவது நீர் தேவாலயம் மற்றும் எருசலேம் நகரம் ஒரு கல்லின் மேல் ஒரு கல் இராதபடி இடிக்கப்படும் என்று சொன்ன தீர்க்கதரிசன சம்பவங்கள் எப்போது சம்பவிக்கும்?
  2. மேலே சொன்ன ‘இவைகள்’ நிறைவேறும் காலத்திற்கான அடையாளம், அதாவது அது நடக்கப்போகிறது என்று நாங்கள் அறிந்துகொள்ளும்படி அப்போது நடக்கும் வேறு அடையாளங்கள் அல்லது அறிகுறிகள் என்ன?
  3. உம்முடைய இரண்டாம் வருகைக்கும், அதனோடே கூட நடக்க இருக்கும் உலகத்தின் முடிவிற்கும் முன் நடக்க இருக்கும் அடையாளங்கள் என்ன?

இந்த கேள்விகள் மூன்றாக இருந்தாலும் இவைகள் இரண்டு முக்கிய சம்பவங்களைப் பற்றி கேட்கப்பட்டவை ஆகும். ஒன்று தேவாலயம் மற்றும் எருசலேமின் அழிவு, மற்றொன்று இயேசுவின் இரண்டாம் வருகையும் அதனைத் தொடர்ந்து இயேசுவின் முடிவில்லா ராஜ்ஜியம் ஸ்தாபிக்கப்படும் காலங்களின் அடையாளங்களையும் பற்றியதாகும். சீடர்களின் கேள்விகளுக்கு இயேசு பதிலளித்த மத்தேயு 24 ஆம் அதிகாரம் வசனங்கள் 4 முதல் 14 வரையிலான முதல் பாகத்தைத் தொடர்ச்சியாகக் கீழே குறிப்பிட்டுள்ளேன். இவை அன்றைய காலக்கட்டத்திலிருந்து இன்றுவரைக்கும் ‘கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட சபைகளுக்குள்’ நடக்கவிருக்கும் சம்பவங்களின் தொகுப்பாகும். அதில் சம்பவங்களின் கால வரிசையைப் புரிந்துகொள்ள லூக்காவின் ஒரு பகுதியையும் இயேசு சொன்னவிதம் மாறாதபடிக்கு, இடையில் பொருத்தியுள்ளேன்.

பாகம்1: இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள்.யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும் முடிவு உடனே வராது.

பாகம் 2: ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்.

பாகம் 3: இவைகளெல்லாம் நடப்பதற்கு முன்னே என் நாமத்தினிமித்தம், அவர்கள் உங்களைப் பிடித்து, ஜெபஆலயங்களுக்கும் சிறைச்சாலைகளுக்கும் ஒப்புக்கொடுத்து, ராஜாக்கள் முன்பாகவும் அதிபதிகள் முன்பாகவும் உங்களை இழுத்துத் துன்பப்படுத்துவார்கள். (லூக்கா 21:12)

பாகம் 4: அப்பொழுது, உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள்; என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள். அப்பொழுது, அநேகர் இடறலடைந்து, ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து, ஒருவரையொருவர் பகைப்பார்கள். அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள். அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம். முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.

பாகம் 5: ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.

இந்த வசனங்களில் இயேசு ஒரு நீண்ட மற்றும் வெவ்வேறு காலகட்டங்களில் நடக்க இருக்கும் சம்பவங்களின் சுருக்கத்தைக் கூறியுள்ளார். இதனடிப்படையில் பார்த்தால் நடக்கவிருக்கும் சம்பவங்களைப் பின்வருமாறு வரிசைப்படுத்தலாம்

  1. கள்ளகிறிஸ்துக்களின் வஞ்சனை, கள்ளபோதகங்கள்
  2. ராஜ்ஜியங்களின் அழிவிற்கு முன்பே, இயேசுவின் நாமத்தினிமித்தம் சீடர்கள் ராஜாக்களால் அடையவேண்டிய உபத்திரவங்கள், இரத்தசாட்சி மரணங்கள்.
  3. யுத்தங்கள் மற்றும் அதன் செய்திகள்
  4. உலக அளவில் பல யுத்தங்கள், பஞ்சம் மற்றும் இயற்கை சீற்றத்தால் அழிவுகள்.
  5. கடைசிகால சுவிசேஷம் மற்றும் முடிவு

இன்னும் சற்று ஆழமாகப் பார்த்தால் கடைசி காலம் (Last days) என்பது ஒரு நீண்ட காலமாகவும், முடிவுகாலம் என்பது (End days) உலகத்தின் முடிவு அல்லது அழிவு நெருங்கும் காலம் என்பதும் புலப்படும். இந்த உலகத்தின் முடிவு என்பது இயேசுவின் இரண்டாம் வருகைக்கு சற்று முன் மற்றும் பின்பு நடக்கவிருக்கும் ஒன்றாகும். கடைசிகால தீர்க்கதரிசனங்கள் நிறைவேறி விட்டன. நாம் இப்போது இருக்கும் காலம் முடிவு காலமாகும். இயேசுவின் வருகை வெகு சீக்கிரத்தில் இருக்கிறது என்பதை தானியேல் மற்றும் வெளிப்படுத்தலின் நாள்காட்டிகள் நம்மை எச்சரிக்கின்றன. இனி மேலே சொன்ன ஐந்து காரியங்களையும் விரிவாகப் பார்ப்போம்.

