சின்ன கொம்பு (கி.பி 538- கி.பி 1798)

தானியேலுக்கு ஆண்டவர் தரிசனத்தில் வெளிப்படுத்திய நாலாவது மிருகம் ‘கெடியும், பயங்கரமும் மகாபலத்ததுமாயிருந்த’ ரோம சாம்ராஜ்ஜியம் என்று நாம் பார்த்தோம். அதன் 10 கொம்புகளை தானியேல் கவனித்துக்கொண்டிருக்கும்போது, அதாவது நாலாம் மிருகமாகிய ரோம சாம்ராஜ்யம் 10 ராஜ்ஜியங்களாகப் பிரிக்கப்பட்ட பின்பு, ‘இதோ அவைகளுக்கு இடையில் வேறொரு சின்னக்கொம்பு எழும்பிற்று’ (தானியேல் 7:8) என்று தானியேல் காண்கிறார். தானியேலின் தரிசனத்தில் அவர் 4 வகையான மிருகங்களை/ ராஜ்ஜியங்களைக் கண்டாலும், அவரது மனம் இந்த நாலாம் மிருகத்தையும், அதன் தலை மேலுள்ள 10 கொம்புகளைக் குறித்தும், மிக முக்கியமாக பருமனாகவும், வேற்றுருவாகவும் இருந்த அந்த சின்னக்கொம்பைக் குறித்து அறிந்துகொள்ளவே விரும்பியது.

“அப்பொழுது மற்றவைகளையெல்லாம் பார்க்கிலும் வேற்றுருவும் கெடியுமுள்ளதுமாய், இருப்புப் பற்களும், வெண்கல நகங்களுமுடையதாய் நொறுக்கிப் பட்சித்து, மீதியானதைத் தன் கால்களால் மிதித்துப்போட்டதுமாயிருந்த நாலாம் மிருகத்தைக் குறித்தும், அதின் தலைமேலுள்ள பத்துக்கொம்புகளைக்குறித்தும் தனக்கு முன்பாக மூன்று கொம்புகள் விழுந்துபோக எழும்பினதுமாய், கண்களையும் பெருமையானவைகளைப் பேசும் வாயையுமுடையதுமாய், மற்றவைகளைப்பார்க்கிலும் பருமனாகத் தோன்றினதுமாயிருந்த அந்த வேறே கொம்பைக்குறித்தும், அவற்றின் பொருளை அறிய மனதாயிருந்தேன்” (தானியேல் 7:19,20)

ஏனென்றால் இந்த நாலாம் மிருகத்தின் 10 கொம்புகளுக்கிடையில் தோன்றிய சின்னக்கொம்பு, சுமார் 1260 வருடங்கள் உலகத்தை ஆட்சி செய்யப்போவதாகவும், அந்த காலக்கட்டத்தில் இயேசுவின் பரிசுத்தவான்களைத் துன்புறுத்தப்போவதாகவும், அதன் முடிவில் நியாயசங்கம் உட்கார்ந்து அந்த ராஜ்ஜியம் அழிக்கப்பட்டு இயேசுகிறிஸ்துவின் முடிவில்லா ராஜ்ஜியம் ஸ்தாபிக்கப்படுவதாகவும் சொல்லப்பட்டதே அவரது ஆர்வத்திற்குக் காரணம்.

நீண்ட ஆயுசுள்ளவர் வருமட்டாகவும், நியாயவிசாரிப்பு உன்னதமானவருடைய பரிசுத்தவான்களுக்குக் கொடுக்கப்பட்டு, பரிசுத்தவான்கள் ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும் காலம் வருமட்டாகவும், இந்தக் கொம்பு பரிசுத்தவான்களோடே யுத்தம்பண்ணி அவர்களை மேற்கொண்டது என்று கண்டேன்”. (தானியேல் 7:21,22)

அந்திகிறிஸ்துவைக் குறித்த தீர்க்கதரிசனங்களிலெல்லாம் மிக முக்கியமாகக் கருதப்படுவது தானியேல் 7 ஆம் அதிகாரத்திலே சொல்லப்பட்டுள்ள இந்த சின்னக்கொம்பைக் குறித்ததாகும். ஏனென்றால் இதில் தான் அந்திக்கிறிஸ்துவின் ராஜ்ஜியம் பற்றி 10 குறிப்புகள் கூறப்பட்டுள்ளது மட்டுமல்லாமல், அவன் வெளிப்படும் இடம், காலம், அவனது ராஜ்ஜியத்தின் காலத்தில் நடக்கும் சம்பவங்கள் மற்றும் எவ்வளவு காலங்கள் நீடித்திருக்கும் என்பது பற்றி மிகத்தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இந்த 10 குறிப்புகளை நிவர்த்தி செய்யும் எந்தவொரு ராஜ்ஜியமும் தான் அந்திகிறிஸ்துவின் ராஜ்ஜியம் என்று நாம் எளிதில் கண்டுகொள்ளலாம். இந்த சின்னக்கொம்பு தான் யோவானுக்கு வெளிப்படுத்தின விசேசத்தில் 13 ஆம் அதிகாரத்தில் சமுத்திரத்திலிருந்து எழுந்துவந்த மிருகமாகவும், 17 ஆம் அதிகாரத்தில் சிவப்புநிறமுள்ள மிருகத்தின் மேல் ஏறியிருந்த ஸ்திரீயாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது என்று முந்தைய அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்தேன்.

சின்னக்கொம்பு= யோவான் பார்த்த முதல் மிருகத்தின் (ரோமின்) வழிவந்த ராஜ்ஜியம்= யோவான் பார்த்த சிவப்பான மிருகத்தின் மேலிருந்த வேசி ஸ்திரீ= அந்திகிறிஸ்து= போப்பாண்டவர்களால் (Papacy) ஆளப்பட்ட ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியம் (சபை)

இனி இந்த சின்னக்கொம்பைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்

  1. இந்த சின்னக்கொம்பு தானியேலின் நாலாம் மிருகமாகிய ரோம சாம்ராஜ்ஜியத்தின் வழித்தோன்றலாக வரும்

  தானியேல் 7:7,8 வசனங்களின்படி நாலாம் மிருகத்தின் தலையில் இருந்த 10 கொம்புகளுக்கு இடையிலிருந்து இது தோன்றுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதன் மூலம் இது உறுதியாகிறது. வரலாற்றின்படி, ரோம அரசாங்கம் கிறிஸ்து பிறப்பதற்கு சுமார் 800 வருடங்களுக்கு முன்பிருந்தே இருந்தாலும், உலகை ஆளும் சாம்ராஜ்ஜியமாக உருவெடுத்தது கி.மு 166 ல் தான். இது இதற்கு முன் இருந்த மூன்றாம் மிருகமாகிய கிரேக்க சாம்ராஜ்ஜியத்தை வீழ்த்திவிட்டு உலகை தன் கைக்குள் கொண்டுவந்தது.

  1. ரோம சாம்ராஜ்ஜியம் 10 சிறு ராஜ்ஜியங்களாக உடைந்த பின்பே இந்த சின்னக்கொம்பு தோன்றியது.

“அந்தக் கொம்புகளை (10 கொம்புகளை/ராஜ்ஜியங்களை) நான் கவனித்திருக்கையில், இதோ, அவைகளுக்கு இடையிலே வேறொரு சின்ன கொம்பு எழும்பிற்று;’’ (தானியேல் 7:8).

‘‘அந்தப் பத்துக்கொம்புகள் என்னவென்றால், அந்த ராஜ்யத்திலே எழும்பும் பத்து ராஜாக்களாம்; அவர்களுக்குப்பின்பு வேறொருவன் எழும்புவான்;’’ (தானியேல் 7:24)

சின்னக்கொம்பாகிய இந்த சிறிய ராஜ்ஜியம் 10 கொம்புகள் தோன்றிய பின்பு அவைகளுக்கு இடையில், அதாவது 10 ராஜ்ஜியங்கள் ஆளுகைக்கு வந்தபின்பு தோன்றியதாகும். வரலாற்றின்படி, கி.மு 27 முதல் சீசர்களால் அரசாட்சிக்கு உட்பட்டிருந்த ரோம், கிறிஸ்து பிறந்த பின் இரண்டாம் நூற்றாண்டிலிருந்து மெதுவாக வீழ்ச்சியை சந்திக்க ஆரம்பித்தது. அந்நிய படையெடுப்புகளினாலும், உள்நாட்டு கலவரங்களினாலும், பேரரசனுக்கான போட்டியாலும் ரோம சாம்ராஜ்ஜியம் மெதுவாக வலுவிழந்தது. இதில் மேற்கு ரோம சாம்ராஜ்ஜியம் ஒரே மன்னனான சீசர்களின் கையிலிருந்து நழுவி, 10 சிறு ராஜ்ஜியங்களாகப் பிரிந்தது. இதன் ஆரம்பம் 3 ஆம் நூற்றாண்டாக இருந்தாலும் மேற்கு ரோம் 10 ராஜ்ஜியமாக உடைந்தது நிறைவுபெற்ற காலம் கி.பி 476 ஆகும். இந்த வருடத்தில் தான், ஒன்றுபட்ட ரோம சாம்ராஜ்ஜியத்தின் கடைசி மன்னனான ‘ரொமுலஸை’ வீழ்த்தி ஓடோசர் என்ற ஜெர்மானிய பார்பேரிய வம்ச மன்னன் மேற்கு ரோம சாம்ராஜ்ஜியத்தின் மன்னனானான். இந்த 10 ராஜ்ஜியங்கள் எழும்பின பின்பு தான் சுமார் கி.பி 538 ல் மேற்கு ரோம ராஜ்ஜியம் போப்பின் ரோமன் கத்தோலிக்க ஆளுகைக்குள் வந்தது. இந்த ஒன்றுபட்ட ரோம சாம்ராஜ்ஜியத்திலிருந்து பிரிந்து வந்த ராஜ்ஜியங்கள் தான் இன்றைக்கு ஐரோப்பிய தேசங்களாகும்.

அட்டவணை 10: ஐரோப்பிய ராஜ்ஜியங்களாக பிரிவடைந்த மேற்கு ரோம்

கி.பி 476 க்கு பின்

இன்று

அலமானி

ஜெர்மானி

பர்குண்டியன்

சுவிஸ்-ஆஸ்டிரியன்

பிராங்கஸ்

பிரான்ஸ்

விசிகோத்

ஸ்பெயின்

சூயிவி

போர்ச்சுகீஸ்

ஆங்கிலோ-சாக்சன்ஸ்

ஆங்கிலேயர்கள்

லோம்பார்டு

இத்தாலி

ஹெருலி

இத்தாலி (கி.பி 493 ல் அழிக்கப்பட்டது)

வாண்டல்ஸ்

வட ஆப்பிரிக்கா (கி.பி 533 ல் அழிக்கப்பட்டது)

ஆஸ்ட்ரோகோத்

இத்தாலி (கி.பி493 ல் அழிக்கப்பட்டது)

இதுவரை ரோமன் கத்தோலிக்க சபையின் ரோம் நகர பிஷப்பாக இருந்த நபர், இப்போது போப்பாண்டவர் என்று அழைக்கப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் அதிகாரம் பெற்று, கி.பி 538 ல் ஜஸ்டினியன் என்ற அரசனால் கத்தோலிக்க சபை மட்டுமல்லாது, அப்போதைய ரோமப்பேரரசின் உலகளாவிய ஆட்சி, அரசியல் அதிகாரமும் கொடுக்கப்பட்டு தனி குட்டி ராஜ்ஜியமாக தன்னை ஸ்தாபித்தது. எனவே இந்த 10 ராஜ்ஜியங்கள்/கொம்புகளின் நடுவிலிருந்து தோன்றிய சின்னக்கொம்பு ‘பாப்பஸி’ என்றழைக்கப்படும் போப்பாண்டவர்களைத் தலைவர்களாகக்கொண்ட ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியம் ஆகும். இந்த ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியம் என்பது ரோம ராஜாக்களால் ஆளப்பட்டாலும், அதன் ஒவ்வொரு அசைவையும் தீர்மானித்தது போப்புகள் தான் என்பதால் இதை ரோமன் கத்தோலிக்க சாம்ராஜ்ஜியம் என்று அழைக்கிறேன். இதில் சின்னக்கொம்பு என்பது தான் போப்புகளைக் குறிக்கும்.

இதே 10 ராஜ்ஜியங்கள் தான் ரோம சாம்ராஜ்ஜியத்தின் அங்கங்களாக வெளிப்படுத்தின விசேஷத்திலும் கூறப்பட்டுள்ளது.

“பின்பு நான் கடற்கரை மணலின்மேல் நின்றேன். அப்பொழுது சமுத்திரத்திலிருந்து ஒரு மிருகம் எழும்பிவரக் கண்டேன்; அதற்கு ஏழு தலைகளும் பத்துக்கொம்புகளும் இருந்தன; அதின் கொம்புகளின்மேல் பத்து முடிகளும், அதின் தலைகளின்மேல் தூஷணமான நாமமும் இருந்தன. (வெளி 13:1)

‘‘ஆவிக்குள் என்னை வனாந்தரத்திற்குக் கொண்டுபோனான். அப்பொழுது ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையும் உடையதும் தூஷணமான நாமங்களால் நிறைந்ததுமான சிவப்புநிறமுள்ள மிருகத்தின்மேல் ஒரு ஸ்திரீ ஏறியிருக்கக் கண்டேன்.(வெளி 17:3)”

இந்த பத்து கொம்புகள் கொண்ட மிருகம் என்பது, இந்தக்கொம்புகளின் வழி வந்த தேசங்களால் உருவான ஐரோப்பிய கண்டத்தைக் குறிக்கும். இந்த தேசங்கள் ரோமின் ஆளுகைக்குள் தான் இருந்தன.

  • 4ஆவதுமிருகம் : ரோம்
  • 10கொம்புகள் : 10 ஐரோப்பிய தேசங்கள்
  • ஸ்திரீ:சபை

3. சின்னக்கொம்பிற்கு முன்பாக 3 கொம்புகள் பிடுங்கப்பட்டது.

அதற்கு முன்பாக முந்தினகொம்புகளில் மூன்று பிடுங்கப்பட்டது; (தானியேல் 7:8), அதின் தலைமேலுள்ள பத்துக்கொம்புகளைக்குறித்தும் தனக்கு முன்பாக மூன்று கொம்புகள் விழுந்துபோக எழும்பினதுமாய்.’’ (தானியேல் 7:20).

‘‘அவன்  முந்தினவர்களைப்பார்க்கிலும்  வேறாயிருந்து,  மூன்று  ராஜாக்களைத்  தாழ்த்திப்போட்டு……..,’’(தானியேல் 7:24)

இந்த சின்னக்கொம்பு, தான் தோன்றிய காலக்கட்டத்தில் இருந்த 10 ராஜ்ஜியங்களில் மூன்றை பிடுங்கியது. அதாவது தனக்குக் கீழ்படியாத காரணத்தால் 3 ராஜ்ஜியங்களை அழித்து நிர்மூலமாக்கியது. ஏற்கனவே சொன்ன அந்த 10 ஐரோப்பிய ராஜ்ஜியங்களில் ‘ஹெருலி, வாண்டல்ஸ், ஆஸ்ட்ரோகோத்’ என்ற மூன்று ராஜ்ஜியங்களை தனது அரசியல் மற்றும் இராணுவ பலத்தால் அட்டவணையில் குறிப்பிட்டுள்ள காலங்களில் அழித்து, இன்றைக்கு அப்படி ஒரு ராஜ்ஜியமே இல்லாமல் அழித்ததும் இந்த சின்னக்கொம்பாகிய கத்தோலிக்க ரோமப்பேரரசு தான் என்று வரலாறு நமக்குத் தெளிவாகக் கூறுகிறது. இதன் விளைவாக கி.பி 538 ல் அது முழு அதிகார வல்லமை பெற்றபோது 10 கொம்புகளாகிய ராஜ்ஜியங்களில் 7 மட்டுமே மீதமிருந்தது.

படம் 25: சின்ன கொம்பு

4 . மனுஷ கண்களுக்கு ஒப்பான கண்கள் , பெருமையானவைகளைப் பேசும் வாய்

“இதோ, அந்தக் கொம்பிலே மனுஷகண்களுக்கு ஒப்பான கண்களும் பெருமையானவகளைப் பேசும் வாயும் இருந்தது..(தானியேல் 7:8)

“அதின் தலைமேலுள்ள பத்துக்கொம்புகளைக்குறித்தும் தனக்கு முன்பாக மூன்று கொம்புகள் விழுந்துபோக எழும்பினதுமாய், கண்களையும் பெருமையானவைகளைப் பேசும் வாயையுமுடையதுமாய்,…’’…(தானியேல் 7:20)

அ ந் த  சின்ன கொம்பு மனிதனால், அதாவது போப்பாண்டவர்களால் நிர்வகிக்கப்பட்டது. அது தன்னைத்தான் உலக கிறிஸ்தவ சபைகளின் தாய் (Mater Ecclesiae) என்று அழைத்துக்கொண்டது. மற்ற சீர்திருத்த சபைகளெல்லாம் அதிலிருந்து பிரிந்ததாகவும், தாய் சபையாகிய தன்னுடன் மீண்டும் சேர்ந்துகொள்ளுமாறு இன்று வரை அழைப்பு விடுத்துக்கொண்டிருக்கும் போப்புகளின் அறைகூவலை நீங்கள் கேட்டிருக்கலாம். தேவனுக்கு மேலாகத் தன்னை பெருமைப்படுத்தி பேசியதை அடுத்து பார்க்கப்போகிறோம்.

5. வேற்றுருவமாயிருந்தது

மற்றவைகளைப்பார்க்கிலும் பருமனாகத் தோன்றினதுமாயிருந்த அந்த வேறே கொம்பைக்குறித்தும், அவற்றின் பொருளை அறிய மனதாயிருந்தேன்.’’ (தானியேல் 7:20)

‘‘அவன் முந்தினவர்களைப் பார்க்கிலும் வேறாயிருந்து, மூன்று ராஜாக்களைத் தாழ்த்திப்போட்டு…..’’ …(தானியேல் 7:24)”

தானியேல் கண்ட முதல் மூன்று மிருகங்களை/ராஜ்ஜியங்களை விட இந்த சின்னக்கொம்பு /ராஜ்ஜியம் வேற்றுருவமாக அல்லது வித்தியாசமாக இருந்ததாம். மற்ற எல்லா ராஜ்ஜியங்களும் அரசியல் ரீதியான ராஜ்ஜியங்களாகும். இந்த சின்னக்கொம்பு மட்டும் தான் அரசியல் மற்றும் மத ரீதியான ராஜ்ஜியமாகும். மற்ற ராஜ்ஜியங்களில் பேரரசர்கள் தான் மக்களை ஆட்சி செய்தார்கள். சின்னக்கொம்பாகிய கத்தோலிக்க ரோமப்பேரரசு மதத்தலைவர்களாகிய போப்பாண்டவர்களால் நிர்வகிக்கப்பட்டது. அவர் தான் மன்னர், மதத்தலைவர்; கடவுளும் கூட. இந்த சபையும் ராஜ்ஜியமும் ஒன்று தான்.

6. உன்னதமானவருக்கு விரோதமாக வார்த்தைகளைப் பேசுவான்.

“உன்னதமானவருக்கு விரோதமாக வார்த்தைகளைப் பேசி, உன்னதமானவருடைய பரிசுத்தவான்களை ஒடுக்கி, காலங்களையும் பிரமாணங்களையும் மாற்ற நினைப்பான்; அவர்கள் ஒருகாலமும், காலங்களும், அரைக்காலமும் செல்லுமட்டும் அவன் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்.’’ (தானியேல் 7:25) என்ற வசனத்தின்படி பின்வரும் காரியங்களைப் பார்ப்போம்.

ஆங்கிலத்தில் இது Blasphemy என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு ‘தேவதூஷணம்’ என்று பொருள். அப்படி என்ன தேவதூஷணத்தை இந்த சின்னக்கொம்பு கூறியது?

இயேசு 38 வருஷம் வியாதியாயிருந்த ஒருவனை பெதஸ்தா குளத்திற்கு அருகில் சுகமாக்கின சம்பவத்தை அடுத்து

 “அவர் ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றுஞ்சொல்லித் தம்மை தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே, யூதர்கள் அவரைக் கொலைசெய்யும்படி அதிகமாய் வகைதேடினார்கள்.(யோவான் 5:18)”

இன்னொரு இடத்தில்

நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார். அப்பொழுது யூதர்கள் மறுபடியும் அவர்மேல் கல்லெறியும்படி, கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள். இயேசு அவர்களை நோக்கி: நான் என் பிதாவினாலே அநேக நற்கிரியைகளை உங்களுக்குக் காண்பித்தேன், அவைகளில் எந்தக் கிரியையினிமித்தம் என்மேல் கல்லெறிகிறீர்கள் என்றார். யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன்மேல் கல்லெறிகிறதில்லை; நீ மனுஷனாயிருக்க, உன்னை தேவன் என்று சொல்லி இவ்விதமாக தேவதூஷணஞ் சொல்லுகிறபடியினால் உன்மேல் கல்லெறிகிறோம் என்றார்கள்.’’ (யோவான் 10:30-33)

மற்றொரு சம்பவத்தில் திமிர்வாதக்காரனை இயேசு சுகமாக்கினபோது

“அவர்களுடைய விசுவாசத்தை அவர் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மனுஷனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார். அப்பொழுது வேதபாரகரும் பரிசேயரும் யோசனைபண்ணி, தேவதூஷணம் சொல்லுகிற இவன் யார்? தேவன் ஒருவரேயன்றிப் பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார் என்றார்கள்.’’ (லூக்கா 5:20,21)

இந்த சம்பவங்களில், ஒன்றில் இயேசு தன்னைப் பிதாவுக்கு சமமாகக் கூறியபோதும், இன்னொருமுறை பூமியில் பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்று கூறிய போதும், அவரை மேசியாவாக ஏற்க மறுத்த யூதர்கள், இயேசு ‘தேவதூஷணம்’ சொன்னதாகக் கூறினார்கள். அப்படியானால் அந்திகிறிஸ்து என்பவனும்

  • தன்னைத்தான் தேவன் அல்லது கடவுளுக்கு சமமானவன் என்று சொல்பவனாக இருக்கவேண்டும்.
  • தனக்கும்பூமியில் பாவங்களை மன்னிக்க அதிகாரம் உண்டென்று சொல்பவனாக இருக்கவேண்டும்

இப்பொழுது இந்த இரண்டையும் யார் நிறைவேற்றியது என்று பார்ப்போம். இயேசுகிறிஸ்துவினுடைய காலத்திற்கு பின்பான கி.பி 31 லிருந்து இன்றுவரை பல தனிநபர்கள் தன்னைக் கடவுள் என்று சொல்லி மக்களை வஞ்சித்திருக்கிறார்கள், இன்னும் வஞ்சிப்பார்கள். ஆனால் ஆண்டவர் தானியேலுக்கு காண்பித்த தரிசனத்திலும் சரி, யோவானுக்கு வெளிப்படுத்தினதிலும் சரி, அந்திகிறிஸ்துவை ஒ ரு தனி நபராக சொல்லவில்லை. தானியேல் 7 ஆம் அதிகாரத்தில் மட்டுமல்ல, வெளிப்படுத்தின விசேசத்தில் 13 ஆம் அதிகாரத்திலும் அந்திகிறிஸ்துவைப்பற்றி ‘மிருகம்’ என்றே சொல்லப்பட்டுள்ளது.

“பின்பு நான் கடற்கரை மணலின்மேல் நின்றேன். அப்பொழுது சமுத்திரத்திலிருந்து ஒரு மிருகம் எழும்பிவரக் கண்டேன்; அதற்கு ஏழு தலைகளும் பத்துக்கொம்புகளும் இருந்தன; அதின் கொம்புகளின்மேல் பத்து முடிகளும், அதின் தலைகளின்மேல் தூஷணமான நாமமும் இருந்தன.’’ (வெளி 13:1)

இது ஒரு வல்லரசு அல்லது ராஜ்ஜியத்தைக் குறிப்பதாகும். எனவே நாம் தன்னைக் கடவுள் என்று அழைத்துக்கொண்ட தனிநபர்களை விட்டுவிட்டு, ஒரு அரசாங்கத்தின் மற்றும் மதத்தின் தலைவராக இருந்த நபர்கள் அப்படி சொல்லியிருக்கிறார்களா என்று பார்ப்போம்.

The Great Encyclical letters of pope Leo XIII, on June 20, 1894 என்ற போப்பின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் ‘நாங்கள் இந்த உலகில் சர்வவல்லமையுள்ள கடவுளின் இடத்தில் இருக்கிறோம்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. அவர்கள் தங்களை கடவுளுக்கு சமமாக சொன்ன எல்லாவற்றையும் சொல்லமுடியாததால் சில சான்றுகளை மட்டும் கொடுத்துள்ளேன். நீங்கள் கூகுளில் சென்று ‘Vicar of Christ’ என்று தேடிப்பாருங்கள். நேரடியாக போப்பைக் காண்பிக்கும். ஏனென்றால் போப்பாண்டவர்கள் தங்களை ‘கடவுளுக்கு சமமானவர்கள்’ என்ற அடைமொழியோடு தான் தங்களை அழைத்துக்கொண்டார்கள்.

மேலும் Catholic encyclopedia vol 12 article Poope page 265 ல் போப்பிற்கு கொடுக்கப்பட்ட அதிகாரங்களில் ‘பூமியில் மனிதர்களின் பாவங்களை மன்னிப்பதும் ஒன்று’ என்று சொல்லப்பட்டுள்ளது. வெறும் பேச்சுக்காக இதை அவர்கள் சொல்லவில்லை. அன்றிலிருந்து இன்றுவரை ரோமன் கத்தோலிக்க சபையில் சபை ஆயர்களிடம் பாவமன்னிப்பு கேட்பது தான் வழக்கமாக உள்ளது நம் எல்லோருக்கும் தெரிந்தது தான். ‘எப்பேர்பட்ட கனமான பாவத்தையும் மன்னிக்க திருச்சபைக்கு சர்வ அதிகாரம் உண்டு’ என்று விசுவாசப்பிரமாணத்தின் ‘பாவமன்னிப்பை விசுவாசிக்கிறேன்’ என்ற வரிகளுக்கு விளக்கமும் கத்தோலிக்க சபை கொடுத்துள்ளது.

இந்த போதனை தான் 15 ஆம் நூற்றாண்டுகளில் பணத்தை சம்பாதிப்பதற்கு ‘பாவமன்னிப்பு சீட்டு’ விற்பனையாக மாறியது. இதை எதிர்த்து தான் கத்தோலிக்க ஆயராக இருந்த மார்டின் லூதர் புராட்டஸ்டண்ட் இயக்கத்தை தோற்றுவித்தார். ஆனால் நாம் இன்னமும் கத்தோலிக்க சபை செய்வதை சடங்காச்சாரமாகத்தான் பார்க்கிறோமேயன்றி அதை தேவனுக்கு விரோதமான தூஷணமாக ஏன் பார்ப்பதில்லை? இயேசுவின் இரத்தம் மட்டுமே இந்த உலகில் மனிதனுடைய பாவங்களை மன்னிக்க அதிகாரம் கொண்டது. 5 ஆம் நூற்றாண்டு முதல் இன்றுவரை ரோமன் கத்தோலிக்க சபையின் தலைவரான போப்புகளின் தேவனுக்கு விரோதமான செயல்பாடுகளைச் சொல்லவேண்டுமானால் இன்னொரு புத்தகம் தான் எழுதவேண்டும். இதைப் பற்றி தைரியமாகப் பேசவேண்டிய நமது ஊழியர்களும் இதை அறியவில்லையோ? ஆம் என்றே சொல்லலாம். ஏனென்றால் அந்திகிறிஸ்துவின் வருகை ‘கடைசி 7 வருடங்களில்’ தான் நடக்கும் என்ற ‘Futurism’ கொள்கையை மனிதர்கள் மனதில் விதைத்தவனும் இந்த அந்திகிறிஸ்துவின் ராஜ்ஜியமாகிய கத்தோலிக்க ரோம சாம்ராஜ்ஜியம் தான். அதனால் தான் அவர்கள் செய்வது நமக்கு தவறாகத் தெரிவதில்லை. இதைப்பற்றி பின்வரும் அத்தியாயங்களில் நான் விளக்க உள்ளேன்.

வெளிப்படுத்தின விசேஷம் முழுவதும் வரும் ராஜ்ஜியம் என்றாலே ரோம சாம்ராஜ்ஜியமும் அதைத்தொடர்ந்து வந்த கத்தோலிக்க ரோம சாம்ராஜ்ஜியம் என்று தான் அர்த்தம். ஏனென்றால் யோவான் அதை எழுதிய காலத்திலும் ரோம அரசாட்சி தான் இருந்தது. இயேசுவின் இரண்டாம் வருகையின் காலத்திலும் அதுதான் இருக்கும்.

பெருமையானவைகளையும் தூஷணங்களையும் பேசும் வாய் அதற்குக் கொடுக்கப்பட்டது; அல்லாமலும், நாற்பத்திரண்டு மாதம் யுத்தம்பண்ண அதற்கு அதிகாரங் கொடுக்கப்பட்டது. அது தேவனைத் தூஷிக்கும்படி தன் வாயைத் திறந்து, அவருடைய நாமத்தையும், அவருடைய வாசஸ்தலத்தையம், பரலோகத்தில் வாசமாயிருக்கிறவர்களையும் தூஷித்தது.’’ (வெளி 13:5,6)

7. உன்னதமானவருடைய பரிசுத்தவான்களை ஒடுக்கி அவர்கள்மேல் யுத்தம் செய்வான்.

“இந்தக் கொம்பு பரிசுத்தவான்களோடே யுத்தம்பண்ணி அவர்களை மேற்கொண்டது என்று கண்டேன்.” (தானியேல் 7:22)

“மேலும், பரிசுத்தவான்களோடே யுத்தம்பண்ணி அவர்களை ஜெயிக்கும்படிக்கு அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டதுமல்லாமல், ஒவ்வொரு கோத்திரத்தின்மேலும் பாஷைக்காரர்மேலும் ஜாதிகள்மேலும் அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டது.” (வெளி 13:7)

“அந்த ஸ்திரீ (சபை) பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும், இயேசுவினுடைய சாட்சிகளின் இரத்தத்தினாலும் வெறிகொண்டிருக்கிறதைக் கண்டேன்; அவளைக் கண்டு நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்.” (வெளி 17:6)

மேற்கண்ட மூன்று வசனங்களும் இந்த சின்னக்கொம்பாகிய போப்புகளின் தலைமையிலான ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியத்தைக் குறிக்கிறது. இது பரிசுத்தவான்களோடு யுத்தம் செய்தது, அவர்களை ஒடுக்கியது அல்லது அவர்களை அழித்தது. இந்த சின்னக்கொம்பாகிய போப்பாண்டவருடைய கத்தோலிக்க ரோமப்பேரரசு அதிகாரத்திற்கு வந்த கி.பி 538 முதல் அதன் ராஜ்ஜியம் பறிக்கப்பட்ட கி.பி 1798 வரையிலான 1260 வருடங்கள் தான் இயேசுவின் பரிசுத்தவான்கள் ஒடுக்கப்பட்ட காலமாகும். இந்த 1260 வருட காலகட்டத்தைப் பற்றி தானியேல் மற்றும் வெளிப்பாடு புத்தகங்களில் 7 இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை தனி ஒரு அத்தியாயமாக நாம் பார்க்க இருக்கிறோம். அந்திகிறிஸ்து என்பவன் நிச்சயமாக கிறிஸ்துவிற்கு எதிரானவன் என்பதில் நமக்கு சந்தேகமே இல்லை. எனவே இயேசுகிறிஸ்துவின் அத்தனை போதனைகளையும் நேரடியாகவோ, வஞ்சகத்தினாலோ குலைப்பது தான் அவனது திட்டம்.

  • இந்தஆட்சிகாலத்தில் உண்மையாக இயேசுவைப் பின்பற்றியவர்கள் கொலை செய்யப்பட்டார்கள்;
  • வேதபுஸ்தகத்தை கத்தோலிக்க ஆயர்களைத்தவிர வேறு யாரும் வைத்திருப்பது தடை செய்யப்பட்டது. மீறி வைத்திருந்தவர்கள் கொலை செய்யப்பட்டார்கள். (பார்க்க அத்தியாயம்: சிறு புஸ்தகம்)
  • வேதபுஸ்தகம் லத்தீன் மொழியில் மட்டுமே அனுமதிக்கப்பட்டது. வேறு மொழிகளுக்கு பெயர்க்கப்படுவது தடை செய்யப்பட்டது. மீறிய உண்மை விசுவாசிகள் உயிரோடு கொளுத்தப்பட்டார்கள்.
  • வேதபுஸ்தகத்தில் கர்த்தராலோ, அப்போஸ்தலராலோ சொல்லப்படாத ஆராதனை முறைகள், சிலைவணக்கங்கள், துர் உபதேசங்கள் வேரூன்றியதை வேத வசனங்களின் அடிப்படையில் எதிர்த்தவர்கள் கத்தோலிக்க சபையின் எதிரிகளாக விசாரணைத்தீர்ப்பு (Catholic Inquisitions) செய்யப்பட்டு பல உபத்திரவங்களுக்கும், மரண தண்டனைகளுக்கும் ஒப்புகொடுக்கப்பட்டனர். இது குறிப்பாக 12 முதல் 16 ஆவது நூற்றாண்டுகளில் உச்சத்தை எட்டியது.
  • இந்தபரிசுத்தவான்களுக்கு எதிரான உபத்திரவங்கள் Catholic Inquisitions என்று இன்று வரை பிரபலமாக அறியப்பட்ட ஒன்று என்பதை நீங்கள் வரலாற்றிலும், கூகுளிலும் சென்று அறிந்துகொள்ளலாம். பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், ரோம், போர்ச்சுக்கல் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் இந்த விசாரணைத் தீர்ப்பு மூலமாக பல லட்சக்கணக்கான பரிசுத்தவான்கள் உபத்திரவப்படுத்தப்பட்டு அதில் சுமார் 2-5 சதவீதம் பேர் மரணதண்டனைகளுக்கும் ஒப்புகொடுக்கப்பட்டார்கள். இதை முந்தைய போப் ஜான்பால்-II அவர்கள் ஒத்துக்கொண்டு மன்னிப்பு கோரியதும் நகைமுரண் தான்.

கிரேக்க சாம்ராஜ்ஜியத்தின் வழித்தோன்றலாக வந்த ஆண்டியோகஸ் எபிபேனஸ் என்ற ராஜாவை தானியேல் 8:9 ல் ‘சின்னதான ஒரு கொம்பு’ என்று கூறப்பட்டுள்ளது உங்களுக்கு நினைவில் இருக்கும் என்று விசுவாசிக்கிறேன். இந்த சின்னதான கொம்பாகிய அவனும் அந்திகிறிஸ்துவின் முழுபலத்தோடு பரிசுத்த நகரமாகிய எருசலேமின் மீது படையெடுத்து, தேவாலயத்தில் 2 தெசலோனிக்கேயர் 2;4,5 ல் சொல்லப்பட்டபடி அந்திகிறிஸ்துவின் அத்தனை அக்கிரமங்களையும் செய்து, யூதர்களைக் கொன்றழித்தான் என்றும் பார்த்தோம். அவன் அந்திகிறிஸ்து அல்ல. ஆனால் அவனது ராஜ்ஜியம் அந்திகிறிஸ்துவாகிய சாத்தானால் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இந்த ‘சின்னக்கொம்பாகிய’ போப், 1260 வருடங்களாக அந்திகிறிஸ்துவின் இடத்தில் இருந்து புதிய ஏற்பாடு பரிசுத்த ஜனங்களை ஒடுக்கி சத்தியத்தை தரையில் தள்ளி மிதித்தது.

  1. காலங்களையும், பிரமாணங்களையும் மாற்ற நினைப்பான்.

கிரகோரி என்ற போப் கொண்டுவந்தது தான் நாம் இன்று பின்பற்றும் ‘கிரகோரியன் காலண்டர்’ ஆகும். ஆனால் இதைவிட முக்கியமானது தீர்க்கதரிசன காலங்களை ‘மாற்ற நினைத்தது’ தான். கர்த்தர் தீர்க்கதரிசனமாக சொன்ன காலகட்டங்களை யாராலும் மாற்றமுடியாது. ஆனால் மாற்ற முயற்சி செய்ய, நினைக்க முடியும். தானியேல் 9 ஆம் அதிகாரத்தின் கடைசியில் சொல்லப்பட்ட 70 வாரங்களைக் குறித்த தீர்க்கதரிசனத்தில் 69 வாரங்கள் முடிந்துவிட்டதாகவும், ஒரு வாரம் (7 நாட்கள்=7 தீர்க்கதரிசன வருடங்கள்) மட்டும் இனி கடைசிநாட்களில் நடக்கப்போவதாகவும், அப்பொழுது தான் அந்திகிறிஸ்து வருவான், அந்த உபத்திரவ காலத்திற்கு முன்பாக சபை இயேசுவின் இரகசியவருகையில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் மிகப்பெரிய தீர்க்கதரிசன காலப் புரட்டுகளை உருவாக்கியதும் இதே சின்னக்கொம்பாகிய ரோமன் கத்தோலிக்க சாம்ராஜ்ஜியம் தான். இது Futurism கொள்கை என்றழைக்கப்படும்.

மார்டின் லூதர், ரோமன் கத்தோலிக்க சபையின் தலைவர்களாகிய போப்புகள் தான் அந்திகிறிஸ்து என்று தனது ‘Babylon captivity of the Church’ என்ற புஸ்தகத்தில் கூறியிருப்பது, தங்களை சீர்திருத்த புராட்டஸ்டண்ட் சபை என்று கூறிக்கொள்ளும் எத்தனைபேருக்குத் தெரியும்? இதே 16 ஆம் நூற்றாண்டில் மார்டின் லூதரின் கருத்து மக்களை சென்றடைந்துவிடக் கூடாது என்ற நோக்கில், ‘Counter reformation’ என்ற கொள்கையை முன்வைத்து, ஸ்பெயினை சேர்ந்த ஜெசுயிட் ஆயர் ‘பிரான்சிஸ்கோ ரிபெரா’ (Francisco Ribera) என்பவரால் தோற்றுவிக்கப்பட்டு பரப்பப்பட்டது தான் இந்த Futurism கொள்கை. இதன் மூலம் ‘கத்தோலிக்க ரோமப்பேரரசு தான் அந்திகிறிஸ்துவின் ராஜ்ஜியம்’ என்பதைக் குறிக்கும் 1260 வருடங்களைக் குறித்த தீர்க்கதரிசனத்தைப் பிற்காலத்திற்கு (கடைசி 7 வருடங்கள் என) தள்ளிப்போட்டு, காலங்களை மாற்ற நினைத்தது, இந்த சின்னக்கொம்பு. நாமும் அதை நம்பி வஞ்சிக்கப்படுகிறோமா என்று ஆராயவேண்டியது அவசியம்.

இதேபோல் இன்னொரு கத்தோலிக்க ஜெசூயிட் ஆயரான ‘லூயிஸ் டி அல்கசார்’ என்பவரால் இதே காலகட்டத்தில் ‘Preterism’ கொள்கை தோற்றுவிக்கப்பட்டது. அதன்படி அந்திகிறிஸ்து ஏற்கனவே, அதாவது கத்தோலிக்க ரோம சாம்ராஜ்ஜியத்திற்கு முன்பே வந்துவிட்ட ரோமப்பேரரசனான ‘நீரோ’ தான் என்று பரப்பப்பட்டது. நாம் பார்த்துக்கொண்டிருக்கும் சின்னக்கொம்பைக் குறித்த எந்தவொரு குறிப்பும் நீரோவிற்கு பொருந்தாது என்பது இதன் முடிவில் உங்களுக்குத் தெளிவாக விளங்கும். எனவே அந்திகிறிஸ்துவாகிய சின்னக்கொம்பு தீர்க்கதரிசன காலங்களை மாற்ற நினைத்தான். ஆனால் பரிசுத்த ஆவியானவரின் உதவியோடு இந்த முத்திரையும் உடைக்கப்பட்டு உண்மை வெளிவரும் காலத்தில் நாம் இருக்கிறோம். தற்போது ஆவிக்குரிய சபைகள் என்று அழைத்துக்கொள்ளும் சபைகள் கூட அபிஷேகத்தையும் வாக்குதத்தங்களையும் மட்டும் பேசுகிறார்களே தவிர தீர்க்கதரிசனங்களைப் பற்றி பேசுவதில்லை.

பிரமாணங்களை மாற்ற நினைப்பான்

இந்த சின்னக்கொம்பு பிரமாணங்களை எப்படி மாற்றியது என்று பார்ப்போம். பிரமாணம் என்பது பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணங்களையும், புதிய ஏற்பாட்டு இயேசுவின் போதனைகளையும் குறிக்கும்.

கத்தோலிக்க கேட்டிகிசம் சொல்லும் பத்து கற்பனைகள் (10 Commandments of Catholic Catechism

சபையானது வேதவசனங்களின் அடிப்படையில் போதிக்கவேண்டும் என்பதில் வேற்றுகருத்து இல்லை. ஆனால் ஒருவன் அல்லது ஒரு ராஜ்ஜியம் கர்த்தரின் பத்து கற்பனைகளைத் தனக்கு சாதகமாக மாற்றினால் அவன் அந்திகிறிஸ்து என்பதில் சந்தேகமே இல்லை. ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இன்னமும் ஆலயங்களில் சிலைகளை வைத்து வணங்குவதை நாம் பார்த்துவருகிறோம். இஸ்ரவேலர், கர்த்தருக்கு கீழ்படியாமல் புறஜாதியாரைப்போல சகல மலைகளின் மேலும், மரங்களின் கீழும், ஆலயங்களின் வெளிப்பிரகாரத்திலும் அந்நிய தெய்வங்களின் சிலைகளை வைத்து வணங்கியதால் தான் பாபிலோனுக்கு சிறைக்கைதிகளாகச் சென்றனர். அதே வழக்கத்தை இன்றும் இவர்கள் பின்பற்றுவதற்குக் காரணம் கத்தோலிக்க சபை அதை அனுமத்தித்தது மட்டுமல்லாமல், சிலை அல்லது விக்கிரகங்களை உருவாக்கக்கூடாது, வணங்கக்கூடாது என்ற இரண்டாம் கற்பனையையே மாற்றியது என்பது உங்களுக்கு தெரியுமா? கர்த்தரின் இரண்டாம் கற்பனை பின்வருமாறு..

“மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சுரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம். நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக்குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.” (உபாகமம் 5:8,9)

“கர்த்தர் ஓரேபிலே அக்கினியின் நடுவிலிருந்து உங்களோடே பேசின நாளில், நீங்கள் ஒரு ரூபத்தையும் காணவில்லை. ஆகையால் நீங்கள் உங்களைக் கெடுத்துக்கொண்டு, ஆண் உருவும், பெண் உருவும், பூமியிலிருக்கிற யாதொருமிருகத்தின் உருவும், ஆகாயத்தில் பறக்கிற செட்டையுள்ள யாதொரு பட்சியின் உருவும், பூமியிலுள்ள யாதொரு ஊரும் பிராணியின் உருவும், பூமியின்கீழ்த் தண்ணீரிலுள்ள யாதொரு மச்சத்தின் உருவுமாயிருக்கிற இவைகளில் யாதொரு உருவுக்கு ஒப்பான விக்கிரகத்தை உங்களுக்கு உண்டாக்காதபடிக்கும்.” (உபாகமம் 4:15-18)

கர்த்தர் மோசேக்கு கொடுத்த இந்த கட்டளைகளை விட, சிலை வைக்கக் கூடாது என்று வேறு எந்தவகையில் சொல்லவேண்டும்? சிலை என்பது வெறும் கல், மரம் அல்ல. சாத்தான் தன்னை எல்லோரும் வழிபடவைக்க பயன்படுத்தும் ஆயுதம். இயேசுவையே தன்னை நமஸ்கரிக்க சொல்லி சோதித்த சாத்தானின் நோக்கத்திலிருந்து இதை அறிந்துகொள்ளலாம். இதையே இந்த அந்திகிறிஸ்துவின் ராஜ்ஜியத்தினால் ஆளப்படும் சபையும் செய்வதில் எந்த ஆச்சரியமுமில்லை. எனவே விக்கிரகவணக்கத்தை ஆதரிக்கும் நோக்கில் இரண்டாம் கற்பனையை நீக்கி, பத்தாவது கற்பனையான

“பிறனுடைய மனைவியை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய வீட்டையும், அவனுடைய நிலத்தையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்றார்.” (உபாகமம் 5:21)

என்ற கற்பனையை இரண்டாகப் பிரித்து, ‘பிறனுடைய மனைவியை இச்சியாதிருப்பாயாக’ என்பதை ஒன்பதாவது கற்பனையாகவும், ‘பிறனுடைய யாதொரு உடைமையையும் இச்சியாதிருப்பாயாக’ என்பதை பத்தாவது கற்பனையாகவும் அதிகாரப்பூர்வமாகவே வெளியிட்டது இந்த சின்னக்கொம்பாகிய போப்பின் சபை. எல்லாவற்றிற்கும் மேலாய் வேதபுஸ்தகத்தை விட, அதில் சொல்லபட்ட சட்டதிட்டங்களை விட ரோமன் கத்தோலிக்க சபையின் Code of canon Law என்று சொல்லப்படக்கூடிய திருச்சபை சட்டதிட்டங்கள் தான் முதன்மையானது என்று வலியுறுத்தப்பட்டு மக்களை வேதத்திலிருந்து விலக்கியது. இந்த விஷயத்தில் கத்தோலிக்கர்கள் தங்களை நியாயப்படுத்த சொல்லும் எந்த விளக்கமும் வேதத்தின் படி ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல

9.சின்னக்கொம்பு 1260 வருடங்கள் உலகை ஆட்சிசெய்து தனது திட்டங்களை நிறைவேற்றும்

“உன்னதமானவருக்கு விரோதமாக வார்த்தைகளைப் பேசி, உன்னதமானவருடைய பரிசுத்தவான்களை ஒடுக்கி, காலங்களையும் பிரமாணங்களையும் மாற்ற நினைப்பான்; அவர்கள் ஒருகாலமும், காலங்களும், அரைக்காலமும் செல்லுமட்டும் அவன் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்.” (தானியேல் 7:25)

வேதபுஸ்தகத்தில் தானியேல், வெளிப்படுத்தல் புத்தகங்களில் அடிக்கடி மூன்றுவிதமான தீர்க்கதரிசன காலங்கள் வரும்

  • ஒருகாலம்(1 வருடம்), காலங்கள் (2 வருடங்கள்), அரைக்காலம் (அரை வருடம்),
  • 42மாதங்கள் (3 1/2 வருடங்கள்)
  • நேரடியாக1260 நாட்கள்

ஒரு நாள் என்பது ஒரு தீர்க்கதரிசன வருடம் என்பதற்கான ஆதாரங்கள் முன்பே பார்த்துவிட்டோம். ஒரு வருடம் என்பது எபிரேய வருடத்தைக் கொண்டு கணக்கிட வேண்டும்.

  • ஒரு எபிரேய வருடம் = 360 நாட்கள்
  • 1260 நாட்கள் = 42 மாதங்கள் = மூன்றரை வருடங்கள்

ஒரு நாள் என்பது ஒரு தீர்க்கதரிசன வருடம். அப்படியானால் இந்த சின்னக்கொம்பு 1260 தீர்க்கதரிசன வருடங்கள் பரிசுத்தவான்களை, இயேசுவின் உண்மை சபையை ஒடுக்கும் என்பது இதன் அர்த்தம். இந்த 1260 வருடத்தைக்குறித்து ஒரு தனி அத்தியாயமாகவே எழுதியுள்ளேன். இதுதான் கிறிஸ்தவத்தின் இருண்டகாலம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூட அழைக்கும் கி.பி 538 முதல் கி.பி 1798 வரையிலான 1260 வருடங்களாகும். பூமியில் போப்புகளின் ரோமன் கத்தோலிக்க சாம்ராஜ்ஜியம் தவிர வேறு எந்த ராஜ்ஜியங்களும் இத்தனை காலக்கட்டம் அதிகாரத்தில் இருந்தது இல்லை என்பதிலிருந்து, இந்த சின்னக்கொம்பு என்பது மீண்டும் போப்புகளின் கத்தோலிக்க ரோமப்பேரரசையே குறிக்கிறது.

10.இயேசுவின் நியாயசங்கம் வரும் காலமட்டும், அவரது பரிசுத்த ராஜ்ஜியம் ஸ்தாபிக்கப்படும் வரை இந்த சின்னக்கொம்பின் ராஜ்ஜியம் இருக்கும்

“ஆனாலும் நியாயசங்கம் உட்காரும்; அப்பொழுது முடிவுபரியந்தம் அவனைச் சங்கரிக்கும்படியாகவும் அழிக்கும்படியாகவும் அவனுடைய ஆளுகையை நீக்கிப்போடுவார்கள். வானத்தின் கீழெங்குமுள்ள ராஜ்யங்களின் ராஜரீகமும் ஆளுகையும் மகத்துவமும் உன்னதமானவருடைய பரிசுத்தவான்களாகிய ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்; அவருடைய ராஜ்யம் நித்திய ராஜ்யம்; சகல கர்த்தத்துவங்களும் அவரைச் சேவித்து, அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும் என்றான்.” (தானியேல் 7:26,27)

“நான் பார்த்துக்கொண்டிருக்கையில், சிங்காசனங்கள் வைக்கப்பட்டது; நீண்ட ஆயுசுள்ளவர் வீற்றிருந்தார்; அவருடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போலவும், அவருடைய சிரசின் மயிர் வெண்மையாகவும் பஞ்சைப்போல துப்புரவாகவும் இருந்தது; அவருடைய சிங்காசனம் அக்கினிஜுவாலையும், அதின் சக்கரங்கள் எரிகிற நெருப்புமாயிருந்தது.” (தானியேல் 7:9)

நீண்ட ஆயுசுள்ளவர் வருமட்டாகவும், நியாயவிசாரிப்பு உன்னதமானவருடைய பரிசுத்தவான்களுக்குக் கொடுக்கப்பட்டு, பரிசுத்தவான்கள் ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும் காலம் வருமட்டாகவும், இந்தக் கொம்பு பரிசுத்தவான்களோடே யுத்தம்பண்ணி அவர்களை மேற்கொண்டது என்று கண்டேன்.” (தானியேல் 7: 21,22)

‘‘அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; ஒரு கல் கையால்பெயர்க்கப்படாமல் மலையிலிருந்து பெயர்ந்து, உருண்டுவந்து, இரும்பையும் வெண்கலத்தையும் களிமண்னையும் வெள்ளியையும் பொன்னையும் நொறுக்கினதை நீர் கண்டீரே, அப்படியே அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.’’ (தானியேல் 2:44)

மேற்கண்ட வசனங்களிலிருந்து இந்த சின்னக்கொம்பானது,

  • நியாயசங்கம் உட்காரும் வரை
  • நீண்டஆயுசுள்ளவராகிய இயேசு வரும் வரை
  • நீண்டஆயுசுள்ளவர் சிங்காசனத்தில் உட்காரும் காலம் வரை

பூமியில் அரசாளும் என்று தெளிவாகத்தெரிகிறது. இது வெறும் கடைசி 7 வருட காலமல்ல. இனிமேல் தான் வரப்போகிறான் என்று போதிக்கப்படும் அந்திகிறிஸ்துவின் காலமும் அல்ல. ஏற்கனவே 99% முடிந்துவிட்ட காலம். மீதி இன்று வரை நடந்து நிறைவேறிக் கொண்டிருக்கும் தீர்க்கதரிசனமாகும். 19 ஆம் நூற்றாண்டிலிருந்து, பூமியில் கடைசிபரியந்தமும் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டு, இயேசுவின் இரண்டாம் வருகைக்கும், அவரது முடிவில்லா ராஜ்ஜியத்திற்கு மக்களை ஆயத்தப்படுத்தும் காலமாகும்.

தீர்க்கதரிசனங்கள் சினிமா கிளைமாக்ஸ் அல்ல

நாம் ஏற்கனவே அந்திகிறிஸ்துவின் காலம் கடைசி 7 வருடங்கள் என்றும், எல்லா முத்திரைகள், வாதைகள், எக்காளங்கள் இந்த கடைசி 7 வருடங்களில், ஏதோ ஒரு திரைப்படத்தின் கடைசி 10 நிமிட கிளைமாக்ஸ் காட்சிபோல நடக்கும் என்று போதிக்கப்பட்டிருப்பதால் நான் சொல்லுவதை நம்புவதற்கு மிகக்கடினமாக இருக்கும். இன்று நாம் கடைசி ராஜ்ஜியத்தின் கடைசி நாட்களில், தேவ எக்காளம் (7 ஆம் எக்காளம் அல்ல) ஊதப்படும் நாளுக்கு, அதாவது இயேசுவின் இரண்டாம் வருகைக்கு மிகச்சமீபமாக இருக்கிறோம் என்பது அதிநிச்சயம். கி.பி 1798 ல் நெப்போலியனால் வீழ்த்தப்பட்ட கத்தோலிக்க ரோம சாம்ராஜ்ஜியம் மீண்டும் ‘வாடிகன்’ என்ற பெயரில் இன்றுவரை நிலைத்து நிற்பதும் தீர்க்கதரிசன நிறைவேறுதலாகும். மேலும் இயேசுகிறிஸ்துவினால் அழிக்கப்படப்போகிற ராஜ்ஜியமும் இதுதான். மற்ற ராஜ்ஜியங்கள் அதற்கு முன்பதாக வல்லரசாக இல்லாதவாறு வீழ்ந்துவிடும். அவரது வருகையும், இதன் அழிவும் ஒரே காலக்கட்டத்தில் இருக்கும். ‘இரகசியமாக இருக்காது’ என்பது தான் இதன் இரகசியம்.

“அப்பொழுது  நான்  பார்த்தேன்;  நான்  பார்த்துகொண்டிருக்கையில்  அந்தக் கொம்பு பெருமையான பேச்சுகளைப் பேசினதினிமித்தம் அந்த மிருகம் கொலைசெய்யப்பட்டது; அதின் உடல் அழிக்கப்பட்டு, எரிகிற அக்கினிக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது. மற்ற மிருகங்களுடைய ஆளுகையோவென்றால், அவைகளை விட்டு நீக்கப்பட்டது; ஆனாலும், அவைகளுக்குக் காலமும் சமயமும் ஆகுமட்டும் அவைகள் உயிரோடே இருக்கும்படி கட்டளையிடப்பட்டது.” (தானியேல் 7:12)

இதைத்தான் நேபுகாத்நேச்சாருக்கு வெளிப்பட்ட சிலை சொப்பனத்தின் விளக்கத்திலே தானியேல் கடைசி ராஜ்ஜியமாகக் கூறியுள்ளார்.

“நீர் இரும்பைக் களிமண்ணோடே கலந்ததாகக் கண்டீரே, அவர்கள் மற்ற மனுஷரோடே சம்பந்தங்கலப்பார்கள்; ஆகிலும் இதோ, களிமண்ணோடே இரும்பு கலவாததுபோல அவர்கள் ஒருவரோடொருவர் ஒட்டிக்கொள்ளாதிருப்பார்கள். அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; ஒரு கல் கையால்பெயர்க்கப்படாமல் மலையிலிருந்து பெயர்ந்து, உருண்டுவந்து, இரும்பையும் வெண்கலத்தையும் களிமண்னையும் வெள்ளியையும் பொன்னையும் நொறுக்கினதை நீர் கண்டீரே, அப்படியே அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.”

இந்த கையால்பெயர்க்கப்படாமல் மலையிலிருந்து பெயர்ந்து, உருண்டுவந்து நொறுக்கிப்போட்ட கல், கன்மலையாகிய இயேசுவே. அது மற்ற ராஜ்ஜியங்களை அழித்துவிட்டு தானோ பெரிய பர்வதமாக (ராஜ்ஜியம்) என்றென்றைக்கும் நிற்கும்.

சத்தியத்தை அறிந்துகொள்ளுங்கள்

இதில் எங்கேயாவது இயேசு ரகசியமாய் வந்து பரிசுத்தவான்களை சேர்த்துக்கொள்வார் என்று சொல்லப்பட்டுள்ளதா என்று ஆராய்ந்து பாருங்கள். இரகசிய வருகை என்பது, இந்த சின்னக்கொம்பு தனது அந்திக்கிறிஸ்து என்ற இமேஜை மறைப்பதற்காக கிறிஸ்தவர்களை நம்பவைக்கும் நோக்கில் கொண்டுவந்த ஒரு வஞ்சனையே. நூற்றி ஐம்பது வருடங்களுக்கு முன்னால் இரகசிய வருகையைப் பற்றி பரிசுத்தவான்களோ, சபைகளோ பேசியிருக்கின்றதா என்று ஆராய்ந்துபாருங்கள். இன்னும் ஏன்? முப்பது வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த பரிசுத்தவான்கள் கூட இதைப்பற்றி பேசவில்லை. எல்லா பாடல்களின் கடைசிப் பல்லவிகளை இயேசுவின் வருகையின் வார்த்தைகளோடு முடிக்கும் சாராள் நவ்ரோஜ் உட்பட எவரும் ‘இயேசு இரகசியமாய் வந்து நம்மை சேர்த்துக்கொள்வார்’ என்று பாடவில்லை. இந்தப்புத்தகத்தை எழுதும்போதெல்லாம் எனக்கு மனதில் ஒரு நெருடல் அவ்வப்போது வரும். மிகப்பெரும்பான்மையானோர் இரகசிய வருகை உண்டென்று நம்பும் இக்காலத்தில், என்னைப்போல ஒருசிலர் மட்டும் பகிரங்க வருகை மட்டுமே உண்டு என்று போதிப்பது, சாதிப்பது தவறாக இருக்குமோ என்று தோன்றும். நானும் அவ்வாறு இரகசியவருகை உண்டென்று நம்பி தர்க்கம் செய்தவன் தான். ஆனால் இத்தனைத் திரளான வசனம் மற்றும் வரலாற்று ஆதாரங்களோடு இதை சபைக்கு சொல்வதற்கு கர்த்தர் ‘யாரும் அறியாத என்னை’ பயன்படுத்துகிறார் என்று நினைக்கும்போது இதை வெளியிடுவதில் எந்த குற்றவுணர்ச்சியும் இல்லை. இரகசிய வருகைக் கொள்கையில் உறுதியாய் இருப்பவர்கள் என்னை கள்ளப்போதகன் என்று கூட சொல்லக்கூடும். ஆனால் ‘இரண்டாம் வாய்ப்பு உண்டு; எல்லா கிறிஸ்தவ சபைகளும் ஒன்று தான்’, என்று விசுவாசிகள் அசட்டையாக இருந்தால் ஏராளமான ஆத்துமாக்களை இழந்துவிடக்கூடும் என்ற அச்சத்திலும், ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களும் விசுவாச துரோகத்தை விட்டு வெளிவந்து இரட்சகராகிய இயேசு ஒருவரையே ஆராதிக்கவேண்டும் என்ற ஒரே நோக்கில் இதை வெளியிட இயேசு உதவிசெய்தார். கர்த்தர் ஒருவரே நியாயாதிபதி.

கிறிஸ்து மற்றும் அந்திகிறிஸ்து வெளிப்படும் காலம்

தெசலோனிக்கேயருக்கு பவுல் எழுதும்போது, ‘அந்திகிறிஸ்து வெளிப்பட்ட பின்புதான் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை இருக்கும்; அதனால் கள்ள போதகர்களின் வார்த்தைகளை நம்பாதீர்கள்’ என்று ஆணித்தரமாக சொல்கிறார். இந்த அந்திகிறிஸ்து வெளிப்படும் காலத்தில் இரண்டு முக்கிய சம்பவங்கள் நடக்கும்; அது நடந்து முடியும் வரை அந்த நாள் (இயேசுவின் வருகை) வராது என்றும் தெளிவாகக் கூறுகின்றார்.

‘‘ஒரு ஆவியினாலாவது, வார்த்தையினாலாவது, எங்களிடத்திலிருந்து வந்ததாய்த் தோன்றுகிற ஒரு நிருபத்தினாலாவது, கிறிஸ்துவினுடைய நாள் (2ஆம் வருகை) சமீபமாயிருக்கிறதாகச் சொல்லப்பட்டால், உடனே சஞ்சலப்படாமலும் கலங்காமலும் இருங்கள். எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது. (2 தெசலோனிக்கேயர் 2:2,3)

இந்த ‘கேட்டின் மகனாகிய பாவமனுஷன்’ என்ற ‘மனிதனுடைய இலக்கம்’ தான் 666 என்று வெளிப்படுத்தல் 13 ஆம் அதிகாரத்தில் பார்க்க இருக்கிறோம். இயேசு முதலில் இரகசியமாக வருவார்; பின்பு பகிரங்கமாக வருவார் என்று பவுலுக்கு வெளிப்படுத்தப்பட்டிருந்தால் ‘கிறிஸ்து இரகசிய வருகையில் நம்மை எடுத்துக்கொண்ட பின்பு விசுவாச துரோகம் நேரிட்டு, கேட்டின் மகனாகிய அந்திகிறிஸ்து வெளிப்படுவான். அவன் வெளிப்பட்டாலொழிய அந்த நாள் (பகிரங்க இரண்டாம் வருகை) வராது’ என்று தான் எழுதியிருப்பார். இதில் பவுல் ஒரே ‘அந்த நாளைப் பற்றி’ தான் சொல்லியிருக்கிறார். மேலும் இந்த இரண்டு முக்கிய சம்பவங்களை நிறைவேற்றுகிறவனே அந்திகிறிஸ்து என்றும் நமக்கு சில இரகசியங்களை சொல்லி வைத்துச்சென்றிருக்கிறார்.

விசுவாச துரோகம் (Great Apostasy)

கிறிஸ்துவின் நாளுக்கு ‘முந்தி நேரிடுவது’ விசுவாச துரோகம் என்று மேலே கண்ட வசனத்தின் மூலமாக அறிகின்றோம். இந்த Great Apostasy என்பதற்கு அகராதி பின்வரும் விளக்கத்தைக் கொடுத்துள்ளது – ‘Predicted great falling away of those who professed to be Christians’. ‘பெரும் கூட்ட கிறிஸ்தவர்கள், கிறிஸ்துவின் சத்தியத்தை விட்டு விலகி பெரும் பின்மாற்றம் அடையும் காலம்’ என்று பொருள்படும். இதை இன்னும் விளக்கமாக, தனது காலமாகிய முதல் நூற்றாண்டிலிருந்தே செயல்பட்டுக்கொண்டிருந்த அந்திகிறிஸ்துவின் ஆவி, என்ன மாதிரியான விசுவாச துரோகம் செய்யும் என்று யோவான் சொல்லியிருக்கிறார்.

‘‘பிள்ளைகளே, இது கடைசிக்காலமாயிருக்கிறது; அந்திக்கிறிஸ்து வருகிறானென்று நீங்கள் கேள்விப்பட்டபடி இப்பொழுதும் அநேக அந்திக்கிறிஸ்துகள் இருக்கிறார்கள்; அதினாலே இது கடைசிக்காலமென்று அறிகிறோம். அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்து போனார்கள், ஆகிலும் அவர்கள் நம்முடையவர்களாயிருக்கவில்லை; நம்முடையவர்களாயிருந் தார்களானால் நம்முடனே நிலைத்திருப்பார்களே; எல்லாரும் நம்முடையவர்களல்லவென்று வெளியாகும்படிக்கே பிரிந்துபோனார்கள்.’’ (1 யோவான் 2:8,19)

இதில் அந்திகிறிஸ்து வெளிப்படும் காலம் மற்றும் அப்போது நடக்கும் மாற்றங்களை யோவான் சொல்லியிருக்கிறார்.

  • கடைசிகாலமாகிய முதல் சில நூற்றாண்டுகளிலேயே அந்திகிறிஸ்து வெளிப்பட ஆரம்பித்துவிட்டான்.
  • அந்திகிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் நம்மைவிட்டு (உண்மை விசுவாசிகளை) பிரிந்துபோனவர்கள்.
  • பிரிந்துபோனாலும் கிறிஸ்துவைப் பின்பற்றும் நம்மைப் போல இருக்கவில்லை.
  • கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படும் எல்லாரும் நம்மைப் போல உண்மை விசுவாசிகள் இல்லை என்று உலகத்திற்கு தெரியும்பொருட்டே அவர்கள் நம்மை விட்டு விலகி அந்திகிறிஸ்துவின் போதனைகளைப் பின்பற்றிப் போனார்கள்

இதன்படி விசுவாச துரோகம் என்பது கிறிஸ்துவைப் பின்பற்றி விட்டு, பின்பு அவரையேக் காட்டிக்கொடுத்த யூதாசைப் போல, சத்தியத்தை விட்டு விலகுவது என்று அர்த்தம். நாலாம் நூற்றாண்டில் கிறிஸ்தவத்தைத் தழுவிய ரோமப்பேரரசும், அப்போதைய சபையின் பிஷப்புகளுமே ஐந்தாம் நூற்றாண்டில் கிறிஸ்துவின் போதனைகளுக்கு எதிரான ‘அந்திகிறிஸ்துவின் ராஜ்ஜியமாக’ மாறியது என்பதை நினைவில் கொள்ளுங்கள். கர்த்தரால் கானான் தேசத்திற்கு வழிநடத்தப்பட்ட இஸ்ரவேல் சபை ஜனங்கள், கானானுக்குள் நுழைவதற்கு முன்னரே விசுவாச துரோகம் செய்யும் மனப்பான்மையில் இருந்ததைக் கர்த்தர் முன்னறிந்து மோசேக்கு வெளிப்படுத்தினார். அப்படி எந்த வழியில் விசுவாச துரோகம் செய்வார்கள் என்றும் மோசேக்கு சொன்னார்.

‘‘நான் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தில் அவர்களைப் பிரவேசிக்கப்பண்ணாதிருக்கிற இப்பொழுதே அவர்கள் கொண்டிருக்கும் எண்ணம் இன்னது என்று அறிவேன் என்றார்’’ (உபாகமம் 31:21)

‘‘கர்த்தர் மோசேயை நோக்கி: நீ உன் பிதாக்களோடே படுத்துக்கொள்ளப்போகிறாய்; இந்த ஜனங்கள் எழும்பி, தாங்கள் போயிருக்கும் தேசத்திலுள்ள அந்நிய தேவர்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றி, என்னைவிட்டு, தங்களுடனே நான் பண்ணின உடன்படிக்கையை மீறுவார்கள்.’’ (உபாகமம் 31:16)

இதே சூழ்நிலையை அல்லது விசுவாச துரோகத்தை புதிய ஏற்பாட்டு சபையும் சந்திக்க நேரிடும் என்று இயேசு, பவுல் அப்போஸ்தலன் மூலமாகப் பல இடங்களில் எச்சரிக்கிறார். இங்கு சபைகள் கள்ளப்போதகங்கள், கள்ளதீர்க்கதரிசிகள் மூலமாக விசுவாச துரோக செயலுக்குள் நடத்தப்படுவார்கள் என்று சொல்லியுள்ளார். அப்படி சபையை விசுவாச துரோகத்திற்கு நேராக நடத்துபவர்கள் வெளியிலிருந்து வரமாட்டார்கள்; சபைக்குள்ளே இருந்து எழும்புகிறவர்களே அதை நிறைவேற்றுவார்கள் என்றும் பவுல் எச்சரிக்கிறார்.

‘‘ஆகையால், உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள். நான் போனபின்பு (கி.பி 70 களுக்குப் பின்பு) மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன்.’’ (அப்போஸ்தலர் 20;28-30)

அப்போஸ்தலர்களால் துவக்கப்பட்ட ஆதிசபை வளர்ந்த வேகத்தின்படி பார்த்தால் இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை ஏற்றுக்கொண்டிருக்கவேண்டும். ஆனால் அந்த ஆதிசபை ரோம சாம்ராஜ்ஜியத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்று நீர்த்துப்போனதால் பரிசுத்த சபையும், உண்மை சீடர்களும் சொற்ப அளவில் தான் உலகெங்கிலும் உள்ளனர். ஆனால் ‘கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும்’ வஞ்சிக்கும் அந்திகிறிஸ்துவின் ரோம ராஜ்ஜியத்தின் ஆராதனை முறைகளுக்கும், ஆளுகைக்கும் உட்பட்ட பெரும் கூட்ட ஜனங்களை (உலகின் மூன்றில் ஒரு பகுதி) தங்கள் வசமாக்கிக்கொண்ட ரோமன் கத்தோலிக்க தலைவர்கள் செய்தது விசுவாச துரோகம் இல்லையோ? நான் அடிக்கடி சொல்லும் ரோமன் கத்தோலிக்க சபை என்ற வார்த்தையால் நான் ‘கத்தோலிக்க சபைக்கு’ எதிரான புத்தகத்தை எழுதுகிறேன் அன்று நினைத்துவிட வேண்டாம்; மாறாக ‘ரோம’ ஆளுகைக்குட்பட்டதால் வலுசர்ப்பத்தின் வழியைப் பின்பற்றிய சபையையே நான் இங்கு அடிக்கடி குறிப்பிடுகிறேன். சபையின் ஆளுகையையும், கள்ளபோதனைகளையும் மட்டுமே எதிர்க்கிறேனே தவிர, சபையின் ஜனங்களை அல்ல. அவர்களும் இதை சத்தியத்தை அறிந்து தெளிவடைய வேண்டும் என்பதே என் விருப்பம்.

கேட்டின் மகன் (Son of Predition)

விசுவாச துரோகம் செய்த அதே யூதாஸ்காரியோத்தை தான் இயேசுவும் கேட்டின் மகன் என்று சொல்லியுள்ளார்.

‘‘நான் அவர்களுடனேகூட உலகத்திலிருக்கையில் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொண்டேன்; நீர் எனக்குத் தந்தவர்களைக் காத்துக்கொண்டுவந்தேன்; வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, கேட்டின் மகன் கெட்டுப்போனானேய ல்லாமல், அவர்களில் ஒருவனும் கெட்டுப்போகவில்லை.’’ (யோவான் 17:12)

இயேசு உலகில் இருந்த கடைசி மணித்துளிகளில் இரண்டு விதமான கூட்டத்தைப் பற்றி சொல்லியிருக்கிறார்.

கூட்டம் 1: நீர் (பிதா) எனக்குத் தந்த கூட்டம்; கெட்டுப்போகாதவர்கள்

கூட்டம் 2: பிரிந்துசென்ற அல்லது துரோகம் செய்த கூட்டம்; கெட்டுப்போனவர்கள்

இந்த கேட்டின் மகனின் தன்மை என்ன? கூடவே இருந்து அப்பம் சாப்பிட்டவன்; ஆனால் பிசாசின் தந்திரத்திற்கும், பண ஆசைக்கும் விலைபோய் காட்டிக்கொடுத்து துரோகம் செய்தவன். ஆனால் ஆரம்பத்தில் பன்னிருவருள் ஒருவன்.

‘‘இயேசு அவர்களை நோக்கி: பன்னிருவராகிய உங்களை நான் தெரிந்துகொள்ளவில்லையா? உங்களுக்குள்ளும் ஒருவன் பிசாசாயிருக்கிறான் என்றார்.’’ (யோவான் 6:70)

அந்திகிறிஸ்து எங்கிருந்து வருவான்?

நாம் ராஜ்ஜியங்களைப் பற்றி பார்த்துக்கொண்டிருக்கிறோம்; அந்திகிறிஸ்து என்பது ஒரு தனி நபர் அல்ல, ஒரு ராஜ்ஜியம் என்பதைத் தான் திரும்பத் திரும்ப சொல்லிவருகிறேன். மேற்கண்ட ஆதாரங்களின்படி பார்த்தால் அந்திகிறிஸ்துவின் ராஜ்ஜியம் கீழ்க்காணும் தகுதிகளை நிறைவுசெய்வதாக இருக்கவேண்டும்.

  1. அடிப்படையில் வலுசர்ப்பத்தின் ராஜ்ஜியமாக இருக்கவேண்டும். (உங்களுக்குள்ளும் ஒருவன் பிசாசு)
  2. கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட ராஜ்ஜியமாக இருக்கவேண்டும்.
  3. பெயரளவில் ஏற்றுக்கொண்ட பின்பு தானும், தன்னைப் பின்பற்றும் பெருங்கூட்டத்தையும் சத்தியத்தை விட்டு விலகி விசுவாச துரோகத்துக்குள் நடத்துவதாக இருக்கவேண்டும்.
  4. கேட்டின் வழிக்கு அல்லது நரக வழிக்கு அனைவரையும் இழுத்துச்செல்பவனாக இருக்கவேண்டும்.
  5. நித்திய அழிவிற்கென்று நியமிக்கப்பட்ட ராஜ்ஜியமாக இருக்கவேண்டும் (son of predition, doomed to destruction)

 ‘‘அவனைக் கர்த்தர் தம்முடைய வாயின் சுவாசத்தினாலே அழித்து, தம்முடைய வருகையின் பிரசன்னத்தினாலே நாசம்பண்ணுவார்’’.(2 தெசலோனிக்கேயர் 2:8)

‘‘அப்பொழுது நான் பார்த்தேன்; நான் பார்த்துகொண்டிருக்கையில் அந்தக் கொம்பு பெருமையான பேச்சுகளைப் பேசினதினிமித்தம் அந்த மிருகம் கொலைசெய்யப்பட்டது; அதின் உடல் அழிக்கப்பட்டு, எரிகிற அக்கினிக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது.’’

இத்தனை தகுதிகளையும் நிறைவேற்றிய ஒரே பூமியின் ராஜ்ஜியம் ‘ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியம்’ மட்டுமே. உங்களுக்கு வேறு ராஜ்ஜியம் தெரிந்திருந்தால் எனக்குத் தெரியப்படுத்துங்கள். பவுல் தெசலோனிக்கேயருக்கு சொன்ன காரியத்தின்படி முதலில் அந்திகிறிஸ்துவின் ராஜ்ஜியம் (சின்னக்கொம்பு) பூமியை 1260 வருடங்கள் ஆட்சி செய்யவேண்டும்; அதில் இந்த அத்தியாயத்தில் பார்த்த சம்பவங்கள் நிறைவேறித்தீர வேண்டும்; இந்த காலக்கட்டம் தான் கடைசிகாலம் என்று அழைக்கப்படும்; அதற்குப்பிறகு தான் முடிவுகாலம் என்று ஒன்று வரும்; அது சில நாட்கள் அல்ல; பல வருடங்கள்; அதன் இறுதியில் என் தேவாதி தேவன் வானத்தில் தூதர்களோடு வெளிப்படுவார். ஆமென்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *