- August 30, 2023
- admin
- 0
ஒருங்கிணைந்த ரோமப்பேரரசு (கி.மு 166 - கி.பி 476)
‘உலகின் அனைத்து சாலைகளும் ரோம் நோக்கி செல்கின்றன’ என்ற புகழ்பெற்ற சொல்லாடல் ஒன்றிலிருந்து, ரோம் எவ்வளவு பெரிய வல்லரசாக விளங்கியது என்று புரிந்துகொள்ளலாம். இதுவரை நாம் தானியேல் தீர்க்கதரிசன புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு, ராஜ்ஜியங்களை ஆராய்ச்சி செய்தோம். அடுத்துவந்த ரோமப்பேரரசு என்ற புள்ளியில் தான் தானியேலும், வெளிப்படுத்தின விசேஷமும் இணைகிறது. எனவே ரோமப்பேரரசின் காலகட்டத்திலிருந்து இயேசுவின் இரண்டாம் வருகை வரை வரும் ராஜ்ஜியங்களைப் பற்றிய தீர்க்கதரிசனங்களை, தானியேல் மற்றும் வெளிப்படுத்தின விசேஷம் புத்தகங்களிலிருந்து ஆராயப் போகிறோம். வரலாற்றின்படி, ரோமை மையமாகக் கொண்டு ஆண்ட ராஜாக்கள் கிறிஸ்து பிறப்பதற்கு சுமார் 800 வருடங்களுக்கு முன்பிருந்தே இருந்தாலும், உலகை ஆளும் சாம்ராஜ்ஜியமாக உருவெடுக்க ஆரம்பித்தது மேதிய-பெர்சிய சாம்ராஜ்ஜியம் வீழ்ச்சியடைந்த காலகட்டமான கி.மு 166 க்கு பின்பு தான்.
ஒரு நிமிடம் நிற்க…..
இதுவரை முந்தைய ராஜ்ஜியங்களைப் பற்றிய விளக்கங்களில், முதலில் பரிசுத்த வேதத்தில் உள்ள தரிசனங்களை சொல்லிவிட்டு, அது பின்னர் எவ்வாறு நிறைவேறியது என்பதை வரலாற்றுடன் ஒப்பிட்டு சொல்லிவந்தேன். ஆனால் ரோம சாம்ராஜ்ஜியத்தை அப்படி சொன்னால் புரிவதற்கு மிகவும் சிரமமாக இருக்கும் என்பதால், முதலில் ரோம சாம்ராஜ்ஜியம் பற்றிய வரலாற்றை சொல்லிவிட்டு, அதன் பின்னர் தீர்க்கதரிசனங்களோடு அவை எவ்வாறு கனகச்சிதமாகப் பொருந்தியுள்ளன என்று விளக்குகிறேன். தயவு செய்து வரலாற்றைத் தெரிந்துகொள்ளுங்கள்.
ஒரு காலத்தில் ஒன்றுக்கும் உதவாதவனாக இருந்த என்னை, கர்த்தராகிய நமது இரட்சகர் இயேசு, வரலாற்றைப் புரியவைத்து வேதத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க கற்றுக்கொடுத்த பின்பு நான் வேதத்தை அணுகிய முறையே தலைகீழாக மாறிவிட்டது. ‘நம் வேதம் இத்தனை இரகசியங்களை உள்ளடக்கியதா? நம் தேவாதி தேவன் இத்தனை ஞானம் உடையவரா? நம் வேதத்தில் உள்ள அனைத்தும் இத்தனை கனகச்சிதமாக நிறைவேறி உள்ளதா?’ என்று ஆச்சரியம் அடைந்தது மட்டுமல்லாமல், என் விசுவாசமும் பலப்பட்டது. அது மட்டுமல்ல, ஆண்டராகிய இயேசுவின் இரண்டாம் வருகை என்பது அதிநிச்சயமானது என்பதை உணர்ந்து அதற்கு தினமும் என்னை தயார்படுத்தி அவரது வருகைக்காக ஏங்க ஆரம்பித்தேன். நீங்களும் அப்படி மாறிவிட வேண்டும், இதே ஏக்கத்தை நீங்களும் அடையவேண்டும் என்ற ஒரே ஆசையில் தான் என் பலவீனங்களிலும் ஆவியானவரின் பலத்தோடு இந்தப் புத்தகத்தை எழுத ஆரம்பித்தேன்.
இனி நாம் தானியேல் மற்றும் வெளிப்படுத்தலில் இருந்து ரோம சாம்ராஜ்ஜியத்தின் பல்வேறு நிலைகளைப் பற்றிய தீர்க்கதரிசனங்களையும், அவைகள் எவ்வாறு நிறைவேறின என்பதையும் பார்ப்போம். ரோம சாம்ராஜ்ஜியம் மூன்று வகைப்படும்.
- சீசர்களால் ஆளப்பட்ட ஒருங்கிணைந்த ரோம ராஜ்ஜியம்
- மேற்கு மற்றும் கிழக்கு எனப் பிரிக்கப்பட்ட ரோம சாம்ராஜ்ஜியம். இதில் மேற்கு சாம்ராஜ்ஜியம் சீக்கிரத்தில் 10 சி று ராஜ்ஜியங்களாக உடைந்தது.
- போப்புகளால் ஆளப்பட்ட கத்தோலிக்க ரோமப்பேரரசு
சீசர்களின் ரோமப்பேரரசு
ஒருங்கிணைந்த ரோம சாம்ராஜ்ஜியத்தின் முதல் ராஜாவான அகஸ்து ராயனால் கி.மு 27 முதல் உலகம் முழுவதும் ஆளப்பட்டது என்பதை லூக்கா தெளிவாகக் கூறியுள்ளார்.
‘‘அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தது’’ (லூக்கா 2:1)
இந்த அகஸ்து ராயன் அல்லது ஆக்டோவியன் சீசர் தான் இயேசு பிறக்கும்போது ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர். இயேசு பூமியில் ஊழியம் செய்தபோது மற்றும் சிலுவையில் அறையப்பட்டபோது ரோமப்பேரரசனாக இருந்தவர் திபேரியு ராயன்.
‘‘திபேரியுராயன் ராஜ்யபாரம் பண்ணின பதினைந்தாம் வருஷத்திலே, பொந்தியுபிலாத்து யூதேயாவுக்குத் தேசாதிபதியாயும், ஏரோது காற்பங்கு தேசமாகிய கலிலேயாவுக்கு அதிபதியாயும், அவன் சகோதரனாகிய பிலிப்பு காற்பங்கு தேசமாகிய இத்துரேயாவுக்கும், திராகொனித்தி நாட்டிற்கும் அதிபதியாயும், விசானியா காற்பங்கு தேசமாகிய அபிலேனேக்கு அதிபதியாயும், அன்னாவும் காய்பாவும் பிரதான ஆசாரியராயும் இருந்தகாலத்தில் வனாந்தரத்திலே சகரியாவின் குமாரனாகிய யோவானுக்கு தேவனுடைய வார்த்தை உண்டாயிற்று.’’ (லூக்கா 3:1,2)
இந்த இரு வசனங்களில் மொத்த ரோம சாம்ராஜ்ஜியத்தின் அதிகார வரிசையை எவ்வளவு அழகாக லூக்கா எழுதியுள்ளார் பார்த்தீர்களா! பரிசுத்த வேதத்தில் எழுதப்பட்டுள்ள வம்சவரலாறுகளில் ஒன்று கூட காரணம் இல்லாமல் எழுதப்பட பரிசுத்த ஆவியானவர் விடவில்லை.
இரண்டு தலைநகரங்கள்
இப்படி கி.மு 27 முதல் ‘டையோகிளிடியன்’ என்ற ராஜா ஆட்சிசெய்ய ஆரம்பித்த கி.பி 285 வரை ரோமை மட்டும் தலைநகராகக் கொண்டு ரோம சாம்ராஜ்ஜியம் தனது அதிகாரத்தை உலகமெங்கிலும் கோலோச்சியது. டையோகிளிடியனின் காலத்தில் ரோமைத் தலைநகராகக் கொண்ட மேற்கு ரோம ராஜ்ஜியமாகவும், கான்ஸ்டாண்டிநோபிளைத் தலைநகராகக் கொண்ட கிழக்கு ரோம ராஜ்ஜியமாகவும் பிரித்து ரோமப்பேரரசர்கள் ஆட்சிசெய்து வந்தனர். இப்படி இரண்டு தலைநகர்களாக பிரிக்கப்பட்ட பின்னர் கி.பி 306 ல் ‘கான்ஸ்டாண்டைன்’ ஆட்சியைப்பிடித்த பின்பு மீண்டும் கொஞ்சகாலம் ஒருங்கிணைத்தான். ஆனால் ‘தியோடோசியஸ்’ காலத்தில் மீண்டும் அரசாங்கம் இரண்டாகவே செயல்பட்டு வந்தது. காண்ஸ்டாண்டைன் மற்றும் தியோடோசியஸ் இருவரும் கிறிஸ்தவ மத்தைத் தழுவியதால் விக்கிரக வணக்கத்தைப் பின்பற்றிய ரோம சாம்ராஜ்ஜியமும் அதன் மக்களும் கொஞ்சம் கொஞ்சமாக கிறிஸ்தவத்தை தழுவ ஆரம்பித்து, அந்த நான்காம் நூற்றாண்டின் இறுதியில் கிறிஸ்தவம் ரோம சாம்ராஜ்ஜியத்தின் அரசியல் அதிகாரப்பூர்வ மதமாக மாறியது.
படம் 20: மேற்கு மற்றும் கிழக்கு ரோமசாம்ராஜ்ஜியங்கள்
உடைந்த மேற்கு ரோம்
கான்ஸ்டாண்டைனின் காலத்திற்குப் பின்பு மேற்கு ரோம ராஜ்ஜியம், வாண்டல் மற்றும் விசிகோத் என்ற ஜெர்மானிய பழங்குடியினரால் அடிக்கடி தாக்குதலுக்கு உள்ளானது. கொஞ்சம் கொஞ்சமாக உடைந்த மேற்கு ரோம சாம்ராஜ்ஜியமானது பத்து சிறு ராஜ்ஜியங்களாகப் பிரிந்து கி.பி 476 முழுவதுமாக உடைந்தது. இப்படி மேற்கு ரோம சாம்ராஜ்ஜியம் பலவீனமடைய ஆரம்பித்த காலக்கட்டத்தில், கிறிஸ்தவத்தைத் தழுவியிருந்த ரோம சாம்ராஜ்ஜியத்தில் மதத்தலைவர்களான பிஷப்புகளின் ஆதிக்கம் சபைகளில் மட்டுமன்றி அரசியல் அதிகாரத்திலும் ஆதிக்கம் பெற ஆரம்பித்தது. இதே சமயத்தில் கிழக்கு ரோம சாம்ராஜ்ஜியம் தாக்குபிடித்து நின்றது.
போப்புகளின் எழுச்சி (Papacy)
ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பின்பு மேற்கு ரோம ராஜ்ஜியத்தில் போப்புகளே மதம் மற்றும் அரசியல் தலைவர்களாக இருந்தனர். அரசர்கள் போப்புகளின் கைப்பாவைகளாகவே செயல்பட்டனர். இதற்கு மாறாக கிழக்கு ரோம ராஜ்ஜியத்தில் அரசர்களே அரசியல் மற்றும் மதத்தலைவர்களாகவும் இருந்து வந்தார்கள். ஏற்கனவே பல உள்நாட்டு யுத்தங்கள் மற்றும் படையெடுப்புகளினால் பலவீனப்பட்டிருந்த ரோம சாம்ராஜ்ஜியத்தை நடத்த, அப்போதைக்கு பணபலத்தாலும், செல்வச்செழிப்பினாலும் கொழித்து, மக்களின் அபிமானத்தைப் பெற்றிருந்த கத்தோலிக்க சபையின் ஆதரவு ரோமப்பேரரசனுக்குத் தேவைப்பட்டது. இதன் உச்சகட்டமாக கி.பி 538 ல் ‘ஜஸ்டினியன்’ என்ற பேரரசன் ‘மக்கள் அதிகாரம் மற்றும் உலக கத்தோலிக்க சபைகளின் மேல் சர்வஅதிகாரம் அனைத்தும் ரோமின் பிஷப்பாக இருப்பவருக்கு அளிக்கப்பட்டது’ என ஆணையிட்டான் (Justinian Decree). இப்படி அனைத்து அதிகாரமும் குவிந்த ரோமின் பிஷப் தான் ‘‘போப்பாண்டவர்’’ என்று அழைக்கப்பட்டார். இந்தப் பின்னணியுடன் இப்பொழுது நாம் தானியேல் மற்றும் வெளிப்படுத்தலின் தீர்க்கதரிசனங்களை ஆராய்வோம், வாருங்கள்.
ரோம ராஜ்ஜியங்களின் காலவரிசை
கீழே உள்ள ரோம வரலாற்று சம்பவங்கள் நிகழ்ந்த காலகட்டங்களை நன்றாக நினைவு வைத்துக்கொள்ளுங்கள். அப்போது தான் இனிவரும் தரிசனங்களின் அர்த்தங்கள் புரியும்.
- தொன்மையான ரோம அரசாங்கம் உருவானது: கி.மு 753
- ரோம்குடியரசாக மாறியது : கி.மு 509
- மேதிய-பெர்சிய வீழ்ச்சி மற்றும் ரோமின் எழுச்சி: கி.மு 166-66 வரை
- போம்பேஎன்ற ரோமத்தளபதி எருசலேமைக் கைப்பற்றினான்: கி.மு 66 (இவன் ஆண்டியோகஸ் எபிபேனஸ்-IV க்கு பின்பு மகா பரிசுத்த ஸ்தலத்தில் நுழைந்த 2 வது யூதனல்லாதவன்)
- போம்பேயை வீழ்த்தி ஜீலியஸ் சீசர் ஆட்சியைப் பிடித்தது: கி.மு 45
- குடியரசுஎன்று சொல்லிக்கொண்டாலும் பேரரசர்களால் மட்டும் ஆளப்படும் சாம்ராஜ்ஜியமாக உருவெடுத்தது: கி.மு 27
- இதன்முதல் பேரரசன் ஆக்டோவியன் சீசர் என்ற அகஸ்துராயன் (லூக்கா 2:1)
- சீசர்களின் கைக்கூலியாக இருந்த ஆண்டிபேட்டர் என்ற இதுமேய வம்சத்திலிருந்து (மாற்கு 3:8) வந்து, ரோம அரசின் குட்டி ராஜாவாக கலிலேயாவிற்கு நியமிக்கப்பட்டவர்கள் தான் ஏரோதுக்கள்
- சீசர்களால் ஆளப்பட்ட ரோம் அரசியல் காரணங்களுக்காக மேற்கு மற்றும் கிழக்கு ரோமப்பேரரசாகப் பிரிக்கப்பட்டது : கி.பி 284
- கான்ஸ்டாண்டைன் கிறிஸ்தவ சாம்ராஜ்ஜியமாக மாற்ற ஆரம்பித்தது : கி.பி 313 க்கு பின்
- மேற்குரோம சாம்ராஜ்ஜியம் முழுவதுமாக வீழ்ச்சியடைந்தது : கி.பி 476
- ரோமப்பேரரசின் அரசியல் ஆதிக்கம் மிகுந்த மதத்தலைவராக போப்புகள் உருவெடுத்தது (கத்தோலிக்க ரோமப்பேரரசின் எழுச்சி) : கி.பி 538 முதல்
- கிழக்குரோமப்பேரரசின் வீழ்ச்சி(கான்ஸ்டாண்டிநோபிள்): கி.பி 1453
- போப்புகளின் அதிகாரம் நெப்போலியனால் முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட ஆண்டு: கி.பி 1798
- மீண்டும்போப்புகளின் அதிகார மையமாக ‘வாட்டிகன்’ என்ற குட்டி நாடு தோன்றியது: கி.பி 1929
- கி.பி1929 முதல் இன்றுவரை: நம்பினால் நம்புங்கள்; உலகின் அனைத்து அதிகாரங்களும் மறைமுகமாக குவிந்துள்ள இடம் வாடிகனும் அதனை சார்ந்த ஐரோப்பிய கூட்டமைப்பும் தான்.
தானியேலின் தரிசனம்: பயங்கர மிருகம்
தானியேலுக்கு காண்பிக்கப்பட்ட மிருகங்களைக் குறித்த தரிசனத்தில், முதல் மூன்று மிருகங்களாகிய மூன்று சாம்ராஜ்ஜியங்களைப் பார்த்தோம். தானியேலையே மிகவும் ஈர்த்து, கவனம் பெற்ற மிருகம் தான், நாலாம் மிருகமாகிய ரோம். மற்ற மிருகங்களின் உருவமெல்லாம் நமக்கு தெரிந்த மிருகங்களின் உருவங்களை ஒத்ததாக இருந்தது என்று சொல்லப்பட்டிருந்தாலும், நாலாம் மிருகத்திற்கு அப்படி ஒரு உருவகப்படுத்தல் கொடுக்கப்படவில்லை. அதனால் ‘கெடியும், பயங்கரமும், மகாபலத்ததுமான மிருகம்’ என்று நாம் எடுத்துக்கொள்ளலாம்.
‘‘அதற்குப்பின்பு, இராத்தரிசனங்களில் நாலாம் மிருகத்தைக் கண்டேன்; அது கெடியும் பயங்கரமும் மகா பலத்ததுமாயிருந்தது; அதற்குப் பெரிய இருப்புப்பற்கள் இருந்தது; அது நொறுக்கிப் பட்சித்து, மீதியானதைத் தன் கால்களால் மிதித்துப்போட்டது; அது தனக்கு முன்னிருந்த எல்லா மிருகங்களைப்பார்க்கிலும் வேற்றுருவமாயிருந்தது, அதற்குப் பத்துக் கொம்புகள் இருந்தது.’’ (தானியேல் 7:7)
படம் 21: தானியேல் கண்ட பத்துகொம்பு மிருகம்
இதே நாலாம் ராஜ்ஜியத்தைப் பற்றி நேபுகாத்நேச்சார் கண்ட சொப்பனத்தில் ‘இரும்பால் செய்யப்பட்ட கால் ‘ எ ன் று வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
‘‘அதின் கால்கள் இரும்பும், அதின் பாதங்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணுமாயிருந்தது.’’ (தானியேல்2:33)
‘‘நாலாவது ராஜ்யம் இரும்பைப்போல உரமாயிருக்கும்; இரும்பு எல்லாவற்றையும் எப்படி நொறுக்கிச் சின்னபின்னமாக்குகிறதோ, அப்படியே இது நொறுக்கிப்போடுகிற இரும்பைப்போல அவைகளையெல்லாம் நொறுக்கித் தகர்த்துப்போடும்.’’ (தானியேல் 2:40)
தானியேல் தீர்க்கதரிசன புத்தகத்தின்படி ரோம சாம்ராஜ்ஜியத்தின் தன்மைகளை நாம் பின்வருமாறு எடுத்துக்கொள்ளலாம்.
1) மகாபலத்த ராஜ்ஜியம்:
இதுவரை வந்து சென்ற எல்லா ராஜ்ஜியங்களைக் காட்டிலும், ரோம் மகாபலத்த சாம்ராஜ்ஜியம் என்பதை இந்த புத்தகத்தில் சொல்ல முடியாத அளவிற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. அது முழுக்க முழுக்க வரலாறாகும். இதன் பலத்தைக் குறிக்கும் விதமாக ஆண்டவர் ஒருசில வசனங்களிலேயே ஏராளமான வார்த்தைகளைக் குறிப்பிட்டுள்ளார். ‘கெடியும், பயங்கரமும், மகாபலத்ததும் (Dreadful, terrible and strong exceedingly)’, ‘நொறுக்கிப் பட்சித்தது’, ‘இரும்பைப் போல உரமானது’ என்ற வார்த்தைகள் மூலம் அது தான் இதுவரை இருந்த ராஜ்ஜியங்களில் கொடூரமானதும், தனக்கு எதிர்த்து நிற்கிறவர்களை ஒன்றுமில்லாமல் நிர்மூலமாக்குகிறதுமான ராஜ்ஜியமாக இருக்கும் என்பதை அறிந்துகொள்ளலாம்
2) மற்ற உலோகங்களோடு ஒப்பீடு
இரும்பானது பொன், வெள்ளி, வெண்கலம் போன்ற உலோகங்களோடு ஒப்பிடும்போது விலைமதிப்பில் குறைவானது;ஆனால் இந்த மற்ற விலைமதிப்புள்ள உலோகங்கள் எல்லாவற்றையும் நொறுக்கிப்போடும் அளவிற்கு வல்லமை வாய்ந்தது. ‘மகிமையில் குறைந்த ஆனால் பராக்கிரமத்தில் மிக உயர்ந்த ராஜ்ஜியம்’ என்பது தான் இதன் அர்த்தம் ஆகும். பரிசுத்த வேதத்தின் தீர்க்கதரிசனங்களின் படி இதற்குப் பின்னால் பூமியில், மனிதனால் ஆளப்படும் வல்லமை வாய்ந்த வேறொரு ராஜ்ஜியம் எழும்பப்போவதாக எங்கும் சொல்லப்படவில்லை.
3) வேற்று உருவமாயிருந்த ராஜ்ஜியம்
ரோம ராஜ்ஜியம் ‘இரும்பு பற்கள், இதின் தலையில் தோன்றும் பத்து கொம்புகள், காலாகிய இதிலிருந்து பிரியும் இரும்பும் களிமண்ணும் கலந்த பாதங்கள்’ என்று இதுவரை இருந்த மற்ற ராஜ்ஜியங்களைப் பார்க்கிலும் வித்தியாசமான ஒரு ராஜ்ஜியமாக இருந்தது என்று வேதம் சொல்கிறது.
ஆச்சரியப்படவைத்த மிருகம்
இந்த தரிசனங்களின்படி தானியேலின் நாலாம் ராஜ்ஜியமான, ஆனால் யோவானின் ஆறாம் ராஜ்ஜியமான ரோம், சாம்ராஜ்ஜியமாக உருவெடுத்து உலகின் மற்ற எல்லா ஆளுகைகளையும் தன் காலின் கீழ்போட்டு நொறுக்கி, மிகப்பெரும் சாம்ராஜ்ஜியமாக கி.மு 166 முதல் உருவெடுத்தது. இந்த மிருகத்தின் மேல் தானியேலுக்கு அதிக ஈடுபாடு இருந்ததற்கு காரணம், இந்த மிருகமும், இதன் பத்து கொம்புகளின் நடுவிலிருந்து தோன்றிய ‘சின்னக்கொம்பும்’ தான். இது தான் பூமியின் பரிசுத்தவான்களை, இயேசுவின் பிள்ளைகளைக் கொடுமைப்படுத்தி இரத்தம் சிந்த வைத்தது.
‘’அப்பொழுது மற்றவைகளையெல்லாம் பார்க்கிலும் வேற்றுருவும் கெடியுமுள்ளதுமாய், இருப்புப் பற்களும், வெண்கல நகங்களுமுடையதாய் நொறுக்கிப் பட்சித்து, மீதியானதைத் தன் கால்களால் மிதித்துப்போட்டதுமாயிருந்த நாலாம் மிருகத்தைக் குறித்தும், அதின் தலைமேலுள்ள பத்துக்கொம்புகளைக்குறித்தும் தனக்கு முன்பாக மூன்று கொம்புகள் விழுந்துபோக எழும்பினதுமாய், கண்களையும் பெருமையானவைகளைப் பேசும் வாயையுமுடையதுமாய், மற்றவைகளைப்பார்க்கிலும் பருமனாகத் தோன்றினதுமாயிருந்த அந்த வேறே கொம்பைக்குறித்தும், அவற்றின் பொருளை அறிய மனதாயிருந்தேன்.’’ (தானியேல் 7:19&20)
‘’இந்தக் கொம்பு பரிசுத்தவான்களோடே யுத்தம்பண்ணி அவர்களை மேற்கொண்டது என்று கண்டேன். (தானியேல் 7:22)
தானியேலைப் போலவே யோவானையும் ஆச்சரியப்பட வைத்த ஒரு மிருகத்தை வெளிப்படுத்தின விசேஷத்திலே இயேசு அவருக்கு வெளிப்படுத்தியுள்ளார். அவர் ஆச்சரியப்பட்டு பார்த்ததற்கும் இதே காரணம் தான்.
‘’ஆவிக்குள் என்னை வனாந்தரத்திற்குக் கொண்டுபோனான். அப்பொழுது ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையும் உடையதும் தூஷணமான நாமங்களால் நிறைந்ததுமான சிவப்புநிறமுள்ள மிருகத்தின்மேல் ஒரு ஸ்திரீ ஏறியிருக்கக் கண்டேன். அந்த ஸ்திரீ பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும், இயேசுவினுடைய சாட்சிகளின் இரத்தத்தினாலும் வெறிகொண்டிருக்கிறதைக் கண்டேன்; அவளைக் கண்டு நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்.’’ (வெளி 17:3&6)
இதில் ஒரு ஸ்திரீ மற்றும் அவளை சுமக்கிற மிருகம் என இரண்டு விதமாக யோவானுக்கு வெளிப்படுத்தப்பட்டது. அப்படியானால் இந்த மிருகம் யார்? இதற்கான விடை நேரடியாகவே வெளி 13 ஆம் அதிகாரத்தில் ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டது. ஸ்திரீ என்பது சபையைக் குறிக்கும். இதைப்பற்றி நாம் பின்னால் தனி அத்தியாயமாகப் பார்க்க இருக்கிறோம். (பார்க்க அத்தியாயம் 18)
‘‘பின்பு நான் கடற்கரை மணலின்மேல் நின்றேன். அப்பொழுது சமுத்திரத்திலிருந்து ஒரு மிருகம் எழும்பிவரக் கண்டேன்; அதற்கு ஏழு தலைகளும் பத்துக்கொம்புகளும் இருந்தன; அதின் கொம்புகளின் மேல் பத்து முடிகளும், அதின் தலைகளின்மேல் தூஷணமான நாமமும் இருந்தன. மேலும், பரிசுத்தவாங்களோடு யுத்தம்பண்ணி அவர்களை ஜெயிக்கும்படி அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டதுமல்லாமல், ஒவ்வொரு கோத்திரத்தின்மேலும் பாஷைக்காரர் மேலும் ஜாதிகள் மேலும் அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டது.’’ (வெளி 13:1,7)
படம் 23: யோவான் கண்ட முதல் மிருகம்
இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் . தானியல் மற்றும் வெளிப்படுத்தலில் சொல்லியிருக்கிற இந்த மூன்றும் ஒரே மிருகத்தை அல்லது ஒரே ராஜ்ஜியத்தைக் குறிக்கிறது. ஏனென்றால் இந்த மூன்றுவிதமாக சொல்லப்பட்ட மிருகம்/ராஜ்ஜியம் கீழ்காணும் ஒற்றுமைகளை பெற்றிருக்கிறது.
- பத்துகொம்புகளை உடையதாயிருந்தது
- பரிசுத்தவான்களோடு யுத்தம் பண்ணியது
- அவர்களின் இரத்தத்தின் மேல் வெறியாய் இருந்தது
- தானியேல் எப்படி ‘சமுத்திரத்திலிருந்து’ இந்த மிருகங்களை எழும்பி வரக் கண்டாரோ, அதைப்போலவே யோவானும் ‘சமுத்திரத்திலிருந்து / தண்ணீர்கள் மேல்’ ஒரு மிருகம் எழும்பிவரக் கண்டேன் என்று சொல்லியிருக்கிறார்.
குறிப்பாக ‘இயேசுவினுடைய சாட்சிகளின் இரத்தம்’ என்று வெளிப்படுத்தலில் கூறப்பட்டதன் மூலம் இந்த மிருகம்/ராஜ்ஜியம், இயேசுவின் காலத்தில் இருந்த ஒன்றாகவும், அவர் பரத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பின்பு அவரது சீடர்களைத் துன்புறுத்திய ராஜ்ஜியமென்றும் தெளிவாகின்றது. இது ரோம சாம்ராஜ்ஜியம் என்று நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை.
சமுத்திரம் என்ற சங்கேதமொழி
நான் இரட்சிக்கப்பட்ட காலத்தில் இந்தப் பகுதிகளை வாசிக்கும்போது, ஜீராசிக்பார்க் போன்ற திரைப்படங்களில் வருவதுபோல இந்த மிருகங்கள் தண்ணீரிலிருந்து எழும்பி வந்து மக்களை கொன்றுகுவிக்கும் போல, என்று கற்பனைக் குதிரையை ஓட விட்டது உண்டு. ஒருவேளை நீங்களும் அப்படி கற்பனை செய்திருக்கலாம். அப்படியல்ல பிரியமானவர்களே; இவைகள் யாவும் பூமியின் ராஜ்ஜியங்களைப் பற்றியும், அந்திகிறிஸ்துவின் ராஜ்ஜியத்தைப் பற்றியதுமான பல இரகசியங்களை உள்ளடக்கிய தீர்க்கதரிசனங்கள். இது இயேசுவை விசுவாசித்து அவரை நேசித்து நடக்கும் நமக்கு மட்டுமே புரியும் சங்கேத பாஷைகள் நிறைந்ததாகும். சமுத்திரம் மற்றும் தண்ணீர் என்பது ஜனத்திரள் அல்லது மக்கள் கூட்டம் என்ற தீர்க்கதரிசன அர்த்தமாகும்.
‘‘ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் வந்து என்னோடே பேசி: நீ வா, திரளான தண்ணீர்கள் மேல் உட்கார்ந்திருக்கிற மகா வேசியோடே பூமியின் ராஜாக்கள் வேசித்தனம் பண்ணினார்கள். அவளுடைய வேசித்தனமாகிய மதுவால் பூமியின் குடிகளும் வெறிகொண்டிருந்தார்களே; பின்னும் அவன் என்னை நோக்கி: அந்த வேசி உட்கார்ந்திருக்கிற தண்ணீர்களைக் கண்டாயே; அவைகள் ஜனங்களும் கூட்டங்களும் ஜாதிகளும் பாஷைக்காரருமாம்.’’ (வெளி 17:1,15)
அப்போதைய காலக்கட்டத்தில் ஜனத்திரள் நிறைந்த நிலப்பரப்பு அல்லது உலகம் என்பது ஐரோப்பிய கண்டம் மத்தியகிழக்கு மற்றும் மெசபடோமிய (தற்போதைய அரபு) நாடுகளைக் குறிக்கும் என்று முதல் சில அத்தியாயங்களிலேயே நான் விளக்கமாகக் குறிப்பிட்டுள்ளேன். எனவே தானியேலின் இந்த ‘இரும்பாலான கால் மற்றும் பயங்கரமான மிருகம்’ என்பது சீசர்களால் ஆளப்பட்ட முதல் பாகமாகிய ‘ஒருங்கிணைந்த ரோம சாம்ராஜ்ஜியத்தைக்’ குறிக்கிறது.
ஆனால் யோவானுக்கு இயேசு தரிசனங்களில் வெளிப்படுத்தின ராஜ்ஜியங்களைப் பற்றிய காரியங்கள், அவர் பத்மு தீவிலிருந்து எழுதிய கி.பி 96 க்கு பின்வரும் ராஜ்ஜியங்களைக் குறிப்பதாகும். அவர் எழுதும்போது இருந்த காலகட்டத்தில் ஒருங்கிணைந்த ரோம சாம்ராஜ்ஜியம் ஆளுகையில் இருந்ததால் அதனைப் பற்றி சில காரியங்களையும், அவரது காலத்திற்குப் பின்பு வரவிருக்கும் பத்து ராஜ்ஜியங்களாக உடைந்த மற்றும் அதிலிருந்து எழும்பின அந்திகிறிஸ்துவின் நேரடி ராஜ்ஜியத்தையும் பற்றி மிக விளக்கமாகவும் தரிசனங்களில் இயேசு வெளிப்படுத்தியுள்ளார்.
இரும்பும் களிமண்ணும் கலந்த கலவை
தானியேல் கண்ட சிலையில் இரும்பாலான கால்களைத் தொடர்ந்து, பாதங்களும், கால்விரல்களும் இரும்பும் களிமண்ணும் கலந்த கலவையாகப் பார்க்கிறார்.
‘‘பாதங்களும் கால்விரல்களும் பாதிகுயவனின் களிமண்ணும், பாதி இரும்புமாயிருக்க நீர் கண்டீரே, அந்த ராஜ்யம் பிரிக்கப்படும்; ஆகிலும் களிமண்ணோடே இரும்பு கலந்திருக்க நீர் கண்டபடியே இரும்பினுடைய உறுதியில் கொஞ்சம் அதிலே இருக்கும். கால்விரல்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணுமாயிருந்தது என்னவென்றால், அந்த ராஜ்யம் ஒருபங்கு உரமும் ஒருபங்கு நெரிசலுமாயிருக்கும்.’’ (தானியேல் 2:41,42)
படம் 24: சிலை தரிசனத்தின் கால்கள்
நான் ஏற்கனவே சொன்னது போல ஒருங்கிணைந்த ரோம சாம்ராஜ்ஜியம் சில அரசியல் காரணங்களுக்காக இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இதில் மேற்கு ரோம ராஜ்ஜியம் பிரிக்கப்பட்ட 200 வருடங்களுக்குள்ளே அழிவைக் கண்டு 10 ராஜ்ஜியங்களாக உடைந்தது. எனவே இந்த மேற்கு ரோம ராஜ்ஜியம் தான் பாதம் மற்றும் விரல்களின் ‘களிமண்’ கலந்த பகுதி. இந்த ராஜ்ஜியம் தான் ஐந்தாம் நூற்றாண்டு முதல் போப்புகளின் ஆதிக்கத்திற்குள் வந்தது. இதைக் கீழே பார்க்க இருக்கிறோம். இன்னொரு ராஜ்ஜியமான காண்ஸ்டாண்டிநோபிளைத் தலைமையாகக் கொண்ட கிழக்கு ரோம ராஜ்ஜியம் கி.பி 1453 வரை பல நூற்றாண்டுகளாக நிலைத்து நின்றது. எனவே இந்த கிழக்கு ரோம ராஜ்ஜியம் தான் பாதம் மற்றும் விரல்களின் ‘இரும்பாலான’ பகுதியாகும்.
- மேற்கு ரோம ராஜ்ஜியம் = களிமண் / ஒரு பங்கு நெரிசல் (நொறுங்கும் தன்மை)
- கிழக்கு ரோம ராஜ்ஜியம் = இரும்பு / ஒரு பங்கு உரமானது (வலிமையானது)
ஒட்டிக்கொள்ளாத ராஜ்ஜியங்கள்
இரண்டு ராஜ்ஜியங்களுமே கிறிஸ்தவத்தைத் தழுவிய ரோமப் பேரரசர்களால் ஆளப்பட்டாலும் அரசியல் மற்றும் மதரீதியான கொள்கைகளில் கடைசிவரை ஒத்துப்போகாமல் பிரிந்தே இருந்தன.
‘‘நீர் இரும்பைக் களிமண்ணோடே கலந்ததாகக் கண்டீரே, அவர்கள் மற்ற மனுஷரோடே சம்பந்தங்கலப்பார்கள்; ஆகிலும் இதோ, களிமண்ணோடே இரும்பு கலவாததுபோல அவர்கள் ஒருவரோடொருவர் ஒட்டிக்கொள்ளாதிருப்பார்கள்.’’ (தானியேல் 2:43)
இவர்கள் அப்போது ஆரம்பித்து, பல நூற்றாண்டுகளையும் கடந்து இன்றுவரை எப்படி ஒட்டிக்கொள்ளாதிருந்தார்கள் என்பதைப் பார்ப்போம்.
அட்டவணை 9: மேற்கு மற்றும் கிழக்கு ரோமசாம்ராஜ்ஜியத்தின் வேற்றுமைகள்
மேற்கு ராஜ்ஜியம்
கிழக்கு ராஜ்ஜியம்
ரோம் நகரைத் தலைநகராகக் கொண்டது
காண்ஸ்டாண்டிநோபிளைத் தலைநகராகக் கொண்டது. (பைசாந்திய ராஜ்ஜியம்)
போப்பாண்டவர்களே இதன் மதம் மற்றும் அரசியல் தலைவர்களாக இருந்தார்கள். ராஜாக்கள் ரப்பர் ஸ்டாம்ப் களாகவே இருந்தார்கள்.
ராஜாக்களே அரசியல் தலைவர்களாகவும், மதரீதியான கோட்பாடுகளை முடிவு செய்பவர்களாக இருந்தார்கள். போப்புகளின் தலைமையையும், தலையீட்டையும் எதிர்த்தார்கள்.
போப்பாண்டவர்களைக் கடவுளுக்கு இணையான, குற்றம் சாட்டப்பட முடியாத நபராகக் கருதினர்.
அப்படி ஏற்றுக்கொள்ளவில்லை
மரியாளை, ஆதாம் ஏவாளின் மூலபாவத்திற்கு உட்படாத தெய்வீகத் தாய் என்று நம்பி வழிபட்டனர்.
மரியாளை இயேசுவின் தாயாக, கடவுளால் தெரிந்துகொள்ளப்பட்ட பாத்திரமாக மட்டும் கருதினர்.
இவர்களது சபை ரோமன் கத்தோலிக்க சபை என்று அழைக்கப்பட்டனர்
இவர்களது சபை கிரேக்க ஆர்தோடாக்ஸ் சபை (Greek orthodox) என்று அழைக்கப்பட்டனர்.
இந்த சபையின் பாதிரியார்கள் திருமணம் செய்துகொள்வது மறுக்கப்பட்டது.
பாதிரியார்கள் அபிஷேகம் செய்யப்படுவதற்கு முன்பாக திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சபைகளின் ஆராதனை முறைகள் ‘லத்தீன்’ மொழியில் மட்டுமே நடத்தப்பட்டது. பைபிள் லத்தீனில் மட்டுமே அனுமதிக்கப்பட்டது.
ஆராதனைகள் அந்தந்த பிராந்திய மொழிகளில் நடத்தப்பட்டது.
இந்த சபையினர் ஏராளமான விக்கிரகங்களை ஆலயங்களில் நிறுவினர். வழிபடவும் செய்தனர்.
இவர்கள் ஏராளமான வரைபடங்களை ஆலயங்களில் வரைந்தனர்.
பைபிளை விட திருச்சபை சட்டமும், போப்பின் வார்த்தைகளும் முக்கியம் என வலியுறுத்தப்பட்டது. சூழ்நிலைகளுக்கு தகுந்தாற்போல சட்டதிட்டங்களை மாற்றினர்.
பைபிளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
இறந்த ஆத்துமாக்கள், உத்தரிக்கும் ஸ்தலம் (Purgatory place) என்ற இடத்தில் மீண்டும் பரிசுத்தமாக்கப்படும் என்ற படுமோசமான கொள்கையைப் போதித்தது.
உத்தரிக்கும் ஸ்தலம் இல்லை என்று வேதத்தின் அடிப்படையில் எதிர்த்தது.
இப்படியாக இந்த இரண்டு ரோம ராஜ்ஜியங்களும் ஒன்றோடொன்று கலவாமல் இருந்தார்கள். இந்த மேற்கு ரோம ராஜ்ஜியத்தின் ரோமன் கத்தோலிக்க சபையும் அதன் தலைவரான போப்புகளும், உன்னதமானவருக்கு விரோதமான காரியங்களைப் பேசி, பரிசுத்தவான்களைத் துன்புறுத்தியதால் இவர்களைப் பற்றி தான் தானியேலுக்கு 7 ஆம் அதிகாரத்தில் வெளிப்படுத்தப்பட்டது. இதிலிருந்து தான் ‘சின்னக்கொம்பாகிய’ அந்திகிறிஸ்துவின் ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியம் எழும்பியது. இந்த ராஜ்ஜியத்தின் காலத்தின் முடிவில் தான் இயேசு வெளிப்பட்டு அதை அழித்து நித்திய ராஜ்ஜியத்தை ஸ்தாபிப்பார் என்று நம் வேதம் மிகத்தெளிவாகச் சொல்கிறது.
‘‘அந்த (கடைசி ரோமன் கத்தோலிக்க) ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்’’ (தானியேல் 2:44)
‘‘ஆனாலும் நியாயசங்கம் உட்காரும்; அப்பொழுது முடிவுபரியந்தம் அவனைச் சங்கரிக்கும்படியாகவும் அழிக்கும்படியாகவும் அவனுடைய (சின்னகொம்பாகிய போப்) ஆளுகையை நீக்கிப்போடுவார்கள்.’’ (தானியேல் 7:26)
உடைந்த மேற்கு ரோம சாம்ராஜ்ஜியம்
ரோம சாம்ராஜ்ஜியமாகிய பயங்கரமான மிருகத்திலிருந்து எழும்பி வந்த ‘பத்து கொம்புகள்’ என்பது மேற்கு ரோம சாம்ராஜ்ஜியத்திலிருந்து பிரிந்த ‘பத்து சிறு ராஜ்ஜியங்களாகும்’. இவை தனியாக எழும்பியவைகள் அல்ல; ரோம சாம்ராஜ்ஜியத்தின் நீட்சியே.
‘‘அவன் சொன்னது: நாலாம் மிருகம் பூமியிலே உண்டாகும் நாலாம் ராஜ்யமாம்; அது எல்லா ராஜ்யங்களைப்பார்க்கிலும் வேறாயிருந்து, பூமியை எல்லாம் பட்சித்து, அதை மிதித்து, அதை நொறுக்கிப்போடும். அந்தப் பத்துக்கொம்புகள் என்னவென்றால், அந்த ராஜ்யத்திலே எழும்பும் பத்து ராஜாக்களாம்; அவர்களுக்குப்பின்பு வேறொருவன் எழும்புவான்; அவன் முந்தினவர்களைப்பார்க்கிலும் வேறாயிருந்து, மூன்று ராஜாக்களைத் தாழ்த்திப்போட்டு,….’’ (தானியேல் 7:23,24)
மேலும் இந்த பத்து ராஜாக்கள் எழும்பிய பின்னர் அவர்களில் மூன்று ராஜாக்களைத் தள்ளிவிட்டு ‘வேறொருவன் எழும்புவான்’ என்றும் அவன் தான் சின்னக்கொம்பு என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
‘‘அந்தக் கொம்புகளை நான் கவனித்திருக்கையில், இதோ, அவைகளுக்கு இடையிலே வேறொரு சின்ன கொம்பு எழும்பிற்று; அதற்கு முன்பாக முந்தினகொம்புகளில் மூன்று பிடுங்கப்பட்டது; இதோ, அந்தக் கொம்பிலே மனுஷகண்களுக்கு ஒப்பான கண்களும் பெருமையானவகளைப் பேசும் வாயும் இருந்தது.’’ (தானியேல் 7:8)
இந்த சின்னக்கொம்பு தான் நமது கதைக்களத்தின் அதிமுக்கிய வில்லன் என்பதாலும், அவனைப்பற்றி நாம் நிறைய தெரிந்துகொள்ள வேண்டியிருப்பதாலும், இந்த பத்துகொம்புகளாகிய பத்து ராஜாக்களையும், சின்னக்கொம்பாகிய அந்திகிறிஸ்துவையும் நாம் அடுத்து தனி அத்தியாயமாகப் பார்க்க இருக்கிறோம். இந்த வசனங்கள், மேற்கு ரோம சாம்ராஜ்ஜியமானது கி.பி 476 ல் பத்து ராஜ்ஜியங்களாக உடைந்ததை நமக்குத் தெளிவாக உணர்த்துகிறது.
மதமாற்றமும் மனமாற்றமும்
இதற்கு இடைப்பட்ட காலத்தில் (கி.பி 285-476) ரோமப்பேரரசின் அரசாங்க மதமாக கிறிஸ்தவம் (கான்ஸ்டாண்டைன் மூலம்) மாறியிருந்து அநேகர் கிறிஸ்தவர்களாக மாறியதால், ஏராளமான ஆலயங்கள் கட்டப்பட்டு கத்தோலிக்க கிறிஸ்தவம் உலகமெங்கிலும் பரவியிருந்தாலும், இந்த சம்பவங்கள் தரிசனங்களில் முக்கியத்துவம் பெறவில்லை. இத்தனை சம்பவங்களை விளக்கமாக சொல்லிய ஆண்டவர் உலகில் பெரும்பாலானோர் கிறிஸ்தவத்தைத் தழுவியதை ஏன் வெளிப்படுத்தவில்லை என்று உங்களுக்கு சந்தேகம் வரவில்லையா? கண்டிப்பாக வரவேண்டும். ஆனால் நாம் எதிர்பார்ப்பதற்கு மாறாக ஆண்டவர் இந்த ராஜ்ஜியம்/சின்னக்கொம்பு ‘பரிசுத்தவான்களைத் துன்புறுத்தியது; கொன்று அழித்தது; இயேசுவின் சாட்சிகளுடைய இரத்தத்தில் வெறிகொண்டது; பரிசுத்தவான்களோடு யுத்தம் செய்து அவர்களை மேற்கொண்டது’ என்று தீர்க்கதரிசனமாக சொல்லியிருக்கிறார்.
இதன் மூலம் இந்த கிறிஸ்தவ மத மாற்றம் என்பது, வெறும் மதமாற்றமாக இருந்ததே ஒழிய, மனமாற்றமாக இல்லை என்பதையும், சிலை வழிபாட்டிலிருந்து வெளிவந்த கிறிஸ்தவமாகவும் இல்லை என்று அறிந்துகொள்ளலாம். ஏனென்றால் கிறிஸ்தவத்தைப் பின்பற்றுவதாக சொல்லிகொண்டு, தேவன் அடியோடு வெறுக்கும் விக்கிரக வணக்கத்தை பூமியின் குடிகள் தொடரும்படி வழிநடத்திய அந்திகிறிஸ்துவாகிய சின்னக்கொம்பின் ராஜ்ஜியம் இதுதான். இயேசுவை உண்மையாகப் பின்பற்றி வாழ்ந்த சீடர்களைத் துன்புறுத்தியதும் இதுதான். இதை அடுத்த அத்தியாயத்தில் ‘வசன ஆதாரத்தோடு’ பார்க்க இருக்கிறோம்.
மிருகங்கள்: ஒரு ஒப்பீடு
தானியேல் 7 ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள நாலாம் மிருகம், வெளிப்படுத்தல் 12,13 மற்றும் 17 ஆம் அதிகாரங்களில் சொல்லப்பட்டுள்ள மிருகங்கள் ஒரே ராஜ்ஜியத்தை தான் குறிக்கின்றன என்பதை நீங்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் அவைகளை ஒப்பிட்டு அத்தியாயம் 19 ல் அட்டவணைப்படுத்தியுள்ளேன். இவைகளின் நிறைவேறுதலையும் சுருக்கமாக அட்டவணையில் கொடுத்துள்ளேன். முதல் முறை நீங்கள் இதை வாசிக்கும்போது புரிவதில் சிரமம் இருக்கலாம். நீங்கள் ஒருமுறை இந்த அதிகாரங்களை பரிசுத்த வேதத்தில் வாசித்துவிட்டு, திரும்ப இந்த அட்டவணையை வாசித்தால் ஓரளவு புரியும். பின்வரும் பெரும்பாலான அத்தியாயங்கள் இவற்றை அடிப்படையாகக் கொண்டே இருப்பதால் இந்தப் புத்தகத்தை நீங்கள் முடிக்கும் வேளையில் நிச்சயமாகத் தெளிவுபெற்றுவிடுவீர்கள் என்று கர்த்தருக்குள் விசுவாசிக்கிறேன். இதில் ஒவ்வொரு வார்த்தையும் முக்கியம். இதில் வரும் சங்கேத வார்த்தைகளுக்கான வேதவிளக்கங்களை ஆங்காங்கே சம்பந்தப்பட்ட அத்தியாயங்களில் கொடுத்துள்ளேன்.
இந்த அட்டவணையிலிருந்து அந்திகிறிஸ்துவாகிய சாத்தானின் ராஜ்ஜியத்தைப் பற்றி ஆண்டவர் சொல்லிவைத்திருக்கிறவைகளை சில விளக்கங்கள் மூலம் பார்க்கலாம்.
- ரோம சாம்ராஜ்ஜியம் தான் உலக வல்லரசுகளில் பலம் வாய்ந்தது மட்டுமல்லாமல் இயேசுவின் இரண்டாம் வருகை மட்டும் ஏதாவது ஒரு வடிவத்தில் நீண்ட காலம் நிலைத்துநிற்கும்.
- பூமியின் பெரும்பாலான ஜனங்கள் அந்திகிறிஸ்துவாகிய ரோமன் கத்தோலிக்க சாம்ராஜ்ஜியத்தின் வஞ்சகங்களுக்கு, விக்கிரக வணக்க வழிபாடுகளுக்கு கீழ்படிய தங்களை ஒப்புக்கொடுப்பார்கள். இன்றுவரை உலகின் மிகப்பெரிய மக்கள்தொகையைக் கொண்டது ரோமன் கத்தோலிக்க சபை. இதைப்பார்த்து யோவான் ஆச்சரியப்பட்டதில் தவறு இல்லையே.
- ஏழு தலைகளைக் கொண்ட மிருகம் என்பது ஏழு ராஜ்ஜியங்களை சுமந்த சாத்தானின் ராஜ்ஜியம் என்று அர்த்தம். ஏழு தலைகளின் மேல் முடி என்பது ராஜாக்களால் (சீசர்) ஆளப்பட்ட ‘ஒருங்கிணைந்த ரோம சாம்ராஜ்ஜியம்’. பத்து கொம்புகள் மேல் முடி என்பது மேற்கு ரோம், பத்து ராஜ்ஜியங்களாகப் பிரிந்தபின்பு பத்து ராஜாக்களால் ஆளப்பட்டதைக் குறிக்கிறது.
- பத்து கொம்புகளின் நடுவிலிருந்து எழும்பிய ‘சின்னக்கொம்பு’ மற்றும் மிருகத்தின் மீது ஏறியிருந்த வேசியின் ஆடை அணிந்த ஸ்திரீ, இந்த இரண்டும் ரோம சாம்ராஜ்ஜியத்தின் மீது ஏறி ஆட்சியைப் பிடித்த கத்தோலிக்க சபையையும், அதன் தலைவரான போப்புகளையும் குறிக்கும்.
- இந்த இரண்டாம் வடிவிலான ரோம சாம்ராஜ்ஜியம் தான் இயேசுவின் உண்மை சீடர்களை 1260 வருடம் துன்புறுத்தியது என்பதற்கான ஆதாரங்களோடு அந்தந்த அத்தியாயங்களில் விளக்க உள்ளேன்.
- ஒருங்கிணைந்த ரோமப்பேரரசு எப்படி விக்கிரக வணக்கத்தை ஆதரித்ததோ அதுபோலவே போப்புகள் தங்களை தேவனின் இடத்தில் வைத்து, சபையிலும் விக்கிரகங்களை வணங்கவைத்து தேவனுடைய நாமத்தை தூஷிக்க செய்தார்கள். வஞ்சிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் இன்றுவரை அதை நியாயப்படுத்திப் பின்பற்றுகிறார்கள்.
- இந்த Papacy என்றழைக்கப்படும் ரோமன் கத்தோலிக்க திருச்சபை, பூமியை 1260 வருடங்கள் ஆட்சி செய்து சுவிசேஷமும், வேதவசனமும் பரவவிடாமல் பரிசுத்தவான்களை எவ்வாறு துன்பப்படுத்தி கொலை செய்தது என்பதை யோவானின் தரிசனங்களின் அடிப்படையில் விளக்கமாகப் பார்க்க இருக்கிறோம்.
- இந்த ராஜ்ஜியம் முற்றிலும் அழிக்கப்பட்டு இதன் முடிவில் தான் இயேசுவின் இரண்டாம் பகிரங்க வருகையும் இருக்கும் என்று இந்த அதிகாரங்கள் தெளிவாக சொல்கின்றன. இதில் எங்கும் சபை ரகசியமாக எடுத்துக்கொள்ளப்படும் என்று மறைமுகமாகக் கூட சொல்லப்படவில்லை. அந்திகிறிஸ்து கடைசி ஏழு வருடங்களில் தான் தோன்றுவான் என்று தவறாகப் புரிந்துகொள்பவர்களை, அதற்கு முன்பு சபை ரகசியமாக எடுத்துக்கொள்ளப்படும் என்று நம்ப வைப்பது எளிதான ஒன்று தானே?
இந்த ரோம சாம்ராஜ்ஜியம் ஆட்சியில் இருக்கும்போது தான் இயேசு உலகில் வந்தார். அவரை சிலுவையில் கொன்றதால் இந்த சாம்ராஜ்ஜியமும் அதன் வழித்தோன்றல்களும் தான் அந்திகிறிஸ்துவின் சாம்ராஜ்ஜியமாக இருக்கமுடியும். இயேசு உலகில் வாழ்ந்த காலமாகிய கி.மு 4 முதல் கி.பி 30 வரையிலான காலங்களைப் பற்றி சுவிசேஷங்கள் சொல்வதாலும், அதற்குப் பின்பு வரும் காலங்களைப் பற்றி அப்போஸ்தலர் நடபடிகள் சொல்வதாலும், எருசலேமின் கி.பி 70 ஆம் வருட நிர்மூலத்தைப் பற்றி இயேசு தீர்க்கதரிசனமாக சொல்லியிருப்பதாலும், அடுத்த சில அத்தியாயங்களில் முதல் நூற்றாண்டுகளில் நடைபெற்ற சம்பவங்களையும், சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்களையும் வேத வசனங்களின் அடிப்படையில் விரிவாகப் பார்க்க இருக்கிறோம்.