நோவாவின் காலத்தில் ‘பூமி பெருவெள்ளத்தினால் அழியப்போகிறது’ என்ற செய்தி நோவாவிற்குத் தவிர மற்ற மக்களுக்கு சொல்லப்பட்டதா? என்று கேட்டால் பலர் அப்படி நேரடியாக எதுவும் சொல்லப்படவில்லை என்றே கருதலாம். சிலர் ‘நீதியைப் பிரசங்கித்தவனாகிய நோவா’ (2 பேதுரு 2:5) என்று எழுதப்பட்டிருப்பதால் அவர் பெருவெள்ளம் வரப்போகிறது, மனம்திரும்புங்கள் என்று பிரசங்கித்திருக்கலாம் என்று மேற்கோள் காட்டுகின்றனர். இது சரியே. ஆனால் எத்தனை வருடங்களாக அவர் அழிவின் செய்தியை சொல்லியிருப்பார் அல்லது பெருவெள்ள அழிவிற்கு எத்தனை வருடங்களுக்கு முன்பு நோவா தேவனிடமிருந்து இந்த செய்தியைப் பெற்றார் என்பதற்கு பரிசுத்த வேதத்தில் தெளிவான ஆதாரம் இருக்கிறது.
“அப்பொழுது கர்த்தர்: என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை; அவன் மாம்சம்தானே, அவன் இருக்கப் போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம் என்றார்.” (ஆதியாகமம் 6:3)
இந்த வசனத்தின்படி, அவன் இருக்கபோகிற நாட்கள் 120 வருஷம் தானே என்பது, இன்னும் 120 வருஷத்தில் நான் போராடிக்கொண்டிருக்கிற மனுஷன் இனி இருக்கப்போவதில்லை என்றுதானே அர்த்தம். பெருவெள்ளம் வரும்போது நோவாவிற்கு 600 வயது என்றால் (ஆதி 7:6) இந்த அழிவின் செய்தி நோவாவிற்கு சுமார் 480 ஆவது வயதிலேயே சொல்லப்பட்டுவிட்டது.
ஆனால் புதிய ஏற்பாட்டு காலத்தில் இருப்பவர்களுக்கு/ இருந்தவர்களுக்கு இந்த எச்சரிக்கை இயேசு மூலமாக நேரடியாகவே சொல்லப்பட்டுவிட்டது. எனவே தான் இயேசு இந்த உலகிற்கு வந்த காலம் முதலே கடைசிகாலம் என்று அழைக்கப்படுகிறது.
”பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்.” (எபிரேயர் 1:1,2)
(மேலும் கடைசிகாலம், முடிவுகாலங்களைப் பற்றி தெரிந்துகொள்ள அத்தியாயம் 13 ஐ வாசியுங்கள்)
இப்படி இயேசு மூலமும், பின்பு அவரது சீடர்கள் மூலமும் அறிவிக்கப்பட்டுவந்த சுவிசேஷம், கடைசிகாலத்தின் முடிவு அல்லது முடிவுகாலத்தின் ஆரம்பத்தில் உலகெங்கிலும் அதிவேகமாக அறிவிக்கப்பட்டது. அதுதான் கத்தோலிக்க ரோமப்பேரரசின் அழிவிற்கும் வழிவகுத்தது. கத்தோலிக்க ரோமப்பேரரசு வீழ்ந்த கி.பி 1798 ஆண்டுக்கு முன்பே, அதாவது மார்டின் லூதரால் புராட்டஸ்டண்ட் புரட்சி தொடங்கப்பட்டு சுவிசேஷம் சகல மக்களுக்கும் செல்ல ஆரம்பித்த காலமான 16 ஆம் நூற்றாண்டிலிருந்தே இந்த எச்சரிக்கையின் காலம் ஆரம்பித்துவிட்டது. இதைத்தான் யோவானுக்கு வெளிப்படுத்திய விசேஷத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
”பின்பு, வேறொரு தூதன் வானத்தின் மத்தியிலே பறக்கக்கண்டேன்; அவன் பூமியில் வாசம்பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்கதாக நித்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்து, மிகுந்த சத்தமிட்டு: தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் வேளை வந்தது; வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் நீரூற்றுகளையும் உண்டாக்கினவரையே தொழுதுகொள்ளுங்களென்று கூறினான்.” (வெளி 15:6,7)
எனவே நோவாவின் காலத்தில் கொடுக்கப்பட்ட எச்சரிப்பின் காலத்தைவிட நமக்கும் மிகநீண்ட காலம் மனம்திரும்பி இயேசுவையே தொழுதுகொள்ள கொடுக்கப்பட்டுள்ளது. இன்று நாம் இந்தக் காலம் முடிவடையும் தருணத்தில் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது. ஏனென்றால் பெரும்பாலானோர் இதை அறிந்தும் (நோவாவின் பிரசங்கத்தைக் கேட்டும் உணராதவர்களாயிருந்தது போல) மனுஷகுமாரனாகிய இயேசு வரும் நாள் வரைக்கும் இருப்பார்கள் என்று இயேசுவே சொல்லியிருக்கிறார்.
“நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும்.எப்படியெனில், ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள் வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண்கொண்டும் பெண்கொடுத்தும், ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள்; அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும்.” (மத்தேயு 24:37-39)
மனம்திரும்பி சுவிசேஷத்தை விசுவாசியுங்கள். காலம் சமீபமாயிற்று. ஆமென்.