
- August 10, 2023
- admin
- 0
1,44,000 பரிசுத்தவான்கள்
இயேசுவின் சீடர்கள், அவருடைய ராஜ்ஜியம் வரும்போது ஒருவன் இடப்புறமும், இன்னொருவன் வலப்புறமும் அமருவதற்கு துண்டுபோட்டு இடம்பிடிக்க முயற்சித்தார்கள். அதுபோலவே இன்றும் சிலர், தாங்கள் தான் வெளிப்படுத்தின விசேஷத்தில் சொல்லப்பட்ட 1,44,000 பரிசுத்தவான்கள் என்று முன்பதிவு செய்தவர்கள் போல சொல்லிவருகின்றனர். இது இவர்களது அறியாமையைக் குறிக்கிறது. இந்த 1,44,000 பேர் மட்டும் தான் வெள்ளை அங்கிதரித்த பரிசுத்தவான்கள் என்றால் பரலோகத்தில் இடப்பற்றாக்குறை என்று தானே அர்த்தம்? இத்தனை இரகசியங்களை சங்கேத மொழிகளிலே சொல்லிவைத்த இயேசு இதில் மட்டும் கணக்கு மாறக்கூடாது என்று கறாராக இருக்கமாட்டார் என்று நான் விசுவாசிக்கிறேன். வாருங்கள் கர்த்தர் கற்றுத்தந்த கணக்கு சரியா என்று அவர்களைப் பற்றி சொல்லப்பட்ட ஒவ்வொரு பண்புகள் வாயிலாகப் பார்ப்போம்.
பிதாவின் முத்திரையிடப்பட்டவர்கள்
இந்த பரிசுத்தவான்கள் தேவனால் நெற்றிகளில் முத்திரை போடப்பட்டவர்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. கிறிஸ்துவின் முத்திரை நெற்றிகளில் இருப்பதால், அந்திகிறிஸ்துவின் முத்திரையை நெற்றிகளில் பெற்றவர்களுக்கு எதிரான செயல்பாடு உடையவர்கள் என்று எடுத்துக்கொள்ளலாம். சுருக்கமாக அந்திகிறிஸ்துவாகிய ரோம சாம்ராஜ்ஜியத்தின் பாவங்களுக்கு அடிபணியாதவர்கள்.
‘‘நாம் நமது தேவனுடைய ஊழியக்காரரின் நெற்றிகளில் முத்திரைபோட்டுத் தீருமளவும் பூமியையும் சமுத்திரத்தையும் மரங்களையும் சேதப்படுத்தாதிருங்கள் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டான். முத்திரைபோடப்பட்டவர்களின் தொகையைச் சொல்லக்கேட்டேன்; இஸ்ரவேல் புத்திரருடைய சகல கோத்திரங்களிலும் முத்திரைபோடப்பட்டவர்கள் இலட்சத்துநாற்பத்து நாலாயிரம்பேர்.’’ (வெளி 7:3,4)
இந்த முத்திரையின் நோக்கமே மீட்கப்படுவது தான். அதுவும் பரிசுத்த ஆவியால் கொடுக்கப்படும் முத்திரை என்றே வேதம் சொல்லுகிறது.
‘‘அன்றியும், நீங்கள் மீட்கப்படும்நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்.’’ (எபேசியர் 4:30)
எந்த காலக்கட்டம்?
இவர்களைப் பற்றி விரிவான அறிமுகம் கொடுக்கப்படும் காலக்கட்டம் எப்போது என்று பார்த்தால் தான், மற்ற விசயங்கள் புரியும். ரோம சாம்ராஜ்ஜியம் காண்ஸ்டாண்டினின் கையில் சென்றபின்பு, எல்லா விக்கிரக்கோயில்களும் அடைக்கப்பட்ட காலமாகிய ஆறாம் முத்திரையின் காலத்திற்கு பின்பு தான் இவர்கள் முத்திரையிடப்படுகிறார்கள். ஏழாம் முத்திரையைத் தொடர்ந்து வந்த எக்காளங்களினால், ரோம சாம்ராஜ்ஜியத்தின் மீது விதிக்கப்பட்ட தீர்ப்பினால் ஏற்பட்ட அழிவுகளுக்குத் தப்புவிக்கப்படும்படியாகவே இவர்கள் முத்திரையிடப்படுகின்றனர். இந்த அழிவுகள் தான் பூமியின் நான்கு காற்றுகள் என்று கூறப்பட்டுள்ளது.
‘‘இவைகளுக்குப்பின்பு (ஆறாம் முத்திரையின் காலத்திற்கு), பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நின்று, பூமியின்மேலாவது, சமுத்திரத்தின் மேலாவது, ஒரு மரத்தின்மேலாவது, காற்று அடியாதபடிக்கு, பூமியின் நான்கு காற்றுகளையும் பிடித்திருக்கக்கண்டேன்.’’ (வெளி 7:1)
நான்கு காற்றுகள் என்பது மீண்டும் யுத்தங்களினால் ஏற்படும் அழிவையே குறிக்கும். கர்த்தர் ‘ஏலாமின்’ மீதான அழிவைக்குறித்து எரேமியாவுக்கு இப்படி சொல்கிறார்.
‘‘சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் ஏலாமின் வில்லென்னும் அவர்களுடைய பிரதான வல்லமையை முறித்துப்போட்டு, வானத்தின் நாலு திசைகளிலுமிருந்து நாலு காற்றுகளை ஏலாமின் மேல் வரப்பண்ணி, அவர்களை இந்த எல்லாத் திசைகளிலும் சிதறடிப்பேன்; ஏலாம் தேசத்திலிருந்து துரத்துண்டவர்கள் சகல ஜாதிகளிலும் சிதறப்படுவார்கள்.’’ (எரேமியா 49:35,36)
இந்த நாலு யுத்தங்களும், அடுத்து வரவிருக்கும் முதல் நான்கு எக்காளங்களின் காலத்தில் ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியம் அடையும் நான்கு விதமான அழிவுகளைக் குறிக்கும் (மரம், சமுத்திரம், ஆறுகள், சூரிய சந்திரன்). தேவனால் விதிக்கப்பட்ட அழிவுகள், அந்திகிறிஸ்துவின் கொள்கைகளைப் பின்பற்றுகிறவர்கள் மேல் மட்டும் நடக்கவேண்டும் என்று தேவன் விரும்பியதால், அவருடைய உண்மை ஊழியக்காரர்கள் முத்திரையிடப்பட்டு தப்புவிக்கப்பட்டார்கள். எனவே தான் இவர்கள் முத்திரை போட்டுத்தீருமளவும் சேதப்படுத்தாதிருங்கள் என்று ஒரு தூதன் அந்த நான்கு தூதர்களிடம் மகா சத்தமாய் சொல்கிறான்.
மிகுந்த உபத்திரவம் அடைந்தவர்கள்
இவர்கள் ரோம சாம்ராஜ்ஜியத்தின் மீது விதிக்கப்பட்ட அழிவுகளுக்கு மட்டும் தான் தப்புவிக்கப்பட்டார்களே ஒழிய, கிறிஸ்துவைப் பற்றிய சாட்சியினிமித்தமும், வசனத்தினிமித்தமும் ரோம ராஜ்ஜியத்தால் வரும் உபத்திரவங்களுக்குப் பயப்படாமல், அதை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டவர்கள் என்று யோவான் சொல்கிறார். இந்த இரத்தசாட்சிகளைப் பற்றி இரண்டு காலக்கட்டங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. முதலில், ஐந்தாம் முத்திரையின் காலத்தில் ரோமப்பேரரசன் டயோக்கிளிட்டீசியனால் கிறிஸ்தவர்கள் ‘மகா உபத்திரவம்’ அடைந்த காலமான கி.பி 284 முதல் கி.பி 313 வரையிலான காலத்தில் கொல்லப்பட்ட பரிசுத்தவான்கள் இந்த 1,44,000 ல் ஒரு பகுதியினர் ஆவார்கள்.
‘‘அவர் ஐந்தாம் முத்திரையை உடைத்தபோது, தேவவசனத்தினிமித்தமும் தாங்கள் கொடுத்த சாட்சியினிமித்தமும் கொல்லப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களைப் பலிபீடத்தின்கீழே கண்டேன். அவர்கள்: பரிசுத்தமும் சத்தியமுமுள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக்குறித்து எதுவரைக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள். அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டது; அன்றியும், அவர்கள் தங்களைப்போலக் கொலைசெய்யப்படப் போகிறவர்களாகிய தங்கள் உடன்பணிவிடைக்காரரையும் தங்கள் சகோதரருமானவர்களின் தொகை நிறைவாகுமளவும் இன்னுங்கொஞ்சக்காலம் இளைப்பாறவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது.’’ (வெளி 6:9-11)
இவர்கள் இயேசுவிடம் தங்கள் இரத்தம் சிந்தப்பட்டதற்காக ரோம சாம்ராஜ்ஜியத்தைப் பழிவாங்க விண்ணப்பித்தபோது, மூன்று காரியங்கள் நடக்கிறது.
- அவர்களுக்கு வெள்ளை அங்கி கொடுக்கப்பட்டது. அதாவது இந்த 1,44,000 கூட்டத்தில் சேர்க்கப்பட்டார்கள்.
- இவர்கள் ரோம ராஜ்ஜியத்தில் மகா உபத்திரவப்பட்டது போல இன்னும் பலர் ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியத்தின் காலத்தில் (கி.பி 538-1798) கொலைசெய்யப்படுவார்கள் என்ற காரியம் சொல்லப்படுகிறது.
- இன்னும் கொல்லப்படப்போகிற ஆத்துமாக்கள் இந்த பட்டியலில் சேர்ந்து இந்த ஆவிக்குரிய 1,44,000 தொகை நிறைவேறுமளவும், இவர்கள் கொஞ்சகாலம் (1260 வருடங்கள்) காத்திருக்கவேண்டும் என்று சொல்லப்பட்டது.
இரண்டாவது பகுதியினர் பற்றி யோவான் சொல்லும்போது, இதே போல் மகா உபத்திரவத்தை அனுபவித்தவர்கள் என்றே சொல்கிறார்.
‘‘அப்பொழுது, மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற இவர்கள் யார்? எங்கேயிருந்து வந்தார்கள்? என்று கேட்டான். அதற்கு நான்: ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். அப்பொழுது அவன்: இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்.’’ (வெளி 7:13,14)
இந்தக்கூட்டமும் வெள்ளை அங்கி தரித்திருந்தது; தேவ வசனத்தினிமித்தம் இரத்தம் சிந்தியிருந்தது. ஏற்கனவே ஒருங்கிணைந்த ரோம ராஜ்ஜியத்தின் காலத்தில் இரத்த சாட்சிகளாய் மரித்தவர்கள் இந்த 1,44,000 பரிசுத்தவான்கள் கூட்டத்தில் இருந்தார்கள். இவர்களது தொகை, ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியத்தின் காலத்தில் இரத்தசாட்சிகளாய் மரிப்பவர்களும் சேரும்போது தான் நிறைவுபெறும் என்று அறியமுடிகிறது.
வெள்ளை அங்கி தரித்தவர்கள்
வெள்ளை அங்கி தரித்த பரிசுத்தவான்களின் கூட்டத்தைப் பற்றி வெளிப்படுத்தலில் மூன்று இடங்களில் கூறப்பட்டுள்ளது.
- பலிபீடத்தின் கீழேயிருந்து தங்கள் இரத்தத்திற்காக எப்போது பழிவாங்குவீர் என்று இயேசுவிடம் கேட்ட கூட்டத்திற்கு வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டது. (வெளி 6:11)
- ஒருவனும் எண்ணக்கூடாததும், பல ஜாதிகள், பாஷைகளைச் சேர்ந்த கூட்டம் வெள்ளை அங்கிகளைத் தரித்தது மட்டுமல்லாமல், குருத்தோலைகளைப் பிடித்தும் சிங்காசனம் முன்பாக நின்றார்கள். இந்த வெள்ளை அங்கிகள் சாதாரண சவுக்காரம், தண்ணீரால் அல்ல, ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தில் தோய்த்து வெளுக்கப்பட்டவைகளாகும். (வெளி 7:9,14)
- கடைசி யுத்தத்தின் நாட்களில் வெள்ளைக்குதிரையில் வரும் இயேசுவின் பின்னால் பரலோகத்திலுள்ள சேனைகள் வெண்மையும் சுத்தமுமான மெல்லிய வஸ்திரந்தரித்தவர்களாய், வெள்ளைக் குதிரைகளின் மேல் ஏறி, அவருக்குப் பின்சென்றார்கள். இது அங்கி என்று சொல்லப்படாவிட்டாலும் வெள்ளை வஸ்திரம் என்று சொல்லப்பட்டுள்ளது.
இவர்கள் எல்லோரும் ‘ஜெயம்கொண்டவர்கள்’ என்ற பட்டியலில் வருகிறார்கள். அந்திகிறிஸ்துவின் ராஜ்ஜியத்தில் உபத்திரவங்களை அடைந்து, இரத்த சாட்சியாய் மரிக்கும் வேளை வரை, இயேசுவின் சத்திய வசனத்தை கடைபிடித்தவர்கள் தான் ஜெயம்கொண்டவர்கள் என்றும், அவர்களுக்கே வெண்வஸ்திரம் கொடுக்கப்படும் என்றும் சர்தை சபைக்கு இயேசு சொல்லியிருக்கிறார்.
‘‘ஆனாலும் தங்கள் வஸ்திரங்களை அசுசிப்படுத்தாத சிலபேர் சர்தையிலும் உனக்குண்டு; அவர்கள் பாத்திரவான்களானபடியால் வெண்வஸ்திரந்தரித்து என்னோடேகூடநடப்பார்கள். ஜெயங்கொள்ளுகிற வனெவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும்; ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடாமல், என் பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன்..’’ (வெளி 3:4,5)
இவர்கள் எல்லோரும் பரிசுத்தவான்கள் அல்லது பரிசுத்த சேனைகள் என்று சொல்லப்பட்டுள்ளது. எனவே இம்மூன்று இடங்களில் வரும் பரிசுத்தவான்களும் இந்த 1,44,000 என்ற சிம்பாலிக் எண்ணுள்ள கூட்டத்தில் இருக்கலாம்.
கறைபடாதவர்கள், கற்புள்ளவர்கள், முதற்பலனானவர்கள்
இந்த 1,44,000 பரிசுத்தவான்களுக்குப் பல சான்றிதழுடன் கூடிய பட்டங்கள் கொடுக்கப்பட்டது.
‘‘பின்பு நான் பார்த்தபோது, இதோ, சீயோன் மலையின்மேல் ஆட்டுக்குட்டியானவரையும், அவரோடேகூட அவருடைய பிதாவின் நாமம் தங்கள் நெற்றிகளில் எழுதப்பட்டிருந்த இலட்சத்து நாற்பத்து நாலாரயிரம் பேரையும் நிற்கக்கண்டேன். அவர்கள் சிங்காசனத்திற்கு முன்பாகவும், நான்கு ஜீவன்களுக்கு முன்பாகவும், மூப்பர்களுக்கு முன்பாகவும் புதுப்பாட்டைப் பாடினார்கள்; அந்தப் பாட்டு பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்ட இலட்சத்து நாற்பத்துநாலாயிரம் பேரேயல்லாமல் ஒருவரும் கற்றுக்கொள்ளக்கூடாதிருந்தது. ஸ்திரீகளால் தங்களைக் கறைப்படுத்தாதவர்கள் இவர்களே; கற்புள்ளவர்கள் இவர்களே; ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகிறவர்கள் இவர்களே; இவர்கள் மனுஷரிலிருந்து தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலனாக மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள். இவர்களுடைய வாயிலே கபடம் காணப்படவில்லை; இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்குமுன்பாக மாசில்லாதவர்களாயிருக்கிறார்கள்.’’ (வெளி 14:1-5)
இப்படி பல நற்குணங்களை சொல்லியிருந்தாலும் அவை எல்லாம் ‘கறைபடுத்திக்கொள்ளாதவர்கள்’ என்ற ஓரே சொல்லில் அடங்கிவிடும். அதுவும் குறிப்பாக ஸ்திரீகளால் தங்களைக் கறைபடுத்தாதவர்கள் என்று சொல்லப்பட்டிருப்பதால், திருமணம் செய்துகொள்ளாமல் கர்த்தருக்கு ஊழியம் செய்பவர்கள் தான் இந்த பரிசுத்தவான்கள் என்று பலர் போதிப்பது உண்டு. ஆனால் இங்கு ஸ்திரீகள் என்பது மீண்டும் சங்கேத மொழியே ஒழிய நேரடி அர்த்தம் கொண்டதல்ல.
முதற்பலனானவர் கிறிஸ்துவே
‘‘கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்து, நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார்.’’ (1 கொரிந்தியர் 15:20)
‘‘அவனவன் தன்தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.’’ (1 கொரிந்தியர் 15:23)
கிறிஸ்து எப்படி மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பலனானவரோ, அதைப்போலவே அந்திகிறிஸ்துவின் விக்கிரக வணக்கத்தினால் தங்களைக் கறைபடுத்தாமல், இயேசுவுக்காக மரித்து அவருடைய சிங்காசனத்திற்கு முன்பாக நிற்கும் பரிசுத்தவான்கள் எல்லோருமே முதற்பலனானவர்கள். இவர்கள் இயேசு எங்குசென்றாலும் அவரைப் பின்பற்றியவர்களாவார்கள். இயேசு சிலுவையை சுமந்ததுபோல அவர்களும் சிலுவையை சுமந்தவர்கள். மேலும் தேவனுடைய சத்தியத்தைப் பொய்யாக மாற்றி, கர்த்தரை சேவிக்காமல் கைகளால் உருவாக்கப்பட்ட சிலைகளையும், வான சேனைகளையும், மனிதர்களையும் தொழுதுகொள்கிறவர்கள் தான் பொய்யர்கள் என்று பவுல் சொல்வதன் மூலம் இது நமக்கு உறுதியாகிறது.
‘‘அவர்கள் தேவனை அறிந்தும், அவரைத் தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள், உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது. அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனுஷர்கள் பறவைகள் மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள். தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென்.’’ (ரோமர்1:21-25)
நிறைவின் தொகை
இந்த பரிசுத்தவான்கள், பலிபீடத்தின் கீழ் இருந்த கொலையுண்டவர்கள் மற்றும் 1260 வருட ஆட்சியில் கொலை செய்யப்பட்டவர்களின் மொத்தத் தொகையாகும். இதில் பலிபீடத்தின் கீழிருந்த இரத்தசாட்சிகளின் ஆத்துமாக்களின் எண்ணிக்கையே பல ஆயிரங்கள் பெறும். இவர்களோடு ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியத்தில் கொலைசெய்யப்பட்டவர்களின் தொகையும் பல இலட்சங்களைத் தாண்டும். இதில் நாம் கவனிக்கவேண்டிய ஒரு வார்த்தை என்னவென்றால், யோவான் இந்த 1,44,000 பரிசுத்தவான்களின் தொகையை ‘சொல்லக்கேட்டார்’ என்றே வசனம் சொல்கிறது.
‘‘முத்திரைபோடப்பட்டவர்களின் தொகையைச் (தூதன்) சொல்லக்கேட்டேன்; இஸ்ரவேல் புத்திரருடைய சகல கோத்திரங்களிலும் முத்திரைபோடப்பட்டவர்கள் இலட்சத்துநாற்பத்து நாலாயிரம்பேர்.’’ (வெளி 7:4)
ஆனால் இதே அதிகாரத்தில், அவர் தன் கண்களால் தரிசனத்தில் கண்டது ‘ஒருவனும் எண்ணக்கூடாத தொகை’ என்று அவரே சொல்கிறார். இந்தக்கூட்டத்தையும் ‘மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்’ என்றும் ‘ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தின் தங்கள் அங்கிகளைத் தோய்த்தவர்கள்’ என்றும் யோவான் காண்கிறார்.
‘‘இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைகளிலிருமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன்.’’ (வெளி 7:9)
பரிசுத்தவான்களின் மொத்த தொகை = பலிபீடத்தின் கீழிருந்த ஆத்துமாக்கள் (ஒருங்கிணைந்த ரோம்) + இவர்களைப் போல கொலை செய்யப்படப்போகிற உடன்பணிவிடையாளர்களின் தொகை (ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியம்). இன்னொரு விதத்தில் சொல்லப்போனால், தூதன் சொல்லக்கேட்ட தொகை + ஒருவனும் எண்ணக்கூடாத அளவான யோவான் கண்ட தொகை. அப்படியானால் இந்த வசனங்களின் அடிப்படையில் இந்த பரிசுத்தவான்களின் தொகை 1,44,000 என்பது ஒரு ‘நிறைவின் தொகையே’ அன்றி, குறிப்பிட்ட இலக்க அளவில் தான் இந்த பரிசுத்தவான்கள் பரலோகத்தில் இருக்கிறார்கள் என்று அர்த்தமில்லை. பரிசுத்த வேதம் பல இடங்களில் 7 மற்றும் 12 ஐ நிறைவின் தொகையாகவே கூறுகிறது. (12×ஒ 12=144/ 12,000×ஒ 12=1,44,000)
‘‘அன்றியும், அவர்கள் தங்களைப்போலக் கொலை செய்யப்படப்போகிறவர்களாகிய தங்கள் உடன்பணிவிடைக்காரரையும் தங்கள் சகோதரருமானவர்களின் தொகை நிறைவாகுமளவும் இன்னுங்கொஞ்சக்காலம் இளைப்பாறவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது.’’ (வெளி 6:11)
பன்னிரெண்டு என்பது நிறைவின் தொகை என்பதற்கு வேதத்தில் பல ஆதாரங்கள் உள்ளன. இங்கு வெளிப்படுத்தலில் கொடுக்கப்பட்டுள்ள சில ஆதாரங்களை மட்டும் கொடுக்கிறேன்.
- சிரசின் மேல் 12 நட்சத்திரங்களுள்ள ஸ்திரீ (சபை)- வெளி 12:1
- 12 வாசல்களுள்ள தேவனுடைய மகிமை அடைந்த பரிசுத்த நகரமாகிய பரலோக எருசலேம் – வெளி 21:12
- அதன் வாசல்களில் 12 தூதர்கள் – வெளி 21:13
- அதன் வாசல்களில் 12 இஸ்ரவேல் கோத்திரங்களின் பெயர்கள் – வெளி 21:13
- அந்நகரத்திற்கு 12 அஸ்திபாரக் கற்கள் – வெளி 21:14
- அந்த கற்கள் மீது 12 அப்போஸ்தலருடைய பெயர்கள் – வெளி 21:14
- அந்நகரத்தின் அளவு 12,000 ஸ்தாதி – வெளி 21:16
- அதின் மதில் மனுஷ அளவின்படி 144 முழம் (12×12) – வெளி 21:17
- நகரத்தின் வீதியிலும் மத்தியிலும் 12 விதமான கனிகளைத்தரும் ஜீவ விருட்சம் – வெளி 22:2
இஸ்ரவேல் கோத்திரங்கள் மட்டுமா?
‘இஸ்ரவேல் புத்திரருடைய சகல கோத்திரங்களிலும் முத்திரை போடப்பட்டவர்கள் இலட்சத்துநாற்பத்து நாலாயிரம்பேர்’ என்று சொல்லப்பட்டு, ஒவ்வொரு கோத்திரத்திலும் 12,000 பேர் என்று சொல்லப்பட்டாலும், யாக்கோபு என்னும் இஸ்ரவேலின் பன்னிரெண்டு கோத்திரங்களும் இதில் வருகிறதா என்று பார்த்தால் இல்லை என்று தான் வெளி 7:5-8 வசனங்கள் சொல்கின்றது. இதில் தாண் மற்றும் யோசேப்பின் இரண்டு கோத்திரங்களில் ஒன்றான எப்பிராயீம் ஆகிய இரண்டு ‘ஒரிஜினல்’ கோத்திரங்கள் விடுபட்டுள்ளது. அதற்குப் பதிலாக யோசேப்பின் முழுகோத்திரமும், மனாசேயும் சேர்க்கப்பட்டுள்ளது. இது தற்செயலாக விடுபட்டது அல்ல; நமக்கு இன்னொரு சத்தியத்தையும், இந்த இலக்கத்தின் அர்த்தத்தையும் கற்றுக்கொடுக்கவே இயேசு இதை சொல்லியுள்ளார்.
இந்த தாண் மற்றும் எப்பிராயீம் கோத்திரங்கள், பரிசுத்தவான்களின் பட்டியலில் விடுபட்டதற்கான காரணமும் விக்கிரக ஆராதனை தான் என்பது நாம் அறிந்துகொள்ளவேண்டிய செய்தி. ஆம், நியாயாதிபதிகள் இல்லாத காலத்தில் இந்த இரண்டு கோத்திரத்தாரும் செய்த பாவங்களைக் குறித்து நியாயாதிபதிகள் 17&18 அதிகாரங்கள் தெளிவாக சொல்கிறதை வாசித்துப்பாருங்கள். அதன் இரத்தின சுருக்க வசனத்தை மட்டும் கீழே கொடுத்திருக்கிறேன்.
‘‘தேவனுடைய ஆலயம் சீலோவிலிருந்த காலமுழுவதும் அவர்கள் (தாண் கோத்திரத்தார்) மீகா (எப்பிராயீம் மலைத்தேசத்தான்) உண்டுபண்ணின சுரூபத்தை வைத்துக்கொண்டிருந்தார்கள்.’’ (நியாயாதிபதிகள் 18:31)
‘‘அவர்களோ மீகா உண்டுபண்ணினவைகளையும், அவனுடைய ஆசாரியனையும் கொண்டுபோய், பயமில்லாமல் சுகமாயிருக்கிற லாயீஸ் ஊர் ஜனங்களிடத்தில் சேர்த்து, அவர்களைப் பட்டயக் கருக்கினால் வெட்டி, பட்டணத்தை அக்கினியால் சுட்டெரித்துப்போட்டார்கள். பூர்வத்திலே லாயீஸ் என்னும் பேர்கொண்டிருந்த அந்தப் பட்டணத்திற்கு இஸ்ரவேலுக்குப் பிறந்த தங்கள் தகப்பனாகிய தாணுடைய நாமத்தின்படியே தாண் என்று பேரிட்டார்கள்.’’ (நியாயாதிபதிகள் 18:27&29))
அன்று அவர்கள் செய்த விக்கிரக ஆராதனை பாவம், சாலமோனின் நாட்களுக்குப் பின் பிரிவடைந்த இஸ்ரவேலின் ராஜாவான யெரோபெயாமின் நாட்களிலும் பிரதிபலித்து, இஸ்ரவேல் ராஜ்ஜியம் (10 கோத்திரங்கள்) அசீரியாவுக்கு சிறையிருப்புக்குப் போக காரணமாக அமையுமளவுக்கு கர்த்தரால் வெறுக்கத்தக்க ஒன்றாக ‘யெரோபெயாமின் பாவங்கள்’ இருந்தது.
‘‘ஆகையால் ராஜாவானவன் யோசனைபண்ணி, பொன்னினால் இரண்டு கன்றுக்குட்டிகளை உண்டாக்கி, ஜனங்களைப் பார்த்து: நீங்கள் எருசலேமுக்குப் போகிறது உங்களுக்கு வருத்தம்; இஸ்ரவேலரே, இதோ, இவைகள் உங்களை எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணின உங்கள் தேவர்கள் என்று சொல்லி, ஒன்றைப் பெத்தேலிலும், ஒன்றைத் தாணிலும் ஸ்தாபித்தான். இந்தக் காரியம் பாவமாயிற்று; ஜனங்கள் இந்த ஒரு கன்றுக்குட்டிக்காகத் தாண்மட்டும் போவார்கள்.’’ (1 இராஜாக்கள் 12:28-30)
இந்த தாண் என்ற இடம் லாயீசிலிருந்து எப்படி வந்தது என்று பார்த்தோம். இதே போல் பெத்தேல் என்ற இடம் எப்பிராயீமில் தான் இருந்தது.
‘‘அவள் (தெபோராள்) எப்பிராயீம் மலைத்தேசமான ராமாவுக்கும் பெத்தேலுக்கும் நடுவிலிருக்கிற தெபொராளின் பேரீச்சமரத்தின்கீழே குடியிருந்தாள்; அங்கே இஸ்ரவேல் புத்திரர் அவளிடத்திற்கு நியாயவிசாரணைக்குப் போவார்கள்.’’ (நியாயாதிபதிகள் 4:5)
இப்படி விக்கிரக ஆராதனையினால் கர்த்தரின் கோபத்திற்கும் சாபத்திற்கும் உள்ளான இரண்டு கோத்திரங்களாகிய தாண் மற்றும் எப்பிராயீம் (பெத்தேல்), இந்தப் பரிசுத்தவான்களின் பட்டியலில் இடம்பெறவில்லை. இது ஆவிக்குரிய அர்த்தமுடையது. ஏனெனில் இதில் குறிப்பிட்டப்பட்டுள்ள கோத்திரங்கள் ‘ஒரிஜினல் இஸ்ரவேலரை’ மட்டும் குறிப்பவை அல்ல. இது ரோமப்பேரரசின் முத்திரையான விக்கிரகவணக்கத்தைப் பின்பற்றாத புதிய ஏற்பாட்டு ஆவிக்குரிய இஸ்ரவேலர்களாகிய கிறிஸ்தவ இரத்தசாட்சிகளையே குறிக்கும். யூதர்களிலும் இயேசுவை ஏற்றுக்கொண்டவர்கள் மட்டுமே இரத்த சாட்சியாய் மரித்தார்கள் என்பதும், மற்ற யூதர்கள் இன்னும் இயேசுவை மேசியாவாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதும் நமக்கு நன்றாகத் தெரிந்த ஒன்று. மேலும் வெளிப்படுத்தலின் தீர்க்கதரிசனங்கள் புதிய ஏற்பாட்டு சபையை மட்டுமே மையப்படுத்துவதாகும்.
‘‘ஆதலால் புறம்பாக யூதனானவன் யூதனல்ல, புறம்பாக மாம்சத்தில் செய்யப்படும் விருத்தசேதனமும் விருத்தசேதனமல்ல. உள்ளத்திலே யூதனானவனே யூதன்; எழுத்தின்படி உண்டாகாமல், ஆவியின்படி இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம்; இப்படிப்பட்டவனுக்குரிய புகழ்ச்சி மனுஷராலே அல்ல, தேவனாலே உண்டாயிருக்கிறது.’’ (ரோமர் 2:28,29)
‘‘தேவவசனம் அவமாய்ப் போயிற்றென்று சொல்லக்கூடாது; ஏனென்றால், இஸ்ரவேல் வம்சத்தார் எல்லாரும் இஸ்ரவேலரல்லவே. அவர்கள் ஆபிரகாமின் சந்ததியாரானாலும் எல்லாரும் பிள்ளைகளல்லவே; ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்குமென்று சொல்லியிருக்கிறதே. அதெப்படியென்றால், மாம்சத்தின்படி பிள்ளைகளானவர்கள் தேவனுடைய பிள்ளைகளல்ல, வாக்குத்தத்தத்தின்படி பிள்ளைகளானவர்களே அந்தச் சந்ததி என்றெண்ணப்படுகிறார்கள்.’’ (ரோமர் 9:6-8)
புதிய ஏற்பாடு மாம்சத்தின்படி யூதர்களாக இருப்பவர்களைப் பற்றி பேசவில்லை. ஆவிக்குரிய யூதர்களாக இருக்கும் கிறிஸ்துவின் உண்மை சீடர்களைப் பற்றியே பேசுகிறது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். இப்போது ‘கறைபடாதவர்கள்’ என்றால் யார் என்று உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று விசுவாசிக்கிறேன். அந்திகிறிஸ்துவின் சபையின் சட்டதிட்டங்களுக்கும், போதனைகளுக்கும், ஆராதனை முறைமைகளுக்கும் உட்படாமல், அதை எதிர்த்து நின்ற ஒரே காரணத்திற்காக கொல்லப்பட்ட ஆதிசபை மற்றும் மத்தியகாலசபை இரத்தசாட்சிகளே இவர்கள். இயேசு கிறிஸ்து, பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணத்தை தனது மரணத்தின் மூலமாக நிறைவேற்றி பழைய பாரம்பரியங்களை ஒழிக்க வந்தார் என்று நீங்கள் விசுவாசித்தீர்களானால் கீழ்காணும் இந்த மாற்றங்களையும் நீங்கள் விசுவாசித்து தான் ஆகவேண்டும்.
அட்டவணை 30: பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு முறைமைகள்-ஒப்பீடு

திருப்பம் தரும் 1,44,000
வெளிப்படுத்தல் 7 ஆம் அதிகாரத்திலும் 14 ஆம் அதிகாரத்திலும் இந்த 1,44,000 பரிசுத்தவான்களைப்பற்றி சொல்லப்பட்டிருந்தாலும், 14 ஆம் அதிகாரத்தின் ஆரம்பத்தில் இவர்களைப் பற்றி சொல்லப்பட்ட வசனங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனென்றால், இவர்கள் சீயோன் மலையின் மேல் ஆட்டுக்குட்டியானவரோடு நிற்பதாக யோவான் தரிசனத்தில் பார்க்கிறார். இதற்குப் பின்பு வரும் வேறு புதிய ஐந்து காலக்கட்டங்கள் மற்றும் தூதர்களைப் பற்றிய சம்பவங்கள், சில கடைசிகால, முடிவுகால சம்பவங்களின் காலக்கட்டத்தை நமக்கு இன்னும் தெளிவாகக் கற்றுத்தருகின்றது.
காலக்கட்டம் 1: மிகுந்த உபத்திரவம் முடிவடைந்த காலம் (14 ஆம் நூற்றாண்டு)
ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியம் உச்சத்திலிருந்து சாட்சிகளைக் கொன்று குவித்த காலக்கட்டம் 14 ஆம் நூற்றாண்டோடு முடிவுக்கு வந்தது. சந்தேகமிருந்தால் வரலாற்றை ஆய்வுசெய்து பாருங்கள். அதற்குப்பின்புதான் இந்த ஆவிக்குரிய 1,44,000 கூட்டத்தின் தொகை நிறைவுபெற்றிருக்கலாம். வெளி 7 ஆம் அதிகாரத்தில் யோவானுக்கு இந்த ‘நிறைவின் தொகை’ சொல்லக்கேட்டார் என்று எழுதப்பட்டுள்ளது. ஆனால் 14 ஆம் அதிகாரத்தில் யோவான் இந்த தொகை நிறைவேறிய, ஜெயம்கொண்ட பரிசுத்தவான்களின் கூட்டம் இயேசுவோடு நிற்பதைப் பார்க்கிறார். எனவே இந்தக் காலக்கட்டம் ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியம் உண்மை விசுவாசிகளைக் கொல்லும் அதிகாரத்தை இழக்க ஆரம்பித்த 14 ஆம் நூற்றாண்டின் இறுதியைக் குறிப்பதாகும்
‘‘பின்பு நான் பார்த்தபோது, இதோ, சீயோன் மலையின்மேல் ஆட்டுக்குட்டியானவரையும், அவரோடேகூட அவருடைய பிதாவின் நாமம் தங்கள் நெற்றிகளில் எழுதப்பட்டிருந்த இலட்சத்து நாற்பத்து நாலாரயிரம்பேரையும் நிற்கக்கண்டேன்.’’ (வெளி 14:1)
மேலும் 7 ஆம் அதிகாரத்தில் அழிவுகளுக்கு பாதுகாக்கும்படி ‘முத்திரையிடப்பட்ட’ இவர்கள், 14 ஆம் அதிகாரத்தில் பூமியிலிருந்து ‘மீட்டுக்கொள்ளப்பட்டவர்களாக’ காணப்பட்டார்கள் என்று யோவான் சொல்கிறார். எனவே இந்த நிறைவின் தொகை முடிவுபெற்ற காலக்கட்டம் இது என்பது உறுதி. உபத்திரவத்திலிருந்து தான் ஒருவரை ‘மீட்டுக்கொள்ளமுடியும்’ அல்லவா?
‘‘அந்தப் பாட்டு பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்ட இலட்சத்து நாற்பத்துநாலாயிரம்பேரேயல்லாமல் ஒருவரும் கற்றுக்கொள்ளக்கூடாதிருந்தது.’’ (வெளி 14:3)
காலக்கட்டம் 2: நித்திய சுவிசேஷத்தையுடைய தூதன் (15-18 ஆம் நூற்றாண்டுகள்)
(குறிப்பு: இந்த தூதர்கள் தனியாக வேறு செய்தியை அறிவிக்க வந்த தூதர்கள். இவர்களையும் எக்காளம் மற்றும் வாதைகளை ஊற்ற வந்த தூதர்களோடு தவறாக புரிந்துகொள்ளவேண்டாம்.)
மேலே சொன்ன காலம் முடிவடைய ஆரம்பித்த நாட்களில், கர்த்தர் மார்டின் லூதரை எழுப்பியதால், கத்தோலிக்க திருச்சபை சட்டங்கள் புறந்தள்ளப்பட்டு பரிசுத்த வேதத்தில் சொல்லப்பட்ட காரியங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது. இது ஓரிரு நாட்களில் நடந்த மாற்றம் அல்ல. ஏற்கனவே சிறுபுத்தகம் பற்றிய அத்தியாயத்தில் கூறியதுபோல 14 ஆம் நூற்றாண்டிலிருந்தே எழும்பிய பல ‘ஜான்’ களின் முயற்சியாலும், லூதரின் (கி.பி 1483-1546) புரட்சியாலும் பரிசுத்த வேதம் எல்லோர் கைகளிலும் கிடைக்க ஆரம்பித்த காலம் தான் ‘திருச்சபை மறுமலர்ச்சியின் காலம்’ என்றழைக்கப்படுகிறது. இந்த மறுமலர்ச்சியின் விளைவாகத்தான் சுவிசேஷம் உலகமெங்கும் பரவி ‘திருச்சபையின் இருண்டகாலம்’ (dark ages of Christianity) முடிவுக்கு வந்தது.
இந்த காலக்கட்டம் தான் யோவானுக்கு நித்திய சுவிசேஷத்தை அறிவிக்கும் தூதனுடைய காலமாகவும், அதனால் சத்தியத்தை அறிந்துகொண்ட மக்களால் நிராகரிக்கப்பட்ட ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியத்திற்கு, இயேசு நியாயத்தீர்ப்பு (ஆறாம் எக்காளம்) கொடுக்கும் வேளை நெருங்கிய காலமாகவும் வெளிப்படுத்தப்பட்டது.
‘‘(1,44,000 பரிசுத்தவான்களைப் பார்த்த) பின்பு, வேறொரு தூதன் வானத்தின் மத்தியிலே பறக்கக்கண்டேன்; அவன் பூமியில் வாசம்பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்கதாக நித்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்து, மிகுந்த சத்தமிட்டு: தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் வேளை வந்தது;வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் நீரூற்றுகளையும் உண்டாக்கினவரையே தொழுதுகொள்ளுங்களென்று கூறினான்.’’ (வெளி 14:6,7)
ஆறாம் எக்காளம் ஊதப்பட்டு ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியத்தின் வீழ்ச்சி ஆரம்பித்த இதே காலத்தில் தான் தூதனுடைய கைகளில் சிறு புஸ்தகம் இருந்ததை யோவான் பார்க்கிறார். இந்த சிறு புஸ்தகத்தை வைத்திருந்த தூதனும் இதே போல் சில எச்சரிப்புகளை சொல்கிறார்.
‘‘இனி காலம் செல்லாது; ஆனாலும் தேவன் தம்முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளுக்குச் சுவிசேஷமாய் அறிவித்தபடி, ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே அவன் எக்காளம் ஊதப்போகிறபோது தேவரகசியம் நிறைவேறும் என்று, வானத்தையும் அதிலுள்ளவைகளையும், பூமியையும் அதிலுள்ளவைகளையும், சமுத்திரத்தையும் அதிலுள்ளவைகளையும் சிருஷ்டித்தவரும், சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவருமானவர்மேல் ஆணையிட்டுச் சொன்னான்.’’ (வெளி 10:6,7)
எனவே இந்த இரண்டு சம்பவங்களும் ஒரே காலத்தில் நடக்கிறவைகளைக் குறிக்கிறது. அதாவது சத்திய வசனத்தை அறியாமல் இருளில் இருந்த அநேகர் சுவிசேஷத்தின் வெளிச்சத்தில் இயேசுவை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்ததையும், அதன் இறுதியில் ஏழாம் எக்காளம் ஊதப்பட்டபோது கொடுக்கப்பட்ட ஏழு வாதைகள் நிறைந்த கலசத்தால் அந்திகிறிஸ்துவின் ராஜ்ஜியம் முற்றிலும் அழிக்கப்படும் ‘தேவ இரகசியம்’ பற்றியும் இவைகள் கூறுகின்றன. இந்த எச்சரிப்பைக் கேட்டும் மனம்திரும்பாதவர்கள் மீதான அழிவு, ஆறாம் எக்காளத்தின் காலத்தில் ஐரோப்பாவில் ஏற்பட்டதைப் பார்த்தோம். அப்படி அழிவுகளை சந்தித்த பிறகும் அவர்கள் தேவாதி தேவனுக்கு மகிமையை செலுத்தாமல் செய்த காரியங்களை நீங்கள் வாசித்திருப்பீர்கள்.
காலக்கட்டம் 3: மகா பாபிலோன் விழுந்ததை அறிவித்த தூதன் (19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் முதல்…)
அடுத்த தூதன் ஒரு குறிப்பிட்ட காரியத்தை மட்டும் அறிவிக்கிறான். அது ரோம சாம்ராஜ்ஜியம் வீழ்ச்சியடைந்து அழிந்த காலக்கட்டமான ‘மகா பாபிலோனின்’ வீழ்ச்சி பற்றிய அறிவிப்பாகும். இதை நாம் ஏற்கனவே தனி அத்தியாயமாக பார்த்துவிட்டோம். இந்த வீழ்ச்சி என்பது ஒரு சில நாட்களில் அல்ல; பல வருடங்களாக நடந்துகொண்டிருக்கும் ஒன்றாகும். ரோமன் கத்தோலிக்க சாம்ராஜ்ஜியம் கி.பி 1798 ல் நெப்போலியனால் வீழ்த்தப்பட்டது முதல் (கலசங்கள்) இன்று இருக்கும் கடைசிகால ராஜ்ஜியமான ஐரோப்பிய யூனியன் அழிவை சந்திப்பது வரை நடக்கும் சம்பவங்களைப் பற்றிய அறிவிப்பாகும்.
‘‘வேறொரு தூதன் பின்சென்று: பாபிலோன் மகா நகரம் விழுந்தது! விழுந்தது! தன் வேசித்தனமாகிய உக்கிரமான மதுவைச் சகல ஜாதிகளுக்கும் குடிக்கக்கொடுத்தாளே! என்றான்.’’ (வெளி 14:8)
காலக்கட்டம் 4: முத்திரையைத் தரித்துக்கொள்பவர்களை எச்சரிக்கும் தூதன் (முடிவுகாலம்)
இவ்வளவு வாதைகளை சந்தித்த பிறகும், சுசேஷத்தை அறிந்த பிறகும் மனம்திரும்பாமல், மீண்டும் மிருகத்தின் முத்திரையை கைகளிலும் (செயல்கள்) நெற்றிகளிலும் (சிந்தனை) தரித்துக்கொள்பவர்கள் ஆக்கினைக்குத் தப்பமுடியாது என்று இந்த மூன்றாம் தூதன் உறுதிபட அறிவிக்கிறார்.
‘‘அவர்களுக்குப் பின்னே மூன்றாம் தூதன் வந்து, மிகுந்த சத்தமிட்டு: மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்கித் தன் நெற்றியிலாவது தன் கையிலாவது அதின் முத்திரையைத் தரித்துக் கொள்ளுகிறவனெவனோ, அவன் தேவனுடைய கோபாக்கினையாகிய பாத்திரத்திலே கலப்பில்லாமல் வார்க்கப்பட்ட அவருடைய உக்கிரமாகிய மதுவைக் குடித்து, பரிசுத்த தூதர்களுக்குமுன்பாகவும், ஆட்டுக்குட்டியானவருக்குமுன்பாகவும் அக்கினியினாலும் கந்தகத்தினாலும் வாதிக்கப்படுவான். அவர்களுடைய வாதையின் புகை சதாகாலங்களிலும் எழும்பும்; மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்குகிறவர்களுக்கும், அதினுடைய நாமத்தின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிற எவனுக்கும் இரவும் பகலும் இளைப்பாறுதலிராது.’’ (வெளி 14:9
முந்தைய தூதன் எச்சரித்தது மகா பாபிலோன் என்ற ராஜ்ஜியத்தின் அழிவை. இந்த தூதன் எச்சரிப்பது மகா பாபிலோனாகிய ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியத்தின் வழிபாடுகளை செயல் மற்றும் சிந்தைகளில் நிறைவேற்றுகிற மக்களுக்கானதாகும். சரி, இந்த ரோம ராஜ்ஜியங்களின் காலங்களில் உபத்திரவப்பட்டு, சத்தியத்திற்காக நின்றவர்கள் மட்டும் தான் பாக்கியவான்களா? கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக இயேசுவைப் பின்பற்றுகிறவர்களுக்கு ஒன்றும் கிடையாதா? என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். அதற்கும் இயேசு பதில் சொல்லியுள்ளார்.
‘‘பின்பு, பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்; அது கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இதுமுதல் பாக்கியவான்கள் என்றெழுது; அவர்கள் தங்கள் பிரயாசங்களை விட்டொழிந்து இளைப்பாறுவார்கள்; அவர்களுடைய கிரியைகள் அவர்களோடே கூடப்போம்; ஆவியானவரும் ஆம் என்று திருவுளம்பற்றுகிறார் என்று சொல்லிற்று’’ (வெளி 14:13)
காலக்கட்டம் 5: அறுவடை செய்யும் மனுஷகுமாரன் (இரண்டாம் வருகையின் நாள்)
இதுவரை வந்த தூதர்கள் சொன்ன காரியங்கள் எல்லாம் நம் காலத்திற்கு முன்னமே நடந்து நிறைவேறிவிட்டது. ஆனால் யோவான் பார்த்த நாலாம் தூதனுடைய சம்பவம் இனிதான் நடக்கவிருக்கிறது. ஆம், அது நம் தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், மனுஷகுமாரனுமான இயேசு, பூமியின் விளைவை அறுக்கும் ‘இரண்டாம் வருகையின்’ காலமாகும்.
‘‘பின்பு நான் பார்த்தபோது, இதோ, வெண்மையான மேகத்தையும், அந்த மேகத்தின்மேல் மனுஷகுமாரனுக்கொப்பானவராய்த் தமது சிரசின்மேல் பொற்கிரீடத்தையும் தமது கையிலே கருக்குள்ள அரிவாளையுமுடைய ஒருவர் உட்கார்ந்திருக்கிறதையும் கண்டேன். அப்பொழுது வேறொரு தூதன் தேவாலயத்திலிருந்து புறப்பட்டு, மேகத்தின்மேல் உட்கார்ந்திருக்கிறவரை நோக்கி: பூமியின் பயிர் முதிர்ந்தது, அறுக்கிறதற்குக் காலம் வந்தது, ஆகையால் உம்முடைய அரிவாளை நீட்டி அறுத்துவிடும் என்று மிகுந்த சத்தமிட்டுச்சொன்னான். அப்பொழுது மேகத்தின்மேல் உட்கார்ந்தவர் தமது அரிவாளைப் பூமியின்மேல் நீட்டினார், பூமியின் விளைவு அறுப்புண்டது.’’ (வெளி 14:14-16)
இதில் மனுஷகுமாரனாகிய இயேசுவின் கையில் கருக்குள்ள அரிவாள் இருந்தது என்றும் அவரே விளைவை அறுத்தார் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. எனவே இந்த ‘முதிர்ந்த பயிர்’ இயேசுவைப் பின்பற்றிய உண்மை சீடர்களை ( வலது பக்கம் நின்ற செம்மறியாடுகள்/ கோதுமை) மட்டுமே குறிக்கும் என்று விசுவாசிக்கிறேன். ஏனென்றால் இவர்களுக்கு தண்டனை கொடுக்கப்பட்டதாக சொல்லப்படவில்லை; இயேசுவே தன் கையில் எடுத்துக்கொண்டார்.
‘‘அறுப்புக்காலத்தில் நான் அறுக்கிறவர்களை நோக்கி: முதலாவது களைகளைப்பிடுங்கி, அவைகளைச் சுட்டெரிக்கிறதற்கு கட்டுகளாகக் கட்டுங்கள்; கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்துவையுங்கள் என்பேன் என்று சொன்னான் என்றார்.’’ (மத்தேயு 13:30)
திராட்சபழங்களை அறுத்த தூதர்கள் (நியாயத்தீர்ப்பும், நரக ஆக்கினையும்)
அடுத்து கருக்குள்ள அரிவாளைப் பிடித்திருந்த ஒரு தூதன் திராட்சபழங்களை அறுக்க வருகிறான்; இன்னொரு தூதன் அக்கினியின் மேல் அதிகாரம் உள்ளவன் என்றும் கூறப்பட்டுள்ளது.
‘‘பின்பு வேறொரு தூதனும் கருக்குள்ள அரிவாளைப் பிடித்துக்கொண்டு பரலோகத்திலுள்ள தேவாலயத்திலிருந்து புறப்பட்டுவந்தான். அக்கினியின்மேல் அதிகாரமுள்ள வேறொரு தூதனும் பலிபீடத்திலிருந்து புறப்பட்டுவந்து, கருக்குள்ள அரிவாளைப்பிடித்திருக்கிறவனை நோக்கி: பூமியின் திராட்சப்பழங்கள் பழுத்திருக்கிறது, கருக்குள்ள உமது அரிவாளை நீட்டி, அதின் குலைகளை அறுத்துவிடும் என்று மிகுந்த சத்தத்தோடே சொன்னான்.’’ (வெளி 14:17,18)
இந்த இரண்டு தூதர்களில் கருக்குள்ள அரிவாளை உடைய ஒருவன், இயேசுவைப் பின்பற்றாமல் துன்மார்க்கமாய் வாழ்ந்தவர்களை திராட்சைக் குலைகளை அறுப்பதுபோல அறுத்து சேர்ப்பான் என்றும், அக்கினியின் மேல் அதிகாரம் உள்ள தூதன் அவர்களை நரக ஆக்கினைக்குள் தள்ளுவதற்காக நியமிக்கப்பட்டிருப்பான் என்றும் நான் விசுவாசிக்கிறேன்.
‘‘அப்பொழுது அந்தத் தூதன் தன் அரிவாளைப் பூமியின் மேலே நீட்டி, பூமியின் திராட்சப்பழங்களை அறுத்து, தேவனுடைய கோபாக்கினையென்னும் பெரிய ஆலையிலே போட்டான். நகரத்திற்குப் புறம்பேயுள்ள அந்த ஆலையிலே அது மிதிக்கப்பட்டது; அந்த ஆலையிலிருந்து ஆயிரத்தறுநூறு ஸ்தாதி தூரத்திற்கு இரத்தம் புறப்பட்டுக் குதிரைகளின் கடிவாளங்கள்மட்டும் பெருகிவந்தது.’’ (வெளி 14:19,20)
இதில் சொல்லப்பட்டுள்ள 1600 ஸ்தாதி தூரம் என்பது நமது கால அளவின்படி சுமார் 180 மைல்கள் (290 கிலோமீட்டர்கள்) தூரமாகும். இந்த திராட்சகுலைகள் (இடது பக்கம் நின்ற வெள்ளாடுகள்/பதர்கள்) ஆலையிலே மிதிக்கப்பட்டதால் இவ்வளவு தூரத்திற்கு திராட்சை ரசம் ஓடியதாக சொல்லப்படவில்லை; மாறாக இரத்தம் ஓடியது என்றும் அதன் உயரம் குதிரையின் கடிவாளங்கள் உயரம் மட்டும் பெருகியது என்று சொல்லப்பட்டிருக்கிறது. இது துன்மார்க்கருக்கு ஏற்படப்போகும் நரக அழிவின் தீவிரத்தையே குறிப்பதாகும். இப்படியாக இந்த 14 ஆம் அதிகாரம், ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியம் வீழ்ச்சியடைய ஆரம்பித்த காலம் முதல், இனி நியாயத்தீர்ப்பின் நாளிற்குப் பின்பு என்ன நடக்கும் என்ற தீர்க்கதரிசனங்களையும் அடக்கிய பொக்கிஷமாகும். இத்தனை வல்லமையுள்ள, காலங்களைத் தனது கரங்களில் கொண்டுள்ள இயேசுவை உண்மையாகப் பின்பற்ற இந்த உலகம் மற்றும் மாய்மாலமான சபைகளை விட்டு வெளியே வாருங்கள். தேவாதி தேவனாம் இயேசுவின் சத்திய வசனங்களைக் கலப்படமில்லாமல் போதிக்கும் சபைகளைத் தேர்ந்தெடுங்கள். இல்லையேல், வஞ்சிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. ஆமென்