4 பாபிலோன் சாம்ராஜ்ஜியம் (கி.மு 625- கி.மு 539)

உலக சாம்ராஜ்ஜியங்களுக்கும், இஸ்ரவேலருக்கும் சம்பந்தம் இல்லாமல் இருந்ததே இல்லை. பரிசுத்த வேதம் இஸ்ரவேலை மையமாகக் கொண்ட ஒன்றாகும். உலக சாம்ராஜ்ஜியங்களாகத் தோன்றி மறைந்த அத்தனை ராஜ்ஜியங்களும் இஸ்ரவேல் மீது படையெடுக்கத் தவறவில்லை. இது தற்செயல் நிகழ்வு அல்ல. இஸ்ரவேலர் வேசித்தனம், விக்கிரக ஆராதனை, எளியவர்களின் நியாயத்தைப் புரட்டுதல் போன்ற பாவங்களில் ஈடுபட்டு கர்த்தரைவிட்டுப் பின்வாங்கும்போதெல்லாம், கர்த்தர் இஸ்ரவேலரை புறஜாதிகள் கையில், குறிப்பாக அப்போதைய வல்லரசுகளின் கையில் கொஞ்சம் நாள் ஒப்புக்கொடுப்பார். பின்பு அவர்கள் மனம்திரும்பி கர்த்தரை நோக்கி கெஞ்சும்போது அந்த ராஜ்ஜியங்களை மட்டுப்படுத்தி மீட்டுக்கொள்வார். இப்படி இஸ்ரவேலை அவ்வப்போது துன்புறுத்தி வந்த எகிப்து, அசீரிய ராஜ்ஜியங்களை அழித்துவிட்டு (ஆண்டவரின் திட்டப்படி) அடுத்த ராஜ்ஜியமாக உருவானதுதான் பாபிலோன். இந்த பாபிலோன் ஏற்கனவே நாம் பார்த்தபடி ஆதியாகம காலத்திலிருந்தே இருந்தாலும், உலக வல்லரசாக உருவெடுத்தது நேபுகாத்நேச்சாரின் காலத்தில்தான். அவருக்கு அந்த வல்லமையைக் கொடுத்ததும் ஆண்டவர் தான்.

‘‘சொப்பனம் இதுதான்; அதின் அர்த்தத்தையும் ராஜசமுகத்தில் தெரிவிப்போம். ராஜாவே, நீர் ராஜாதி ராஜாவாயிருக்கிறீர்; பரலோகத்தின் தேவன் உமக்கு ராஜரீகத்தையும் பராக்கிரமத்தையும் வல்லமையையும் மகிமையையும் அருளினார்.’’ (தானியேல் 2:36,37)

இந்த பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரைக் கொண்டு தான் கர்த்தர் இஸ்ரவேலருக்கு பாடம்புகட்ட அவர்களை சிறையிருப்புக்கு ஒப்புக்கொடுக்கிறார். நேபுகாத்நேச்சார் மூன்று முறை இஸ்ரவேலரின் மீது படையெடுத்து, மூன்று கட்டங்களாக யூதா ராஜ்ஜியத்திலிருந்தவர்களை பாபிலோனுக்கு சிறைக்கைதிகளாகக் கொண்டுபோனது மட்டுமல்லாமல், எருசலேம் நகரம், மதில்சுவர் மற்றும் சாலமோன் கட்டிய எருசலேம் தேவாலயத்தையும் இடித்து தரைமட்டமாக்கி, எல்லா விலையுயர்ந்த பொருட்களையும் கொள்ளையடித்து, தன் தேவனின் கோயிலில் கொண்டுபோய் வைத்தான்.

படை யெடுப்பின் காலம்

எந்த ராஜாவின் நாட்கள்

நடந்த நிகழ்வுகள்

ஆதார வசனங்கள்

படையெடுப்பு (கி.மு 601) &சிறை பிடிப்பு 1 (கி.மு 605)

யோயாக்கீம் என்ற 18 வது யூதா ராஜாவின் நாட்களில்

படையெடுப்பு மற்றும் சிறைபிடித்தல். அதன் பிறகு வரிவிதித்தான்

2 இராஜா க்கள் 24:1-4

படையெடுப்பு &சிறைபிடிப்பு 2 (கி.மு 597)

யோயாக்கீன் என்ற 19 வது யூதா ராஜாவின் காலம்

அரண்மனை மற்றும் ஆலய பொக்கிஷங்கள், ராஜாவின் குடும்பம், பிரபுக்கள், வீரர்கள், ஜனங்கள் உட்பட 10000 பேரை பாபிலோனுக்கு கொண்டு போனான். ஏராள மானோரைக் கொன்றான்.

2 இராஜா க்கள் 24: 8-16

படையெடுப்பு &சிறைபிடிப்பு 3 (கி.மு588-586) சுமார் ஒன்றரை வருட முற்றிக்கை

சிதேக்கியா என்ற யூதாவின் கடைசி ராஜாவின் ஆட்சியின் 9-11 ஆம் வருடம்

மீதமிருந்த அனைத்து ஜனம், ராஜாவின் குடும்பம் சிறை பிடிக்கப்பட்டது. அரண்மனை, மதில் சுவர், தேவாலயம் இடித்து எரிக்கப்பட்டது

2 இராஜா க்கள் 25: 1-20 எரேமியா 52:1-27 எசேக்கி யேல் 24:1,2

இந்த முற்றிகை மற்றும் படையெடுப்புகளில் ஏசாயா, எரேமியா தீர்க்கதரிசிகள் உரைத்தபடி ஏராளமான யூதர்கள் கொல்லப்பட்டார்கள். மேலே சொன்னது தவிர நேபுகாத்நேச்சார் அவ்வப்போது பாபிலோனுக்குப் பிடித்துச்சென்ற யூதர்களின் எண்ணிக்கையை எரேமியா புள்ளிவிபரமாக எழுதியுள்ளார். (எரேமியா 52:28-30)

  • நேபுகாத்நேச்சாரின் 7 ஆம் வருடம் : 3203 யூதர்கள்
  • நேபுகாத்நேச்சாரின் 18 ஆம் வருடம் : 832 யூதர்கள்
  • நேபுகாத்நேச்சாரின் 23 ஆம் வருடம் : 745 யூதர்கள்

அட்டவணை 4: இஸ்ரவேலரை 70 வருடங்கள் அடிமைப்படுத்தியிருந்த பாபிலோன் சாம்ராஜ்ஜியத்தை ஆண்ட ராஜாக்கள் (கி.மு 605 முதல் கி.மு 535 வரை)

ராஜாவின் பெயர்

குறிப்பு

தானியேலுடனான சம்பந்தம்

நேபுகாத் நேச்சார்

எகிப்து, அசீரியா, யூதாவை வீழ்த்தியவர். பூமியின் ராஜ்ஜியங்களைக் குறிக்கும் சிலையைப் பற்றி சொப்பனம் கண்டவர்.

1.இவரது முதல் சிறைபிடிப்பில் எருசலேமிலிருந்து கொண்டுவரப்பட்டவர் தான் தானியேல்

2.நேபுகாத்நேச்சாரின்  சிலைக் கனவுக்கு விளக்கம் சொன்னார்.

ஏவில் மெராதாக் (2 இராஜாக்கள் 25:27)

நேபுகாத்நேச்சாரின் மகன்

இவர்கள் காலத்திலும் தானியேல் இருந்தார். அடுத்த ராஜ்ஜியமான (பெர்ஷியனாகிய) கோரேஸ் ராஜ்யபாரம்பண்ணும் முதலாம் வருஷமட்டும் தானியேல் அங்கே இருந்தான்.(தானி 1:21)

நெபோடினஸ்

வேறுவம்சத்தை சேர்ந்தவன். தானியேலில் இவனைப் பற்றி சொல்லப் படவில்லை.

இவர்கள் காலத்திலும் தானியேல் இருந்தார். அடுத்த ராஜ்ஜியமான (பெர்ஷியனாகிய) கோரேஸ் ராஜ்யபாரம்பண்ணும் முதலாம் வருஷமட்டும் தானியேல் அங்கே இருந்தான்.(தானி 1:21)

பெல்ஷாத்சார்

1.தேவனின் கைவிரல் சுவரில் எழுதி தீர்ப்பு செய்யப்பட்டவன்.

2.கோரேசின் தளபதி மேதியனாகிய தரியுவினால் கொல்லப்பட்டான். (தானி 5:31)

இவனது காலத்தில் தான் தானியேலுக்கு 4 விதமான மிருகங்களைப் பற்றிய தரிசனமும், ஆட்டுக்கடா மற்றும்  வெள்ளாட்டைப் பற்றிய தரிசனமும் கொடுக்கப்பட்டது.

இந்த புத்தகத்தில் நான் தானியேலில் கூறப்பட்டுள்ள மற்ற சம்பவங்களைப் பற்றி விவரிக்காமல், உலக சாம்ராஜ்ஜியங்களையும், அவற்றின் மூலமாக சாத்தானின் திட்டங்களையும் மட்டுமே பார்க்க இருப்பதால் நேபுகாத்நேச்சாரின் சொப்பனத்தில் தெரிந்த சிலையைப் பற்றிய விளக்கத்திற்கு நேரடியாகப் போய்விடுவோம்.

எதிர்காலங்களைப் பற்றிய தரிசனம்

நேபுகாத்நேச்சார் கண்ட சொப்பனம் வெறும் சிலையைப் பற்றியது அல்ல. அவரது காலத்திற்குப் பின் பூமியில் வரவிருக்கும் சாம்ராஜ்ஜியங்களைப் பற்றியது.

‘‘ராஜாவே, உம்முடைய படுக்கையின்மேல் நீர் படுத்திருக்கையில், இனிமேல் சம்பவிக்கப்போகிறதென்ன என்கிற நினைவுகள் உமக்குள் எழும்பிற்று; அப்பொழுது மறைபொருள்களை வெளிப்படுத்துகிறவர் சம்பவிக்கப்போகிறதை உமக்குத் தெரிவித்தார்.’’ (தானியேல் 2:29)

நான் ஏற்கனவே முந்தைய அத்தியாயங்களில் சொன்னபடி, தானியேல் மற்றும் வெளிப்படுத்தல் புத்தகங்களிலுள்ள ‘தரிசனங்கள்’ முழுவதும் சங்கேதபாஷைகள் நிறைந்தது. எதுவும் நேரடி அர்த்தம் கொண்டதல்ல. அதை நேரடி அர்த்தமாகக் கொண்டு நாம் ஆராய நினைத்தால் நிச்சயம் தவறாகிவிடும். அதே போல் அதன் மறைமுக அர்த்தத்தை நமது அறிவிற்கு எட்டிய விதத்தில் விளக்கம் கொடுக்க முற்பட்டாலும் தவறாகிவிடும். தீர்க்கதரிசனங்களை வியாக்கியானம் செய்யும்போது இதைத்தான் முதலில் மனதில் வைத்துக்கொள்ளவேண்டும் என்றும் பேதுரு எழுதிவைத்துள்ளார்.

‘‘வேதத்திலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது.’’ (2 பேதுரு 1:20)

பரிசுத்த வேதபுத்தகத்திலுள்ள மற்ற இடங்களில் ஆவியானவர் ஒவ்வொரு வார்த்தைக்கும் ‘ஜோடுள்ள’ அர்த்தத்தைக் கொடுத்துள்ளார். அதன்படியே நாம் விளக்கத்தைப் பார்க்க இருக்கிறோம்.

பொன்னான தலை

நாம் ஏற்கனவே இந்த சிலையின் பாகங்கள் எந்தெந்த ராஜ்ஜியங்களைக் குறிக்கும் என்று மேலோட்டமாக (அத்தியாயம் 3ல்) பார்த்துவிட்டோம். அதிலிருந்து சிலையின் பொன்னாலாகிய தலையான பாபிலோனை மட்டும் இந்த அத்தியாயத்தில் விரிவாகப் பார்க்க இருக்கிறோம்.

‘‘ராஜாவே, நீர் ஒரு பெரிய சிலையைக்கண்டீர்; அந்தப் பெரிய சிலை மிகுந்த பிரகாசமுள்ளதாயிருந்தது; அது உமக்கு எதிரே நின்றது; அதின் ரூபம் பயங்கரமாயிருந்தது. அந்தச் சிலையின் தலை பசும்பொன்னும், அதின் மார்பும் அதின் புயங்களும் வெள்ளியும், அதின் வயிறும் அதின் தொடையும் வெண்கலமும், அதின் கால்கள் இரும்பும், அதின் பாதங்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணுமாயிருந்தது’’. (தானியேல் 2:31-33)

என்று தானியேல் சொப்பனத்தை வெளிப்படுத்தி அதன் அர்த்தத்தைப் பின்வருமாறு கூறுகிறார்.

‘‘ராஜாவே, நீர் ராஜாதி ராஜாவாயிருக்கிறீர்; பரலோகத்தின் தேவன் உமக்கு ராஜரீகத்தையும் பராக்கிரமத்தையும் வல்லமையையும் மகிமையையும் அருளினார். சகல இடங்களிலுமுள்ள மனுபுத்திரரையும் வெளியின் மிருகங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும் அவர் உமது கையில் ஒப்புக்கொடுத்து, உம்மை அவைகளையெல்லாம் ஆளும்படி செய்தார். பொன்னான அந்தத் தலை நீரே.’’ (தானியேல் 2:37,38)

தானியேல் நேரடியாகவே பொன்னாலாகிய தலை நீரே என்று சொன்னது நேபுகாத்நேச்சாரை மட்டும் அல்ல; அவரால் ஸ்தாபிக்கப்பட்ட பாபிலோன் சாம்ராஜ்ஜியத்தையே குறிக்கும். சிலையின் மற்ற பாகங்களாகிய ராஜ்ஜியங்கள் மேலிருந்து கீழாக ‘பொன், வெண்கலம், வெள்ளி, இரும்பு, இரும்பும் களிமண்ணும் கலந்த’ என்று சொல்லப்பட்டிருப்பதன் மூலம் தரம் குறைந்துகொண்டே வரும் ஒரு படிநிலையை (Hierarchy) ஆண்டவர் வெளிப்படுத்துகிறார். இது அடுத்த வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘‘உமக்குப்பிறகு உமக்குக் கீழ்த்தரமான வேறொரு ராஜ்யம் தோன்றும்;’’ (தானியேல் 2:39)

ராஜ்ஜியங்களின் தரமதிப்பு

நாம் உலோகங்களின் தரத்தை விலைமதிப்பில் சொல்லும்போது ‘பொன்-வெள்ளி-வெண்கலம்-இரும்பு’ என்று மேலிருந்து கீழாகச் சொல்லுவோம். ஆனால் வலிமையைக் கணக்கில் கொள்ளும்போது ‘இரும்பு-வெண்கலம்-வெள்ளி-பொன்’ என்று தலைகீழாகச் சொல்லுவோம். இதைப்போலத்தான் கர்த்தரும் தானியேலின் காலத்திலிருந்து பூமியை ஆட்சிசெய்யப்போகிற சாம்ராஜ்ஜியங்களின் அலங்காரம், மகிமைப் பிரதாபங்களை மேலிருந்து கீழாகவும், வலிமையை கீழிருந்து மேலாகவும் மறைபொருளாகக் குறிப்பிட்டுள்ளார். இதைத்தான் நேபுகாத்நேச்சார் ஏழு வருட வனவாசத்திற்கு பின்பு மனம்திரும்பி அறிக்கையிட்டார்.

‘‘அவ்வேளையில் என் புத்தி எனக்குத் திரும்பிவந்தது; என் ராஜ்யபாரத்தின் மேன்மைக்காக என் மகிமையும் என் முகக்களையும் எனக்குத் திரும்பிவந்தது, என் மந்திரிமாரும் என் பிரபுக்களும் என்னைத் தேடிவந்தார்கள்; என் ராஜ்யத்திலே ஸ்திரப்படுத்தப்பட்டேன்; அதிக மகத்துவமும் எனக்குக் கிடைத்தது’’ (தானியேல் 4:36)

இவரது ராஜ்ஜியம் மகிமையிலும், மகத்துவத்திலும் பொன் போல விலைமதிப்புள்ளதாயிருந்தாலும், பொன்னின் வலிமை குறைவாக இருப்பதுபோல குறைந்த காலத்திலேயே மேதிய-பெர்ஷிய மன்னனான கோரேசிடம் வீழ்ந்தது. இப்படி சொல்வதனால் பாபிலோன் வலிமையில் குறைந்தது என்று அர்த்தம் அல்ல. இது பூமியின் பல ராஜ்ஜியங்களையும், தேசங்களையும் உடைத்து, அழித்து பெரும் சாம்ராஜ்ஜியமாக உருவெடுத்ததால் ஆண்டவரே இதற்கு ஒரு அழகான பெயர் வைத்துள்ளார்.

‘‘சர்வ பூமியின் சம்மட்டி எப்படி முறித்து உடைக்கப்பட்டது! ஜாதிகளுக்குள்ளே பாபிலோன் எப்படிப் பாழாப்போயிற்று!’’ (எரேமியா 50:23)

நாம் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால் இதற்குப்பின்பு வந்த ராஜ்ஜியங்கள் இதைக்காட்டிலும் வலிமையாக (இரும்பாலான கால்-ரோமப்பேரரசு) இருந்தது. ஆனால் செல்வச்செழிப்பிலும், அழகிலும் பாபிலோனிற்கு ஈடு இணை எதுவும் இல்லாததால், இன்னொரு அழகான பெயரையும் கர்த்தர் வைத்துள்ளார். இதற்குப் பின் வந்த மற்ற ராஜ்ஜியங்களின் செல்வச்செழிப்பை பாபிலோனுடம் ஒப்பிடும்போது குறைவானது தான்.

‘‘நீ பாபிலோன் ராஜாவின்மேல் சொல்லும் வாக்கியமாவது: ஒடுக்கினவன் ஒழிந்துபோனானே! பொன்னகரி ஒழிந்துபோயிற்றே!’’ (ஏசாயா 14:4)

தானியேலின் தரிசனம்

நேபுகாத்நேச்சாரின் சொப்பனத்தில் பொன்னாலான தலையாக சித்தரிக்கப்பட்ட பாபிலோன், தானியேல் கண்ட தரிசனங்களில் சிங்கமாக சொல்லப்பட்டுள்ளது.

‘‘தானியேல்  சொன்னது:  இராத்திரிகாலத்தில்  எனக்கு  உண்டான  தரிசனத்திலே  நான்  கண்டது என்னவென்றால்: இதோ, வானத்தின் நாலு காற்றுகளும் பெரிய சமுத்திரத்தின்மேல் அடித்தது. அப்பொழுது வெவ்வேறு ரூபமுள்ள நாலு பெரிய மிருகங்கள் சமுத்திரத்திலிருந்து எழும்பின. முந்தினது சிங்கத்தைப்போல இருந்தது; அதற்குக் கழுகின் செட்டைகள் உண்டாயிருந்தது; நான் பார்த்துக்கொண்டிருக்கையில், அதின் இறகுகள் பிடுங்கப்பட்டது; அது தரையிலிருந்து எடுக்கப்பட்டு, மனுஷனைப்போல இரண்டு காலின்மேல் நிமிர்ந்து நிற்கும்படி செய்யப்பட்டது; மனுஷ இருதயம் அதற்குக் கொடுக்கப்பட்டது.’’ (தானியேல் 7:2-4)

வானத்தின் நாலு காற்றுகள்

ஒரு ராஜ்ஜியத்தின் மீது இன்னொரு ராஜ்ஜியம் பெரும் படையெடுப்பை நடத்தி, அதை எல்லா திசைகளிலிருந்தும் தாக்குவது தான் ‘வானத்தின் காற்றுகள்’ என்ற சங்கேத மொழியாகக் கூறப்பட்டுள்ளது. ஏலாம் தேசத்தின் மீது வந்த அழிவைக் குறித்து கர்த்தர் சொன்ன வார்த்தைகளிலிருந்து இதன் அர்த்தம் தெளிவாகப் புலப்படும்.

‘‘சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் ஏலாமின் வில்லென்னும் அவர்களுடைய பிரதான வல்லமையை முறித்துப்போட்டு, வானத்தின் நாலு திசைகளிலுமிருந்து நாலு காற்றுகளை ஏலாமின் மேல் வரப்பண்ணி, அவர்களை இந்த எல்லாத் திசைகளிலும் சிதறடிப்பேன்; ஏலாம் தேசத்திலிருந்து துரத்துண்டவர்கள் சகல ஜாதிகளிலும் சிதறப்படுவார்கள். நான் ஏலாமியரை அவர்கள் சத்துருக்களுக்கு முன்பாகவும், அவர்கள் பிராணனை வாங்கத் தேடுகிறவர்களுக்கு முன்பாகவும் கலங்கப்பண்ணி, என் கோபத்தின் உக்கிரமாகிய தீங்கை அவர்கள்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் அவர்களை நிர்மூலமாக்குமட்டும் பட்டயத்தை அவர்களுக்குப் பின்னாக அனுப்பி, என் சிங்காசனத்தை ஏலாமிலே வைத்து, அங்கேயிருந்து ராஜாவையும் பிரபுக்களையும் அழித்துப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.’’ (எரேமியா 49:35-38)

சமுத்திரம் எதைக் குறிக்கும்?

சமுத்திரம் அல்லது திரளான தண்ணீர் என்பதற்கு ஜனத்திரள் நிறைந்த பகுதி அல்லது தேசங்கள் என்று அர்த்தமாகும்.

‘‘பின்னும் அவன் என்னை நோக்கி: அந்த வேசி உட்கார்ந்திருக்கிற தண்ணீர்களைக் கண்டாயே; அவைகள் ஜனங்களும் கூட்டங்களும் ஜாதிகளும் பாஷைக்காரருமாம்.’’ (வெளி 17:15)

இதன்படி பார்த்தால், ஜனத்திரள் நிறைந்த பூமியின் பகுதியான மெசபடோமியா மற்றும் ஐரோப்பிய கண்டங்களில் உள்ள தேசங்கள் மீது நடைபெற்ற நான்கு பெரும் படையெடுப்புகளின் விளைவாக வரவிருக்கும் நான்கு வகையான ராஜ்ஜியங்கள் (மிருகங்கள்) தானியேலின் சொப்பனத்தில் தெரிந்தது என்று அர்த்தப்படும்.

கழுகும் சிங்கமும்

கழுகின் இரண்டு செட்டைகளை முதுகில் உடைய சிங்கம் தான் பாபிலோனின் அரசியல் சின்னம் என்றும், பாபிலோன் கோட்டை சுவர்களில் இதுபோல் சுமார் 120 க்கும் மேற்பட்ட சிங்கங்களின் சின்னங்கள் வரையப்பட்டிருந்தது என்றும் வரலாறு தெளிவாகச் சொல்கிறது. ராபர்ட் கோல்டிவே (Robert Koldeway 1899-1914) என்பவர் செய்த அகழ்வாராய்ச்சியில் (Archeological evidence) எடுக்கப்பட்ட இந்த சிங்க சின்னங்கள் இன்றுவரை கூட சிக்காகோ மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளது.

படம் 11: பாபிலோன் மதில்களில் சிங்க உருவங்கள்

பாபிலோனியர் படையெடுத்து வந்து எருசலேமை அழித்துப்போடுவார்கள் என்பதை எரேமியா (4:7) கூறும்போது ‘சிங்கம்’ என்று கூறுகிறார்.

‘‘உன் தேசத்தைப் பாழாக்கி விடும்படிக்குச் சிங்கம் தன் புதரிலிருந்து எழும்பி, ஜாதிகளைச் சங்கரிக்கிறவன் தன் ஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வருகிறான்; உன் பட்டணங்கள் குடியிராதபடி அழிக்கப்படும் என்கிறார்.’’

இதேபோல்,  நேபுகாத்நேச்சார்  ராஜ்ஜியத்திலிருந்து  தள்ளப்பட்டு  ஏழு காலங்கள்  காட்டுமிருகங்களோடு  வாழ்ந்தபோது  மிருக  இருதயம் கொடுக்கப்பட்டதாக  தானியேலில்  தெளிவாகக்  கூறப்பட்டுள்ளது.  மேலும்  அவர்  பெருமையினின்று மனம்திரும்பியபோது, காட்டுவிலங்கைப்போல இருந்த தனது புத்தி (மனித இருதயமாக) திரும்பியதாக அவரே கூறியுள்ளார்.

‘‘அவனுடைய இருதயம் மனுஷ இருதயமாயிராமல் மாறும்படி, மிருக இருதயம் அவனுக்குக் கொடுக்கப்படக்கடவது; இப்படியிருக்கிற அவன்மேல் ஏழு காலங்கள் கடந்துபோகவேண்டும்.’’ (தானியேல் 4:16)

‘‘அந்நேரமே இந்த வார்த்தை நேபுகாத்நேச்சாரிடத்தில் நிறைவேறிற்று; அவன் மனுஷரினின்று தள்ளப்பட்டு, மாடுகளை ப் போல் புல்லை மேய்ந்தான்; அவனுடைய த லைமயிர் கழுகுகளுடைய இறகுகளைப்போலவும், அவனுடைய நகங்கள் பட்சிகளுடைய நகங்களைப்போலவும் வளருமட்டும் அவன் சரீரம் ஆகாயத்துப் பனியிலே நனைந்தது. அந்த நாட்கள் சென்றபின்பு, நேபுகாத்நேச்சாராகிய நான் என் கண்களை வானத்துக்கு ஏறெடுத்தேன்; என் புத்தி எனக்குத் திரும்பி வந்தது;’’ (தானியேல் 4:33,34)

எனவே தானியேல் (7:4) கண்ட தரிசனத்தில் கூறப்பட்ட சங்கேதபாஷைகளை நாம் இவ்வாறு வியாக்கியானம் செய்யலாம்.

  • தானியேலின் காலத்தில் பூமியில் இருந்த ராஜ்ஜியமாகிய பாபிலோன் என்பதே தானியேல் கண்ட முதல் மிருகம்
  • அந்தராஜ்ஜியம் ஜனத்திரள் என்ற சமுத்திரத்தின் நடுவில் தோன்றியது
  • நாலுகாற்றுகள் என்ற நான்கு யுத்தங்களில், முதல் யுத்தத்தின் முடிவில் மற்ற ராஜ்ஜிங்களை வீழ்த்தி அது மேலே வந்தது.
  • கழுகின்செட்டைகளை உடைய சிங்கத்தை தனது சின்னமாகக் கொண்ட பாபிலோன் ராஜ்ஜியமே அது
  • தானியேல் காலத்திலேயே நேபுகாத்நேச்சார் ராஜ்ஜியத்திலிருந்து தள்ளப்பட்டு காட்டில் மிருகங்களோடு சஞ்சரித்தான். அப்போழுது அவன் தலைமுடி கழுகின் இறகுகளைப்போல மாறியிருந்தது. ‘‘நான் (தானியேல்) பார்த்துக்கொண்டிருக்கும்போது அந்த இறகுகள் பிடுங்கப்பட்டது’’
  • அவன்மனுஷரிடத்தினின்று தள்ளப்பட்டு மிருகத்தைப்போல நான்கு கால்களால் நடமாடினாலும், மனம்திரும்பிய பின் இரண்டு கால்களால் நின்று சிந்திக்கும் மனித இருதயம் கொடுக்கப்பட்டது.

பாபிலோன் வீழ்ச்சியின் காரணம்

வீழ்ச்சியின் காரணத்தைப் பற்றிப் பார்க்கும்போது தனிப்பட்ட ராஜாக்களின் பெருமையினால் மட்டுமல்ல; அவர்களுக்கு பின்னால் இருந்து செயல்பட்ட சாத்தானின் ஆவி தான் முக்கிய காரணமாக இருந்தது. பாபிலோனின் வீழ்ச்சிக்கான காரணங்கள் இப்படித்தான் இருக்கும் என்று தீர்க்கதரிசனமாக ஏசாயா, எரேமியா, எசேக்கியல் புத்தகங்களிலும், நிகழ்கால சம்பவங்களாகத் தானியேலாலும் ஆவணமாக்கப்பட்டுள்ளது.

முதல் காரணம்: பெருமை

ஆதிமுதல், தேவனை ஆராதிப்பதுபோல எல்லாரும் தன்னை ஆராதிக்க அல்லது வணங்கவேண்டும், தேவனுக்கு மேலாக உயர்த்தப்படவேண்டும் என்ற வெறியில் அலைந்துகொண்டிருந்த அந்திகிறிஸ்துவாகிய சாத்தானின் ஆவி, தன்னை நிலைநிறுத்திக்கொள்வதற்கு பூமியில் தெரிந்துகொண்ட முதல் ராஜ்ஜியம் தான் பாபிலோன். எனவே தான் ஆண்டவரும் ஏசாயா தீர்க்கதரிசியின் மூலமாக பாபிலோனுக்கு விரோதமாக உரைத்த தீர்க்கதரிசனத்தில், ‘பரலோகத்தின் மகிமையான ஸ்தானத்திலிருந்து கீழே தள்ளப்பட்ட அதிகாலையின் மகனான விடிவெள்ளி லூசிபரைப்போல, பாபிலோனும் தள்ளப்படும்’ என்று மிகக்கடுமையான ஒரு ஒப்பீட்டை சொல்லிவைத்திருக்கிறார். இந்த ஒரு பகுதியே பாபிலோன் இனி ஒரு ராஜ்ஜியமாக எண்ணப்படாதபடிக்குத் தள்ளப்படும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் ஆகும்.

‘‘நீ பாபிலோன் ராஜாவின்மேல் சொல்லும் வாக்கியமாவது: ஒடுக்கினவன் ஒழிந்துபோனானே! பொன்னகரி ஒழிந்துபோயிற்றே!’’ (ஏசாயா 14:4)

‘‘அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே! நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்குமேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும், நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே. ஆனாலும் நீ அகாதமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய். உன்னைக் காண்கிறவர்கள் உன்னை உற்றுப்பார்த்து, உன்னைக் குறித்துச் சிந்தித்து இவன்தானா பூமியைத் தத்தளிக்கவும், ராஜ்யங்களை அதிரவும் செய்து, உலகத்தை வனாந்தரமாக்கி, அதின் நகரங்களை அழித்து, சிறைப்பட்டவர்களைத் தங்கள் வீடுகளுக்குப் போகவிடாமலிருந்தவன் என்பார்கள்.’’ (ஏசாயா 14:12-17)

கர்த்தரால் கொடுக்கப்பட்ட மகிமையை அவருக்கு செலுத்தாமல் பெருமை கொண்டதற்கான பல சான்று பெயர்கள், பாபிலோனுக்குத் தீர்க்கதரிசன புத்தகங்களில் கொடுக்கப்பட்டுள்ளது

  • ராஜ்ஜியங்களுக்குள் அலங்காரம் – ஏசாயா 13:19
  • அதிகாலையின் மகன் (லூசிபரின் பெருமைக்கு ஒப்பாக) – ஏசாயா 14:12
  • செருக்குகாரி, சுகசெல்வி -ஏசாயா 47:1
  • ராஜ்ஜியங்களின் நாயகி -ஏசாயா 47:5
  • என்றென்றைக்கும் நாயகி – Queen forever (ஏசாயா 47:7)
  • கர்த்தரின் கையில் பொற்பாத்திரம் -எரேமியா 51:7

இரண்டாம் காரணம்: பொருளாசை

ஏற்கனவே, பாபிலோன் பொன்னைப் போல அலங்காரமும், அணிகலன்களும் நிறைந்த ராஜ்ஜியம் என்று பார்த்தோம். அவர்கள் படையெடுத்துச் செல்லும் இடமெல்லாம் தேசங்களைக் கொள்ளையிடுவதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள். அதைப் பறைசாற்றும் விதமாக கொள்ளைப்பொருள்களைத் தங்கள் தேவர்களின் கோயில்களில் கொண்டுவைக்கும் பழக்கம் உள்ளவர்கள்.

‘‘திரளான தண்ணீர்களின்மேல் வாசம்பண்ணுகிறவளே, திரண்ட சம்பத்துடையவளே, உனக்கு முடிவும் உன் பொருளாசைக்கு ஒழிவும் வந்தது’’ (எரேமியா 51:13)

மூன்றாம் காரணம்: விக்கிரகவணக்கம்

நேபுகாத்நேச்சார் நிறுத்திய 60 முழஉயர சிலையை, பாபிலோனியர்களை மட்டுமல்லாமல், அப்போதைய காலகட்டத்தில் பாபிலோனில் அடிமைகளாக இருந்த இஸ்ரவேலரையும் வணங்கவைத்ததன் மூலம் சாத்தான் தனது சாம்ராஜ்ஜியத்தை ஸ்தாபித்தான். கர்த்தருக்காக வைராக்கியமாக நின்ற தானியேலும், அவனது நண்பர்களும் உபத்திரத்திற்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது அந்திகிறிஸ்துவின் ராஜ்ஜியத்திற்கு முன்னடையாளமாகும். தேவனுடைய இடத்தில் அமர வேண்டும்; தேவ ஜனங்கள் தன்னை வணங்கவேண்டும் என்ற திட்டத்தை பாபிலோன் மூலம் சாத்தான் செயல்படுத்த நினைத்தான்.

‘‘எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தை நீங்கள் கேட்கும்போது, நீங்கள் தாழவிழுந்து, ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளக்கடவீர்கள். எவனாகிலும் தாழ விழுந்து, அதைப் பணிந்துகொள்ளாமற்போனால், அவன் அந்நேரமே எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே போடப்படுவான் என்றான்.’’ (தானியேல் 3:5,6)

உலக ரட்சகராக வந்த இயேசுவையே, தன்னைப் பணிந்துகொள்ளச் சொன்ன சாத்தானாகிய அந்திகிறிஸ்து, இந்த உலகமக்களும் தன்னை தாழவிழுந்து வணங்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதில் ஆச்சரியமில்லையே!

‘‘மறுபடியும் பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து: நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான்.’’ (மத்தேயு 4:8,9)

பாபிலோன் ஒரு விக்கிரக தேசமாயிருப்பதாலும் அதற்கு அழிவு நேரிட்டது. இதைப்போலவே தான் மகாபாபிலோனான அந்திகிறிஸ்துவின் ராஜ்ஜியமும் விக்கிரகவணக்கத்தை ஆதரிக்கிற ஒரு ராஜ்ஜியமாக இருக்கும் என்பது தெளிவாகின்றது.

‘‘வறட்சி அதின் தண்ணீர்கள்மேல் வரும் அவைகள் வறண்டுபோம்; அது விக்கிரக தேசம்; அருக்களிப்பான சிலைகளின்மேல் மனமயங்கியிருக்கிறார்கள். ஆகையால் காட்டுமிருகங்களும் ஓரிகளும் அதிலே குடியிருக்கும்; கோட்டான்கள் அதிலே தங்கும்; இனி என்றென்றைக்கும் அது குடியேற்றப்படுவதில்லை; தலைமுறை தலைமுறையாக ஒருவரும் அதில் சஞ்சரிப்பதுமில்லை.’’ (ஏரேமியா 50:38,39)

முடிவு யார் கையில்?

கடைசியாக பெல்ஷாத்சார் என்ற ராஜாவின் காலத்திலே (தானியேல் 6 ஆம் அதிகாரம்) அவன் தன் பிரபுக்களோடும், வைப்பாட்டிகளோடும், எருசலேம் தேவாலயத்திலிருந்து கொண்டுவரப்பட்ட பொற்பாத்திரங்களில் மதுவை நிரப்பி குடித்தது மட்டுமல்லாமல் தன் தேவர்களைப் புகழ்ந்துபேசின நேரத்தில் தான், தேவனால் அனுப்பப்பட்ட கையுறுப்பு ‘மெனே, மெனே, தெக்கேல், உப்பார்சின்’ என்று எழுதி பாபிலோன் சாம்ராஜ்ஜியத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது. பாபிலோனின் முடிவு கர்த்தர் கையில் தான் இருந்தது. அதற்காக அவர் பயன்படுத்த எழுப்பிய இன்னொரு ராஜ்ஜியம் தான் உலகத்தின் நாலாவது (தானியேலின் 2வது) சாம்ராஜ்ஜியமான மேதிய-பெர்சிய சாம்ராஜ்ஜியமாகும். இதைப்பற்றி எரேமியா ஏராளமான இடங்களில் கூறியுள்ளார்.

‘‘எழுபது வருஷம் நிறைவேறினபின்பு, நான் பாபிலோன் ராஜாவினிடத்திலும், அந்த ஜாதியினிடத்திலும் கல்தேயருடைய தேசத்தினிடத்திலும், அவர்களுடைய அக்கிரமத்தை விசாரித்து, அதை நித்தியபாழிடமாக்கி, நான் அந்தத் தேசத்துக்கு விரோதமாய் உரைத்த என் வார்த்தைகளையெல்லாம், எரேமியா சகல ஜாதிகளுக்கும் விரோதமாகத் தீர்க்கதரிசனமாய்ச் சொன்னதும், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறதுமான யாவையும் அதின்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்’’ (எரேமியா 25:12,13)

‘‘அம்புகளைத் துலக்குங்கள்; கேடகங்களை நன்றாய்ச் செப்பனிடுங்கள்; கர்த்தர் மேதியருடைய ராஜாக்களின் ஆவியை எழுப்பினார்; பாபிலோனை அழிக்கவேண்டுமென்பதே அவருடைய நினைவு; இது கர்த்தர் வாங்கும் பழி, இது தமது ஆலயத்துக்காக அவர் வாங்கும் பழி.’’ (எரேமியா 51:11)

‘‘ராஜ்யங்களுக்குள் அலங்காரமும் கல்தேயருடைய பிரதான மகிமையுமாகிய பாபிலோனானது தேவனால் சோதோமும் கொமோராவும் கவிழ்க்கப்பட்டதுபோல கவிழ்க்கப்படும். இனி ஒருபோதும் அதில் ஒருவரும் குடியேறுவதுமில்லை, தலைமுறைதோறும் அதில் ஒருவரும் தங்கித் தரிப்பதுமில்லை; அங்கே அரபியன் கூடாரம்போடுவதுமில்லை; அங்கே மேய்ப்பர் மந்தையை மறிப்பதுமில்லை.’’

இப்படி பாபிலோனை அழிக்க வரும் மேதியர்களும் பெர்சியர்களும் சேர்ந்த கூட்டணி ராஜ்ஜியம் ‘வடக்கேயிருந்து வரும்’ என்று எரேமியா தீர்க்கதரிசன புத்தகத்தில் பல இடங்களில் சொல்லப்பட்டுள்ளது. உலக வரைபடத்திலும் மேதியா பாபிலோனுக்கு வடகிழக்கில் தான் உள்ளது.

படம் 12: உலகவரைபடத்தில் பாபிலோன் மற்றும் மேதிய-பெர்சிய ராஜ்ஜியங்கள்

இது ஆரம்பம் தான்

இப்படியாக ஆதிகாலத்து பாபேலில் கோலோச்சிய அந்திகிறிஸ்துவின் ஆவி, தானியேலுக்கு காண்பிக்கப்பட்ட தரிசனத்தின்படி தன்னை ஒரு ராஜ்ஜியமாக ஸ்தாபித்துக் கொண்டான். இது வெறும் ஆரம்பம் அல்லது டிரைலர் தான். கதைக்களத்தின் வில்லனாகிய அந்திகிறிஸ்துவின் ராஜ்ஜியம் வர இன்னும் சில அத்தியாயங்கள் செல்லும். ஏன்னென்றால் இனி எழும்பப்போகும் சாம்ராஜ்ஜியங்களைப் பற்றி தானியேல், வெளிப்படுத்தல் புத்தகங்களை வரலாற்று ஆதாரத்துடன் நாம் தெரிந்துகொண்டால் மட்டுமே, அந்திகிறிஸ்து எப்போது வெளிப்படுவான் என்ற கேள்விக்கு விடைகிடைக்கும். முடிந்தவரை உங்கள் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும், அதேவேளையில் பரிசுத்த வேதவசனங்களின் அடிப்படையிலும் விளக்க உள்ளேன். தயவுசெய்து பொறுமையுடன் வாசியுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *