கிரேக்க சாம்ராஜ்ஜியம் (கி.மு 334-கி.மு 166)

பரிசுத்த வேதத்தில் பழையஏற்பாட்டின் கடைசி தீர்க்கதரிசன புத்தகமாகிய மல்கியாவை எழுதின மல்கியா தீர்க்கதரிசி, இயேசு பிறப்பதற்கு முன் சுமார் 420 லிருந்து 450 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தவராகக் கருதப்படுகிறது. அதுவும் மல்கியா கடைசி அதிகாரம் யோவான் ஸ்நானகனைப் பற்றிய தீர்க்கதரிசனத்தோடு முடிவதால், மல்கியாவுக்குப் பின் குறிப்பிடத்தக்க தீர்க்கதரிசிகள் யாரும் எழும்பவில்லை எனவும், இந்த 400 வருடங்கள் ‘தீர்க்கதரிசிகள்’ இல்லாத காலம் எனவும், இந்தக் காலங்களில் இஸ்ரவேலில் நடந்த சம்பவங்கள் எழுதப்படவில்லை எனவும் கிறிஸ்தவ வட்டாரத்தில் நம்பப்படுகிறது. இது ஓரளவுக்கு மட்டுமே உண்மை.

இடைவெளியை நிரப்பும் மக்கபேயர்

மல்கியாவுக்குப் பின், ஆனால் யோவான் ஸ்நானகனுக்குப் முன் தீர்க்கதரிசிகள் எழும்பவில்லை தான்; ஆனால் இந்த காலக்கட்டத்தில் நடக்கவிருக்கும் சம்பவங்களைப் பற்றிய ‘தீர்க்கதரிசனம்’ தானியேலுக்கு 550 வருடங்களுக்கு முன்பே வெளிப்படுத்தப்பட்டுவிட்டது என்பது தான் நிதர்சனம். அதன்படி நடந்துமுடிந்ததை வரலாறும் தெளிவாக உறுதிப்படுத்துகிறது. மட்டுமல்லாமல், இந்த காலக்கட்டத்தில் உலக சாம்ராஜ்ஜியமாக இருந்த கிரேக்கத்தினால் இஸ்ரவேலுக்குள் நிகழ்ந்த அரசியல் நிகழ்வுகள், யுத்தங்கள் பற்றிய வரலாற்றை, கத்தோலிக்க வேதாகமத்தின் தள்ளுபடி புத்தகங்களில் ஒன்றான மக்கபேயர்-1,2 புத்தகங்கள் தெளிவாகக் கூறுகிறது. ‘‘ராஜ்ஜியங்களைக் குறித்த தீர்க்கதரிசனத்தில், நம் ஆண்டவர் ஒரு வருடம் கூட இடைவெளி விடாமல் நடக்கப்போவதை வெளிப்படுத்தியுள்ளார் என்றால் இதன் முக்கியத்துவத்தை நாம் அற்பமாக எண்ணிவிடக்கூடாது.’’

ஏனென்றால் இயேசு பிறப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்தே ராஜ்ஜியங்களைப் பற்றி கர்த்தர் தொடர்ச்சியாக கூறிவைத்தது மட்டுமல்லாமல், இயேசு உலகத்திற்கு வந்துசென்ற பின்பு எழும்பும் ராஜ்ஜியங்களைப் பற்றியும், அதிலிருந்து அவரது இரண்டாம் வருகையின் காலமட்டும் நீடிக்கும் ராஜ்ஜியங்களைப் பற்றியும் ‘மிகத்தெளிவாக’ சொல்லியுள்ளார். இப்படி காலஇடைவெளி இல்லாமல் தொடர்ச்சியாக ராஜ்ஜியங்களின் ஆளுகையை, குறிப்பாக அந்திகிறிஸ்துவின் ராஜ்ஜியத்தைப் பற்றியும் பரிசுத்த வேதம் சொல்லுவதை நாம் சரியாகப் புரிந்துகொள்ளாமல் விட்டுவிட்டோம். இதனால் தான், அந்திகிறிஸ்து என்ற ‘தனி மனிதன்’ ‘கடைசி 7 வருடங்களில்’ மட்டும் தான் வெளிப்படப்போவதாக நாம் நம்பிவருவது வருந்தத்தக்க விசயம் மட்டுமல்ல, சாத்தானின் தந்திரமும் கூட. இந்த போதனைகளின் அடிப்படையில் பார்த்தால் இயேசுவின் முதலாம் வருகைக்கும் இரண்டாம் வருகைக்கும் இடைப்பட்ட மிகப்பெரிய காலக்கட்டங்களைப் பற்றி நம் வேதம் கூறவில்லை என்று அவர்கள் சொல்வதாகத் தானே அர்த்தம்? அப்படியல்ல. இதைப் பற்றிய மர்மங்களை வேத வசனத்தின் அடிப்படையில் உடைப்பதற்காகத் தான் இந்த புத்தகத்தை பரிசுத்த ஆவியானவரின் துணையோடு ஒரு ஆராய்ச்சி புத்தகமாகவே எழுதியுள்ளேன். வாருங்கள் உள்ளே பயணிப்போம்.

கிரேக்கத்தின் மகா அலெக்சாண்டர்

தானியேல் புத்தகம், எல்லா ராஜ்ஜியங்களை விட கிரேக்க சாம்ராஜ்ஜியத்தின் காலங்களில் நடந்த அந்திகிறிஸ்துவாகிய சாத்தானின் கிரியைகளைப் பற்றி அதிக விவரமாக எடுத்துரைக்கிறது. இதைப் புரிந்துகொள்ள தானியேல் 8 மற்றும் 11 ஆம் அதிகாரங்களை ஒருமுறை முழுவதும் வாசித்துப்பார்த்த பின்பு இந்த அத்தியாயத்தைப் படித்தால் எளிதில் புரியும். நாம் இதற்கு முந்தைய அத்தியாயத்தில் மேதிய-பெர்சிய சாம்ராஜ்ஜியத்தின் கடைசி ராஜாவான தரியு – III என்பவன் காலத்தோடு அந்த ராஜ்ஜியம் முடிவுக்கு வந்தது என்று பார்த்தோம். அப்பொழுது நடந்த யுத்தத்தில் வெற்றிபெற்று, உலகை ஒரு குடைக்குள் கொண்டுவந்து கிரேக்க சாம்ராஜ்ஜியத்தை ஸ்தாபித்தவன் தான் ‘மகா அலெக்சாண்டர்’. அவன் வைத்திருந்த, அவனுக்கு மிகவும் பிரியமான குதிரை தான் ‘புசிபேலஸ்’ என்பது பல வினாடிவினாக்களில் கேட்கப்படும் கேள்வி ஆகும்.

ஆட்டுக்கடாவெள்ளாட்டுக்கடா யுத்தம்

இந்த யுத்தத்தைப் பற்றியும், அதில் அலெக்சாண்டர் வெற்றிபெற்று கிரேக்க சாம்ராஜ்ஜியத்தை ஸ்தாபித்ததைப் பற்றியும், அவனுக்குப் பின்பு அந்த ராஜ்ஜியம் எவ்வாறு பிரிக்கப்பட்டது என்பதைப் பற்றியும், அதன் வழித்தோன்றலாக வந்த ஆண்டியோகஸ் எபிபேனஸ்- IV என்ற ராஜா எவ்வாறு அந்திகிறிஸ்துவாகிய சாத்தானின் முழுபலத்தோடு இருந்தான் என்பதைப் பற்றியும் தான் தானியேல் 8 ஆம் அதிகாரம் முழுவதும் தரிசனமாகக் கூறப்பட்டுள்ளது.

‘‘நான் என் கண்களை ஏறெடுத்துப்பார்த்தேன்; இதோ, இரண்டு கொம்புகளுள்ள ஒரு ஆட்டுக்கடா ஆற்றிற்கு முன்பாக நின்றது; அதின் இரண்டு கொம்புகளும் உயர்ந்தவைகளாயிருந்தது; ஆகிலும் அவைகளில் ஒன்று மற்றதைப்பார்க்கிலும் உயர்ந்திருந்தது; உயர்ந்தகொம்பு பிந்தி முளைத்தெழும்பிற்று. அந்த ஆட்டுக்கடா மேற்கும் வடக்கும் தெற்கும் பாய்கிறதைக் கண்டேன்; ஒரு மிருகமும் அதின் முன்னே நிற்கக் கூடாதிருந்தது; அதின் கைக்குத் தப்புவிப்பாருமில்லை; அது தன் இஷ்டப்படியே செய்து வல்லமைகொண்டது.’’ (தானியேல் 8:3,4)

இதில் சொல்லப்பட்ட ஆட்டுக்கடா என்பது மேதிய-பெர்சிய சாம்ராஜ்ஜியம் என்பதை விவரமாக முந்தைய அத்தியாயத்தில் பார்த்தோம். இதற்கு அடுத்த வசனத்தில்

‘‘நான் அதைக் (ஆட்டுக்கடாவைக்) கவனித்துக்கொண்டிருக்கையில், இதோ, மேற்கேயிருந்து ஒரு வெள்ளாட்டுக்கடா நிலத்திலே கால் பாவாமல் தேசத்தின்மீதெங்கும் சென்றது; அந்த வெள்ளாட்டுக்கடாவின் கண்களுக்கு நடுவே விசேஷித்த ஒரு கொம்பு இருந்தது. நான் ஆற்றின் முன்பாக நிற்கக்கண்ட இரண்டு கொம்புகளுள்ள ஆட்டுக்கடாவினிடமட்டும் அதுவந்து, தன்பலத்தின் உக்கிரத்தோடே அதற்கு எதிராகப் பாய்ந்தது . அது ஆ ட் டுக்கடாவின் கி ட் ட ச் சேரக்கண்டேன்; அது ஆ ட் டுக்கடாவின்மேல் கடுங்கோபங்கொண்டு அதை முட்டி, அதின் இரண்டு கொம்புகளையும் முறித்துப்போட்டது, அதின்முன் நிற்க ஆட்டுக்கடாவுக்குப் பலமில்லாமையால், வெள்ளாட்டுக்கடா அதைத் தரையிலே தள்ளி மிதித்துப்போட்டது, அதின் கைக்கு ஆட்டுக்கடாவைத் தப்புவிப்பார் இல்லை. (தானியேல் 8:5-7)

இப்போது இதில் சொல்லப்பட்டுள்ள ஒவ்வொரு சங்கேத குறியீடுகளுக்கும் (Symbolic language) விளக்கத்தை தானியேலுக்கு ஆண்டவரே வெளிப்படுத்தியிருக்கிறார்.

‘‘நீ கண்ட இரண்டு கொம்புள்ள ஆட்டுக்கடா மேதியா பெர்சியா தேசங்களின் ராஜாக்கள்; ரோமமுள்ள அந்த வெள்ளாட்டுக்கடா கிரேக்கு தேசத்தின் ராஜா; அதின் கண்களுக்கு நடுவே இருந்த பெரிய கொம்பு அதின் முதலாம் ராஜா;’’ (தானியேல் 8:20,21)

இதன்படி

  • இரண்டுகொம்புகளை உடைய ஆட்டுக்கடா – மேதிய பெர்சிய சாம்ராஜ்ஜியம்
  • வெள்ளாட்டுக்கடா- கிரேக்க சாம்ராஜ்ஜியம்
  • அதன்பெரிய கொம்பு – கிரேக்க சாம்ராஜ்ஜியத்தை நிறுவின அதன் முதல் ராஜா ‘மகா அலெக்சாண்டர்’ (Alexander the Great)

பறந்துவந்த வெள்ளாட்டுக்கடா

இந்த வெள்ளாட்டுக்கடாவான கிரேக்க அலெக்சாண்டர், ஆட்டுக்கடாவான மேதிய-பெர்சிய தரியு – III க்கு எதிரான ‘Battle of Issus’ ல் கி.மு 334 ல் வெற்றிபெற்றதையே மீதி வார்த்தைகள் வெளிப்படுத்துகிறது. கிரேக்கமானது உலக வரைபடத்தில் மேதிய-பெர்சியாவுக்கு மேற்கே இருக்கிறது என்பதையே ‘மேற்கேயிருந்து வந்த வெள்ளாட்டுக்கடா’ என்று சொல்லப்பட்டிருக்கிறது.

படம் 15: உலகவரைபடத்தில் கிரேக்கம் மற்றும் மேதிய-பெர்சிய ராஜ்ஜியங்கள்

பிலிப்பு- II என்ற மாசிடோனிய (மக்கதோனியா) மாகாணத்தின் அரசனின் மகனாகப் பிறந்த அலெக்சாண்டர், பிலிப்பின் மரணத்திற்குப் பின் வெறும் 20 வது வயதில் (கி.மு 336) பதவியேற்றான். கிரேக்க தத்துவஞானியான அரிஸ்டாடிலின் மாணவனான அலெக்சாண்டரின் சிறுவயது குறிக்கோள், ‘பெர்சியரை வீழ்த்துவது, உலகை ஆள்வது’. அன்று ஆரம்பித்த அவன் கி.மு 334 ஆம் ஆண்டில் அப்போதைய உலக சாம்ராஜ்ஜியமாக இருந்த மேதிய-பெர்சியாவின் தரியுவை (III) வீழ்த்திவிட்டு, கிழக்கே இந்தியா வரையிலும், தெற்கே எகிப்து வரையிலும் எல்லா ராஜ்ஜியங்களை “12 வருடங்களில் ஓரே வீச்சில், ஒரு தோல்வியும் அடையாமல்’’ உலகைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தான். இதைத்தான் நிலத்தின் மேல் கால் பாவாமல் பாய்ந்த வெள்ளாடு, அதாவது எங்கும் ஓய்வு எடுக்காமல் சென்ற அலெக்சாண்டர் என்று சொல்லப்பட்டுள்ளது

முறிந்துபோன பெரிய கொம்பு

எந்த தோல்வியையும் சந்திக்காமல் வெற்றிமேல் வெற்றிகளைக் குவித்துவந்த அவன் 32 ஆம் வயதிலேயே பாபிலோனில் இருக்கும்போது விஷக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக வரலாறு கூறுகிறது. கிரேக்க சாம்ராஜ்ஜியத்தின் முதலாம் கொம்பாகிய அவன், தனது பலத்தின் உச்சியில் இருக்கும்போது மரணம் அடைவான் என்ற தீர்க்கதரிசனம் மிகத்துல்லியமாக நிறைவேறியது. அவன் போரில் கொல்லப்படாமல், பலம் கொண்டிருந்த காலத்திலேயே முறிந்துபோனான்.

‘‘அப்பொழுது வெள்ளாட்டுக்கடா மிகுதியும் வல்லமைகொண்டது; அது பலங்கொண்டிருக்கையில், அந்தப் பெரிய கொம்பு முறிந்துபோயிற்று; அதற்குப் பதிலாக ஆகாயத்தின் நாலுதிசைகளுக்கும் எதிராய் விசேஷித்த நாலுகொம்புகள் முளைத்தெழும்பினது.’’ (தானியேல் 8:8).

பெரியகொம்பின் இடத்தில் நாலுகொம்புகள்

‘‘அது முறிந்துபோனபின்பு அதற்குப் பதிலாக நாலு கொம்புகள் எழும்பினது என்னவென்றால், அந்த ஜாதியிலே நாலு ராஜ்யங்கள் எழும்பும்; ஆனாலும் அவனுக்கு இருந்த வல்லமை அவைகளுக்கு இராது.’’ (தானியேல் 8:22)

பலங்கொண்டிருக்கையில் மரணத்தைத் தழுவிய அலெக்சாண்டருக்குப் பின் அரியணையில் அமரும் வயதில் மகன் இல்லாததினால் அவனது நான்கு தளபதிகள் தங்களுக்குள் கிரேக்க ராஜ்ஜியத்தைப் பங்கிட்டுக்கொண்டனர். இவர்கள் நான்கு திசைகளிலும் நான்கு பாகங்களாகப் பங்கிட்டுப் பிரித்து அவர்களே அரசர்களானார்கள்.

  • மேற்கு:கேசாண்டர் (Cassander) – கிரேக்கம் மற்றும் மாசிடோனியா
  • தெற்கு:தாலமி (Ptolemy) – எகிப்து
  • வடக்கு:அண்டிகோனஸ் (Antigonus) – ஆசியா மைனர் (Lysimachus ஐ தன்னுடன் இணைத்துக்கொண்டது)
  • கிழக்கு:செலூகஸ் (Seleucus) – பாபிலோன்,பெர்சியா
  • பின்னாளில் செலுக்கியர்கள், அன்டிகோனசை வெற்றிபெற்றுத் தங்களுடன் இணைத்துக்கொண்டதால் வடதிசை ராஜாக்களானார்கள்.
  • இவர்கள்கிரேக்க சாம்ராஜ்ஜியத்தின் பகுதிகளை இப்படி நாலாகப் பிரித்ததினால், அலெக்சாண்டர் ஆளுகையின் காலத்தில் இருந்த வல்லமை கிரேக்க சாம்ராஜ்ஜியத்திற்கு இல்லாமல் போனது. (ஆனாலும் அவனுக்கு இருந்த வல்லமை அவைகளுக்கு இராது)

படம் 16: உடைந்த கிரேக்க ராஜ்ஜியம்

ஆண்டியோகஸ் எபிபேனஸ்IV

இப்படி ராஜ்ஜியம் நான்கு பகுதிகளாகப் பகுக்கப்பட்ட பின்பு நடந்த சம்பவங்களை தானியேல் தரிசனத்தில் காண்கிறார். இந்த தரிசனத்தில் சொல்லப்பட்டுள்ள சின்னதான கொம்பாகிய ஒரு ராஜாவைத் தான் பலர் ‘கடைசிகாலத்தில் வரவிருக்கும் அந்திகிறிஸ்து’ என்று தவறாக வியாக்கியானம் செய்கின்றனர்.

‘‘அவைகளில் (நாலு கொம்புகளில்) ஒன்றிலிருந்து சின்னதான ஒரு கொம்பு புறப்பட்டு தெற்குக்கும், கிழக்குக்கும் எதிராகவும், சிங்காரமான தேசத்துக்கு நேராகவும் மிகவும் பெரியதாயிற்று. அது வானத்தின் சேனைபரியந்தம் வளர்ந்து, அதின் சேனையாகிய நட்சத்திரங்களில் சிலவற்றை பூமியிலே விழப்பண்ணி, அவைகளை மிதித்தது. அது சேனையினுடைய அதிபதி பரியந்தமும் தன்னை உயர்த்தி, அவரிடத்திலிருந்து அன்றாட பலியை நீக்கிற்று; அவருடைய பரிசுத்த ஸ்தானம் தள்ளுண்டது. பாதகத்தினிமித்தம் அன்றாட பலியோடுங்கூடச் சேனையும் அதற்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது; அது சத்தியத்தைத் தரையிலே தள்ளிற்று; அது கிரியைசெய்து அநுகூலமடைந்தது.’’ (தானியேல் 8:9-12)

இதன் விளக்கத்தை தானியேலுக்கு காபிரியேல் தூதன் பின்வருமாறும் கூறுகிறார்.

‘‘அவர்களுடைய (செலூக்கிய கிரேக்க) ராஜ்யபாரத்தின் கடைசிக்காலத்திலோவென்றால், (கி.மு 167) பாதகருடைய பாதகம் நிறைவேறும்போது, மூர்க்க முகமும் சூதான பேச்சுமுள்ள சாமர்த்தியமான ஒரு ராஜா எழும்புவான். அவனுடைய வல்லமை பெருகும்; ஆனாலும் அவனுடைய சுயபலத்தினாலல்ல, அவன் அதிசயமானவிதமாக அழிம்புண்டாக்கி, அநுகூலம் பெற்றுக்கிரியைசெய்து, பலவான்களையும் பரிசுத்த ஜனங்களையும் அழிப்பான். அவன் தன் உபாயத்தினால் வஞ்சகத்தைக் கைகூடிவரப்பண்ணி, தன் இருதயத்தில் பெருமைகொண்டு, நிர்விசாரத்தோடிருக்கிற அநேகரை அழித்து, அதிபதிகளுக்கு அதிபதியாயிருக்கிறவருக்கு விரோதமாய் எழும்புவான், ஆனாலும் அவன் கையினாலல்ல வேறுவிதமாய் முறித்துப்போடப்படுவான்’’ (தானியேல் 8:23-25)

படம் 17: நான்கு கொம்புகளும் சின்னதான கொம்பும்

மேற்கண்ட இரண்டு வசனபகுதிகளும் ஒரே சம்பவத்தைக் குறிப்பதாகும். இது மகா அலெக்சாண்டரிடமிருந்து தோன்றிய நான்கு ராஜ்ஜியங்களில் ஒன்றான செலூசிட் (செலூக்கிய) ராஜ்ஜியத்தின் வழித்தோன்றலாக வந்த ‘ஆண்டியோகஸ் எபிபேனஸ் – IV’ என்ற ராஜாவை (சின்னதான கொம்பு) குறிப்பதாகும். இவனைப் பற்றி புகழ்பெற்ற வரலாற்று மற்றும் அகழ்வாராய்ச்சியாளரான ‘சைமன் சிபாக் மாண்டிபையர்’ தனது ‘எருசலேம்-உலகத்தின் வரலாறு’ என்ற புத்தகத்தில் பின்வருமாறு கூறியுள்ளார்.

  • ஆண்டியோகஸ் எபிபேனஸ்- IV என்ற செலுசிய வம்சத்து ராஜா கொக்கரிக்கும் அச்சுறுத்தலும், பித்தேறிய ஆர்ப்பாட்டமும் உடையவனாகவும், காலிகுலா மற்றும் நீரோவின் ஆரவாரப் பித்திற்கு நிகராகவே இருந்தான் (மூர்க்கமும் சூதான பேச்சுமுள்ள ராஜா எழும்புவான்).
  • அக்காலத்திய ஆட்சியாளர்கள் தங்களை ஹெர்குலிஸ் மற்றும் பிறகடவுளர்களின் வழித்தோன்றல்கள் என்று கூறிக்கொள்வது வாடிக்கை தான். ஆனால் ஆண்டியோகஸ் அவர்களுக்கெல்லாம் ஒருபடி மேலே சென்று தன்னை ‘ஒரு எபிபேனஸ் (Epiphanus)’, அதாவது ‘கடவுளின் வெளிப்பாடு’ என்று கூறிக்கொண்டான். (தன் இருதயத்தில் பெருமை கொண்டு)
  • கி.மு170ல் எகிப்தின் தாலமி வம்ச அரசை தோற்கடித்து விட்டு பின்பு எருசலேமின் மீது (சிங்காரமான தேசம்) படையெடுத்து தேவாலயத்தின் மகாபரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைந்து விலைமதிக்கமுடியாத தங்கம் உட்பட பலிபொருள்களை எடுத்துச்சென்றான்.
  • அப்போதுஅவனைக் கடவுளின் வெளிப்பாடாக ஏற்று அவன் முன்னிலையில் யூதர்கள் பலிகளை செலுத்தும் சடங்குகளை செய்யவேண்டும் என்று உத்தரவிட்டான் (சேனையின் அதிபதி பரியந்தம் உயர்த்தி). எதிர்த்த வைராக்கியம் மிக்க யூதர்களைக் கொன்றான் (சுமார் 80000). சுமார் 40000 பேரை கைதிகளாக்கினான். (பலவான்களையும், பரிசுத்த ஜனங்களையும் அழிப்பான்)
  • இந்த சமயத்தில் எகிப்தில் நடந்த கிளர்ச்சியை அடக்க சென்றான். அப்போது அவனது பெயரில் யூதர்கள் தேவாலயத்தில் பலிசெலுத்த மறுப்பதாகக் கேள்விப்பட்டு யூதமதத்தையே வேரறுக்க முடிவு செய்து கிரேக்க சாம்ராஜ்ஜியத்தின் கடைசி சில வருடமான கி.மு 167 ல் மீண்டும் எருசலேம் மீது படையெடுத்தான். யூதர்களின் ஓய்வுநாளில் அவர்கள் யுத்தம் செய்யமாட்டார்கள் என்று அறிந்து, பல தந்திர உபாயங்களால் கோட்டையை உடைத்து உள்ளே சென்றான்.
  • தேவாலயத்தில் பலிகொடுத்தல் உட்பட எந்த ஆராதனைகளும் மேற்கொள்ளக்கூடாது என்று தடைசெய்தான் (அன்றாட பலியை நீக்கி).
  • சுன்னத் (விருத்தசேதனம்) செய்வது மரணதண்டனைக்குரிய குற்றமாக்கப்பட்டது (சத்தியத்தை / பிரமாணத்தை தரையிலே தள்ளிற்று)
  • பன்றிமாம்சத்தினால் தேவாலயத்தை அசுத்தப்படுத்தி பரிசுத்தக்குலைச்சலாக்கினான்
  • கி.மு167, டிசம்பர் 6 ஆம் நாள், தேவாலயத்தில் அவனது தெய்வமான ஒலிம்பிஜியஸின் சிலை மகாபரிசுத்த ஸ்தலத்தில் நிறுவப்பட்டு அக்கடவுளின் புனிதத்தலமாக நேர்ந்துவிடப்பட்டது.
  • பரிசுத்தஸ்தலத்தின் வெளியில் இருந்த பலிபீடத்தில் அவனுக்கு பலிகொடுக்கப்பட்டது.
  • தேவாலயத்தின் புனித இடங்களில் பெண்களோடு உறவுகொண்டு, களியாட்டுகளை நிறைவேற்றினான். நிர்வாண விளையாட்டுகளை நடத்தி அதை ரசித்தான்.
  • இவன்யுத்தத்தில் மடியாமல், உடல்நலமும், மனநலமும் பாதிக்கப்பட்டு புழுபுழுத்து இறந்தான். (ஆனாலும் அவன் கையினால் அல்ல, வேறுவிதமாய் முறித்துப்போடப்படுவான்-தானியேல் 8:25)

யார் இந்த மக்கபேயர்

வரலாறு மட்டுமல்லாமல், கத்தோலிக்க வேதாகமத்தில் உள்ள தள்ளுபடி ஆகமங்களில் ஒன்றான மக்கபேயர்-1,2 புத்தகம் முழுவதும் இந்த செலுக்கிய மன்னர்கள் யூதர்களுக்கு இழைத்த கொடுமைகளைப் பற்றி சொல்கிறது. மக்கபேயர் முதலாம் அதிகாரம் 1-15 வசனங்கள் மகா அலெக்சாண்டர் மற்றும் அவனது ராஜ்ஜியம் பிரிக்கப்பட்டதைப் பற்றியும், 16-64 வசனங்கள் ஆண்டியோகஸ் எபிபேனஸ் செய்த அட்டூழியங்களைப் பற்றியும் விலாவாரியாகச் சொல்கிறது. இரண்டாம் அதிகாரத்திலிருந்து அவனை எதிர்த்துப் போர் செய்த மத்தத்தியா என்ற தீவிர யூதர் மற்றும் அவரது மகன்களின் வீரச்செயல்கள் பற்றியும் சொல்கிறது. அவரது மூன்றாம் மகனான யூதா என்ற மக்கபே தான் இந்த புத்தகங்களின் கதாநாயகன்.

‘‘இரண்டு ஆண்டுகளுக்குப்பின் (ஆண்டியோகஸ்) மன்னன் வரி தண்டுவதற்காக ஒருவனை யூதேயாவின் நகரங்களுக்கு அனுப்பி வைத்தான். அவன் பெரும் படையோடு எருசலேம் சேர்ந்தான்.அமைதிச் செய்தியுடன் தான் வந்திருப்பதாக அவன் எருசலேம் மக்களிடம் நயவஞ்சகமாகக் கூறி, அவர்களது நம்பிக்கையைப் பெற்றான். ஆனால் அவன் திடீரென்று நகர்மீது பாய்ந்து கடுமையாகத் தாக்கி, அவர்களுள் பலரைக் கொன்றான்;’’ (1 மக்கபேயர் 1:29,30)

‘‘(செலுசிய ஆட்சியின்) நூற்று நாற்பத்தைந்தாம் ஆண்டு கிஸ்லேவு மாதம் பதினைந்தாம் நாள் அந்தியோக்கும் அவனுடைய ஆள்களும் பலிபீடத்தின் மேல் நடுங்க வைக்கும் தீட்டை நிறுவினார்கள்; யூதேயாவின் நகரங்களெங்கும் சிலை வழிபாட்டுக்கான பீடங்களைக் கட்டினார்கள்; வீட்டுக் கதவுகளுக்கு முன்பும் வீதிகளிலும் தூபம் காட்டினார்கள்; தங்கள் கண்ணில் பட்ட திருச்சட்ட நூல் ஒவ்வொன்றையும் கிழித்து நெருப்பிலிட்டு எரித்தார்கள் (அது சத்தியத்தைத் தரையிலே தள்ளிற்று). எவரிடம் உடன்படிக்கை நூல் காணப்பட்டதோ, யார் திருச்சட்டத்தின்படி நடந்துவந்தார்களோ அவர்கள் அனைவரும் கொல்லப்படவேண்டும் என்பது மன்னனது கட்டளை. இவ்வாறு ஒவ்வொரு மாதமும் நகரங்களில் காணப்பட்ட இஸ்ரயேலருக்கு எதிராக அவர்கள் வன்முறையைப் பயன்படுத்தினார்கள்; (1 மக்கபேயர் 1:54-58)

அவனது மரணத்தை ஒட்டிய சம்பவங்கள் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

இச்செய்தியைக் (எகிப்தில் ஏற்பட்ட தோல்வியை) கேட்ட மன்னன் அதிர்ச்சியடைந்து மிகவும் நடுங்கினான்; தான் திட்டமிட்டவண்ணம் நடவாததால் துயரம் தாங்காது நோயுற்றுப் படுத்த படுக்கையானான்; கடுந்துயரம் அவனை ஆட்கொண்டதால் அங்குப் பல நாள் கிடந்தான்; தான் விரைவில் சாகவிருந்ததை உணர்ந்தான். ஆகவே அவன் தன் நண்பர் எல்லாரையும் அழைத்து, “என் கண்களினின்று தூக்கம் அகன்றுவிட்டது; கவலையினால் என் உள்ளம் உடைந்து விட்டது ‘எவ்வளவு துயரத்திற்கு ஆளானேன்! இப்போது எத்துணைப் பெரும் துயரக்கடலில் அமிழ்ந்துள்ளேன்! நான் ஆட்சியில் இருந்தபோது அன்பு செலுத்தி, அன்பு பெற்றேனே’ என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன். ஆனால் எருசலேமில் நான் புரிந்த தீமைகளை இப்போது நினைவுகூர்கிறேன்; அங்கு இருந்த பொன், வெள்ளிக் கலன்கள் அனைத்தையும் கவர்ந்து சென்றேன்; யூதாவில் குடியிருந்தவர்களைக் காரணமின்றி அழித்தொழிக்கும்படி கட்டளையிட்டேன். இதனால்தான் இந்தக்கேடுகள் எனக்கு வந்துற்றன என நான் அறிவேன். இப்போது அயல்நாட்டில் துயர மிகுதியால் அழிந்துகொண்டிருக்கிறேன்” என்று கூறினான். (செலூக்கிய ஆட்சியின்) நூற்று நாற்பத்தொன்பதாம் ஆண்டு (கி.மு 163) பாரசீகத்திலேயே அந்தியோக்கு மன்னன் இறந்தான்.                         (1 மக்கபேயர் 6:11-16)

சில எடுத்துக்காட்டுகளை மட்டும் உங்களுக்கு எழுதியுள்ளேன். உங்களுக்கு இதைப்பற்றி தெரிந்துகொள்ள ஆர்வம் இருந்தால் கத்தோலிக்க வேதாகமத்திலுள்ள மக்கபேயரில் சொல்லப்பட்டுள்ள வரலாற்றுப் பதிவுகளை வாசித்துப் பாருங்கள்.

அந்திகிறிஸ்துவின் ட்ரெயிலர்

எனவே தானியேல் 8 ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள இந்த நபர் ‘அந்திகிறிஸ்து என்னும் தனிமனிதன் அல்ல’. அந்திகிறிஸ்துவின் முழுபலத்தோடும் செயல்பட்ட, சாத்தானால் உபயோகப்படுத்தப்பட்ட ஆண்டியோகஸ் எபிபேனஸ்- IV ன் தலைமையிலான சிறு ராஜ்ஜியம் ஆகும். அவன் தன்னால் தரையின் மேல் கப்பல் ஓட்ட முடியும்; கடலின்மேல் நடக்கவும் அவைகளுக்குக் கட்டளையிடவும் முடியும்; உயர்ந்த மலைகளைத் துலாக்கோலால் தூக்கவும் முடியும் என்று பெருமை கொண்டான் என்று மக்கபேயர் கூறுகின்றது. இது அவன் தேவனுக்கு நிகராகத் தன்னை நிறுத்திக்கொள்ள முயற்சி செய்ததற்கான சான்று.

‘‘இவ்வாறு இயல்புக்கு மீறிய இறுமாப்பால் தூண்டப்பட்டு, கடல் அலைகளுக்குத் தன்னால் கட்டளையிட முடியும் என்று நினைத்தவன், உயர்ந்த மலைகளைத் துலாக்கோலில் வைத்துத் தன்னால் நிறுத்தமுடியும் என்று கற்பனை செய்தவன், அந்தோ தரையில் வீழ்த்தப்பட்டான்! கடவுளின் ஆற்றல் அனைவருக்கும் வெளிப்படும் வகையில் ஒரு தூக்குக் கட்டிலில் வைத்துத் தூக்கிச் செல்லப்பட்டான். அக்கொடியவனின் உடலிலிருந்து புழுக்கள் ஒன்றாய்த் திரண்டு எழுந்தன. அவன் கடுந்துன்ப துயரோடு வாட, குற்றுயிராய்க் கிடந்தபடியே அவனது சதை அழுகி விழுந்தது; அதனின்று எழுந்த கொடிய நாற்றத்தால் அவனுடைய படை முழுவதும் அருவருப்பு அடைந்தது. விண்மீன்களைத் தன்னால் தொடமுடியும் என்று சற்றுமுன் எண்ணிக்கொண்டிருந்த அவனை, பொறுக்க முடியாத நாற்றத்தின் பொருட்டு அப்போது எவனும் தூக்கிச் செல்ல இயலவில்லை.’’ (2 மக்கபேயர் 9:8-10)

பல போதகர்கள் தானியேல் 8 ல் சொல்லப்பட்ட இந்த நபர் தான் அந்திகிறிஸ்து என்று வரலாற்றை சரியாக புரிந்துகொள்ளாமல் போதித்துவருவது வருந்தத்தக்க ஒன்று. இது அந்திகிறிஸ்து கடைசி 7 வருடத்தில் தான் வருவான் என்று பரப்புரை செய்யப்பட்ட ரோமன் கத்தோலிக்க கொள்கையை இன்னும் நம்பிக்கொண்டிருப்பதன் விளைவே தவிர, கள்ளப்போதகம் என்று சொல்லமுடியாது. ஆனால் இதைப் படித்த பிறகும் அவ்வாறு போதிப்பார்களேயாகில் அவர்களும் அந்திகிறிஸ்துவாகிய சாத்தானின் வஞ்சனைக்கு பலியாகிவிட்டார்கள் என்றே சொல்வேன்.

சுருக்கமாக சொல்லப்போனால், மத்திய காலங்களில் வந்து உலகத்தை 1260 வருடங்கள் ஆட்சிசெய்து, இன்னமும் கிரியைகளை நடப்பித்துக்கொண்டிருக்கும் ‘உண்மையான அந்திகிறிஸ்துவின் ராஜ்ஜியமாகிய ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியத்தின்’ செயல்பாடுகளுக்கும், அதன் தலைவரான ‘சின்னக்கொம்பாகிய போப்புகளுக்கும்’ முன்னோடியான ஒரு ‘ட்ரெயிலர்’ தான் ஆண்டியோகஸ் எபிபேனஸ்’ ஆவான். என்ன இவன், நம் சபைகளில் ஒன்றையே சாடுகிறான் என்று நினைக்கவேண்டாம். இதுவும் ஒரு ட்ரெயிலர் தான். நாம் பார்க்கவேண்டியது இன்னும் நிறைய உள்ளது.

2300 இராப்பகலைப் பற்றிய தரிசனம்

தீர்க்கதரிசன புத்தகங்களின் ஒரு சிறப்பு என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட நபரை/ராஜாவை/தேசத்தைப் பற்றிய தீர்க்கதரிசனம் சொல்லப்பட்டுகொண்டிருக்கும்போதே, திடீரென்று மேசியாவைப் பற்றிய அல்லது கடைசிகால சம்பவங்களைப் பற்றிய தீர்க்கதரிசன வார்த்தைகள் வெளிப்படுவது தான். ஏசாயா, எரேமியா, சகரியா உட்பட பெரும்பாலான தீர்க்கதரிசன புத்தகங்களிலும் இந்த எழுத்து நடைமுறையைக் காணலாம். ஏன், மோசேயின் ஆகமங்கள், சங்கீதம், யோபுவில் கூட இந்த வித்தியாசமான எழுத்து நடைமுறை பரிசுத்த வேதாகமத்தில் பின்பற்றப்பட்டுள்ளது. இன்னொரு சிறப்பு என்னவென்றால் தீர்க்கதரிசன சம்பவங்கள் காலக்கிரமத்தின் அடிப்படையில் கூறப்படாமல், ஆங்காங்கே பிரித்துப் பிரித்து சொல்லப்பட்டிருக்கும்; நாம் தான் அவற்றை பரிசுத்த ஆவியானவரின் துணையோடு கூட்டிசேர்த்து விளங்கிக்கொள்ள வேண்டும். இந்த இரண்டு நடைமுறைகளும் தானியேலிலும் பின்பற்றப்பட்டுள்ளது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

இந்த நடைமுறையின் படி தானியேல் 9 ஆம் அதிகாரத்தில் 70 வாரங்களைப் பற்றியும், அதன் முடிவில் மேசியா சங்கரிக்கப்படுவதைக் (சிலுவையில்) குறித்தும் சொல்லப்பட்டுள்ளது. தானியேலின் தரிசனங்களில் இயேசுவின் இரண்டாம் வருகையைப் பற்றி சங்கேத பாஷைகளில் பல இடங்களில் சொல்லப்பட்டுள்ளது. இதைப்போல தானியேல் 8 ஆம் அதிகாரத்தில் கிரேக்க சாம்ராஜ்ஜியத்தைப் பற்றியும், ஆன்டியோகஸ் எபிபேனஸைப் பற்றியும் கண்ட தரிசனத்தை சொல்லிவிட்டு, 2300 இராப்பகல் (நாட்கள்) முடியும் மட்டும் அந்த தரிசனத்தின் காரியங்கள் நடக்கும் என்றும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

‘‘பரிசுத்தவானாகிய ஒருவன் பேசக்கேட்டேன்; அப்பொழுது வேறொரு பரிசுத்தவான் பேசினவரை நோக்கி, அன்றாட பலியைக்குறித்தும் பாழ்க்கடிப்பை உண்டாக்கும் பாதகத்தைக்குறித்தும், பரிசுத்த ஸ்தலமும் சேனையும் மிதிபட ஒப்புக்கொடுக்கப்படுவதைக்குறித்தும், உண்டான தரிசனம் எதுவரைக்கும் இருக்கும் என்று கேட்டான். அவன் என்னை நோக்கி: இரண்டாயிரத்து முந்நூறு இராப்பகல் செல்லும்வரைக்கும் இருக்கும், பின்பு பரிசுத்த ஸ்தலம் சுத்திகரிக்கப்படும் என்றான்.’’ (தானியேல் 8:13,14)

இந்த வசனத்தில் ‘உண்டான தரிசனம்’ என்பது ஆட்டுக்கடாவுக்கும், வெள்ளாட்டுகடாவுக்கும் நடந்த யுத்தத்தில் ஆரம்பித்தது என்பது உங்களுக்கு நினைவிருக்கும் என்று விசுவாசிக்கிறேன். அப்படி இந்த தரிசனத்தில் சொல்லப்பட்ட யுத்தங்களின் முடிவில் வந்த கிரேக்க ராஜ்ஜியத்தின் கடைசி செலுக்கிய ராஜாவான ஆண்டியோகஸ் எபிபேனஸ், எருசலேம் தேவாலயத்தின் பலியை நிறுத்தி, பரிசுத்த ஸ்தலத்தைப் பாழாக்கின அட்டூழியங்களைக் கடந்து, அதன் பின்பும் பரிசுத்த ஸ்தலமாகிய எருசலேமும், பரிசுத்த ஜனமாகிய இஸ்ரவேலும் 2300 இராப்பகல் அல்லது நாட்கள் புறஜாதியாரால் மிதிபட/ ஆளப்பட ஒப்புக்கொடுக்கப்படும் என்றும், அதன் முடிவிலே பரிசுத்த ஸ்தலமாகிய எருசலேம் சுத்திகரிக்கப்படும் (திரும்ப யூதர்கள் கையில் கொடுக்கப்படும்) என்பதையும் குறிப்பதாகும்.

தீர்க்கதரிசன நாட்களின் கணக்கு

தீர்க்கதரிசன மொழியின்படி ஒரு நாள் என்பது ஒரு தீர்க்கதரிசன வருடமாகும். அப்படியானால் 2300 நாட்கள் என்பது 2300 வருடங்களைக் குறிப்பதாகும்.

‘‘நீங்கள் தேசத்தை சுற்றிப்பார்த்த நாற்பதுநாள் இலக்கத்தின்படியே, ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வருஷமாக, நீங்கள் நாற்பது வருஷம் உங்கள் அக்கிரமங்களைச் சுமந்து, என் உடன்படிக்கைக்கு வந்த மாறுதலை உணருவீர்கள்.’’ (எண்ணாகமம் 14:34)

‘‘அவர்களுடைய (இஸ்ரவேலருடைய) அக்கிரமத்தின் வருஷங்களை உனக்கு நாட்கணக்காய் எண்ணக் கட்டளையிட்டேன்; முந்நூற்றுத்தொண்ணூறு நாட்கள்வரைக்கும் நீ இஸ்ரவேல் வம்சத்தாரின் அக்கிரமத்தை சுமக்கவேண்டும்.’’ (எசேக்கியேல் 4:5)

தரிசனத்தின் ஆரம்பப்புள்ளி

இந்த 2300 வருடங்களின் ஆரம்பப்புள்ளி, தரிசனத்தின் ஆரம்பமான ஆட்டுக்கடாவுக்கும் (மேதிய-பெர்சிய ராஜ்ஜியம்) வெள்ளாட்டுக்கடாவுக்கும் (கிரேக்கம்) இடையே நடந்த யுத்தமாகும். இது ஏற்கனவே நாம் முந்தைய அத்தியாயத்தில் பார்த்தபடி கி.மு 334 ஆகும். வரலாறும் இதைத் தெளிவாகப் பதிவு செய்துள்ளது. இந்த தரிசனம் ‘2300 இராப்பகல் சென்ற பிறகு பரிசுத்த ஸ்தலம் சுத்திகரிக்கப்படும் வரை’ நீடிக்கும் என்பதால், பரிசுத்த நகரமாகிய எருசலேம் பல நூற்றாண்டுகள் புறஜாதி ராஜாக்களால் ஆளப்பட்டு, அதன்பின்பு இஸ்ரவேலர் கையில் ஆளுகைக்கு ஒப்புக்கொடுக்கப்படும் காலத்தைக் குறிக்கும். இந்த ஆண்டு தான் 2300 தரிசன வருடங்களின் முடிவு ஆண்டாக இருக்கும்.

எருசலேம் எப்போது யூதர்களின் ஆளுகைக்கு வந்தது?

எருசலேம் கி.மு 605 ல் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் கையில் ஒப்புக்கொடுக்கப்பட்டு, பின்பு அவனால் அழிக்கப்பட்டது. பெர்சியனாகிய கோரேசின் ஆணையின்படி அது 70 வருடங்கள் கழித்து குடியேற்றப்பட்டாலும், கடைசி வரை பூமியில் அடுத்தடுத்து தோன்றிய (மேதிய-பெர்சிய, கிரேக்க,ரோம) ராஜ்ஜியங்களாலேயே ஆளப்பட்டது. இயேசுகிறிஸ்துவின் காலத்திலும் ரோமர்கள் கட்டுப்பாட்டிலேயே இருந்தது என்பது நமக்கு நன்றாகத் தெரிந்த ஒன்று. அந்த ரோம சாம்ராஜ்ஜியத்தை எதிர்த்து யூதர்கள் கி.பி 67 முதல் 70 வரை புரட்சி செய்த காரணத்தினால் ரோம தளபதி வெஸ்பாசியன் மற்றும் அவனது மகன் தீத்துவினால் (டைட்டஸ்) இஸ்ரவேலரில் பல இலட்சம் பேர் கொல்லப்பட்டு, இயேசுவின் வாக்கின்படியே எருசலேம் தேவாலயம் இடிக்கப்பட்டு, யூதர்கள் ‘உலகமெங்கும்’ சிதறடிக்கப்பட்டார்கள். கி.பி 70 க்கு பின் இஸ்ரவேல் என்ற தேசமே இல்லாமல் பாலஸ்தீனம் என்று அழைக்கப்பட்டது.

இப்படியாக தேசமே இல்லாமல் சுமார் 1850 வருடங்கள் உலகின் பல நாடுகளிலும் அகதிகளாக வாழ்ந்த யூதர்கள், இரண்டாம் உலகப்போரின்போது ஹிட்லரால் நடத்தப்பட்ட யூத இனப்படுகொலைக்குப் பின் தங்களுக்கு என்று மீண்டும் ஒரு (இஸ்ரவேல்) தேசம் தேவை என்பதை உணர்ந்தனர். அப்போது இங்கிலாந்து மற்றும் ஐக்கியநாடுகளின் உதவியுடன் பாலஸ்தீனத்தில் ஒரு பகுதி பிரித்து கொடுக்கப்பட்டு இஸ்ரவேல் என்ற தேசம் கி.பி 1948 ஆம் ஆண்டு மீண்டும் உருவாகியது. அப்பொழுது உருவாகிய இஸ்ரவேலுக்கு ‘டெல் அவிவ்’ தான் தலைநகராக இருந்தது. எருசலேம் நகரம் யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு புனிதத்தலமாக இருந்தபடியால் பிரச்சினை வராதபடிக்கு ஐக்கியநாடுகள் கண்காணிப்பில் இருந்தது. ஆனால் அதன் ஆட்சியதிகாரம் ஜோர்டானின் கையில் இருந்ததால் இஸ்ரவேலரால் 1967 வரை எருசலேம் மேல் ஆளுகை செய்ய முடியவில்லை.

ஆறு நாள் இஸ்ரவேல்அரபு யுத்தம்

கி.பி 1967 ஆம் ஆண்டு எகிப்து, ஜோர்டான், சிரியா நாடுகள் உட்பட சில அரபுநாடுகள் இஸ்ரவேலை உலக வரைபடத்திலிருந்து அழிக்கப்போவதாக சொல்லி கங்கனம் கட்டி போர் தொடுத்தன. ஆனால் உலக போரியல் வரலாற்றிலேயே யாராலும் நம்பமுடியாத அளவிற்கு, குட்டி நாடான இஸ்ரவேல், ஐந்து பெரிய நாடுகளின் பெரும்படைகளை எதிர்த்து ‘ஆறே நாட்களில்’ (6 Days war) வெற்றிபெற்று கர்த்தரின் தேசம் என்ற பெருமையைத் தக்கவைத்துக்கொண்டது. அது மட்டுமல்லாமல் பரிசுத்த நகரம் மற்றும் ராஜாவின் சீயோன் பர்வதம் என்றழைக்கப்பட்ட எருசலேமையும் சுமார் 1878 வருடங்கள் கழித்து தங்கள் வசம் கொண்டுவந்தது. அத்தனை வருடங்களாக புறஜாதியாரால் மிதிக்கப்பட்ட எருசலேம் யூதர்கள் கையில் வந்தது. இந்த 1967 ஆம் ஆண்டு தான் நாம் பார்த்துக்கொண்டிருக்கும் 2300 வருட தரிசனத்தின் முடிவுபுள்ளியாகும்.

நாம் ஏற்கனவே பார்த்தபடி இந்த தரிசனத்தின் ஆரம்பப்புள்ளி கி.மு 334 ஆகும்; முடிவுப்புள்ளி கி.பி 1967 ஆகும். இப்போது இதற்கு இடைப்பட்ட வருடங்களைக் கணக்கிட்டால் மிகச்சரியாக 2300 வருடங்கள் வரும். நம் தேவனின் ஞானமும், முன்னறிதலும் நம் கற்பனைக்கு எட்டாதவைகள் என்று இப்போது புரிகிறதா? இதே சம்பவங்களைத் தான் இயேசுவும் பின்வருமாறு சொல்லியுள்ளார்.

‘‘அந்நாட்களில் (கி.பி70) கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ, பூமியின்மேல் மிகுந்த இடுக்கணும் இந்த ஜனத்தின்மேல் (யூதர்கள்) கோபாக்கினையும் உண்டாகும். பட்டயக்கருக்கினாலே விழுவார்கள், சகல புறஜாதிகளுக்குள்ளும் சிறைப்பட்டுப்போவார்கள்; புறஜாதியாரின் காலம் நிறைவேறும் வரைக்கும் (கி.பி 1967) எருசலேம் புறஜாதியாரால் மிதிக்கப்படும்’’ (லூக்கா 21:24)

அப்படியானால் 2300 வருட தரிசனம் முடிந்த கி.பி.1967 ஆண்டு புறஜாதியாரின் காலம் நிறைவுபெற்றுவிட்டது என்ற கணக்கும் நமக்குக் கிடைக்கின்றது.

தானியேல் 11 ல் கிரேக்க சாம்ராஜ்ஜியம்

நான் ஏற்கனவே சொன்னதுபோல தானியேல் 11:35 வரை முழுவதும் கிரேக்க சாம்ராஜ்ஜியமும் அதன் வழித்தோன்றலாகிய செலுக்கிய – தாலமி ராஜாக்களைப் பற்றியதுமான தீர்க்கதரிசனமாகும்.

‘‘இப்போது நான் மெய்யான செய்தியை உனக்கு அறிவிப்பேன்; இதோ, இன்னும் மூன்று ராஜாக்கள் பெர்சியாவில் எழும்புவார்கள்; அதின்பின்பு நாலாம் ராஜாவாயிருப்பவன் எல்லாரிலும் மகா ஐசுவரிய சம்பன்னனாகி, தன் ஐசுவரியத்தினால் பலங்கொண்டு, கிரேக்கு ராஜ்யத்துக்கு விரோதமாகச் சகலரையும் எழுப்பிவிடுவான். ஆனாலும் பராக்கிரமமுள்ள ஒரு (கிரேக்க) ராஜா எழும்பி, பிரபலமாய் ஆண்டு, தனக்கு இஷ்டமானபடி செய்வான். அவன் எழும்பினபின்பு, அவனுடைய ராஜ்யம் உடைந்துபோய், வானத்தின் நாலு திசைகளிலும் பகுக்கப்படும்; ஆனாலும் அது அவனுடைய சந்ததியாருக்கு அல்ல, அவன் செய்த ஆளுகையின்படியும் அல்ல; அவனுடைய ராஜ்யம் பிடுங்கப்பட்டு,அவனுடையவர்களல்லாத வேறே பேர்களிடமாய்த் தாண்டிப்போம்.’’ (தானியேல் 11:2-4)

இந்த ஆரம்ப வசனங்கள் மேதிய-பெர்சியரிடமிருந்து ராஜாங்கம் எப்படி மகா அலெக்சாண்டரிடம் சென்றது என்பது பற்றியும், அவனது மரணத்திற்குப் பின் அவனது தளபதிகள் பங்கிட்டதைப் பற்றியும் விளக்குகிறது. இது மேலே நாம் விளக்கம் பார்த்து முடித்த தானியேல் 8 ஆம் அதிகாரத்தின் விரிவாக்கம் ஆகும். எனவே ஆரம்ப வசனங்களை நான் மீண்டும் விளக்காமல், நான்கு ராஜ்ஜியங்களாகப் பிரிந்த கிரேக்க சாம்ராஜ்ஜியத்தில் பலத்தவைகளாக இருந்த இரண்டு ராஜ்ஜியங்களிடையே நடந்த யுத்தங்களைப் பற்றி தானியேலிலிருந்து பார்ப்போம்.

தென்திசைவடதிசை ராஜ்ஜியங்களிடையேயான யுத்தங்கள்

தானியேல் 11 ஆம் அதிகாரம் 5 ஆம் வசனத்திலிருந்து 29 வரை இந்த இரண்டு ராஜ்ஜியங்களிடையே நடந்த யுத்தங்களையும், அவ்வப்போது அவர்கள் சம்பந்தங்கலந்து பெண்கொடுத்து, பெண் எடுத்து சமாதானம் செய்துகொள்ள முயற்சித்ததையும் விரிவாக விளக்குகிறது. இதை நான் முழுவதும் வசனவாரியாக விளக்கினால் நிச்சயம் உங்களுக்கு தலை சுற்றிவிடும். எனவே இந்த யுத்தங்களையும், சம்பந்தங்களையும், அதில் சம்பந்தப்பட்டவர்களையும் சுருக்கமாக அட்டவணைப்படுத்தி இருக்கிறேன். நீங்கள் ஆர்வமுடன் இருந்தால் கூகுள் விக்கிபீடியாவில் ‘Six Syrian wars’ என்று தேடிப்பார்த்தால் முழு விவரத்தையும் ஒப்பிட்டு அறிந்துகொள்ளலாம். இந்த யுத்தங்கள் நடைபெற்ற காலக்கட்டம் சுமார் கி.மு 312 முதல் ஆண்டியோகஸ் எபிபேனஸ்- IV எருசலேமில் செய்த அட்டூழியத்தின் காலமான கி.மு 168 வரையாகும். இதில் சொல்லப்பட்டிருக்கும் தென்திசை ராஜா என்பது எகிப்தின் தாலமி வம்ச ராஜாக்களையும், வடதிசை ராஜா என்பது தற்போதைய சிரியாவில் ஆண்ட செலுக்கிய வம்ச ராஜாக்களையும் குறிக்கும்.

படம் 19: தெற்கு மற்றும் வடதிசை ராஜ்ஜியங்கள்

நீங்கள் பரிசுத்த வேதத்தில் தானியேல் 11 ஆம் அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு வாசித்தால் எளிதில் புரியும். இவை அனைத்தையும் வரலாறு தெளிவாகப் பதிவு செய்துள்ளது. ஆனால் தானியேல் சுமார் 300 வருடங்களுக்கு முன்பே தீர்க்கதரிசனமாக உரைத்துள்ளார் என்றால் நம் தேவனின் வல்லமை என்ன என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும்.

அட்டவணை 8: ஆறு சிரிய யுத்தங்கள்

சிரிய யுத்தம்

கால ம்

வட திசை ராஜாக்கள் (செலுக்கியர்)

படை யெடுப்பு/ சம்பந்தம்

தென் திசை ராஜா க்கள் எகிப்து

வசன ஆதா ரம்

முதல் ராஜா

கி.மு 312

செலுகஸ் நிகேடர் (அலெக்சா ண்டரின் தளபதி)

ராஜ்ஜியம் ஸ்தாபித்த காலம்

தாலமி-1 (அலெக்சா ண்டரின் தளபதி)

5

முதல் யுத்தம்

கி.மு 274 – 271

ஆண்டி யோகஸ்-I

படையெடுப்பு

தாலமி-II

5

2வது யுத்தம்

கி.மு 260-253

ஆண்டி யோகஸ்-II (முதல் மனைவி லயோடைசை தள்ளினார்)

யுத்த முடிவில் சமாதான உடன் படிக்கையாக, தாலமி-II ன் மகளும், தாலமி-III ன் சகோதரி யுமாகிய பெரினிசை திருமணம் செய்தார்

தாலமி-II

6

3வது யுத்தம்

கி.மு 246-241

செலுகஸ் – II

பெரினைசின் கணவனான ஆண்டி யோகஸ் II வை அவனது முதல் மனைவி விஷம் வைத்து கொன்றதால் நடந்த யுத்தம்

தாலமி-III (பெரி னிசின் சகோ தரன்)

7.9

4வது யுத்தம்

கி.மு 219-217

ஆண்டி யோகஸ்- III (Antiochus the great)

இந்த ஆண்டி யோகஸ் இஸ்ரவேலை முதன் முறையாகப் பிடித்தான்

தாலமி IV

10 – 12

5 வது யுத்தம்

கி.மு 202-195

ஆண்டி யோகஸ்- III (Antiochus the great)

யுத்த முடிவில் சமாதான முயற்சியாக கிளியோ பாட்ரா-I ஐ தாலமி-V க்கு கொடுத்தான்.

தாலமி V

13 – 20

6 வது யுத்தம் மற்றும் இந்த ராஜாக் களின் முடிவு

கி.மு 170-168

ஆண்டி யோகஸ் எபிபேனஸ் –IV (அந்தி கிறிஸ்துவின் ராஜ்ஜியத்திற்கு முன்னடையாளம் )

மகா பரிசுத்த ஸ்தலத்தில் அருவருப்பை வைத்தவன் (தானியேல் 8:9-13;23-25 ல் சொல்லப் பட்டதின் விரிவான தரிசனம்

தாலமி VI

21 – 35

இந்த தானியேல் 11 ஆம் அதிகாரத்தின் சில சங்கேத வார்த்தைகளுக்கான விளக்கம்.

  • வேர்களின் கிளை – சகோதரன்
  • அநேகமாயிரம் பேரை மடிவிப்பான் மிகப்பெரிய யுத்தம் (4வது யுத்தம்/Battle of Raphia or Gaza வரலாற்றிலே மிகப்பெரிய யுத்தங்களுள் ஒன்றாக சொல்லப்படுகிறது)
  • உன்ஜனத்திலுள்ள துண்டரிக்காரர்- இஸ்ரவேலின் வன்முறையாளர் (Robbers)
  • சிங்கரமான தேசம் – இஸ்ரவேல்
  • தீவுகள்-தீரு, சீதோன்
  • தண்டல்காரனைத் திரியப்பண்ணுகிறவன் – வரி வசூல் செய்யும் அதிகாரி
  • அவமதிக்கப்பட்ட ஒருவன்- மிகமோசமான, இழிந்த
  • பரிசுத்தஸ்தலம் – எருசலேம் தேவாலயம்
  • பாழாக்கும் அருவருப்பு – அந்திய தெய்வத்தின் சிலை
  • ஜனங்களில் அறிவாளிகள்- செலுக்கியர்களை எதிர்த்து நின்ற மக்கபேயர்கள்

மீண்டும் ஆண்டியோகஸ் எபிபேனஸ்IV

தானியேல் 11 ஆம் அதிகாரம் 21 லிருந்து 35 வரை இவனைப் பற்றி மிக விளக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இது நான் மேலே சொன்ன ஆறாவது சிரிய யுத்தம் மற்றும் இவனது எருசலேம் மீதான படையெடுப்பைப் பற்றிய தரிசனமாகும். இவனது தந்தையான மகா ஆண்டியோகஸ் – III ன் மரணத்திற்குப் பின், ஆண்டியோகஸ் எபிபேனஸ் – IV எப்படி வஞ்சகமாக ஆட்சியைப் பிடித்தான் என்பதில் ஆரம்பித்து, அவனது எகிப்திய படையெடுப்பு, எருசலேமில் செய்த அட்டூழியங்கள் வரிசையாகக் கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தானியேல் 8 ஆம் அதிகாரத்தில் இவன் எருசலேம் தேவாலயத்தில் செய்த அசுத்தம், இன்னமும் கூடுதல் விவரத்தோடே இந்தப் பகுதியில் சொல்லப்பட்டிருக்கிறது. தானியேல் 11:35 வரை கிரேக்க ராஜ்ஜியத்தின் முதல் ராஜாவான அலெக்சாண்டர் முதல் பிரிவடைந்த ராஜ்ஜியத்தின் கடைசி ராஜாவான ஆண்டியோகஸ் எபிபேனஸ் வரை சொல்லப்பட்ட ஒரு அதிகாரமாகும்.

‘‘ஆனாலும் அவனிடத்திலிருந்து (ஆண்டியோகஸ் எபிபேனஸ்) புறப்பட்டசேனைகள் எழும்பி, அரணான பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, அன்றாடபலியை நீக்கி, பாழாக்கும் அருவருப்பை அங்கே வைப்பார்கள்.’’ (தானியேல் 11:31)

இந்த சம்பவம் நாம் ஏற்கனவே பார்த்த ஆண்டியோகஸ் எபிபேனசால் எருசலேம் தேவாலயத்தில் ஒலிம்பிஜியஸின் சிலை நிறுவப்பட்டு, பல அசுத்தங்கள் செய்யப்பட்ட சம்பவமே. இதைத்தான் இயேசுவும் கி.பி 70 ல் எருசலேம் அழிக்கப்படும்போது, தேவாலயத்தில் ‘இதே போன்று ரோமர்களும் வந்து நிற்பார்கள்’ என்று தீர்க்கதரிசனமாகச் சொன்னார். அப்படி ரோமர்கள் வந்து நிற்கும்போது நீங்கள் எல்லாரும் தப்பியோடுங்கள் என்று சீடர்களை எச்சரித்தார். இதைப் பற்றி விரிவாக அடுத்த அத்தியாயங்களில் பார்க்க இருக்கிறோம்.

‘‘மேலும்,பாழாக்குகிற அருவருப்பைக் குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே. வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன். நீங்கள் அதைப் பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கக் காணும்போது, யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள்’’ (மத்தேயு 24:15,16)

கிரேக்க ராஜ்ஜியத்தின் வீழ்ச்சி

இப்படியாக மகா அலெக்சாண்டரால் ஸ்தாபிக்கப்பட்ட கிரேக்க சாம்ராஜ்ஜியம் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்தது. கடைசியில் மிச்சமிருந்த எகிப்து மற்றும் செலுக்கிய ராஜாக்கள் தங்களுக்குள் போரிட்டுக் கொண்டதால் அவர்களாகவே அழிந்ததுடன் அப்போதைக்கு (கி.மு இரண்டாம் நூற்றாண்டு) பெரிய ராஜ்ஜியமாக உருவாகிக்கொண்டிருந்த ரோம அரசர்களின் படையெடுப்புக்கு எளிதில் பலியாகினர். இந்த சூழ்நிலை சுமார் கி.மு 166 லிருந்து ரோம சாம்ராஜ்ஜியம் உலக வல்லரசாகத் தலை தூக்க வழிவகுத்தது. கர்த்தர் தான் ஒரு ராஜ்ஜியத்தை தள்ளி இன்னொருவனுக்கு ராஜ்ஜியத்தைக் கொடுக்கிறார் என்பது எவ்வளவு உண்மை பார்த்தீர்களா?

ராஜ்ஜியங்களைப் பற்றி தானியேல்

பாபிலோனில் ஆரம்பித்து, கடைசி காலத்தில் இயேசுவின் இரண்டாம் வருகை வரைக்கும் நடக்க இருக்கும் சம்பவங்களை ‘தொடர்ச்சியாகக்’ கூறிய தானியேல் புத்தகம் பாபிலோன், மேதிய-பெர்சியா மற்றும் கிரேக்க சாம்ராஜ்ஜியங்களை விலாவாரியாக சொல்லிவிட்டு, ரோமன் கத்தோலிக்க சாம்ராஜ்ஜியத்தைப் பற்றி 11:36-39 ல் அறிமுகம் செய்கிறது. பின்பு வந்த ரோமன் கத்தோலிக்க சாம்ராஜ்ஜியமான ‘சின்னக்கொம்பைப்’ பற்றி தானியேல் 7 ல் நன்றாக விளக்கிவிட்டு, மேலும் இயேசுவின் முடிவில்லா சாம்ராஜ்ஜியத்தைப் பற்றி நமக்கு ஒரு அறிமுகம் மட்டும் கொடுத்துள்ளது. இயேசு உலகத்திற்கு வந்த காலத்திற்குப் பின் வந்த ராஜ்ஜியங்களைப் பற்றி தானியேலை விட அதிகமாக கர்த்தர் யோவானுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்.

மீண்டும் சொல்கிறேன். கடைசி கால அல்லது முடிவு கால சம்பவங்கள் என்பது ஏதோ ‘கடைசி 7 வருடங்களில்’ நடப்பவைகள் அல்ல. அது ராஜ்ஜியங்களைப் பற்றியும், கடைசி பல நூற்றாண்டுகளாக ஆண்ட அந்திகிறிஸ்துவின் சாம்ராஜ்ஜியத்தைப் பற்றியதுமாகும். இப்போது நாம் கால்பகுதி தான் மர்ம முடிச்சிகளை அவிழ்த்துள்ளோம். ஏனென்றால் அந்திகிறிஸ்துவாகிய சாத்தானால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு அழிந்துபோன சாம்ராஜ்ஜியங்களை மட்டும் தான் பார்த்துள்ளோம். இனிதான் அந்திகிறிஸ்துவின் சாம்ராஜ்ஜியங்களாக இயங்கிய, இயங்கிக்கொண்டிருக்கும் சாம்ராஜ்ஜியங்களைப் பார்க்க இருக்கிறோம். நம் கதைக்களத்தின் வில்லன் இனி தான் முழுவதுமாக வெளிப்படப்போகிறான். அவனை நமது ஹீரோ ‘கடைசி கிளைமாக்சில்’ எப்படி அழிக்கப்போகிறார் என்பதை இனி பல அத்தியாயங்களில் பார்க்க இருக்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *