கத்தோலிக்க கிறிஸ்தவ சபைகளில் இன்றுவரைக்கும் இறந்துபோன தங்கள் குடும்ப நபர்களுக்காக விண்ணப்பிக்கும் பழக்கம் இருந்து வருகின்றது. இது 16 ஆம் நூற்றாண்டில் பாவமன்னிப்பு சீட்டு பிரபலமான காலத்திலிருந்தே அனுசரிக்கப்பட்டு வருகிறது. இறந்துபோன குடும்ப நபர்கள் ‘உத்தரிக்கும் ஸ்தலம்’ என்ற இடத்தில் தற்காலிகமாக வைக்கப்பட்டிருப்பதாகவும், இப்போது உயிரோடிருக்கும் குடும்ப நபர்கள் அவர்களுக்காக சில ஜெபங்கள் மற்றும் நற்காரியங்களை செய்தால் அந்த இடத்தில் இருப்பவர்களின் எஞ்சிய பாவங்கள் மன்னிக்கப்பட்டு அவர்களுக்கு பரலோகத்தில் இடம் கிடைக்கும் என்பதே இந்த நம்பிக்கையாகும். இது முற்றிலும் வேதத்திற்குப் புறம்பான செயல்.
லாசரு மற்றும் வசதிபடைத்த மனிதனைப் பற்றி இயேசு சொன்ன உவமையில் (லூக்கா 16:20-31), லாசரு இறந்துபோனவுடன் ஆபிரகாமின் மடிக்கும், வசதிபடைத்த அந்த மனிதன் பாதாளத்திற்கும் கொண்டுசெல்லப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது . அந்த வசதிபடைத்த மனிதன் பாதாளத்தின் நெருப்பின் வேதனையினால் லாசருவின் விரல் நுனியினாலாவது தனக்குக் தண்ணீர் கிடைக்குமா என்று ஆபிரகாமிடம் கேட்டபோது “நீ பூமியில் உயிரோடிருக்குங் காலத்தில் நன்மையை அனுபவித்தாய்;லாசருவோ தீமையை அனுபவித்தான்” என்று சொன்னது மட்டுமல்லாமல் “இப்போது அவன் தேற்றப்படுகிறான், நீயோ வேதனைப்படுகிறார்” என்று பதிலளித்தார் (லூக்கா 16:25). இதிலிருந்து மனிதன் இறந்துபோன பின்பு அவன் உயிரோடிருக்கும்போது செய்த செயல்களுக்கான பரிசோ அல்லது தண்டனையோ கிடைக்குமேயன்றி, இறந்த பிறகு அந்த ஆத்துமாவிற்கு மீண்டும் மனம்திரும்ப வாய்ப்பு கிடையாது என்பது தெளிவாகின்றது.
இத்துடன் அந்த வசதிபடைத்த மனிதன் விட்டுவிடவில்லை. அவன் மீண்டும் ஆபிரகாமிடம் லாசரு மீண்டும் உயிரோடு சென்றால் தனது உறவினர்கள் தனது நிலையை அறிந்து மனம்திரும்புவார்கள்; அவர்களும் பாதாள வேதனைக்கு வரவேண்டியதில்லை என்ற எண்ணத்தில் கேட்டபோது “அவர்களுக்கு மோசேயும், தீர்க்கதரிசிகளும் உண்டு, அவர்களுக்கு அவர்கள் செவிகொடுக்கட்டும்” (லூக்கா 16:30) என்று ஆபிரகாம் பதிலளித்தார்.
இதிலிருந்து ஒரு மனிதன் பூமியில் வாழும் நாட்களில் மட்டுமே மனம்திரும்ப வாய்ப்பு உண்டு என்பதும், உயிரோடு இருக்கும்போது அவன் செய்த நன்மைகள் மட்டுமே பின்தொடரும் என்பதும் தெளிவாகின்றது. இதைத்தான் “அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது” (எபிரேயர் 9:27) என்று பரிசுத்த வேதமும் சொல்கிறது. எனவே இறந்துபோன நபர்களுக்காக வேண்டுதல் செய்வது கூட ஒருவகையில் பாவமான காரியமாகும்.