மத்தேயு 24, லூக்கா 21 மற்றும் மாற்கு 13 ஆம் அதிகாரங்களில் எருசலேம் தேவாலயத்தில் வைத்து இயேசு சொன்ன கடைசிகால தீர்க்கதரிசனங்களில் பெரும்பாலானவை எருசலேம் நகரம் மற்றும் தேவாலயம் அழிக்கப்படுவதைக் குறித்தவைகளாகும். இயேசு அவைகளை சொன்னதன் பின்புலமே ‘நீங்கள் காணும் இந்த தேவாலயம் ஒரு கல்லின் மேல் ஒரு கல் இராதபடிக்கு இடிக்கப்பட்டு போகும்’ என்ற தீர்க்கதரிசனம் எப்படி நிறைவேறும் என்பதைப் பற்றியதுதான்.
இந்த அதிகாரங்களில் எருசலேம் அழிக்கப்படும் என்று இயேசு சொல்வது ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே அவரது சிலுவை மரணத்தை ஒட்டி எருசலேமுக்குள் நுழையும் முன்பு நகரத்தைப் பார்த்து கண்ணீர்விட்டு அழுதார்.
"எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும்வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று. இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும். கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று நீங்கள் சொல்லுமளவும் இதுமுதல் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்." (மத்தேயு 23:37-39)
உங்கள் பிள்ளைகள் தரையில் மோதியடித்துக் கொல்லப்படும் காலம் வரும்; எனக்காக அழாமல் அதற்காக அழுங்கள் என்று தனது சிலுவைப் பாதையில் கூட எச்சரித்தார்.
“திரள்கூட்டமான ஜனங்களும் அவருக்காகப் புலம்பி அழுகிற ஸ்திரீகளும் அவருக்குப் பின்சென்றார்கள். இயேசு அவர்கள் முகமாய்த் திரும்பி: எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள். இதோ, மலடிகள் பாக்கியவதிகளென்றும், பிள்ளைபெறாத கர்ப்பங்களும் பால்கொடாத முலைகளும் பாக்கியமுள்ளவைகளென்றும் சொல்லப்படும் நாட்கள்வரும்.” (லூக்கா 23:27-29)
பிள்ளைகள் இருப்பவர்களை விட மலடிகள் பாக்கியவதிகள் என்று சொல்லப்படும் அளவிற்கு கி.பி 70 களில் ரோமர்களால் வரும் எருசலேமின் அழிவு கொடூரமாக இருக்கும் என்று மத்தேயு 24 ல் இயேசு விரிவாக சொல்லியுள்ளார்.
"அந்நாட்களிலே கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ." (மத்தேயு 24:19)
இப்படி கி.பி 70 ல் எருசலேம் ரோம தளபதி டைட்டசால் அழிக்கப்படும் என்பதை மட்டுமே இயேசு சீடர்களுக்குச் சொன்ன கடைசிகாலங்களைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள், இன்னும் நிறைவேறவில்லை என்றும் இனிமேல் தான் வரப்போகிறது என்றும் இன்றைய கடைசிகால தீர்க்கதரிசன ஸ்பெசலிஸ்ட்கள் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் ஊழியக்காரர்களால் அடிப்படை அறிவுகூட இல்லாமல் போதிக்கப்படுகிறது. இந்த எருசலேமின் அழிவுகளைப் பற்றித்தெரிந்துகொள்ள இந்த இணையதளத்தின் Online reading பக்கத்தில் அத்தியாயங்கள் 10&11 ஐ வாசியுங்கள்.
இயேசு இத்துடன் நிற்காமல் அவரது இரண்டாம் வருகை எப்படி இருக்கும், எப்போது இருக்கும் என்றும் தொடர்ச்சியாகக் கூறியுள்ளார். மேலே சொல்லிய எருசலேமின் அழிவைப்பற்றிய தீர்க்கதரிசன வசனங்களையும், இயேசுவின் இரண்டாம் வருகையைப் பற்றிய தீர்க்கதரிசன வசனங்களையும் மூன்று சுவிசேஷங்களிலும் பிரிக்கும் ஒரு வசனம் மிக முக்கியமானது. கி.பி 70 ல் எருசலேம் அழிக்கப்பட்ட பின்பு பூமியின் ராஜ்ஜியங்களில் ஏற்படும் மாற்றங்களை ஒரே வசனத்தில் கூறிவிட்டு, தனது வருகை எப்படி வெளியரங்கமாக இருக்கும் என்று இயேசு கூறியுள்ளார்.
"அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்." (மத்தேயு 24:29) "அந்நாட்களிலே, அந்த உபத்திரவத்திற்குப் பின்பு, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும்; வானத்தின் நட்சத்திரங்கள் விழும், வானங்களிலுள்ள சத்துவங்களும் அசைக்கப்படும்." (மாற்கு 13:24,25) "சூரியனிலும் சந்திரனிலும் நட்சத்திரங்களிலும் அடையாளங்கள் தோன்றும்; பூமியின்மேலுள்ள ஜனங்களுக்குத் தத்தளிப்பும் இடுக்கணும் உண்டாகும்; சமுத்திரமும் அலைகளும் முழக்கமாயிருக்கும். வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்; ஆதலால் பூமியின்மேல் வரும் ஆபத்துகளுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் மனுஷருடைய இருதயம் சோர்ந்துபோம்." (லூக்கா 21:25,26) இந்த வசனங்களுக்கு முன்பு, எருசலேம் முற்றிக்கையிடப்படும்; யூதர்கள் உலகமெங்கும் சிதறடிக்கப்படுவார்கள் என்ற வார்த்தைகளும் இடம்பெற்றுள்ளன. "எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, அதின் அழிவு சமீபமாயிற்றென்று அறியுங்கள்." "பட்டயக்கருக்கினாலே விழுவார்கள், சகல புறஜாதிகளுக்குள்ளும் சிறைப்பட்டுப்போவார்கள்; புறஜாதியாரின் காலம் நிறைவேறும்வரைக்கும் எருசலேம் புறஜாதியாரால் மிதிக்கப்படும்." (லூக்கா 21:20&24)
அந்த வசனங்களுக்குப் பின்பு இயேசு எப்படி வானில் தோன்றுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. இது தான் இயேசுவின் வெளிப்படையான வருகையாகும். இதில் எங்கும் இயேசு இரகசியமாக வருவார் என்று நேரடியாகவோ, மறைமுகமாகவோ கொடுக்கப்படவில்லை.
"அப்பொழுது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகத்தின்மேல் வருகிறதைக் காண்பார்கள்." (லூக்கா 21:27) "அப்பொழுது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகங்களின்மேல் வருகிறதைக் காண்பார்கள்." (மாற்கு 13:26) "அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள். வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச் சேர்ப்பார்கள்" (மத்தேயு 24:30,31)
மேற்கண்ட வசனங்களிலிருந்து மனுஷகுமாரனாகிய இயேசுகிறிஸ்து எல்லோருடைய கண்களுக்கும் தெரியும்படி வெளிப்படையாகத்தான் வருவார் என்பது தெளிவாகின்றது. இதற்கு ஆதாரமாக பரிசுத்த வேதாகமத்திலிருந்து பல ஆதாரங்களைக் கீழே கொடுத்துள்ளேன்.
"இராத்தரிசனங்களிலே நான் பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவர் வானத்து மேகங்களுடனே வந்தார்; அவர் நீண்ட ஆயுசுள்ளவர் இடமட்டும் வந்து, அவர் சமீபத்தில் கொண்டுவரப்பட்டார்." (தானியேல் 7:13) "அந்நாளிலே அவருடைய பாதங்கள் கிழக்கே எருசலேமுக்கு எதிரே இருக்கிற ஒலிவமலையின்மேல் நிற்கும்; அப்பொழுது மகா பெரிய பள்ளத்தாக்கு உண்டாகும்படி ஒலிவமலை தன் நடுமையத்திலே கிழக்கு மேற்காய் எதிராகப் பிளந்துபோம்; அதினாலே, ஒரு பாதி வடபக்கத்திலும் ஒரு பாதி தென்பக்கத்திலும் சாயும்." (சகரியா 14:4) "ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்." (1 தெசலோனிக்கேயர் 4:16) இரகசிய வருகை என்பது மனிதனால் திணிக்கப்பட்ட அல்லது திரிக்கப்பட்ட ஒன்று என்பதை மேலும் இந்த இணையதளத்திலுள்ள அத்தியாயங்களை வாசித்து வசனத்தின் அடிப்படையில் புரிந்துகொள்ளுங்கள். ஆமென்.