- September 3, 2023
- admin
- 2
ஆதாம் முதல் பாபிலோன் வரை (படைப்பு முதல் கி.மு 625 வரை)
தானியேல் மற்றும் வெளிப்படுத்தல் தீர்க்கதரிசன புத்தகங்களில் உள்ள மறைபொருளைக் குறித்து அறிந்துகொள்ள வேண்டுமானால், படைப்பின் காலத்திலிருந்தே பிசாசின் திட்டம் என்ன என்பதை முதலில் தெரிந்துகொள்ளவேண்டும். அதனால் தான் நேரடியாக தானியேலின் தீர்க்கதரிசனங்களுக்குள் செல்லாமல், ஆதி முதல் சாத்தான் எவ்வாறு அந்திகிறிஸ்துவின் ஆவியாக, ராஜ்ஜியமாக செயல்பட்டான் என்று சில அத்தியாயங்களைப் பார்க்க இருக்கிறோம்.
யார் அந்திகிறிஸ்து?
கிறிஸ்துவின் பிறப்பைக்குறித்த தீர்க்கதரிசனம் வெளியானவுடனே அந்திக்கிறிஸ்துவாகிய சாத்தான் துரிதமாக செயல்பட ஆரம்பித்துவிட்டான். கிறிஸ்துவிற்கும், அவரை விசுவாசிப்பதற்கும், அவர் வெளிப்படுவதற்கும் எதிராக செயல்படுபவன் தான் அந்திகிறிஸ்து. இயேசு மாம்சத்தில் வெளிப்படத் தடையாக இருந்தவனும், அதை ஜெயம்கொண்டு இயேசு வெளிப்பட்ட பின்பு அவரை மறுதலிக்கவைத்து, தன்னை உலகம் ஆராதிக்கவேண்டும் என்று செயல்படுபவன் தான் அந்திகிறிஸ்து.
‘‘இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து. குமாரனை மறுதலிக்கிறவன் பிதாவை உடையவனல்ல, குமாரனை அறிக்கையிடுகிறவன் பிதாவையும் உடையவனாயிருக்கிறான்.’’ (1 யோவான் 2:22,23)
மேலும் பவுல் தெசலோனிக்கேயருக்கு எழுதின இரண்டாம் நிருபத்திலே அந்திகிறிஸ்துவினுடைய குணாதிசயங்களைத் தெளிவாக விளக்கியுள்ளார். (2 தெச 2:4)
- அவன்எதிர்த்துநிற்கிறவனாயும்,
- தேவன்என்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும்
- தேவனுடைய ஆலயத்தில்தேவன் போல உட்கார்ந்து
- தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான்
இதன் அடிப்படையில் தான் அந்திகிறிஸ்துவைக் குறித்த தானியேல் மற்றும் வெளிப்படுத்தலின் தீர்க்கதரிசனங்களை நாம் பார்க்க இருக்கிறோம்.
ஆரம்பப் புள்ளி
ஆதாமும் ஏவாளும் பாவம் செய்ததால் ஏதேனை விட்டு விரட்டப்படுவதற்கு முன், இயேசு உலகத்தின் பாவத்தை சுமந்து, சிலுவையில் சாத்தானை நசுக்குவார் என்ற தீர்க்கதரிசனம் வெளியானது.
‘‘(சாத்தானாகிய) உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.’’ (ஆதியாகமம் 3: 15)
இதில் அவள் வித்து என்பது ஏவாள் என்னும் பெண்ணின் வித்தைக்குறிக்கிறது. உலக வழக்கத்தின்படியும், உடற்கூறின் அடிப்படையிலும் வித்து என்பது ஆணின் உயிரணுவைத்தான் குறிக்கும். ஆனால் இங்கு பெண்ணின் வித்து என்று சொல்லப்பட்டிருப்பதால் ‘கன்னியின் கர்ப்பத்தில்’ வெளிப்படுவார் என்று அர்த்தப்படும். அப்போதைய சூழ்நிலையில் குழந்தை அல்லது சந்ததி என்ற ஒன்றே இல்லை. அதனால் சாத்தானால் இந்த எதிர்கால தீர்க்கதரிசனம் எவ்வாறு நிறைவேறும் என்று புரிந்துகொள்ள இயலவில்லை. ஏனென்றால் தேவன் ஒருவரே எதிர்காலத்தை அறிந்தவர். ஆனால் ஒன்றை மட்டும் அவன் தெளிவாகப் புரிந்துகொண்டான், ‘ஒரு பெண்ணின் மூலம் வரும் அடுத்த தலைமுறையின் ஒருவரால் நமக்கு அழிவு நிச்சயம்’ என்பதை. எனவே அவனது அடுத்தகட்ட நகர்வு நாம் எதிர்பார்த்தபடி ஆதாம்- ஏவாளின் பிள்ளைகள் மீதுதான் இருந்தது.
யார் என் தலையை நசுக்குவார்?
அன்றிலிருந்து சாத்தானுக்கு ஒரு எதிர்பார்ப்போடு கூடிய பயம் வந்துவிட்டது. அதுவும் ஸ்திரீயாகிய ஏவாளுக்கு காயீன், ஆபேல் பிறந்தபின்பு, இந்த இருவரில் ஒருவன் தான் என் தலையை நசுக்குபவனாக இருப்பானோ? என்று பயம் கொண்டு, தனது முறியடிக்கும் திட்டங்களை செயல்படுத்தியதன் விளைவு தான், காயீன் ஆபேல் மீது பொறாமை கொண்டு அவனை கொலைசெய்த சம்பவம். ஆனால் ஆண்டவர் எளிதில் விட்டுவிடவில்லை. காயீனின் பொறாமையின் பின்விளைவையும், சாத்தான் அவனை பயன்படுத்த நினைக்கிறதையும் சொல்லி எச்சரித்தார்.
‘‘அப்பொழுது கர்த்தர் காயீனை நோக்கி: உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று? உன் முகநாடி ஏன் வேறுபட்டது? நீ நன்மை செய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மை செய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்; அவன் ஆசை உன்னைப் பற்றியிருக்கும், நீ அவனை ஆண்டுகொள்ளுவாய் என்றார்.’’ (ஆதியாகமம் 4:6,7)
‘பாவம் என்ற சாத்தானின் சுபாவம் உன் வாசற்படியிலே பொறாமை, கொலைவெறியின் ரூபமாகப் படுத்துள்ளது. அது உன்னை ஆண்டுகொள்ள நினைக்கிறது, அல்லது பயன்படுத்த நினைக்கிறது. ஆனால் நீ அதை ஆண்டுகொள்ள அல்லது உன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும்’ என்பது தான் இதன் அர்த்தமாகும். ஆனால் காயீன் அதற்கு செவிகொடுக்காமல் சாத்தானின் சூழ்ச்சிக்கு பலியாகி ஆபேலைக் கொன்றான்.
தேவனின் திட்டம்
ஆனால் தேவனின் திட்டத்தை யாராலும் மாற்றமுடியாமா? அவர் செய்யநினைத்தது தடைபடாது என்று யோபு சொல்லுகிறார். இதற்கு பதிலாகத்தான் தேவன் ‘தான் தனது சாயலாகப் படைத்த, ஆதாமின் சாயலாக’ ‘சேத்’ என்ற குமாரனைக் கொடுக்கிறார். இதன் மூலம் தேவசாயல் ஆதாமிற்கு சென்றது; ஆதாமின் சாயல் சேத்திற்கு சென்றது.
‘‘ஆதாம் நூற்று முப்பது வயதானபோது, தன் சாயலாகத் தன் ரூபத்தின்படியே ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சேத் என்று பேரிட்டான்.’’ (ஆதியாகமம் 5:3)
அன்று ஆதியாகமத்தில் ஆரம்பித்த இந்த யுத்தம், இன்று வெளிப்படுத்தின விஷேசம்வரைத் தொடர்கிறது. ஒவ்வொரு சந்ததி வரும்போதும், அதில் ‘இவன் தான் நம் தலையை நசுக்கவருபவனாக இருப்பானோ’ என்ற அச்சத்தில் அந்த சந்ததியை சீர்குலைக்க பொறாமை, கொலைபாதகம், விபச்சாரம், வேசித்தனம், விக்கிரகவணக்கம், பெருமை போன்ற தனது குணங்களை உட்புகுத்தி, பரிசுத்த வித்தாகிய கிறிஸ்து வெளிப்படும் காலம் வரை, தன்னால் முடிந்த அளவிற்கு தடைசெய்துகொண்டே வந்தான்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் தேவனின் திட்டங்களையும், சாத்தான் அதை எவ்வாறு தடுக்கநினைத்தான் என்பதையும், அதையும் முறியடிக்க தேவன் என்ன செய்தார் என்பதையும் காலவரிசைப்படி எளிதில் புரியும்படி கொடுத்துள்ளேன்.
அட்டவணை1: தேவனின் திட்டமும், சாத்தானின் தடைகளும்
தேவனின் திட்டம்
சாத்தானின் யுத்தம்/தடை/சதி
தேவனின் மாற்று திட்டம்/முறியடிப்பு
சேத் என்ற பரிசுத்த சந்ததி
தேவகுமாரர் பூமியின் பெண்களோடு கூடியதால் கறைபட்ட சந்ததி உருவாகியது
சேத்தின் சந்ததியில் வந்த நீதிமானாகிய நோவாவின் குடும்பம் தவிர மற்ற தலைமுறைகள் வெள்ளத்தால் அழிக்கப்பட்டனர்.
நோவாவின் சந்ததி மூலமாக தன் நோக்கத்தை நிறைவேற்ற திட்டம்
காம் என்ற மகனின் மூலம் கானான் என்ற விக்கிரக வணக்கத்தை உலகிற்கு அறிமுகப்படுத்திய சந்ததி உலகில் வந்தது. இதே வம்சத்தில் வந்த நிம்ரோத் என்பவன் தேவனுடைய பரலோகத்துக்கு மேலாக எழும்பும் உயரமான ‘பாபேல்’ கோபுரத்தைக் கட்ட முயற்ச்சிக்கிறான்.
தேவன் அவர்கள் பாஷையைக் குலைத்து கோபுரம் கட்டுவதை தடுக்கிறார். பூமியெங்கும் ஜனங்களை சிதறடிக்கிறார்.
சேத்தின் வம்சத்தில் வந்த ஆபிரகாமை தேவன் தெரிந்துகொண்டு அவனோடு உடன்படிக்கை செய்கிறார். அவனது கர்ப்பப்பிறப்பின் (ஈசாக்கு) மூலம் உலகையே ஆசீர்வதிக்க திட்டமிடுகிறார்
ஆபிராம் தமஸ்கு ஊரானாகிய எலியேசர் என்ற வீட்டு விசாரணைக் காரனை சுதந்தரவாளியாய் ஆக்க முயற்சித்தான். (ஆதி 15:2,3)
ஆபிரகாமுக்கு 100 வயதாகும்போது ஈசாக்கைக் கொடுத்து உடன்படிக்கையை உறுதிசெய்கிறார்.
ஈசாக்கின் மூலமாக பூமியின் வம்சங்களை ஆசீர்வதிக்க திட்டம்
யாசேரின் புத்தகம் –22 ஆம் அதிகாரத்தின்படி, சாத்தான் யோபுவை சோதித்ததுபோல, ஆபிரகாமையும் சோதிக்க அனுமதி கேட்டதன் விளைவாக கர்த்தர் ஈசாக்கை பலியாகக் கேட்கிறார்
ஆபிரகாமின் விசுவாசம் ஈசாக்கைக் காப்பாற்றியது மட்டுமல்லாமல் ஈசாக்குக்கு பதிலாக பலியான ஆட்டைப்போல, இயேசு நமக்காக பலியானார்
ஈசாக்கின் சந்ததியை ஆசீர்வதித்து இரண்டு மகன்களைக் கொடுக்கிறார்
ரெபேக்காவின் ஒருதலைப்பட்ச அன்பினால் சகோதர யுத்தம் ஆரம்பிக்கிறது.
எத்தனாக இருந்த யாக்கோபை தேவன் இஸ்ரவேலாக மாற்றினார்
12 கோத்திர பிதாக்களை கொடுத்து இஸ்ரவேலின் தலைவர்களாகத் திட்டம் பண்ணினார்
நீதிமானாக இருந்து தனது சகோதரர்களின் துன்மார்க்கத்தை யாக்கோபிடத்தில் சொல்லிவந்த யோசேப்பை குழிக்குள் போட்டு துரத்திவிட்டார்கள்
கர்த்தர் யோசேப்போடே கூட இருந்து அவனை எகிப்தில் பார்வோனுக்கு அடுத்த ஸ்தானம் வரை உயர்த்தினார்
யோசேப்பின் காலத்திற்குப் பின் அடிமைகளாக்கப் பட்ட இஸ்ரவேலை மீட்க ஒரு மீட்பரை தேவன் திட்டம் பண்ணினார்
இஸ்ரவேலரின் எல்லா ஆண் சிசுக்களையும் கொலைசெய்து மீட்பின் திட்டத்தை தடைசெய்ய நினைத்தான்
கர்த்தர் மோசேயை பார்வோனின் வீட்டிலேயே பாதுகாப்பாக வளரவைத்து சாத்தானை வெட்கப் படுத்தினார்
எகிப்தியரை வாதித்து மோசேயின் மூலம் இஸ்ரவேலரின் விடுதலைப் பயணத்தைத் தொடங்கினார்
மக்களை கர்த்தருக்கு விரோதமாக முறுமுறுக்கவும், வேசித்தனம் செய்யவும் (எண்ணாகமம் 25 ஆம் அதிகாரம்), சிலைகளை வணங்கவும் வைத்து பயணநாட்களை நீட்டித்தது மட்டுமல்லாமல், பழைய சந்ததிகள் கானானுக்கு போகமுடியாத அளவுக்கு சூழிநிலை மாறியது.
யோசுவாவைக் கொண்டு கர்த்தர் திட்டத்தை நிறைவேற்றினார்
கானானிற்குள் சென்றபின்பு இஸ்ரவேலரை விசாரிக்க நியாயாதி பதிகளை ஏற்படுத்தினார்
மற்ற புறஜாதிகள் போல தங்களுக்கு ராஜா வேண்டும் என்று இஸ்ரவேலர் முறையிட்டு கர்த்தர் அவர்களை ஆளாதபடிக்கு அவரைத் தள்ளினார்கள். (1 சாமுவேல் 8:7)
சவுலை முதல் ராஜாவாகக் கொடுத்தார்
சவுலின் மூலம் எதிரிகளிடமிருந்து இஸ்ரவேலரைத் தப்புவித்தார்
சவுல் சாமுவேலின் (கர்த்தரின்) வார்த்தைகளுக்கு கீழ்படியாமல் பலியிட்டதினால் அவனைத் தள்ளினார்
ஆடுகளுக்கு பின் அலைந்த தாவீதைத் தெரிந்து கொண்டார்
தாவீதின் சந்ததியில் மேசியாவாகிய இயேசு வருவார் என்ற தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டது
கர்த்தரின் இருதயத்திற்கு அடுத்து இருந்த தாவீதை பத்சேபாளின் விஷயத்தில் இச்சையில் விழவைத்தான். ஆனாலும் அவன் சந்ததியைக் கர்த்தர் கைவிடவில்லை.
சாலமோனைக் கர்த்தர் தெரிந்து கொண்டார்
தாவீதின் சந்ததியில் மேசியாவாகிய இயேசு வருவார் என்ற தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டது
கர்த்தரின் இருதயத்திற்கு அடுத்து இருந்த தாவீதை பத்சேபாளின் விஷயத்தில் இச்சையில் விழவைத்தான். ஆனாலும் அவன் சந்ததியைக் கர்த்தர் கைவிடவில்லை.
சாலமோனைக் கர்த்தர் தெரிந்து கொண்டார்
சாலமோன் மூலம் முதல் தேவாலயம் கட்டப்பட கிருபை செய்தார்
சாலமோன் அதிக மனைவிகளால் விக்கிரக ஆராதனைக்குத் தள்ளப்பட்டு பின் மாற்றமடைந்தான்.
கர்த்தர் தான் வெளிப்பட இருக்கும் யூதா கோத்திரத்தைப் பிரித்தெடுக்க, இஸ்ரவேல் இரண்டு ராஜ்ஜியங்களாகப் பிரிக்கப்பட்டது. (இஸ்ரவேல்+யூதா)
இஸ்ரவேல் ராஜாக்கள் 20 பேரில் ஒருவர் கூட கர்த்தருக்கு பிரியமாக இருக்கவில்லை. ஆனால் யூதா ராஜாக்களில் எசேக்கியா, யோசியா உட்பட 5 ராஜாக்களை கர்த்தருக்குப் பிரியமில்லாத காரியமாகிய விக்கிரக வணக்கத்தை ஒழிக்க பயன்படுத்தினார்.
மனாசே செய்த மிகப்பெரிய பாவத்தால் யூதா ராஜாக்களின் வீழ்ச்சியும் ஆரம்பித்து, அவர்கள் பாபிலோனியர்கள் கையில் ஒப்புக் கொடுக்கப் பட்டார்கள்.
‘’இந்த ஆலயத்திலும், நான் இஸ்ரவேலின் சகல கோத்திரங்களிலு -மிருந்து தெரிந்துகொண்ட எருசலேமிலும், என் நாமத்தை என்றைக்கும் விளங்கப் பண்ணுவேன் என்று கர்த்தர் தாவீதோடும் அவன் குமாரனாகிய சாலொமோ னோடும் சொல்லிக் குறித்த ஆலயத்திலே அவன் பண்ணின தோப்பு விக்கிரகத்தை வைத்தான். (2 ராஜா 21:7)
அவன் நாட்களிலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் வந்தான்; யோயாக்கீம் மூன்று வருஷம் அவனைச் சேவித்து, பின்பு அவனுக்கு விரோதமாகக் கலகம் பண்ணினான். மனாசே தன் எல்லாச் செய்கை களினாலும் செய்த பாவங்களினி மித்தம் யூதாவைத் தமது சமுகத்தை விட்டு அகற்றும்படி கர்த்தருடைய கட்டளையினால் அப்படி நடந்தது.’’ (2 ராஜா 24:1-3)
ஆனால் கர்த்தர் யூதா கோத்திரத்தில் வெளிப்படும் திட்டத்தை மாற்றவில்லை
‘’பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போனபின்பு, எகோனியா (யோயாக்கீன்) சலாத்தியேலைப் பெற்றான்; சலாத்தியேல் சொரொபாபேலைப் பெற்றான்; சொரொபாபேல் அபியூதைப் பெற்றான்; அபியூத் எலியாக்கீமைப் பெற்றான்; எலியாக்கீம் ஆசோரைப் பெற்றான்; ….(இப்படியாக )யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பை பெற்றான்; அவளிடத்தில் கிறிஸ்து எனப்படுகிற இயேசு பிறந்தார். ‘’(மத்தேயு 1:12-16)
தீர்க்க தரிசனங்களின் நிறைவேறுதலாக இயேசு பெத்லகேமிலே பிறந்தார்
ஏரோதின் மனதை ஏவிவிட்டு, குழந்தையாகிய இயேசுவைக் கொல்லும் நோக்கில் 2 வயதுக்கு உட்பட்ட எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றான்.
யோசேப்பும் மரியாளும் இயேசுவை எடுத்துக்கொண்டு எகிப்துக்கு தப்பிச்சென்று தேவத்திட்டத்தை நிறை வேற்றினார்கள்.
நாசரேத்தில் இயேசு வளர்ந்தார். யோவான் ஸ்நானகனால் ஞானஸ்னானம் பெற்று பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டார்.
தன்னைத் தாழவிழுந்து வணங்கும்படி சாத்தான் இயேசுவை சோதித்தான்.
வேத வாக்கியங்களில் சொல்லி யிருக்கிறதே’ என்று சொல்லி இயேசு சாத்தானைத் துரத்தினார்.
இயேசுவின் உலக ஊழியம் நிறைவேறிய பின்பு, அவர் உலகத்தின் பாவங்களை சிலுவையில் சுமந்து தீர்க்கவேண்டும் என்று தேவன் சித்தம் கொண்டார்.
இந்தமுறை சாத்தான் எவ்வளவு முயற்சி செய்தும் தேவனின் திட்டத்திற்கு தடை செய்ய முடியவில்லை.
இயேசு சிலுவையில் சாத்தானின் தலையை நசுக்கினார். (ஆதி 3:15 ல் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனம் நிறைவேறியது.)
பாபேல் என்னும் பாபிலோன்: பெருமையின் சின்னம்
இயேசுகிறிஸ்து மாம்சத்தில் வெளிப்படுவதைத் தடைசெய்ய முயற்சித்து தோல்வியுற்ற சாத்தான், அத்தோடு நிற்கவில்லை. இயேசு தன்னை விசுவாசிக்கிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின பரமகானான்/ பரலோக ஏதேன்/ நித்திய வாழ்வு அவர்களுக்கு கிடைத்துவிடக்கூடாது என்பதற்காக அவன் செயல்படுத்திக்கொண்டிருக்கும் அடுத்த திட்டம் தான் ‘அந்திகிறிஸ்துவின் ஆவி சாம்ராஜ்ஜியங்களைப் பயன்படுத்தி’ உலகத்தை மோசம்போக்கும் திட்டமாகும். இயேசுவின் முதல் வருகைக்கும் இரண்டாம் வருகைக்கும் இடைப்பட்ட காலத்தில் பூமியின் குடிகளை வஞ்சித்து, கொலைசெய்து, தவறான போதனைகளுக்கு மட்டுமல்லாமல் மீண்டும் விக்கிரகவழிபாட்டுக்கு இழுத்து தன்னை எல்லோரும் ஆராதிக்கவேண்டும் என்ற தனது ஆதிமுதலான திட்டத்தை செயல்படுத்த பூமியின் ராஜ்ஜியங்களை, குறிப்பாக இயேசுவை ஏற்றுக்கொண்ட சபையின் ஒருபகுதியையே வஞ்சித்து அந்திகிறிஸ்துவாக வெளிப்பட்டுள்ளான்.
இயேசுவின் இரண்டாம் வருகைக்குப் பின்பு தனக்கு நிரந்தர முடிவு வரப்போகிறது என்பதை அறிந்து அவன் தனது திட்டத்தை தீவிரப்படுத்துவான் என்பதை இயேசுவும் தனது சீடர்களுக்குத் தெளிவாக சொல்லிவைத்துள்ளார்.
‘‘ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ள ப் ப ட் டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக ப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். இதோ, முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன்.’’ (மத்தேயு 24: 24,25)
‘‘ஆகையால் பரலோகங்களே! அவைகளில் வாசமாயிருக்கிறவர்களே! களிகூருங்கள். பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்துவரும் என்று சொல்லக்கேட்டேன்.’’ (வெளி 12:12)
அந்திகிறிஸ்துவாகிய சாத்தான், தான் வெளிப்படத் தெரிந்துகொண்ட ராஜ்ஜியங்களில் முக்கியமானது பாபிலோன் சாம்ராஜ்ஜியம் ஆகும். இந்த அந்திகிறிஸ்துவிற்கும் பாபிலோனுக்கும் என்ன சம்பந்தம் என்பதைத் தான் இந்தப் புத்தகத்தில் நாம் முழுவதும் பார்க்க இருப்பதால், கடைசிகாலங்களைப் பற்றி பார்க்கும் முன்பு, பாபிலோனின் முன்னோடியான பாபேலைப் பற்றி கொஞ்சம் விளக்கமாகப் பார்ப்போம்.
பழைய ஏற்பாட்டு ‘உலகம்’
ஜலப்பிரளயத்திற்கு முன் உலகம் என்பது, தற்போது நாம் ‘மிடில் ஈஸ்ட்’ என்று சொல்லும் தற்போதைய இஸ்ரவேல் முதல் மெசபடோமியா வரை இருக்கும் இடம் மட்டும் தான்; அதுதான் பூமியின் நடுப்பகுதியும் கூட. வேறு கண்டங்களில் மக்கள் குடியிருப்பு இல்லை என்பதுதான் வேதத்தின் ஆதாரம்.
‘‘ஜனங்கள் கிழக்கேயிருந்து பிரயாணம்பண்ணுகையில், சிநெயார் தேசத்திலே சமபூமியைக்கண்டு, அங்கே குடியிருந்தார்கள்.’’ (ஆதி 11:2)
‘‘அப்பொழுது ஆண்டவர் யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமையும் தேவனுடைய ஆலயத்தின் பாத்திரங்களில் சிலவற்றையும் அவன் (நேபுகாத்நேச்சார்) கையில் ஒப்புக்கொடுத்தார்; அவன் அந்தப் பாத்திரங்களைச் சினேயார் தேசத்திலுள்ள தன் தேவனுடைய கோவிலுக்குக் கொண்டுபோய், அவைகளைத் தன் தேவனுடைய பண்டசாலைக்குள் வைத்தான்.’’ (தானியேல் 1:2)
பாபேல் கோபுரத்தின் ஆச்சரியங்கள் யாசேருடைய புத்தகத்தின்படி (அதிகாரம் 9) உலகம் முழுவதும் ஒரே பாஷையும், ஒரே ராஜ்ஜியமுமாக நிம்ரோத்தின் கீழ் இருந்தது. இந்த பாபேல் கோபுரத்தின் அஸ்திபார சுற்றளவு (Circumference) மட்டும் மூன்று நாள் நடைபயணம் செய்யும் தூரமாம். சுமார் ஆறு லடசம் மனிதர்கள் அதில் ஈடுபட்டிருந்தனர். ‘நாம் பரலோகத்தை எட்டின பின்பு தேவனுடைய இடத்தில் நம் சிலைகளை வைத்து வணங்கவேண்டும், தேவனை நமது அம்புகள், வில்லினால் போர் செய்து கொல்லவேண்டும்’ என்று சொல்லிக்கொண்டார்களாம். இந்த கோபுரம் கட்டும் வேலை பல வருடங்களாக நடைபெற்றது. கடைசிக் கட்டத்தில் தரையிலிருந்து கொடுத்து அனுப்பப்படும் செங்கல், மேல் உச்சிக்கு சென்றடைய ஒரு வருடம் ஆனதாம். எனவே கோபுரம் கட்டும்போது ஒரு மனிதன் தவறிவிழுந்து இறந்துவிட்டால் வருத்தப்படுவதை விட, ஒரு செங்கல் தவறி விழுந்துவிட்டால் மிக வருத்தப்பட்டு அழுவார்களாம். அந்திகிறிஸ்துவின் ஆவி தன்னை நிலைநிறுத்திக்கொள்ள இவ்வளவு வெறித்தனமாக வேலை செய்யும் இத்தனை பெரிய ஜனக்கூட்டத்தைப் பயன்படுத்தியிருந்தான் என்றால், இன்றைக்கும் உலகின் மிகப்பெரும்பான்மையான மக்களை வஞ்சித்து தன்னை/சிலைகளை வணங்கவைக்க அவனால் கூடாதா என்ன?கோபுரத்தைப் பற்றிய தகவல்கள் இன்றைக்கு நம்மால் நம்பமுடியாமல் இருக்கலாம். ஆனால் பரலோகத்திற்கு மேலாக உயரும் அளவுக்கு கோபுரம்கட்ட எவ்வளவு பெரிய அடித்தளம் போடவேண்டும் என்று கற்பனை செய்துபாருங்கள். லூசிபரைப்போல இவர்களும் இத்தனை பெருமைகொண்டு கர்த்தரைக் கோபமடையச்செய்ததால் தான் அவர் அதில் வேலை செய்தவர்களின் பாஷைகளை மாற்றி, ஜனங்களை பூமியெங்கும் சிதறப்பண்ணினார் என்று ஆதியாகமம் 11: 7,8 சொல்கிறது. அப்படி சிதறியவர்கள் தான் ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பிய கண்ட நிலப்பரப்புகளுக்கு குடியேறினர். இதை வரலாற்று, தொல்பொருள் ஆய்வாளர்களும் ‘மெசபடோமியா’ நாகரிகம் தான் முதல் நாகரிகம் என்று உறுதிபடுத்தியுள்ளனர். ஜலப்பிரளயத்திற்குப் பின்பு பாபேல் கோபுரத்தைக் கட்டும்போது ஏற்பட்ட பாஷைக் குளறுபடியால், நோவாவின் மூன்று சந்ததிகளும் மூன்று மூலபாஷை பேசும் ஜனக்கூட்டமாக மாறினர். அதனால் அவர்கள் சேர்ந்து வாழமுடியாமல் போனது. இந்த மூன்று சந்ததிகளிலிருந்து தான் பூமியின் அத்தனை ஜாதிகளும், மூன்று மூலபாஷைகளிலிருந்து தான் இன்றுள்ள எல்லா மொழிகளும் உருவானது.
படம் 4: பூமியின் சந்ததிகளும் நாகரிகங்களின் தோற்றங்களும்
நிம்ரோத்: நல்லவனா? கெட்டவனா?
நிம்ரோத் என்பவன் தான் பாபிலோன் மற்றும் அசீரிய ராஜ்ஜியத்தின் ஆதித்தகப்பன். இவன் தான் ஆதி பாபேலையும், அசீரிய ராஜ்ஜியத்தின் பட்டணங்களான அசூரையும், நினிவேயையும் கட்டி ஆண்டான்.
‘‘சிநெயார் தேசத்திலுள்ள பாபேல், ஏரேக், அக்காத், கல்னே என்னும் இடங்கள் அவன் ஆண்ட ராஜ்யத்திற்கு ஆதி ஸ்தானங்கள். அந்தத் தேசத்திலிருந்து அசூர் புறப்பட்டுப்போய், நினிவேயையும், ரெகொபோத் பட்டணத்தையும், காலாகையும், நினிவேக்கும் காலாகுக்கும் நடுவாக ரெசேனையும் கட்டினான்; இது பெரிய பட்டணம்.’’ (ஆதியாகமம் 10:10-12)
நிம்ரோத் என்ற பெயருக்கு பாபிலோனிய அர்த்தம் ‘மேராதாக்’ ஆகும். இதனால் பாபிலோனியர்கள் அவனைக் கடவுளாக எண்ணி வழிபட்டுவந்தது மட்டுமல்லாமல், பாபிலோனிய ராஜாக்கள் அவனது பெயரைத் தங்களுக்கு சூட்டிக்கொண்டார்கள். நிம்ரோத் தான் பாபிலோனியர்களின் ஹீரோவான கில்காமேஷ் (Gilgamesh) என்பதற்கான ஆதாரங்கள் களிமண் ஏடுகளில் காணப்படுகின்றன.
‘‘பாபிலோன் பிடிபட்டது; பேல் வெட்கப்பட்டது; மேராதாக் நொறுங்குண்டது; அதினுடைய சிலைகள் இலச்சையடைந்தது; அதினுடைய விக்கிரகங்கள் நொறுங்கிப்போயின என்று ஜாதிகளுக்குள்ளே அறிவித்துப் பிரசித்தம்பண்ணுங்கள்;’’ (எரேமியா 50:2)
‘‘யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனுடைய சிறையிருப்பின் முப்பத்தேழாம் வருஷம் பன்னிரண்டாம் மாதம் இருபத்தேழாந்தேதியிலே, ஏவில்மெரொதாக் என்னும் பாபிலோன் ராஜா, தான் ராஜாவான வருஷத்திலே, யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனைச் சிறைச்சாலையிலிருந்து புறப்படப்பண்ணி, அவன் தலையை உயர்த்தி,’’ (2 இராஜாக்கள் 25:27)
இந்த நிம்ரோத்தைப் பற்றி வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளதை கிறிஸ்தவர்கள் முழுவதும் தவறாக புரிந்துகொண்டுள்ளனர்.
‘‘கூஷ் நிம்ரோதைப் பெற்றான்; இவன் பூமியிலே பராக்கிரமசாலியானான். இவன் கர்த்தருக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்காரனாயிருந்தான்; ஆகையால் கர்த்தருக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்காரனான நிம்ரோதைப் போல என்னும் வழக்கச்சொல் உண்டாயிற்று.’’ (ஆதியாகமம் 10:8,9)
இதன் உண்மையான அர்த்தத்தைப் புரிந்துகொள்ள யாசேருடைய புத்தகம் நமக்கு உதவியாக உள்ளது. நான் பரிசுத்த வேதப்புத்தகத்தில் சேர்க்கப்படாத ஒரு புத்தகத்திலிருந்து மேற்கோள் காட்டுவதாக நினைக்கவேண்டாம். ஆதியாகமத்தில் பல நூறுவருடங்களில் நடந்த சம்பவங்கள் ஒரு சில வசனங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. அதையே தான் யாசேருடைய புத்தகம் விரிவாகக் கூறுகிறது .
‘‘தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கும் அவன் மனைவிக்கும் தோல் உடைகளை உண்டாக்கி அவர்களுக்கு உடுத்தினார்.’’ (ஆதியாகமம் 3:21)
இந்த விலைமதிப்பற்ற தோல் உடையை, ஆதாமிற்குப்பின் அவனது சாயலான சேத்தினுடைய பல சந்ததிகள் பயன்படுத்திவந்துள்ளனர். ஜலப்பிரளய நேரத்திற்கு பின்பு நோவாவிடமிருந்து அவரது மகனான காம் திருடிவைத்துக்கொண்டதால், அவனது வம்சத்தில் வந்த நிம்ரோத்தினுடைய கையில் கிடைத்தது. இந்த தோல் ஆடையை அணிந்தவர்களை ‘விலங்குகள், மனிதர்கள்’ உட்பட எதுவும் எதிர்த்துநிற்க முடியாதாம். இதன் மூலமாக பலத்தவனாயிருந்த நிம்ரோத்தைக் கண்டு அப்போதைய ஜனங்கள் அவனைத் தலைவனாக ஏற்படுத்தினார்கள். தேவனால் கொடுக்கப்பட்ட தோல் உடையினால் எல்லாவற்றையும் அடக்கி ஆண்டதால் தான் அவன் ‘தேவனுக்கு முன்பாக பலத்த வேட்டைகாரனாயிருந்தான்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. நிம்ரோத் தன்னை உயர்த்துவதற்கான காரணங்களாவன….
- நோவாவின் காலத்தில் ஏற்பட்ட வெள்ளம் போல இன்னொரு வெள்ளம் ஏற்பட்டால் தங்களை பாதுகாத்துக்கொள்ள கோபுரம் கட்டியிருக்கலாம்.
- தேவனுக்கு விரோதமாக செயல்பட்டதால் பரலோகத்தை எட்டுமளவிற்கு கோபுரம் கட்டத் துணிந்தான்.
- அவனது ஆட்சியின் காலத்தில் பிறந்த சேமின் சந்ததியானாகிய ஆபிரகாம் தன்னை விட பலத்தவனாக வந்துவிடக்கூடாது என்ற பயத்தில் ராஜ்ஜியத்தை தன் கைக்குள் கொண்டுவர நினைத்தான். (ஆதாரம்: யாசேரின் புத்தகம்)
மொத்தத்தில் இந்த நிம்ரோத் தேவனுக்கு விரோதமாக செயல்பட்டவனே தவிர, தேவனால் பயன்படுத்தப்பட்டவன் அல்ல என்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும்.
சாத்தானின் சிங்காசனம்
The Legends of Jews என்ற யூதர்களின் புனிதநூல் ஒன்றின் 4 வது அத்தியாயத்திலும், யாசேருடைய புத்தகத்தில் 9 ஆம் அதிகாரத்திலும் நிம்ரோத்தை உலகத்தின் அனைத்து ராஜாக்களும் வந்து தாழப்பணிந்துகொண்டதாக சொல்லப்பட்டிருக்கிறது. அப்போது அவன் உட்கார்ந்திருக்கும் சிங்காசனம் நான்கு அடுக்குகளைக் கொண்டதாயிருந்ததாம். அவை முறையே இரும்பு, வெண்கலம், வெள்ளி, பொன் என்பவைகளாகும். இப்போது நாம் விளக்கம் காண இருக்கும் தானியேல் புத்தகத்தில் பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சார் கண்ட கனவில் தெரிந்த உயரமான சிலையின் அங்கங்கள் இதே உலோகங்களைக் கொண்டு செய்யப்பட்டதாகவே கண்டதை நாம் நினைவுகூற வேண்டும். இந்த பாபேல் தான் பிற்காலத்தில் வந்த பாபிலோனுக்கு எல்லா விதத்திலும் முன்னோடி.
‘‘ராஜாவே, நீர் ஒரு பெரிய சிலையைக்கண்டீர்; அந்தப் பெரிய சிலை மிகுந்த பிரகாசமுள்ளதாயிருந்தது; அது உமக்கு எதிரே நின்றது; அதின் ரூபம் பயங்கரமாயிருந்தது. அந்தச் சிலையின் தலை பசும்பொன்னும், அதின் மார்பும் அதின் புயங்களும் வெள்ளியும், அதின் வயிறும் அதின் தொடையும் வெண்கலமும், அதின் கால்கள் இரும்பும், அதின் பாதங்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணுமாயிருந்தது.’’ (தானியேல் 2:31-33)
பாபேல் வழிபாட்டு முறைகள்
நான் இந்த புத்தகத்தில் அதிக வரலாறைப் பேசக்காரணம், வரலாற்றை ஒப்பிடாமல் வேதபுத்தகத்தை, குறிப்பாக தீர்க்கதரிசன புத்தகங்களை புரிந்துகொள்ளமுடியாது என்பதால் தான். வேதத்தில் நிம்ரோத் மற்றும் தம்மூசைப் பற்றி மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் வரலாற்றின்படி இந்த நிம்ரோத்தின் மனைவியின் பெயர் செமிராமிஸ் (Semiramis). இவள் தவறான உறவினால் கர்ப்பமடைந்த சமயத்தில் நிம்ரோத் இறந்துவிட, பாபேலின் ராஜ்ஜியத்தை இழக்க மனதில்லாத அவள் ஒரு வதந்தியைப் பரவச்செய்தாள். அதன்படி இறந்துபோன நிம்ரோத் சூரியக்கடவுளாக மாறிவிட்டதாகவும், அந்த சூரியனிலிருந்து வந்த ஒளிக்கதிர்களால் தான் தாக்கப்பட்டதாகவும், அது வயிற்றுக்குள் புகுந்தபின் கருவடைந்த மாற்றத்தை உணர்ந்ததாகவும், சூரியக்கடவுளான நிம்ரோத்தே கரு உருவில் உள்புகுந்ததால், தனது கர்ப்பத்தில் நிம்ரோத் மீண்டும் குழந்தையாகப் பிறக்கப்போவதாகவும் அறிவித்தாள்.
இப்போது செமிராமீஸ் ‘நிம்ரோத்தின் மனைவி மற்றும் தாய்’. இந்தக் குழந்தையின் பெயர் தான் ‘தம்மூஸ்’ (Tammuz). இதைத்தான் பிற்காலத்தில் இஸ்ரவேல் பெண்கள் கூட 40 நாட்கள் உபவாசம் இருந்து வணங்கினார்கள் ;ஆண்கள் சூரியக்கடவுளை வணங்கினார்கள் என்று நம் வேதம் தெளிவாக எடுத்துரைக்கிறது. அவர்கள் அவ்வாறு உபவாசம் செய்துவந்த ஜீன்-ஜீலை மாதம் தான் எபிரேய மாதங்களின் நாலாவது மாதமான ‘Tammuz’ என்ற பெயரில் இன்றுவரை நிலைத்துள்ளது.
‘‘என்னைக் கர்த்தருடைய ஆலயத்து வடக்கு வாசலின் நடையிலே கொண்டு போனார்; இதோ, அங்கே தம்மூசுக்காக அழுதுகொண்டிருக்கிற ஸ்திரீகள் உட்கார்ந்திருந்தார்கள்.’’ (எசேக்கியேல் 8:14).
‘‘என்னைக் கர்த்தருடைய ஆலயத்தின் உட்பிராகாரத்திலே கொண்டுபோனார்; இதோ, கர்த்தருடைய ஆலயத்தின் வாசல் நடையிலே மண்டபத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே, ஏறக்குறைய இருபத்தைந்து புருஷர், தங்கள் முதுகைத் கர்த்தருடைய ஆலயத்துக்கும் தங்கள் முகத்தைக் கீழ்த்திசைக்கும் நேராகத் திருப்பினவர்களாய்க் கிழக்கே இருக்கும் சூரியனை நமஸ்கரித்தார்கள்’’ (எசேக்கியேல் 8:16)
படம் 5: பாபிலோனிய மற்றும் எகிப்திய கடவுள்கள்
இதற்குப் பின்பு தான் சிநேயார் தேசத்தில் நிம்ரோத்தை சூரியக்கடவுளாகவும், செமிராமிஸை கடவுளின் சித்தத்தால் கருவுற்ற புனிதத் தாயாகவும், அவளது கையில் இருக்கும் குழந்தையை தெய்வக்குழந்தையாகவும் வழிபடும் வழக்கம் தோன்றியது. அன்றைக்கு ஆ ர ம் பி த் த இ ந் த மூ ல க் க ட வு ள், பெண் கட வுள் , குழந்தைக் கடவுள் வழிபாட்டின் பின்னணியில் சாத்தான் இருக்கிறான் என்று உங்களுக்கு நான் சொல்லித்தெரியவேண்டியதில்லை என்று நினைக்கிறேன். இப்படி ஆரம்பிக்கப்பட்ட மூலக்கடவுள், கையில் தெய்வக் குழந்தையுடன் இருக்கக்கூடிய பெண்தேவதை வணக்கங்கள் எகிப்தில் ஐசிஸ் (அம்மா)-ஹோரஸ் (குழந்தை) (Isis-Horus) எனவும், ஷிங்க்மூ-வைசுஹிஜோ (Shing moo-y-su-Hijo, The holy mother and child of china) என்று சீனாவிலும், செமிராமிஸ்-தம்மூஸ் என்று பாபிலோனிலும், தேவகி-கிருஷ்ணா என்று இந்தியாவிலும், இன்னும் பலபெயர்களில் உலகெங்கிலும் சிலைகளாக வைத்து வணங்கப்படுகின்றன. இதையே தான் ‘ரோம ராஜ்ஜியத்தின்’ கத்தோலிக்க சபையினரும் ‘மரியாள்-குழந்தை இயேசு’ என்ற பெயரில் செய்கின்றனர் என்பது இப்போது உங்களுக்குப் புரியவரும்.
படம் 6: பல தேசங்களில் தாய்-சேய் வணக்கமுறைகள்
ஆனால் நான் இப்போது அதை நேரடியாகச் சொல்லாமால், இந்த ஆதி பாபேல் என்ற பாபிலோனுக்கும், கி.மு 7 மற்றும் 6 ஆம் நூற்றாண்டில் நேபுகாத்நேச்சார் ஆண்ட பாபிலோனுக்கும், வெளிப்படுத்தலில் ஆவிக்குரிய அர்த்தத்தில் சொல்லப்பட்ட மகாபாபிலோன் என்னும் வேசிக்கும், அந்திகிறிஸ்துவுக்கும் என்ன தொடர்பு என்று முடிச்சுக்களை அவிழ்த்த பின்னர் சொன்னால் தான், ஆதாரத்தோடு கூடிய பல உண்மைகள் உங்களுக்குப் புரியவரும். இந்த சத்தியங்களைத் தான் கர்த்தர் தானியேல் மற்றும் வெளிப்படுத்தலில் தெளிவாக சொல்லிவைத்துள்ளார். இன்னும் பாபிலோன் எவ்வாறு அந்திக்கிறிஸ்துவோடு அன்றிலிருந்து இன்றுவரை சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதை ஏசாயா, எரேமியா, எசேக்கியேல் தீர்க்கதரிசன புத்தகங்களிலிருந்து சொல்ல ஆரம்பித்தால் இந்த புத்தகம் காணாது. கர்த்தருடைய ஆவியானவர் தாமே உங்களை சகல சத்தியத்தை அறிந்துகொள்ளும் வெளிச்சத்தைத் தருவாராக.
நீங்களும் இனிவரும் அத்தியாயங்களை திறந்த மனதோடு, இதுவரை சொல்லிக்கொடுக்கப்பட்ட அல்லது அறியாமையின் காலங்களின் உபதேசங்களை கொஞ்சம் ஒதுக்கிவைத்துவிட்டு, ஆவியானவரின் துணையோடு நான் இதில் கொடுக்கவிருக்கும் விளக்கங்கள், வேதவசனங்களின் அடிப்படையிலும், சரித்திரப்பூர்வமாக நடைபெற்ற சம்பவங்களின் ஆதாரங்களிலும் உள்ளதா என்பதை மாத்திரம் ஆராய்ந்து அறிந்துகொள்ள உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
It’s very useful us more than message please I learn so what I contact you??????pls can help me pastor
Good book