தானியேலின் 70 வாரங்கள் (கி.மு 457 - கி.பி 33)

அந்திகிறிஸ்து உலகத்தின் கடைசி 7 வருடங்களில் தான் வெளிப்படுவான்; அதற்கு சற்று முன்பதாகவே சபை இரகசியமாக எடுத்துக்கொள்ளப்படும், என்று உறுதியாய் நம்புகிறவர்கள், அவர்களது விளக்கங்களுக்கு ஆதாரமாக எடுத்துக்கொள்ளும் தீர்க்கதரிசனம் தான் தானியேல் 9 ஆம் அதிகாரத்தின் கடைசியில் கூறப்பட்டிருக்கும் 70 வாரங்களைப் பற்றிய தீர்க்கதரிசனம் ஆகும். வழக்கம்போல இந்த தரிசனமும் தவறாக வியாக்கியானம் செய்யப்படுவதால் தான் இந்தக் குழப்பம். இந்த 70 வாரம் தானியேலுக்கு மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கூறப்பட்டுள்ளது.

  • 7வாரங்கள் + 62 வாரங்கள் + 1 வாரம் = 70 வாரங்கள்

இதில் முதல் 69 வாரங்கள் (7+62) முடிந்துவிட்டதாகவும், கடைசி ஒரு வாரம் மட்டும் மிச்சமிருப்பதாகவும், அந்த ஒரு வாரம் அல்லது ஏழு நாட்கள் அல்லது ஏழு தீர்க்கதரிசன வருடங்கள் தான் இயேசுவின் இரகசிய வருகைக்குப் பின் வெளிப்படும் அந்திகிறிஸ்துவின் ஆளுகையின் காலம் என்றும் கூறிவருகின்றனர். இந்த கடைசி வாரம் என்பது எதைக்குறிக்கிறது? அது நடந்து முடிந்துவிட்டதா அல்லது இனி தான் வரப்போகிறதா? என்ற கேள்விகளுக்குப் பதிலை இந்த அத்தியாயத்தில் பார்ப்போம். பரிசுத்த வேதாகமத்திலே எனக்கு மிகவும் பிடித்த ஒரு தீர்க்கதரிசனம் இதுதான். ஏனென்றால், இந்த தீர்க்கதரிசனம் மேசியாவாகிய இயேசு ‘எந்த வருடத்தில்’ வெளிப்படுவார் என்பதைக் கூட மிகச்சரியாக தானியேலுக்கு வெளிப்படுத்தியதாகும்.

எந்தப் பின்னணியில் சொல்லப்பட்டது?

ஒரு தீர்க்கதரிசனத்தை வியாக்கியானம் செய்யும்போது, அது எந்த பின்னணியில், என்ன நோக்கத்திற்காக, யாரால், யாருக்கு சொல்லப்பட்டது என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இந்த தரிசனம் ‘மேதியனாகிய தரியு’ பாபிலோன் மேல் ஆளுநராக இருந்த காலக்கட்டத்தில் தானியேலுக்கு வெளிப்படுத்தப்பட்டது.

‘‘தானியேலாகிய நான் எருசலேமின் பாழ்க்கடிப்புகள் நிறைவேறித்தீர எழுபதுவருஷம் செல்லுமென்று கர்த்தர் எரேமியா தீர்க்கதரிசியோடே சொல்லிய வருஷங்களின் தொகையைப் புஸ்தகங்களால் அறிந்துகொண்டேன்.’’ (தானியேல் 9:2)

‘‘இந்தத் தேசமெல்லாம் வனாந்தரமும் பாழுமாகும்; இந்த ஜாதிகளோ, எழுபது வருஷமாகப் பாபிலோன் ராஜாவைச் சேவிப்பார்கள்.’’ (எரேமியா 25:11)

‘இஸ்ரவேலர் பாபிலோனில் 70 வருடங்கள் அடிமைத்தனத்தில் இருக்கவேண்டும்’ என்ற எரேமியாவின் தீர்க்கதரிசனத்தை தானியேல் அறிந்த பின்பு, இஸ்ரவேலரின் பாவங்களுக்காக அழுது, உபவாசித்து ஜெபித்து, அவர்கள் மேல் கர்த்தர் இரங்கும்படி கெஞ்சி மன்றாடி ஜெபித்த ஜெபம் தான் தானியேல் 9:3-19 வசனங்களில் கூறப்பட்டுள்ளது. அதை வேதபுத்தகத்தில் வாசிக்கும்படி உங்களை கேட்டுக்கொள்கிறேன். இந்த ஜெபத்தின் சுருக்கமாக தானியேல் பின்வருமாறு சொல்லி ஜெபத்தை முடிக்கிறார்.

‘‘இப்படி நான் சொல்லி, ஜெபம்பண்ணி, என் பாவத்தையும் என் ஜனமாகிய இஸ்ரவேலின் பாவத்தையும் அறிக்கையிட்டு, என் தேவனுடைய பரிசுத்த பர்வதத்துக்காக என் விண்ணப்பத்தை என் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாகச் செலுத்திக்கொண்டிருந்தேன்.’’ (தானியேல் 9:20).

ஜெபத்திற்கு பதில்

கர்த்தர் குறித்த 70 வருடங்கள் (கி.மு 605- கி.மு 535) பாபிலோனில் நிறைவேற இன்னும் நான்கு வருடங்களே இருந்த நிலையில், இஸ்ரவேலரை விடுவிக்கும்படியாக தானியேல் செய்த நீண்ட ஜெபத்திற்கு கர்த்தர் செவிசாய்த்து, கோரேஸ் மேதிய-பெர்சிய சாம்ராஜ்ஜியத்தின் ராஜாவாகவும், மேதியனாகிய தரியு பாபிலோனின் ஆளுநராகவும் இருந்த முதல் வருட காலத்தில் (கி.மு 539) ஒரு பகுதி இஸ்ரவேலரை செருபாபேல் தலைமையில் எருசலேம் திரும்பச்செய்தார். அந்த சம்பவங்களைத் தான் எஸ்றா மற்றும் நெகேமியா புத்தகங்கள் விளக்கமாகக் கூறுகின்றன. மேற்கண்ட ஜெபத்திற்கு பதில் கிடைத்தது மட்டுமல்லாமல், இஸ்ரவேலருக்கு மேசியாவின் வருகையின் ‘காலத்தைக் குறித்த’ தரிசனமும் காபிரியேல் மூலமாக தானியேலுக்கு வெளிப்படுத்தப்பட்டது.

‘‘அப்படி நான் ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கும்போதே, முதல் தரிசனத்திலே நான் கண்ட புருஷனாகிய காபிரியேல், வேகமாய்ப் பறந்துவந்து, அந்திப்பலியின் நேரமாகிய வேளையிலே என்னைத் தொட்டான். அவன் எனக்குத் தெளிவுண்டாக்கி, என்னோடே பேசி: தானியேலே, உனக்கு அறிவை உணர்த்தும்படி இப்போது புறப்பட்டுவந்தேன். நீ மிகவும் பிரியமானவன், ஆதலால், நீ வேண்டிக்கொள்ளத் தொடங்கினபோதே கட்டளை வெளிப்பட்டது. நான் அதை அறிவிக்கவந்தேன்; இப்போதும் சொல்லுகிற வார்த்தையை நீ கவனித்துக்கேட்டு, தரிசனத்தை அறிந்துகொள்.’’ (தானியேல் 9:21-23)

தானியேலுக்கு வெளிப்படுத்தப்பட்ட ராஜ்ஜியங்களைக் குறித்த ஏராளமான தரிசனங்களுக்கான விளக்கங்கள் அவருக்கே நேரடியாகக் கொடுக்கப்பட்டதை முதல் அதிகாரத்திலிருந்து எட்டாவது அதிகாரம் வரை மட்டுமே பார்க்க முடியும். ஆனால் 9 ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட இந்த 70 வார தரிசனத்திலிருந்து, கடைசி அதிகாரமாகிய 12 ஆம் அதிகாரம் வரை வெளிப்படுத்தப்பட்ட தரிசனங்களின் விளக்கங்கள் தானியேலுக்கு சொல்லப்படாதது மட்டுமல்லாமல், அவைகளை முடிவு காலம் மட்டும் முத்திரையிட்டு ரகசியமாக வைக்கவும் கர்த்தர் கட்டளையிட்டார்.

‘‘நான் அதைக் கேட்டும், அதின்பொருளை அறியவில்லை; ஆகையால்: என் ஆண்டவனே, இவைகளின் முடிவு என்னமாயிருக்கும் என்று கேட்டேன். அதற்கு அவன் தானியேலே, போகலாம்; இந்த வார்த்தைகள் முடிவுகாலமட்டும் புதைபொருளாக வைக்கப்பட்டும் முத்திரிக்கப்பட்டும் இருக்கும்.’’ (தானியேல் 12:8,9)

இப்படி தானியேலுக்கு மறைபொருளாக வைக்கப்பட்ட பல காரியங்கள், மேசியாவாகிய இயேசு வெளிப்பட்ட காலத்தில் நிறைவேறி எல்லா கண்களுக்கும் வெளிப்படையானது. ஆனால் புதிய ஏற்பாட்டுக்காலத்தில் நடக்க இருக்கும் கடைசிகால சம்பவங்களைத் தன்னுடைய சீடர்கள், விசுவாசிகள் கண்டிப்பாக அறிந்துகொள்ளவேண்டும் என்று இயேசு விரும்பினதால் தான், யோவான் வெளிப்படுத்தலை எழுதிமுடிக்கும்போது பின்வரும் உத்தரவைக் கொடுத்தார்.

‘‘பின்னும், அவர் என்னை நோக்கி: இந்தப் புஸ்தகத்திலுள்ள, தீர்க்கதரிசன வசனங்களை முத்திரைபோடவேண்டாம்; காலம் சமீபமாயிருக்கிறது.’’ (வெளி 22:10)

மனம்திரும்புங்கள், பரலோகராஜ்ஜியம் சமீபமாயிருக்கிறது என்று தனது பிரசங்கத்தை ஆரம்பித்த இயேசுகிறிஸ்து, காலம் சமீபமாயிருக்கிறது என்று யோவானுக்கு முதலாம் நூற்றாண்டிலேயே கூறினபடியால் அப்பொழுது இருந்தே கடைசிகாலம் (Last days) என்பது ஆரம்பித்து விட்டது. இன்று நாம் இருப்பது முடிவுகாலம் (End days) என்பது தெளிவாகின்றது.

இந்த தரிசனத்தின் நோக்கம்

தானியேல் ஜெபிக்குபோது (9:4-19) என் ஜனமாகிய இஸ்ரவேல் ‘உம் கட்டளைகளை மீறினார்கள்; பாவம் செய்துவிட்டார்கள்; அக்கிரமம் செய்துவிட்டார்கள்; அநீதி செய்துவிட்டார்கள்’ என்று ஜெபித்தார்.

‘‘இஸ்ரவேலர் எல்லாரும் உமது நியாயப்பிரமாணத்தை மீறி, உமது சத்தத்துக்குச் செவிகொடாமல் விலகிப்போனார்கள். அவருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; ஆகையால் தேவனுடைய தாசனாகிய மோசேயின் நியாயப்பிரமாணப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சாபமும் ஆணையாக்கினையும் எங்கள்மேல் சொரியப்பட்டன.’’ (தானியேல் 9:11)

இஸ்ரவேலருடைய மீறுதலுக்குத் தண்டனையாகக் கொடுக்கப்பட்ட 70 வருடங்கள் முடியப்போவதால் அவர்கள் மீண்டும் எருசலேமுக்குத் திரும்புவார்கள் என்ற உத்தரவாதம் மட்டுமல்லாமல், இந்த மீறுதலுக்குப் பதிலாக, அதை நிரந்தரமாக நிவர்த்தி செய்யும்படியாக ‘ஒருவர் வருவார்’ என்று கொடுக்கப்பட்டது தான் இந்த தரிசனம். இந்த தரிசனத்தின் நோக்கம் ஓரே வசனத்தில் மிகத்தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

‘‘(1) மீறுதலைத் தவிர்க்கிறதற்கும், (2) பாவங்களைத் தொலைக்கிறதற்கும், (3) அக்கிரமத்தை நிவிர்த்திபண்ணுகிறதற்கும், (4) நித்திய நீதியை வருவிக்கிறதற்கும், (5) தரிசனத்தையும் தீர்க்கதரிசனத்தையும் முத்திரிக்கிறதற்கும், (6) மகா பரிசுத்தமுள்ளவரை அபிஷேகம்பண்ணுகிறதற்கும், உன் ஜனத்தின்மேலும் உன் பரிசுத்த நகரத்தின்மேலும் எழுபதுவாரங்கள் செல்லும்படி குறிக்கப்பட்டிருக்கிறது.’’ (தானியேல் 9:24)

இதில் முதல் நான்கு பரிகாரங்கள் தானியேலின் ஜெபத்திற்கு நேரடியாகக் கிடைத்த பதில். ஐந்து மற்றும் ஆறாவது பதில் இந்த நான்கு பரிகாரங்களும் யார் மூலமாக, எப்படி நிறைவேற்றப்படப் போகிறது என்ற பதிலாகும். மேலே சொல்லப்பட்ட இந்த ஆறு பரிகாரங்களையும் நிறைவேற்ற வந்தவர் நம் இரட்சகராகிய “இயேசு கிறிஸ்து” மட்டுமே என்பதற்கு மேலும் நான் விளக்கம் கொடுக்கத் தேவையில்லை என்று விசுவாசிக்கிறேன். ஏனென்றால் ‘மகா பரிசுத்தமுள்ளவராகிய இயேசு’ அபிஷேகம் பண்ணப்படுகிறதற்கும் ‘உன் ஜனமாகிய இஸ்ரவேல் மீதும், பரிசுத்த நகரமாகிய எருசலேம்’ மீதும் 70 வாரங்கள் செல்லும்படி குறிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. எப்படி இஸ்ரவேலர் மீதும் எருசலேம் மீதும் அவர்களது பாவத்திற்காக ‘70 வருடங்கள் பாபிலோனிய சிறையிருப்பு’ குறிக்கப்பட்டதோ, அதைப்போலவே அவர்களுக்கு பரிகார பலியாக வரப்போகிறவர் வருவதற்கு இன்னும் 70 வார காலம் ‘செல்லும்படி’ குறிக்கப்பட்டுள்ளது என்று தானியேலுக்கு கர்த்தர் வெளிப்படுத்தியுள்ளார். எனவே இந்த தரிசனம் முழுக்க முழுக்க யூதர்கள் சம்பந்தப்பட்டதாகும்.

சிறையிருப்பிலிருந்து மட்டும் தான் விடுதலையா?

இஸ்ரவேல் மற்றும் யூதா ராஜாக்களும், யூத ஜனங்களும் கர்த்தருடைய நியாயபிரமாணத்திற்கு விரோதமாக செய்த ‘விக்கிரக ஆராதனை’ பாவங்களால் தான் அசீரியாவுக்கும் (இஸ்ரவேல் ராஜ்ஜியம்), பாபிலோனுக்கும் (யூதா ராஜ்ஜியம்) சிறையிருப்புக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டனர் என்பதை ராஜாக்கள் மற்றும் நாளாகம புத்தகங்கள் விரிவாகக் கூறுகின்றன. தேவனுக்கு விரோதமான இந்த பாவங்களுக்கு நியாயபிரமாணத்தில் என்ன தண்டனை கூறப்பட்டுள்ளது என்பதை நாம் இங்கு நினைவுகூற வேண்டும். பலமுறைப் பாவம் செய்து, பலமுறை தண்டிக்கப்பட்டு, பலமுறை மன்னிக்கப்படும் வழக்கம் தான் அந்நாள்வரை இஸ்ரவேலில் நடந்துகொண்டிருந்தது; இனி இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக எல்லோருடைய பாவங்களையும் சுமந்து தீர்த்து, நித்தியமீட்பை அளிக்க ஒருவர் வருவார் என்பதே இந்த தரிசனத்தின் மையமாகும்.

தரிசனத்தின் ஆரம்பமும் முடிவும்

‘‘இப்போதும்  நீ  அறிந்து  உணர்ந்துகொள்ளவேண்டியது  என்னவென்றால்:  எருசலேமைத் திரும்ப  எடுப்பித்துக் கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்படுவதுமுதல், பிரபுவாகிய மேசியா வருமட்டும் ஏழு வாரமும்,அறுபத்திரண்டு வாரமும் செல்லும்; அவைகளில் வீதிகளும் அலங்கங்களும் மறுபடியும் கட்டப்படும்; ஆனாலும் இடுக்கமான காலங்களில் இப்படியாகும்.’’ (தானியேல் 9:25)

இந்த தரிசனத்தின் 70 வார காலங்கள் மூன்று கட்டங்களாகக் கூறப்பட்டுள்ளது

  • 7வாரங்கள் + 62 வாரங்கள் + 1 வாரம் = 70 வாரங்கள்

இதில் ஆரம்பப்புள்ளியைத் தெரிந்துகொள்ள மீண்டும் நாம் சில வரலாற்று சம்பவங்களை வேதத்தின் அடிப்படையில் தெரிந்துகொள்வது அவசியம்.

அட்டவணை 11: எருசலேமைக் கட்டிய நபர்கள்

கால ம்

ராஜா

உபயோகப் படுத்தப் பட்ட நபர்

காரியம்

வசன ஆதாரம்

கி.மு 539

கோரேஸ் ராஜா மற்றும் பாபிலோன் ஆளுநர் மேதிய தரியு

செரு பாபேல் மற்றும் யேசுவா

எருசலேம் தேவாலயம் மற்றும் பலிபீடம் திரும்ப கட்ட ஆணை

எஸ்றா முதல் அதிகாரம்

கி.மு 457

அர்தசஷ்டா (இவரது 7வது வருஷம்)

எஸ்றா

எருசலேம் நகரைத் திரும்பக் கட்ட ஆணை

எஸ்றா 7:11-26

கி.மு 445

அர்தசஷ்டா (இவரது 20 வது வருஷம்)

நெகேமியா

எருசலேமின் இடிந்த மதில்களைக் கட்ட ஆணை

நெகேமியா 2 ஆம் அதிகாரம்

முதல் ஏழு வாரங்கள்

மேலே கண்ட வேதாகம மற்றும் வரலாற்று ஆதாரங்களிலிருந்து, இந்த தரிசனத்தின் ஆரம்பப் புள்ளியான ‘நேபுகாத்நேச்சாரால் தரைமட்டமாக்கப்பட்ட எருசலேம் நகரைத் திரும்ப எடுப்பித்து கட்டுவதற்காண ஆணை’ அர்தசஷ்டா ராஜாவால் கி.மு 457 ல் பிறப்பிக்கப்பட்டது. இப்படி யூதர்கள் அடிமைத்தனத்திலிருந்து திரும்பிவந்த பின்பு எஸ்றா மற்றும் நெகேமியா புத்தகங்களில் கூறப்பட்டுள்ள பல நெருக்கடிகளை சந்தித்து ‘இடுக்கமான காலத்தில்’ கட்ட ஆரம்பிக்கப்பட்ட எருசலேம் நகரத்தின் தெருக்களும், மாளிகைகளும் கி.மு 408 ல் கட்டி முடிக்கப்பட்டது. எனவே முதல் 7 வாரங்கள்/49 நாட்கள்/49 தீர்க்கதரிசன வருடங்கள் இந்த காலக்கட்டத்தைக் குறிக்கிறது.

  • கி.மு457- கி.மு 408 = 49 வருடங்கள் = 49 நாட்கள் = 7 வாரங்கள்

இரண்டாவது 62 வாரங்கள்

இரண்டாவது காலக்கட்டமான 62 வாரங்கள்/ 434 நாட்கள்/ 434 தீர்க்கதரிசன வருடங்கள் கி.மு 408 ல் ஆரம்பித்து மிகச்சரியாக கி.பி 27 ல் முடிவடைகிறது. (கி.மு மற்றும் கி.பி முதலாம் வருடம் என்பவைகள் இரண்டும் ஒன்று தான் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்). உலக வரலாறே இயேசுவின் பிறப்பைக் கொண்டு கி.மு, கி.பி என்று பிரிக்கப்பட்டிருப்பதால் இயேசு பிறந்தது மிகச்சரியாக 1 ஆம் வருடம் என்று அர்த்தமல்ல. இயேசு கிறிஸ்து பிறந்தது கி.மு 4 ஆம் ஆண்டு என்பது நீங்கள் மேலும் தெரிந்துகொள்ள வேண்டிய வரலாற்று உண்மையாகும். அப்படியானால் இயேசு தனது 30 ஆவது வயதில் ஞானஸ்நானம் பெற்ற வருடம் கி.பி 27 என்பது உறுதியாகிறது. எனவே தீர்க்கதரிசனத்தின் இரண்டாவது காலக்கட்டமாகிய 434 வருடங்களின் முடிவில், அதாவது கி.பி 27 ல் இயேசு, பிதாவின் வார்த்தை மூலமும், பரிசுத்த ஆவியானவரின் அடையாளத்தோடும் தன்னை இந்த உலகத்திற்கு மேசியாவாக வெளிப்படுத்தினார். அவர் ஞானஸ்நானத்தின்போது தான் மேசியாவாக இஸ்ரவேலருக்கு வெளிப்பட்டார் என்று யோவான் ஸ்நானகன் சொன்ன வார்த்தைகளிலிருந்து அறிந்துகொள்ளலாம்.

‘‘எனக்குப்பின் ஒருவர் வருகிறார், அவர் எனக்கு முன்னிருந்தபடியால் என்னிலும் மேன்மையுள்ளவரென்று நான் சொன்னேனே, அவர் இவர்தான். நானும் இவரை அறியாதிருந்தேன்; இவர் இஸ்ரவேலுக்கு வெளிப்படும்பொருட்டாக, நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுக்க வந்தேன் என்றான்.’’ (யோவான் 1:30,31)

எனவே ‘பிரபுவாகிய மேசியா வருமட்டும் ஏழு வாரமும், அறுபத்திரண்டு வாரமும் செல்லும்’ என்ற தானியேலின் தீர்க்கதரிசன த்தின் படி எருசலேமைக் கட்ட ஆணை வெளியிடப்பட்ட கி.மு 457 லிருந்து மிகச்சரியாக 483வருடங்கள் (7 வாரங்கள் + 62 வாரங்கள்) கழித்து கி.பி 27 / 28 ல் மேசியாவாக வெளிப்பட்டார்.

கி.மு408-கி.பி 27 = 434 வருடங்கள் = 434 நாட்கள் = 62 வாரங்கள்

‘‘ஜனங்களெல்லாரும் ஞானஸ்நானம் பெற்றபோது, இயேசுவும் ஞானஸ்நானம் பெற்று, ஜெபம்பண்ணுகையில், வானம் திறக்கப்பட்டது; பரிசுத்த ஆவியானவர் ரூபங்கொண்டு புறாவைப்போல் அவர்மேல் இறங்கினார். வானத்திலிருந்து ஒரு சத்தமும் உண்டாகி: நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது. அப்பொழுது இயேசு ஏறக்குறைய முப்பது வயதுள்ளவரானார்.’’ (லூக்கா 3:21-23)

மேலும் இந்த ஞானஸ்நானத்திற்குப் பிறகு தான் இயேசு 40 நாட்கள் பிசாசினால் சோதிக்கப்பட்டார். சோதிக்கப்பட்டு முடிந்தவுடன் தனது சுவிசேஷ ஊழியத்தை ஆரம்பித்து, அவர் சொன்ன முதல் வார்த்தை மிகவும் ஆச்சரியமான ஒன்றாகும். அவர் தானியேல் தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டபடி, மேசியாவாக வெளிப்பட நிர்ணயிக்கப்பட்ட ‘காலம் நிறைவேறிற்று’; எனவே மனம் திரும்புங்கள்; எனது ராஜ்ஜியம் அதாவது முடிவு காலம் சமீபமாயிருக்கிறது என்றே கூறினார்.

‘‘உடனே ஆவியானவர் அவரை வனாந்தரத்திற்குப் போகும்படி ஏவினார். அவர் வனாந்தரத்திலே நாற்பதுநாள் இருந்து, சாத்தானால் சோதிக்கப்பட்டு, அங்கே காட்டுமிருகங்களின் நடுவிலே சஞ்சரித்துக்கொண்டிருந்தார். தேவதூதர்கள் அவருக்கு ஊழியஞ்செய்தார்கள். யோவான் காவலில் வைக்கப்பட்ட பின்பு, இயேசு கலிலேயாவிலே வந்து, தேவனுடைய ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து: காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று; மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் என்றார்.’’ (மாற்கு 1:12-15)

படம் 26: தானியேலின் 70 வாரங்களைப் பற்றிய தரிசனம்

இயேசுவின் சிலுவை மரணம்

‘‘அந்த அறுபத்திரண்டு வாரங்களுக்குப் பின்பு மேசியா சங்கரிக்கப்படுவார்; ஆனாலும் தமக்காக அல்ல; நகரத்தையும் பரிசுத்த ஸ்தலத்தையும் வரப்போகிற பிரபுவின் ஜனங்கள் அழித்துப்போடுவார்கள்; அதின்முடிவு ஜலப்பிரவாகம்போல இருக்கும்; முடிவுபரியந்தம் யுத்தமும் நாசமும் உண்டாக நியமிக்கப்பட்டது.’’ (தானியேல் 9:26)

தானியேலின் இரண்டாவது காலக்கட்டமான 62 வாரங்களின் முடிவாகிய கி.பி 27 க்கு பின்பு மேசியாவாகிய இயேசு ரோமர்களால் சிலுவையில் சங்கரிக்கப்படுவார் என்ற இந்த தீர்க்கதரிசனம் நிறைவேறியதால் தான் நாம் இன்றைக்கு இயேசுவின் இரத்தத்தால் நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம் என்பதில் உங்களுக்கு சந்தேகம் ஏதும் இருக்காது. இதே வசனத்தில் ‘வரப்போகிற பிரபுவின் ஜனங்கள்’ எருசலேம் நகரத்தையும், ஆலயத்தையும் அழிப்பார்கள் என்ற தீர்க்கதரிசனத்தின் படி, அவர்கள் யார்? என்ன நடந்தது? என்பதை அடுத்து பார்க்க இருக்கிறோம். அதற்கு முன்னால் 69 வாரங்கள் (7+62) முடிந்து விட்டது; மீதமிருக்கும் ஒரு வாரம் என்னவாயிற்று என்று பார்க்க இருக்கிறோம்.

இரண்டு விதமான பிரபுக்கள்

இந்த வசனங்களில் இரண்டு விதமான பிரபுக்களைப் (Prince) பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. ஒன்று ‘பிரபுவாகிய மேசியா’ என்பது இயேசுவை மட்டுமே குறிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த பிரபுவாகிய மேசியா, உலகை மீட்பதற்காகத் தான் வந்தார் என்பதும் நமக்குத் தெரியும். ஆனால் இன்னொரு ‘வரப்போகிற பிரபு’ மற்றும் அவரது ஜனங்கள் எருசலேம் நகரத்தையும், பரிசுத்த ஸ்தலமாகிய தேவாலயத்தையும் அழிப்பவர்களாக வருவார்கள் என்று தானியேல் காண்கிறார். இந்த ‘வரப்போகிற பிரபு’ தான் டைட்டஸ்; அவனது ஜனங்கள் ரோம போர்சேவகர்கள்; இவர்கள் தான் கி.பி 67-70 ல் எருசலேம், இஸ்ரவேல் தேசம், தேவாலயம் எல்லாவற்றையும் சர்வநாசம் பண்ணியவர்கள் (Seige of Jerusalem/ Jewish revolt) என்பது வரலாற்று சம்பவம்.

இந்த ஒரு வாரம்/ 7 நாட்கள் / 7 தீர்க்கதரிசன வருடங்கள் தான் மிக முக்கியமானது. இந்த 7 வருடங்கள் தான் அந்திகிறிஸ்து வெளிப்படவிருக்கும் கடைசி 7 வருடங்கள்; இதற்கு முன்பு இயேசுவின் இரகசிய வருகையும், இது முடியும்போது பகிரங்க வருகையும் இருக்கும் என்று கூறுபவர்கள் தங்கள் நம்பிக்கைக்கு ஆதாரமாகக் கூறும் காலக்கட்டமாகும். கொஞ்சம் கவனமாக இனி வருவதைப் படியுங்கள்; அது உண்மை தானா என்று உங்களுக்கே புரியும். இத்தனை அத்தியாயங்களில் பல ராஜ்ஜியங்களைப் பற்றிய தீர்க்கதரிசனங்களைப் படித்த பின்பு நீங்களும் தெளிவடைந்து இருப்பீர்கள் என்று விசுவாசிக்கிறேன். அடுத்த வசனத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளதையும் சேர்த்தே நாம் வியாக்கியானம் செய்யவேண்டும்.

‘‘அவர் (இயேசு) ஒரு வாரமளவும் அநேகருக்கு உடன்படிக்கையை உறுதிப்படுத்தி, அந்த வாரம் பாதி சென்றபோது பலியையும் காணிக்கையையும் (இயேசு) ஒழியப்பண்ணுவார்; அருவருப்பான செட்டைகளோடே பாழாக்குகிறவன் வந்து இறங்குவான், நிர்ணயிக்கப்பட்டிருக்கிற நிர்மூலம் பாழாக்குகிறவன்மேல் தீருமட்டும் சொரியும் என்றான்.’’ (தானியேல் 9:27)

இந்த இரண்டு வசனங்களிலும் (9:26,27) இயேசுவைப் பற்றியும், சாத்தானாகிய அந்திகிறிஸ்துவின் பிரதிநிதியைப் பற்றியும் சில காரியங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது

இயேசுவைப் பற்றிஞீ

  • மேசியாவாகிய இயேசு ரோமப் பேரரசால் கொல்லப்படுவார்
  • அவர்ஜீவனைக் கொடுத்தது தமக்காக அல்ல; உலக மக்களின் பாவங்களுக்காக
  • இயேசுதான் ஒரு வாரமளவும் (7 வருடங்கள்) அநேக ஜனங்களுக்கு உடன்படிக்கையை உறுதிப்படுத்துவார்
  • அந்தஒரு வாரம் அல்லது 7 வருடங்கள் பாதி முடியும்போது அவர் தேவாலயத்தில் பலியையும், காணிக்கையும் நிரந்தரமாக நிறுத்திவிடுவார். முதல் பாதி மூன்றரை வருடங்களிலும், இரண்டாவது பாதியான மூன்றரை வருடங்களிலும் இயேசுதான் யூதர்களோடு உடன்படிக்கை செய்வார் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது

அந்திகிறிஸ்துவின் பிரதிநிதியைப் பற்றி

  • இனிமேல், அதாவது இயேசுவின் காலத்திற்குப் பிறகு வரப்போகிற ரோமப் பிரபுவின் சேவகர்கள் எருசலேம் நகரத்தையும், தேவாலயத்தையும் அழித்துப்போடுவார்கள்
  • இதுநடக்கும்போது நிகழும் யுத்தத்தின் (கி.பி 67-70) முடிவு நோவாவின் காலத்தில் நடந்த ஜலப்பிரளயம் போல மிகக்கொடுமையாக இருக்கும்
  • இந்தயுத்தத்தின் முடிவுபரியந்தம் பல பொருள் மற்றும் உயிர் நாசமும் உண்டாகும். (பார்க்க அத்தியாயம்-11:தீர்க்கதரிசன காலங்களும் எருசலேமின் அழிவும்)
  • அருவருப்பான செட்டைகளோடு ( Symbolic for satan) நகரத்தையும், தேவாலயத்தையும் பாழாக்கும்படி இந்த ரோமப்பேரரசின் பிரபு (டைட்டஸ்) வருவான்
  • அதின்முடிவு ஜலப்பிரவாகம்போல இருக்கும்’ என்பது ரோமர்களால் எருசலேம் அழிக்கப்பட்டதைக் குறிக்கும். இதேபோல் நினிவேயின் அழிவைப்பற்றி நாகூமுக்கு கர்த்தர் சொல்லியுள்ளார். ‘‘ஆனாலும் நினிவேயின் ஸ்தானத்தை, புரண்டுவருகிறவெள்ளத்தினால் சர்வசங்காரம்பண்ணுவார்’’ (நாகூம்1:8).
  • அதன்பின்பு, தேவனால் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் நிர்மூலம் (முத்திரைகள், எக்காளங்கள், கலச வாதைகள்) இந்த பாழாக்க வந்த பிரபுவின் ரோம சாம்ராஜ்ஜியத்தின் மீது, அது அழிந்து தீருமட்டும் ஊற்றப்படும்.

யார் உடன்படிக்கை செய்வார்?

கடைசி 7 வருடங்களில் அந்திகிறிஸ்து என்ற தனிநபர் வந்து யூதஜனங்களோடு உடன்படிக்கை செய்து, முதல் மூன்றரை வருடங்கள் தன்னை நல்லவன்போல காண்பிப்பான்; பின்பு எருசலேம் தேவாலயத்தில் நுழைந்து 2 தெசலோனிக்கேயர் 2 ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்டபடி தன்னை தேவன் போலக் காண்பிப்பான்; எல்லாரும் தன்னை வணங்கும்படி கொடுமை செய்து 666 முத்திரையிடுவான்; அப்போது இரண்டாவது மூன்றரை வருட காலத்தில் வெளிப்படுத்தலில் சொல்லப்பட்ட அத்தனை முத்திரைகள், எக்காளங்கள், வாதைகள் எல்லாம் வரிசையாக அவன் மேல் ஊற்றப்படும் என்று போதிக்கப்படுவது, முழங்காலுக்கும் தலைமுடிக்கும் முடிச்சி போடுவது போன்றது. வசனம் தெளிவாகச் சொல்கிறது, ‘‘அவர் (மேசியா) ஒரு வாரமளவும் அநேகருக்கு உடன்படிக்கையை உறுதிப்படுத்தி, அந்த வாரம் பாதி சென்றபோது பலியையும் காணிக்கையையும் (இயேசு) ஒழியப்பண்ணுவார்’. இயேசு கிறிஸ்து தான் யூதர்கள் மத்தியில் தனது ஊழியத்தாலும், இரத்தத்தாலும் உடன்படிக்கை செய்ய வந்தவர் என்று பரிசுத்த வேதாகமத்தில் ஆதாரங்களை நாம் பார்க்க ஆரம்பித்தால் இந்த புத்தகம் காணாது. பழைய ஏற்பாட்டு பிதாக்கள் முதல் எகிப்திலிருந்து கானான் வந்த இஸ்ரவேல் ஜனங்களுக்கு வரை உடன்படிக்கையை உறுதிப்படுத்துவேன் என்று தேவனே வாக்கு கொடுத்திருக்கிறார். சாத்தான் அல்ல.

‘‘நான் உங்கள்மேல் கண்ணோக்கமாயிருந்து, உங்களைப் பலுகவும் பெருகவும்பண்ணி, உங்களோடே என் உடன்படிக்கையைத் திடப்படுத்துவேன்.’’ (லேவியராகமம் 26:9)

இந்த உடன்படிக்கையை உறுதிப்படுத்தியவர் இயேசு ஒருவரே என்பதற்கு ஆதாரங்களை அறிந்துகொள்ள, எபிரேயர் 9 ஆம் அதிகாரத்தை முழுவதும் வாசித்துப் பாருங்கள்; அது போதும்.

‘‘கிறிஸ்துவானவர் வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு, கையினால் செய்யப்பட்டதாகிய இந்தச் சிருஷ்டிசம்பந்தமான கூடாரத்தின் வழியாக அல்ல, பெரிதும் உத்தமமுமான கூடாரத்தின் வழியாகவும், வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார். அதெப்படியெனில், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தமும், தீட்டுப்பட்டவர்கள்மேல் தெளிக்கப்பட்ட கடாரியின் சாம்பலும், சரீரசுத்தியுண்டாகும்படி பரிசுத்தப்படுத்துமானால், நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்தக்கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்! ஆகையால் முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நிவிர்த்திசெய்யும்பொருட்டு அவர் மரணமடைந்து, அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்தரத்தை அடைந்துகொள்வதற்காக புதுஉடன்படிக்கையின் மத்தியஸ்தராயிருக்கிறார்.’’(எபிரேயர் 9:11-15)

‘‘புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கும், ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப்பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள்.’’ (எபிரேயர் 12:24)

இறுதியாக இயேசுவே கடைசி இராபோஜனத்தின்போது இதை அவரது வாயாலே உறுதிப்படுத்தியுள்ளார்.

‘’இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது.

எனவே இயேசு கிறிஸ்து தான் ‘ஒரு வாரமளவும் உடன்படிக்கையை உறுதிப்படுத்தியவர்’ என்பது தெளிவாகிறது. ஏற்கனவே முற்பிதாக்களுக்கு செய்யப்பட்ட உடன்படிக்கையை இயேசுவால் மட்டும் தான் உறுதிப்படுத்த முடியும்; அந்திகிறிஸ்துவால் அல்ல.

பலியையும், காணிக்கையையும் யார் ஒழியப்பண்ணினார்?

இயேசு இந்த உலகத்தில் ஊழியம் செய்த காலம் வரையில் எருசலேம் தேவாலயத்தில், தேவனாகிய கர்த்தர் மோசேக்கு கொடுத்த கட்டளைகளின்படியே எல்லா விதமான பலிகளும் செலுத்தப்பட்டு வந்தது. ஆனால் இந்த பழைய ஏற்பாட்டு பலிகளின் அல்லது நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாக இயேசு தன்னையே பலியாக ஒருமுறை ஒப்புக்கொடுத்ததன் மூலமாக, இனி எருசலேம் தேவாலயத்தில் ஆடு, மாடு பலிகள் மற்றும் விளைச்சலின் காணிக்கைகளை செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்பதை மேலே குறிப்பிட்டுள்ள எபிரேயருக்கு எழுதப்பட்ட நிருபப் பகுதி தெளிவாக விளக்கியுள்ளது. எத்தனை அருமையான தேவ திட்டம் பாருங்கள். கர்த்தருடைய கிருபைக்கு அளவே இல்லை. அப்படியானால் ‘இயேசுகிறிஸ்துவே’ தனது சிலுவை மரணத்தின் மூலமாக பலியையும், காணிக்கையையும் ஒழியப்பண்ணினார்; அந்திகிறிஸ்து வந்துதான் பலியையும் காணிக்கையையும் நிறுத்துவான் என்பது அல்ல. இதற்கு இன்னொரு வலுவான ஆதாரத்தை எபிரேயரை ஆக்கியோன் 10 ஆம் அதிகாரத்தில் எழுதியுள்ளதை தயவு செய்து வாசித்துப்பாருங்கள். இயேசு உலகத்தில் பிரவேசித்த நோக்கமே பலியையும் காணிக்கையையும் நிறுத்தி, தனது உடலையே பலியாக ஒப்புக்கொடுப்பது தான்.

‘‘ஆகையால் அவர் (இயேசு) உலகத்தில் பிரவேசிக்கும்போது: பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம்பண்ணினீர்;’’ (எபிரேயர் 10:5)

முதல் பலி, இரண்டாவது பலி

எபிரேயர் 10 ஆம் அதிகாரம் இரண்டு விதமான பலிகளைக் குறிப்பிட்டுள்ளது. இந்த வசனங்களை கவனமாக வாசித்துப் பாருங்கள்.

‘‘சர்வாங்க தகனபலிகளும், பாவநிவாரண பலிகளும் உமக்குப் பிரியமானதல்ல என்றீர். அப்பொழுது நான்: தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறது என்று சொன்னேன் என்றார். நியாயப்பிரமாணத்தின்படி செலுத்தப்பட்டுவருகிற பலிகளைக்குறித்து மேற்சொல்லியபடி: பலியையும், காணிக்கையையும், சர்வாங்க தகனபலிகளையும், பாவநிவாரணபலிகளையும் நீர் விரும்பவில்லை, அவைகள் உமக்குப் பிரியமானதல்ல என்று சொன்னபின்பு: தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன் என்று இரண்டாவதை நிலைநிறுத்துவதற்கு முதலாவதை நீக்கிப்போடுகிறார்.’’ (எபிரேயர் 10:6-9)

  • முதல்பலி – கர்த்தருக்குப் பிரியமானதல்லாமல் போன அல்லது பாவங்களை நிரந்தரமாக நிவர்த்திசெய்ய முடியாத நியாயப்பிரமாணத்தின்படியான சர்வாங்க, பாவநிவாரண பலிகள்.
  • இரண்டாவது பலி தேவனுடைய சித்தத்தின்படி இயேசு தனது உடலையே ஒப்புக்கொடுத்த பலி

இரண்டாவது பலியாகிய தனது சிலுவை மரணத்தை நிலைநிறுத்துவதற்கு, மேசியாவாகிய இயேசு தாமே, முதலாவது பலியாகிய நியாயப்பிரமாணத்தின் பலிகளையும், காணிக்கைகளையும் நீக்கிப்போடுகிறார். எனவே பலியை நிறுத்தியது அந்திகிறிஸ்து அல்ல; இயேசுவே. அவர் ஒருவரே. மேலும் புஸ்தகச்சுருளில் தன்னைப்பற்றி எழுதியிருப்பதாக இயேசுவே சொல்கிறார். இது நியாயப்பிரமாண புஸ்தகமாக இருக்கலாம்; ஆனால் புஸ்தகச்சுருள் என்று சொல்லப்பட்டிருப்பதால் தானியேலுக்கு வெளிப்படுத்தப்பட்ட காரியங்கள் அடங்கிய முத்திரையிடப்பட்ட புஸ்தகச்சுருளாக இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.

கடைசி ஒரு வாரம்

வசனத்தின் படி ‘அவர் (மேசியா) ஒரு வாரமளவும் உடன்படிக்கையை (யூதர்களுக்கு) உறுதிப்படுத்தி, அந்த வாரம் பாதி சென்றபோது தான் பலியையும், காணிக்கையையும் ஒழியப்பண்ணினார்’ என்று அறிந்துகொண்டோம். தானியேலின் 69 வாரங்களின் முடிவில் மேசியாவாக வெளிப்பட்ட இயேசு, அடுத்த வாரம் (70 வது வாரம்) அதாவது 7 வருடங்கள் யூதர்களுக்கு உடன்படிக்கையை எப்படி உறுதிசெய்தார்? என்பதை நாம் பார்க்க இருக்கிறோம். கி.பி 27 லிருந்து இயேசு மூன்றரை வருடங்கள் ‘இஸ்ரவேலரிடையே’ தனது வார்த்தைகளின் மூலமாக, அற்புதங்களின் மூலமாக உடன்படிக்கையை உறுதிசெய்தார். அந்த வாரம் அதாவது அந்த 7 வருடங்கள் பாதி சென்றபோது கி.பி 31 ன் நடுவில் இயேசு சிலுவையில் தன் ஜீவனைக் கொடுத்து, மேலே சொன்னது போல பலியையும், காணிக்கையையும் நிரந்தரமாக நிறுத்தினார். ஏனென்றால் அதற்குப் பின்பு பாவமன்னிப்பிற்கு இயேசுவின் இரத்தம் ஒன்றே போதுமானதாகி விட்டது. அதற்கு அடையாளமாகத் தான் அவர் சிலுவையில் மரிக்கும்போது தேவாலயத்தின் பரிசுத்த ஸ்தலத்திற்கும், மகா பரிசுத்த ஸ்தலத்திற்கும் நடுவே இருந்த திரைச்சீலை இரண்டாகக் கிழிந்தது.

‘‘தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார். ‘‘

இதன்படி 70 ஆவது வாரமாகிய கடைசி 7 வருடங்களின் முதல் பாதி மூன்றரை வருடத்தில் இறுதியில் இயேசு சிலுவையில் அறையப்பட்டார். அப்படியானால் மீதமிருக்கும் மூன்றரை வருடங்களில் அவர் எப்படி யூதர்களோடு உடன்படிக்கையை உறுதிப்படுத்தினார்?

இரண்டாம் மூன்றரை வருடங்கள்

இயேசு, தான் உலகத்தின் பாவங்களை சுமக்க வந்திருந்தாலும், யூதர்களை மீட்பதே முதல் முக்கிய குறிக்கோள் என்று தனது ஊழியத்தின் காலங்களில் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாகப் புறஜாதியார் இயேசுவிடத்தில் வந்த நேரங்களில் பின்வருமாறு சொல்லியுள்ளார்.

‘‘அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல என்றார்.’’ (மத்தேயு 15:24)

‘‘நீங்கள் அறியாததைத் தொழுதுகொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்; ஏனென்றால் இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது.’’ (யோவான் 4:22)

எனவே அவர் முதல் மூன்றரை வருடங்கள் தனது உலக வாசத்தின் மூலமாகவும், இரண்டாம் மூன்றரை வருடங்கள் தனது அப்போஸ்தலர்கள் மூலமாகவும் யூதர்களுக்கு தனது உடன்படிக்கையை உறுதிபடுத்தினார். ஏனென்றால் கடைசி ஒரு வாரம் அல்லது 7 வருடங்கள் என்பதும் யூதர்கள் (உன் ஜனத்தின் புத்திரர் மீது) மீது தான் நியமிக்கப்பட்டது என்பதால் மீதி மூன்றரை வருடங்களும் உடன்படிக்கை யூதர்களுக்குத்தான் உறுதிப்படுத்தப்பட்டது.  இயேசு பரலோகம் சென்றபின்பு எப்படி மூன்றரை வருடங்கள் உடன்படிக்கை உறுதிப்படுத்தப்பட்டது? என்பதைத்தான் பார்க்க இருக்கிறோம்.

இயேசு உயிர்த்தெழுந்து பரலோகத்திற்குப் போன பின்பு முதல் மூன்றரை வருடங்கள் சுவிசேஷம் யூதர்களுக்குமட்டுமே சென்றது என்பதை பேதுரு உட்பட இயேசுவின் சீடர்களின் ஊழியங்களிலிருந்து அறிந்துகொள்ளலாம். இதைத்தான் அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகம் தெளிவாகக் கூறுகிறது. நீங்கள் அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தில் முதல் 7 அதிகாரங்களில் பார்த்தீர்கள் என்றால், சுவிசேஷம் முதலில் யூதர்களுக்கும், யூத மார்க்கத்தமைந்த கிரேக்கர்களுக்கும் மட்டுமே அறிவிக்கப்பட்டது. இந்த 7 ஆம் அதிகாரத்தில் தான் ஸ்தேவான் சுவிசேஷத்தின் நிமித்தம் யூதர்களால் கல்லெறியப்பட்டு முதல் இரத்த சாட்சியாய் மரிக்கிறார். அப்போஸ்தலர் 7 ஆம் அதிகாரம் முழுவதும் அவரது சாட்சியையும், அவர் கொல்லப்பட்டதையும் மட்டுமே குறிக்கிறது. அடுத்த அதிகாரமாகிய 8 ஆம் அதிகாரம் யூத கிறிஸ்தவர்கள் உபத்திரவமடைய ஆரம்பித்ததையும், அவர்கள் உலகமெங்கும் சிதறி புறஜாதிகளுக்கு சுவிசேஷம் பரவ ஆரம்பித்ததையும் கூறுகிறது. இது மிகச்சரியாக ‘சுவிசேஷத்தைப் புறக்கணித்த’ அல்லது ‘இயேசுவின் உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ள மறுத்த’ யூதர்களால் கொலை செய்யப்பட்ட ஸ்தேவானின் மரணத்திற்குப் பின் தான் ஆரம்பிக்கிறது.

‘‘அவனைக் (ஸ்தேவானை) கொலைசெய்கிறதற்குச் சவுலும் சம்மதித்திருந்தான். அக்காலத்திலே எருசலேமிலுள்ள சபைக்கு மிகுந்த துன்பம் உண்டாயிற்று. அப்போஸ்தலர்தவிர, மற்ற யாவரும் யூதேயா சமாரியா தேசங்களில் சிதறப்பட்டுப்போனார்கள். சிதறிப்போனவர்கள் எங்குந்திரிந்து, சுவிசேஷ வசனத்தைப் பிரசங்கித்தார்கள்.’’ (அப்போஸ்தலர் 8:1,4)

ஆனாலும் இவர்கள் சிலகாலம் யூதர்களுக்கே சுவிசேஷத்தை அறிவித்தார்கள்.

‘‘ஸ்தேவான் நிமித்தமாய் எழும்பின உபத்திரவத்தினாலே சிதறப்பட்டவர்கள் சுவிசேஷ வசனத்தை யூதர்களுக்கேயன்றி மற்ற ஒருவருக்கும் அறிவியாமல், பெனிக்கேநாடு, சீப்புரு தீவு, அந்தியோகியா பட்டணம்வரைக்கும் சுற்றித்திரிந்தார்கள்.’’ (அப்போஸ்தலர் 11:19)

இதே காலக்கட்டத்தில் தான் இரண்டு முக்கிய சம்பவங்கள் நடக்கிறது.

  1. அதுவரை எருசலேமிலும், யூதர்கள் நடுவிலும் சுவிசேஷத்தை அறிவித்து வந்த பேதுரு, பரிசுத்த ஆவியானவரால் புறஜாதியானான ‘இத்தாலியா பட்டாளத்து தளபதி கொர்நேலியுவின்’ வீட்டாரின் இரட்சிப்புக்கு அ னு ப் ப ப் ப ட் ட தி ல் ஆ ர ம் பி த் து ( து ப் ப ட் டி த ரி ச ன ம் ) , சுவிசேஷம் புறஜாதியாருக்குக் கொண்டுசெல்லப்பட்டது.(அப்போஸ்தலர் 10 ஆம் அதிகாரம்)
  2. இன்னொரு பக்கம் சவுல், பவுலாக மாறி தன்னை முழுவதும் ‘புறஜாதியாருக்கான அப்போஸ்தலனாகவே’ வெளிப்படுத்தினது மட்டுமல்லாமல், இயேசுவின் உடன்படிக்கையின் சுவிசேஷத்தைப் புறக்கணித்த யூதர்களைக் கடிந்துகொண்டு, உடன்படிக்கையின் காலம் முடிவடைந்ததையும் உறுதிப்படுத்துகிறார்.

‘‘யூதர்கள் ஜனக்கூட்டங்களைக் கண்டபோது பொறாமையினால் நிறைந்து, பவுலினால் சொல்லப்பட்டவைகளுக்கு எதிரிடையாய்ப் பேசி, விரோதித்துத் தூஷித்தார்கள். அப்பொழுது பவுலும் பர்னபாவும் தைரியங்கொண்டு அவர்களை நோக்கி: முதலாவது உங்களுக்கே தேவவசனத்தைச் சொல்லவேண்டியதாயிருந்தது; நீங்களோ அதைத் தள்ளி, உங்களை நித்தியஜீவனுக்கு அபாத்திரராகத் தீர்த்துக்கொள்ளுகிறபடியினால், இதோ, நாங்கள் புறஜாதியாரிடத்தில் போகிறோம்.’’ (அப்போஸ்தலர் 13:45,46)

‘‘மக்கெதோனியாவிலிருந்து சீலாவும் தீமோத்தேயும் வந்தபோது, பவுல் ஆவியில் வைராக்கியங்கொண்டு, இயேசுவே கிறிஸ்து என்று யூதருக்குத் திருஷ்டாந்தப்படுத்தினான். அவர்கள் எதிர்த்து நின்று தூஷித்தபோது, அவன் தன் வஸ்திரங்களை உதறி: உங்கள் இரத்தப்பழி உங்கள் தலையின்மேல் இருக்கும்; நான் சுத்தமாயிருக்கிறேன்; இதுமுதல் புறஜாதியாரிடத்திற்குப் போகிறேனென்று அவர்களுடனே சொல்லி,….’’ (அப்போஸ்தலர் 18:5&6)

இப்படியாக இயேசுவின் இரட்சிப்பின் உடன்படிக்கை அப்போஸ்தலர்களால் யூதர்களுக்கு பிரசங்கிக்கப்பட்டு, பின்பு இரத்த சாட்சியான ஸ்தேவானின் மரணத்திற்குப் பின்பு புறஜாதியாருக்குத் திரும்புகிறதை நாம் பார்க்க முடியும். இந்த ஸ்தேவான் கொல்லப்பட்டது இயேசுகிறிஸ்து மரித்து, உயிர்த்தெழுந்த கி.பி 31 ஆம் ஆண்டின் நடுவிலிருந்து சரியாக மூன்றரை வருடங்கள் கழித்து கி.பி 34 ஆம் ஆண்டில் நடந்தது. எனவே ‘அவர் (மேசியா) ஒரு வாரமளவும் (7 வருடங்கள்) அநேக ஜனங்களுக்கு (யூதர்களுக்கு) உடன்படிக்கையை உறுதிப்படுத்தி, அந்த வாரம் (7 வருடம்) பாதி சென்றபோது (31/2 வருட ஊழியத்தின் முடிவில்) பலியையும், காணிக்கையையும் (தன்னையே பலியாக ஒப்புக்கொடுத்ததன் மூலம்) ஒழியப்பண்ணினார். (தானியேல் 9:27)

இந்த தீர்க்கதரிசனத்தில் அந்திகிறிஸ்து வருகிறானா?

இந்த 70 வாரங்களைக் குறித்த தீர்க்கதரிசனத்தில் அந்திகிறிஸ்துவைக் குறித்த அல்லது அவனது ராஜ்ஜியத்தைக் குறித்த எந்த வார்த்தையும் எழுதப்படவில்லை. எழுதப்படவேண்டிய அவசியமும் இல்லை. ஏனென்றால் இந்த தரிசனமே இஸ்ரவேலரின் பாவநிவர்த்திக்காக மேசியா வருவார் என்று தானியேலின் ஜெபத்திற்குப் பதிலாக கிடைத்த ஒன்றாகும். தானியேலுக்கு மேசியாவின் வருகை மட்டுமல்ல; அவர் ‘சங்கரிக்கப்பட யூதர்களால் ரோமர்களிடம் ஒப்புக்கொடுக்கப்படுவார்’ என்ற தீர்க்கதரிசனமும், அவரை ஆக்கினைக்குள்ளாக்கிய பாவத்திற்காக யூதர்கள் மீண்டும் ஒரு பேரழிவை சந்திக்க நேரிடும் என்றும், யூதர்களை வேரறுக்க வரும் அந்திக்கிறிஸ்துவின் ராஜ்ஜியமான ரோம சாம்ராஜ்ஜியத்தின் பிரபுவான ‘வெஸ்பாசியனின் மகன் டைட்டஸ்’ தான் சாத்தானின் அடையாளமான ‘அருவருப்பான செட்டைகளோடு’ எருசலேமையும், தேவாலயத்தையும் பாழாக்க வருபவன் என்றும் இந்த வசனங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இது நான் பதினோராம் அத்தியாயத்தில் விளக்கியுள்ள எருசலேமின் அழிவின் தீர்க்கதரிசனமே தவிர கடைசி 7 வருடங்களில் அந்திகிறிஸ்து வந்து அமரும் தீர்க்கதரிசனம் அல்ல.

‘‘(எருசலேம்) நகரத்தையும் பரிசுத்த ஸ்தலத்தையும் (தேவாலயத்தையும்) வரப்போகிற பிரபுவின் (டைட்டஸ்) ஜனங்கள் (ரோம வீரர்கள்) அழித்துப்போடுவார்கள்; அதின்முடிவு ஜலப்பிரவாகம்போல இருக்கும்; முடிவுபரியந்தம் யுத்தமும் நாசமும் உண்டாக நியமிக்கப்பட்டது’’ கி.பி 70 ல் யூதர்கள் உலகமெங்கும் துரத்தப்பட்டு இஸ்ரவேல் என்ற நாடே இல்லாமல் (கி.பி 70 லிருந்து கி.பி 1948 வரை) அழிக்கப்பட்டதற்கு மேலான நாசம் வேறு என்ன இருக்கிறது ?

அருவருப்பான செட்டைகளோடு வரும் பாழாக்குகிறவன்

நாம் ஏற்கனவே பார்த்தபடி தானியேல் மற்றும் வெளிப்படுத்தலின் தீர்க்கதரிசனங்கள், ராஜ்ஜியங்கள் சம்பந்தப்பட்டதே தவிர தனிமனிதன் சம்பந்தப்பட்டது அல்ல. அப்படியானால் பாழாக்குகிறவன் என்பது தனிநபர் அல்ல, டைட்டஸ் சார்ந்த ரோமப்பேரரசையேக் குறிக்கும். ஏனென்றால், இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகை மட்டும் ரோமப்பேரரசு தான் ஏதாவது ஒருவகையில் உலகமெங்கும் வியாபித்திருக்கும் என்று ஏற்கனவே பார்த்துள்ளபடி, பாழாக்கும் அந்திகிறிஸ்துவின் ராஜ்ஜியம் என்பது ரோம சாம்ராஜ்ஜியத்தையே குறிக்கும். இந்தப் பகுதியில் ‘அருவருப்பான செட்டைகளோடு பாழாக்குகிறவன்’ வந்து இறங்குவான் என்பதை, படக்காட்சிகளில் ‘டைனோசர் இறக்கைகளோடு ஊருக்குள் வந்து இறங்குவதைப் போல’ கற்பனை செய்வதன் பலன் தான் ‘அந்திகிறிஸ்து என்ற தனி மனிதன் அருவருப்பான உருவத்தோடு, செட்டைகளோடு’ ஒரு ஆகாய வாகனத்தில் வந்து தேவாலயத்தில் இறங்குவதைப் போல பலரைக் கற்பனை செய்ய வைத்திருக்கிறது. இது நேரடி அர்த்தம் கொண்ட வசனம் அல்ல. சங்கேத மொழிகளால் உருவகப்படுத்தப்பட்டு சொல்லப்பட்டவைகளாகும். இப்படி சொல்வதனால் மற்றவர்களின் நம்பிக்கையைக் கேலி செய்வதாக நினைக்கவேண்டாம். நானும் ஒருகாலத்தில் இவைகளை நம்பியது மட்டுமல்லாமல், போதித்தவனும் கூட. இந்த வியாக்கியானங்கள் மிகவும் ஆழமானது என்பதால், அதை எளியமுறையில் புரியவைப்பதற்கு குட்டிக்கரணம் அடிக்கக்கூட தயாராக இருக்கிறேன்.

பாழாக்கும் அருவருப்பு

மேலே சொல்லப்பட்டதும், தானியேல் 11 ஆம் அதிகாரத்தில் செலுசிய ராஜாவான ‘அண்டியோகஸ் எபிபேனஸ்-4’ ஐ க்குறிக்கும் பகுதியில் வரும் ‘பாழாக்கும் அருவருப்பும்’ வேறுவேறு.

‘‘ஆனாலும் அவனிடத்திலிருந்து புறப்பட்டசேனைகள் எழும்பி, அரணான பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, அன்றாடபலியை நீக்கி, பாழாக்கும் அருவருப்பை அங்கே வைப்பார்கள்.’’ (தானியேல் 11:31)

இதைப்பற்றி ஏற்கனவே நாம் கிரேக்க சாம்ராஜ்ஜியத்தைப் பற்றிய அத்தியாயத்தில் (அத்தியாயம்-6) பார்த்துவிட்டோம். இதில் சொல்லப்பட்டுள்ள பாழாக்கும் அருவருப்பு என்பது, அண்டியோகஸால் எருசலேம் தேவாலயத்தின் மகாபரிசுத்த ஸ்தலத்தில் வைக்கப்பட்ட ‘ஜீயஸ்/ஒலிம்பிஜியஸ் தேவனின்’ சிலையாகும். இங்கே ‘வைப்பார்கள்’ என்றும் தானியேல் 9:27 ல் ‘வந்து இறங்குவான்’ என்றும் வித்தியாசப்படுத்தி சொல்லப்பட்டுள்ளதை நினைவில் கொள்ளவேண்டும்.

நிர்ணயிக்கப்பட்ட நிர்மூலம்

தானியேல் 9:26 ல் சொல்லப்பட்டுள்ள அழிவு எருசலேம் மற்றும் யூதர்களின் அழிவைப் பற்றியதாகும். ஆனால் 9:27 ல் ‘நிர்ணயிக்கப்பட்டிருக்கிற நிர்மூலம் பாழாக்குகிறவன்மேல் தீருமட்டும் சொரியும்’ என்று கூறப்பட்டதன் மூலம், இந்த நிர்மூலம் எருசலேமைப் பாழாக்கின ‘ரோமப்பேரரசின்’ மீது விதிக்கப்பட்டதாகும். இந்த ரோமப்பேரரசின் வழித்தோன்றலாய் வந்த ‘கத்தோலிக்க ரோமப் பேரரசு’ தான் அந்திகிறிஸ்துவின் உச்சகட்ட ராஜ்ஜியமானதால் அதன் மீது விதிக்கப்பட்ட அழிவுகள் தேவனின் கோபாக்கினை ‘தீருமட்டும் சொரியும்’ என்பதே இதன் அர்த்தமாகும். இதைத்தான் இயேசு யோவானுக்கு வெளிப்படுத்திய ‘முத்திரைகள், எக்காளங்கள் மற்றும் வாதைகளால் நிறைந்த கலசங்களால்’ வரும் அழிவுகளாகக் கூறியுள்ளார். இனி பின்வரும் அத்தியாயங்களில் அதைப்பற்றி விரிவாகப் பார்க்க இருக்கிறோம். பரிசுத்த வேதம் எத்தனை மகத்துவமானது!!

காலங்களின் அடையாளங்களை நிதானியுங்கள்

இயேசுவை விசுவாசிக்காத பரிசேயரும், சதுசேயரும் ‘அவர் தான் மேசியா என்பதற்கு வானத்திலிருந்து அடையாளம் காண்பிக்குமாறு’ கேட்டார்கள். அதற்கு இயேசு, தானியேலின் 70 வார தரிசனத்தில், தான் மேசியாவாக வெளிப்படும் ஆண்டு வரை துல்லியமாக எழுதிவைத்திருப்பதைத் தினந்தோறும் வாசித்தும் உணர்ந்துகொள்ளாத அவர்களிடம் பின்வருமாறு கூறினார்.

‘‘பரிசேயரும் சதுசேயரும் அவரைச் சோதிக்கும்படி அவரிடத்தில் வந்து: வானத்திலிருந்து ஓர் அடையாளத்தைத் தங்களுக்குக் காண்பிக்கவேண்டும் என்று கேட்டார்கள். அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: அஸ்தமனமாகிறபோது, செவ்வானமிட்டிருக்கிறது, அதினால் வெளிவாங்கும் என்று சொல்லுகிறீர்கள். உதயமாகிறபோது செவ்வானமும் மந்தாரமுமாயிருக்கிறது, அதினால் இன்றைக்குக் காற்றும் மழையும் உண்டாகும் என்று சொல்லுகிறீர்கள். மாயக்காரரே, வானத்தின் தோற்றத்தை நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, (தானியேல் சொன்ன) காலங்களின் அடையாளங்களை நிதானிக்க உங்களால் கூடாதா?’’ (மத்தேயு 16:1-3)

இப்படி காலங்களின் அடையாளங்களை நிதானிக்கத் தவறுவது மட்டுமல்லாமல், அவற்றை தவறாக வியாக்கியானம் செய்வது இன்றுவரை சபைகளுக்குள் நடந்து வருகின்றது. இப்படி அவரை விசுவாசியாத யூதர்களுக்கு மீண்டும் ஒரு அடையாளத்தைக் கொடுக்க இயேசு முன்வந்தார். அது தான் அவரது சிலுவை மரணமும், உயிர்த்தெழுதலும்.

‘‘இந்தப் பொல்லாத விபசார சந்ததியார் அடையாளம் தேடுகிறார்கள்; யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை என்று சொல்லி, அவர்களைவிட்டுப் புறப்பட்டுப்போனார்.’’(மத்தேயு 16:4)

தொடர் தீர்க்கதரிசனம்

எனவே தானியேலின் 70 வாரங்கள் (490 வருடங்கள்) பற்றிய தீர்க்கதரிசனம் என்பது 483 வருடம் ஏதோ ஒரு காலத்தில் நடைபெற்று முடிந்து, பின்பு மீதி 7 வருடங்கள் 2000 வருடங்களுக்குப் பின்பு தான் வர இருக்கிறது என்பதைப் போன்ற ஒரு தீர்க்கதரிசன காலகட்டங்களை தேவனும் அனுமதிக்க மாட்டார்; அப்படி எந்தவொரு தீர்க்கதரிசன காலங்களும் வெகுஇடைவெளிக்குப் பின் நிறைவேறியதாக வேதத்தில் ஆதாரமும் இல்லை. இஸ்ரவேலின் மீறுதலை நிரந்தரமாக நிவர்த்தி செய்யவும், அவர்களோடு நித்திய உடன்படிக்கை செய்யவும் இயேசு என்ற மேசியா வர யூதர்கள் 70×7=490 வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால் நம் சகோதரன் குற்றம் செய்தால் 7×70=490 தடவை மட்டும் மன்னிக்கச்சொன்னது மட்டுமல்லாமல், புறஜாதியான நம்முடைய மீறுதல்களையும் மன்னித்த இயேசுவை சொந்த தெய்வமாகக் கொண்டிருக்கும் நாம் எவ்வளவு பாக்கியம் பெற்றவர்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *