- September 4, 2023
- admin
- 0
இயேசுவின் இரண்டாம் வருகையைப் பற்றி நிலவும் கோட்பாடுகள்
கர்த்தரும், அருமை இரட்சகருமான இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உங்கள் யாவரையும் வாழ்த்துகிறேன். இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகையைப் பற்றியும், அதற்கு முன்னதாக நடந்தேற வேண்டிய தீர்க்கதரிசன சம்பவங்களையும் பற்றிய பல இரகசியங்களை, இந்தப் வலைதளத்தின் மூலமாக உங்களோடு பகிர்ந்துகொள்ள கிருபை செய்த தேவாதி தேவன் ஒருவருக்கே சகல கனமும், மகிமையும் உண்டாவதாக. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தக் காலக்கட்டம் தான் இயேசுவின் வருகைக்கு மிக சமீபமான காலம் என்பது நாம் அனைவரும் நன்கு அறிந்த ஒன்று. அதற்கான அடையாளங்களைக் குறித்த பல்வேறு விளக்கங்களை இன்றைக்கு சபைகள் போதித்துவருகின்றன. இயேசுவின் இரண்டாம் வருகை, அந்திகிறிஸ்துவின் காலம் குறித்த பல்வேறு விதமான போதனைகளையும் விளக்கங்களையும் கேட்டிருந்தாலும், பவுல் அப்போஸ்தலன் சொன்னது போல அதன் உண்மைத்தன்மையை சோதித்து அறிந்துகொள்வது நமது கடமை என்பதை மறந்துவிடக்கூடாது.
எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்’’
(1 தெசலோனிக்கேயர் 5:20,21)
இயேசுவின் இரண்டாம் வருகை மற்றும் சாத்தானாகிய அந்திகிறிஸ்துவின் ஆளுகையைப் பற்றி பல புத்தகங்கள் வெளிவந்துள்ளன. ஆனால் அவை எல்லாமே கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக மட்டுமே சபைகளில் போதிக்கப்படும் வெளிப்படுத்தின விசேஷத்தின் விளக்கங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவை; இதனால் ஒரே விதமான வியாக்கியானங்களையே அவை முன்வைக்கின்றன; அதை மட்டுமே நாம் நம்பவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதற்கு மாற்றுக்கருத்தை முன்வைக்கும் எவரையும் சபைகள் அனுமதிப்பதில்லை, அல்லது கள்ளப்போதகம் என்று முத்திரை குத்திவிடுகின்றனர். யோவானுக்கு இயேசு வெளிப்படுத்திய காரியங்களை அறிந்துகொள்வது அல்லது வியாக்கியானம் செய்வது சற்று கடினமான காரியம் என்பதால், அவைகள் எல்லோராலும் அதிகமாகத் தேடி ஆராயப்படுவதில்லை; மாறாக வழக்கமான ஒரு சாராரின் விளக்கங்களை மட்டுமே கேட்டு திருப்தியடைந்து, அதையே முற்றிலும் சரியான விளக்கம் என்று நம்பிவருகிறோம். இந்த நம்பிக்கை முற்றிலும் ஆதாரப்பூர்வமானதா என்று பரிசோதித்துப் பார்க்க முயற்சிப்பதில்லை அல்லது அறிந்துகொள்ளக் கடினமாக இருக்கிறது. இந்த வகையறாவில் என்னையும் சேர்த்தே நான் சொல்கிறேன்.
ஏனென்றால் இயேசுவின் இரண்டாம் வருகையையும், அந்திகிறிஸ்துவையும் பற்றி பவுல் அப்போஸ்தலன் நிருபங்களில் எழுதின பல இரகசியங்களை, அப்போஸ்தலனாகிய பேதுருவே புரிந்துகொள்ளக் கடினமாக இருக்கிறது என்று கூறியது மட்டுமல்லாமல், இந்த அரிதான காரியங்களை சில ‘கல்லாதவர்களும் உறுதியில்லாதவர்களும்’ புரட்டுகின்றனர் என்றும் கூறியுள்ளார். இயேசுவின் இரண்டாம் வருகையைப் பற்றி பேதுரு தனது நிருபத்தில் எழுதும்போது பவுலை மேற்கோள் காட்டி எழுதியுள்ளார்.
‘‘மேலும் நம்முடைய கர்த்தரின் நீடியபொறுமையை இரட்சிப்பென்று எண்ணுங்கள்; நமக்குப் பிரியமான சகோதரனாகிய பவுலும் தனக்கு அருளப்பட்ட ஞானத்தினாலே இப்படியே உங்களுக்கு (இரண்டாம் வருகையைக் குறித்து) எழுதியிருக்கிறான்; எல்லா நிருபங்களிலும் இவைகளைக்குறித்துப் பேசியிருக்கிறான்; அவன் சொன்னவைகளில் சில காரியங்கள் அறிகிறதற்கு அரிதாயிருக்கிறது; கல்லாதவர்களும் உறுதியில்லாதவர்களும் மற்ற வேதவாக்கியங்களைப் புரட்டுகிறதுபோலத் தங்களுக்குக் கேடுவரத்தக்கதாக இவைகளையும் புரட்டுகிறார்கள்.’’ (2 பேதுரு 3:15,16)
எவைகளைக் கற்று அறியவேண்டும்?
பரிசுத்த வேதத்தின் தீர்க்கதரிசன புத்தகங்களின் வசனங்களை ஆவிக்குரிய அர்த்தத்தில் மட்டுமே வியாக்கியானம் செய்து போதிக்கும் வகையில் தான் நம் சபைகள் பழகியிருக்கின்றன. அது தவறு என்று சொல்லவில்லை. ஆனால் அவை எல்லாம் அந்தக்காலத்தைய ராஜ்ஜியங்களுக்கு சங்கேதமொழியிலோ, நேரடியாகவோ சொல்லப்பட்ட எச்சரிக்கை செய்திகள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது; பழைய ஏற்பாடு முழுவதுமே வரலாற்று சம்பவங்களை சொல்லும் பொக்கிஷம் என்பதும், அவைகள் தான் கடைசிக்கால தீர்க்கதரிசனங்களின் இரகசியங்களை உடைக்க உதவும் திறவுகோல் என்பதும் நாம் தெரிந்துகொள்ளவேண்டிய ஒன்று. அதைத்தான் இந்த விளக்கங்களில் முழுவதும் பின்பற்றியுள்ளேன்.
வேதவாக்கியங்களைக் கல்லாதவர்கள் இதைப் புரட்டுகிறார்கள் என்று பேதுரு சொல்லியுள்ளார். வேதவாக்கியங்களைக் கற்றுக்கொள்ள ஆவியானவரின் துணை நிச்சயம் அவசியம். அதே நேரத்தில் கடைசிக்காலங்களைக் குறித்த தீர்க்கதரிசனங்களைப் பற்றி மட்டுமே பேசும் தானியேல் மற்றும் யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் (Apocalyptic books) ஆகிய தீர்க்கதரிசன புத்தகங்களை வியாக்கியானம் செய்வதற்கு, பூமியில் நிகழ்ந்த அனைத்து வரலாற்று சம்பவங்களைப் பற்றிய அறிவு மிக அவசியம். ஏனென்றால் இவை இரண்டும் ‘ராஜ்ஜியங்களைக் குறித்த இரகசியங்களை’ சொல்லும் புத்தகங்களாகும். இந்த இரண்டு தீர்க்கதரிசன புத்தகங்களையும் வரலாற்றுப் பின்னணியோடு இசைவாக ஆராய்ந்தால் மட்டுமே அது சரியான வியாக்கியானமாக இருக்கமுடியும். இல்லாவிட்டால் பல்வேறு உபதேசக் கோளாறுகளுக்கு வழிவகுக்கும். அதனால் தான் ‘உலகத்தின் வரலாறு என்பதே இயேசுவின் வரலாற்றைத் தான் குறிக்கும்’ என்ற புகழ்பெற்ற சொல்லாடலை சொல்லிவைத்திருக்கிறார்கள் (History is His story).
கடந்த 2600 ஆண்டுகளாக பூமியில் நடந்து முடிந்த அத்தனை சம்பவங்களுமே தற்செயலாக நிகழ்ந்த ஒன்று அல்லது மனிதத் தவறுகளால் நடந்தவை என்று இதுவரை நீங்கள் நினைத்திருந்தால் அதை இன்று முதல் மாற்றிக்கொள்ளுங்கள். அப்படி மாற்ற மனதில்லை என்றால் இந்தப் புத்தகத்தை வாசித்து முடிக்கும்போது நீங்களே இந்தக் கருத்தைப் புரிந்துகொள்வீர்கள். இதுவரை கடைசிக்காலங்களைக் குறித்து நீங்கள் அறிந்துகொண்ட காரியங்களை ஒதுக்கிவைத்துவிட்டு, இந்தப் புத்தகத்தைத் திறந்த மனதோடும், ஆவியானவரின் ஒத்தாசையோடும் வாசியுங்கள். அப்போது தான் நாம் கடைசிக்காலங்களைக் குறித்துக் கற்றுக்கொள்ளவேண்டியது கடல் அளவு என்பது புரியவரும்.
இயேசுவின் இரண்டாம் வருகையைக் குறித்த கோட்பாடுகள்
இயேசுகிறிஸ்துவின் இரகசிய வருகை, பகிரங்கவருகை, அந்திகிறிஸ்துவின் ஆட்சி, உபத்திரவகாலம், ஆயிரம் வருட அரசாட்சி ஆகியவற்றைக் குறித்து இதுவரை பல காலக்கட்டங்களில் சபைகளில் நிலவிவந்த, நிலவிவரும் முக்கியக் கோட்பாடுகளைக் குறித்து சுருக்கமாகப் பார்த்து விட்டு அடுத்த அத்தியாயம் செல்வோம்.
- ஆயிரம் வருட அரசாட்சிக்கு முன்னதான இயேசுவின் வருகை (Premillennialism)
இந்தக் கோட்பாட்டின்படி, அந்திகிறிஸ்துவின் உபத்திரவகாலம் முடிந்தவுடன் இயேசுவின் இரண்டாம் வருகை பகிரங்கமாக இருக்கும். அதன் பின்பு அவர் பூமியை ஆயிரம் வருடம் நீதியாய் ஆட்சிசெய்வார் என்று விசுவாசிக்கப்படுகிறது. இதில் இரண்டு வகையான உட்பிரிவுகளைக் கொண்ட கொள்கையாளர்கள் உள்ளனர். முதல் சாரார், இதுவரையில் பூமியில் மற்றும் சபையில் நடந்த வரலாற்று சம்பவங்களே (Historicism) தீர்க்கதரிசன வசனங்களின் நிறைவேறுதலாகும். இந்த சம்பவங்கள் நிறைவேறி முடியும்போது இயேசுவின் இரண்டாம் பகிரங்க வருகை இருக்கும் என்று நம்புகின்றனர். இந்த கோட்பாடு தான் ஆதிசபையின் காலமான முதல் மூன்று நூற்றாண்டுகளில் விசுவாசிக்கப்பட்டுவந்தது. இரண்டாம் சாரார், சபையானது இயேசுவின் இரண்டாம் வருகையை ஒட்டிய கடைசி ஏழு வருடங்களிலேயே (Futurism) உபத்திரவகாலத்தை சந்திக்கும் என்று நம்புகின்றனர். உபத்திரவகாலம் முடிந்தவுடன் பகிரங்கவருகை இருக்கும்; அதைத்தொடர்ந்து ஆயிரம் வருட அரசாட்சி இருக்கும் என்றும் நம்புகின்றனர். இது 17 ஆம் நூற்றாண்டுக்குப் பின் தோற்றுவிக்கப்பட்ட கோட்பாடாகும். ஏழுவருட உபத்திரவகாலம் இன்னும் வரவில்லை என்று நம்பும் இந்த கொள்கையாளர்களில் (Futurism) இன்னும் மூன்று உட்பிரிவினர் இருக்கின்றனர். அவர்கள் இயேசுவின் இரகசிய வருகை உண்டு என்ற நம்பிக்கையைப் பொறுத்து மூன்றுவகையாகப் பிரிக்கப்படுகின்றனர்.
- அந்திகிறிஸ்துவின் ஏழுவருட உபத்திரவ காலத்திற்கு முன் இரகசிய வருகை – Pre-tribulation Rapture (தற்போது பெரும்பாலான சபைகள் நம்பும் வருகை)
- அந்திகிறிஸ்துவின் ஏழுவருட உபத்திரவ காலத்தின் நடுவில் (மூன்றரை வருடத்தில்) இரகசிய வருகை – Mid-tribulation Rapture
- அந்திகிறிஸ்துவின் ஏழுவருட உபத்திரவ காலத்திற்குப் பின் இரகசிய வருகை – Post-tribulation Rapture
- ஆயிரம் வருட அரசாட்சிக்குப் பின்வரும் இயேசுவின் வருகை (Postmillennialism)
இந்தக் கோட்பாட்டைப் பின்பற்றுபவர்கள், இயேசுவின் சீடர்களால் உலகத்தின் கடைசிபரியந்தம் சுவிசேஷம் அறிவிக்கப்பட்ட பின்னர், சபைகள் பரிசுத்தத்திலும், நீதியிலும் வளர்ந்துபெருகி, பூமியில் சமாதானம் நிலைத்திருக்கும் ஒரு காலம் வரும்; அது 1000 வருட அரசாட்சிக்கு ஒப்பானது; ஆயிரம் வருடம் என்பது சிம்பாலிக் அர்த்தமுடையது என்று நம்புகின்றனர். இந்தக் காலத்தின் முடிவில் தான் இயேசுவின் இரண்டாம் பகிரங்கவருகை இருக்கும் என்றும் விசுவாசிக்கின்றனர்.
3.விசுவாசிகளின் இருதயத்தில் அரசாட்சி (Amillennialism)
ஆயிரம் வருட அரசாட்சி என்பதே கிடையாது; அது விசுவாசிகளின் இருதயத்தில் இயேசு வாசம் செய்வதால், பூமியில் மனிதருக்குள் வரும் ஒரு பரலோக வாழ்விற்கு ஒப்பானது; ஆயிரம் வருடம் என்பது இதைக் குறிக்கும் ஒரு உருவக வார்த்தை தான் என்று இந்தக் கூட்டத்தார் நம்புகின்றனர். இது மூன்றாம், நாலாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஓரிஜன் (origen), புனித அகஸ்டின் ஆகியோரைப் பின்பற்றுபவர்களால் நம்பப்படும் கோட்பாடாகும்.
4.கடவுளின் பகிர்ந்தளிக்கும் ஆட்சிமுறை (Dispensationalism)
இதன்படி, ஆதாமின் படைப்பு முதல் இயேசுவின் ஆயிரம் வருட அரசாட்சி வரை, உலகத்தின் நிகழ்வுகள் ஏழு காலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது; அதில் ஆறாம் காலக்கட்டமான உபத்திரவகாலத்திற்கு முன்பு இரகசிய வருகை இருக்கும்; ஏழாம் கட்டமாக ஆயிரம் வருட அரசாட்சி இருக்கும் என்று வாதிடப்படுகிறது.
படம் 1: ஆயிரம்வருட அரசாட்சியின் அடிப்படையில் இயேசுவின் இரண்டாம் வருகையைப் பற்றியக் கோட்பாடுகள்
இப்படி ஒரு சில கோட்பாடுகள் இயேசுவின் இரகசிய வருகை, பகிரங்க வருகை இரண்டும் உண்டு என்றும், ஒரு சில கோட்பாடுகள் இரகசியவருகை கிடையாது, ஒரே வருகை தான் உண்டு என்றும் தங்கள் வாதங்களை வலியுறுத்துகின்றன. இதில் எது உண்மை என்று நாம் கண்டறிய நமக்கு மிகவும் அவசியமானது தான் ‘ராஜ்ஜியங்களைப் பற்றிய வரலாற்றுப் பின்னணி’. இந்த வரலாற்றுப் பின்னணியை வெறும் வரலாற்று ஆவணங்களிலிருந்து மட்டுமல்லாமல், தீர்க்கதரிசன புத்தகங்கள் மற்றும் பரிசுத்த வேதத்திலுள்ள வரலாற்று புத்தகங்களின் அடிப்படையிலும் ஆராய்வதே சரியானதாக இருக்கும். அதைத்தான் இந்தப் புத்தகத்தின் ஆரம்பம் முதல் கடைசி வரை கடைபிடித்துள்ளேன்.
அடுத்த அத்தியாயங்களுக்குள் செல்லும் முன், இதை முழுவதும் வாசித்துப் புரிந்துகொள்ள சில வழிமுறைகளை தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம். இதைப் பின்பற்றினீர்கள் என்றால் மிகப்பெரும் இரகசியங்களை ஒரே வாசிப்பில் புரிந்துகொள்ளலாம். இல்லையென்றால் இரண்டாவது முறை வாசித்தால் மட்டுமே புரியும் அளவிற்கு ஏராளமான காரியங்கள் அடங்கியது என்பதையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
- அடுத்து வரும் அத்தியாயங்கள், ஆதாமின் காலத்தில் ஆரம்பித்து இயேசுவின் இரண்டாம் வருகை மட்டும் பூமியில் வந்துசென்ற ராஜ்ஜியங்களைக் குறிப்பதால், நீண்ட வரலாற்றுப் பதிவாக இருக்கும்.
- இதில் தானியேல் மற்றும் வெளிப்படுத்தலின் தீர்க்கதரிசனங்களை அடிப்படையாக்க் கொண்டே இயேசுவின் வருகையின் இரகசியங்கள் மற்றும் அந்திகிறிஸ்துவின் ஆட்சி சொல்லப்பட்டுள்ளதால், இந்த இரண்டு தீர்க்கதரிசன புத்தகங்களையும் ஒருமுறை நன்கு புரியும்படி சமீபத்தில் வாசித்திருப்பது அவசியம். முடிந்தால் சம்பந்தப்பட்ட வசனப்பகுதிகளை உங்கள் வேதபுத்தகத்தில் திறந்துவைத்து ஒப்பிட்டுக்கொள்ளலாம்.
- இதன் தீர்க்கதரிசன சம்பவங்கள் அதிகார வரிசைப்படி விளக்கப்படாமல், காலவரிசையின்படியே (Timeline) வசனங்களை சரியான காலங்களில் பொருத்தி விளக்கப்பட்டுள்ளது. இப்படி வாசிப்பது மூலம் தான் ராஜ்ஜியங்களைப் பற்றி எளிதில் புரிந்துகொள்ளமுடியும்.
- சில இடங்களில், பல நூற்றாண்டுகளில் நடந்த சம்பவங்கள் ஒருசில வரிகளிலும், சில இடங்களில் குறுகிய காலத்தில் நடந்த சம்பவங்கள் பக்கம் பக்கமாகவும் இருக்கும். தீர்க்கதரிசன வசனங்களை எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் தேவைக்கேற்ப எழுதியுள்ளேன்.
- நீங்கள் இதுவரைக் கேள்விப்படாத வரலாற்று சம்பவங்கள் இதில் வரலாம். அதன் நம்பகத்தன்மை குறித்து உங்களுக்கு சந்தேகம் இருக்கும்பட்சத்தில் அவற்றைப் பற்றி விரிவாகத் தெரிந்துகொள்ளும் விதத்தில் ஆங்காங்கே ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளேன். வரலாற்றுப் புத்தகங்களையோ, இணையதள விளக்கங்களையோ தேடிப்பார்க்க அவை எளிதாக இருக்கும்.
- ஒவ்வொரு அத்தியாயமாக வரிசைப்படி வாசிக்காமல், ஆர்வமிகுதியால் வெவ்வேறு அத்தியாயங்களுக்குத் தாவித்தாவி படிக்கும் பழக்கம் உடையவர்கள் அதைத் தவிர்க்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அவ்வாறு செய்தால் இதன் தொடர்ச்சியையும், அர்த்தங்களையும் புரிந்துகொள்ள சிரமப்படுவீர்கள்.
- இதில் குறிப்பிடப்பட்டுள்ள வரலாற்று ஆதாரங்கள் எல்லாம் உறுதிசெய்யப்பட்டவைகளாகும். இவை பல ஆயிரம் ஆண்டுகளாக நடந்துவரும் சம்பவங்களாக இருப்பதால், சில இடங்களில் வருடங்களின் துல்லியம் ஒருசில வருடங்கள் முன்பின் இருக்கலாம். ஆனால் சம்பவங்கள் உண்மைத்தன்மை உள்ளவைகள் தான்.
- ஒருசில தீர்க்கதரிசன விளக்கங்களை ஒருதடவைக்கு மேல் ஆங்காங்கே வாசிக்க நேரிடும். அது நீங்கள் தெளிவாகப் புரிந்துகொள்ளும் நோக்கத்திலேயே அப்படி கொடுக்கப்பட்டிருக்கும். சில தீர்க்கதரிசன சம்பவங்கள் முதலில் புரிந்துகொள்ளக் கடினமாக இருக்கும். ஆனால் அடுத்தடுத்த அத்தியாயங்கள் செல்லும்போது முன்னர் கடினமாக இருந்த காரியங்கள் எளிதில் புரியவரும். அதனால் புரிந்துகொள்ளமுடியாத பகுதிகளைக் கண்டு தயங்கவேண்டாம்
- எல்லா அத்தியாயங்களையும் முழுவதும் படித்துமுடிக்குபோது உங்களுக்கு ஒட்டுமொத்த தீர்க்கதரிசன சம்பவங்களின் கட்டமைப்பு (Framework) புரியவரும். அதுமட்டுமல்லாது, அந்திகிறிஸ்துவின் ஆட்சி, இயேசுவின் இரண்டாம் வருகைப் பற்றிய தெளிவு உண்டாகும்
- இறுதியாக, ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, வேதத்தின் இரகசியங்களை அறிந்துகொள்ள உங்கள் இருதயத்தின் கண்களைக் கர்த்தர் திறக்கவேண்டும் என்ற ஜெபத்துடனும், பரிசுத்த ஆவியானவரின் ஒத்தாசையோடும் இதை வாசிக்கும்படி உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.