  1. கள்ளகிறிஸ்துக்கள் மற்றும் கள்ளபோதனைகள்

பவுலின் நிருபங்கள் எல்லாமே இன்றைய காலகட்டத்திற்கும் பொருந்தும் என்பது உண்மை தான். ஆனால் அவை எழுதப்பட்டது அவரது காலமாகிய முதலாம் நூற்றாண்டில் வளர்ந்துகொண்டிருந்த சபைகளுக்குத் தான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அவரது எல்லா நிருபங்களிலும் கள்ளபோதனைகள், கள்ள தீர்க்கதரிசிகள், வஞ்சிக்கும் உபதேசங்கள் ஆகியவற்றிற்கு எதிரான எச்சரிக்கைகள் ஏராளமாக இருக்கிறது என்பதும் நமக்குத் தெரிந்த உண்மை. அப்படியானால் அந்தக் காலத்திலேயே ஏராளமான கள்ள உபதேசங்கள் பெருக ஆரம்பித்துவிட்டன என்பது தான் அதன் அர்த்தம். இவ்வளவு ஏன்? இயேசு பூமியில் மனிதனாகப் பிறப்பதற்கு சற்று முன் கூட கள்ள மேசியாக்கள் தோன்றி மறைந்தார்கள் என்று பவுலுக்கு வேதபிரமாணங்களைக் கற்றுக்கொடுத்த ‘கமாலியேல்’ சொல்லியிருக்கிறார்.

‘‘அப்பொழுது சகல ஜனங்களாலும் கனம்பெற்ற நியாயசாஸ்திரியாகிய கமாலியேல் என்னும் பேர்கொண்ட ஒரு பரிசேயன் ஆலோசனை சங்கத்தில் எழுந்திருந்து, அப்போஸ்தலரைச் சற்றுநேரம் வெளியே கொண்டுபோகச்சொல்லி, சங்கத்தாரை நோக்கி: இஸ்ரவேலரே, இந்த மனுஷருக்கு நீங்கள் செய்யப்போகிறதைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள். ஏனென்றால் இந்நாட்களுக்குமுன்னே தெயுதாஸ் என்பவன் எழும்பி, தன்னை ஒரு பெரியவனாகப் பாராட்டினான்; ஏறக்குறைய நானூறுபேர் அவனைச் சேர்ந்தார்கள்; அவன் மடிந்துபோனான்; அவனை நம்பின அனைவரும் சிதறி, அவமாய்ப்போனார்கள். அவனுக்குப்பின்பு, குடிமதிப்பின் நாட்களிலே (இயேசு குழந்தையாக இருக்கும்போது), கலிலேயனாகிய யூதாஸ் என்பவன் எழும்பி, தன்னைப் பின்பற்றும்படி அநேக ஜனங்களை இழுத்தான்; அவனும் அழிந்துபோனான்; அவனை நம்பியிருந்த அனைவரும் சிதறடிக்கப்பட்டார்கள்.”(அப்போÞதலர் 5 : 34 – 37)

பவுலை எருசலேமில் யூதர்கள் தாக்கும்போது காப்பாற்ற வந்த ரோம நூற்றுக்கு அதிபதி கூட பவுலை கள்ளப்போதனைக் கூட்டதின் தலைவன் என்று தவறாக எண்ணினான்.

‘‘நீ இந்த நாட்களுக்குமுன்னே கலகமுண்டாக்கி, நாலாயிரங் கொலைபாதகரை வனாந்தரத்திற்குக் கொண்டுபோன எகிப்தியன் அல்லவா என்றான்’ (அப்போஸ்தலர் 21:38)

இதன் உச்சகட்டமாக, ‘இயேசு திரும்ப வந்துவிட்டார்; உயிர்தெழுதல் நடந்து முடிந்துவிட்டது’ என்று போதித்த நபர்கள் கூட அப்போதே இருக்கிறார்கள் என்று பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதுகிறார்.

‘‘அவர்கள் சத்தியத்தை விட்டு விலகி, உயிர்த்தெழுதல் நடந்தாயிற்றென்று சொல்லி, சிலருடைய விசுவாசத்தைக் கவிழ்த்துப்போடுகிறார்கள்.’’ (2 தீமோத்தேயு 2:18)

அப்போஸ்தலனாகிய யோவான் ‘அந்திகிறிஸ்துக்கள்’ கூட நடமாடுகிறார்கள் என்று ஒருபடி மேலே சென்று தனது நிருபத்தில் எச்சரிக்கிறார். அதுவும் இது கடைசிகாலமாயிருக்கிறது என்று சொல்லி எச்சரிக்கிறார். எனவே திரும்பவும் சொல்கிறேன்; அந்திகிறிஸ்து என்பவன் பிசாசின் ஆவி தான்; தனி மனிதன் அல்ல; பிசாசால் இயக்கப்படும் ஒரு ராஜ்ஜியமாகும்.

‘‘பிள்ளைகளே, இது (முதல் நூற்றாண்டு) கடைசிக்காலமாயிருக்கிறது; அந்திக்கிறிஸ்து வருகிறானென்று நீங்கள் கேள்விப்பட்டபடி இப்பொழுதும் அநேக அந்திக்கிறிஸ்துகள் இருக்கிறார்கள்; அதினாலே இது கடைசிக்காலமென்று அறிகிறோம்.’’ (1 யோவான் 2:18)

  1. இயேசுவின் உண்மை விசுவாசிகள் அடையவேண்டிய உபத்திரவங்கள்

இயேசுவின் சீடர்கள் ரோமப் பேரரசால் அடையவேண்டிய ராஜாங்க உபத்திரவங்களையும், இரத்த சாட்சியாய் மரிக்கவேண்டிய காரியங்களையும் பற்றிய தீர்க்கதரிசனங்கள் தான் இவைகள். அப்போஸ்தலர் நடபடிகள் முழுவதும் சீடர்களும், அப்போஸ்தலர்களும் அடைந்த ராஜாங்க உபத்திரங்கள் மற்றும் அதன் பின்பு அடைந்த இரத்த சாட்சியான மரணங்கள் நாம் ஏற்கனவே அறிந்தது தான் என்பதால் அவைகளை விளக்கவில்லை. பவுல், பேதுருவில் ஆரம்பித்து இரண்டாம், மூன்றாம் நூற்றாண்டு சீடர்கள் வரை பல ஆயிரம் பேர் ரோமப் பேரரசர்கள் முன்  சாட்சி  பகர்ந்துவிட்டு,  உபத்திரவங்களையும்  மரணங்களையும்  சந்தித்து  இந்த  தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றினர் என்று வேத பண்டிதர்கள் கூறுகின்றனர். இந்த உபத்திரவங்களிலும் இயேசுவை மறுதலிக்காமல் ‘முடிவுபரியந்தம் அல்லது மரணநேரம் வரை’ நிலைத்து நிற்பவன் இரட்சிக்கப்படுவான் என்றும் கூறுகிறார். ஒருவேளை இதே உபத்திரவங்களை நமது காலத்தில் நாமும் கடந்துசென்றால் தான் இயேசுவின் வருகையில் செல்லமுடியும் என்றால், பரலோகம் செல்பவர்களின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணி விடலாம்.

அட்டவணை 12: ஆதிசபை அடைந்த 10 ராஜாங்க உபத்திரவங்கள் (ஆதாரம் கி.பி 1911 ஆம் ஆண்டே ‘கிளேட்டன் ஐயர்’ எழுதிய தமிழ் வேதாகம அகராதி)

இந்த ராஜாங்க உபத்திரவத்தை சந்தித்த ஆதிசபையினர் இயேசுவுக்காக சாட்சியுள்ள வாழ்க்கை வாழும் சமயத்தில் அநேக உபத்திரவங்களை சந்தித்தது மட்டுமல்லாமல் மற்றவர்கள் முன்பாக வேடிக்கைப் பொருளாக்கப்பட்டதை அவர்களோடு சேர்ந்து அனுபவித்த எபிரேயர் நிருப ஆசிரியர் மிகத்தெளிவாகப் பதிவுசெய்துள்ளார். இந்த உபத்திரவங்களின்போது பலர் தங்கள் சொத்துக்களை முழுவதும் இழந்ததைக் கூட சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார்கள் என்றும் கூறியுள்ளார்.

‘‘முந்தின நாட்களை நினைத்துக்கொள்ளுங்கள்; நீங்கள் பிரகாசமாக்கப்பட்டிருந்த அந்த நாட்களில் உபத்திரவங்களாகிய மிகுந்த போராட்டத்தைச் சகித்தீர்களே. நிந்தைகளாலும் உபத்திரவங்களாலும் நீங்கள் வேடிக்கையாக்கப்பட்டதுமல்லாமல், அப்படி நடத்தப்பட்டவர்களுக்குப் பங்காளிகளுமானீர்கள். நான் கட்டப்பட்டிருக்கையில் நீங்கள் என்னைக்குறித்துப் பரிதபித்ததுமன்றி, பரலோகத்தில் அதிக மேன்மையும் நிலையுள்ளதுமான சுதந்தரம் உங்களுக்கு உண்டென்று அறிந்து, உங்கள் ஆஸ்திகளையும் சந்தோஷமாய்க் கொள்ளையிடக்கொடுத்தீர்கள்.’’ (எபிரேயர் 10: 32-34)

இரகசிய வருகையில் கைவிடப்பட்ட ஜனங்களும், அந்திகிறிஸ்துவின் உபத்திரவத்தின்போது இயேசுவை ஏற்றுக்கொண்ட யூதர்களும் தான் இந்த மகா உபத்திரவங்களை கடைசி ஏழு வருடங்களில் அடைவார்கள் என்ற போதனையே, ரோம சாம்ராஜ்ஜியம் தங்களது கொடூரங்களை மறைப்பதற்கு ஏற்படுத்திய வஞ்சனை தான் என்பதை வரலாற்றை வாசித்துப்பார்த்து அறிந்துகொள்ளுங்கள். இப்படி இரண்டு வாய்ப்புகள் கொடுக்கப்படும் என்பது வேதத்தில் எங்கும் சொல்லப்படாத ஒன்று. ‘இரண்டாம் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தால், புத்தியில்லாத கன்னிகைகள் கடைக்குச் சென்று எண்ணெய் வாங்கிவர மணவாளன் காத்திருந்தார் என்று இயேசு சொல்லியிருப்பாரே!!’

  1. யுத்தங்கள் மற்றும் அதன் செய்திகள்

பரிசுத்த வேதத்தின் புதிய ஏற்பாடு முதலாம் நூற்றாண்டிலேயே எழுதி முடிக்கப்பட்டு விட்டதால், கள்ளபோதனைகளைப் பற்றிய நிகழ்வுகளின் வரலாற்றுப் பதிவுகளைத் தவிர, அதற்கு அடுத்த காலகட்டங்களில் நிகழ்ந்த யுத்தங்கள், அழிவுகளைப் பற்றிய வரலாற்றுப் பதிவு அதில் இல்லை. ஆனால் யோவான் மூலமாக இனி என்ன நடக்கும் என்ற தீர்க்கதரிசனங்களாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த முத்திரைகள், எக்காளங்கள், வாதைகளால் நிறைந்த கலசங்கள் தான் ரோம சாம்ராஜ்ஜியம் ஆண்ட ஐரோப்பா கண்டங்களில் நடந்த யுத்தங்கள் மற்றும் பேரழிவுகளாகும். இதை நாம் தனி அத்தியாயங்களாகப் பின்னால் பார்க்க இருக்கிறோம்.

எருசலேம் அழிக்கப்பட்ட கி.பி 67- கி.பி 70 யுத்தங்கள் முதல், ஒருங்கிணைந்த ரோமப்பேரரசு பத்து ராஜ்ஜியங்களாகப் பிரிந்து முடிந்த ஐந்தாம் நூற்றாண்டு வரை, ஐரோப்பிய மற்றும் மத்தியகிழக்கு நாடுகள் பெரும்பாலான காலங்களில் யுத்தங்களின் நடுவில் தான் வளர்ந்தது. அவைகள் இயேசுவின் முத்திரை தீர்ப்புகளால் ஏற்பட்டது. ஆனால் இயேசு தெளிவாக சொல்லிவிட்டார்; ‘இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும் முடிவு உடனே வராது.’ அப்படியானால் முடிவுக்கு இன்னும் பல காலங்கள் செல்லவேண்டும் என்பது தான் அர்த்தம்.

  1. உலக அளவில் பல யுத்தங்கள், பஞ்சம் மற்றும் இயற்கை சீற்றத்தால் அழிவுகள்

இவைகள் நடப்பதற்கு முன்பாகவே சீடர்கள் மேலே சொன்ன உபத்திரவங்களை ராஜாக்களால் அனுபவிக்க நேரிடும் என்று இயேசு கூறிவிட்டார். ‘ஆரம்பத்தில் யுத்தங்களையும் அதன் செய்திகளையும் தான் கேள்விப்படுவீர்கள்; அதை எண்ணி கலங்காதிருங்கள்; அப்பொழுதே ராஜாங்க உபத்திரவங்களையும் அடைய வேண்டும்; அதன் பின்பு தான் அடுத்த பேரழிவுகள் வரும்’ என்று இயேசு கூறியுள்ளார். மேலும் ‘ஜனத்திற்கு விரோதமாக ஜனமும், ராஜ்ஜியத்திற்கு விரோதமாக ராஜ்ஜியமும் எழும்பும்’ என்று இயேசு சொல்வதிலிருந்து, இந்த யுத்தங்கள் யூதர்கள் மற்றும் இஸ்ரவேலுக்கு எதிரானது மட்டுமல்ல; உலக அளவிலான அல்லது அப்போதைக்கு உலக சாம்ராஜ்ஜியமாக இருந்த ரோமின் அதிகாரத்திற்குட்பட்ட ஐரோப்பிய நாடுகளிடையேயானது என்றே அர்த்தப்படும். இவைகளும் ‘வேதனைகளுக்கு ஆரம்பம்’ தான்; முடிவுகாலம் சீக்கிரம் வராது என்று இயேசு மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளார். இந்த யுத்தங்களைப் பற்றிய செய்திகள் முடிவுகாலமாகிய நமது காலத்தைப் பற்றியது அல்ல. இன்று வரை உலகம் சந்தித்த யுத்தங்களையும், அழிவுகளையும் பற்றியது. அவை தான் யோவானுக்கு எக்காளங்களாகவும், வாதைகளாகவும் காண்பிக்கப்பட்டது.

  1. உலகமெங்கும் சுவிசேஷம் மற்றும் முடிவு (World wide gospel and end times)

அப்போஸ்தலர்கள் மற்றும் சீடர்கள் உலகமெங்கும் சுவிசேஷத்தைக் கொண்டுசென்றனர். அப்போதைய உலகில் ஐரோப்பா, ஆசியா மைனர், ஆப்பிரிக்காவில் சில நாடுகள், ஆசியாவில் இந்தியா உட்பட சிலநாடுகள் மட்டுமே குடியேற்றம் பெற்றிருந்தன. அது ‘ஆரம்ப சுவிசேஷத்தின் காலம்’. இதில் இயேசு சொல்வது ‘முடிவுக்கு முன்பாக பரவ வேண்டிய உலகளாவிய சுவிசேஷம்’.

‘‘ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.’’

ஆரம்ப கால சுவிசேஷ பரவலுக்குப் பின், போப்புகளின் கத்தோலிக்க ரோம சாம்ராஜ்ஜியத்தின் 1260 வருட காலத்தில் சுவிசேஷம் தடைசெய்யப்பட்டது. இதை ‘சிறு புஸ்தகம்’ என்ற அத்தியாயத்தில் விளக்கியுள்ளேன். உலக வரலாற்றை ஆராய்ச்சி செய்யும் சாதாரண சரித்திர ஆசிரியர்கள் முதல் வேத பண்டிதர்கள் வரை சொல்லும் ‘கிறிஸ்தவத்தின் இருண்ட காலம்’ (Dark age or medivel age of christianity) இது தான். இது ஒருங்கிணைந்த ரோமப்பேரரசு பத்து ராஜ்ஜியங்களாக உடைந்த கி.பி 476 முதல் கிழக்கு ரோமப்பேரரசின் தலைநகரான் காண்ஸ்டாண்டிநோபிள் வீழ்ந்த கி.பி 1453 வரையிலான சுமார் 1000 வருட காலமாகும். இந்த காலக்கட்டத்தின் இறுதியில் தான் ‘கிறிஸ்தவ மறுமலர்ச்சி’ ஏற்பட்டு வேதப்புத்தகம் சாமானியனின் கைகளுக்குச் சென்றது. இதன் பின்பு தான் சுவிசேஷம் உலகில் மிகவேகமாகப் பரவியது. எனவே தான் கி.பி 1800 க்கு பின்னான 220 வருடங்களை சுவிசேஷத்தின் காலம்/ கிருபையின் காலம்/ முடிவுகாலம் என்று அழைக்கின்றோம். இதைத்தான் இயேசு ‘என்னுடைய ராஜ்ஜியத்தைக் குறித்த சுவிசேஷம் உலகத்தின் எல்லா மூலைகளுக்கும் அறிவிக்கப்படும்; அப்போது உலக ராஜ்ஜியங்களின் முடிவு வரும்’ என்று கூறியிருக்கிறார்.

எருசலேமின் அழிவைக் குறித்து இயேசு

இரண்டாவது பாகமான மத்தேயு 15-31 வசனங்களில் இயேசு கி.பி 70 ல் எருசலேம் சந்தித்த அழிவின் சம்பவங்களைப் பற்றி இன்னும் விரிவாகக் கூறியுள்ளார். இதை ஏன் இரண்டாவது பாகம் என்று சொல்கிறேன் என்றால், 15 வது வசனம் மேலும்…..என்று ஆரம்பிக்கிறது; அதுமட்டுமல்லாமல், தானியேல் சொன்னதை ஏற்கனவே நன்கு அறிந்த யூதர்கள் மட்டும் தான் சிந்தித்துப்பார்க்க முடியும். எனவே இந்தப் பாகம் ‘அன்றைய யூதர்களுக்கானது’ மட்டுமே.

‘‘மேலும், பாழாக்குகிற அருவருப்பைக் குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே. வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன். நீங்கள் அதைப் பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கக் காணும்போது, யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள்.’’ (மத்தேயு 24:15,16)

இந்த பாழாக்கும் அருவருப்பைக் குறித்து ஏற்கனவே விளக்கியுள்ளேன். இதில் வரும் பாழாக்கும் அருவருப்பு என்பது அந்திகிறிஸ்துவின் சாம்ராஜ்ஜியமான ரோமப்பேரரசு தானே தவிர தனி மனிதன் அல்ல. கி.பி 70 ல் ரோமத் தளபதியான டைட்டஸ் எருசலேமையும், தேவாலயத்தையும் இடித்து தரைமட்டமாக்கின சம்பவத்தைத் தான் இயேசு தீர்க்கதரிசனமாக கூறியது மட்டுமல்லாமல், இச்சம்பவம் ஏற்கனவே தானியேலுக்கு 70 வாரங்களைக் குறித்த தீர்க்கதரிசனமாகச் சொல்லப்பட்டுள்ளது என்றும், அதை வாசிக்கிறவன் யோசித்துப் பார்க்கக்கடவன் என்றும் திரும்ப நினைவுபடுத்துகிறார். ஏற்கனவே அண்டியோகஸ் எபிபேனஸ் எருசலேமைப் பாழாக்கியது யூதர்கள் நன்றாக அறிந்த ஒன்று என்பதால், அதைப்போன்ற இன்னொரு பாழாக்குதல் வரப்போகிறது; அதற்குத் தப்பித்துக்கொள்ளுங்கள் என்று தனது சீடர்களுக்கு ஞாபகப்படுத்தியது தான் இந்த வசனம். இது அந்திகிறிஸ்து எருசலேம் தேவாலயத்திற்குள் அமருவதைப் பற்றியது அல்ல

சீடர்களை எச்சரித்த இயேசு

ரோமர்களால் எருசலேம் சூழப்பட்டிருக்கும் காலக்கட்டம் வந்துவிட்டால், சீடர்களாகிய நீங்கள் உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்; எருசலேமிற்குள் நுழைய வேண்டாம் என்று அடுத்த வசனங்களில் இயேசு எச்சரிக்கிறார்.

‘‘யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள். வீட்டின்மேல் இருக்கிறவன் தன் வீட்டிலே எதையாகிலும் எடுப்பதற்கு இறங்காதிருக்கக்கடவன். வயலில் இருக்கிறவன் தன் வஸ்திரங்களை எடுப்பதற்குத் திரும்பாதிருக்கக்கடவன். அந்நாட்களிலே கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ . நீங்கள் ஓடி ப் போவது மாரிகாலத்திலாவது ஓய்வுநாளிலாவது, சம்பவியாதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள்.’’ (மத்தேயு 24:16-20)

இதே சம்பவத்தை லூக்கா இன்னும் தெளிவாகப் பதிவு செய்துள்ளார். அதில் சீடர்கள் எப்போது தப்பிச்செல்ல வேண்டும் என்ற எச்சரிக்கைத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதாவது எருசலேம் சேனைகளால் சூழப்பட்டவுடன், சீடர்கள் ஒரு நொடிகூடத் தாமதிக்காமல் இந்த தீர்க்கதரிசன வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து எருசலேமை விட்டு ஓடிப்போக வேண்டும் என்பது தான் இதன் அர்த்தம்.

‘‘எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, அதின் அழிவு சமீபமாயிற்றென்று அ றி யு ங் க ள் . அப்பொழுது யூதேயாவிலிருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகவும், எருசலேமிலிருக்கிறவர்கள் வெளியே புறப்படவும், நாட்டுப்புறங்களிலிருக்கிறவர்கள் நகரத்தில் பிரவேசியாமலிருக்கவும் கடவர்கள். (தானியேலில்) எழுதியிருக்கிற யாவும் நிறைவேறும்படி நீதியைச் சரிக்கட்டும் நாட்கள் அவைகளே. அந்நாட்களில் கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ, பூமியின்மேல் மிகுந்த இடுக்கணும் இந்த ஜனத்தின்மேல் (யூதர்கள்) கோபாக்கினையும் உண்டாகும். பட்டயக்கருக்கினாலே விழுவார்கள், சகல புறஜாதிகளுக்குள்ளும் சிறைப்பட்டுப்போவார்கள்; புறஜாதியாரின் காலம் நிறைவேறும் வரைக்கும் (2300 வருடங்கள் : கி.மு 334 முதல் கி.பி 1967 வரை) எருசலேம் புறஜாதியாரால் மிதிக்கப்படும்.’’ (லூக்கா 21:20-24)

மத்தேயு மற்றும் லூக்காவில் சொல்லப்பட்ட இந்த சம்பவங்களை ஒப்பிடுப்பார்த்தால், ‘எருசலேம் ரோம சேனைகளால் சூழப்பட்டிருக்கும் சமயமும், பாழாக்கும் அருவருப்பு பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கும் சம்பவமும்’ ஒரே சம்பவமாகிய கி.பி 70 ல் எருசலேமின் அழிவையேக் குறிக்கிறது என்பது நமக்குத் தெளிவாகப் புரியும்.

பெல்லாவுக்கு ஓடிய சீடர்கள்

இயேசுகிறிஸ்து ஏற்கனவே எருசலேமின் அழிவுகளைக் குறித்தும், அதற்கு முன் நடக்கும் சம்பவங்களைக் குறித்தும் சொன்னது, தனது உண்மை சீடர்கள் அந்த அழிவிற்குத் தப்பவேண்டும் என்ற எண்ணத்தில் தான். எருசலேம் வெஸ்பாசியனின் மகன் டைட்டஸால் அழிக்கப்படுவதற்கு சற்று முன்பு தான் ‘செஸ்டியஸ் (Cestius)’ என்ற ரோமத்தளபதி எருசலேமை அழிக்கும் நோக்கில் முற்றிக்கையிட்டான். அவன் கிட்டத்தட்ட எருசலேமைக் கைப்பற்ற நெருங்கும் தருணத்தில் திடீரென்று முற்றிகையை விலக்கிவிட்டு ரோமுக்குத் திரும்பினான்; அதன் காரணம் என்னவென்று இன்றுவரை வரலாற்று ஆசிரியர்களால் கணிக்கமுடியவில்லை. ஆனால் இயேசுவின் சீடர்கள் ‘எருசலேம் சேனைகளால் சூழப்படும்போது அதன் அழிவு சமீபமாக இருக்கிறது’ என்ற தீர்க்கதரிசனத்தைக் கொண்டு அன்றே இதைக் கணித்துவிட்டனர். செஸ்டியஸ் எருசலேமைக் கைப்பற்ற முடியாமல் பின்வாங்கிவிட்டான் என்று தவறாகக் கணித்த யூதர்கள், எருசலேமை யாராலும் அழிக்கமுடியாது என்று மேலும் கர்வம் கொண்டனர். இது தான் டைட்டஸ் எருசலேமை நோக்கிப் படைகளோடு வரும்போது நம்மை யாராலும் வீழ்த்த முடியாது என்ற கர்வம் கொள்ளவைத்தது. ஆனால் இந்த முதல் முற்றிக்கையில் சுதாரித்துக்கொண்ட இயேசுவின் சீடர்கள் டைட்டஸின் இரண்டாம் முற்றிக்கைக்கு முன்பு ஒருவர் கூட மிச்சமில்லாமல் எருசலேமை விட்டு வெளியேறிவிட்டனர். இயேசுவின் தீர்க்கதரிசனத்தை விசுவாசித்த எல்லா சீடர்களும் விசுவாசிகளும் யோர்தானுக்கு அப்புறத்தில் இருக்கும் பெரெயாவிலுள்ள ‘பெல்லா’ என்ற மலைப்பாங்கான பட்டணத்திற்கு தப்பிச்சென்றார்கள் என்று யெசுபியஸ் உட்பட சில இரண்டாம், மூன்றாம் நூற்றாண்டு சபையின் வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் ‘Flight to pella’ என்று பிரபலமாக அறியப்பட்டுள்ளது.

இது ‘யூதேயாவிலிருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகவும், எருசலேமிலிருக்கிறவர்கள் வெளியே புறப்படவும், நாட்டுப்புறங்களிலிருக்கிறவர்கள் நகரத்தில் பிரவேசியாமலிருக்கவும்’ என்ற வசனத்தை நிறைவேற்றுவதாக உள்ளது. சுருக்கமாக இந்தப் படையெடுப்பின்போது எருசலேமின் உள்ளே இருக்கிறவர்களுக்கு நிச்சயம் அழிவு என்பதைக் குறிக்கிறது. மேலும் ‘இந்த ஜனத்தின் மேல் கோபாக்கினை’ என்ற வார்த்தையின் மூலம் இது யூதர்கள் மீது விதிக்கப்பட்ட தீர்ப்பு என்றும் அறியலாம். இந்த ஜனங்கள் தான் அப்போது பட்டயக்கருக்கினால் (சுமார் 11 இலட்சம்) விழுந்தார்கள்.

எருசலேம் நகரம் மலைகளின் மேலே அமைந்திருந்ததால் எதிரிகளால் அவ்வளவு எளிதில் தாக்க முடியாதபடி இயற்கையாகவே பாதுகாப்பைப் பெற்றிருந்தது. அதிலும் ஏரோதுவின் காலத்தில் ஏராளமான கோட்டைகளும், கண்காணிப்பு கோபுரங்களும், சுவர்களும் கட்டப்பட்டதால் இன்னும் பலம் பெற்றது. இந்தக் காலக்கட்டத்தில் ‘எருசலேம் தரைமட்டமாக்கப்படும்’ என்று பொதுவெளியில் எச்சரிப்பு விடும் எந்த நபரும், மக்கள் மழைவெள்ளத்தையே பார்த்திராத காலத்தில் ‘வெள்ளத்தால் பூமி அழிக்கப்படும்’ என்று எச்சரிக்கை விட்ட நோவா சந்தித்த கேலியையும் கிண்டலையும் சந்திக்க நேரிடும். அந்தளவிற்கு எருசலேமின் கோட்டைகளின் பலத்தின் மீது நம்பிக்கையும், அழிவு நேரிடப்போவதை உணராத கூட்டமும் தான் அப்போது இருந்தது.

இல்லாமல் போன இஸ்ரவேல் தேசம்

லூக்கா இத்தோடு விட்டுவிடாமல், யூதர்கள் இந்த யுத்தத்தின் இறுதியில் ‘சகல புறஜாதிகளுக்குள்ளும்’ சிதறடிக்கப்படுவார்கள் என்று இன்னொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்க்கதரிசனத்தையும் பதிவுசெய்துள்ளார். கிறிஸ்துவிற்கு முந்திய காலம் வரை யூதர்கள் பாபிலோனுக்கும், எகிப்திற்கும், அசீரியாவிற்கும் என குறிப்பிட்ட நாடுகளுக்குத் தான் சிதறடிக்கப்பட்டனர். ஆனால் கி.பி 70 க்கு பின் இஸ்ரவேல் என்ற தேசமே இல்லாமல் அழிக்கப்பட்டது; யூதர்கள் உலகின் எல்லா தேசங்களுக்கும் (இந்தியாவில் கொச்சி, கொல்கொத்தா உட்பட) சிதறி தஞ்சமடைந்தனர். அவர்கள் கி.பி 1948ல் தான் மீண்டும் இஸ்ரவேல் தேசத்தை உருவாக்கி, தற்போதைய நவீன இஸ்ரவேலாக விளங்குகின்றனர். இதை நீங்கள் புத்தகங்கள் மற்றும் இணையதளத்தின் வரலாற்றுப் பதிவுகளில் அறிந்துகொள்ளலாம். புறஜாதியாரின் காலம் நிறைவேறும் வரை இஸ்ரவேல்/எருசலேம் புறஜாதியாரால் மிதிக்கப்பட்டதைக் குறித்த தரிசனம் தான் தானியேலின் 2300 நாட்களைக் குறித்த தரிசனமாகும்.

வருகை எப்படி இருக்கும்?

கி.பி முதல் நூற்றாண்டு உபத்திரவகாலத்தில் கூட ‘இயேசு வந்துவிட்டார்; இங்கே இருக்கிறார்; அங்கே இருக்கிறார் என்று யாராவது சொன்னால் நம்பாதிருங்கள்’ என்று இயேசு சொல்வதற்கு சில காரணங்கள் இருக்கிறது.

  • எப்படியும் பிசாசின் ஆவியாகிய அந்திகிறிஸ்து கிறிஸ்தவர்களை வஞ்சிக்க முயற்சி செய்வான்
  • ஆதிசபை கிறிஸ்தவர்கள் இயேசுவின் இரண்டாம் வருகை முதல் நூற்றாண்டிலேயே நடக்க வாய்ப்பிருப்பதாகக் கருதி காத்திருந்தனர்.
  • சிலர் முதல் நூற்றாண்டிலேயே வருகை நடந்து முடிந்துவிட்டதாகவே பிரசங்கம் செய்ததற்கான ஆதாரமும் வேதத்தில் இருப்பதை நான் மேலே சொல்லியுள்ளேன்.
  • இயேசுவின் இரண்டாம் வருகை முதல் நூற்றாண்டிலேயே முடிந்துவிட்டது என்று விசுவாசிகள் நம்பிவிட்டால் பலர் தாங்கள் கைவிடப்பட்டுவிட்டோம் என்று நம்பிக்கை இழந்து விசுவாசத்தை விட்டு வழுவிப்போவதற்கும், பலர் தாங்கள் வாழ்ந்துகொண்டிருப்பது இயேசுவின் 1000 வருட அரசாட்சியில் தான் என்று தவறான நம்பிக்கை கொள்வதற்கும் காரணமாக அமையலாம். (இதே போல் தான் இரண்டாவது வருகையைப் பற்றிய தவறான வியாக்கியானங்களால் தவறான நம்பிக்கைகளுக்கு சபை ஆளாகும்)

எனவே தான் இயேசு மத்தேயு 24 ல், கிபி. 70 ன் அழிவு, முடிவுகாலம் அல்ல என்பதையும், தான் அப்போது திரும்ப வரமாட்டேன் என்பதையும் தனது சீடர்களுக்குத் தெளிவுபடுத்தினார்.

‘‘அப்பொழுது, (எருசலேமின் அழிவின் போது) இதோ கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ அங்கே இருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால் நம்பாதேயுங்கள். ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். இதோ, முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன். ஆகையால்: அதோ, வனாந்தரத்தில் இருக்கிறார் என்று சொல்வார்களானால் புறப்படாதிருங்கள்; இதோ, அறைவீட்டிற்குள் (இரகசியமாக வந்து) இருக்கிறார் என்று சொல்வார்களானால் நம்பாதிருங்கள். (மத்தேயு 24:23-26).

அப்படிப்பட்ட தவறான உபதேசங்களை நம்பாதிருங்கள். அவர்கள் சொல்வது போல நான் இரகசியமாக ஒரு அறையிலேயோ, அல்லது வெளிப்படையாக குறிப்பிட்ட ஒரு வனாந்திரத்திலேயோ வந்து நிற்க மாட்டேன்’ என்று சொன்னது மட்டுமல்லாமல், தன்னுடைய வருகை இப்படித்தான் முடிவு காலங்களில் இருக்கும் என்பதையும் அடுத்த வசனத்தில் தெளிவுபடுத்தியுள்ளார்.

‘‘மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்கு வரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும்’’ (மத்தேயு 24:27).

தன்னுடைய வருகை அந்த ஆரம்ப கால உபத்திரவங்களின் முடிவில் அல்ல; கடைசிகாலங்களின் முடிவிலேயே இருக்கும்; எல்லா கண்களும் காணும்படியாக இருக்கும் என்பதை இந்தப் பகுதியில் இடைச்செருகலாகக் கூறியுள்ளார்.

வருகை எப்போது இருக்கும்?

இதுவரை, வருகை எப்படி இருக்கும் என்று சொன்ன இயேசு, அடுத்த வசனத்திலிருந்து வருகை எப்போது இருக்கும் என்று சொல்கிறார். அதில் இப்படிப்பட்ட அழிவுகள், உபத்திரவங்கள் நடைபெற்ற பின்பு ஒருங்கிணைந்த ரோம சாம்ராஜ்ஜியம், கத்தோலிக்க ரோம சாம்ராஜ்ஜியம் ஆகிய இரண்டும் எப்படி கவிழ்க்கப்படும், அழிக்கப்படும், அசைக்கப்படும் என்பதை ஒரே வசனத்தில் ‘சங்கேத மொழிகளால்’ கூறியுள்ளார்.

‘‘அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக்கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்’’ (மத்தேயு 24:29)

சுமார் 1700 வருடங்கள் (கி.பி 96-1798) கடைசிகால ராஜ்ஜியமான ரோம் எவ்வாறு கவிழ்க்கப்படும், தீர்ப்பு செய்யப்படும் (ஏழு முத்திரைகள், எக்காளங்கள், வாதைகள்) என்பதை இந்த சங்கேத மொழியில் ரத்தினச் சுருக்கமாக சீடர்களுக்குக் கூறியது மட்டுமல்லாமல், இந்த சம்பவங்கள் எவ்வாறு நடக்கும் என்பதை மிக விலாவாரியாக யோவானுக்கு மீண்டும் சங்கேத பாஷையிலேயே வெளிப்படுத்தியது தான் ‘வெளிப்படுத்தின விசேஷத்தின்’ அத்தனை தீர்க்கதரிசனங்களும் ஆகும். இதைத்தான் நாம் அடுத்து விளக்கமாகப் பார்க்க இருக்கிறோம். இதையே தான் பேதுருவும், யோவேலின் தீர்க்கதரிசனத்திலிருந்து சுட்டிக்காட்டியுள்ளார். பெந்தேகோஸ்தே நாளுக்குப் பின்பு என்ன நடக்கும் என்பதை இவ்வாறு கூறுகிறார்.

‘‘அல்லாமலும் உயர வானத்திலே அற்புதங்களையும், தாழ பூமியிலே இரத்தம், அக்கினி, புகைக்காடாகிய அதிசயங்களையும் காட்டுவேன். கர்த்தருடைய பெரிதும் பிரகாசமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்.’’ (அப்போஸ்தலர் 2:19&20) மற்றும் (யோவேல் 2:30&31)

இதில் வரும் சூரியன், சந்திரன், புகை, இரத்தம் உட்பட எல்லாம் நேரடி அர்த்தம் (Literal meaning) கொண்டவைகளல்ல; ஏற்கனவே பல தீர்க்கதரிசன புத்தகங்களில் ராஜ்ஜியங்களின் அழிவு மற்றும் தீர்ப்புகளைக் குறித்த இடங்களில் சொல்லப்பட்டிருக்கும் சங்கேத மொழியாகும்.(Symbolic meaning).

‘‘அப்பொழுது (உபத்திரவம் முடிந்தவுடன், ராஜ்ஜியங்கள் கவிழ்க்கப்பட்ட பின்பு), மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள். வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச்சேர்ப்பார்கள்.’’ (மத்தேயு 24:30,31)

இதே சம்பவங்களைத் தான் பவுலும் தெசலோனிக்கேயரில் சொல்லியிருக்கிறார்.

‘‘ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.’’ (1 தெசலோனிக்கேயர் 4:16,17)

சுருக்கம்: இந்த சம்பவங்கள் கீழ்கண்ட கால வரிசையில் நடக்கிறது

  • எருசலேமின் அழிவு (கி,பி 67-70)
  • ஆதிசபை உபத்திரவம் (கி.பி 70 ஶி- 313)
  • அந்திகிறிஸ்துவின் ஆட்சி (கி.பி 538-1798)
  • ரோம மற்றும் கத்தோலிக்க ராஜ்ஜியம் கவிழ்ப்பு (முத்திரைகள்,எக்காளங்கள், வாதைகள்-முதல் நூற்றாண்டு முதல் இயேசுவின் வருகை மட்டும்)
  • உலகமெங்கிலும் சுவிசேஷம் (கி.பி 18 ஆம் நூற்றாண்டு முதல் இன்று வரை)
  • அதன் முடிவில் இரண்டாம் பகிரங்க வருகை (அதிசீக்கிரத்தில் வரப்போகிறது)
  • ஆயிரம் வருட அரசாட்சி

இவை எங்கிலும் இரகசிய வருகையைப் பற்றி இயேசு நேரடியாகவோ, மறைமுகமாகவோ சொல்லவில்லை. மாறாக எல்லா கண்களும் காண வானத்திலிருந்து இறங்கி வருவார் என்றே சொல்லியுள்ளார். அப்பொழுதே பரிசுத்தவான்களின் உயிர்தெழுதலும் நடக்கும்; உயிரோடு இருக்கிறவர்களும் ஆகாயத்தில் கூட்டி சேர்க்கப்படுவார்கள் என்பதையும் இயேசு தெளிவுபடுத்தியுள்ளார். இதில் பரிசுத்தவான்கள் கூட்டிசேர்க்கப்படும் சம்பவம் தான் திரும்பத் திரும்ப சொல்லப்பட்டுள்ளது. வரலாற்றுப் பின்னணியை அறியாதவர்கள் ஒரு இடத்தில் ‘மேகங்கள் மேல் வருவார்’ என்று இருப்பதையும், இன்னொரு இடத்தில் ‘வானத்திலிருந்து இறங்கிவருவார்’ என்பதையும் சகட்டுமேனிக்கு வியாக்கியானம் செய்கின்றனர். மேலும் ‘கூட்டிச்சேர்ப்பார்’ என்பதையும் ‘எடுத்துக்கொள்ளப்படுவோம்’ என்பதும் வேறுவேறு என்று இரகசியவருகையை (Rapture) திணிக்க முயற்சிக்கின்றனர். மேலும் வலுவாய் தொனிக்கும் எக்காளம் விசுவாசிகள் காதுகளுக்கு மட்டும் தான் கேட்கும் என்றும் இன்னொரு விளக்கத்தைக் கொடுக்கின்றனர். சகல கோத்திரத்தாரின் கண்கள் காணத்தான் இயேசு இறங்கிவருவார் என்று சொல்லப்பட்டுள்ளது.

ரோமப் பேரரசர்கள் அந்திகிறிஸ்துவா?

அந்திகிறிஸ்துவின் சாம்ராஜ்ஜியமான கத்தோலிக்க ரோமப் பேரரசு, தனக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் ‘அந்திக்கிறிஸ்து ஏற்கனவே வந்துவிட்டான் அல்லது கடைசி 7 வருடங்களில் தான் வருவான்’ என்று சொல்லி, தனது அடையாளத்தை மறைக்க முயற்சி செய்தது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? எருசலேமை அழிக்க ஆணையிட்ட ‘நீரோ சீசர்’ தான் அந்திகிறிஸ்து என்றும், அப்போதே மத்தேயு 24 மற்றும் வெளிப்படுத்தலில் இயேசு சொன்ன பல சம்பவங்கள் நடந்து முடிந்துவிட்டதாகவும் விசிவாசிகளைக் குழப்ப கத்தோலிக்க Jesuit Luis de Alcasar (1554-1613) என்பவரால் உருவாக்கப்பட்டு பரப்பப்பட்டது தான் ‘Preterism’ கொள்கை ஆகும்.

போப்பாண்டவர்களின் கத்தோலிக்க அரசாங்கம் தான் அந்திகிறிஸ்துவின் சாம்ராஜ்ஜியம் என்று புராட்டஸ்டண்ட் மறுமலர்ச்சியின் தந்தையான மார்டின் லூதர் வெளிப்படையாகவே எழுதியதைத் திசைதிருப்பத் தான் கத்தோலிக்க சபையின் ‘Counter reformation’ குழுவால் ‘Preterism and futurism’ என்ற கள்ளபோதனைக் கொள்கைகள் உருவாக்கப்பட்டன.

அப்படியானால் ‘ஒருவன் எடுத்துக்கொள்ளப்படுவான், ஒருவன் கைவிடப்படுவான்’ என்ற இயேசுவின் வார்த்தைகள் இரகசிய வருகையைக் குறிப்பதாகத் தானே இருக்கிறது? என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். வாருங்கள், அதைத் தீர்க்க அடுத்த அத்தியாயம் செல்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *