மேதிய-பெர்சிய சாம்ராஜ்ஜியம் (கி.மு 539-கி.மு 334)

பாபிலோனை மேதியர்களின் வசம் ஒப்புக்கொடுப்பேன் என்று கர்த்தர் தீர்க்கதரிசிகளுக்கு முன்னறிவித்திருந்தார் என்று கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். பாபிலோனைத் தொடர்ந்து மேதிய-பெர்சிய சாம்ராஜ்ஜியம் தான் வரும் என்று தானியேலின் தரிசனங்கள் நமக்கு உறுதிப்படுத்துகின்றன. தரிசனங்கள் மட்டுமல்லாது மேதிய-பெர்சிய சாம்ராஜ்ஜியம் பாபிலோனை பிடித்த பின்பும் கூட, அவர்கள் அரசவையிலும் தானியேல் இருந்தார் என்பது, தானியேல் 6 மற்றும் 9 லிருந்து 12 ஆம் அதிகாரம் வரை பரிசுத்த ஆவியானவரால் எழுதப்பட்டுள்ளது. இந்த சாம்ராஜ்ஜியம் மேதியா மற்றும் பெர்சியா என்ற இரண்டு ராஜ்ஜியங்களின் கூட்டணியாகும். பாபிலோனின் கடைசி ராஜாவாகிய பெல்ஷாத்சாரின் கதையை முடித்துவிட்டு பெர்சிய மாமன்னன் கோரேசின் பிரபுவான மேதியனாகிய தரியு பாபிலோனைக் கைப்பற்றினான்.

‘‘அன்று இராத்திரியிலே கல்தேயரின் ராஜாவாகிய பெல்ஷாத்சார் கொலைசெய்யப்பட்டான். மேதியனாகிய தரியு தன் அறுபத்திரண்டாம் வயதில் ராஜ்யத்தைக்கட்டிக்கொண்டான்.’’ (தானியேல் 5:30,31)

இரு ராஜ்ஜியங்களின் தொடர்பு

மேதியா மற்றும் பெர்சியா என்ற இரு ராஜ்ஜியங்களும் பாபிலோனை ஜெயிப்பதற்கு மட்டுமே கூட்டணி போட்டவைகள் அல்ல. அவை ஒரு தாய் வயிற்றில் பிறந்த இரட்டையர்களைப் போல. இவர்களது பூர்வீகம் இன்றைய ஈரான் மற்றும் அதன் கிழக்குப் பகுதியாகும். சுமார் 4000 வருடங்களுக்கு முன்னர் இவர்கள் மூன்று குழுக்களாகப் பிரிந்தனர். பின்பு சிலகாலங்கள் ஒருவர் மேல் ஒருவர் ஆதிக்கம் செலுத்தி கடைசியில் பாபிலோனைப் பிடிக்கும் காலத்தில் கோரேசினால் ஒருங்கிணைக்கப்பட்டனர்.

அந்த மூன்று குழுக்களாவன

  1. இந்தியாவிற்கு வந்த ஆரியர்கள்
  2. கரீபியன் கடலுக்குத் தெற்குப்பகுதியில் குடியேறி மேதியாவை ஸ்தாபித்தவர்கள்
  3. பாரசீக வளைகுடாவிற்கு கிழக்குப்பகுதியில் குடியேறி பெர்சியாவை ஸ்தாபித்தவர்கள்

சிலை சொப்பனம்

நேபுகாத்நேச்சாரின் சிலையைப் பற்றிய சொப்பனத்தில் பொன்னாலான தலை பாபிலோன் என்று பார்த்தோம். அதற்குக் கீழாக வெள்ளியாலான மார்பும், புயங்களும் அந்த சிலைக்கு இருந்ததாம்.

‘‘அந்தச் சிலையின் தலை பசும்பொன்னும், அதின் மார்பும் அதின் புயங்களும் வெள்ளியும், அதின் வயிறும் அதின் தொடையும் வெண்கலமும்,’’ (தானியேல் 2:32)

‘‘உமக்குப்பிறகு உமக்குக் கீழ்த்தரமான(Inferior)வேறொரு ராஜ்யம் தோன்றும்;பின்பு பூமியையெல்லாம் ஆண்டுகொள்ளும் வெண்கலமான மூன்றாம் ராஜ்யமொன்று எழும்பும்.’’ (தானியேல் 2:39)

பாபிலோன் சாம்ராஜ்ஜியத்தைப் பற்றிய அத்தியாயத்திலே நாம் பார்த்தபடி, பாபிலோனைவிட மகிமையில் குறைந்த, ஆனால் அதிக வல்லமை கொண்ட ராஜ்ஜியமாக வந்ததுதான் மேதிய-பெர்சிய சாம்ராஜ்ஜியம். இதில் இரண்டு புயங்களில் (Arms) ஒன்று மேதியாவையும், மற்றொன்று பெர்சியாவையும் குறிக்கும்.

தானியேலின் தரிசனம்: கரடி

நேபுகாத்நேச்சாருக்கு சிலைகளின் பாகங்கள் மூலமாகக் காண்பிக்கப்பட்ட அதே ராஜ்ஜியங்கள் தான், தானியேலுக்கு நான்குவித மிருகங்களாகக் காண்பிக்கப்பட்டது என்று ஏற்கனவே முந்தைய அத்தியாயங்களில் பார்த்தோம். இந்த கரடியைப் பற்றிய சங்கேதபாஷைகளின் விளக்கத்தை இப்போது பார்ப்போம்.

‘‘பின்பு, கரடிக்கு ஒப்பாகிய வேறே இரண்டாம் மிருகத்தைக் கண்டேன்; அது ஒரு பக்கமாய்ச் சாய்ந்துநின்று, தன் வாயின் பற்களுக்குள்ளே மூன்று விலாவெலும்புகளைக் கவ்விக்கொண்டிருந்தது; எழும்பி வெகு மாம்சம் தின்னென்று அதற்குச் சொல்லப்பட்டது.’’ (தானியேல் 7:5)

மிருகம் என்பது ராஜ்ஜியம் என்றும், காற்றுகளின் முடிவில் என்பது யுத்தங்களின் முடிவில் என்றும் அர்த்தம் என்று பார்த்தோம். இதில் இரண்டாம் யுத்தத்தின் (காற்றின்) முடிவில் தோன்றிய ராஜ்ஜியம் தான் இது.

படம் 13: தானியேல் கண்ட கரடி தரிசனம்

ஒரு பக்கமாய் சாய்ந்து நின்றது

இந்த சாம்ராஜ்ஜியம் இரண்டு ராஜ்ஜியங்களின் கலவையாகும். இதில் மேதிய ராஜ்ஜியம், பெர்சிய ராஜ்ஜியத்தை விட சற்று பலம் குறைந்ததாக இருந்தது. ஆனால் இரண்டும் சேர்ந்தபோது வலிமை பெற்றது. அதாவது கரடியின் ஒருபக்கத்திலுள்ள இரண்டு கால்கள் தான் அந்த மிருகத்தை முழுவதும் தாங்கியிருந்தது போல, பெர்சிய ராஜ்ஜியத்தின் (கோரேஸ்) பலத்தினால் மேதிய-பெர்சிய சாம்ராஜ்ஜியம் உலகை வசப்படுத்தியது.

வாயின் பற்களுக்குள்ளே மூன்று விலாஎலும்புகள்

இந்த சாம்ராஜ்ஜியம் இதற்கு முன் இருந்த பாபிலோன், மிச்ச மீதியாயிருந்த எகிப்து, மற்றும் லிடியா நாடுகளை வீழ்த்திவிட்டு வந்ததால் மூன்று எலும்புகளை வாயில் கவ்விக்கொண்டிருந்ததாக தரிசனத்தில் காண்பிக்கப்பட்டது. இப்படி மூன்று தேசங்களின் விலா எலும்பை உருவிய யுத்தங்களில் ஏராளமானோர் கொல்லப்பட்டதால் ‘எழுந்து வெகு மாம்சம் தின்னென்று அதற்கு சொல்லப்பட்டது’ என்று கூறப்பட்டுள்ளது.

இரண்டு கொம்புகளுள்ள ஆட்டுக்கடா

மேற்கண்ட தரிசனம் கண்டு, இரண்டு வருடம் கழித்து தானியேல் இன்னொரு தரிசனம் காண்கிறார். இந்த தரிசனம் மற்ற தரிசனங்கள் போல எல்லா ராஜ்ஜியங்களையும் பற்றி அல்லாமல், மேதிய-பெர்சியா மற்றும் அதற்குப் பின்பு வந்த கிரேக்க சாம்ராஜ்ஜியத்திற்கும் இடையில் நடந்த யுத்தத்தைப்பற்றிய தரிசனமாகும். நாம் அடுத்த அத்தியாயத்தில் இந்த யுத்தத்தைப் பற்றி பார்க்க இருக்கிறோம். இப்போது இந்த தரிசனத்தில் மேதிய-பெர்சிய ராஜ்ஜியத்தைப் பற்றி என்ன சங்கேத மொழியில் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை மட்டும் பார்ப்போம்.

‘‘நான் என் கண்களை ஏறெடுத்துப்பார்த்தேன்; இதோ, இரண்டு கொம்புகளுள்ள ஒரு ஆட்டுக்கடா ஆற்றிற்கு முன்பாக நின்றது; அதின் இரண்டு கொம்புகளும் உயர்ந்தவைகளாயிருந்தது; ஆகிலும் அவைகளில் ஒன்று மற்றதைப்பார்க்கிலும் உயர்ந்திருந்தது; உயர்ந்தகொம்பு பிந்தி முளைத்தெழும்பிற்று. அந்த ஆட்டுக்கடா மேற்கும் வடக்கும் தெற்கும் பாய்கிறதைக் கண்டேன்; ஒரு மிருகமும் அதின் முன்னே நிற்கக் கூடாதிருந்தது; அதின் கைக்குத் தப்புவிப்பாருமில்லை; அது தன் இஷ்டப்படியே செய்து வல்லமைகொண்டது.’’ (தானியேல் 8:3,4)

ஏற்கனவே சிலையின் வெள்ளி மார்பாகவும், கரடியாகவும் சொல்லப்பட்ட இதே ராஜ்ஜியம் தான் இந்த சொப்பனத்தில் இரண்டு கொம்புகளுள்ள ஆட்டுக்கடா என்று சொல்லப்பட்டுள்ளது. இது என்னுடைய கணிப்பு அல்ல; வேதபுத்தகத்திலே கர்த்தர் தானியேல் மூலமாக இதை வெளிப்படுத்தியுள்ளார்.

‘‘நீ கண்ட இரண்டு கொம்புள்ள ஆட்டுக்கடா மேதியா பெர்சியா தேசங்களின் ராஜாக்கள்;’’ (தானியேல் 8:20)

படம் 14: தானியேல் கண்ட ஆட்டுக்கடா வெள்ளாட்டுக்கடா தரிசனம்

இந்த தரிசனத்தின் விளக்கத்திலே மேதிய-பெர்சிய சாம்ராஜ்ஜியத்தை, முந்தைய தரிசனங்களை விட மிகத்தெளிவாக கர்த்தர் வெளிப்படுத்தியுள்ளார்.

  • அதின் இரண்டு கொம்புகளும் உயர்ந்தவைகளாயிருந்தது: இது மீண்டும் இரண்டு ராஜ்ஜியங்களின் கலவை என்பதையும், இரண்டுமே தனிப்பட்ட முறையில் பெரிய ராஜ்ஜியங்கள் என்பதைக் குறிக்கிறது.
  • ஆகிலும் அவைகளில் ஒன்று மற்றதைப்பார்க்கிலும் உயர்ந்திருந்தது: நாம் ஏற்கனவே கரடியின் ஒருபக்கத்தின் பலத்தினால் நிலைநிறுத்தப்பட்ட சாம்ராஜ்ஜியமாக இருந்தது என்று பார்த்தபடியே, இரண்டு ராஜ்ஜியங்களை ஒப்பிடும்போது பெர்சியா, மேதியாவை விட பலத்ததாயிருந்தது என்பதைத்தான், ஒரு கொம்பு மற்றதைப்பார்க்கிலும் உயரமாக இருந்ததாகச் சொல்லப்பட்டுள்ளது
  • உயர்ந்தகொம்பு பிந்தி முளைத்தெழும்பிற்று: கி.மு 550 ஆம் ஆண்டில் தான் பெர்சியனான கோரேஸ், ஏற்கனவே இருந்த ஒரு கொம்பாகிய மேதியாவை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தான். எனவே மேதியா முதலில் எழும்பிய கொம்பு; அதற்கு அடுத்து எழும்பிய பலம் வாய்ந்த கொம்பு தான் பெர்சியா ஆகும். இவை இரண்டும் ஒருங்கிணைந்து தான் கி.மு 539 ல் பாபிலோனை வீழ்த்திவிட்டு பூமியின் 4வது பெரிய சாம்ராஜ்ஜியமாக உருவெடுத்து கி.மு 334 வரை நிலைத்து நின்றது.

அந்த ஆட்டுக்கடா மேற்கும் வடக்கும் தெற்கும் பாய்கிறதைக் கண்டேன்; ஒரு மிருகமும் அதின் முன்னே நிற்கக் கூடாதிருந்தது: இந்த மேதிய-பெர்சிய சாம்ராஜ்ஜியம் உலகம் முழுவதும் எல்லா திசைகளிலும் வியாபித்திருந்ததை நாம் எஸ்தர் புத்தகத்தில் தெளிவாகப் பார்க்கலாம். இந்த ராஜ்ஜியத்தின் ஐந்தாவது பேரரசனாக வந்த ‘அகாஸ்வேரு’ என்ற ராஜாவின் ஆட்சி எல்லையைப் பார்க்கும்போது இதன் வல்லமையையும், இதற்கு முன்பாக ஒரு மிருகமும் (ராஜ்ஜியமும்) எதிர்த்துநிற்க முடியவில்லை என்பது புரியும்.

‘‘இந்துதேசம் (தற்போதைய இந்தியா) முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும் அரசாண்ட அகாஸ்வேருவின் நாட்களிலே சம்பவித்ததாவது…….(எஸ்தர்1:1)

 

இந்த தரிசனத்தைப் பற்றிய விளக்கத்தை நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இதன் தொடர்ச்சியாக வந்த கிரேக்க சாம்ராஜ்ஜியம் இதை எப்படி வீழ்த்தியது என்பதை இந்த தரிசனத்தின் மூலம் அடுத்த அத்தியாயத்தில் பார்க்க இருக்கிறோம்.

மேதியபெர்சிய ராஜாக்கள் யார்?

மேதிய-பெர்சிய ராஜாக்களைப் பற்றிய பெரும்பாலான விபரங்கள், வரலாற்றை மிஞ்சும் வகையில் நமக்கு வேதாகமத்தின் பல இடங்களில் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இவை ஏசாயா தீர்க்கதரிசியினால் சுமார் 150 வருடங்களுக்கு முன்னதாகவே மிகச்சரியாக சொல்லப்பட்டுள்ளது. பாபிலோன் அரசவையில் தொடங்கி, பெர்சியனான கோரேஸ், மேதியனான தரியு போன்றவர்களின் அரசவையிலும் இருந்த தானியேல் அப்போது நடந்த வரலாற்று சம்பவங்களையும், அதற்குப் பின்வரும் இந்த ராஜ்ஜியத்தின் ராஜாக்களைப் பற்றி தரிசனங்களாகவும் கண்டு எழுதிவைத்துள்ளார். மேலும் இந்த ராஜ்ஜியத்தின் காலத்தில் வாழ்ந்த யூத அரசியல் பெரும்புள்ளிகளான ‘எஸ்றா, நெகேமியா, எஸ்தர்’ போன்றவர்களால், அக்காலங்களில் நடந்த சம்பவங்கள் வரலாற்று ஆவணங்களாகவும் ஆவியானவரால் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வரலாற்று சம்பவங்களை மட்டும் நாம் தெளிவாகப் புரிந்துகொண்டால் பரிசுத்த வேதபுத்தகத்தில் எஸ்றா, நெகேமியா, எஸ்தர் மற்றும் தானியேல் புத்தகங்கள் ஏன் சேர்க்கப்பட்டுள்ளன, அவைகளின் முக்கியத்துவம் என்ன என்பதும், பரிசுத்த வேதம் எத்தனை துல்லியமானது, எத்தனை உண்மையானது என்பதும் நமக்கு புரியும். சற்று பொறுமையுடன் வாசிக்கக் கேட்டுக்கொள்கிறேன். மேதிய-பெர்சிய ராஜாக்களைப் பற்றி தனித்தனியாக வேதவசனங்களில் கொடுக்கப்பட்டவைகளின் அடிப்படையில் வரலாற்றைப் பார்ப்போம். நாம் அந்திகிறிஸ்துவின் தந்திரங்களைப் பற்றி அறிந்துகொள்ளத் தான் இவ்வளவு விபரங்களை ஆவியானவர் நமக்குக் கொடுத்துவைத்துள்ளார். ஆனால் நாமோ இதில் சொல்லப்பட்ட வாக்குத்தத்தங்களை மட்டும் சொந்தம் கொண்டாடிவிட்டு, இதன் நோக்கத்தை மறந்துவிடுகிறோம். உதாரணமாக

‘‘கர்த்தராகிய நான் அபிஷேகம்பண்ணின கோரேசுக்கு முன்பாக ஜாதிகளைக் கீழ்ப்படுத்தி, ராஜாக்களின் இடைக்கட்டுகளை அவிழ்க்கும்படிக்கும், அவனுக்கு முன்பாக வாசல்கள் பூட்டப்படாதிருக்க, கதவுகளைத் திறந்துவைக்கும்படிக்கும், அவனைப்பார்த்து, அவன் வலதுகையைப் பிடித்துக்கொண்டு, அவனுக்குச் சொல்லுகிறதாவது: நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன். உன்னைப் பெயர்சொல்லி அழைக்கிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் நானே என்று நீ அறியும்படிக்கு, வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்து, அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன்; நான் என் தாசனாகிய யாக்கோபினிமித்தமும், நான் தெரிந்துகொண்ட இஸ்ரவேலினிமித்தமும், நான் உன்னைப் பெயர்சொல்லி அழைத்து, நீ என்னை அறியாதிருந்தும் (புறஜாதி ராஜாவாக இருந்தும்) உனக்கு நாமம் தரித்தேன்.’’

என்ற ஏசாயா 45:1-4 ல் சொல்லப்பட்டுள்ள வார்த்தைகள் ‘பெர்சியனாகிய கோரேஸ் என்பவனைப் பற்றியது. பாபிலோனில் 70 வருடங்களாக சிறைவைக்கப்பட்டுள்ள யூதர்களை, அவன் பாபிலோனைக் கைப்பற்றிய பின்பு விடுவித்து, எருசலேமை மீண்டும் கட்டுவிப்பான்; அவனை நானே ஏற்படுத்தினேன்’ என்று கோரேஸ் பிறப்பதற்கு 150 வருடங்களுக்கு முன்பே ‘பெயர் சொல்லி அழைத்த தேவன்’ நம் தேவன்.

வேதம் சொல்லும் வரலாறு

கோரேஸ் பாபிலோனை வீழ்த்தி கி.மு 539 அக்டோபர் 9 ல் ராஜ்ஜியத்தை நிலைநாட்டினான் என்று வரலாறு சொல்கிறது.

‘‘பட்டயத்திற்குத் தப்பின (இஸ்ரவேலின்) மீதியானவர்களை அவன் (நேபுகாத்நேச்சார்) பாபிலோனுக்குச் சிறைபிடித்துப்போனான்; (கோரேசின் தலைமையில்) பெர்சியா ராஜ்யபாரம் ஸ்தாபிக்கப்படுமட்டும் அங்கே அவர்கள் (தானியேல் உட்பட) அவனுக்கும் அவன் குமாரருக்கும் (பெல்ஷாத்சார் காலம் வரை) அடிமைகளாயிருந்தார்கள்.’’ (2 நாளாகமம் 36:20)

அக்டோபர் 29 , கி.மு 539 ல் பெர்சியனான கோரேஸ் தனது தளபதி ‘மேதியனாகிய தரியுவை’ பாபிலோன் அரசவையின் மேல் பிரபுவாக/ஆளுநராக நியமித்தான்.

‘‘மேதியனாகிய தரியு தன் அறுபத்திரண்டாம் வயதில் ராஜ்யத்தைக்கட்டிக்கொண்டான்’’ (தானியேல் 5:31).

இந்த தரியு, மேதியனாகிய அகாஸ்வேருவின் மகன். (இந்த அகாஸ்வேரு எஸ்தர் புத்தகத்தில் குறிப்பிடப்பட்ட அகாஸ்வேரு அல்ல). இவனது இயற்பெயர் ‘காப்ரியஸ்’ ஆகும். கல்தேயர் என்ற பாபிலோன் ராஜ்ஜியத்தின் மேல் ராஜாவாக்கப்பட்ட மேதியனான தரியு என்று சொல்லப்பட்டுள்ளது மூலம், இவன் கோரேசினால் வெல்லப்பட்ட பாபிலோன் மீது மட்டும் ராஜாவாக நியமிக்கப்பட்டான் என்பது தெளிவாகின்றது.

‘‘கல்தேயருடைய ராஜ்யத்தின்மேல் ராஜாவாக்கப்பட்ட மேதிய குலத்தானாகிய அகாஸ்வேருவின் புத்திரனான தரியு ராஜ்யபாரம்பண்ணுகிற முதலாம் வருஷத்திலே,’’ (தானியேல் 9:1).

இரண்டு ராஜ்ஜியங்களிலும் ஒரே பெயர்களில் ராஜாக்கள் மாறிமாறி வந்தார்கள். ஆனால் நம் வேதம் ஒவ்வொரு பெயருக்கும் முன்பு அவர்கள் வம்சத்தை மிகத்தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது ஆச்சரியம் தான். இதற்கு அடுத்த வசனத்திலேயே ‘‘தானியேலாகிய நான் எருசலேமின் பாழ்க்கடிப்புகள் நிறைவேறித்தீர எழுபதுவருஷம் செல்லுமென்று கர்த்தர் எரேமியா தீர்க்கதரிசியோடே சொல்லிய வருஷங்களின் தொகையைப் புஸ்தகங்களால் அறிந்துகொண்டேன்.’’ (தானியேல் 9:2) என்று சொல்வதன் மூலம் தரியுவின் முதல் வருஷத்தில் ‘இஸ்ரவேலர் 70 வருடங்கள் பாபிலோனில் இருக்கவேண்டும் என்று அறிந்துகொண்டார்’ என்று அறிகிறோம். இந்த ஆண்டு சிறையிருப்பின் 66 ஆம் ஆண்டாகும் (கி.மு 538-539). ஆனால் எஸ்றா (1:1) குறிப்பிடும்போது

‘‘எரேமியாவின் வாயினாலே கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறும்படி, பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசுடைய முதலாம் வருஷத்திலே, கர்த்தர் பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் ஆவியை ஏவினதினாலே அவன்’’…..

என்று ஆரம்பித்து, நேபுகாத்நேச்சார் இடித்துப்போட்ட ஆலயத்தைக் கட்ட சிறையிருப்பிலிருந்த யூதர்களை எருசலேமிற்கு செருபாபேலின் தலைமையில் அனுப்புகிறார். எனவே கோரேசும், தானியேலில் வரும் மேதியனாகிய தரியுவும் ஒரே காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள் என்பதும், பெர்சியாவிலிருந்த கோரேசுடைய தளபதியான ‘மேதியனாகிய தரியு’ பாபிலோன் மேல் கவர்னராக நியமிக்கப்பட்டார் என்ற வரலாறும் உறுதியாகின்றது. அது மட்டுமல்லாமல், பாபிலோனில் சிறையிருந்த யூதர்கள் கோரேசின் முதல் வருடமாகிய கி.மு 538 ல் ஆரம்பித்து பலகட்டங்களில் எருசலேமுக்குத் திரும்பினர். அது முடிந்த வருடம் கி.மு 535 ஆகும். எனவே கி.மு 605 முதல் 635 வரை 70 வருடங்கள் பாபிலோனில் இருந்தனர் என்பதும் விளங்குகிறது.

ராஜாக்களின் வரிசையும், வேத வரலாறும்

  1. கோரேஸ் (Cyrus the Great) மற்றும் மேதியனான தரியு

கோரேஸ் ஒவ்வொரு தேசங்களை வென்றுவிட்டு அவைகளை Satrapies என்ற தனி மாகாணங்களாக மாற்றி, தனக்கு விசுவாசமானவர்களை ‘Satraps’ என்ற கவர்னர்களைப் போன்ற அதிகாரத்தில் வைத்துச்செல்வது வழக்கம். அப்படி அவனால் பாபிலோன் மீது நியமிக்கப்பட்டவன் தான் மேதியனாகிய தரியு. இஸ்ரவேலை விடுவித்த கோரேசைப் போல இந்த தரியுவும் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவன் தான். ஏனெனில் இந்த சண்டைகளில் கலந்துகொண்ட ‘உக்பாரு’ என்ற இன்னொரு பெர்சிய தளபதி, இந்த தரியுவை பாபிலோன் மேல் ராஜாவாக நியமிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தான். அதனால் தான் அக்டோபர் 9 ல் பிடிக்கப்பட்ட பாபிலோனுக்கு ராஜாவாக தரியுவை நியமிக்க 21 நாட்கள் தடை ஏற்பட்டது. இப்படி தடை செய்த உக்பாருவை கர்த்தருடைய தூதன் அடித்ததினால் அவன் நோய்வாய்ப்பட்டு அதே வருடம் நவம்பர் 6 ல் மரித்துப்போனான். இதைத்தான் தானியேலுக்கு வெளிப்பட்ட தரிசனத்தில்

‘‘பெர்சியா ராஜ்யத்தின் அதிபதி (உக்பாரு) இருபத்தொரு நாள்மட்டும் என்னோடே (தேவநியமனத்திற்கு) எதிர்த்து நின்றான்; ஆனாலும் பிரதான அதிபதிகளில் ஒருவனாகிய மிகாவேல் எனக்கு உதவியாக வந்தான்; ஆதலால் நான் அங்கே பெர்சியாவின் ராஜாக்களிடத்தில் தரித்திருந்தேன்.’’ (தானியேல் 10:13) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தானியேல் 11:1 ல்

‘‘மேதியனாகிய தரியு அரசாண்ட முதலாம் வருஷத்திலே நான் அவனைத் திடப்படுத்தவும் பலப்படுத்தவும் அவனுக்குத் துணை நின்றேன்’’

என்று தூதன் சொன்னதாகக் கூறப்பட்டுள்ளது. எத்தனை அற்புதமான தேவன் நம் தேவன். அவர் செய்ய நினைப்பதை யார் தடுக்க முடியும்? இத்தனையும், யூதஜனங்களை சிறையிருப்பிலிருந்து விடுவிப்பதற்காக தேவனால் முன்குறிக்கப்பட்ட காரியங்கள் ஆகும். இப்படி தேவனால் நியமிக்கப்பட்ட தரியு தான், பாபிலோனிய அமைச்சராக இருந்த தானியேலை தன் முதலமைச்சராக நியமித்ததுடன், அவன் மேல் மிகுந்த பட்சமாய் இருந்தான் என்று பல இடங்களில் வாசிக்கிறோம்.

‘‘ராஜாவுக்கு நஷ்டம் வராதபடிக்கு அந்த தேசாதிபதிகள் கணக்கு ஒப்புவிக்கிறதற்காக அவர்களுக்கு மேலாக மூன்று பிரதானிகளையும் ஏற்படுத்துவது தரியுவுக்கு நலமென்று கண்டது; இவர்களில் தானியேல் ஒருவனாயிருந்தான்.’’ (தானியேல் 6:2)

‘‘ராஜா  இந்த  வார்த்தைகளைக்  கேட்டபோது,  தன்னில்  மிகவும் சஞ்சலப்பட்டு,  தானியேலைக் காப்பாற்றும்படிக்கு அவன்பேரில் தன் மனதை வைத்து, அவனைத் தப்புவிக்கிறதற்காகச் சூரியன் அஸ்தமிக்கு மட்டும்   பிரயாசப்பட்டுக்கொண்டிருந்தான்.’’ (தானியேல் 6:14)

இந்த கோரேஸ் தான் ஏசாயா, எரேமியா தீர்க்கதரிசிகளால் முன்னறிவிக்கப்பட்டபடி, எருசலேமில் இடிக்கப்பட்ட தேவனுடைய ஆலயத்தைக் கட்ட முழுமுயற்சி செய்தான்.

‘‘எரேமியாவின் வாயினாலே கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறும்படி, பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின்முதலாம் வருஷத்திலே கர்த்தர் பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் ஆவியை ஏவினதினாலே, அவன்: பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் பூமியின் ராஜ்யங்களையெல்லாம் எனக்குத் தந்தருளி, யூதாவிலுள்ள எருசலேமிலே தமக்கு ஆலயத்தைக் கட்டுவிக்கும்படி எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார். அவருடைய ஜனங்கள் எல்லாரிலும் எவன் உங்களுக்குள் இருக்கிறானோ அவன்போகட்டும், அவனுடைய தேவனாகிய கர்த்தர் அவனோடிருப்பாராக என்று பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் அறிவிக்கிறார் என்று, தன் ராஜ்யம் எங்கும் எழுதியனுப்பி விளம்பரம்பண்ணினான்.’’ (2 நாளாகமம் 36 :22,23)

கோரேஸ் மற்றும் மேதியனாகிய தரியுவிற்கு பின்வந்த ராஜாக்களை ப் பற்றி வரலாற்றில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு முன்னதாகவே, இனி எத்தனை வல்லமையான ராஜாக்கள் இந்த ராஜ்ஜியத்தில் வருவார்கள்? அவர்கள் எப்படிப்பட்டவர்களாயிருப்பார்கள்? என்பது வரை தானியேலுக்கு ஆண்டவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.

‘‘(கோரேசின் பிரபுவாகிய) மேதியனாகிய தரியு அரசாண்ட முதலாம் வருஷத்திலே நான் அவனைத் திடப்படுத்தவும் பலப்படுத்தவும் அவனுக்குத் துணை நின்றேன். இப்போது நான் மெய்யான செய்தியை உனக்கு அறிவிப்பேன்; இதோ, இன்னும் மூன்று ராஜாக்கள் பெர்சியாவில் எழும்புவார்கள்; அதின்பின்பு நாலாம் ராஜாவாயிருப்பவன் எல்லாரிலும் மகா ஐசுவரிய சம்பன்னனாகி, தன் ஐசுவரியத்தினால் பலங்கொண்டு, கிரேக்கு ராஜ்யத்துக்கு விரோதமாகச் சகலரையும் எழுப்பிவிடுவான். ஆனாலும் பராக்கிரமமுள்ள ஒரு (கிரேக்க) ராஜா எழும்பி, பிரபலமாய் ஆண்டு, தனக்கு இஷ்டமானபடி செய்வான்.’’ (தானியேல் 11:1-3)

இதன்படி அடுத்த மூன்று ராஜாக்கள் முறையே: கேம்பைசஸ் (Cambyses) , சூடோ ஸ்மெர்டிஸ் (Pseudo-Smerdis) மற்றும் பெர்சியனான முதலாம் மகா தரியு (Darius the Great-1). மேலே குறிப்பிடப்பட்டுள்ள நாலாம் ராஜாவாகிய அகாஸ்வேரு, மகா ஐசுவரியத்தினால் பலத்தவனாயிருப்பான் என்று கூறப்பட்டது மட்டுமல்லாமல் மேதிய-பெர்சிய ராஜ்ஜியத்திற்கு முடிவை வரப்பண்ணின சம்பவமாகிய, கிரேக்கர்களை கோபப்படுத்தி பகையைத் தூண்டக் காரணமாயிருந்தான் என்றும் கூறப்பட்டுள்ளது. கோரேசுக்கு அடுத்த இந்த நாலு ராஜாக்களை இப்போது பார்ப்போம்.

கேம்பைசஸ்:

கி.பி 530 ல் இவன் பதவி ஏற்ற பின்பு, கோரேசினால் துவக்கப்பட்ட ஆலயக்கட்டுமானம் தடைபெற்று நின்றது. கோரேசின் காலத்தில் அஸ்திபாரம் போடப்பட்டது முதல் ‘பெர்சியனான மகா தரியுவின்’ காலம் வரைக்கும் ஆலயக்கட்டுமானம் தடைபட்டு நின்றது. இவர்களுக்கு இடையில் கொஞ்சகாலம் இருந்த, ஆலயவேலையில் சம்பந்தம் இல்லாதிருந்த கேம்பைசசைப் பற்றி வேதத்தில் குறிப்பிடப்படவில்லை.

‘‘அதினால் அந்த தேசத்து ஜனங்கள் யூதா ஜனத்தின் கைகளைத் தளரப்பண்ணி, கட்டாதபடிக்கு அவர்களைச் சங்கடப்படுத்தி, பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் காலமுழுதும், தரியு என்னும் பெர்சியா ராஜா அரசாண்டகாலமட்டும், அவர்கள் யோசனையை அவத்தமாக்கும்படி அவர்களுக்கு விரோதமாய் ஆலோசனைக்காரருக்குக் கைக்கூலி கட்டினார்கள். அப்பொழுது எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தின் வேலை தடைபட்டு, பெர்சியாவின் ராஜாவாகிய தரியு ராஜ்யபாரம்பண்ணின இரண்டாம் வருஷமட்டும் நிறுத்தப்பட்டிருந்தது.’’ (எஸ்றா 4:4,5 ,24)

எஸ்றா 4 ஆம் அதிகாரத்தில் அர்தசஷ்டாவின் காலத்தில் கட்டுமானம் சிறிதுகாலம் எதிரிகளின் மனுக்களினால் தடைபட்டிருந்தது என்று கூறப்பட்டுள்ளது. இதில் சொல்லப்பட்டுள்ள அர்தசஷ்டா என்பது இந்த கேம்பைசஸ் அல்லது அடுத்து வந்த சூடோ ஸ்மெர்டிஸ் ஆக இருக்கலாம் என்று வேத ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர் ஏனெனில் எகிப்தின் ராஜாக்கள் எல்லோரும் எப்படி பார்வோன் என்று அழைக்கப்பட்டார்களோ அதைப்போலவே இவர்களும் அவ்வப்போது அர்தசஷ்டா, அகாஸ்வேரு என்ற பொதுப்பெயர்களால் அழைக்கப்பட்டார்கள்.

  1. சூடோஸ்மெர்டிஸ்:

கேம்பைசஸ் எகிப்துக்கு சென்றிருந்தபோது தற்காலிகமாக நியமித்த ஸ்மெர்டிஸ் என்பவனுக்கு பதிலாக ஆள்மாறாட்டம் செய்துவந்து (கி.மு 522) வெறும் 7 மாதங்கள் மட்டும் பதவியில் இருந்ததால் இவன் பெயரும் வேதத்தில் குறிப்பிடப்படவில்லை. ஆனால் இன்னும் மூன்று ராஜாக்கள் வருவார்கள் என்று சொல்லப்பட்டதில் இவன் இரண்டாவது ராஜாவாவான்.

  1. பெர்சியனாகிய மகாதரியு-1 (இவன் தானியேலில் சொல்லப்பட்ட கோரேசின் பிரபுவாகிய மேதியனாகிய தரியு அல்ல)

 

அட்டவணை 5 : பெர்சியனாகிய மகாதரியுவின் கால சம்பவங்கள்

காலம்

நடந்த காரியங்கள்

வசன ஆதாரம்

கி.மு 522

பதவியேற்பு

தானியேல் 11:2 ல் சொல்லப்பட்ட மூன்றாவது பெர்சிய ராஜா

கி.மு 520

1)இவனது ஆட்சிகாலத்தின் ஆரம்பநாட்களிலும் ஆலய வேலை நடைபெறவில்லை. எனவே சோர்ந்துபோயிருந்த செருபாபேலின் தலைமையிலான யூதர்களை உற்சாகப்படுத்தியது மட்டுமல்லாமல் மேசியாவின் வருகையை முன்னறிவித்து ஆகாய் மற்றும் சகரியா தீர்க்கதரிசிகள் இந்த காலக்கட்டத்தில் தான் தீர்க்கதரிசனம் உரைத்தார்கள்.

2) ஆலயத்தைக்கட்ட தடையைத் தொடரும்படி எதிரிகள் மனு அனுப்பியபோது, இந்த தரியு தான் கோரேசின் பழைய ஆணைகளைத் தேடிப்பார்க்க உத்தரவிடுகிறான்.

3) கோரேசின் பழைய ஆணையின்படி ஆலயம் கட்டவும், யாரும் அதை தடைசெய்யக்கூடாது எனவும் உத்தரவிடுகின்றான்

1) * அப்பொழுது எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தின் வேலை தடைபட்டு, பெர்சியாவின் ராஜாவாகிய தரியு ராஜ்யபாரம்பண்ணின இரண்டாம் வருஷமட்டும் (520) நிறுத்தப்பட்டிருந்தது. (எஸ்றா 4:24)

* அப்பொழுது ஆகாய் தீர்க்கதரிசியும், இத்தோவின் குமாரனாகிய சகரியா என்னும் தீர்க்கதரிசியும், யூதாவிலும் எருசலேமிலுமுள்ள யூதருக்கு இஸ்ரவேல் தேவனின் நாமத்திலே தீர்க்கதரிசனம் சொன்னார்கள். (எஸ்றா 5:1)

2) அப்பொழுது ராஜாவாகிய தரியு இட்ட கட்டளையின்படியே பாபிலோன் கஜானாவிலுள்ள தஸ்திர அறையைச் சோதித்தார்கள். (எஸ்றா 6:1)

3) தேவனுடைய ஆலயத்தின்வேலையை அவர்கள் செய்யட்டும், யூதருடைய அதிபதியும், யூதரின் மூப்பரும், தேவனுடைய ஆலயத்தை அதின் ஸ்தானத்திலே கட்டக்கடவர்கள் (எஸ்றா 6:7)

கி.மு 516

ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது

ராஜாவாகிய தரியு அரசாளுகிற ஆறாம் வருஷம் (516) ஆதார் என்னும் மாதம் மூன்றாந்தேதியிலே அந்த ஆலயம் கட்டி முடிந்தது

  1. அகாஸ்வேரு (Ahasuerus/Xerxes-1)

அட்டவணை 6: அகாஸ்வேருவின் கால சம்பவங்கள்

காலம்

நடந்த காரியங்கள்

வசன ஆதாரம்

கி.மு 485/486

ராஜாவாக பதவியேற்றான். இவன் தான் தானியேல் 11:2 ல் சொல்லப்பட்ட மகா ஐசுவரியமும் பலத்தவனுமான ராஜா.

*இந்துதேசம்முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும் அரசாண்ட அகாஸ்வேருவின் நாட்களிலே சம்பவித்ததாவது

கி.மு 483

127 நாடுகளின் அதிபதிகளுக்கும் 180 நாள் விருந்து செய்தான்.

அவன் தன் ராஜ்யத்தின் 3 ஆம் வருடம் மகிமையான ஐசுவரியத்தையும், தன் மகத்துவத்தின் சிறந்த பிரதாபத்தையும் அநேக நாளாகிய நூற்றெண்பது நாளளவும் விளங்கச் செய்து கொண்டிருந்தான்.(எஸ்தர் 1:4)

கி.மு 480 -487

கிரேக்கத்தின் மீது படையெடுத்து வஞ்சகத்தினால் அவர்களை வீழ்த்தினான். இந்த யுத்தத்தை ஹாலிவுட்டில் பிரபல திரைப்படமாகவும் எடுத்துள்ளனர் (ஸ்பார்தர்கள்-Spartans). இந்த யுத்தம் ‘Battle of Thermopylae’ என்று வரலாற்றில் அழைக்கப்படுகிறது. 

அதின்பின்பு நாலாம் ராஜாவாயிருப்பவன் எல்லாரிலும் மகா ஐசுவரிய சம்பன்னனாகி, தன் ஐசுவரியத்தினால் பலங்கொண்டு, கிரேக்கு ராஜ்யத்துக்கு விரோதமாகச் சகலரையும் எழுப்பிவிடுவான்.

(இந்த பகை தான் கிரேக்கரை பழிவாங்கும் உணர்வுடன் எழுப்பி 145 வருடங்கள் கழித்து மகா அலெக்சாண்டரால் மேதிய-பெரிசிய சாம்ராஜ்ஜியம் வீழ்ச்சியடையக் காரணமாயிருந்தது)

கி.பி 478

எஸ்தர் அகாஸ்வேருவின் மனைவியாகி ராணியானாள்

அப்படியே எஸ்தர் ராஜாவாகிய அகாஸ்வேரு அரசாளுகிற ஏழாம் வருஷம் தேபேத் மாதமாகிய பத்தாம் மாதத்திலே ராஜாவினிடத்தில் அரமனைக்கு அழைத்துக்கொண்டு போகப்பட்டாள்.

கி.பி 473

ஆமானின் சதித்திட்டத்தினால் யூத இனத்தையே வேரறுக்கும் ஆணை பிறப்பிக்கப்பட்டது. கிறிஸ்து யூதகுலத்தில் வெளிப்படுவதைத் தடுக்கும் அந்தி கிறிஸ்துவாகிய சாத்தானின் திட்டம் எஸ்தரின் தியாகத்தாலும், மொர்தேகாயின் ஞானத்தாலும் தடைசெய்ய கர்த்தர் கிருபை செய்தார்.

ராஜாவாகிய அகாஸ்வேருவின் பன்னிரண்டாம் வருஷம் நிசான் மாதமாகிய முதலாம் மாதத்திலே ஆமானுக்கு முன்பாகப் பூர் என்னப்பட்ட சீட்டு ஒவ்வொரு நாளையும் ஒவ்வொருமாதத்தையும் குறித்துப் போடப்பட்டு, ஆதார் மாதமான பன்னிரண்டாம் மாதத்தின்மேல் விழுந்தது. (எஸ்தர் 3:7)

6.அர்தசஷ்டா (Artaxerxes-1)

இவரைப்பற்றி தானியேலில் குறிப்பிடப்படாவிட்டாலும், இவரது ராஜ்ஜியத்தில் அதிகாரிகளாக இருந்த எஸ்றா மற்றும் நெகேமியாவினால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளார்.

அட்டவணை 7: அர்தசஷ்டா கால சம்பவங்கள்

காலம்

நடந்த காரியங்கள்

வசன ஆதாரம்

கி.மு 464/465

பதவிக்கு வந்தான்

.

கி.மு 457/458

இவரது ஆட்சியின் காலத்தில் தான் பாபிலோனின் முக்கிய அதிகாரியாக இருந்த எஸ்றா எருசலேமைத் திரும்பக் கட்டி எழுப்பும் ஆணையைப் பெற்று வந்தான். (தானியேலின் 70 வார தரிசனத்தின் ஆரம்ப காலம்)

*இந்த வர்த்தமானங்களுக்குப் பின்பு, செராயாவின் குமாரனாகிய எஸ்றா, பெர்சியாவின் ராஜாவாகிய அர்தசஷ்டா அரசாளுகிற காலத்திலே பாபிலோனிலிருந்து வந்தான்; ஐந்தாம் மாதத்தில் அவன் எருசலேமுக்கு வந்தான்; அது அந்த ராஜாவின் ஏழாம் வருஷமானது. (எஸ்றா7:1&8) *எஸ்றா 7;11-26 வசனங்கள்

கி.மு 445

1)இவரது 20 ஆம் வருடத்தில் தான் நெகேமியா என்ற அதிகாரி எருசலேமின் மதில்கள் இன்னும் இடிபாடுகளோடு கிடக்கிறது என்று வருந்தி அழுது, அதை மீண்டும் கட்டியெழுப்ப கவர்னராக நியமிக்கப்பட்ட ஆணையைப் பெறுகிறார்

2) இந்த நேகேமியா ஏற்கனவே எருசலேம் சென்ற வேதநிபுணரான எஸ்றாவுடன் சேர்ந்து யூதர்களை மீண்டும் கர்த்தரைத் தேட வைக்கிறார்.

1)அர்தசஷ்டா ராஜாவின் இருபதாம் வருஷம் நிசான் மாதத்திலே, திராட்சரசம் ராஜாவுக்கு முன்பாக வைத்திருக்கையில், நான் அதை எடுத்து அவருக்குக் கொடுத்தேன்; நான் முன் ஒருபோதும் அவர் சமுகத்தில் துக்கமா யிருந்ததில்லை.

ராஜாவை நோக்கி: ராஜா என்றைக்கும் வாழ்க; என் பிதாக்களின் கல்லறைகள் இருக்கும் ஸ்தலமாகிய நகரம் பாழானதும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப் பட்டதுமாய்க் கிடக்கும்போது, நான் துக்கமுகத்தோடு இராதிருப்பது எப்படி என்றேன். (நெகேமியா 2;1&3)

2) நெகேமியா 8 ஆம் அதிகாரம் முழுவதும்

கி.பி 433

நெகேமியா எருசலேமின் மதில்களைக் கட்டிமுடித்து, 12 வருடம் கழித்து மீண்டும் ராஜாவாகிய அர்தசஷ்டாவை சந்திக்க செல்கின்றார்.

நான் யூதாதேசத்திலே அதிபதியாயிருக்கும் படி ராஜாவாகிய அர்தசஷ்டா எனக்குக் கற்பித்த நாளாகிய அவருடைய இருபதாம் வருஷம் தொடங்கி, அவருடைய முப்பத்திரண்டாம் வருஷம் வரைக்கும் இருந்த பன்னிரண்டு வருஷகாலமாய், நானும் என் சகோதரரும் அதிபதிகள் வாங்குகிற படியை வாங்கிச் சாப்பிடவில்லை

மேதியபெர்சிய ராஜ்ஜியத்தின் வீழ்ச்சி

வேதபுத்தகம் உலக வரலாற்றைக் கூறினாலும், இஸ்ரவேலை மையப்படுத்திய வரலாற்றை மட்டுமே முழுவதுமாக பதிவுசெய்துள்ளது. எனவே நேபுகாத்நேச்சாரால் அழிக்கப்பட்ட எருசலேம் நகரம், அதன் மதில்கள் மற்றும் ஆலயம் கட்டிமுடிக்கப்பட்ட பின்பு, இஸ்ரவேலர் சுகமாய் தங்கியிருந்த காலத்தில் ஆட்சி செய்த அர்தசஷ்டாவிற்கு பின்வந்த ராஜாகள் பெயரை பரிசுத்த வேதாகமம் குறிப்பிடவில்லை. ஆனால் இந்த ராஜ்ஜியம் அதன் கடைசி ராஜாக்களின் காலத்தில் எப்படி முடிவுபெறும் என்பதை நம் பரிசுத்த வேதாகமம் ஆதாரப்பூர்வமாகக் கூறுகின்றது.

அர்தசஷ்டா- I க்கு பின்பு வந்த ராஜாக்களின் பெயர்கள் முறையே: அகாஸ்வேரு-II, தரியு- II, அர்தசஷ்டா- II & III மற்றும் தரியு – III என்பவர்களே.

‘‘அதின்பின்பு நாலாம் ராஜாவாயிருப்பவன் எல்லாரிலும் மகா ஐசுவரிய சம்பன்னனாகி, தன் ஐசுவரியத்தினால் பலங்கொண்டு, கிரேக்கு ராஜ்யத்துக்கு விரோதமாகச் சகலரையும் எழுப்பிவிடுவான். ஆனாலும் பராக்கிரமமுள்ள ஒரு ராஜா எழும்பி, பிரபலமாய் ஆண்டு, தனக்கு இஷ்டமானபடி செய்வான்.’’ (தானியேல் 11:1-3)

என்று சொல்லப்பட்டபடி அகாஸ்வேரு- I ன் காலத்தில் தூண்டிவிடப்பட்ட பகைமை தொடர்ந்து, மேதிய-பெர்சிய ராஜ்ஜியத்தின் கடைசி ராஜாவாகிய தரியு III என்ற ராஜாவின் காலத்தில் கிரேக்கத்தை சேர்ந்த ‘ஒரு பராக்கிரமுள்ள ராஜா எழும்பி’ மேதிய-பெர்சிய ராஜ்ஜியத்தை கி.மு 334 ல் வீழ்த்தி கிரேக்க சாம்ராஜ்ஜியத்தை ஸ்தாபித்தான். அவனும் அவனது வழித்தோன்றல்களும் எப்படி ‘பிரபலமாய் ஆண்டு. அவர்களுக்கு இஷ்டமானபடி செய்வார்கள்’ என்பதைத் தான் நாம் அடுத்த அத்தியாயத்தில் பார்க்கவிருக்கிறோம். என்னோடு ‘புசிபேலஸ்’ (Bucephalus) என்ற குதிரையில் பயணம் செய்ய ஆயத்தமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *